சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகள்: கொரனாவை விட கொடியவை – வழக்கறிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம்

 

01. அரசியல் விழிப்புணர்ச்சி காரணமாக சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வந்தாலும் கூட பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறும் காவல்துறையினர் தவறு செய்தால் தட்டி கேட்கும் மனப்பக்குவம் வருவதற்கு இன்னும் பல வருடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. யார் ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் காவல்துறையினர் எப்போதும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

02. சாத்தான்குளம் காவல்நிலையம் ஊரிலிருந்து ஒதுக்கு புறமாக அங்கு நடக்கும் நிகழ்வுகளை யாரும் அவ்வளவு எளிதாக தெரிந்து கொள்ள முடியாத படி அமைந்துள்ளது. குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு 2 (எஸ்) –ன் படி காவல்நிலையம் என்பது மாநில அரசாங்கத்தால் பொதுவாக சிறப்பாக அறிவிக்கப்படும் ஒரு இடம் ஆகும். சட்டம் ஒழுங்கினை நிலை நாட்டி குற்றங்களை தடுத்து மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்து தருவது தான் காவல்நிலையம் ஏற்படுத்தப்படுவதின் நோக்கம் என்பது மாறி விட்டது. சட்டத்தை மீறுபவர்களிடமிருந்து கைக்கூலி பெற்றுக் கொண்டு காவல்துறையினர் செயல்படுவது தெரிய வருவதினாலேயே தான் சமூகத்தில் பலம் மிக்கவர்களுக்கு காவல்துறையை பற்றிய பயம் இல்லாமல் போய் விட்டது. பலகீனமான பொது மக்களுக்கு காவல்துறையினரை பார்த்து பயம் ஏற்படும் எண்ணத்தினை மாற்ற முடியவில்லை. உயர்ந்த நேர்மைதான் காவல்துறையின் கவுரவத்திற்கு அடிப்படை என்பது கானல் நீராகிவிட்டது.

காவல்துறையும் அவர்களின் சீருடையும்

03. 2019-ம் வருடம் செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சென்னையில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த பாதசாரி ஒருவருக்கு உதவி செய்யப் போய் அந்த பாதசாரியின் மரணத்திற்கு பிரான்சிஸ் கிருபா தான் காரணம் என்று கூறி அவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அதன் பிறகு இடதுசாரி எழுத்தாளர்கள் உட்பட பலரும் காவல்நிலையம் முன்பாக குழுமி ஆட்சேபனை செய்த பிறகு பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார். பிரான்சிஸ் கிருபா அணிந்திருந்த உடை அவரை காவல்நிலையத்திற்கு சட்டவிரோதமாக அழைத்து செல்ல காரணமாக அமைந்து விட்டது.

04. காவல்துறை அதிகாரிகள் சீருடை அணிந்துள்ள போதும் சாதாரண உடையில் இருக்கும் போதும் அவர்கள் பொது ஊழியராக கருதப்படுகின்றார்கள். தமிழ்நாடு டிஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆக்ட் 1859 பிரிவு 21 – ன் படி காவல் அதிகாரிகள்; எப்போதும் பொது ஊழியர்கள்தான். இந்திய தண்டனைச்சட்ட பிரிவு 21 -ம் யார் யாரெல்லாம் பொது ஊழியர்கள் என்று வரையறை செய்துள்ளது. டிஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆக்ட் சட்டப்பிரிவு 53-ன் படி காவல் அதிகாரிகள் மீதான புகாரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது குற்றமிழைத்த நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என கூறுகின்றது. இந்த கால வரையறை குற்றமிழைத்தவர் அவரது பதவியை துஷ்பிரயோகம் செய்திருக்கும் போதோ சட்ட விரோதமாக செயல்பட்டிருக்கும் போதோ பொருந்தாது என உச்சநீதிமன்றம் வைத்தியலிங்கம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் புலன் விசாரணையின் போதும் பணியின் நிமித்தமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றும் காவல்நிலையங்களில் அன்றாட செயல்பாட்டிற்கு ஆவணங்களை பராமரிப்பது தொடர்பாகவும் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுவத்துவது உள்ளிட்ட நிர்வாக விதிகளை உள்ளடக்கிய போலீஸ் ஸ்டேன்டிங் ஆர்டர்ஸ் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேண்டிங் ஆர்டர் 141 –ன் படி தீவிர தன்மையுடைய குற்ற வழக்குகளை உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்து வர வேண்டும்.

ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்

பிடிக்காதவர்களுக்கு எதிரிகள் ...

05. காவல்துறைக்கு உதவியாக ரோந்து அலுவல், பாதுகாப்பு அலுவல், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் அலுவல் உள்ளிட்டு ஒரு சேவை இயக்கமாக ஊர்க் காவல் படையைச் சேர்ந்தவர்கள் செயல்படுகின்றனர். இவர்களுக்கென்று தனியாக சீருடையும் வழங்கப்படுகின்றது. ஊர்க்காவல் படையினரை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமும் விதிகளும் உள்ளன. ஆனால் இந்த சட்டத்திலும் விதகளிலும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்து சொல்லப்படவில்லை. தமிழ்நாடு டிஸ்டிரிக் போலீஸ் ஆக்டிலோ, போலீஸ் ஸ்டேன்டிங் ஆர்டரிலோ ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்” என்ற குழு அமைத்துக் கொள்வது குறித்து எந்தவொரு விளக்கமும் இல்லை. எனவே போலீசாருக்கு உதவியாக சேவை செய்வதாக கூறி பொது மக்களுக்கு எதிராக சட்டத்தில் சொல்லப்படாத ஒரு முறையை ஒரு வழியை பின்பற்றி ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற குழுவை ஏற்படுத்தி துப்பாளர் வேலை உள்ளிட்ட அனைத்து சட்ட விரோத காரியங்களிலும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரை சாத்தான்குளம் போலீசார் பயன்படுத்தி வந்தது சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலை மூலம் உலகிற்கு தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்ததின் காரணமாக ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் செயல்பாடு 8 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 05.07.2020 அன்று ஊடக செய்திகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஊழியர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்வது

06. பொது ஊழியர்கள் அவர்களின் அலுவலக கடமையின் நிமித்தம் செயல்படும் பொழுது அவர்கள் தவறு இழைத்ததாக குற்றச்சாட்டு சாற்றப்படும் பொழுது அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பதையோ அல்லது குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பதையோ குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 197 தடை செய்கின்றது. மேற்படி பிரிவு 197-ன்படி காவல் ஆய்வாளர் அந்தஸ்திற்கு மேற்பட்ட பதவியில் இருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்திட வேண்டுமானால் பணி அமர்த்தும் அதிகாரியிடம் (அப்பாயிண்ட்டிங் அத்தாரிட்டி) முன்அனுமதி பெறவேண்டும். அதே சமயம் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவருக்கு கீழ் நிலையில் உள்ள காவல்துறையை சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட அதிகாரம்; தமிழ்நாடு டிஜிபிக்கு இருப்பதினால் மேற்படி சட்டபிரிவு 197-ன் கீழ் இவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன் அனுமதி பெற தேவையில்லை.

07. சட்டப்படி தங்களது பணியை கடமையை செய்பவர்களுக்கு தான் சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது. அவரது செயலுக்கும் அலுவல் முறை கடமைக்கும் தொடர்பு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு குற்றத்தை செய்வதற்கு சதி திட்டம் தீட்டுவது அலுவலக வேலையல்ல என்பதினால் அந்த செயலுக்கு பிரிவு 197-ன் கீழான பாதுகாப்பு கிடையாது. அதே சமயம் பொது ஊழியர்களாக இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்படும் பொழுதும் அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் பொழுதும் அவர்களுக்கு மேற்படி பிரிவு 197 உட்பட்ட எந்த சட்டத்தின் கீழும் பாதுகாப்பு கிடைக்காது.

போலீசார் புலன் விசாரணையை துவக்கும் நடைமுறை

உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளர் ...

