Sarakondrai Nizhal Chalai Vagamai - Haikoo

இலக்கியமென்பது இன்பந்தருவது, மனித இயக்கத்திற்கு ஓய்வும் இதமும் தருவது,பளுவைக் குறைப்பது,பாந்தமாய் நெஞ்சத்தை உசுப்பி விடுவது.
ஒவ்வொரு மனிதனுள்ளும் இலக்கியத்தை ருசிக்கும் தினவு மறைந்திருக்கிறது. தனது ஓய்வு நேரத்தை இன்பமாகக் கழித்திடவே கலையை உருவாக்கினான் மனிதன்.

ஒரு கவிஞனின் உள்ளத்து உணர்வுகள் தூரிகையில் பெருக்கெடுத்து காகிதத்தில் வழிகையில் இலக்கியப் படைப்பெனும் வண்ண ஓவியம் பிறக்கிறது.சொற்கள் மிகைத்து சுதந்திரமடைந்து உள்ளக் கிடக்கைகளைப் பிரஸ்தாபிக்கும் போது பட்டை தீட்டப்பட்ட வைரமென அப்படைப்பு ஜொலிக்கிறது. சொற்பூக்கள் கொண்டு தொடுக்கையிலே நறுமணத்தின் செண்டாய் இலக்கியம் உருவெடுக்கிறது.

கறைகள் படிந்த விடயங்களைச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் கவிஞர்களால் அவை காவியமாய் மிளிர்வதைக் காணலாம்.தமிழ் இலக்கியத்தின் அடிப்படை வடிவம் கவிதையாகும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி,பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறான மரபு வடிவங்களோடு காலப்போக்கில் புதுக்கவிதை, ஹைக்கூ, தன்முனை வடிவங்களும் தோன்ற ஆரம்பித்தன. காலத்​திற்குக் காலம்​ மொழி தன்னைப் புதுப்பித்துக்​கொள்வது ​​போல் கவி​தையியலும் தன்​னை வளர்த்துக் ​கொள்கிறது.

“சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார் பாரதி.

புதிய பரிமாணம் எடுத்துக் கொண்ட கவிதைகளை மகாகவி பாரதியார் உட்பட பல்வேறு கவிஞர்கள் வரவேற்றுள்ளமை அதன் முக்கியத்துவத்தை எமக்குணர்த்துவதாக இருக்கிறது.அது போல ஜப்பானியக் கவிதை வடிவமான மூவரியில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள் நம் அனைவர் மத்தியிலும் தற்போது கூடுதல் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு வருவதைக் காணலாம். அதன் சொற்சிக்கனமும், கடைசி வரியில் எதிர்பாராத திருப்பமுமே அதற்கான காரணங்களாக அமைகின்றன.

அந்த வகையில் சரக்கொன்றைத் தோரணங்கள் அமைத்த நிழல் பயணம் ஒன்றின் குளுமையைத் தருவதாக இருக்கிறது சரக்கொன்றை நிழற்சாலை எனும் ஹைக்கூ நூல்.

நூலாசிரியர் ஷர்ஜிலா (கம்பம், தேனி மாவட்டம்) அவர்களின் கவிதை மலர்கள் நிழற்சாலைக்கு மஞ்சள் ஒளியூட்டி மனதை மகிழ்வித்துச் செல்வதைக் காணலாம்.
ஹைக்கூ ஜாம்பவான் மு.முருகேஷ் (முதுநிலை ஆசிரியர், இந்து தமிழ் திசை நாளிதழ்,சென்னை) அவர்களும், சுருளிப்பட்டி தலைமை ஆசிரியர் கே.எம்.சிவாஜி அவர்களும் நூலுக்கான உரைகள் வழங்கியுள்ளார்கள்.

கவிஞரின் ஒவ்வொரு ஹைக்கூவும் நம் மனதில் பல்வேறு உணர்வுகளையும் கேள்விகளையும் தோற்றுவித்துச் செல்வது அவரது ஹைக்கூ உத்திக்கான வெற்றி என்றே கூறலாம். அழகிய ஹைக்கூக்களால் வழி சமைத்து அற்புதப்பயணம் மேற்கொண்ட கவிஞர் பாராட்டுக்குரியவர். இயற்கை,பறவை, மரங்கள், சிற்றுயிர்கள், வாழ்வின் அவலங்கள், பாசம், உறவு போன்ற பாடுபொருட்களால் ஹைக்கூ கவிதைகளை யாத்திருக்கும் கவிஞர் தன் சின்னஞ்சிறு கவிதைகள் மூலம் பெரிய கருத்துக்களையும் விழுமியங்களையும் சொல்லிச்செல்வது சிறப்புக்குரியது.

“உதிர்ந்த மலர்
இருந்தவிடத்தில் மீண்டும் தெரியும்
குளத்தில்”

அழகியக் காட்சிப்படிமம் ஒன்றை ஹைக்கூவாக மலர்த்தியிருக்கிறார் கவிஞர். குளக்கரையில் அமைந்திருக்கும் மரத்திலிருந்து மலர் ஒன்று உதிர்கிறது. உதிர்ந்த மலர் மீண்டும் அதே இடத்திற்கு திரும்புமா? கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்று யோசிக்கிறோம். குளத்தில் என்னும் ஈற்றடி மத்தாப்பென வெடித்து மகிழ்ச்சியை நம் மனதில் தோற்றுவிக்கிறது. அதாவது குளத்தில் தெரியும் மரத்தின் நிழலிலே அதே இடத்திற்கு போய் உதிர்ந்த அந்த மலர் உட்கார்ந்து கொள்கிறது என்பது அழகியல் அன்றி வேறில்லை.கவிஞர் சொல்ல வருகின்ற கருத்து மெச்சத்தக்கது.

அமெரிக்க மகனுக்காக காத்திருக்கிறார்
தென்னம் பூக்களுடன்/ சவப்பெட்டியில் அப்பா

தந்தை என்பவரின் பாசமும் பொறுப்பும் அனைவரும் நாம் அறிந்திருக்கிறோம். அவ்வாறான தந்தை தன் மகனை படிப்பதற்கோ அல்லது வேலைக்காகவோ அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கலாம். தனது உழைப்பை தன் மகனுக்காகத் தாரை வார்த்திருக்கலாம்.அப்படி அனுப்பி வைத்த மகனை தென்னம் பூக்களோடு வரவேற்க காத்திருக்கும் தந்தையின் நிலையை ஈற்றடியில் நாம் காணும் போது கண்கள் பனிக்கின்றன.உழைப்பை எமக்காக ஈந்து, வளர்த்து உருவாக்கி விட்ட தந்தைமாரை அவர்கள் உயிரோடு இருக்கும் போதே பார்த்துக் கொள்ள வேண்டும், கவனித்து சேவைகள் செய்ய வேண்டும். தற்காலத்தில் அப்படிப்பட்ட மகன்கள் இல்லை என்று தனது வேதனையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் கவிஞர்.

சட்டென அமைதியாகும் வாகனம்
சாலையைக் கடந்து செல்கிறது
வாத்து கூட்டம்

அழகிய காட்சிப் படிமம் ஒன்று. நிறுத்தப்பட்டு அமைதியாக இருந்த வாகனம் சாலையை கடந்து செல்கிறதோ என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் நடந்த சம்பவம் வேறு. வாகனத்தை நிறுத்தி வாத்துக் கூட்டத்திற்கு சாலையைக் கடப்பதற்கு உதவி செய்திருக்கிறார் சாரதி. மிகவும் சிறப்பான ஒரு கவிதை.

கடைசி இருக்கை
காட்டிக் கொடுக்கவில்லை/ கிழிந்த டவுசர்

ஏழ்மையின் மகனைக் கடைசி இருக்கை காப்பாற்றி விடுகிறது.
கிளிசலை மறைக்க அவன் தேர்ந்தெடுத்தது கடைசி இருக்கை. அதனால் யாரும் கவனிக்க வாய்ப்பில்லை. வறுமை நிலைப்பாட்டை மூன்று வரிக்குள் உள்ளடக்கிய இக்கவிதை வரவேற்கத்தக்கது. கவிதை நம் மனதை நெருடிச் செல்வதைக் காணலாம்.

வெட்டரிவாளுடன் துரத்தினாள்/கீரைக் கட்டுக்காரி
நகரும் இலவச பேருந்து/

முதல் இருவரியிலும் பயங்கரமான ஒரு சூழல் உருவாகிறது. மூன்றாவது வரியில் சிரிப்பே அதற்கு விடையாகிறது. அழகான ஒரு சென்றியு கவிதை. வாசகர் மனதைத் திசை திருப்பி அதை ஒரு நகைச்சுவையாக மாற்றி இருக்கிறார் கவிஞர்.

சிறுவயது குறும்புத்தனங்கள் இன்றும் நம் மனங்களில் அழியாமல் ஞாபகங்களாக இருக்கின்றன. இந்தக் கவிதையைப் பாருங்கள்.

விதைகள் புதைத்த இடம்/ தோண்டி தோண்டி பார்க்கும்
சிறுவனின் ஆசை/

விதைகள் வேர் கொண்டு முளைப்பது அனைவரும் அறிந்த விடயம். அது எவ்வாறு முளைக்கிறது என்று அறியும் ஆவல் கொண்டு அதனைப் புதைத்த இடத்தில் தோண்டித் தோண்டிப் பார்ப்பது அனைத்து சிறுவர்களிடமும் இருக்கும் ஒரு வேடிக்கையான குணம். அதையே கவிஞர் இக்கவிதையில் பதிவு செய்திருக்கிறார்.

இவ்வாறு கவிஞரின் கவிதைகள் பேசுகின்ற கதைகளும், உணர்ச்சிகளும், கருத்துக்களும், ஏராளம். தளும்பாத நிறைகுடமென, ஹைக்கூ கவிதைகளின் ஊற்றென நம் கவிஞர் ஷர்ஜிலா பர்வின் அவர்களைப் பாராட்டுதல் மிகப் பொருத்தமானது. அவருக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நத்தையாகிறேன்
நிழல் எல்லாம் பூக்களுடன்
சரக்கொன்றை நிழற்சாலை

நூலுக்கான தலைப்பைக் கொண்டு வந்த கவிதை மிக அழகு. சரக்கொன்றை உதிர்த்த பூக்கள் எல்லாம் தரையில் விழுந்து மெத்தை ஒன்றை உருவாக்க, அந்தப் பூக்களுக்குள்ளே பயணிக்கின்ற அனுபவம் நத்தைக்குக் கிடைத்திருக்கிறது. அதைப் பார்த்தவுடன் தானும் நத்தையாக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் கவிஞர்.

இப்படி வாசிக்க வாசிக்க சுவை கூட்டும் சிறப்பான ஹைக்கூ கவிதைகள் சரக்கென்றை நிழற்சாலை நூலில் இடம்பெற்றுள்ளன.
இனிமையான, சுவாரசியமிக்க
ஹைக்கூச் சுளைகளை நமக்குப் பரிமாறி இருக்கிறார் கவிஞர்.

நிழற்சாலையில் ஹைக்கூ ரசனைப் பயணம் ஒன்றை மேற்கொள்ள அன்புடன் அனைவரையும் அழைக்கிறேன். வாசகர்களுக்கு இனிய சுவையுடன் காத்திருக்கிறது “சரக்கொன்றை நிழற்சாலை”.
நூலாசிரியருக்கும் சிறப்பான அட்டைப்படத்துடன் நூல் வெளியீடு செய்த படைப்பு பதிப்பாகத்தாருக்கும் எனது மனமார்ந்த, அன்புநிறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும், கவிஞர் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த படைப்புகளை தமிழ் கூறும் நல் உலகுக்கு நல்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி

 

 

நூலின் தகவல்கள் 

நூலின் பெயர் : சரக்கொன்றை நிழற்சாலை வகைமை (ஹைக்கூ)

நூலாசிரியர் : ஷர்ஜிலா பர்வின் யாக்கூப்

நூல் வெளியீடு : படைப்பு பதிப்பகம்

முதற்பதிப்பு : 2023

பக்கங்கள்36

விலை : ரூ.100 

நூல் வாங்க தொடர்புக்கு : 8825868689
அலைபேசி எண்

 

நூலறிமுகம் எழுதியவர் 

Dr ஜலீலா முஸம்மில்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *