ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - சரசுவதிக்கு என்ன ஆச்சு -விஜிரவி

 

 

 

‘’மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாரதியின் கூற்று பெண்மையை உயர்த்திப் பிடித்தாலும், ஒரு பெண் உடல் ரீதியாக படும் துன்பங்களும் ஏராளம், அதில் மாதவிடாய் காலங்களில் அவள் படும் பாடுகளும் துயரங்களும் முக்கியமானவை. பதின் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் போது பெரும்பாலான சிறுமிகள் பூப்படைகிறார்கள். ஒரு பூப்படைந்த சிறுமி உடல் ரீதியாக அனுபவிக்கும் வலிகளும் துன்பங்களும் நிறைய. குறிப்பாக கிராமத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளின் பாடு சொல்லி மாளாது. மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரமான தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் அரசு பள்ளிகளில் இருக்கின்றனவா என்பது சந்தேகமே.

பள்ளியில் போதிய கழிவறைகள் இல்லாததாலும், இருக்கும் ஒன்றிரண்டும் தண்ணீர் வசதி இல்லாததால், முறையான சுத்தமான பராமரிப்பின்றி இருப்பதாலும் நிறைய சிறுமிகள் தங்கள் இயற்கை உபாதையை கூட அடக்கி வைத்துக் கொண்டு பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் அவர்கள் தங்கள் நாப்கினை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றாமல் விட்டு விடுவதால் பின் நாட்களில் ஆரோக்கியம் சீர்குலைந்து கருப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இது குறித்த எந்த விதமான விழிப்புணர்வோ, புரிதலோ இன்றி அந்த குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது வேதனையான நிஜம்.

சரிதா ஜோவின் ‘’சரசுவதிக்கு என்ன ஆச்சு?’’ என்கிற புதினம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் மாதவிடாய் காலத்து துன்பங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முறையான கழிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் சரஸ்வதி படம் துன்பங்களைத்தான் இந்த புத்தகம் விரிவாக சொல்கிறது.

சுதந்திர தினத்தன்று, மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டாலும், தன் தோழியின் நடனம் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் பள்ளிக்கு வருகிறாள் சரஸ்வதி. தன்னுடைய வகுப்பறையிலேயே கொஞ்ச நேரம் படுத்து, ஓய்வெடுத்து விட்டு தோழியின் நடனம் ஆரம்பிக்கும்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வருகிறேன் என்று கூறுபவள், அப்படியே தன்னையறியாமல் வலி மிகுதியால் தூங்கி விடுகிறாள், வெடிகுண்டு மிரட்டலால் அனைத்து ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் பள்ளியை விட்டு காலி செய்ய, சரஸ்வதி உள்ளிருப்பதை அறியாமல், அவள் வகுப்பறை வெளியே தாளிடப்படுகிறது.

தூக்கம் கலைந்து எழுந்த சரஸ்வதி இருட்டிப்போன வகுப்பறையை கண்டு மிரண்டு போகிறாள். வெளியே தாழிடப்பட்டது கண்டு அதிர்ந்து போகிறாள். அவளது நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. அவள் படிக்கும் அந்த அரசுப் பள்ளியில் முறையான கழிப்பிட வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வெளியே மலையாங் குட்டைப் பகுதியில் சிறுநீர் கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை. அதன் மறுபுறத்தில் சந்தைக்கு செல்லும் பாதை இருப்பதால் மக்கள் அந்தப் பக்கமாக நடந்து சென்றால் அவர்கள் போன பிறகுதான் அவர்களால் சிறுநீர் கழிக்க முடியும். அதிலும் புதராக மண்டி கிடக்கும் அந்த இடத்தில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வந்துவிட்டால் சிறுநீர் கழிக்காமல் திரும்பி ஓடி வந்து விடுகிறார்கள் குழந்தைகள்.

சில அரசுப் பள்ளிகளில் நடக்கும் அவலத்தை அழகாக படம் பிடித்து காட்டுகிறார் எழுத்தாளர். ‘’ஹரப்பா நாகரீகம் எல்லாம் தெரிஞ்ச இந்த டீச்சருக்கு ஒன்னுக்கு வந்தா அடக்கி வைக்க முடியாதுன்னு தெரியலையே?’’ என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சரஸ்வதி’ என்ற வரிகளில் இயற்கை உபாதையை தீர்த்துக் கொள்ளக்கூட அனுமதி மறுக்கும் ஆசிரியர்களின் கருணையற்ற போக்கை சுட்டிக்காட்டி இருக்கிறார் நூல் ஆசிரியர். அவள் ஏழாவது படிக்கும் போது இன்டர்வெல்லில் சிறுநீர் கழிக்க வழியில்லாமல், வகுப்பறையில், தன் உடையிலேயே சிறுநீர் கழித்து விடுகிறாள். மற்ற பிள்ளைகள் எல்லாம் அவளை கேலி கிண்டல் செய்யும் போதும், ஆசிரியர், ஆயா திட்டும்போதும் அவமானத்தில் குறுகிப் போகிறாள். அவளுடைய மனவேதனை அதிகரிக்கிறது

மாதவிடாய் நேரத்தில், சரஸ்வதி காலையிலிருந்து இரவு வரை நாப்கினை மாற்றாமல் இருந்ததால், அவளுடைய தொடைப்பகுதியில் உள்ள தோல் உரிந்து எரிய ஆரம்பிக்கிறது. பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாததால் நாப்கினையும் மாற்ற முடியாது. எனவே எப்போதுமே அவளைப் போன்ற சிறுமிகள் மாதவிடாய் காலங்களில் கூடுதல் நாப்கின் எடுத்து வந்து, அதை மாற்றியதே இல்லை என்கிற அதிர்ச்சியான உண்மையை இந்த கதையில் பதிவு செய்திருக்கிறார்.

சரஸ்வதியின் அம்மா ‘பள்ளியில் பாத்ரூம் இல்லாவிட்டால் என்ன? பள்ளிக்கு அருகில் இருக்கும் வீடுகளில் போய் அனுமதி கேட்டு அங்கிருக்கும் பாத்ரூமில் நாப்கினை மாற்றிக் கொள்ளலாமே என்று கேட்கிறார். அதற்கு சரஸ்வதி தரும் பதில் வேதனையானது. ‘’சாதாரணமாகவே பாத்ரூம் போனால் இரண்டு கப் தண்ணீர் ஆவது செலவாகும். அதிலும் பீரியட்ஸ் உள்ள நாட்களில் அரைவாளித் தண்ணீராவது செலவழிக்க வேண்டும். அந்தப் பகுதி மக்கள் இரண்டு மைல் தூரம் சென்று அடிப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டு வருகிறார்கள். வீட்டுப் புழக்கத்திற்காக வைத்திருக்கும் தண்ணீரை இப்படி எல்லாம் கேட்டு அவர்களை சிரமப்பட வைக்கலாமா? என்று கேட்கும் போது அந்த சிறுமியின் கருணை உள்ளமும், என்னதான் நவீன யுகத்தில் எத்தனையோ டெக்னாலஜி வசதி பெருகிவிட்டாலும் இன்னும் கிராமங்களில் தண்ணீருக்காக மக்கள் படும் அவலங்களையும் சேர்த்தே படம் பிடித்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக் காட்டி சாடுகிறார் ஆசிரியர்.
படிக்கும் வயதில் படிப்பை மட்டும் பார்க்காமல் அரசியல் கட்சிகளில் சேர்ந்து அடிதடி வேலைகளில் இறங்குவது, வன்முறைகளில் இறங்குவது, தீ வைப்பது பாம் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் செயலையும் கண்டிக்கிறார்.

இதில் மனதை உருக்கும் சம்பவத்தையும் சொல்கிறார். காத்தாயி என்கிற சலவைத் தொழிலாளியின் மகள் நாப்கின் வாங்க வசதி இல்லாமல் நான்கைந்து ஜட்டிகளை ஒன்றாக போட்டுக் கொண்டு பள்ளிக்கு வருகிறாள். அவை உரசி உரசி அவளுக்கு வலியும், புண்ணும் ஏற்பட்டு, ஒரு மாதம் நடக்கவே முடியாமல் சிரமப்பட்டுகிறாள் என்று அறியும் போது கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது. 1700 பேர் படிக்கும் பள்ளியில் 500 பேர் பெண் பிள்ளைகள். அவர்களுக்கு இரண்டு மூன்று பாத்ரூம் மட்டுமே பள்ளியில் உள்ளது என்ற கொடுமையான நிஜத்தை சொல்கிறார்.

‘’எங்க ஸ்கூல்ல பொம்பள பிள்ளைங்க எல்லாம் ரொம்ப ரொம்ப கம்மியா தான் தண்ணி குடிப்போம். அதிகமா குடிச்சா யூரின் போகணும். அதுவும் செவ்வாய்க்கிழமை அன்னைக்கு மத்தியானம் சாப்பிடுற நேரத்துல கூட குடிக்க மாட்டோம். அன்னைக்கு சந்தைக்கு ஆட்கள் வரப் போக இருப்பாங்க. அதனால அந்த நேரத்தில் போய் மலையன்குட்டையில பகுதியில் சிறுநீர் கழிக்க முடியாது’’ என்று சரசுவதி சொல்லும் போது நெஞ்சே வலிக்கிறது. சரியாக தண்ணீர் பருகாததால், கிட்னியில் கல் சேர்ந்து, அறுவை சிகிச்சைக்கு ஆளாகிறாள் மீனா. இது அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவியரின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

. ‘’டாஸ்மாக் கடைகளை மூடணும்னு பெண்கள் போராடுறாங்க. ஆண்கள் அதை திறக்கணும்னு போராடுறாங்க. ஆனால் தன் குழந்தைகள் படிக்கிற பள்ளியில குழந்தைகளுக்கு சரியான அடிப்படை வசதிகள் இருக்கா அப்படின்னு பாக்குறதும் இல்ல, அதற்காக போராடுவதும் இல்லை’’ என்று பெற்றோரையும் ஒரு சாடு சாடுகிறார். பள்ளிகளில் அரசு கழிவறை கட்டித் தராவிட்டால் என்ன? கோயிலுக்கு நன்கொடை கொடுப்பது போல ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பள்ளியில் கழிப்பறைகள் கட்டலாம் என்று பிரச்சனைக்கு ஒரு அற்புதமான தீர்வையும் முன் வைக்கிறார் ஆசிரியர்.

மொத்தத்தில், அரசுப்பள்ளி மாணவமாணவியரின் வலிகளை துயரத்தை சொல்வதோடு நின்று விடாமல், அதற்கான தீர்வையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. மேலும் இது சிறார், பெரியவர் நூல் என்பதோடு, பெண்ணியம் பேசும் நூல் வகையிலும் சேரும் என்பது இதன் சிறப்பு.

விஜிரவி.

நூலின் பெயர் – சரசுவதிக்கு என்ன ஆச்சு?
நூலாசிரியர் – சி. சரிதா ஜோ
பதிப்பகம் – புக்ஸ் ஃபார் சில்ரன் ஜனவரி 2023
விலை – 60May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,  கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *