ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் ‘சரஸ்வதி’யில் நிறைய எழுதினார்கள் :சரஸ்வதி’ வ.விஜயபாஸ்கரன்

மிழ் இதழியல் வரலாற்றில் ‘சரஸ்வதி’க்கு ஒரு முக்கிய இடமுண்டு. தோழர் வ.விஜயபாஸ்கரன், 1955-ல் தொடங்கி 1962 வரை ஏழு ஆண்டு காலம் அந்த இதழை நடத்தினார். ஆறு ஆண்டுகள் மாத இதழாகவும், ஓர் ஆண்டு மாதமிரு முறையாகவும் வெளிவந்தது. அன்றைய தமிழ் இலக்கியச் சூழலில், ஓர் இலக்கிய இதழை ஒரு தனிமனிதர் ஏழு ஆண்டு காலம் நடத்தியதே சாதனையாகக் கூறப்படுகிறது. அந்த ஏழு ஆண்டு காலத்தில், ‘சரஸ்வதி’ சாதித்தவை ஏராளம்.

இன்று தமிழின் மிக முக்கியமான எழுத் தாளர்களாக விளங்குகிற பலரை அறிமுகம் செய்து, அடையாளப்படுத்திய, வளர்த்தெடுத்தப் பெருமை இந்த இதழுக்கு உண்டு. தமிழ் இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்க்கும் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளும், இலக்கியச் சர்ச்சைகளும், கலை இலக் கியக் கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும் ‘சென்னைக்கு வந்தேன்’ என்ற பகுதியும் இவ்விதழின் தனிச்சிறப்பாக விளங்குபவை.

தோழர் வ.விஜயபாஸ்கரன், கோவை மாவட்டம் (இப்போது ஈரோடு மாவட்டம்), தாராபுரத்தில் 26.9.1926 அன்று பிறந்தவர். கோவை மாவட்டக் காங்கிரஸ் இயக்க முன்னோடியான திரு.பா.து. வடிவேலு பிள்ளையின் மகன்.

இவர், அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்குள் காங்கிரஸ்காரராக நுழைந்து, கம்யூனிஸ்டாக வெளியேற்றப்பட்டவர். ‘நவஇந்தியா’வில் பணியாற்றி இருக்கிறார். ‘சரஸ்வதி’ மட்டுமன்றி ‘விடிவெள்ளி’, ‘சமரன்’ ஆகிய அரசியல் இதழ்களையும் சொந்தமாக நடத்தியுள்ளார்.

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். தற்போது கோவையில் வசித்து வருகிறார். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, அவரது உறவினரின் இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடினோம்…

நீங்கள் ‘சரஸ்வதி’யைத் தொடங்கிய காலத்தில், தமிழ் இதழியல் சூழல் எப்படி இருந்தது? அப்போது ‘சரஸ்வதி’ மாதிரியான ஓர் இதழுக்கான தேவை இருப்பதாக நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் இப்படியான ‘பூர்சுவா’ பத்திரிகைகள்தான் அப்போது வந்துகொண்டிருந்தன. அவர்களால் மட்டுமே பத்திரிகை நடத்தமுடியும் என்பதில்லை, இடதுசாரிகளும் நல்ல பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தலாம் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதுவரை இடதுசாரிகள் நடத்திய ‘ஜனயுகம்’, ‘ஜனநாயகம்’, ‘முன்னணி’ ‘புதுமை இலக்கியம்’ இதழ்களெல்லாம் இரண்டு வருடங்களுக்கு மேல் வந்ததில்லை. ‘புதுமை இலக்கியம்’ மூன்று இதழ்களோ, நான்கு இதழ்களோ வந்தன. ‘ஜனயுகம்’ ஒரு வருடமோ, ஒன்றரை வருடமோ வந்தது. எல்லாமே கட்சிக்குள்ளே இருக்கிற அங்கத்தினர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட பத்திரிகைகள்.

கட்சிக்காரர்களுக்கென்று ஒரு பாஷை இருந்தது. அந்தப் பாஷையில்தான் எல்லாப் பத்திரிகைகளையும் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதை கட்சிக்காரர்கள் மட்டும்தான் படித்துப் புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்குப் புரியாது. அதை உடைக்க வேண்டுமென நினைத்தேன். உடைக்கணும் என்றால், எல்லாரும் விளங்கிக் கொள்ளும்படி இருக்கவேண்டும். அதிலே நம் கருத்துகளைச் சொல்லணும். விளங்காத பாஷையிலே எழுதிக் கொண்டிருப்பதிலே அர்த்தம் கிடையாது.

என்னைப் பொறுத்தவரை, நம்மால் ஒரு வெகுஜன பத்திரிகையை நடத்தி, லட்சக்கணக்கில் போகமுடியாவிட்டாலும் கூட பத்தாயிரம், இருபதாயிரம் என்று கொண்டு வந்து ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தேன்.

நமக்கென்று இலக்கியத்தில் இருக்கிற ஆட்கள் ரொம்ப குறைச்சல். ஆனால், முற்போக்கான எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கொண்டு வந்துவிட முடியுமென்று நம்பினேன். எழுத்தாளர் சங்கத்தில் பொதுச் செயலாளராக நான் இருந்திருக்கிறேன். ‘சக்தி’ பத்திரிகையில் வேலை செய்திருக்கிறேன். அதனாலே முக்கியமான எழுத்தாளர்கள் எல்லோருடனும் எனக்குப் பழக்கம் இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் ‘சரஸ்வதி’யை ஆரம்பித்தேன். குறைந்தபட்சம் மூணு வருசத்துக்கு நஷ்டத்துக்குத் தயாராக இருந்தால், அதன்பிறகு தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியும் என்பது என் அபிப்ராயம். அதனால் மூன்று வருடங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ, அதை கணக்கிட்டு அதற்கான தொகையை வங்கியில் போட்ட பிறகுதான் பத்திரிகை நடத்த ஆரம்பித்தேன்.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான நீங்கள், ‘சரஸ்வதி’ என்று பத்திரிகைக்குப் பெயர் வைத்திருக்கிறீர்களே…

வ. விஜயபாஸ்கரனின் 'சமரன்' களஞ்சியம் ...

என்னை கம்யூனிஸ்ட் என்று தெரிந்தாலும், இது கம்யூனிஸ்ட் பத்திரிகை என்று தெரியக்கூடாது என்பது முக்கிய காரணம். இன்னொரு காரணம், அப்போது வந்துகொண்டிருந்த ‘கலைமகள்’ மாதிரியான ஒரு பத்திரிகையாக தெரிய வேண்டுமென்று நினைத்து இந்தப் பெயரை வைத்தேன். மற்றொரு காரணம், முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகன் என்று இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிற பிரேம்சந்த் நடத்திய பத்திரிகையின் பெயர் ‘சரஸ்வதி’. வேறு ஒரு துணைக் காரணம், என் மனைவியின் பெயர் ‘சரஸ்வதி’. உங்களை மாதிரியேதான் அப்போது கட்சியிலேயும் ‘ஏன் ‘சரஸ்வதி’ன்னு பேரு வைக்கணும்?’ என்கிற சந்தேகம் இருந்தது.

யாரெல்லாம் ‘சரஸ்வதி’யிலே எழுதினார்கள்?

அநேகமாக தமிழ்நாட்டில் இருக்கிற முக்கியமான எழுத்தாளர்கள் எல்லோருமே ‘சரஸ்வதி’யில் எழுதினவர்கள்தான். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, ந.பிச்சமூர்த்தி, மௌனி, நகுலன், விந்தன், கிருஷ்ணன் நம்பி, செ.கணேசலிங்கம், தொ.மு.சி.ரகுநாதன், எஸ்.ஆர்.கே. (எஸ். ராமகிருஷ்ணன்), தமிழ்ஒளி, க.நா.சு., வல்லிக்கண்ணன், சூடாமணி, எஸ்பொ, முத்துலிங்கம்… இப்படி ஏராளமானவர்கள் எழுதினார்கள்.

இலங்கையில் அப்போது கணிசமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஆனால், இலங்கையர்கோன் போன்ற ஒரு சிலர்தான் கல்கியிலும், கலைமகளிலும் எழுதிக் கொண்டிருந்தார்கள். எழுத் தாளர் கல்கி இலங்கைக்குச் சென்றபோது அங்கே அவருக்கு அறிமுகமான, உதவி செய்த எழுத்தாளர்களை அவர் ‘கல்கி’யில் எழுத வைத்தார். மற்ற எழுத்தாளர்கள் யாரும் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் கிடையாது.

‘அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க’ மாநாட்டினை இங்கே சென்னையில் நடத்தினோம். அதில் இலங்கையிலிருந்து முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள். அவர்களையெல்லாம் தமிழ் நாட்டு இதழ்களில் எழுத வைக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது.

