சரசுவதிக்கு என்ன ஆச்சு? | Saraswathikku Enna Achu

பெரும்பாலும் பொதுவெளியில் யாரும் பேசத் தயங்கும், கூச்சப்படும் விஷயங்களை தான் மிகவும் யதார்த்தமாக ‘சரசுவதிக்கு என்ன ஆச்சு?’ என்ற இந்த புத்தகத்தில் ஒரு கதையாக எழுத்தாளர் சி.சரிதா ஜோ எழுதி Saritha Jo Storyteller இருக்கிறார்.

புத்தகத்தின் அட்டைப்படத்தையும் தலைப்பையும் பார்க்கும்போது சரஸ்வதிக்கு என்ன ஆச்சு என்று நம்மால் யூகிக்க முடிகிறது அதுவும் அந்த குழந்தை தரையில் படுத்துக்கொண்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுவது போன்ற படம் வரைந்து இருப்பது புத்தகத்தை வாசித்தால் நமக்கும் வலிகளை உண்டாக்கும் என்று வாசிக்காமலேயே மேசையின் மீது வைத்து விட்டேன் இரண்டு மூன்று நாட்களாக புத்தகத்தை.

புத்தகத்தை எடுத்தெடுத்து தலைப்பை மட்டுமே பலமுறை வாசித்துயிருக்கிறேன். சரசுவதிக்கு என்ன ஆச்சு…சரசுவதிக்கு என்ன ஆச்சு…என்று நான் நினைத்ததைப் போலவே புத்தகத்தை வாசிக்கையில் பெரும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் ஆட்பட்டேன். இதனால் தான் இது போன்ற புத்தகங்களை வாசிக்கத் தவிர்ப்பேன். இதுவரை கதைகளிலே, நாவல்களிலோ சிறு கதைகளில் கூட இந்த அளவுக்கு பெண்களின் பாதிப்புகளை, (இப்படி ஓபனாக) பிரச்சனைகளை இது நாள் வரை நான் வாசித்தது கிடையாது.

சாதாரண சிறுநீர் பிரச்சனைத் தானே என்று எடுத்துக்கொண்டு வாசிப்பை என்னால் கடக்க முடியவில்லை. புத்தக அணிந்துறையில் சொல்வதைப் போல “குழந்தைகள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ஊக்கமும், அரவணைப்பும், பாதுகாப்பும் தந்து வளர்ச்சி அடையச் செய்ய வேண்டியது சமூகத்தின் தலையாய பணி.”

இப்படி எல்லாம் நம் சமூகம் செய்கிறதா? என்றால் பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் வரும். சாதாரண பாத்ரூம் பிரச்சனை கூட இன்று வரை அரசு பள்ளிகளில் தீர்க்கப்படாமலே பாதியிலேயே நின்று பல்லை இளித்துக் கொண்டு சிரிப்பது போல தான் பல பாத்ரூம்கள் இருக்கின்றன.
இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் கழிவறை வசதி என்பது சரியில்லை என்பது நிதர்சனம்.

அதனால், பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள். ஆனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகளே. குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டும் எத்தனை பெற்றோர் குழந்தைகளின் பள்ளியில் இருக்கும் கழிவறை சரியாக இருக்கிறதா? குழந்தைகள் சரிவர இயற்கை உபாதைகளை கழித்திருக்கிறார்களா? என்று கேட்டிருக்கிறோம் என்று கேட்டால் கேள்விக்குறியே என்று என்னுரையில் குறிப்பது போலவே பிரச்சனைகள் ஆழத்தை மிக தீவிரமாக கதையில் சொல்லி செல்கிறார்.

பள்ளியில் நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவிற்காக நாடகம், நடனம், கும்மி,கோலாட்டம் இவற்றுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியைக் காண அன்று வழக்கம் போல் பள்ளிக்கு வருகிறாள் சரசுவதி.

