கா.சாரதா வேணுகோபால் தொகுத்த “நந்தவனக் குயில்கள்” சிறுகதை தொகுப்பு | Saratha Venugopal's Nandavana Kuyilgal Sirukathaikal Tamil Book Review | தி.தாஜ்தீன் | www.bookday.in

கா.சாரதா வேணுகோபால் தொகுத்த “நந்தவனக் குயில்கள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“நந்தவனக் குயில்கள்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

ஒரு ஆசிரியர் கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களை நல்ல சிந்தனையாளர்களாகவும் படைப்பாளர்களாகவும் உருவாக்க வேண்டுமென்ற, உயரிய நோக்கத்துடன் மாணவர்களை கதைகள் எழுத ஊக்குவித்து, அக்கதைகளை நூலாக தொகுத்து வெளியிட்ட தூத்துக்குடி மாவட்டம், புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, தமிழாசிரியர், நல்லாசிரியர் திருமதி.கா.சாராத அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்.

ஆசிரியர்களை எப்போதும் ஊக்குவித்து, அவர்களின் படைப்பாற்றலைப் பாராட்டி வருகின்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. இளம்பகவத், IAS அவர்களுக்கும், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.சிவகுமார் சார் அவர்களுக்கும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு. ஊர்வசி அமிர்தராஜ்,MLA அவர்களுக்கும், தாம் பணியாற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் ஆசிரியர்.

மாணவர்களின் பத்து சிறுகதைகளும் அவர்களின் கற்பனைத் திறன், சிந்தனை ஆற்றல் மற்றும் படைப்பாற்றலைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு கதையும் அவர்களின் தனித்துவமான பார்வையையும் சமூகப் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது. இளம் வயதிலேயே எழுத்துலகில் தங்களுக்கென ஒரு தடத்தைப் பதிக்கக்கூடிய திறன் இவர்களிடம் இருப்பதை இத்தொகுப்பு உறுதிப்படுத்துகிறது.

சூரிய நாராயணன் எழுதிய “புத்திசாலி குரங்கு” கதையின் மையக் கருத்து, “அறிவும் விவேகமும் உடல் பலத்தைவிட உயர்ந்தவை” என்பதாகும். சிங்கம், குரங்கு, மான், முயல் போன்ற விலங்குகளை கதாபாத்திரங்களாகக் கொண்டு, அறிவும் புத்தியும் எவ்வாறு வலிமையை வெல்ல முடியும் என்பதை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் வகையில், சிந்திக்கத் தூண்டும் கருத்தை இக்கதை அழகாகப் பதிவு செய்கிறது.

நெடுஞ்செழியன் எழுதிய “மூவரும் போவோம்” என்ற சிறுகதையின் மையக் கருத்து, பொறுமையும் அனுபவமும் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதாகும். ஒரு எறும்பை கதாபாத்திரமாகக் கொண்டு, சிறிய உயிரினங்களுக்குக்கூட வாழ்க்கைப் பாடங்களை கற்பிக்கும் அனுபவமும் நிதானமும் இருப்பதை கற்பனையுடன் சித்தரித்துள்ளார். எளிய நடையில் ஆழமான கருத்தாக இக்கதை திகழ்கிறது.

கனிஷா எழுதிய “குய்யோ முய்யோ” கதையின் மையக் கருத்து, உண்மையான பலம் அதிகாரத்திலோ உடல் வலிமையிலோ அல்ல; கருணையும் நன்றியுணர்விலும் உள்ளது என்பதாகும். சிங்கம் காட்டின் அரசனாக இருந்து அனைத்து விலங்குகளையும் அச்சத்தில் வைத்திருந்தாலும், அதன் உண்மையான பெருமை கருணையும் நன்றியுணர்வும் கொண்ட மனதில்தான் இருக்கிறது என்பதை அழகாக எடுத்துரைக்கிறார்.சிங்கத்தின் வழியாக இந்த உயரிய பண்புகளின் அவசியத்தை உணர்த்தும் கதை.

பொன் ஷரினி எழுதிய “தனிச் சிறப்பு” கதையின் மையக் கருத்து, ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சிறப்பு உண்டு என்பதாகும். மயில், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி ஆகிய விலங்குகளின் தோற்றமும் திறமைகளும் வேறுபட்டிருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தமக்கென தனிச்சிறப்பைக் கொண்டவை என்பதை இக்கதை அழகாக எடுத்துரைக்கிறது. எனவே, வேறுபாடுகளை ஒப்பிட்டு தாழ்வாகவோ உயர்வாகவோ எண்ணாமல், ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் மதிக்க வேண்டும். இந்த உண்மையை மனிதர்களும் உணர்ந்து, அனைவரையும் சமமாக மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய கருத்தை இக்கதை வலியுறுத்துகிறது.

பூமிகா எழுதிய “பெரிய இடம்” கதையில், பெரும் புயல் காரணமாகக் காட்டில் வாழ்ந்த பறவைகளின் கூடுகள் அனைத்தும் அழிந்துவிடுகின்றன. இருப்பிடமின்றி தவித்த பறவைகள் பாதுகாப்பான இடத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும்போது, கழுகு தனது கூட்டில் அவற்றுக்குத் தங்க இடம் அளிக்கிறது. முதலில் கழுகைக் கண்டு அஞ்சியிருந்த பறவைகள், அதன் அன்பும் பெருந்தன்மையும் உணர்ந்து நன்றியுடன் விடைபெற்றுச் செல்கின்றன. இக்கதையின் மூலம், பகைமைக்குப் பதிலாக கருணையும் உதவும் மனப்பான்மையும் உயர்ந்த பண்புகள் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.

செல்வி எழுதிய “நட்பின் வலிமை” என்ற கதையில், உண்மையான நட்பு வலிமையையும் பாதுகாப்பையும் அளிக்கும் என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளார். அதற்கு உதாரணமாக, அத்தி மரத்தில் வாழ்ந்த பாம்பும் குருவியும் கொண்டிருந்த நட்பை இலக்கணமாகக் காட்டி, குழந்தை தனது கற்பனை வளத்தின் மூலம் நட்பின் உண்மையான அர்த்தத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

காயத்ரி எழுதிய “வேப்ப மரமும் பறவைகளும்” என்ற கதையில், மரங்களை வளர்த்துப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனை வலியுறுத்தப்படுகிறது. மைனா, கிளி, காகம் ஆகிய பறவைகள் வசிக்கும் வேப்பமரத்தை சிலர் வெட்ட முயலும்போது, பறவைகளின் புத்திசாலித்தனமான முயற்சியால் அந்தச் செயல் தடுக்கப்படுகிறது. “மரம் வளர்ப்போம்; மரங்களை காப்போம்” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்தை குழந்தை தனது கற்பனை வளத்துடன் அழகாக விதைத்துள்ளது.

அமுதா எழுதிய “மூவரின் நட்பு” என்ற கதையில், எந்த ஆபத்தான சூழ்நிலையிலும் உறுதுணையாக இருப்பவரே உண்மையான நண்பர் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார். மைனா, கிளி, கொக்கு ஆகிய பறவைகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வேட்டைக்காரனிடமிருந்து தப்பிக்கும் நிகழ்வின் மூலம், உண்மையான நட்பும் ஒற்றுமையும் எந்த ஆபத்தையும் வெல்லும் என்ற உயரிய கருத்தை சிறப்பாக விளக்கியுள்ளார்.

ராமலட்சுமி எழுதிய “நல்லதை விதை” என்ற கதையில், மனிதன் இயற்கையையும் உயிரினங்களையும் பாதுகாத்தால், அவை தேவையான நேரத்தில் மனிதனையே காக்கும் என்ற உயரிய கருத்தை அழகாக எடுத்துரைக்கிறார். குளத்தில் நீர் வற்றியபோது மீன்களைக் காப்பாற்றிய ஏழை விவசாயிக்கு, பின்னர் ஆபத்து ஏற்பட்ட சமயத்தில் அதே மீன்கள் உதவி செய்து அவரைக் காப்பாற்றுகின்றன. இந்நிகழ்வின் மூலம், “நல்லதை விதைத்தால் நல்லதே அறுவடையாகும்” என்ற வாழ்வியல் உண்மையை சிறப்பாக கதையில் விளக்கியுள்ளார்.

இசக்கியம்மாள் எழுதிய “கொக்கும் வாத்தும்” என்ற கதையில், உண்மையான அன்பு, உதவி, நன்றியுணர்வு ஆகியவை நட்பை நிலைத்திருக்கச் செய்கின்றன என்ற உயர்ந்த கருத்தை, கொக்கும் வாத்தும் என்ற இரு உயிரினங்களை மையமாகக் கொண்டு குழந்தை அழகாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில், குழந்தைகள் எழுதிய கதைகள் உயிரினங்கள், பறவைகள், குளம், காடு, மரங்கள் போன்ற இயற்கைக் கூறுகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அன்பு, நட்பு, கருணை, நன்றியுணர்வு போன்ற உயர்ந்த மனிதநேய விழுமியங்களை எளிமையாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்துகின்றன. குழந்தைகளின் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் இக்கதைகளில் தெளிவாகப் புலப்படுகின்றன.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“நந்தவனக் குயில்கள்” சிறுகதை தொகுப்பு
தொகுப்பாசிரியர்:கா.சாரதா வேணுகோபால்
வெளியீடு:யோகி பதிப்பகம், புதுவை, 2025
விலை:₹.50
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 தி.தாஜ்தீன்,
முதுகலை ஆசிரியர்,
அரசு உதவிபெறும் கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி,
ஆடுதுறை.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *