சரிதா ஜோ எழுதிய "ஆகுருதி" சிறுகதைத் தொகுப்பு நூல் | Saritha Jo's Agiruthi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சரிதா ஜோ எழுதிய “ஆகுருதி” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

சரிதா ஜோ எழுதிய “ஆகுருதி” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

காவியப் படிமமாய் ஒரு சிறுகதைத் தொகுப்பு.

”இந்தக் காலத்துல நாலெழுத்துப் படிச்சுப்புட்டா, கொஞ்சம் சம்பாரிச்சுப்புட்டா பெரிய தொரைன்னு நெனப்பு வருது; ஒங்களையெல்லாம் பண்ணையத்துலயே போட்டுத் தோல உரிச்சிருக்கோணும்; படிக்கவுட்டது தப்பாப் போச்சு.”

இது ஆதிக்க சக்திகளின் ஆணவக்குரல். சாதிகள் இருந்தாலும் ஏற்றத்தாழ்வு இல்லை” என்று பலரும் சொல்வதை இப்போதும் கேட்க முடிகிறது. சரிதா ஜோவின் கதை மாந்தனாகிய கோவிந்தன் “அப்படியெல்லாம் இல்லை” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார். கோவிந்தன் வீட்டுப் பண்ணையாள் வேலனின் மகன் தான் வளர்த்த காளையை அடித்துவிட்டான் என்பதற்காக அவனை இப்படித் திட்டுகிறான் கோவிந்தன்.

மேற்கண்ட பேராவில் இரண்டு முக்கியக் குறிப்புகள் இருப்பதைக் காண முடியும்.”நாலெழுத்துப் படிச்சுப்புட்டா, கொஞ்சம் சம்பாரிச்சுட்டா” என்பவையே அந்தக் குறிப்புகள். கல்வியும் பொருளாதார மேம்பாடும் ஜாதிமத இடைவெளியைக் குறைக்கிறது. பண்ணை அடிமைகளும் தொழில் அடிமைகளும் படிப்பறிவு பெற்றதால் “கெட்டுப்” போனார்கள் என்ற கருத்தோட்டம் இன்றளவும் சமூகத்தில் நிலவுகிறது. இளம் தலைமுறையிடம் ஓரளவு குறைந்து காணப்பட்டாலும் சமூக அடுக்குமுறையில் மலையேறி நிற்பவர்களுக்கு அடிவிளிம்பில் நிற்பவர்கள் அனைவரும் கீழானவர்களாகவே தெரிகிறார்கள்.

ரேக்ளா ரேஸுக்காக வளர்க்கப் படும் காளை அது. அந்தச் சிறுவன் கோவிந்தனையும் தான் அடித்த காளையையும் மாறிமாறிப் பார்க்கிறான்; அந்தக் காளையும் கூட கோவிந்தனைக் கண்கொட்டாமல் ஏறிடுகிறது. இந்தக் காட்சிப் படிமம், பின்னொரு நாளில் நடக்கப் போகும் முக்கியச் சம்பவத்துக்கு முன்னுரைப் பகுதிபோல் அமைந்து வாசகனை விருவிருவென வாசிக்க வைக்கிறது.

பின்னொரு நாளில் சின், சான் என்று பெயரிடப்பட்ட கோவிந்தனின் காளைகள் பூட்டப் பட்ட வண்டி ரேக்ளா ரேசுக்குப் போகிறது. அந்தப் போட்டிக்கு கோவிந்தனிடம் அடிவாங்கிய வேலனின் மகனும் வருகிறான். இருவர் வண்டிகளும் போட்டிபோட்டு ஓடுகின்றன.

இதற்கிடையில் கோவிந்தனால் பாசத்தோடு வளர்க்கப் படுகிற அக்கா மகன் மாதவனைப் பற்றியும் சொல்லித்தான் ஆகவேண்டும். அவனும் அந்தக் காளைகள்மீது பிரியம் கொண்டவனாய் இருக்கிறான். அந்தக் காளைகளை சாட்டை கொண்டு அடிக்கக் கூடாது என்ற நிபந்தனையை தாய்மாமாவாகிய கோவிந்தனுக்கு விதிக்கிறான். மருமகன்மீதான பேரன்பு காரணமாக ஒப்புக் கொண்டு, காளைகளை மென்மையாகப் பயன்படுத்துகிறான் கோவிந்தன்.

வேலன் மகனும் கலந்துகொள்கிற அந்தப் பந்தயத்தில், அவனை ஜெயிக்கவிடக் கூடாது என்ற வன்மத்தால், வேலன்மகன் வண்டியை முந்துவதற்காக, தனது காளைகளை சாட்டையால் அடித்து அடித்து விரட்டுகிறான். நூலிழையில் வேலன் மகன் வண்டி தோற்றுவிடுகிறது. (நல்லவேளையாக, கோவிந்தன் வண்டி தோற்றது என்று எழுதியிருந்தால் கலையழகு கொஞ்சம் பின் தங்கியிருக்கும்; அதை எழுத்தாளர் செய்யவில்லை என்பது அவரின் புனைவு ஆற்றலுக்கு ஒரு சான்று.)

காளைகளின்மீதான சாட்டை அடிகளைக் கண்ட மாதவன் கோபித்துக்கொண்டு தன் மாமனைவிட்டுத் தன் பெற்றோரிடம் தங்கிவிடுகிறான். அதற்கு முன்பாக அந்தக் காளைகளைப் போய்ப் பார்க்கிறான்; இவனைக் கண்டடால் கால்களைத் தூக்கி மாறிமாறி வைத்து நடனமாடும் அவை அமைதியாய்ப் படுத்திருந்தன; ரத்த விளாறுகள் படிந்த முதுகின் பகுதிகள் மனதை இம்சித்தன. அவ்விரு காளைகளின் கண்களில் சோகம் ததும்பி வழிந்தது.

இந்தக் காட்சியை வாசிக்கும்போது வாசகமனம் சோகத்துக்குள் அமிழ்ந்துவிடுகிறது. இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான படைப்பு “தாபந்தம்” என்ற இந்தக்கதை.

கீழ்ச்சாதிக்காரனுக்கு மேல்சாதியாரோடு போட்டி போடும் தைரியம் வந்தது eப்படி என்பதற்கு படைப்பாளி ஒரு காரணம் சொல்கிறார். “மொதல்ல அவனுகளுக்கு மாடு வாங்கக் காசில்ல; இப்ப எல்லாம் வந்துருச்சு.”

பொருளியல் வளர்ச்சிதான் ஜாதிய சமரசத்துக்கும் சமத்துவத்துக்கும் அடிப்படை என்ற கருத்தில் உண்மை இருக்கிறது. பிற ஜாதியோடு போட்டிபோடும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி வந்துவிட்டது என்ற போதிலும் ஜாதி இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

சமூகநீதியின் முக்கியக் குறியீடு ஜாதி ஒழிப்பு; அதனால்தான் செல்வந்தராய் இருந்தாலும் ஜாதியாலும் கல்வியாலும் பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படுக்கிறது. இன்றைய சமூகநீதியின் தத்துவத் தலைவர் டெம்டுல்டே (பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கலின் பேரன்) சொலிறார்; “பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு பொருளாதார சமத்துவத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை; ஆனால் ஜாதி ஒழியாது; ஜாதி ஒழிந்து வர்க்க முரண்பாடுகள் மட்டும் இருந்தால் அதன்பின் பொருளாதார இட ஒதுக்கீடு எளிதாய் அடைய முடியும்.” இன்றைய நிலையில் ஜாதி ஒழிப்புப் போராட்டம்தான் முக்கியம் என்று இக்கதை உணர்த்துகிறது.

இதற்கு நிகரான இன்னொரு கதை “|வீடிலிகள்.” தாபந்தம் கதையில் ஜாதி என்றால் இக்கதையில் பெண்ணடிமைத்தனம். தந்தை, கணவன், தனயன் யாராய் இருந்தாலும் அவளைப் பெண்ணாகத்தான் பார்க்கின்றனர்.

திருமணத்துக்குப் பின் பெண்கள் கணவன் வீட்டுக்கு வந்து வாழ்வதுதான் குடும்ப அமைப்பின் தள்ளுபடி செய்ய முடியாத விதி; இதுதான் பெண்கள்மீதான எல்லா வன்முறைகளுக்கும் நுழைவு வாயில். நிறையப் பெண்கள் சம்பாதிக்கும் பணிகளில் இருந்தாலும், கணவன் வீட்டுக்கு வந்துவிட்டால், வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக பணிநீக்கம் பெற்று “இல்லத்தரசி”யாய் ஒடுங்கிவிடுகின்றனர். கணவனுக்காக, குழந்தைகளுக்காக சதா சர்வகாலமும் அடுக்களைப் புகைப்படலத்தில் ஒருபெண் தன்னை ஒடுக்கிக் கொள்கிறாள்.