08. உதாரணத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல்நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என வைத்துக் கொள்வோம். இந்த வழக்கினை பதிவு செய்த உடன் வழக்கு நாட்குறிப்பு (கேஸ் டைரி) என்ற ஆவணத்தை அந்த புலன் விசாரணை அதிகாரி பதிவு செய்து தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். அந்த வழக்கில் சம்பவம் இடம் சென்றது. பார்வையிட்டது. சாட்சிகளை விசாரணை செய்தது. குற்றம்சாட்டப்பட்டவரை தேடி சென்றது உள்ளிட்டு ஒவ்வொரு நாளும் அந்த வழக்கில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பதிவு செய்து வரவேண்டும். அதே போல் நீதிமன்றத்தில் சார்ஜ் சீட் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் கூட நீதிமன்றத்தில் அந்த வழக்கு தொடர்பாக நடக்கும் விசயங்களை அந்த நாட்குறிப்பில் தொடர்ந்து பதிவு செய்து பராமரித்து வர வேண்டும். ஒரு வேளை வழக்கு சிபிசிஐ-டிக்கு, சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றால் அது விபரம் தெரிய வந்தவுடன் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்று பதிவு செய்திருக்க வேண்டும். இந்த வழக்கு நாட்குறிப்பை ஜாமீன் மீது விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற விசாரணைகளில் நீதிமன்றம் பார்வையிடலாம்.

09. அரசியல் கட்சியை சேர்ந்த பிரபலமான ஒருவர் சிலரால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்;. இந்த வழக்கினை விசாரித்து சிபிஐ –க்கு விசாரணையை மாற்றி தீர்ப்பு வழங்கிய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஹரிபரந்தாமன் அவர்கள் வழக்கு நாட்குறிப்பை பார்வையிட்டு அதில் புலன்விசாரணை அதிகாரி முறையற்ற வகையில் செயல்பட்டுள்ளதை சுட்டிகாண்பித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

எதிரியை தேடிச் செல்லுதல்

10. தற்பொழுது திருச்செந்தூர் காவல் நிலைய வழக்கில் தேடப்படுகின்றவர் கேரள மாநிலம் குருவாய10ரில் இருப்பதாக புலன் விசாரணை அதிகாரிக்கு தெரியவருகிறது. அவரை சைது செய்திட செல்ல இருக்கின்றார். அவர் திருச்செந்தூர் காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் நிலைய பொது நாட்குறிப்பு (ஜெனரல் டைரி)-ல் அவரும் அவருடன் யார் யாரும் மேற்படி நபரை பிடிப்பதற்கு எந்த தேதியில் நேரத்தில் திருச்செந்தூரிலிருந்து கிளம்பி கேரள மாநிலத்திற்கு செல்கின்றார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். இந்த நிலை பொது நாட்குறிப்பேட்டினை பதிவு செய்ய காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இவ்வாறு முறையாக பொது நாட்குறிப்பில் எழுதப்படவில்லை என்றால் சம்பந்தபட்டவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுத்திட முடியும். அதே போல் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் அவர்களுக்கு கீழ்நிலையில் உள்ள காவல்துறையினர் அனைவரும் பாக்கெட் நோட் புக் என்ற ஒரு ஆவணத்தை பராமரித்து வர வேண்டும். இந்த பாக்கெட் நோட் புக்கில் அன்றாடம் அவர்கள் செய்யும் வேலையை சுருக்கமாக நேரம் குறிப்பிட்டு பதிவு செய்யவேண்டும். இந்த பாக்கெட் நோட் புக்கை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது பதிவுகள் சரியாக இருக்க வேண்டும். அவர்கள் பேரூந்து மூலமாகவோ அல்லது விமானம் மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ செல்லும் இடத்தை குறிப்பிட்டு அதற்கு பாஸ்போர்ட் என்று சொல்லக்கூடிய அனுமதி சீட்டினை பெற்றுச் செல்லவேண்டும். ஆக மூன்றாவது கண் என்று சொல்லப்பட கூடிய சிசிடிவி கேமிராக்கள் ஒரு வேளை செயல்படவில்லை அல்லது செயல்படாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. என்றாலும் கூட மேற்படி ஆவணங்களின் மூலமாக காவல் துறையினர் தவறிழைத்துள்ளார்களா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளமுடியும். சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் காவல்நிலையத்தை வருவாய்துறையினர் வசம் ஒப்படைத்திட உத்தரவிட்டதும், பின்னர் அந்த உத்தரவு திரும்ப பெற்று கொள்ளப்பட்டதற்கும் அடிப்படை என்னவென்றால் சாத்தான்குளம் காவல்நிலைய ஆவணங்கள் திருத்தப்பட்டு விடக்கூடாது, அழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே ஆகும்.

வெளியூர் நீதிபதியிடம் எதிரியை ஆஜர் செய்வது

11. மேற்படி திருச்செந்தூர் காவல்நிலைய வழக்கில் புலன் விசாரணை அதிகாரியும், போலீசாரும் குருவாயயூர் செல்வதற்கு அரசு வழங்கியுள்ள காவல் வாகனத்தை பயன்படுத்தினால் ஜிவிஆர் என்று சொல்லப்படக்கூடிய அந்த வாகனத்தில் எத்தனை மணிக்கு திருச்செந்தூரிலிருந்து கிளம்பினார்கள்.அப்பொழுது கிலோ மீட்டர் என்ன?அந்த வாகனத்தை யார் ஓட்டுகிறார்கள் என்பது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்திட வேண்டும். குருவாயூர் சென்று குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்த பிறகு 24 மணிநேரத்திற்குள் திரும்பி திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு வர முடியாத சூழ்நிலை இருந்தால் அருகாமையிலுள்ள ஜுடுசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஆஜர் செய்து உத்தரவு பெற்று பின்னர் திருச்செந்தூர் காவல்நிலையம் கொண்டு வந்து அதன் பிறகு சம்பந்தப்பட்ட உள்ளுர் ஜூடுசியல் மாஜிஸ்திரேட் இடம் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஆஜர் செய்து அதன் பிறகு அவரை சிறையில் வைத்திட வேண்டும். மேலும் குருவாயூரில் இருக்கக்கூடிய உள்ளுர் காவல்துறைக்கு மேற்படி விபரங்களை தெரிவிக்கவேண்டும். பிரபலமான அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரை பம்பாயில் கைது செய்த போது மேற்படி நடைமுறையை பின்பற்றிதான் கைது செய்தார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 22 ஆனது ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் கூடிய விரைவில் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகின்ற வழக்கறிஞரை ஆலோசனை செய்யும் உரிமையை மறுக்க கூடாது என்றும் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அருகாமையிலுள்ள மாஜிஸ்திரேட் இடம் ஆஜர்படுத்திட வேண்டும் வலியுறுத்துகின்றது. இதனையே குற்றவியல் நடைமுறை சட்டபிரிவு 24 மணி நேரம் என்பது பயணம் செய்திட ஆகிடும் நேரம் தவிர்த்து (நீங்கலாக) ஆகும். குருவாயூரில் காலை 7.00 மணிக்கு கைது செய்து மறுநாள் காலை 7.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் இடம் ஆஜர்படுத்திட முடியாது என்றால் கைது செய்யப்பட்ட இடமான குருவாயூர் மாஜிஸ்திரேட் இடம் ஆஜர்படுத்தி தான் அவரை திருச்செந்தூருக்கு அழைத்து வர வேண்டும்.

‘கைது பற்றிய குறிப்பு” என்றால் என்ன

குழந்தைகளின் ஆபாசப் படத்தைப் ...

12. மேலும் குருவாயூரில் மேற்படி நபரை கைது செய்யும் பொழுது உச்சநீதிமன்றம் பிரபலமான டிகே.பாசு வழக்கில் 18.12.1996 அன்று பிறப்பித்துள்ள உத்தரவுப்படியும் குற்றவியல் விசாரணை முறை சட்டத்தில் 02.11.2010 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பிரிவு 41பி-ன்படி ‘கைது பற்றிய குறிப்பு” தயாரிக்க வேண்டும். இந்த கைது பற்றிய குறிப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதினால் அந்த பிரிவினை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் ஒரு நபரை கைது செய்யும் போது அந்த அதிகாரியை எளிதாக அடையாளங் கண்டுபிடிக்கும் வகையில் காவல்துறை அதிகாரியின் பெயரைச் சரியாகவும் நன்கு பார்க்கும்படியும் தெளிவான அடையாளத்துடனும் அணிந்திருத்தல் வேண்டும்.