கைலாசபதி, சிவத்தம்பி, டேனியல், மஹாகவி, டொமினிக் ஜீவா… இப்படி பலரை முதல்முதலாக ‘சரஸ்வதி’யில் எழுத வைத்து, தமிழ் நாட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

இலங்கையில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்த கமில் ஸ்வலபில், அந்தர்னோவ் போன்றவர்களையும் எழுதவைத்து தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினேன்.

நீங்கள் இலங்கைக்குப் போயிருக்கிறீர்களா?

க. கைலாசபதி - தமிழ் விக்கிப்பீடியா

1961ல் போயிருக்கிறேன். கைலாசபதி வீட்டில்தான் தங்கியிருந் தேன். இலங்கையின் எல்லா பகுதிகளுக்கும் பயணம் செய்திருக் கிறேன்.

கமில் ஸ்வெலபில்-ஐ நீங்கள் பேட்டி எடுத்திருக்கிறீர்கள். அதில் அவர், “இன்று தமிழகத்தில் வெளியாகும் இலக் கியப் பத்திரிகைகளிலேயே ‘சரஸ்வதி’தான் தலை சிறந்தது; இது ஒன்றுதான் நல்ல பத்திரிகை’’ என்று கருத்து கூறி இருக்கிறார்…

கமில் ஸ்வெலபில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ரா.பி.சேதுபிள்ளையிடம் தமிழ்ப் படிப்பதற்காக சென்னை வந்திருந்தார். அப்போது நானும் தொ.மு.சி.யும் அவரை சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டோம். அதற்குப் பிறகு அவர் சரஸ்வதியில் நிறைய எழுதினார்.

அந்தர்னோவ் ‘ரஷ்யன் தமிழ் டிக்ஸனரி’ தயாரித்தவர். அவரும் சரஸ்வதியில் எழுதியிருக்கிறார்.

நிமாய்கோஷ், கே.ஏ.அப்பாஸ், யஷ்பால்… இப்படியான ஜாம்பவான்களின் கலை, இலக்கியம் சம்பந்தமான அற்புதமான கட்டுரைகள் சரஸ்வதியில் வெளியாகி இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளெல்லாம் சரஸ்வதிக்காகவே எழுதப்பட்டவையா? அல்லது வேறு இதழ்களில் வெளிவந்தவற்றை தமிழாக்கம் செய்து வெளியிட்டீர்களா?

சரஸ்வதியில் வெளிவந்த கட்டுரைகள் எல்லாமே சரஸ்வதிக்கென்று எழுதப்பட்டவைதான். அவரவர் மொழியில் எழுதிக் கொடுத்ததை நாங்கள் தமிழ்ப்படுத்தி வெளியிட்டோம். உதாரணமாக, நிமாய்கோஷின் தமிழ்ச் சினிமா’ என்ற கட்டுரைத் தொடரை அவர் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்திருந்தார். நிமாய் கோஷுக்கு தமிழில் எழுதத் தெரியாதே தவிர தமிழில் பேசத் தெரியும். நானும் எம்.பி.சீனிவாசனும் சேர்ந்து அந்தக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்தோம். காண்டேகர் கட்டுரையை செ.கணேசலிங்கம் மொழிபெயர்த்தார். கே.ஏ.அப்பாஸ், யஷ்பால் கட்டுரைகளை கே.கணேஷ் மொழிபெயர்த்தார்.

 ‘சரஸ்வதி’ மூலமாக தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்கள்..?

Socialist realism is still relevant' - Frontline

டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி ரெண்டு பேரும் சரஸ்வதி மூலமாக அறிமுகமானவர்கள்தான்.

ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தாலும் அவர்களின் பேர் சொல்லும்படியான பல கதைகள் சரஸ்வதியில் வெளிவந்தவைதான்.
சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த தகழியின் ‘தோட்டியின் மகன்’ இவையெல்லாம் ‘சரஸ்வதி’யில் எழுதியவைதான்.

தமிழர் வரலாறும் பண்பாடும் | நா ...

நா.வானமாமலை சரஸ்வதியில்தான் முதல்முதலாக எழுத ஆரம்பித்தார். அவர், மூன்று முக்கியமான தொடர்களை எழுதினார். மூன்றுமே இப்போது புத்தகங்களாக வந்திருக்கின்றன.

ஆர்.கே.கண்ணன் ஓர் இலக்கியவாதி என்கிற விசயமே அவர் சரஸ்வதியில் எழுதிய பிறகுதான் தெரியவந்தது.

வல்லிக்கண்ணன் ஏராளமாக எழுதியிருக்கிறார்.

தமிழ்ஒளி – THF – Tamil Heritage Foundation

 

ஜெயகாந்தனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் கவிஞர் தமிழ்ஒளி. நான் சென்னைக்கு வந்த காலத்திலிருந்தே தமிழ்ஒளியை எனக்குத் தெரியும். அவர்தான் ஜெயகாந்தனை அழைத்து வந்து அவர் எழுத்தாற்றலைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஜெயகாந்தன் ‘சரஸ்வதி’யில் நிறைய எழுதினார்.

ஜெயகாந்தன்

அதாவது, ‘ஜெயகாந்தன் சிறுகதைகள்’ என்று இரண்டு தொகுதிகள் வந்திருக்கின்றன. அதிலே முதல் தொகுதியில் மூன்றோ நான்கோ கதைகளைத் தவிர மற்றவையெல்லாம் சரஸ்வதியில் வந்த கதைகள்தான்.

Tamil | Sundararamasamy | Jayamohan | Literature | Charu Nivedita

சுந்தர ராமசாமியின் ஒரு கதையை தொ.மு.சி.ரகுநாதன் எனக்கு அனுப்பி இருந்தார். படித்துப் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. (அவரின் ஆரம்பகால கதைகள் ரொம்ப அற்புதமானவை) ‘சரஸ்வதி’யில் வெளியிட்டேன். அதற்குப் பிறகு நானே சுந்தர ராமசாமிக்கு கடிதம் எழுதி, நீங்கள் நேராக எனக்கே கதைகளை அனுப்பி வைக்கலாம் என்று எழுதினேன். அவரும் தொடர்ந்து ‘சரஸ்வதி’க்கு எழுதி அனுப்பினார். அந்தக் கதைகள் அவரின் ‘காகங்கள்’ தொகுதியிலே இருக்கின்றன. சுந்தர ராமசாமி அப்போது கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபியாக இருந்தார். ஜீவாவுக்கு ரொம்ப நெருக்கம்.

தோழர் ஜீவாவுக்கும் உங்களுக்கும் மனஉரசல் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணம் என்ன?

மதிமுக இணையதள நண்பர்கள் : காயிதே ...

க.நா.சு. ‘சரஸ்வதி’யிலே எழுதுவது ஜீவாவுக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த மாதிரியான ஆட்களை நம்ப பத்திரிகைகளில்எ ழுதவிடக் கூடாது என்பது அவரோட முக்கியமான எண்ணமாக இருந்தது…

க.நா.சு., இடதுசாரிகளுக்கு எதிராக செயல்படக் கூடியவர். அப்படியிருந்தும் க.நா.சு.வுக்கு எந்த வகையில் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தீர்கள்…?

க. நா. சுப்ரமண்யம் - தமிழ் ...

யாருக்கும் இப்படி முத்திரைக் குத்துவது எனக்குப் பிடிக்காது. நான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கிற காலத்திலிருந்தே க.நா.சு.வை எனக்குத் தெரியும். அவர் ‘சரஸ்வதி’யில் இலக்கியம் எழுதினாரே தவிர, அரசியல் எதுவும் எழுதவில்லை. அமெரிக்கா பற்றியும் எழுதவில்லை. இலக்கியக் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதினார். “அவர் எழுத்திலே கருத்து முரண்பாடு இருந்ததென்றால் மறுப்பு எழுதுங்கள். அதை வெளியிடுகிறேன்’’ என்று ஜீவாவிடம் சொன்னேன். அதை ஜீவா ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், “அச்சடிப்பதற்கு முன்பு என்னிடம் காண்பித்து விடுங்கள்’’ என்றார் ஜீவா. “இது நான் சொந்தமாகப் பணம் போட்டு நடத்துகிற பத்திரிகை. நான் கட்சி அங்கத்தினர்தானே தவிர முழுநேர ஊழியர்  இல்லை. கட்சிக்கு விரோதமாக ஏதாவது வெளியிட்டால் நீங்கள் என் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், உங்களிடம் காட்டி விட்டுத்தான் பத்திரிகை நடத்தவேண்டும் என்றால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று கூறிவிட்டேன்.

 க.நா.சு. எத்தனையாவது இதழில் எழுத ஆரம்பித்தார்?

ஏழாவது இதழில் எழுத ஆரம்பித்தார். பத்திரிகை நிற்கிறவரை தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருந்தார்.

தமிழ்ஒளி, கே.சி.எஸ்.அருணாசலம் போன்ற சில இடதுசாரி கவிஞர்கள் ‘சரஸ்வதி’யில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். ஜெயகாந்தன், கு.சின்னப்பாரதி போன்றவர்கள் அபூர்வமாக எழுதிய கவிதைகளையும் படிக்க முடிந்தது. ‘மயன்’ என்கிற புனைபெயரில் க.நா.சு. எழுதியிருக்கிறார். தெரிகிறது. ஆனால் ‘கஞ்சிக்குச் செத்தவன்’, ‘கொட்டாப்புள்ளி’ போன்ற பெயர்களில் எல்லாம் எழுதியது யார்? ‘பசுவய்யா’ கவிதைகளைக் காணமுடியலையே…

தொ.மு.சி.தான்அப்படி பல புனைபெயர்களில் எழுதிக் கொண்டிருந்தார். சுந்தர ராமசாமி (பசுவய்யா) அப்போது கவிதையே எழுத ஆரம்பிக்கவில்லை.

புதுமைப்பித்தனுக்கு 50களிலேயே ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களே, எப்படி?

கண்ணாள் கமலாவுக்கு சொ.வி எழுதுவது ...

என்னைப் பொறுத்தவரை அவர் ஓர் இலட்சிய புருஷர். அவருக்காக ஒரு சிறப்பு மலரே வெளியிட்டேன். அதில், ‘இலக்கிய சாம்ராட்’டுன்னு நான் ஒரு கட்டுரை எழுதினேன். ‘வீரவணக்கம் வேண்டாம்’னு தி.க.சி. ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆர்.கே. கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், வல்லிக்கண்ணன் இப்படி பலர் எழுதி இருக்கிறார்கள். அந்த மலரைத் தொடர்ந்து இரண்டு மூன்று இதழ்களில் புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டேன். அவையெல்லாம் தொகுக்கப்பட்டு நூல்களாக வந்துள்ளன.

இலக்கியவாதிகளுக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்குமான தொடர்பு அப்போது எப்படி இருந்தது?

Thi. Ka. Sivasankaran - Wikipedia

முற்போக்குச் சிந்தனையுடன் எழுதக்கூடிய நிறைய எழுத்தாளர்கள் அப்போது இருந்தார்கள். அவர்களை அரவணைத்து ஒழுங்குப்படுத்த பொதுவுடைமை இயக்கத்துக்குத் தெரியவில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம். அந்தப் பணியை தி.க.சி. ‘தாமரை’க்கு வந்த பிறகு செய்தார். இப்போது இருக்கிற பெரும்பாலான எழுத்தாளர்களை தி.க.சி.தான் வளர்த்து விட்டார் என்று சொல்லலாம்.

‘இந்திய இலக்கியம்’ பற்றிய ஆழ்ந்த அபிப்ராயம் ஜீவாவைத் தவிர வேறு யாருக்கும் இருந்தது கிடையாது. ஆனால், ஜீவாவுக்குப் பல வேலைகள். அகல கால் வைத்துவிட்டார். அதனால் அவரால் பல விசயங்களை சாதிக்க முடியவில்லை. ஆனால், இலக்கியத்திலே நிறைய சாதிக்கணும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது.

‘மணிக்கொடி’க்குப் பிறகு முக்கியமான இலக்கிய இதழாக ‘சரஸ்வதி’ வந்திருக்கிறது. சரஸ்வதியிலே மணிக்கொடி எழுத்தாளர்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

சி.சு.செல்லப்பா, க.நா.சு., சிதம்பர சுப்பிரமணியம் போன்றவர்களெல்லாம் எழுதியிருக்கிறார்கள். மணிக்கொடியைப் பொறுத்த வரை, சிறுகதைக்கு மதிப்பே இல்லாத காலத்தில் அதற்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதைத் தவிர மற்றபடி மணிக்கொடி பிரமாதமாக சாதித்தது என்று சொல்ல முடியாது. அந்தப் பத்திரிகையை ஆரம்பித்தவர்கள் எல்லாம் ஜாம்பவான்கள். வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் மூன்று பேரும்தான் நடத்தினார்கள். ஆரம்பத்தில் அரசியல், இலக்கியம் எல்லாம் கலந்து வந்துகொண்டிருந்தது. சீனிவாசன் பம்பாய் போய்விட்டார். அதற்குப் பிறகு பி.எஸ்.ராமையாதான் பொறுப்பேற்று நடத்தினார். சிறுகதை எழுத்தாளர்கள் நிறைய எழுத ஆரம்பித்தார்கள். அந்தச் சிறுகதைகளால் வந்த பேருதான் மணிக்கொடிக்கு.

சரஸ்வதி முதல் அட்டையில் வ.ரா.வின் படத்தை வெளி யிட்டிருக்கிறீர்கள். “வ.ரா. காட்டிய பாதைதான் நாங்கள் விரும்பும் பாதை; செல்லும் பாதை’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்… வ.ரா. பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

நான் ‘சக்தி’யில் பணிபுரிந்த காலத்தில் வ.ரா. அங்கே அடிக்கடி வருவார். நல்ல எழுத்துக்களைப் படித்துவிட்டால் அவருக்குச் சந்தோசம் வந்துவிடும். அதை எழுதியவரை நேரில் பார்க்க நேர்ந்தால் உடனே பாராட்டிவிடுவார். அவரை பார்க்க முடியாவிட்டால், ரிக்சாவில்  அந்த எழுத்தாளரின் வீட்டுக்கே சென்று ‘நல்லா எழுதறே’ என்று பாராட்டிவிட்டு வருவார். எல்லாரையும் தூக்கி விடுவார் அவர். இது பற்றி அவரிடம் கேட்டேன். “நம்மால முடிஞ்ச கைங்கர்யம் தூக்கி விடுவோம்’’ என்றார். அந்த நல்ல மனதுக்காகத்தான் அட்டையில் அவரது படத்தை வெளி யிட்டேன்.

தமிழம் வலை அன்புடன் அழைக்கிறது ...

அதேபோல ஒன்றரை வருடங்களுக்கு ஒவ்வொரு எழுத்தாள ரின் படங்களாக அட்டையில் தொடர்ந்து வெளியிட்டு அவர்கள் பற்றிய ‘ரைட்அப்’பை வெளியிட்டு வந்தேன்.

 

டொமினிக் ஜீவா, டானியல், கைலாசபதி, ஜெயகாந்தன், நா.வானமாமலை, வல்லிக்கண்ணன். இவர்களின் படங்களையெல்லாம் அட்டையில் வெளியிட்டிருக்கிறேன்.

‘சரஸ்வதி’க்கு வாசகர் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்தது?

பெண் குரல் » Buy tamil book பெண் குரல் online

ரொம்ப நல்ல ஆதரவு கிடைத்தது. இரண்டு, மூன்று இதழ்கள் சாதாரணமாகத்தான் போச்சு. ஆயிரம் பிரதிகள் அச்சடித்தோம். எழுநூற்றைம்பது பிரதிகள் விற்றன. அதற்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக ‘பிக்அப்’ ஆயிற்று. மூன்று வருடங்கள் முடிந்து நாலாவது வருடம் வரும்போது ஏழாயிரம் பிரதிகள் அச்சடித்தோம். ஓர் இடதுசாரி நடத்தும் பத்திரிகை ஏழாயிரம் பிரதிகள் அச்சடிப்பது இன்றைக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அப்போது அப்படி இல்லை. ‘கல்கி’யே ஐம்பதாயிரத்துக்கு மேலே போனது கிடையாது. ‘ஆனந்த விகடன்’ ஒரு லட்சத்தைக்கூட எடடவில்லை. கலைமகள் முப்பதாயிரத்துக்குள்ளேதான் போய்க்கொண்டிருந்தது. அந்த காலத்திலே ஏழாயிரம் பிரதிகள் அச்சடித்தோம் என்பதை நம்மால் இப்போதும் நினைத்துப் பார்க்கவே முடியாது. இலங்கையில் மட்டும் இரண்டாயிரம் விற்றது. கோவையில் ஆயிரம் பிரதிகள்.

இப்போதும் கோவைதான் புத்தக விற்பனைக்கு முக்கியமென்று நினைக்கிறேன். திருநெல்வேலி இலக்கியத்திலே ரொம்ப பிரமாதமென்றாலும்கூட புத்தகங்கள் நிறைய விற்பது கிடையாது. எப்போதும் இந்த நிலைமைதான். சென்னையில் இரண்டாயிரம் பிரதிகள் விற்றன; எழுநூற்றைம்பது பேர் நேரடி சந்தாதாரர் இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள் ஆதரவும் கிடைத்தது. ஜனசக்தி ஏஜென்டுகள் மூலமாகத்தான் விற்றேன்.

சரஸ்வதியின் வெற்றியை கம்யூனிஸ்ட் இயக்கத்தினால் கிடைத்த வெற்றி என்று சொல்லலாமா?

ஸ்தாபனத்தால் மட்டுமே கிடைத்த வெற்றி என்று சொல்ல முடியாது. நான் வைத்திருந்த தொடர்பு, நான் விசயங்களைக் கொடுத்த முறை. இதெல்லாம் சேர்ந்துதான் அந்த வெற்றி கிடைத்தது.

 ‘அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்திலே உங்கள் செயல்பாடு எப்படி இருந்தது?

பிரேம்சந்த், கே.ஏ.அப்பாஸ்… இவர்களெல்லாம் இருந்த அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு கிளையாக ‘முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தை நான், தொ.மு.சி. இன்னும் சில தோழர்கள் சேர்ந்து ஆரம்பித்தோம். ஒரு மாநாடு கூட நடத்தினோம். பி.சி.ஜோஷி காலகட்டம் அது. அவர் பரவலாக எல்லா எழுத்தாளர்களையும் கட்சிக்குள்ளே கொண்டு வந்தார். ‘இப்டா’ அவர் காலத்திலே வந்ததுதான். மாநாட்டுக்கு இலங்கை எழுத்தாளர்களெல்லாம் வந்திருந்தார்கள். மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு சங்கம் செயல்படவில்லை. அந்த மாநாட்டை ஒட்டி ‘புதுமை இலக்கியம்’ என்றொரு பத்திரிகையை குயிலனையும் தமிழ் ஒளியையும் ஆசிரியர்களாக வைத்துக் கொண்டுவந்தோம்.

குயிலனும், தமிழ்ஒளியும் ஆசிரியர்களாக இருந்து நடத் தினது ‘முன்னணி’தானே?

சுப்பிரமணிய பாரதி - தமிழ் ...

 

அது, அதுக்குப் பிறகு, தலைமறைவு காலத்தில் குயிலனை ஆசிரியராக வைத்து கட்சியே நடத்தின பத்திரிகை. ‘முன்னணி’ பத்திரிகையில் பாரதியாரைப் பற்றி ஒரு தலையங்கம் வெளியிட்டோம். அது பி.டி.ரணதிவே காலகட்டம். அப்போது பாரதியாரையே முற்போக்குவாதியாக கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒரு பிற்போக்குவாதிங்கிற கருத்துதான் இருந்தது. என் அனுமதியோடு தான் அந்தத் தலையங்கம் வெளிவந்ததால் என்னை மூன்று மாதங்கள் சஸ்பென்சன்ல வைத்திருந்தார்கள்.

‘தமிழ் எழுத்தாளர் சங்க’த்திலே உங்கள் செயல்பாடு எப்படி இருந்தது?

தொ. மு. சி. ரகுநாதன் - தமிழ் ...

நானும் தொ.மு.சி.யும் ஆரம்ப காலத்திலிருந்தே உறுப்பினராக இருந்தோம். கல்கியைத் தலைவராகவும், ‘சக்தி’ வை.கோவிந்தனை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தோம். வெ.சாமிநாத சர்மா, ராஜாஜி, கி.வா.ஜ., சங்கத்திலே இருந்தார்கள். இரண்டு, மூன்று மாநாடுகளுக்குப் பிறகுதான் நானும், தொ.மு.சி.யும் செயற்குழுவுக்கு வந்தோம். கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர்களெல்லாம் அதில் சேரவில்லை. நான் பொதுச்செயலாளராக ஆன பிறகுதான், ஏன் இவர்களெல்லாம் ஒதுங்கியே இருக்கிறார்களென்று சொல்லி ஜீவா, ஆர்.கே.கண்ணன் இப்படிப் பலரைச் சேர்த்தேன்.

அந்தக் காலகட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணி என்ற பெயரில் தி.மு.கவுடன் கூட்டணி வைப்பது என்று முடிவாகியது. நானும் எஸ்.ஆர்-.கே. இன்னும் சில தோழர்களும் கடுமையாக எதிர்த்தோம். அதற்காக ‘சமரன்’ என்று ஒரு பத்திரிகையே நடத்தினேன். அது அரசியல் பத்திரிகை. ரொம்ப நன்றாகப் போயிற்று. அதனால, தமிழ் உணர்வுள்ள எழுத்தாளர்கள், சங்கத் தேர்தலிலே என்னையும் சாமி.சிதம்பரனாரையும் தோற்கடிக்க நினைத்தார்கள். தோற்கடிக்கிற மாதிரி நிலைமை வந்ததும் நாங்களே ஒதுங்கிக் கொண்டோம்! அப்போதுதான் கா.அப்பாதுரையார் தலைவரானார். அவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இடையிலே வந்து சேர்ந்தவர். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்தோம். அவர் தலைமையேற்று நடத்திய முதலாவது பேரவைக் கூட்டத்தில் எழுத்தாளர் சங்கத்தில் ஒரே கருத்துள்ளவர்கள்தான் இருக்கவேண்டும் என்றும், தமிழர்கள் அல்லாதவர்களை உறுப்பினர்களாக்கக் கூடாது, சங்கத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பேசினார். இது சரியில்லையென்று நாங்களெல்லாம் ராஜினாமா பண்ணிட்டோம். அதோடு ‘தமிழ் எழுத்தாளர் சங்கம்’ சமாதி ஆகிவிட்டது. அதன்பிறகு ஜீவாவின் முன் முயற்சியால் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ தோற்றுவிக்கப்பட்டது.

 ‘சரஸ்வதி’ இதழைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம்…?

1962ல் சீனா, இந்தியா மீது படையெடுத்தபோது, தமிழ் நாட்டில் இருந்த கம்யூனிஸ்ட்களை எல்லாம் கைது செய்தார்கள். பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம், வி.பி.சிந்தன், உமாநாத், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், ரமணி இப்படி முக்கியமான தலைவர்களையெல்லாம் கைது செய்து கடலூர் சிறையிலே அடைத்தார்கள். நானும் அவங்களோடு அடைக்கப்பட்டேன்.
நான் சிறைக்குப் போனதால் ‘சரஸ்வதி’ இதழை நடத்த முடியல.

வ. விஜயபாஸ்கரனின் 'சமரன்' களஞ்சியம் ...

பாலனும், எஸ்.ஆர்.கேயும் “‘சமரன்’ இதழை மட்டும் நீங்க சிறையிலிருந்து வருகிற வரைக்கும் நடத்தறோம்’’னு சேதி சொல்லி அனுப்பினாங்க. நானும் சம்மதிச்சேன். பதினோரு மாசம் சிறையிலிருந்துவிட்டு வந்தபோது, சமரன் சர்குலேசன் பதினாலாயிரத்திலிருந்து நாலாயிரமாக இறங்கி இருந்தது. வங்கி கணக்கு காலியாகியிருந்தது. அதனால ‘சரஸ்வதி’யை பிறகு நடத்திக்கலாம் என்று நினைப்பு வந்தது. அப்புறம்… ‘சோவியத்லேன்ட்’லேருந்து வேலைக்குக் கூப்பிட்டாங்க. போயிட்டேன். சரஸ்வதி அப்படியே நின்னுப் போச்சு.

‘சரஸ்வதி’ இதழை நடத்தியது சம்மந்தமா இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

சரஸ்வதி களஞ்சியம் Saraswathi Kalanjiyam

என்னைப் பொறுத்தவரை ரொம்ப திருப்தியாக இருக்கிறேன். இன்றைக்கு இருக்கிற தொழில் நுட்ப வளர்ச்சியும். பொருளா தாரமும் அப்போது இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும். ஆனாலும், அன்றைய சூழ்நிலையில் சிறப்பாக செய்திருப்பதாகவே நினைக்கிறேன். சமூக அக்கறையே இல்லாமல் வெளிவரும் இன்றைய தமிழ்ப் பத்திரிகைகளைப் பார்க்கும்போது சரஸ்வதியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இருக்கிறது. சகல தரப்பினரையும் அரவணைத்து செல்லக்கூடிய சரஸ்வதி போன்ற ஓர் இலக்கியப் பத்திரிகை இன்றைய சூழ்நிலையில் மிக அவசியம் என்று நினைக்கிறேன்.

புதிய புத்தகம் பேசுது
ஆகஸ்டு 2004

சந்திப்பு :சூரியசநத்திரன்