அடுப்படியில் இருந்து கழிவறைவரை ஒவ்வொரு அங்குல தரை, சுவர்ப்பகுதியிலும் அவளின் விரல் ரேகைகள் படிந்திருக்கின்றன. கணவனுக்குத் தேவையான பொருள்கள் கூட அவளால்தான் சூதானப் படுத்தவும் பராமரிக்கவும் படுகின்றன. எங்கிருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது; உடைமாற்ற வேண்டும் என்றாலும் மனைவியின் உதவி தேவைப்படுகிறாது. உள்ளரங்க மாடமும் வெளியரங்க வாசல்வெளியும் பெண்ணின் தடம் படிந்த உருவாரங்களாய் இருக்கின்றன; அப்படியானால் இந்த வீடு யாருடையது? ஆண் சிந்தனை சொல்கிறது; “இது என்வீடு.” ஆண் உருவம் கொண்ட யாராய் இருந்தாலும் இதுதான் நிலமை.

அத்தனை அன்பாய் வளர்க்கிறார் தந்தை; அத்தனை அன்யோன்யமாய் அவள் உடலை ஆள்கிறான் கணவன்; தன் தாய்க்கு ஒன்று என்றால் கண்ணீர் விடுகிறான் தனயன்; வீடு என்று வந்துவிட்டால் ஆண்களுடையாதாய் ஆகிவிடுகிறது. வீடு கட்டுவதற்கு, மனைவியின் நகைகளை அடகு வைக்காமலோ விற்காமலோ நடக்கிறதா? பெரும்பாலும் “இல்லை” என்ற விடைதான் கிடைக்கி|றது. கட்டுமான நேரங்களிலும், கணவன் வேலைக்குச் சென்றுவிட்ட சூழலில், அவளுடைய உழைப்பு காரைக்கலவையிலும் செங்கல் இடுக்குகளிலும் கலந்துவிடுகின்|றன; அவளின் நகைகள், உழைப்பு ஆகியவற்றை வாங்கி கம்பீரமாய் உயரும் அந்த வீடு யாருடையது என்றால் ஓர் ஆண்மகனுடையது.

பெண்ணடிமைத்தனத்தின் சாரத்தைப் புதிய கோணத்தில் அணுகியிருக்கும் எழுத்தாளர் சரிதா ஜோ பாராட்டுக்குரியவர். எதிர்கால மகளிர் விடுதலைப் போராட்ட வடிவத்துக்கு பௌதீக சக்தியைத் தரும் படைப்பு இது.

ஜாதியத்தை இப்படியும் ஒழிக்க முடியுமா? மத நிந்தனைக் கானலை இவ்விதமாகவும் அகற்ற முடியுமா? இது ஒரு முக்கியப் புனைவு.

வள்ளியாத்தா கிணற்றில் விழுந்து செத்துப் போனதாகச் சொல்லப் பட்ட நாளில் இருந்து அந்த ஊர் பல்வேறு கெட்ட சகுனங்களால் அலைக்கழிக்கப் படுகிறது. அந்த ஊருக்கு வாழ்க்கைப் பட்டு வரும் பெண்கள் அற்ப ஆயுளில் அகால மரணம் அடைகின்றனர். மழை பொய்த்து வெள்ளாமை வீழ்ச்சியடைகிறது. என்ன காரணம் என்று தேடியபோது வள்ளியாத்தாவும் அவள் குழந்தையும் கிணற்றடியில் இருந்ததைப் பார்த்ததாகச் சிலர் சொல்ல, அவ்விருவரும் அக்கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக ஊர் நம்புகிறது. வள்ளியாத்தாவின் கணவன் தாழ்த்தப் பட்ட ஜாதியைச் சார்ந்தவன். ஜாதிவெறிக் கூட்டம் அவனைக் கொன்றுவிட, வள்ளியாத்தாவும் அவள் மகளும் தற்கொலை செய்துகொண்டதற்குத் தாங்களே காரணம் என்று கதைநாயகி இளவரசியின் ஆச்சி சாமிவந்து சொல்கிறாள். ஊரே நம்பிவிடுகிறது; ஆம்; இந்த ஊரில் சாதி என்பதே இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறாள் சாமியாடி. கிராமத்துக்கு வந்த தொந்தரவுகளைக் கண்ணாரக் கண்ட ஜாதித்தலைவர்கள் அனைவரும் இனி ஜாதியற்ற ஊராய் இருக்கும் என்று முடிவெடுக்கின்றனர். கிணற்றைக் கம்பிவலையால் மூடி ஆண்டுதோறும் திறந்து சாமி கும்பிடுகின்றனர்.

பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் பெண்களாக இருக்கின்றனர். ஆண் வல்லாதிக்கத்தால் கொலையோ தற்கொலையோ செய்தவர்களாக அவர்கள் திகழ்கின்றனர். கொலையுண்ட பெண்ணின் கோபம் தங்களைத் தீண்டக் கூடாது என்ற பயத்தில் அவளை சாமியாக்கிக் கும்பிடுகின்றனர். காலம் காலமாகச் சொல்லப் பட்டுவரும் கதை இது. நாட்டார் தெய்வங்களைப் பற்றி ஏராளமான ஆய்வாளர்கள் இன்றளவும் ஆராய்ச்சி செய்தவண்ணம் இருக்கின்றனர். அவ்விதமாக ஆராய்ச்சி செய்ய வந்தவர்தான் வல்லினா என்ற ஃப்ரான்ஸ் நாட்டுப் பெண். அந்தக் கிணற்றையும் பூஜையையும் பார்க்க நேரில் வந்தபோது வல்லினாவுக்கும் சாமி வந்துவிடுகிறது. மதமாச்சர்யமற்ற ஊராய் மாறவேண்டும் என்று வாக்குத் தருகிறாள். அன்றுமுதல் அவ்வூரில் மதவாதமும் ஒழிக்கப் படுகிறது.

இறந்துபோனதாக நம்பப்பட்ட வள்ளியாத்தா கிறித்துவ ஆணுடன் ஓடிவிடுகிறாள் என்பதும் ஃப்ரான்ஸ் நாட்டில் சென்று வாழ்கிறாள் என்பதும், அவள் வம்சத்தில் வந்தவள்தான் இந்த வல்லினா என்பதும் வல்லினாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

என்ன அழகான கற்பனை! இப்படியும் சிந்தித்து ஜாதிமத வெறிகளுக்குத் தீர்வு சொல்ல முடியுமா? சொல்லியிருக்கிறார் சரிதா ஜோ. புனைவுப் படிமத்தின் பேராற்றல் புதிய கோணத்தில் பதியமாகி நிற்கிறது “கழுவாய்” என்னும் இக்கதையில்.

25 வருடங்களுக்கு முன் நான் ஒரு குறும்படம்பார்த்தேன். அலைபேசி என்ற ஒப்பற்ற கருவி அனைத்து ஆண்களின் கைகளிலும் புழங்கிய நேரம் அது. நாயகனும் நாயகியும் அலைபேசியின் வழியாகப் பேசிக் காதலிக்கின்றனர். அவளின் குரலினிமை நாயகனைப் பெரிதும் கவர்கிறது; குரலினிமை வழியாக அவளின் பேரழகைக் கற்பனை செய்து காதலில் இறுக்கமாகிறான். குறிப்பிட்ட ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு பூங்காவில் இருவரும் சந்திப்பது என முடிவெடுக்கின்றனர். பூங்காவில் வெகுநேரமாய்க் காத்திருக்கிறான் நாயகன். அவனுடைய நண்பன் ஒருவன் இறந்து அவ்வழியாக இறுதி ஊர்வலம் கடந்து போகிறது. காதல் மயக்கத்தில் நண்பனின் சவ அடக்கத்தைப் புறம் தள்ளிவிட்டு காதலிக்காகக் காத்திருக்கிறான். ஒருவழியாக ஒரு பெண் வந்து சேர்கிறாள். கன்னங்கரேலென்ற தடித்த உருவம்; குரலினிமை அப்படியே இருக்கிறது; ஆனால் அவன் கற்பனை செய்து வைத்திருந்த காதலி அவள் அல்ல; அவன் பெயரைச் சொல்லி அவள் விசாரிக்கிறாள்; உடனடியாக ஒரு பொய் சொல்கிறான்; அவன் மாரடைப்பால் இறந்து போனதாகவும் இப்போதுதான் சவ ஊர்வலம் செல்வதாகவும் சொல்லி முடித்தபோது அவள் அங்கேயே மயங்கிவிழுந்து இறந்து விடுகிறாள். “ஜீரோ டிகிரி காதல்” என்ற அந்தப் படம் அப்படியே ரீமேக் செய்யப் பட்டதுபோல “ஆகுருதி” கதை அமைந்திருக்கிறது.

கண் குருடு, காது செவிடு, வாய் ஊமை, உடலின் கோணல்மாணலான வடிவம் இவையெல்லாம் “மாற்றுத் திறனாளிகள்” என்ற வடிவத்துக்குள் வருகின்றன. அரசாங்கமும் சமுதாயமும் அத்தகையவர்களுக்குச் சில சலுகைகள் வழங்குகின்றன. ஆனால் “நிறமாற்றுத் திறனாளிகள் என்ற புது வகைமை சமூகத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது.

பெண் கருப்பாய் இருந்தால் ஆண் வெறுக்கிறான்; ஆண் கருப்பானால் பெண் ஏற்றுக் கொள்கிறாள். ஆக, கருப்பை வெறுப்பது ஒரு மனநோய். ஆணாதிக்க சிந்தனையின் ஒரு பகுதி எனக் கணிக்கலாம். இது மாற்றுத் திறன் வகைக்குள் வர முடியாத இயற்கையின் நிஜம். கருப்பு கண்டு வெறுக்கும் ஆண் மனதை “ஊனமுற்ற மனம் என்றுதான் கூறமுடியும். கதை நாயகி மகா, வெறுக்கும் கணவனை நிராகரித்துப் புதுக் காதல் வாழ்க்கைக்குள் தன்னை ஐக்கியப் படுத்திக்கொள்கிறாள். மகாவின் ஆகுருதியான உருவமும் சரிதா ஜோவின் கம்பீரமான நடையும் கதைக்கு பேரழகு தருகிறது. இந்தத் தருணத்தில் இன்னொன்றையும் நம்மால் சிந்திக்க முடியும்; அதாவது திருமண பந்தத்துக்குப் பெண் தேடும்போது பலருக்கும் அது வாய்ப்பதில்லை. நகையோ வரதட்சணையோ தேவையில்லை; மனைவி கிடைத்தால் போதும் என்று திருப்திப்படும் காலமாய் இருப்பதால் நிறம் பற்றிய கற்பனையும் மாறிவிடும் என நம்பலாம்.

இந்த சமுதாயம் அழகிய பெண் ஒருத்தியின் மீது செலுத்தும் வன்முறைச் சிந்தனையை நிராகரிக்கும் சிலுக்கு அக்காவின் அன்பு படர்ந்த வசீகர முகம், (வாசிக்கப் படாத அத்தியாயத்தின் ரேகைகள்), பள்ளியில் கம்மலைத் தொலைத்து விட்ட சிறுமியின் மன உளைச்சல், (வாக்கு) ஆலவிருட்சத்தின் மீது கொண்ட அன்பால், அது வெட்டப் படும்போது வலிப்பு வந்து நோயை அனுபவிக்கும் நித்யா, (ஆலா) ஆகிய படைப்புகளும் நிகர|ற்றவையாய்த் திகழ்கின்றன.

குழந்தை எழுத்தாளரும் கதைசொல்லியுமான சரிதா ஜோவுக்குள் இத்தனை பெரிய சமூகப் படிமங்கள் சார்ந்த புனைவுகள் புதைந்து கிடக்கின்றன என்பது ஆச்சர்யமான சங்கதிகள். இவரால் இன்னும் சிறப்பான சிறுகதைகளையும் நாவல்களையும் எழுத முடியும். விஸ்தாரமாகக் கதை சொல்லத் தெரிந்த ஒருவரால் இன்னும் ஆழமான சித்தரிப்புகளைப் பதிவிட முடியும். கொங்கு வட்டார மொழிப்புலமையும் நன்கு பதிவாகியிருக்கிறது. வாசிக்க வாசிக்க நீரூற்றாய் மூளையை வருடுகிறாது. எதிர்கால இலக்கிய உலகம் எழுத்தாளர் சரிதாவைக் கொண்டாடக் காத்திருக்கிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “ஆகுருதி” சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்:
வெளியீடு:
விலை: ₹.220
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻தேனி சீருடையான்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *