“அழகு” இந்த பேர கேட்டாலே, சென்னை ராயப்பேட்டை சந்தா சாஹிப் தெருவில் வசிக்கும் அனைத்து மக்களின் நினைவிலும் … ஒரு” நகைச்சுவை சேவகன்” நிழலாடி ! புன்னகை பூத்து மலர்வான்!.
அது எழுபதுகளின் எளிமையான இனிமையான காலக்கட்டம் .
5ம் எண் வீட்டில் வாழ்ந்த செட்டியாரும், 7ம் எண் வீட்டில் வாழ்ந்த ஐயரும், 9ஆம் எண் வீட்டில் வாழ்ந்த நாயக்கரும், 11ம் எண் வீட்டில் வாழ்ந்த கிறித்துவரும், 14ம் எண் வீட்டில் வாழ்ந்த இஸ்லாமியரும், பரஸ்பரம், அன்பாலும் பண்பாலும் பிணைந்து இணைந்து வாழ்ந்த பொற்காலம் அது … எல்லா வீட்டு குடும்பங்களும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்… என எல்லா பண்டிகை பலகார உணவுகளையும் பாகுபாடு, பாரபட்சம் இன்றி பரிவர்த்தனை செய்துகொண்ட புனிதமான காலம்.! நல்லது கெட்டது அனைத்திலும் அவர்கள் இன, மத, சாதி, வேற்றுமை பாராது சகோதரத்துவ உணர்வுடன், கூடி இணைந்து பங்கு பெற்று சந்தோஷித்த காலம் அது…
அதுல ஒரு விசேஷம் பாருங்க. ..இந்த முப்பதாம் நம்பர் வீடு இருக்கே, அது தனித்துவம் வாய்ந்தது. 20 குடித்தனங்கள் கொண்ட “பாரத விலாஸ்” என புனைபெயர் கொண்டு விளிக்கப்பட்ட விசேஷ வீடு அது !.
ஏன் தெரியுமோ..? . வீட்டுக்காரர்(ஓனர்).. இல்லாத அந்த வீட்டில், பஞ்சாபி, சேட்டு, மலையாளி, தெலுங்கு, பீகாரி, தமிழ், கன்னடம் என பாரதத்தின் அனைத்து மொழி, இன, மத குடும்பங்களும் ஒரே வீட்டில் கூடி குழுமி குஷியாய் குடித்தனம் செய்து ! ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்ததால்…
இந்த காரணப்பெயர் உண்டானது ..
அந்த வீட்டில் தான்…பர்மாவில் இருந்து, அகதியாய் அனாதையாய், அனைத்தும் இழந்து.ஓடிவந்த சிறுவன், நம் ஹீரோ “அழகு” எனும்.. “அழகரசன்”.. ஒண்டி ஒட்டி வாழ்ந்து வந்தான். அழகு ,பேருக்கு ஏற்றாற்போல் களையாய் இருப்பான் . அவனுக்கு, கடவுள் “கோபம்” என்ற குணத்தையே படைக்க மறந்தார் போலும் !. எப்போதும் சிரிப்பும், சந்தோசமுமாய், சுறுசுறுப்பாய்வலம்வருவான்!எதெற்கெடுத்தாலும், ஒரு ஜோக் சொல்லி சிரிப்பான்.. எதிராளியை சிரிக்க வைக்காமல் விடமாட்டான்..
ஊர் கதை மொத்தமும் அவனுக்கு அத்துபடி.. யார் யாருக்கு எந்த விஷயம் சொன்னால், சுவாரஸ்யமாய் லயித்து கேட்பார்களோ அந்த விஷயத்தை அவர்களுக்கு சொல்லி மகிழ்விப்பான் ! யார் என்ன திட்டினாலும், அடித்தாலும், உடனே மறந்துவிட்டு, அவர்களிடம் சகஜமாய் பழகுவான். யார் எந்த வேலை கொடுத்தாலும், தட்டாமல் செய்வான்.. அனைவரிடமும் அன்பாய்ப் பழகி ஒட்டிக்கொள்வான் !.
அந்த வீட்டின் மாடிப்பகுதியில் வாழ்ந்த பஞ்சாபிகாரர். “இந்தரபீர் சிங்” . அவனை திருவல்லிக்கேணி, ஹிந்து ஹை ஸ்கூலில், எப்படியோ கஷ்டப்பட்டு சேர்த்து விட்டு, அவன் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்ள, அவன் படிப்பு தொடர்ந்தது. அவன்.. சாப்பாட்டுக்கு பஞ்சம் வந்ததில்லை !, அந்த… வீட்டிலும், அந்த தெருவிலும் உள்ள யாராவது ஒருவரின் உபயத்தால் வேளாவேளைக்கு சாப்பாடு கிடைத்து விடும்.!
பஞ்சாபி “இந்தர்பீர் சிங்குக்கு”, பன்னீர் புகையிலை, மணி ஐயருக்கு தர்ப்பை , ஜுனைத்கான் பாய்க்கு ஹலால் செய்த கோழிக் கறி, செட்டியாருக்கு பட்டணம் பொடி, தெலுங்கு ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு சார்மினார் சிகரெட், அப்புகுட்டன் நாயருக்கு காஜா பீடி, என அவரவர்களுக்கு பிடித்த ஐட்டங்களை சத்தம் காட்டாமல் வாங்கி கொடுத்து அனைவரின் அற்ப அபிலாஷைகளையும் அற்புதமாய் பூர்த்தி செய்து அனைவரையும் கவர்ந்து விடுவான்.
அதுமட்டுமன்றி… பத்மா மாமிக்கு காப்பி போட.. அதிகாலையில் அஜீஸ் பால்கடையில் நுரை நீக்கிய நீர் கலவா பசும்பால், பாத்திமா பாட்டிக்கு பாஷா கடை தம்காரூட் அல்வா, மீனா சேச்சிக்கு, பன்னா மீனும் குடுமியில்லா தேங்காய், தெலுங்குகார மார்த்தம்மாவுக்கு, கூறாகீரை, குரங்கு மிளகா, எருமை நெய், !
இப்படி பெண்குலத்துக்கும், கண்கலங்காமல் பெரும் சேவை செய்து நற்பெயர் பெற்றான் !
இதுமட்டுமா??
வீட்டில் உள்ள நண்டு சிண்டுகளுக்கு கதை சொல்லி விளையாட்டு காட்டி, கால் கழுவி தூங்கச் செய்வதிலும் சமர்த்தன்.. சக வயது பையன்களுக்கு, காத்தாடிக்கு சூத்திரம் போட்டு, மாஞ்சா போடும் பணியில் படு கில்லாடி. கில்லி தாண்டு செய்து தறுவதில் வல்லவன்.. மேலும், பம்பரத்துக்கு கொண்டை அடித்து, டாமாஸ் கோலிகள் வாங்கித்தந்து, விறகுகட்டையில் பேட் செய்துகொடுத்து ,… சகவயது சகாக்களிடம் சங்கமமாகி அசத்துவான்..
இதன்றி,…சகதோழிகளின் வீட்டுப்பாடம், ட்ராயிங் வேலைகள், புரியாத கணக்குகள் சொல்லித் தருதல், பேனா, ஷார்ப்னர் பழுது பார்த்தல், என அவர்களுக்கும் சலியாமல் சேவை செய்தான். மொத்தத்தில் அவன் ஒரு “சகலகலா நல்லவன்” !!
நாட்கள் பறந்தோடிட, அவன் எஸ்எஸ்எல்சி தேர்வில் பள்ளி முதல் மாணவனாய்த் தேர்வானான்! நடுத்தர வருமானம் கொண்ட சர்தார்ஜியோ, அவன் மேற்படிப்புக்கு உதவ முடியாமல் கண்ணீர் விட்டு வருந்தினார்.
அவரின் ஒரே மகள், பத்தாம் வகுப்பு படிக்கும், கமல் ஜித்கர், படிப்பில் படுசுட்டி, அவளுக்கு நம் ‘அழகு” பாடசம்பந்தபட்ட ஏகபட்ட உதவிகள் செய்வான்..
அவள் காலால் இட்ட வேலையை தலையால் செய்வான்… அந்த ரெண்டுங்கெட்டான் பருவ வயதில், அவளுக்கு இவன் மேல் ஒரு இனந்தெரியாத ஈர்ப்பு..
இவனோ ஒரு முறைகூட அவளைத் தப்பான நோக்குடன் பார்த்ததில்லை.. இந்த விவரிக்க முடியாத நேசத்தை எவ்வாறு வகைபடுத்த முடியும்!?
