கவிதை: *விவசாயிகள்… * – சசிகலா திருமால்விவசாயிகள்… 
வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம்
வள்ளலாராகவே வாழ்கிறான் விவசாயி…
ஆறுகளெல்லாம் ஆறுதல் சொல்லக்கூட இயலாமல் வறண்டு கிடக்கிறது…
உழவே கதி என்றவனுக்கோ
உரிமைகளின் களவே நீதியாகிறதிங்கே…
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காதென்றனர் அன்று …
இன்றோ..
விதைகள் உறங்கியதால் விவசாயியும் உறங்குவதேயில்லை…
முளைத்து நிற்க வேண்டிய விதைகள்
இளைத்து நிற்பதால் விவசாயிகளும் இளைத்தே விட்டனர்….
விளைச்சலுக்கு வழியில்லை
விண்ணைப் பார்த்தும் பயனில்லை
வீணாய் போன நேரத்தோடு
வீழ்ந்தேப் போனது பயிர்களும்…
விளைவிக்கும் விவசாயிக்கோ ஒரு கைப்பிடி உணவில்லை
ஏரை மறுக்கை பிடிக்கவும் உடலில் வலுவில்லை…
உயிருக்காக ஓடுவதா இல்லை
உயிருடன் சாவதா?…
கால் வயிற்றையும் நிரப்பிடாத விவசாயத்தை நம்பியே
விடியும் முன்னே எழுந்தவன் வாழ்வில்
விடியல் ஏனோ வரவில்லை…
கொளுத்தும் கோடை வெயில்
காலைக் கடிக்கும் செருப்பு
கையைக் கடிக்கும் கடன்
தலையில் துண்டு போட்டுக் கொண்டு
போகும் இடம் தெரியாது போகின்றான்….
கால் போன போக்கில்…
வாழ்வதற்கு வக்கற்ற சுதந்திர தேசமதில்…
சாகுபடி செய்த விவசாயியை
சாகும்படி செய்வதில்தான் சாதனைப் படைத்துள்ளோம் நாம்
புதிய இந்தியாவில்…
விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக்கப்பட்ட நிலையில்
வாழ வழியில்லாமல் வலியோடு வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் எமது விவசாயிகள்…
மண்ணில் விதையை விதைப்பவர்கள் அந்த விதையோடு சேர்த்து தாங்களும் மண்ணிற்குள் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்…
எப்போது புரியும் இவர்களுக்கு
இந்த தேசமே விவசாயிகளால்தான்
இயங்கிக் கொண்டிருக்கிறது என்று?…
வாருங்கள்….
விவசாயம் காப்போம்…
சசிகலா திருமால்,
கும்பகோணம்.