(ஆ) காவல்துறை அதிகாரி கைது பற்றிய குறிப்புத் தயாரிக்க வேண்டும் அந்த கைது குறிப்பில் –
(i) குறைந்தபட்சம் ஒரு சாட்சியாவது சான்று கையொப்பமிட வேண்டும். அத்தகைய சாட்சி கைது செய்யப்படுவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருக்கலாம் அல்லது கைது செய்யப்படும் வட்டாரப் பகுதியில் மரியாதைக்குரிய ஒரு நபராக இருத்தல் வேண்டும்.
(ii) அந்த கைது குறிப்பில் கைது செய்யப்படும் நபரும் கையொப்பமிட வேண்டும்.

(இ) கைது குறிப்பில் கைது செய்யப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் சாட்சி கையொப்பமிடாதபோது கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள விவரத்தைக் கைது செய்யப்பட்டவரின் உறவினரிடமோ அல்லது அவர் பெயர் குறிப்பிடும் அவரது நண்பரிடமோ தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமையுண்டு என்ற தகவலைக் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டவரிடம் தெரிவிக்க வேண்டும்.

13. இவ்வாறு பிரிவு 41-பி. பின்பற்றப்பட வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துவதற்கு அடிப்படை. சட்டமீறலை மனித உரிமை மீறலை தடுப்பதற்கும் போலீசார் சட்டவிரோதமாக ஆவணங்களை தயாரிப்பதை தடுப்பதற்குமானது ஆகும். பிரிவு 41-பி. ல் ‘கைது செய்யும் போது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறானால் குருவாய10ரில் குற்றம்சாட்டப்பட்டவரை காலை 7.00 மணிக்கு கைது செய்யும் போது அந்த இடத்தில் ‘கைதுகுறிப்பு “ தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் மேற்படி கைது குறிப்பில் கையொப்பமிடும் நபர் (சாட்சி) அந்த கைது குறித்த விபரத்தினை குடும்பத்தாரிடம் தெரிவிக்க வேண்டும். அதனால் தான் குடும்ப உறுப்பினர் இல்லாத போது மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் கைது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் கைது செய்யப்பட்டவர் சொன்னதின் பேரில் அவரது உறவினர்களுக்கு செல்போன் மூலமோ இமெயில் மூலமோ வாட்ஸ்ஆப் மூலமோ தகவல் சொல்வதை பிரிவு 41- பி. அனுமதிக்கவில்லை. ஏனென்றால் மேற்படி முறைகளில் உறவினர்களுக்கு தகவல் (மேசேஜ்) தெரிவிக்கப்பட்டதை தகவல் சென்றடைந்து விட்டதை உறுதி செய்வதற்கு எந்த ஒரு வழிவகையும் இல்லை. இந்த அம்சத்தை 29.08.2013 அன்று சண்முகம என்பவர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிகாண்டிபித்துள்ளது இருந்தும் மேசேஜ் செய்யும் நடைமுறை தொடர்கிறது. தற்போது குருவாயூரில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ததை மறைத்து குலசேகரபட்டினம் பஸ்ஸாடாப் அருகில் கைது செய்ததாக புலன்விசாரணை அதிகாரி “கைது குறிப்பு” ஆவணத்தை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அவர் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கத்துடன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர் ஆகின்றார்.

14. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கிரிமினல் ரூல்ஸ் ஆப் பிராக்டிஸ் 2019 என்ற விதிகளை இயற்றி மேற்படி விதிகள் 01-01-2020 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டன. கிரிமினல் ரூல்ஸ் ஆப் பிராக்டிஸ் – ரூல் 6 (5) ஆனது பிரிவு 41-ஆ க்கு இணங்க தயார் செய்யப்பட்ட ‘கைது குறிப்பை” குற்றம்சாட்டப்பட்டவர் ‘நீதிமன்றத்தில்’ ஆஜர் செய்யப்படும் பொழுது அவரிடம் நீதிமன்றம் வழங்கிட வேண்டும் என்று கூறுகின்றது. இதன் நோக்கம் கைது செய்யப்பட்டவருக்கு குறைந்தபட்சம் இந்த ‘கைதுகுறிப்பு “ வழங்கப்பட்டால் தான் அதனை அவர் உறவினரிடமோää வழக்கறிஞரிடமோ வழங்கி சட்டப்படியான மேல்நடவடிக்கைகளை எடுக்க இயலும். மேலும் மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுää இலவச தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திடும் நபர்களுக்கு உதவுவதற்கு இலவச சட்ட உதவி செய்யும் வழக்கறிஞர் நியமிக்கப்படுகின்றார். இவருக்கு ஊதியமும் வழங்கப்படுகின்றது. நடைமுறையில் இந்த இலவச சட்ட உதவி வழக்கறிஞர் “ரிமாண்ட்” தருணத்தில் ஆஜராகுவது இல்லை. தேவைபட்டால் கூப்பிடவும் என்று தலைமை எழுத்தரிடம் வழக்கறிஞர் தொலைபேசி எண்ணை மட்டும் கொடுத்து சென்றுவிடுகிறார்.

திடீர் கைதுகளின் பின்ணணி

15. நடைமுறையில் அதிகாலையோ அல்லது இரவு நேரத்திலோ வழக்கில்
சம்பந்தப்பட்டவரை போலீசார் திடுதிப்பென அழைத்துச் சென்றுவிடுகின்றார்கள். மேலே சொன்னவாறு “கைது குறித்து” வழங்கப்படுவதில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து முன்னமே தெரிய வந்தவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்து விடுகின்றார். ஆனால் இவ்வாறு சட்ட விரோதமாக போலீசாரால் அழைத்து சென்றவர்களை எந்த காவல்நிலையத்தில் வைத்திருக்கின்றார்கள் என்பது கூட உறவினர்களுக்கு முதலில் தெரியவராது. ஒரு காவல்நிலையத்திற்குள் சென்று உறவினர் போலீசார் அழைத்துச் சென்ற நபரை அவ்வளவு எளிதாக பார்த்துவிடவும் முடியாது. எனவே உறவினர்கள் அந்த ஊரில் பிரபலமானவர்களையோ, போலீஸாருக்கு வேண்டப்பட்டவர்களையோ அல்லது வழக்கறிஞரையோ அணுகும் பொழுது அவர்கள் மூலம் எந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்கிற விபரங்களை தெரிந்து கொள்கிறார். இந்த தருணத்தில் அழைத்து செல்லப்பட்ட நபர் அந்த காவல்நிலையத்தில் வைத்தோ அல்லது வேறு ஏதாவது இடத்தில் வைத்தோ காவல் வாகனத்தில் வைத்தோ, போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டிருந்தாலோ துன்புறுத்தப்பட்டிருந்தாலோ மேற்படி விபரத்தினை மருத்துவரிடமோ, நீதிபதியிடமோ சொல்லகூடாது. அவ்வாறு சொன்னால் இன்னும் பல வழக்குகளில் சேர்ந்து விடுவோம். ஜாமீன் கிடைக்காதவாறு செய்வோம். குண்டாஸ் ஆக்டில் போட்டு விடுவோம் என்று குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். இதன் பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பிரிவு 41-பி க்கு இணங்க உறவினர்களிடம் “கைது குறிப்பில்” சம்பிரதாயமாக கையெழுத்து பெறப்படுகின்றது. இல்லையென்றால் கைது செய்யப்பட்ட நபரின் நண்பர்களை நிர்ப்பந்தித்து காவல்நிலையத்திற்கு வரவழைத்து அல்லது போலீசாருக்கு வேண்டியவர்களை சாட்சிகளாக காண்பித்து பிரிவு 41-பி க்கு இணங்க ‘கைது குறிப்பில் “ கையொப்பம் பெறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவருக்கு மருத்துவ சிகிச்சை

