சரிதா ஜோ எழுதிய “ஆகிருதி” – நூல் அறிமுகம்
சரஸ்வதிக்கு என்ன ஆச்சு என்ற புத்தகம் மூலம் அறிமுகமானவர் எழுத்தாளர் சரிதா ஜோ. அதனைத் தொடர்ந்து அவரது புத்தகங்களை வாசித்தும் பேசியும் இருக்கிறேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திடீரென அவர்களை சந்தித்தது மனதிற்கு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. சில வார்த்தைகள் பேசிக்கொண்டு பிரிந்து விட்டோம். பின்னர் புத்தகக் கண்காட்சியிலோ, அலைபேசியிலோ பேசியதாக நினைவு.
தொடர்ந்து குழந்தைகளுக்கான புத்தகங்களையும், வாசிப்பையும் கதை சொல்லியாக எங்கே சென்றாலும் கொண்டு சேர்ப்பவர் சரிதா ஜோ. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் போது, “தோழர், நான் அடுத்த முறை என்னுடைய புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்; வாசித்து தங்களது கருத்துக்களை சொல்லுங்கள்” என்று சொன்னார். “அவரது புத்தகத்தை அனுப்பி கருத்து கூறும் அளவுக்கு நான் பெரிய ஆள் அல்ல” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். இருப்பினும், அவர் என்னிடம் கருத்து கேட்டதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவரது கதைகளில் வரும் தேவதைகள் போலவே எனக்கும் சிறகுகள் முளைத்தன.
சில நாட்கள் கழித்து புத்தகம் வந்து சேர்ந்தது. சிறார்களுக்கான புத்தகம் இருக்கும் என்று நினைத்து திறந்து பார்த்தேன். ஆனால் அது ‘ஆகிருதி’ என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதை அறிந்தபோது ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்பட்டது. முதல் சிறுகதைத் தொகுப்பை எனக்கும் அனுப்பியிருக்கிறார் என்ற எண்ணமே மீண்டும் சிறகுகள் முளைத்த தருணமாக அமைந்தது.
புத்தக அட்டைப்படத்தையும், தோழர்கள் அம்பை, உதயசங்கர் எழுதிய முன்னுரையையும் மட்டும் வாசித்து விட்டு சில நாட்கள் கடந்து விட்டது. வேறு வாசிப்புகள் காரணமாக உடனே படிக்க முடியவில்லை. ஆனால் அடிக்கடி “வாசிக்க வேண்டும்” என்ற எண்ணம் மனதில் வந்து கொண்டே இருந்தது.
மோகமுள் நாவலை வாசித்துக் கொண்டிருக்கையில் “ஆகிருதி” என்ற வார்த்தை வந்தது. பெரும்பாலான தமிழ் சொற்களை முழுமையாக அறியாமல் நாம் வாசித்து கொண்டிருக்கிறோம். “ஆகிருதி” என்ற வார்த்தை எங்கேயோ பார்த்தது போல நினைவு வந்தது. பின்னர் தான் அது சரிதா ஜோவின் சிறுகதைத் தொகுப்பு என்பதை உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் தோழரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது: “வாசித்து விட்டீர்களா?” என்று. அது எனக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஏற்கனவே பலர் ‘ஆகிருதி’ பற்றி பேசியும் எழுதியும் இருப்பதை பார்த்திருந்தேன். உடனே வாசிக்கத் தொடங்கினேன்.
மொத்தம் எட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்த ‘ஆகிருதி’. ஒவ்வொரு கதையும் எதார்த்த வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொண்டு இலக்கியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. சரிதா ஜோ கதை சொல்லுவதில் வல்லமை மிக்கவர் என்பது அவருடைய கதைகளை கேட்பவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் நன்கு தெரியும். குறிப்பாக குழந்தைகளுக்கான இலக்கியத்தில் அவர் மிகுந்த திறமைசாலி.
இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த முதல் கதை ‘வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்’. அது ஒரு தேவதை கதை. “ஒரு கணம் அந்த செருப்பை அணிந்து கொண்டு வெண்ணிற இறக்கைகளோடு சிலுக்கா அக்கா பறப்பது போல…” என்ற வரிகளை வாசிக்கையில் எனக்கும் வானில் பறக்க வேண்டும் போல தோன்றியது.
இந்தக் கதையை வாசிக்கும் போது Malèna என்ற இத்தாலி திரைப்படம் நினைவுக்கு வந்தது. உலகத் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த காலம் நினைவில் வந்தது. அந்தப் படத்தில் வரும் அழகியைப் போலவே சிலுக்காவும் போற்றப்படுகிறாள்; அதே சமயம் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.
“அவங்க எங்க ஊருக்கு ஒரு நிலா மாதிரி இருந்தாங்க” என்ற வரிகளும், அந்த தேவதை புத்தகம் வாசிக்கும் காட்சியும் மனதில் ஆழமாக பதிகிறது. சிலுக்கா அக்காவை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று மனது துடிக்கிறது. அதுதான் வாசிப்பு தரும் மயக்கம்.
செல்வி ஒரு இடத்தில் “எனக்கும் அந்த சிவப்பு வெல்வெட் செருப்பு வேண்டும்” என்று கேட்கும் போது, சிலுக்கா அக்கா கூறும் வார்த்தைகள் மிகவும் அழகானவை:
“இந்த உலகத்திலேயே யார்மேலும் கோபப்படாமல், எல்லார்மேலும் அன்பாக எப்போதும் சிரித்துக்கொண்டே யார் இருக்கிறார்களோ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தேடினேன். யாரும் கிடைக்கவில்லை. கடைசியில் உன்னை பார்த்தேன். நீ நான் நினைத்த மாதிரி இருந்தாய்; அதனால்தான் உனக்குக் கொடுத்தேன்.” என்று அந்த தேவதை சொல்லுவாள்.
அடுத்த கதை ‘ஆகிருதி’ — மகா போன்ற பெண்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். “செத்துப்போய் கிடந்தாலும் சோறு வைத்து விட்டு பாடையில் போ” என்ற வரிகள் பல வீடுகளின் நிலையை நினைவூட்டுகின்றன.
“இதுவரைக்கும் நீ என்ன செய்ய வேண்டும் என்று யாரும் என்னிடம் கேட்டதில்லை” என்ற வரியும் மனதைத் தொந்தரவு செய்கிறது.
பூக்களை மிதிக்காமல் சென்ற சண்முகத்தின் செயல், மகாவின் மனதில் நங்கூரமாக பதிகிறது; அதைப் போலவே இந்தக் கதையும் வாசகர்கள் வாசிக்கும்போது மனதில் நங்கூரமாக இறங்குகிறது.
அடுத்த கதை மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அது எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘அவளது வீடு’ கதையை நினைவுபடுத்தியது. ஒரு கதை மற்றொரு கதையை நினைவூட்டும் அந்த அனுபவம் வாசிப்பின் சிறப்பு.
‘வீடிலிகள்’ கதை ஒரு பெண்ணின் எந்த வெற்றியும் வீட்டின் அங்கீகாரத்தை பெற முடியாத நிலையை காட்டுகிறது. வீடு கூட தனது சொந்தம் அல்ல என்று உணரும் போது, பெண்கள் தங்களது கோபத்தை சமையலறையில் வெளிப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு ஆணின் உள்ளும் ஆணாதிக்கம் நிறைந்திருக்கிறது என்பதை கதை வெளிப்படுத்துகிறது.
உலக இலக்கியங்களை அறிந்தவர்களாக இருந்தாலும், அவர்களுள் சாதி என்ற அழுக்கு இருந்து கொண்டே இருக்கிறது என்பதை இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது.
‘கழுவாய்’ கதை ச. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தெய்வத்தின் சாட்சி’ நாட்டார் தெய்வக் கதைகளை நினைவுபடுத்துகிறது. அது ஒரு சாதாரண கிணறு அல்ல; அது ஊரின் உயிர், நம்பிக்கை. ஆனால் அதில் சாதி கலந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தக் கதையின் மூலம் சாதி, மதம் ஆகியவற்றை கேள்விக்குறியாக்குகிறது.
சிறார் இலக்கியங்களில் வெளிப்படும் அவரது ஆளுமை ‘ஆலா’ கதையில் தெளிவாக தெரிகிறது. குழந்தையும் ஆலமரமும் இடையேயான உறவை அழகாக பதிவு செய்கிறார்.
‘வாக்கு’ கதை குழந்தையின் நம்பிக்கையை பெரியவர்கள் எவ்வாறு ஏமாற்றுகின்றனர் என்பதை எளிமையாகச் சொல்கிறது.
‘தாயாதி பாத்தியம்’ கதை தாத்தா–பேத்தி உறவை நெகிழ்ச்சியுடன் சித்தரிக்கிறது. வயதானவர்கள் சுமையாகக் கருதப்படும் காலத்தில், அவர்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறது.
‘தாபந்தம்’ கதை மாமா–மருமகன் உறவைச் சொல்லுவதோடு, சாதி கட்டுப்பாடுகளை உடைக்கும் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் வட்டார மொழியில் எழுதப்பட்டுள்ளன. சில வார்த்தைகள் புரியாவிட்டாலும், அவை கதைகளுக்கு ஒரு தனித்துவமான உயிரை அளிக்கின்றன.
பெரும்பாலான பெண்ணிய எழுத்தாளர்கள் உடல் மற்றும் அழகியல் சார்ந்த படைப்புகளை எழுதும் சூழலில், இவ்வாறு எதார்த்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதைகள் புதிய சிந்தனையை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு கதைக்கும் வாழ்க்கையிலிருந்து களத்தை எடுத்து இலக்கியமாக வடிவமைக்கும் திறன் சரிதா ஜோவுக்கு உள்ளது. சிறந்த கதை சொல்லி என்ற அடையாளத்தை இக்கதைகளின் வாயிலாக அவர் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளார்.
முதல் தொகுப்பிலேயே நவீன தமிழ் இலக்கியத்தில் உங்கள் தடத்தை பதித்து விட்டீர்கள். மேலும் பல கதைகளை எதிர்பார்க்கிறேன், தோழர் சரிதா ஜோ.
இது காலத்தின் கட்டளை.
எழுத்தாளர் அம்பை சொல்வதைப் போல என் வாழ்நாளிலே எழுதி விடுங்கள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “ஆகிருதி” |
| ஆசிரியர்: | சரிதா ஜோ |
| வெளியீடு: | பாரதி புத்தகாலயம் |
| விலை: | ₹.220 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அமுதன் தேவேந்திரன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