ஒரிரு மாதங்களில், அவன் 18 வயதை எட்டியவுடன், சர்தார்ஜி அவனிடம் “அழகு! நீ எங்களுக்கு செய்யும் சேவை அளப்பரியது! நீ படிப்பில் இவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தும், என் பொருளாதார நிலையால் உனக்கு உதவ முடியாமல் தவிக்கிறேன்! என் தம்பி ராணுவத்தில் பணிபுரிகிறான் ! உனக்கு விருப்பம் இருந்தால் இராணுவத்தில் சேர்ந்துகொள், இந்திய பாகிஸ்தான் போர் மேகம் சூழ்ந்த இக்காலகட்டத்தில், உன் தகுதிக்கும் திறமைக்கும் எளிதில், உன்னை சேர்த்து கொள்வார்கள்..நீ ஆழ்ந்து யோசிச்சு முடிவுக்கு வா ” என முப்பது வருட சென்னை தமிழ்மொழியில், ஊறித் திளைத்த சர்தார்ஜி தீர்க்கமாகப் பேச… அழகு அவர் காலில் விழுந்து “நானோ, இந்திய பூர்வ குடியாய் பர்மாவில் சிறப்பாக வாழ்ந்த பெற்றோரை, ஒரே நொடியில் இழந்து அனாதை ஆனவன்.. எனக்கு என்று யாரும் இல்லை.. என் உடல் பொருள் ஆவி அனைத்தும் இந்த பாரத மண்ணுக்கு அர்பணிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்… தயவு செய்து உடனே என்னை சேர்த்து விடுங்கள் அங்கிள்!”என்று கண்ணீர் மல்கக் கூறினான்.
ஒரிரு நாட்களில், அவனுக்கு ராணுவ பணி உத்தரவு கிடைக்க, விழிநீர் வெள்ளத்தில் வீங்கிய விழிகளுடன், பாரத விலாஸுக்கும், சந்தா சாஹிப் தெருவுக்கும், பிரியா விடைகொடுத்து புதுடெல்லி புறப்பட்டான். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அந்தத் தெரு மக்கள் மொத்தமும் திரண்டு வந்து, அழுத கண்களுடன் விடை கொடுக்க… சர்தார்ஜி அவன் கரத்தை அழுந்தபிடித்து, அன்பை வெளிப்படுத்தினார். அவர் மகள் கமல் தேம்பி தேம்பி அழுவதைக் கண்டு, முதல்முறையாக, அதன் “உள்ளர்த்தம்” புரிந்த அழகு ஏதோ இழக்கக் கூடாததை இழந்த மனநிலையில் அவளை பரிதாபமாக நோக்க, ரயில் பெருத்த விசில் சத்தத்துடன் கூவென்று ஒலி எழுப்பி நகர்ந்து, வேகம் பிடிக்கத் தொடங்கியது…
நாலைந்து ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய பாகிஸ்தான் போரில், காலில் பலத்த காயங்கள் அடைந்து, நீண்ட நாள், சண்டிகர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு… ஓரு நாள் காலை பொழுதில், பயிற்சி செவிலியராய்ச் சேர்ந்த “கமல் ஜித்கரை” சந்திக்க, இருவரும் வியப்பின் எல்லைக்கே செல்கின்றனர்.
கமலின் நீள்விழி நோக்கில், வெட்கித்த அழகிடம் “அழகு, இங்கு என் சித்தப்பா நர்ஸ் படிப்பில் என்னை சேர்த்து விட்டார்.. படிப்பு முடித்து இன்றுதான் பயிற்சி நர்சாக டூட்டியில் சேர்ந்தேன்!.. உனக்கு ஏன் இப்படி ஆச்சி அழகு?” என பரிவுடன் கேட்க,
அவன்” கமல்! நான் சிப்பாயாக சேர்ந்து, சில பல தேர்வுகள் எழுதி வெற்றி கண்டு , உத்யோக உயர்வு பெற்றேன்.. பல விருதுகள் வாங்கினேன்!.
ஒரிரு மாதங்களுக்கு முன் போர்முனையில், முழங்காலில் ஏற்பட்ட பெரும் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன்.. இப்போது சுமாராகி விட்டது..
ஒரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள் !”என பதில் கூறினான்… ஏனோ இருவர் விழிகளிலும், கண்ணீர் பெருகியது.
அந்த கண்ணீரில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.
சிலபல வாரங்களுக்கு பிறகு…,
சந்தா சாஹிப் தெருவே விழாக்கோலம் பூண்டிருந்தது… சர்தார்ஜி, தன் மகளையும், அழகையும்,மணக்கோலத்தில்… மலரால் அலங்கரிக்கபட்ட “ஸ்டாண்டர்ட்” காரில் அழைத்து வந்து… “என் உயிரினும் மேலான நட்புகளே! உறவுகளே!.. “அழகு “இனி என் மருமகன்.!. இல்லை இல்லை மகன்.!”. என்று அறிவிக்க, பலத்த கரவொலியுடன், கூடி ஒலித்த வாழ்த்து கோஷத்தால் அந்த தெருவே அதிர்ந்தது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