16. மேலும் கைது செய்யப்பட்ட நபருக்கு காயமிருந்தால் அது சிறிய காயங்கமாக இருந்தாலும், பெரிய காயங்களாக இருந்தாலும் அது சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருந்த நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் அரசு மருத்துவரிடமோ அல்லது தகுதி வாய்ந்த மருத்துவரிடமோ சான்றிதழ் பெற வேண்டும் என்று டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு. 54 ஆனது ஒரு நபர் கைது செய்யப்பட்ட பிறகு உடனடியாக மருத்துவ அதிகாரியால் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அது சமயம் அவரின் உடம்பில் காணப்பட்ட காயங்கள் அல்லது அவர் மீது பயன்படுத்தப்பட்ட வன்முறை குறிகள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அந்த காயம் – வன்முறை சுமாராக ஏற்பட்ட நேரத்தை குறிப்பிட்டு அறிக்கை தயாரிக்க வேண்டும். அதனை கைது செய்யப்பட்ட நபருக்கோ அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட நபருக்கோ கொடுத்திட என வலியுறுத்துகின்றது. இந்த ஆவணங்கள் நடைமுறையில் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு பிரிவு 54-க்கு இணங்க மருத்துவரால் “அறிக்கை” தயாரிக்கப்படுவதுமில்லை. போலீசாரின் அச்சுறுத்ததில் இருக்கின்ற வரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று போலீசாரே மருத்துவர்களிடம் விபரம் தெரிவித்து “தகுதி சான்று” என்ற பெயரில் ஒரு ஆவணத்தை பெற்றுவிடுகின்றனர்.

17. கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பும், அதற்கு பின்பும் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் இதன் அடிப்படை. மேலும் குற்றவியல் நடைமுறை பிரிவு 55-அ ஆனது எதிரியின் உடல் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் அவரை காவலில் வைத்திருக்கும் நபர் உரிய கவனம் செலுத்திட வேண்டும் என குறிப்பிடுகிறது. அதே சமயம் பிரபலமானவர்கள் கைது செய்யப்பட்டவுடன் நெஞ்சுவலி என்பது உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணங்களை கண்டுபிடித்து சிறையில் வைக்கப்படுவதற்கு பதிலாக மருத்துவ மனையிலேயே இருந்து கொள்வது சில நேர்வுகளில் நடக்கிறது. ஐஏஎஸ் அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒரு எதிரி மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு ஜாமீன் கேட்டபோது சிறையிலேயே அவருக்கு மருத்துவ வசதி அளித்திட வழிவகை இருப்பதினால் அந்த காரணத்திற்காக ஜாமீனில் விட முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.

18. நடைமுறையில் பாளையங்கோட்டை மத்திய சிறை உட்பட மாநிலத்தில் உள்ள பல சிறைகளில் சிறைக்கு உள்ளாகவே மெடிக்கல் செல் என்ற ஒரு கிளை பிரிவு உள்ளது. சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்பட்டால் அந்த மெடிக்கல் செல்லில் அவரை அனுமதித்து சிகிச்சை அளிப்பார்கள். ஒரு வேளை மாவட்டத்தின் மத்திய சிறையிலோ அல்லது கிளை சிறையிலோ மருத்துவ சிகிச்சை வழங்கிட வழிவகை இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரை மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிப்பார்கள். அங்கு கன்விக்ட் வார்டு என்று ஒரு பிரிவு இருக்கும். அந்த கன்விக்ட் வார்டு என்பது சிறை அமைப்பை போன்றே இருக்கும். சிகிச்சை அளிக்கப்படும் நபர்ää இரும்பு கேட்டிக்கிற்கு உள்பக்கம் இருப்பார். அவருக்கு மருத்துவ சிகிச்கை வழங்கப்படும். போலீசார் காவலில் இருப்பார்கள்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தல்

False imprisonment under Law of Torts - iPleaders

19. கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் நீதிமன்ற காவலுக்கு வந்து விடுகின்றார். எனவே தான் நீதிமன்றம் ஒருவரை காவலில் வைக்க உத்தரவிடுவதற்கு முன்பாக கவனமாக செயல்பட வேண்டும். இயந்திர கதியில் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. ஆஜர்படுத்தப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விபரங்களையும் அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்பதையும் அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவருக்கு இலவச சட்ட உதவி உடனடியாக தேவையா என்பதை கேட்க வேண்டும். போலீசார் துன்புறுத்தியுள்ளார்களா என்பதை குறித்து விசாரித்து பதிவு செய்ய வேண்டும்.

20. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 167 (2) (பி) –ன் படி காவல்துறையினர் காவலில் இருந்து வருகின்றவர் சிறையில் வைக்கப்படுவதற்கு முன்பாக அதாவது முதன் முதலாக நேரடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அது சமயம் அவரை காவலில் வைத்திட புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் வழங்கிட வேண்டும். 15 நாட்களுக்கான முதல் ரிமாண்டு கால கட்டத்திற்கு பிறகு அவர் மின் சாதன ஊடகம் மூலம் மீண்டும் சிறைக்காவலில் வைக்கப்படலாம். முதன் முதலாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டாலும் அவரை சிறையில் வைக்கப்படுவது அவசியம் என்று நீதிபதி திருப்தியுற்ற பிறகே ரிமாண்டு செய்திட வேண்டும். இந்த தருணத்தில் போலீசார் ஏற்கனவே மருத்துவ தகுதி சான்று பெற்றிருந்தாலும் கைது செய்யப்ட்டவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்னை அளித்திடவும் உத்தரவிடலாம். அதன் பிறகு அந்த நபரை சிறைக்கு அனுப்புவதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆப் பிராக்ட்டிஸ் ரூல் 6(8) –ன் படி சிறை அதிகாரிக்கு அதற்கென உள்ள படிவத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த படிவத்தில் சிறை காவலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபரின் உடலிலுள்ள மூன்று அடையாளங்களை குறைந்தபட்சம் குறிப்பிட வேண்டும். எனவே நீதிமன்ற தலைமை எழுத்தர் மேற்படி படிவத்தை நிரப்பிடும் போது காயம் பட்டவரின் உடலிலுள்ள வெளிப்படையான காயங்களை பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏடிஎம் கார்டு, செல்போன், வெள்ளி அரைஞான் கொடி, தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஒரு படிவம் மூலம் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்திட வேண்டும். இல்லையென்றால் அந்த ஆவணங்களையும் பொருட்களையும் உரிய படிவம் மூலம் சிறை நிர்வாகத்திடம் ஜாமீனில் வெளியே வரும் போது அவைகளை திரும்ப பெறுவதற்கு ஏதுவாக ஒப்படைக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணங்களையும், பொருட்களையும் சட்டத்திற்கு புறம்பாக கை வசம் வைத்துக் கொண்டு தங்கள் தவறை மறைப்பதற்கு உறவினர்களை நிர்பந்தம் செய்திடும் நடைமுறையை பல வழக்குகளில் போலீசார் பின்பற்றுகின்றனர். மேலும் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மனு செய்து அந்த நபரை கஸ்டடிக்கு எடுத்து புலன் விசாணை மேற்கொள்ளலாம். கட்டாயமாக கஸ்ட்டடி எடுத்திட வேண்டும் என்று அவசியமில்லை. ஜெயிலிலுக்கு சென்று விசாரணை செய்திடலாம்.

பல வழக்குகளில் கைது செய்தல் :

21. ஒரு வழக்கில் கைது செய்து ஒருவரை சிறையில் அடைந்த பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்துவிடாதபடி மற்றொரு வழக்கில் கைது செய்திட பார்மல் அரஸ்ட் என்ற ஒரு நடவடிக்கையை சிறையில் செய்து பின்னர் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பிரிசனர் டிரான்சிட் வாரண்ட் என்ற முறையில் பல்வேறு வழக்குளில் கைது செய்கின்றனர். 1992-ம் வருடம் உச்சநீதிமன்றம் அனுபம் குல்கர்னி என்ற வழக்கில் புலன் விசாரணை செய்யும் காரணத்திற்காக மட்டுமே பிரிசனர் டிரான்சிட் வாரண்ட் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என கூறியிருந்தாலும் பல வழக்குகளில் பிரிசனர் டிரான்சிட் வாரண்ட் நடைமுறையை பின்பற்றி கைது செய்யும் முறை தொடர்கின்றது.

கைதி

22. கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் இருக்கும் நபர் “கைதி என்று அழைக்கபடுகின்றார். சிறைகள் சட்டம் 1894 சிறைவாசிகள் சட்டம் 1900 –க்கு உட்பட்டு “தமிழ்நாடு பிரிசன் மேனுவல்” என்ற நடைமுறை நூல் உள்ளது. இந்த பிரிசன் மேனுவலில் 1136 விதிகள் உள்ளன. ஒன்பது இணைப்புகளும் ஏராளமான படிவங்களும் உள்ளன. பிரிசன் மேனுவல் விதி 187 –ன் படி நீதிமன்றம் காவல் வைத்திட உத்தரவிட்ட நபரை சிறையில் அனுமதிக்கும் முன் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து கூறுகின்றது. விதி 194-ன் அந்த நபர் முழுமையாக சோதனை செய்யப்பட வேண்டும். அவரை உள்ளே அனுமதிக்கும் போது சிறைவாசி எண் வழங்கப்பட வேண்டும். எனவே ஒரு நபர் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் அவர் நீதிமன்ற காவலில் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருந்து வருகின்றார் என்பது தான் பொருள். சிறைவாசி எண் வழங்கப்படுவதற்கு முன்பு ஒரு நபருக்கு ஏற்பட்ட காயங்களின் காரணமாக அவர் சிறையில் இறக்க நேரிட்டாலும் அல்லது சிறையில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக இறக்க நேரிட்டாலும் பிரிசன் மேனுவல் படியும், ஆவண பதிவுகளின் படியும் குற்றப் பொறுப்பு நிர்ணயிக்கப்படுகின்றது. கிளை சிறையிலோ, தாலுகா சிறையிலோ மெடிக்கல் செல் இல்லை என்றாலும் மருத்துவர் சிறைக்கு வந்து கைதிகளை பார்த்து செல்லும் நடைமுறை உள்ளது. சிறைவாசிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் காவல்நிலையத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டு சிறைவாசியை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தினர் வர தாமதமானால் சிறை அதிகாரியை சிறை காவலர்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதித்து உரிய மருத்துவ சிகிச்சை கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மருத்துவ சிகிச்சை வழங்கிட காலதாமதம் செய்வதே குற்றம்தான். மேலும் ஒரு வேளை நீதிபதியின் உத்தரவுப்படி ஜெயிலில் வைத்திட கொண்டு வரும் பொழுது கைது செய்யப்பட்டவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை தேவை என ஜெயிலர் கருதும் பட்சத்தில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காவல்துறையை பணித்திடலாம்.

கைது செய்தால் மட்டும் போதுமா?

Visaranai News in Tamil, Latest Visaranai news, photos, videos ...

கோப்பு படம் 

23. ஆக கைது என்பது மட்டுமே போலீசாரின் மீதான பயத்தினை ஒரு நபரிடம் ஏற்படுத்துகின்றது. “விசாரணை” போன்ற தமிழ் திரைப்பட காட்சிகளும் பொது ஜனங்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கின்றன. உண்மையில் கைது செய்யப்பட்டவர் அவரது விருப்பபடி வழக்கறிஞரை சந்திப்பதற்கு குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 41-இ அனுமதி வழங்குகின்றது. அதே போல் பிரிவு 50-அ ஆனது கைது குறித்து அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. பிரிவு-60-அ ஆனது சட்டப்படிதான் ஒரு நபரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இப்போது இந்த கைது செய்யப்படுவதைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 41- ஐ தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதே போல் 1994-ம் வருடம் உச்சநீதிமன்றம் ஜோகீந்தர்குமார் என்ற பிரபலமான வழக்கில் பிறப்பித்த உத்தரவு குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும்.

24. உச்சநீதிமன்றம் மேற்படி ஜோகீந்தர்குமார் வழக்கில் கைது செய்வது அவசியம் என்று கருதும் நேர்வுகளில் மட்டுமே ஒரு நபரை கைது செய்ய வேண்டுமெ தவிர கைது என்பது மட்டுமே புலன் விசாரணைக்கு அடிப்படை அல்ல என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அருணேஸ்குமார் என்ற வழக்கில் 02.07.2014 அன்று ஏழு ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுக்கு குறைவாக தண்டனை வழங்க கூடிய வழக்குகளில் கட்டாயமாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. ஒரு வேளை கைது செய்ய வேண்டுமானால் ஏன் கைது செய்திட வேண்டும் என்பதை நியாயப்படுத்தி தகுந்த ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் புலன் விசாரணை அதிகாரி விண்ணப்பம் செய்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

25. நடைமுறையில் “செக் லிஸ்ட்” என்ற ஒரு ஆவணத்தை – படிவத்தை போலீசார் நீதிமன்றத்தில் வழங்குகின்றனர். இந்த படிவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் முன் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது உள்ளிட்டு இதர விபரங்கள் கேள்வி பதில் வடிவமாக இருக்கின்றன. இது சரியான நடைமுறையல்ல. ரிமாண்ட் செய்யும் நீதிபதியும் மேற்படி “செக் லிஸ்ட்” பார்வையிட்டதாக குறிப்பிடுகிறார். மேலும் நடைமுறையில் 506 (1), 506 (2) என்ற சட்டபிரிவை இதர இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளுடன் சேர்ப்பதும் நடப்பில் உள்ளது. இந்த பிரிவானது உடனடியாக ஜாமீனில் விடமுடியாத ஒரு பிரிவு என்பதுடன் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கக்கூடிய ஒரு பிரிவாகவும் இருக்கின்றது. உண்மையில் இந்திய தண்டனை சட்டத்தில் ஜாமீனில் விடத்தக்க பிரிவாக உள்ள 506 தமிழ்நாட்டில் 03.08.1970 அன்று கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் ஜாமீனில் விடமுடியாத பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டது சரியான் என்று 2012-ம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் சொல்லியும் உள்ளது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்றோ அல்லது என்னை கத்தியை காட்டி கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார் என்ற வரிகளை மட்டும் புகார் அளிப்பவர் அவரது புகாரில் சேர்த்து விட்டால் சாதாரண ஒரு வழக்கும் ஜாமீனில் விடமுடியாத வழக்காகி விடுகிறது.

ஜாமீனில் வெளியே வருவது

26. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 438 (முன் ஜாமீன் மனு) பிரிவு 439 (ஜாமீன் மனு) ஆகிய மனுக்களில் மட்டுமே அதாவது செசன்ஸ் நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்பட தக்க வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கும் முன்பாக அரசு வழக்கறிஞருக்கு முன் அறிவிப்பு வழங்கிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 437-ன் கீழ் அதாவது ஜீடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டால் விசாரணை செய்யப்படத் தக்க வழக்குகளில் ஒரு நபர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படும் பொழுது ஜாமீன் வழங்கும் முன்பாக அரசு வழக்கறிஞருக்கு முன் அறிவிப்பு வழங்கிட வேண்டும் என்று கூறப்படவில்லை. இந்த சட்டநிலை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஏழு நீதியரசர்களால் அமராவதி என்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. இதன் பிறகு முதல் தகவலறிக்கையை பதிவு செய்வது தொடர்பாக ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 12.11.2013 அன்று உத்தரவு பிறப்பித்துள்ள லலிதாகுமாரி வழக்கிலும் மேற்படி அமராவதி வழக்கின் தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

27. ஜாமீன் வழங்க அதிகாரம் உடைய நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களோ அல்லது மாவட்ட அமர்வு நீதிமன்றங்களோ இடைக்கால ஜாமீனும் வழங்கிடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதே போல் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிரபலமானவர்கள் கைதினை தவிர்க்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் போலீசாரின் வேண்டுகோளின் படி மருத்துவமனைக்கே சென்று அவரை காவலில் வைத்திட உத்தரவிடலாம்.

28. இருந்தாலும் ஜாமீன் மனு தாக்கல் செய்ததிலிருந்து மூன்றாவது நாளிலில்தான் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நடைமுறை உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் ஜீடுசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்களில் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதற்கு காரணத்தை ஆராய்கையில் 506 (1), 506 (2) என்ற சட்டபிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு வேளை மேற்படி 506 (1), 506 (2) பிரிவுகள் சேர்க்கப்படாமல் இருந்தால் அந்த வழக்குகள் ஜாமீனில் விடத்தக்க வழக்குகளாகி விடும். அத்தகைய நேர்வுகளில் கைது செய்யப்பட்ட நபரை புலன்விசாரணை அதிகாரியே ஜாமீனில் விட்டுவிடலாம். இதனை நாம் ஸ்டேசன் ஜாமீன் என்று கூறி வருகிறோம். மேலும் இத்தகைய வழக்குகளை சிறு குற்ற வழக்குகளாக கருதி அவைகளில் குற்றசாட்டப்பட்டவர் அபராதத்தை கூட கட்டி விடலாம் . நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் திரு.கோபால் 2019-ம் வருடம் கைது செய்யப்பட்ட வழக்கில் குற்றவியல் நடைமுறை சட்டபிரிவுகளை எல்லாம் விளக்கி எழும்பூர் ஜீடுசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் திரு.கோபால் அவர்களை ஜாமீனில் விட்டது சரிதான் என்று தீர்ப்பளித்தது. அதே போல் சனி, ஞாயிறு கிழமைகள் விடுமுறை தினங்களாக அமைந்து விடுவதை மனதில்வைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட கூடாது என்று நாகேஷ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

கட்டாயமாக கைது செய்திட வேண்டுமா

வாங்க சும்மா வெளியில போயிட்டு ...
கோப்பு படம் 

29. ஒரு நபரை கைது செய்வது அந்த நபரின் உரிமையை தடங்கல் செய்வதாகும். அதாவது அந்த நபருக்கு அவர் விருப்பப்படி தம் செயலை செய்ய முடியாத படி பலவந்தம் உண்டாக்கப்படுகின்றது. கைது எவ்வாறு செய்ய வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் போது அவர் அந்த கைதிலிருந்து தப்பிக்க எத்தணித்தால் மிதமான பலவந்தம் அவர் மீது பிரயோகித்திட குற்றவியல் நடைமுறை சட்டபிரிவு 46 (2) அனுமதிக்கின்றது. அதே சமயம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46 பிரிவு 3-ன் படி மரணம் விளைவிக்கும் அளவிற்கு பலவந்தம் செய்யப்பட கூடாது. அதே போல் குற்றவியல் நடைமுறை சட்டபிரிவு 46 (4) –ன்படி சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பெண்ணை கைது செய்யக்கூடாது. ஆனால் விதிவிலக்கான வழக்க சூழ்நிலைகளில் மட்டும் பெண்களை கைது செய்திடலாம்.

30. தற்போது குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு 41-ல் எந்த எந்த குற்றங்களுக்காக கைது செய்திடலாம் என்று குறிப்பிட்டுள்ளதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

(அ). கைது செய்யும் குற்றத்தை ஒருவர், ஒரு காவல்துறை அதிகாரியின் முன் செய்யும் போது அவரை காவல்துறை அதிகாரி உடனடியாக கைது செய்யலாம்.

(ஆ). ஒருவருக்கு எதிராக காரணத்துடன் கூடிய ஒரு புகார் கொடுக்கப்பட்டிருக்கும் போது அல்லது ஒருவருக்கு எதிராக குற்றம் தொடர்பாக நம்ப தகுந்த ஒரு தகவல் கிடைக்க பெற்றிருக்கம் பொழுது அல்லது ஒருவர் ஏழாண்டுக்கு குறைவாக அல்லது ஏழாண்டுகள் வரை அபாரதத்துடனோ அல்லது அபராதம் இல்லாமலோ தண்டனை விதிக்க தக்க வகையிலான பிடி கட்டளை இல்லாமல் கைது செய்வதற்குரிய குற்றம் ஒன்றை செய்திருக்கிறார் என்று சந்தேகிக்கும் போது காவல்துறை அதிகாரி அவரை கைது செய்யலாம். இவ்வாறு ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்வதற்கு முன்னர் பின்வரும் நிபந்தனைகளில் மனநிறைவு அடைந்திருக்க வேண்டும் அதாவது

1. கொடுக்கப்பட்டுள்ள புகார் தகவல் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் அத்தகைய நபர் குற்றம் செய்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி நம்ப வேண்டும்.

2. அந்த நபரை கைது செய்வது.

(அ). அந்த நபர் மேற்கொண்டு குற்றம் செய்வதை தடுப்பதற்கு அவசியமாக
இருக்கிறது. அல்லது.

(ஆ). குற்றம் தொடர்பாக சரியான புலன் விசாரணையை செய்வதற்கு அவசியமாக இருக்கிறது: அல்லது

(இ). அந்த நபர் எந்த வகையிலேனும் குற்றம் தொடர்பான சாட்சியம் இல்லாமல் செய்வதை அல்லது சாட்சிகளைக் கலைப்பதை தடுப்பதற்கு அவசியமாக இருக்கிறது என்றிருக்கும் போது அத்தகைய நபரை கைது செய்யலாம்.

(ஈ). குற்றச்சம்பவம் தொடர்பான விவரங்களை தெரிந்திருக்கும் நபரை அந்த
விவரங்களை நீதிமன்றத்திலோ அல்லது காவல்துறை அதிகாரியிடமோ சொல்லாமல் இருக்கும்படி தூண்டுதலை செய்கிற அல்லது மிரட்டுகிற அல்லது ஏதேனும் வாக்குறுதியளிக்கிற நபரை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரி நீதிமன்ற உத்தரவு இல்லாமலும் பிடிகட்டளை இல்லாமலும் தனது விருப்பப்படி கைது செய்யலாம்.

(உ). ஒரு நபரை கைது செய்யாவிட்டால் அவர் நீதிமன்றத்தில் தோன்றுவதை உறுதிப்படுத்த முடியாது என்றிருக்கும் போது காவல்துறை அதிகாரி நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அத்தகைய நபரை கைது செய்யலாம். அவ்வாறு நபர் ஒருவரை கைது செய்யும் காவல்துறை அதிகாரிää அந்த கைதுக்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்தல் வேண்டும்.

போலீசார் எப்படி தான் விசாரிப்பது

31. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்,65 மேலே உள்ள பெண், ஆண் வயோதிகர்கள் ஆகியோர்களை தவிர வழக்கின் சங்கதி மற்றும் சூழ்நிலைகளுடன் தொடர்புடைய அந்த காவல்நிலைய வட்டார எல்லைக்குள் குடியிருக்கும் எந்தவொரு நபரையும் குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு 160-ன் கீழ் விசாரணைக்கு ஆஜராகிடுமாறு காவல்துறையினர் சம்மன் சார்பு செய்யலாம். நடைமுறையில் இந்த பிரிவானது சாட்சிகளை காவல்நிலையத்திற்கு வர வைப்பதற்கும்ää ஆவணங்களை கொண்டு வருமாறு உத்தரவிடுவதற்குமே பயன்படுகிறது.

குற்றவாளிகளை காவல்நிலையத்திற்கு வரவழைக்க சம்மன்

32. குற்றவாளிகளை காவல்நிலையத்திற்கு வரவழைக்க சம்மன் வழங்கும் நடைமுறை குறித்து திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு பிரிவு 41 –அ கூறுகின்றது.

அதாவது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்வதற்குரிய குற்றமொன்றைச் செய்திருப்பதாக அவருககு எதிராகப் புகார் ஒன்று செய்யப்பட்டிருந்தால் அந்த நபர் குற்றத்தைச் செய்திருப்பதாக சந்தேகம் எழுந்தால் காவல்நிலையத்தில் ஆஜராகிட வேண்டும் என்ற ஒரு காவல்துறை அதிகாரி அந்த நபருக்கு ஒரு அறிவிப்பு மூலம் கட்டளையிடலாம். மேற்படி அறிவிப்பு எந்த நபருக்கு அனுப்பப்பட்டுள்ளதோ அந்த நபர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும்.

சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்படுவதற்கான காரணங்களை காவல்துறை அதிகாரி எழுதி பதிவு செய்திடாத போது அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட குற்றங்களுக்காக அறிவிப்பு அனுப்பப்பட்ட நபரை அவர் காவல்நிலையத்தில் ஆஜராகும் போது கைது செய்தல் கூடாது.

அதே சமயம் அந்த நபர் காவல்நிலையத்தில் ஆஜராகாமல் வேண்டுமென்றே தன்னை அடையாள படுத்திக் கொள்ள தவறியிருக்கும் போது உரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உட்பட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்காக அந்த நபரை கைது செய்யலாம்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நடந்தது என்ன

Sathankulam custodial deaths: Plea in Madras HC to constitute ...

33. மேலே சொல்லப்பட்டுள்ள படி ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட தருணத்திலும் அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளிலும் பல்வேறு சட்ட மீறல்கள் இருப்பது காட்சி ஊடகங்கள் மூலமாக தெரிய வருகின்றது. குறிப்பாக (1) சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் பொய்யாக பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகயின்படி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் ஒன்றாக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லவில்லை. (2) சட்ட விரோதமாக அழைத்து சென்ற பிறகு கைது குறிப்பானை உடனடியாக தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை. (3) ஜெயராஜ், பென்னிக்ஸ் -ன் சொந்த உடமைகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. (4) 506 என்ற பிரிவை தவிர இதர பிரிவுகள் ஜாமீனில் விடத்தக்க பிரிவுகளாக இருக்கும் பொழுது குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு .41-ஏ –ன்படி நோட்டீஸ் அனுப்புவதை தவிர்த்து காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளனர். (5) ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு .54-ன் நோக்கத்திற்கிணங்க மருத்துவ அறிக்கை பெறவில்லை. (6) இருவரையும் ரிமாண்ட் செய்யும் பொழுது நீதிபதி வெளிப்படையான முறையில் பொறுப்பை உணர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கிட உத்தரவில்லை. (7) கோவில்பட்டி கிளை சிறையில் உரிய மருத்துவ சிகிச்கை வழங்கிடவில்லை. (8) போலீசார் சம்பந்தப்பட்ட வழக்கை உயர்மட்ட காவல் அதிகாரி விசாரணை செய்திட உத்தரவிடவில்லை.
காவல்நிலைய மரணங்களில் விசாரணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும்

34. 2006 –ம் வருடத்திற்கு முன்பாக இது போன்ற காவல் வைப்பில் இருக்கும் போது எவர் ஒருவரும் இறந்து போயிலிருந்தால் போலீஸ் ஸ்டண்டிங் ஆர்டர் பிரிவு 151- ன் படி அந்த சரக ரெவனிய10 டிவிசனல் ஆபிஸர் விசாரணை மேற்கொண்டு ரெவின்ய10 என்கொயரிஸ் ஆக்டின்படி அந்த அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி அதன் பிறகு சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றமிழைத்த போலீசார் தனி வழக்காக தாக்கல் செய்வார்.

35. ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கில் இருவரும் காவல்நிலைய சித்ரவதை துன்புறுத்தல் காரணமாக இறந்து போனதற்கு கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய குற்ற எண்கள். 649, 650 –ல் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 176 – 1-ஏ –ன் கீழ் 23-06-2020 அன்று இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு (இருவரும் வெவ்வேறு நேரங்களில் இறந்து போனதினால்) அவை சம்மந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த பிரிவு 176 -1-ஏ ஆனது 23-06-2006 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் படி ஒரு புகாரை விசாரணை செய்வதை போன்றே ஜீடிசியல் மாஜிஸ்ரேட்டு சாட்சிகளை விசாரணை செய்திட வேண்டும். இந்த விசாரணையை மேற்கொள்ளும் ஜீடிசியல் மாஜிஸ்ரேட்டு அவரது அறிக்கையையும் அவர் கைப்பற்றிய ஆவணங்களின் நகலையும் மேற்படி குற்ற எண்கள். 649, 650 –ல் புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியிடம் ஒப்படைப்பார். நடைமுறையில் நீதிபதி அவரது விசாரணையை முடித்து போலீசார் மீது கொலை வழக்கினை பதிவு செய்திட வேண்டும் என்று ஆல்டரேசன் ரிப்போர்ட் கொடுத்த பிறகு தான் போலீசார் 302 குற்றபிரிவில் புலன் விசாரணை செய்வார்கள் என்ற தவறான கற்பிதம் உள்ளது. உண்மையில் புலன் விசாரணை அதிகாரி சாட்சியங்களை திரட்டுவதற்காக செய்யும் புலன் விசாரணைக்கும், ஜீடிசியல் மாஜிஸ்ரேட்டு மேற்படி பிரிவு 176 -1-ஏ-ன் கீழ் நடத்தும் விசாரணைக்கும் சம்மந்தம் இல்லை என்றும் அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 –ல் பதிவு செய்யப்படும் “மரணத்திற்கான காரணம் குறித்து சந்தேகம் எழுகின்ற” வழக்குகளில் எவ்வாறு புலன் விசாரணை செய்திட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் 17-09-2018 அன்றே மனோகரி என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்பாகவே ஜீடிசியல் மாஜிஸ்ரேட்டு மேற்படி பிரிவு 176 -1-ஏ-ன் கீழ் நடத்தும் விசாரணைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து கஸ்தூரி என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 19-12-2014 அன்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உண்மையில் ஜீடிசியல் மாஜிஸ்ரேட்டு நடத்தும் விசாரணை என்பது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக இறந்து போனவர்களின் உறவினர்களை விசாரணை செய்து தயார் செய்யும் அறிக்கையாகும். ஜெயராஜ் பென்னிக்ஸன் வழக்கில் 23-06-2020 அன்றே கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய குற்ற எண்கள். 649, 650 –ல் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் கூட 30-06-2020 அன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படிதான் சிபிசிஐடி போலீசார் வழக்கினை அவர்கள் கைவசம் எடுத்துக் கொண்டு விசாரணையை துவங்குகின்றனர்.
சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை கொலை வழக்கில் கண்ணகிக்கு பிறகு செல்வராணிக்கு

நீதி வழங்கிய மதுரை உயர்நீதிமன்றம்

36. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்சன் துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்ஸிஸ்ட் கம்ய10னிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. 23.06.2020 அன்று சாத்தான்குளத்திற்கு சென்ற மார்க்ஸிஸ்ட் கம்ய10னிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்.கே.எஸ்.அர்ச்சுனன் உள்ளிட்ட தோழர்கள் பிரேத பரிசோதனை நடந்த நாளிலும் அதனை தொடர்ந்து நீதிபதி நடத்திய விசாரணையிலும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார். 06.07.2020 அன்று கட்சியின் மாநில செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் சாத்தான்குளத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு காவல்நிலைய சித்ரவதை நிகழ்வுகளில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதி துணையாக இருப்பதனை தெரிவித்தார். மேலும் பல அரசியல் கட்சியினரும் சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர். தழிழக அரசு முதலில் இரண்டு உதவி ஆய்வாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தது. பிறகு காவல்ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது. காவலர்கள் வேறு காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக கூறியது.

37. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மனித உரிமை ஆர்வலர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்திய போது அமைச்சர் ஒருவர் மேற்படி இருவரும் ஜெயிலில் வைத்து இறந்ததினால் இது காவல்நிலைய படுகொலையே அல்ல என்று பேட்டி அளித்தார்.

Arrested in the case of sathankulam To Inspector I have nothing to ...

38. எந்த ஒரு குற்றமும் சமூகத்திற்கு எதிரான குற்றமே என்ற சட்டநியதிப்படி குற்றம் செய்தவர்களை கண்டிக்கும் பொறுப்பிலுள்ளவர்கள் எதுவுமே நடக்கவில்லை என்பது போல் அறிக்கைகளை வெளியிட்டு இழப்பீடு மட்டும் வழங்கி விட்டு அமைதி காத்தனர்.

39. 23-06-2020 அன்று ஜெயராஜின் மனைவி திருமதி.செல்வராணி தனது கணவர் மற்றும் மகனின் போஸ்மார்ட்டத்தை மருத்துவர்கள் குழு மூலம் செய்திட வேண்டும் என்றும் அதனை வீடியோ ஒளிப்படம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் ஓபி. மனு எண். 6651 – 2020 –ஐ தாக்கல் செய்கின்றார். இதனை அவசர மனுவாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மேற்படி உத்தரவினை வழங்கி விட்டு வழக்கின் தீவிர தன்மை கருதி மூத்த நிர்வாக நீதிபதி முன்பாக மேல்நடவடிக்கைக்கு கொண்டு செல்லுமாறு நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிடுகிறது.

40. இதன் தொடர்ச்சியாக 24-06-2020 அன்று சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை கொலை வழக்கை தானாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மதுரை உயர்நீதிமன்றம் (சுய மோட்டோ ரிட் மனு எண்.7042 -2020) இந்த வழக்கை கண்காணித்து வந்ததோடு 29-06-2020, 30-06-2020, 02-07-2020 ஆகிய தேதிகளில் போற்றத்தக்க உத்தரவுகளையும் தொடர்ச்சியாக பிறப்பித்து. வழக்கை கண்காணித்து வருகின்றது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுகளில் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியும் விசாரணையின் போக்கு குறித்து அறிக்கைகள் அனுப்பி வருவதை சுட்டிக் காண்பித்தது.

41. தமிழக அரசு 22-06-2020 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதுவும் இரண்டு பேர் கொலையுண்ட நிகழ்வில் உயர்மட்டத்திலிருக்கிற விசாரணை அதிகாரியை நியமித்து புலன் விசாரணையை துவக்கிடாமல் காலதாமத்தப்படுத்தி வந்தது. இதற்கிடையில் வழக்கை சிபிஐ –க்கு மாற்றுவதாக சொல்லி அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறப் போகின்றோம் என்று செய்தி வெளியிட்டது. அதற்கு அனுமதி தேவையில்லை என்று 29-06-2020 அன்று மதுரை உயர்நீதிமன்றமே சொல்லிட வேண்டியதாயிற்று. இதன் பிறகு வழக்கை சிபிஐ–க்கு மாற்றி 29-06-2020 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

42. மேலும் குற்றவியல் விசாரணை முறை சட்டப்படி சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அதுவும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 28.06.2020 அன்று சென்ற கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-ஐ அவர்களை அவரது சட்டப்ப10ர்வ பணியை செய்திடவிடாமல் குறுக்கீடு செய்து. சாட்சிய ஆதாரங்களை சேகரிக்க விடாமல் தடுத்து “உன்னால் ஒன்றும் புடுங்க முடியாதுடா” என்று அவமரியாதை செய்தும் போலீசார் செயல்பட்டனர். மேலும் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் ரேவதி என்பவர் மேற்படி நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்த பிறகு கையொப்பம் போட விடாமல் நிர்ப்பந்தித்து உள்ளனர். இது விபரம் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி மூலம் உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டவுடன் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார் சாத்தான்குளம் சரக டி.எஸ்.பி. சி.பிரதாபன், காவலர் எண்.1744 மகாராஜன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் 30-06-2020 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலைய ஆவணங்களை வருவாய் துறை அதிகாரி கைப்பற்றிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டவர்களுக்காக தமிழக அரசின் அரசு வழக்கறிஞரே ஆஜராகிட தமிழக அரசு அனுமதித்தது நியாயமானதல்ல. நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறி பிறகு உடனே வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர்.

43. பிரேத பரிசோதனை சான்றிதழ்கள் மூலமாக சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திட தகுந்த அடிப்படை முகாந்திரம் இருப்பதாக மதுரை நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதோடு சிபிஐ விசாரணையை மேற்கொள்வது பற்றி அரசு விரும்பினால் மறுபரிசீலனை செய்திடலாம் என்று கூறியுள்ளது. உண்மையில் 23.06.2020 அன்றே சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்திட வேண்டுமென்று ஜெயராஜின் மனைவி செல்வராணி புகார் மனு அளித்து விட்டார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயத்தில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன்பாக சிபிசிஐடி படி டி.எஸ்.பி அனில்குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளது. அவர் வழக்கு ஆவணங்களை பெற்று விசாரணையை உடனடியாக புலன் விசாரணையை துவக்கிட வேண்டுமென்றும் கோவில்பட்டி குற்றவியல் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ள சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை கு.வி.மு.ச. பிரிவு 164-ன் கீழ் பதிவு செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் காவலர் ரேவதி (ம) அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

44. உயர்நீதிமன்ற உத்தரவுகளின் தொடர்ச்சியாக 01-07-2020 அன்று உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 02-07-2020 அன்று காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 04.07.2020 அன்று காவல் மகாராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். 03-07-2020 அன்று காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலர் ரேவதி என்பவர் நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்துள்ளார். தூத்துக்குடி பேரூரணி மத்திய சிறையிலிருந்த மேற்படி போலீசார் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு எடுபிடிகலாக செயல்பட்ட ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர் தலைமறைவாக உள்ளனர்.

45. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸன் இறந்து விட்டதினால் அவர்கள் மீதான வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்திட வேண்டியதில்லை என்று தமிழ் இந்து பத்திரிக்கை வாயிலாக கூறியுள்ளார். இது உண்மை என்ற போதிலும் கூட குற்ற எண் 312-2020 வழக்கில் போலீசார் அவர்கள் செய்த சட்ட விரோத காரியத்தை நியாயப்படுத்துவதற்காக புனைந்துள்ள மேற்படி வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அது பொய் வழக்கு என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

போலீஸ் கம்ப்ளைண்ட் அத்தாராட்டி

46. உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வு பிரகாஷ் சிங் என்ற வழக்கில் 22-09-2006 அன்று காவல்துறை சீர்திருத்தம் சம்மந்தமாக பல்வேறு உத்தரவுகளை வழங்கி அவைகளை நடைமுறைப்படுத்திட உத்தரவிட்டது. அவைகளில்; முக்கியமான ஒரு உத்தரவு போலீஸ் கம்ப்ளைண்ட் அத்தாராட்டி என்ற அமைப்பினை மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலும் மாநில அளவிலான அமைப்பினை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலும், மாநில தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து அமைக்க வேண்டும் என்பதாகும். பதினான்கு வருடங்கள் கடந்த போதிலும் இந்த அமைப்பு அமைக்கப்படவில்லை. தற்போது இந்த போலீஸ் கம்ப்ளைண்ட் அத்தாரிட்டியை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி பிரகாஷ் சிங் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாகவும் மாற்றாகவும் தமிழ்நாடு போலீஸ் ரிபார்ம் ஆக்ட் 2013 என்ற ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நாளது தேதி வரை எந்த ஒரு விதிகளும் வகுக்கப்படவில்லை. நடைமுறையில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக அரசு பின்பற்ற தயாராக இருக்கவில்லை.

47. எனவே தமிழக அரசானது இனியும் சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலை வழக்கில் தாமதிக்காது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றது என்பதனை நிலைநிறுத்தும் முகமாக தொடர்ந்து புலன் விசாரணையை கண்காணித்து வரக்கூடிய மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க ஒரு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட எதிரிகள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும். அதே போல் வழக்கு விசாரணையை சட்டப்படி தொய்வின்றி நடத்தி அதிக பட்சமாக ஆறு மாத கால கட்டத்திற்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இ.சுப்புமுத்துராமலிங்கம்
வழக்கறிஞர்
தூத்துக்குடி