மொட்டக்கரடு தாண்டி
முனியன்கோயில் விலக்கு கடந்தால்
செங்காட்டு மூலையில் செதுக்கப்பட்ட அக்கல்வெட்டை
காணலாம் நீங்களும்
புதிதாய் கிடைநடத்திவரும் கீதாரிகள்
காமக்கடும்புனல் பீறிட
கள்ளக்கலவிக்கு ஒதுங்குபவர்கள்
ஆச்சரயத்தோடு காண்பதுண்டு அதனை
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட இரு பெயர்களையும்
அதன் பின்புலத்தில் பெருந்துயர் கொப்பளிக்கும்
காதல் கதையையும்
காதுவழி அறிந்துகொள்கையில் ஆதங்கப்டுவீர்கள்
முன்னமொரு காலத்தில்
எம் வறட்டுப்பிரதேசத்திலும்
ஒரு மதுரைவீரன் ஒரு பொம்மி ஒரு காதல்
பிறகென்ன?
பொருமல் கொண்ட பொம்மணன்
கந்துவட்டிக்குக் கடன்வாங்கி
வீரன்மீது ஏவினான் விஷம்போலும் கூலிப்படையை
வீரன் வெட்டுண்டான்
அவன் குடிசை கொழுந்துவிட்டெரிந்தது
வீரனை இழந்த பொம்மி
தணல்வீழ் மெழுகானாள்
துயர்தாளாது ஒருநாள்
அரளிவிதை அரைத்தருந்தி ஆவிதுறந்தாள்
கடந்தது காலம்
கதையானது காதல்
அமர காதலர்க்கும்
அவர்தம் காதலுக்கும்
ஒரே ஒரு மரியாதை
செங்காடு கடக்கும் செம்மறிகள் சில
சரித்திரதுக்கம் அனுஷ்டிப்பதுண்டு
அடியேனைப்போலவே.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