சுதந்திர நிகழ்ச்சிகள் கோலாகலமாக தொடங்க இருக்கும் போது….

“வயிறு வலிக்குதே! ஐயோ வயிறு வலிக்குதே !” என்ற முனகல் சத்தம் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு ‘டி’ பிரிவு வகுப்பறைக்குள் இருந்து கேட்கிறது… என்று ஆரம்பிக்கும் இந்த நாவல்.

அந்தக் குரலுக்கு சொந்தக்காரி சரசுவதி.
அந்த சரசுவதிக்கு அந்த மூன்று நாள் பிரச்சனைகள் பற்றியும் சிறுநீர் உபாதைகளை பற்றியும் பேசப்படும் கதைதான் ‘சரசுவதிக்கு என்ன ஆச்சு?’.

“சுதந்திர தின நிகழ்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது.வயிற்று வலி ஒரு புறம் என்றால், காலையில் இருந்து அடக்கி வைத்திருந்த யூரின் எப்போது வெளியே வருவோம் என்று காத்துக் கொண்டிருந்து. ஒரு கட்டத்தில் அமர்ந்திருக்க முடியாமல் வகுப்பறையினுள் பின்புறம் சென்று படுத்துக் கொண்டாள் சரசுவதி. எல்லோரும் சுதந்திர தினவிழாக் கொண்டாட்ட நாளாக இருக்க, சரஸ்வதிக்கு மட்டும் அன்றைய நாள் ரணமாக இருந்தது”.

“ஏன் சரசு வந்தே? ஏன் இப்படிக் கஷ்டப்படுற? நீ வீட்டுக்குக் கிளம்பி விடு” என்றால் பூர்ணிமா.

“நான் கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன். சரியாயிடும் அப்புறம் நான் வந்துருவேன் எப்படி இருந்தாலும் உன் டான்ஸ் நாலாவதுதானே அதுக்குள்ள நான் வந்துடுறேன். நீ ஸ்டேஜ்க்கு பக்கத்துல இருப்பே. நான் நம்ம கிளாஸ் பிள்ளைங்க உட்கார்ந்து இருப்பாங்களே அங்க வந்து உட்கார்ந்திருக்கிறேன். நீ போ” என்று கூறிவிட்டு

“போகும்போது கதவைச் சாத்திட்டு போ. என் செருப்பையும் உள்ள எடுத்துப் போட்டுட்டு போ” என்று சொன்ன பிறகு சரஸ்வதி தன் வகுப்பறையிலே முடங்கிக் கிடந்தாள்.

சுதந்திர நிகழ்ச்சியை ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கையில் சரசுவதி மட்டும் தன் வகுப்பறைக்குள் இருந்ததால் அவளுக்கு என்ன ஆச்சு என்பதை கதை சொல்கிறது.

கதையில் சொல்வதைப் போல “வலியோடு அழுது தளர்ந்து போயிருந்த சரஸ்வதிக்கு ஈரம் தொடையை நனைக்க நினைக்க முழிப்பு வந்தது. மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தால் ‘இன்னுமா நிகழ்ச்சி முடியல’ என்று எண்ணியவாறே கண்களைத் தனது வலது கையால் கசக்கியபடி எழுந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. இருட்டு கருகும் என்று இருந்தது. மெதுவாக எழுந்து வந்து ஜன்னலில் எட்டிப் பார்த்தாள். வெளியில் இருட்டாக இருந்தது. என்ன இருட்டா இருக்குது ரொம்ப நேரம் தூங்கிட்டேனே என்று பதறி அடித்து துடித்தாள்”.

ஒரு சில வரிகளை வாசிக்கும் போது மனம் ரொம்பவே கனக்கிறது. இருந்தாலும், முழுவதுமாக வாசித்து முடிப்பதற்குள் ரொம்பவே வலிக்க செய்தது.அப்படி வலிகளோடு உணர்ந்த ஒரு சில வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“ஐயோ, வலியோட இந்த இருட்டு வேற என்னைக் கொல்லுதே” என்று கத்த ஆரம்பித்தாள். வயிற்று வலியோடு பயமும் சேர்ந்தது. பயத்தில் இரண்டு கால்கள் இடையில் வைத்திருந்த நாப்கின் நனைந்து ஈரம் படிப்படியாக இரண்டு தொடைகளிலும் படர,மெதுவாக அந்த இடத்திலேயே அமர்ந்தாள்.

அந்தப் பள்ளிக்கூடத்தின் அறையில் மாட்டிக் கொண்ட சரஸ்வதி எப்போது வீடு திரும்புவாள் என்ற பதைப்பதைப்போடு நாம் வாசிக்கையில்…கதையின் ஆசிரியர் ‘மலையாங்குட்டைக்குள்’ சென்று விடுகிறார்.

‘மலையாங்குட்டை’ என்பது ஏதோ காட்சி பொருள் அல்ல. அந்தப் பள்ளிக்கூடத்து மாணவ-மாணவிகள் பாத்ரூம் போகும் இடம். சரஸ்வதிக்கு மட்டும் எப்போதும் யூரின் வந்துக் கொண்டே இருக்கும். அன்றும் அதே போல தான் எழுந்து பாத்ரூம் போக கேட்கையில் இன்டர்வெல் பீரியட்க்கு மட்டும் பாத்ரூம் போக வேண்டும் என்று சொல்லிவிட்டார் ஆசிரியர்.

‘ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியுமா?’ என்று ஒரு சொலவடை உண்டு. அதைப்போலவே ‘ஹரப்பா நாகரிகம் எல்லாம் தெரிஞ்ச இந்த டீச்சருக்கு ஒன்னுக்கு வந்த அடக்கி வைக்க முடியாதுன்னு தெரியலையா’ என்று சரஸ்வதி நினைத்து ‘எனக்கு மட்டும் ஏன் தான் அடிக்கடி ஒன்னுக்கு வருதோ’ என்று கண்களில் வந்த கண்ணீரை தனது புறங்கையால் துடைத்தபடி அமர்ந்தாள்.

இன்டர்வெல் பெல் அடித்ததும் மலையாங்கோட்டை நோக்கி ஓடுகிறார்கள். மாணவிகள் சிறுநீர் கழிக்க அவர்கள் படும் அவஸ்தையை அந்த ஒரு பக்கத்தில் எழுதியிருப்பார் எழுத்தாளர்.அதை எல்லாம் வாசிக்கவோ எழுதவோ முடியாது. ஆனாலும் நாம் வாசித்து தான் ஆக வேண்டும் எழுதித் தான் ஆக வேண்டும்.அப்பேர்ப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். சிறுநீர் கழிக்க முடியாமல் குழந்தைகளோடு குழந்தைகளாக சரஸ்வதியும் ஓட ஆரம்பித்தாள் ஓடிவரும் பொழுதே அவளை அறியாமலே உள்ளாடை நனைய ஆரம்பித்தது. பிறகு கால் வழியாக கீழே இறங்கிய சிறுநீர் பக்கத்தில் ஓடிவரும் விஜயாவின் மீது தெரிவித்தது. “அய்யே, என் பாவாடை சட்டையெல்லாம் தெறிச்சிருச்சு” என்று கூறியபடியே சரஸ்வதியைவிட்டு வேறு பக்கம் ஓடினாள் விஜயா.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகிய பின்னும் சிறுநீர் கழிக்க நாம் படும் போராட்டங்கள் சொல்லி மாளவில்லை.
உண்மைதான்,கழிப்பிடங்களே இல்லாத இன்றைய கிராமங்களிலும், நகரங்களிலும் மக்கள் படும் அவஸ்திகள் ஏராளம். அதிலும் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என்னதான் செய்வார்கள் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை வசதிக்கூட சரிவர இல்லாத போது. எல்லோருக்கும் போல எனக்கும் 1990களில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் பள்ளியில் கழிப்பறை வசதி கூட இல்லை. கொசஸ்தலை ஆற்றின் அருகிலேயே
பள்ளி அமைந்துதிருந்ததால், ஒன்னுக்கு, ரெண்டுக்குப் போக மாணவர்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஆனால், பெண்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். ஒன்னுக்குப் போக மட்டும் ஏதோ ஒரு மூலையில் தண்ணீர் இல்லாத பாத்ரூம் தான் (இன்றைய வரை) இருந்திருக்கும். அவர்களின் நிலைமை அய்யய்யோ. பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நிலை இப்படித்தான் இருந்திருக்கும். இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

கதைக்கு வருவோம். அதுதான் ஏற்கனவே சொன்னது போல சரசுவதி பள்ளிக்கூடத்தின் வகுப்பறையில் மாட்டிக் கொண்டாள். சுதந்திர தினத்தன்று ஊரில் கலவரம் ஏற்பட்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து ஆகிவிட்டன. அதனால், அனைத்து மாணவ- மாணவிகளும் வீட்டிற்கு சென்ற பிறகு சரசுவதி மட்டும் அந்த அறையில் முடங்கிக் கிடந்தாள்

ஊரெல்லாம் கலவரமாகி விட்டிருந்த நேரத்தில்…கலவரத்துக்கு சொந்தக்காரர்கள் தலைவரை எதிர்த்து பேசியதற்காக இன்னொரு தலைவரின் வீட்டைக் கொளுத்தி விட்டார்கள். வீடு கொளுத்திகள் எல்லா ஊர்களிலும் இருப்பார்கள் போல. விக்னேஷ்யும் முருகனும் பேசிக் கொண்டனர்.

விக்னேஷ் சொன்னான்” தீ வச்சது எவ்வளவு தப்பு டா இப்படி ஒரே நாள்ல நம்ம அய்யாவோட பேரைக் கெடுத்துட்டீங்களே.அவர் எவ்வளவு மென்மையான, தன்மையான மனுஷன். ஏன் இப்படி பண்ணுனீங்க” என கேட்டதற்கு முருகன் சொன்னான்.

“என்னது…நம்ம ஐயாவா மென்மையானவரா? தன்மையானவரா? ஐயா சொன்னதுனாலதான் நாங்களே துணிந்து இறங்கினோம். என்ன வேணாலும் பண்ணுங்க நான் உங்களைக் காப்பாத்திக் கூட்டிட்டு வரேன்னு சொன்னாரு.போலீஸ்ல புடிச்சா கூட வெளியில் கொண்டுவர ஐயா ஏற்பாடு பண்றேன்னு சொல்லியிருக்கிறாரு” என்றான் முருகன்.

இப்படி, ஊரெல்லாம் ஒருபுறம் கலவரம் இருக்க, பள்ளிக்கூடத்தில் மாட்டிக் கொண்ட சரசுவதி இது எல்லாம் தெரியாமல் ‘யாராவது காப்பாத்துங்க! காப்பாத்துங்க!என்று அலறிக் கொண்டிருந்தால். கலவரத்தால் அனைவரும் கைது செய்து கொண்டிருந்த காரணத்தால் விக்னேஷ் அந்த பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டுகள் ஏறி உள்ளே நுழைந்து ஒளிந்து கொண்டான்.

அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது பள்ளிக்கூடத்தில் இருந்து காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்ற குரல் கேட்டு.
குரல் கேட்ட திசையில் விக்னேஷ் சென்று பார்த்தான். சத்தம் வந்த கதவை அடைந்தான்.

“யாரது?”என்று கேட்டான். பயத்தில் விக்கித்த சரசுவதி தட்டுவதை நிறுத்திவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். “யாருன்னு கேட்டேன்” என்றான் விக்னேஷ்.
சரஸ்வதிக்கு பேய் என்றால் பயம் ஒருவேளை பேயாக இருக்குமோ இருக்காது அதுக்குத்தான் உருவம் கிடையாது. ஜன்னல் வழியாக வந்திருக்குமே ஜன்னல் திறந்து தானே இருக்கு.இல்லை இல்லை மனுஷனா தான் இருக்கும்.பேயைவிட இப்ப மனுசங்களை பார்த்தால் தான் பயமாயிருக்கு. யாரை நம்புவது என்றே தெரியல என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு விக்னேஷ் உடன் பேச ஆரம்பித்தாள்.

தனக்கு நடந்தவை எல்லாம் சொன்ன பிறகு, வயிற்று வலியுடன் சேர்ந்து யூரினும் முட்டிக்கொண்டு வந்தது அடக்க முடியாமல் கதவை திறந்தால்.
“சரசுவதி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். நடந்து செல்ல செல்ல உதிரம் தொடையை தாண்டி காலில் கீழே முட்டியை விட்டு இறங்க ஆரம்பித்தது. வேகமாக பாத்ரூமம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள் சிறுநீர் கழிக்க அமர்ந்தாள். சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர வர, ஏதோ ஒரு மிகப்பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போலும் பெரிய வலி குறைந்தது போலும் இருந்தது. பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பிறப்புறுப்பின் மீது ஊற்றும்போது தண்ணீர் பட்டவுடன் முதலில் எரிய ஆரம்பித்தது. தொடையில் தண்ணீர் பட்டவுடனும் எரிய ஆரம்பித்தது. காலையிலிருந்து ஒரே நாப்கினோடு இருந்ததால் அது தொடையில் உரசி உரசி தோல் உரிந்து அந்த இடம் கன்னிப் போய்விட்டது. அவளால் அந்த இடத்தை தொடக்கூட முடியவில்லை. வலியோடு தான் நாப்கினை மாற்றி விட்டு வெளியே வந்தாள்.

அம்மா சொன்னது ஞாபகம் வந்தது சரசுவதிக்கு “ஏம்புள்ள..இன்னைக்கும் பள்ளிக்கூடம் போய்தான் ஆகணுமா? எப்பவுமே அந்த மூணு நாள் லீவு போட்டுக்குவே. ஒழுங்கா ஊட்லையே இரு. பள்ளிக்கூடத்துல போய் எங்க பஞ்ச மாத்துவ” சரசுவதி சொல்வாள் அதற்கு “நானே கோபத்தில் இருக்கிறேன் எச்ச கோபப்படுத்தாதே இந்த மூணு நாளா நினைச்சா கோவம் வருது கரெக்டா நோம்பி என்ன வந்துரும் இல்ல கோவிலுக்கு போகிறப்ப வந்துரும் அடுத்த ஜென்மம் இருந்தால் பொட்ட புள்ளையா மட்டும் பிறக்கவே கூடாது அம்மா எனக்கென்ன வலியோடு போறதுக்கு என்ன ஆசையா?

உரையாடல் இப்படி தொடர்ந்து கொண்டு போகும்போது சரசுவதி சொல்வாள் “நாலு வருஷத்துக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு அழுக்குத் துணி துவைக்க வந்தாளே காத்தாயி. அவங்க புள்ள சுமதி என் கூடத்தான் படிக்கிறா”

” பார்றா…அவ புள்ளை எல்லாம் படிக்குதா? “ஏன்மா படிக்கக் கூடாதா?” பள்ளிக்கூடம் எல்லோருக்கும் பொது தானே? ”
குழந்தைகள் என்னவோ சரியாக தான் இருக்கிறார்கள் நாம்தான் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் குறைய இருக்கிறது.

“சுமதிக்கு நேப்கின் பயன்படுத்தி பழக்கம் இல்ல. துணி தான் யூஸ் பண்ணவா. அதுக்கு முக்கிய காரணம் நாப்கின் வாங்குவதற்கு காசு இல்லைன்னு சொல்லுவா. சில நேரங்களில் பழைய துணி கூட இருக்காதாம். நாங்க கூட அவளுக்கு கொண்டு போய் கொடுத்திருக்கிறோம். பழைய துணி இல்லாத நேரங்களில் அவகிட்ட இருக்கிற நாலு ஜட்டி அஞ்சு ஜட்டி ஒண்ணாவே ஒன்னு மேல ஒன்னு போட்டுக்குவாளாம் பீரியட்ஸ் டைம்ல” இந்த வரிகளை எல்லாம் படிக்கும் போது தலை சுற்றுகிறது. மயக்கமே வருவது போல இருக்கிறது. இந்த சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோமா? இதற்கும் மீறி நான் எழுதுவதற்கு கைகளோ, மனதோ நடுங்குகிறது. ஆனால் சரிதா புத்தகம் முழுக்க வலிகளோடு சுமந்து எழுதிச் செல்கிறார்.

“சுமதி வீட்டு வேலையை செஞ்சு முடிச்சுட்டு ஊருக்குள்ள இருக்குற அழுக்கு துணி எல்லாம் துவச்சு முடிச்சுட்டு அடுத்த நாள் பள்ளிக்கூடம் வருவதற்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுன்னு சொல்லுவா. ஆனா அவங்க அம்மா சாகும்போது படிப்புதான் பொம்பளப் புள்ளைகளுக்கு கடைசி வரைக்கும் கூட இருக்கும். படிப்பை உட்டுடாதேனு சொன்னாங்கன்னு சொல்லுவா”.

இதை எல்லாம் வாசிப்பதற்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கும்போது… கதையில் சொல்வதைப் போல “எதுவுமே நம்ம அனுபவிச்சா தான் தெரியுது. வலியும் வேதனையும் கேட்கிற உங்களுக்கு பாதி கூட தெரியாது” இதுக்கெல்லாம் முடிவு காலம் எப்ப வருமோ பாத்ரூம் எப்பதான் கட்டப் போறாங்களோ.

தனது தோழி மீனாவின் அண்ணன் விக்னேஷ் என்பதால் மனம் விட்டு பேசுவாள் சரசுவதி. இருவருக்கும் நல்ல உரையாடல் நடந்து கொண்டிருக்கும்போது சரசுவதி சொன்னாள் “அந்த மூணு நாள்ல நான் மட்டும் இல்ல. இங்கு படிக்கிற யாருமே போக மாட்டோம். முடிஞ்ச வரைக்கும் நாங்க பள்ளிக்கூடத்துக்கு அந்த மூணு நாளில் லீவு போட்டுக்குவோம். என் ஃபிரண்ட்ஸ் பூர்ணி டான்ஸ் ஆடுறாள் அப்படின்னு சொன்னதுனால பார்க்கலாம்னு ஆசைப்பட்டு வந்தேன். மீனாகூட அவ நடிக்கிற நாடகத்தை பார்க்க வரச் சொல்லியிருந்தா. அதனால்தான் வந்தேன். காலையில இருந்து யூரினை அடக்கி வச்சதால வலி தாங்க முடியாமல் இங்கேயே படுத்துக்கிட்டேன். சரி எப்படியாவது கொஞ்ச நேரத்துல எழுந்து அவங்க ப்ரோக்ராம் வர்றப்ப மட்டுமாவது போயிரலாம்னு நினைச்சேன். படுத்து தூங்கினனா இல்ல மயக்கம் வந்துச்சானு தெரியல. அப்புறம் கண் முழிச்சுப் பாக்குறப்ப எல்லாம் இருட்டா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல அண்ணா” என சொன்னாள்.

இப்போது விக்னேஷ் நினைத்துப் பார்த்தான் .

“அம்மா…வயிறு வலிக்குது தாங்கவே முடியல” என்று மீனா கதறி அழுவதை பார்த்து விக்னேஷ் “அம்மா…மீனா சும்மா சீனைப் போடுற” என்று கடந்து சென்றான் விக்னேஷ். அன்று மாலையே மீனா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிறுநீரகக் கல் இருப்பதாகவும் கல்லின் அளவு இருப்பதால் ஆபரேஷன் செய்தார்கள்.

விக்னேஷ் இதையெல்லாம் நினைத்து சரசுவதியிடம் “நம்ம குழந்தைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு பெற்றோர்களும் வரணும். பள்ளிக்கூடத்தில் என்ன நடக்குதுன்னு வந்து கேட்கணும். தன்னோட குழந்தையை பத்தி கேக்கணும் பள்ளியில் என்னென்ன வசதிகள் இருக்கு அப்படின்னு கேட்கணும். இது ஒரு பெரிய பிரச்சனை. பாத்ரூம் சரியா இல்லை அப்படிங்கிறது எவ்வளவு பெரிய பிரச்சனை. இங்க படிக்கிற ஆயிரக்கணக்கான குழந்தைக எங்க போவாங்க? அப்படிங்கிற ஒரு சாதாரண அறிவு நம்ம அப்பா அம்மாவுக்கு கிடையாது. அரசாங்கத்துக்கு கிட்டேயும் கிடையாது. நினைக்கவே ரொம்ப வேதனையாகக்கூட இருக்கு” மேலும் சொல்லுவான் “ஐயோ இந்த அரசாங்கம் பண்ண மாட்டேங்குதே அப்படின்னு சொல்லி சொல்லிட்டு இருந்து எந்த பிரயோஜனமும் கிடையாது. எல்லாத்தையும் அரசு பண்ணனும்னு சொல்லி எதிர்பார்த்துட்டு இருக்ககூடாது. சில நேரங்கள்ல பொதுமக்களும் அதற்கான பொறுப்பு ஏற்று சில நேரங்களில் அரசாங்கத்திற்கு திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டியது இருக்கு முடியலைன்னா அரசாங்கத்தை எதிர்த்து போராடவும் நாம் தயாராக இருக்க வேண்டும்”.

“ஆனா ஊர்ல பாருங்க வருஷா வருஷம் கோயிலுக்கு திருவிழா நேரத்தில் கொடை கொடுக்கிறோம் .12 வருஷத்துக்கு ஒரு தடவை கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்றோம். அதுக்கு நம்ம அரசாங்கத்தை எதிர்பார்க்கிறோமா? நம்ம சாமிக்கு நாம தானே பண்றோம். பள்ளிக்கூடத்தையும் கோயில் மாதிரி நிகழ்ச்சி பண்ணலாமே”என்று சொல்வான் விக்னேஷ்.

ஆமாம். ஊர் பொதுமக்கள் நினைத்தால் செய்யலாம்.ஆனால்,ஒருமுறை நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் எங்க ஊரில் பொதுக்கூட்டம் கூடியது.

ஊர் திருவிழாவை பற்றி பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் கல்லூரி மாணவனாகிய நான் எழுந்து “ஊருக்கு பொதுப் பிரச்சினையாக இருக்கிற பாத்ரூம் பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆண்கள் ஆகிய நாம் ஏதாவது ஒதுக்குப்புறம் ஒதுங்கிவிடலாம். பெண்கள் என்ன செய்வார்கள். அதற்காக நமது ஊர் சார்பாக பொது கழிப்பிடம் கட்டலாமே” என்று கேட்டதற்கு ஊர் பெருசுகள் எல்லாம் சேர்ந்து “கோயில் திருவிழாவும், பாத்ரூமும் ஒண்ணா? இப்ப திருவிழா தான் நமக்கு முக்கியம். பாத்ரூம் அப்புறம் கெடக்குதுன்னு” சொல்லி பாத்ரூம்க்கான கோரிக்கை வைத்ததை நிராகரித்து என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதுபோன்ற மனிதர்களிடமும்,சமூகத்திலும் நாம் வாழ்கிறோம் என்பது நினைவில் கொள்வோம். ஆனால் ஊர் மக்களுக்கு விழிப்புணர் வந்து ஊர் மக்கள் நினைத்தால் தனக்கான தேவைகளை அவர்களை செய்து கொள்ளலாம்.

இறுதியாக, “வீட்ல தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருங்க. பார்க்கிற அக்கம் பக்கத்துக்காரன் கிட்ட, சொந்தக்காரங்க கிட்ட, ஏதோ ஒரு பதிவில் இருக்கிறவங்க கிட்ட, வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் எல்லாம் சொல்லுங்க. உங்களுடைய குரலுக்கு ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கு. நம்ம பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மகிட்டத்தான் இருக்குது. கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்க கிடைக்கவில்லை என்றால் தட்டுங்கள். அதுக்கும் கிடைக்கலைன்னா உடைங்க….கண்டிப்பா ஒரு தீர்வு வரும்” என்று விக்னேஷ் சொன்னது கேட்டு “முட்டை ஓட்டை உடைச்சிட்டு வெளியே வர்ற குஞ்சுகள் தான் பெரிய பறவையாக மாறுகிறது. உடைக்கப் பயப்படுற குஞ்சுகள் உள்ளே இறந்து போகுது அப்படின்னு எங்கேயோ படிச்ச ஞாபகம். நாங்க உடைச்சிட்டு வர்ற குஞ்சாக இருப்போம் ரொம்ப நன்றி அண்ணா” என்று சரசுவதி கூறும் அந்த நேரம் பொழுது போல ஆரம்பித்தது வெளிச்சம் பரவியது.

சாதாரணமாக நாம் நினைக்கும் பாத்ரூம் பிரச்சினை தான். ஆனால், இங்கு எத்தனை பேருக்கு கழிப்பட வசதிகள் கூட இல்லாமல் இந்தியாவில் வாழ்கிறோம்.

பள்ளிக்கூடங்களிலும், வீடுகளிலும் இந்த நிலைமை என்றால் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் நிலைமையோ பரிதாபம். ஆயிரக்கணக்கான வேலை செய்யும் ஊழியர்களுக்கு இரண்டோ,மூன்றோ பாத்ரூம் வசதிகள் தான் இருந்து கொண்டிருக்கிறது இன்னும் நாம் வேலை செய்யும் இடங்களில். இது நிதர்சனமான உண்மை.

எத்தனை பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், கம்பெனிகளில், அலுவலகங்களில் ஏன் வீடுகளில் கழிப்படை வசதி கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுவது துரதிர்ஷ்டங்களிலும் துரதிஷ்டம் தான். இதற்காக நாம் என்ன செய்யப் போகிறோம் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற மிகப்பெரிய கேள்விக்குறி நம் முன் இருக்கிறது.

சமுதாயத்தில் நடக்கும் தீமைகளையும் அறியாமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த சரஸ்வதிக்கு அண்ணாச்சி என்ற புத்தகம் அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். புத்தகம் மிக சிறப்பாக எழுதிய சரித்தா ஜோ விற்கும் வெளியிட்ட புக்ஸ் ஃபார் சில்ட்ரனுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

புத்தகஅணிந்துரையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சொல்வதைப் போல “குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை அளித்து அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகள் வழங்கும் போது தான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்வார்களாக வளர்வார்கள்”
இப்புத்தகமும் அத்தகைய முயற்சிக்கு வித்திடும் என நினைக்கிறேன்.

 

நூலின் தகவல்கள் 

புத்தகத்தின் பெயர்: சரசுவதிக்கு என்ன ஆச்சு?

ஆசிரியர் : சி. சரிதா ஜோ

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்

விலை : 60

நூலைப் பெற : 44 2433 2924

 

அறிமுகம் எழுதியவர்: 

அன்புடன்
அமுதன் தேவேந்திரன்

 

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *