நூலின் பெயர் : மந்திரக் கிலுகிலுப்பை
ஆசிரியர் : சரிதா ஜோ
வெளியீடு : சுவடு பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 120
விலை : ரூ. 120
நேர்த்தியான வடிவமைப்பு, வழவழப்பான அட்டைப்படம், நாறும்பூநாதன் அவர்களின் அணிந்துரை, த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் வாழ்த்துரை, ஜமால் அவர்களின் ஓவியம் என்று பலதரப்பட்ட சிறப்பம்சங்களையும் ஒருங்கே கொண்டு உயிரோட்டத்துடன் வெளிவந்திருக்கிறது சரிதா ஜோ அவர்களின் ’மந்திரக் கிலுகிலுப்பை’ என்னும் சிறார் நாவல்.
கதை சொல்லி என்று மட்டுமே பலராலும் அறிபட்டு வந்த சரிதா ஜோ தற்போது சிறார் நாவல் ஆசிரியர் என்ற அடுத்த பரிமாணத்தில் காலடி எடுத்து வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
குழந்தைகள் தாமாக விரும்பி வாசித்து மகிழ்வதற்கும், அவற்றை தன் வயதொத்தக் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்வதற்கும் கதைகளைவிட்டால் வேறு என்ன இருக்க முடியும்?
குழந்தைகளுக்கான உலகம் என்பது ஒரு மாய மந்திரங்கள் நிரம்பிய விநோதமான உலகம். அவ்வுலகில் விலங்குகளுக்கு, பறவைகளுக்கு, புழு, பூச்சிகளுக்கு ஏன், உயிரற்ற பொம்மைகளுக்கும்கூட இடமுண்டு. இவற்றை மிக நுட்பமாகக் கவனித்திருக்கும் இந்நூலின் ஆசிரியர் ரதி என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் சுட்டிக் குழந்தையின் வாயிலாக இந்நாவலை நகர்த்திச் செல்கிறார். குழந்தைகள் ரசிக்க வேண்டுமே என்பதற்காக யானைக்கு பொதக்கையன், ஒட்டகத்திற்கு நெட்டக்காலி, கடல் ஆமைக்கு ஸ்லோ மோஷன், அனகோண்டாவிற்கு நெளிஞ்சி, மற்றும் சீல் என்னும் கடல் வாழ் உயிரினத்திற்கு வழுக்கையன் என கேலியான பெயர்களை சூட்டியிருக்கிறார்.
ரதி என்னும் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிதான் இந்நாவலின் முக்கியக் கதாபாத்திரம். ஒரு முறை பாட்டி போட்ட விடுகதைக்கு சரியான பதிலைச் சொல்லும் ரதி தன் பாட்டியிடமிருந்து ஒரு மந்திரக் கிலுகிலுப்பையைப் பரிசாகப் பெறுகிறாள். அது ஒரு அபூர்வ கிலுகிலுப்பை. பிறருக்கு உதவி செய்வதற்காக எதைக் கேட்டாலும் கிடைக்கும். ஆனால் தனக்கென எதுவும் கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்டால் அது பலிக்காது.
மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன மற்றும் விலங்குகளின் மேல் அதீத அன்பு காட்டும் ரதி சர்க்கஸில் இருக்கும் விலங்குகளைக் கண்டு பரிதாபப் படுகிறாள். அவைகளை அதனதன் வசிப்பிடங்களில் சேர்ப்பதற்காக தனக்குப் பரிசாகக் கிடைத்த மந்திரக் கிலுகிலுப்பையை பயன்படுத்துகிறாள். போகும் வழியெங்கும் அந்தந்த விலங்குகளின் வாழ்விடங்களைப் பற்றி விவரிக்கிறாள். அதுமட்டுமல்ல, அப்பிராணிகளின் குணாதிசயங்களையும் வாழ்வியல் நுட்பங்களையும் பொது அறிவுச் செய்தியாக சொல்லிச் செல்கிறாள்.

வெவ்வேறு தட்பவெப்ப மண்டலங்களில் வாழும் விலங்குகளைப் பற்றியும் அவைகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியும் வெற்றுச் செய்திகளாகச் சொல்லாமல் கதையின் போக்கில் இயல்பாகச் சொல்லிச் செல்வது இந்நாவலின் கூடுதல் சிறப்பு. குழந்தைகள் வாசிக்க ஏதுவாக பெரிய எழுத்து வடிவத்தில் வரிக்கு வரி போதுமான இடைவெளி விட்டும் சின்னச் சின்ன வாக்கியங்களுடனும் இந்நாவல் அச்சுக்கோர்க்கப்பட்டிருக்கிறது. மிக அருமை. ஓரிரு இடங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கூடுமான வரை தவிர்த்திருக்கலாம்.
விலங்குகளுக்கு மனிதர்களால் ஏற்படும் தீமைகளை மட்டுமே கதை முழுவதும் சொல்லிச் செல்லாமல் இன்றைய தலைமுறையினர் விலங்குகள் மற்றும் பறவைகளின் மேல் பரிவு கொண்டு, மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பற்றியும் அவர்கள் தன்ஆர்வ அமைப்புகளுடன் இணைந்து செய்யும் நற்செயல்களைப் பற்றியும் சுட்டிக்காட்டியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பரபரப்பான திருப்புமுனையைப் புகுத்தி குழந்தைகள் ஆர்வத்துடன் வாசிக்க வைப்பதில் முனைப்பு காட்டியிருக்கிறார். யூட்யூப் சேனல்களில் இவர் சொல்லும் கதைகளைத் தொடர்ந்து கேட்டதாலோ என்னவோ இந்நாவலை வாசிக்க வாசிக்க சரிதா ஜோ அவர்களின் குரல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
மந்திரக் கிலுகிலுப்பை மிகச் சிறந்த சிறார் நாவல் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. மேன்மேலும் இதுபோன்ற சிறார் நாவல்களைத் தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.


Superb ❤️