சிறுகதை: சோத்து மூட்டை – சரத்குமார்பையன் இன்று வேலைக்கு கிளம்புகிறான் என்னும் ஆர்வத்துடன் அம்மா வேகவேகமாக காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
காலை 10 மணிக்கு எல்லாம் எழுந்து ஒருவகையான நெறிகளுடன் வேலைக்கு கிளம்பினேன். 12 மணிக்குள் வேலையில் இருக்க வேண்டும் மணி இப்போ பத்தே முக்கால் ஆகிவிட்டது.

முதல்நாள் வேலை என்பதால் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பணமும் இருக்கவில்லை. சற்று தயக்கத்துடன் அப்பாவிடம் கேட்டேன் அவர் 24 வயது ஆகிவிட்டது இன்னும் என் உயிரை எடுக்கிறானே என கேட்டு விடுவாரோ என்ற பயம் என் மனதுக்குள். ஆனால் சற்றும் குறை சொல்லாமல் நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தார் (இப்போதாவது ஏதோ ஒரு வேலைக்கு போகட்டும் என நினைத்துக் கொண்டாரோ என்னவோ)

எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்த வேலையில் விருப்பம் இல்லை. என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர் எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் ஆசைகளைச் சுமந்து செல்லும் டிரைவர் ஆகவே தன் பயணத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்

நான் ஒரு பி.காம் படித்த பட்டதாரி. பல பல கனவுகளோடு என் உலகம் இருந்தது. எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனும் ஒரு பட்டதாரி. மார்க்கெட்டிங் வேலைக்குப் போகிறான். இந்த வேலை என்பதே என் குடும்பத்தை பாதுகாக்கப் பயன்படுமோ என தெரியாது. ஆனால் எனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை என் அன்றாட செலவுகளை ஈடு செய்ய இந்த வேலை பயன்படும். கம்பெனி டி-ஷர்ட் அணிந்து கம்பெனி பேக்கை மாட்டிகிட்டு ரெயின் கோட் பேக்கில் போட்டுக்கிட்டு வேலைக்கு தயாரானேன்.

என் அம்மா, “பார்த்து பத்திரம், வேலையில் அவசரம் என வண்டியை வேகமாக ஓட்டாதே” என அறிவுரை சொல்லி என்னை வழி அனுப்பினார். காலை 11.30 முருகன் சாவடி மார்க்கெட் பக்கம் உள்ள குன்றக்குடி பவன் அருகே என் வண்டியை நிறுத்தினேன் என் முதல் ஆர்டருக்கு, ஆனால் என்னைப் போல் பல பேர் அங்கு தன் ஆர்டருக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆமாம் இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் இன்றைய படித்த இளைஞர்களின் முழுநேர வேலை ஃபுட் டெலிவரி. இந்த வேலைக்கு இவ்வளவு ஸீன் உங்க வீட்டில என நீங்க நினைக்கலாம். பதில் இல்லை என்னிடம். ஆண்டுக்கு இத்தனை கோடி வேலை என பீற்றிக்கொள்ளும் அரசாங்கம் சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து பார்த்தால் தெரியும், கலர், கலர் உடையில் எத்தனை கனவான்கள் திரிகிறார்கள் என. இளைஞர்கள் மட்டுமல்லாமல் வயதானவர்கள் கூட இது போன்ற வேலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குன்றக்குடி பவனில் ஆடர்க்கான கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது இன்னும் என் முதல் ஆட வரவில்லை. நான் குனிந்து மொபைலில் ஃபோட்டோ பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு டெலிவரி பாய் வந்து என்னிடம் கே.எம் நகர் எப்படி போக வேண்டும் என கேட்டார். எனக்கு சிறு சலனம் மனதிற்குள். ஏனென்றால் நான் அதிகம் சுற்றியது இல்லை இந்த மாநகரை. எனவே அவர் கேட்ட முகவரி எனக்கு தெரியவில்லை என அவரிடம் சொல்வதற்குள் பக்கத்திலிருந்த சக நண்பன், “போய் ஃபர்ஸ்ட் லெப்ட் வரும், அதுல நாலாவது அப்பார்ட்மெண்ட்” என்று சொல்லி முடித்தார்.

பின் அந்த நண்பர் என்னிடம் சொன்னார், “ஃபர்ஸ்ட் லாம் அட்ரஸ் தெரியலனா ஆட்டோ டிரைவர் கிட்ட கேப்பாங்க இப்போ நம்ம கிட்ட வந்து ஆட்டோ டிரைவர் கேட்கிற மாதிரி மாறிருச்சு” என்று சொல்லும் போதே எங்கள் இருவரின் முகவரிகளும் பரஸ்பரம் பரிமாறப்பட்டது.

அப்போது சந்தோஷ் (அதான் முகவரி பரிமாறப்பட்டது என்று சொன்னேனே) ‘இது எத்தனாவது ஆர்டர்’ என என்னிடம் கேட்டார்.

“ஜி இதுதான் ஃ பர்ஸ்ட் ஆர்டர்”

சொன்ன மறுநொடியே அவன் கண்டுபிடித்து விட்டான். நான் புதுசு எ. அவனுக்கு ஆர்டர் ஓசை அடித்தது. ஃபோனை எடுத்தபடியே “இது என்னோட ஆறாவது ஆர்டர்” என்று சொல்லி ஃபோன்ல கிளிக் பண்ணிவிட்டு, “சரி அப்புறம் மீட் பண்ணுவோம்” என குன்றக்குடி பவனுக்குள் சென்றான்.

அவன் தன் ஆறாவது ஆர்டர் என்று சொல்ல சொல்ல என்ன ஒரு பூரிப்பு தெரியுமா ஏன்னா தொடர்ந்து ஆறு ஆர்டர்கள் பார்த்தா போனஸ் நூறு ரூபாய் கிடைக்கும். அப்போது என் மனதில் தோன்றியது. இது தான் கார்ப்பரேட் தந்திரம் என. ஆனாலும் என் முதல் ஆர்டர் இன்னும் வரவில்லை. காலம் விரயம் ஆகிக் கொண்டே இருந்தது. பீக் அவர் முடிய கொஞ்ச நேரமே இருக்கிறது.

என் கைகள் ஃபோன் ஸ்க்ரீன் விட்டு அகலவில்லை. மனத்தில் ஆயிரம் ஓடினாலும் கண்கள் அசைவின்றி மலை போல் ஃபோனையே பார்த்துக்கொண்டு இருக்கஅப்போது திடீரென ஒரு சத்தம். என் பின் மண்டையில் யாரோ அடித்தது போல் இருந்தது. சற்று நிமிர்ந்து பார்த்தேன். சாலையின் பைக் ஒன்று பஸ்சை ஓவர் டேக் பண்ணும்போது இருசக்கர வாகனத்தின் பின்புறம் பஸ் தட்டியது. அவன் பைக்கில் இருந்து தெறித்து கீழே விழுந்து கிடந்தான்.

சில நொடிகளில் 108 வந்து ஏற்றி சென்றது. டிரைவரிடம் வெள்ளை காக்கி சட்டை ஆரவாரமின்றி தகவல் கேட்டுக்  கொண்டே இருந்தது. அங்கு கூடியிருந்தோர் காகங்கள் போல் கரைந்து கலைந்தனர் என்னுடன்

ஆனால் என் மண்டையில் அடித்த அடி வலிக்காமல் மூளையை அறுத்து அதற்கு முன் என் கல்லூரி நாட்களில் நடந்த நிகழ்வு நினைவுபடுத்தியது

ன் பக்கத்து வகுப்பு பையன், என் நண்பன்  அருண் தன் காதலியுடன் மகாபலிபுரம் சென்று கொண்டிருந்தான். சுமார் 150 கிலோ மீட்டர் ஸ்பீடில் போய்க் கொண்டிருந்த வண்டி திடீரென்று ஸ்பீட் பிரேக்கரில் ஏறி நிலைதடுமாறி ரோடு மறுமுனையில் மகாபலிபுரம் ஒரு கிலோமீட்டர் எனும் தகவல் பலகையின் பக்கத்தில் விழுந்தார்கள், அருணின் ஐடி கார்டு, அந்தப் பெண்ணின் ஐடி கார்டை வைத்து காலேஜ் அலுவலகத்திற்கு ஃபோன் வந்தது

உடனே நான் இளங்கோ, பிரவீன், குமார் எல்லாம் கிளம்பிப் போனோம். பல மணி நேரமாக அவர்கள் அப்பா, அம்மாவின் கண்ணீரிலும் வேர்வையில் நனைந்து காத்துக் கொண்டு இருந்தோம்

அப்போது ஒரு நர்ஸ் வந்துபையன் சீரியஸ், பார்ப்போம்என சொல்லியபடியே ஒரு பேப்பரை நீட்டினார். அதில் பி நெகட்டிவ் பிளட் குரூப் என எழுதி இருந்தது. “அந்த பொண்ணுது இந்த ரத்த வகை. இந்த மருத்துவமனையில் அந்த பிளட் குரூப் ஸ்டாக் இல்ல. அத சீக்கிரம் ரெடி பண்ணுங்கஎனக் கூறிய படியே அவசர வார்டுக்குள் சென்றார்.

எங்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. ஹரிணியை காப்பாற்றுவதா? அருணை நினைத்து அழுவதா? இல்ல அவசரத்துக்கு இரத்தம் கூட இல்லாம நிர்வாகத்தை நடத்தக்கூடிய மருத்துவமனையை நினைத்து கோபம் கொள்வதா? என தெரியவில்லை

வேற வழி இல்லாமல் எங்களுக்குள்  பேசிக்கொள்ளாமல் சமாதானமாகி ஹரிணிக்கு பிளட் தேடி அலைந்தோம். நண்பர்கள் தெரிஞ்சவங்க என எல்லா தரப்பினரையும் ஆலோசனை செய்தோம். ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை

சிறிது நேரத்தில் ஹரிணியின் அப்பா தொலைபேசியில் அழைத்து, “தம்பி இன்னும் ஒரு மணி நேரத்தில் ரத்தம் வேணுமாம்என்று கூறினார். எங்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. அப்போது நர்ஸ் ஹரிணியின் அப்பாவிடம் ஃபோனை வாங்கி, “தம்பிகளா என்ன ஸ்டேட்டஸ்?” என்று கேட்டார்

நாங்கள் அனைத்தையும் தெளிவாக விளக்கினோம். அவங்க சிம்பிளா சொன்னாங்க: “ஏம்பா நாங்க பிளட் பேங்க்ல இல்லன்னு தான் சொன்னோம். கிடைக்காதுன்னு சொல்லலையே தம்பி. நான் சொல்ற நம்பருக்கு ஃபோன் போட்டு பேசுங்கஎன்று சொல்லி குறுஞ்செய்தியில் நம்பர் சென்ட் பண்ணாங்க

நாங்கள் அவசர அவசரமாக அந்த போனுக்கு கால் பண்ணவும், ‘தோழர்என்னும் குரல் கேட்டது. நாங்க விஷயத்தைச்  சொன்னோம். பத்து நிமிஷத்துல கால் இந்த நம்பருக்கு பண்றோம்னு  சொல்லி கட் பண்ணிட்டாங்க நாங்க காத்திருந்து பார்த்தோம். ஆனால் எந்த ஒரு காலும் வரல என்ன பண்றது தெரியாமல் நாங்கள் குருதியுடன் போவதற்கு பதிலாக கண்ணீருடன் சென்றோம்

அங்கு சிவப்பு சட்டை போட்ட ஒருவர் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். நாங்கள் பேசும் முன் தோழர் என் பெயர் அசோக், நான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இந்த மாவட்ட பொருளாளராக இருக்கிறேன், நீங்கள் தானே கால் பண்ணது எனக்கேட்டார்.இளங்கோநான் தான் கால் பண்ணேன்என்று  சொல்வதற்குள், மருத்துவமனைக்குள் இருந்து  இருவர் கையில் ரத்தம் கொடுத்ததற்கான அடையாளத்துடன் வந்தனர்

நான் அவரைப்  பார்த்தேன், அவர் சிரித்துக்கொண்டே இளங்கோ தோளில் தட்டி விட்டுவேறு ஏதாவது உதவி வேண்டும் என்றால் தயங்காமல் ஃபோன் பண்ணுங்கஎனக் கூறினார். பின் விபத்தைப் பற்றி கேட்டறிந்தார். நான் கிளம்புகிறேன் என சொன்னார்

டீ குடித்துவிட்டு போகலாம்என கூறினோம், அதற்கு அவர்டீ தான் எங்கள் பல நாள் உணவு, இப்போது உணவு வேண்டாம்எனக் கூறி விடைபெற்றார்

அருணின் நிலைமை எங்களை கவலைக்கிடமாகியது, சிறிது நேரம் கழித்து நர்ஸ் வந்தார். ‘பையனைப்  பார்க்க வேண்டும்என அருண் அப்பா, அம்மா கண்ணீருடன் கூறினார்கள். எதுவும் சொல்லாமல்போங்க போய்ப் பாருங்கஎன கூறினார். நாங்கள் அனைவரும் அவசர பிரிவுக்குள் சென்றோம். அங்கே ஆக்சிஜன் எடுக்கப்பட்டு முகம் மூடப்பட்டு இருந்தது. அருண் இல்லாது போயிருந்தான். உற்ற நண்பனை இழந்தததில் கதறித் தீர்த்தோம், ஹரிணியாவது பிழைத்தாளே என்ற ஆறுதல், அவ்வளவுதான்.

ழைய நினைவுகளில் இருந்து மீண்டு, என் ஃபோனைப்  பார்த்தேன். என் முதல் ஆர்டர் இன்னும் எனக்கு வரவில்லை. நான் அண்ணாந்து சுற்றுவட்டாரத்தை கவனித்தேன்

பல மனிதர்கள் குழுமி இருந்த நேரம். ஐடி ஊழியர்கள் பஸ் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது. பஸ் ஸ்டாண்ட் ஓரம் செருப்புக் கடை. இந்தப் பக்கம் ஒரு அம்மா பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள். இந்தச் சூழலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் ஒரு தலைவன் சிலை என்னைப் போல் அசையாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.

என்னைப் போன்று பல தொழிலாளிகள் பல வண்ண சட்டைகள் அணிந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு யோசனை. ‘நான் மட்டுமா இப்படி படித்து பட்டம் வாங்கி சரியான வேலை இல்லாமல் இந்த வேலைக்கு வந்து இருக்கிறேன்?’ என சிந்தனை தோன்றியது. என் கண்களை விரித்து சுழன்று அனைவரின் முகத்தையும் பார்த்தேன்சிலர் டிகிரி படித்தவர் மாதிரியும், சிலர் பத்து பன்னிரண்டு வரை படித்தவர் மாதிரியும் என் கண்களுக்கு புலப்பட்டது. சிலர் ஒரு குழுவாக இணைந்து ஃபோனில் விளையாடிக் கொண்டு, இயர் ஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டும் நட்பு பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இதுதான் இந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இன்றி வாழ வைக்கும் முறையா என தோன்றியது.

ஆனால் இன்னும் எனக்கான முதல் ஆடர் வரவில்லை. காத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்வது என புரியாமல் அந்த ஃபோன் ஆப்பை உள் சென்று சில டீடைல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தேன

அப்பா இரவில் வீடு திரும்பும் போதே குழந்தைக்கு ஏதாவது விளையாட்டு சாமான் வாங்கி வருவார் என ஏங்கும் குழந்தைகள் போல் என் முதல் ஆர்டர் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்

அப்போது ஏற்கெனவே என் வயிற்றெரிச்சல் கொட்டிக்கொண்ட அவன் மீண்டும் என்னை நோக்கி வந்தான் (எனக்கு இது ஆறாவது ஆர்டர் எனக் கூறி சென்றவரை தான் குறிப்பிடுகிறேன்). 

என்ன இன்னும் ஒண்ணும்  ஆர்டர் வரலையா?” என கேட்டார்

அதற்கு நான்உம்என முனகினேன்

அதற்கு அவர்நீ புதுசுல்ல, ஆர்டர் பாக்க பாக்கத்தான் உனக்கு டப்பு டப்புன்னு ஆர்டர் வரும்என கூறி முடிப்பதற்குள் என் போன் ரீங்காரம் இட்டு அலாரம் போல் அடிக்க ஆரம்பித்தது

அவன்,  “டேய் ஆர்டர் ஆர்டர்என கத்தினான்

எனக்கு இனம் புரியாத சந்தோஷம். ஃபோனை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவனோ, “டேய் ஆஃப் ஆவதற்குள் அக்செப்ட் பண்ணுடாஎன கூறினார்

என் கைகள் நடுங்கியது. என் விரல்கள் உறைந்தது. என் கண் வழியாக பாஸ்ட் அண்டு ஃபியூச்சர், படம் போல் ஓடியது என் விரல். என்னையே அறியாமல் அந்த பர்ஸ்ட் ஆர்டர் ஐத் தொட்டது

என் வாழ்க்கை என்னும் பயணம் ஸ்கூல் பேக்கில் இருந்து சோத்து மூட்டையில் தொடங்கியது.

– எஸ்.கே