சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 11 | இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்? |

சாதி இருக்கும் வரை – 11: இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்?

இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்?

சாதி இருக்கும் வரை – 11

 – அ. குமரேசன்

உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வு அடிப்படையானது என்றால் இன்னும் எத்தனை காலத்திற்கு அந்த உணர்வு மேலோங்கிவிடாமல் சாதியை வைத்துத் தடுத்துக்கொண்டே இருக்க முடியும்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி இப்படியும் கேட்கலாம்: வெளிப்படையாகவும் நுட்பமாகவும் சாதி இவ்வளவு வலிமையாக இருக்கிற நிலையில், வர்க்க உணர்வு பெற்றவர்களாக உழைப்பாளிகள் ஒன்றுபடுவது சாத்தியமா?

“தொழிற்சங்கங்களால் கூட வர்க்க உணர்வுடன் தொழிலாளர்களைத் திரட்ட முடியவில்லை. அந்த உணர்வோடும் புரிதலோடும் இயங்குகிற முக்கியமான தொழிற்சங்கங்கள் இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அப்படிப்பட்ட சங்கங்களில் இணைந்திருப்பவர்கள் குறைவுதான். அப்படி இணைந்திருக்கிற எல்லோருமே வர்க்க உணர்வோடும், வர்க்க அரசியல் பற்றிய தெளிவோடும் இருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. குறிப்பிட்ட வட்டாரத்தில், குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தில் அத்தகைய ஒரு சங்கம்தான் வலுவாக இருக்கிறது என்றால், அதிலே இருப்பதுதான் பாதுகாப்பு, அப்போதுதான் உரிய பலன்களைப் பெற முடியும் என்ற எண்ணத்துடன் இணைந்தவர்களும் கணிசமாக இருப்பார்கள். அந்தச் சங்கங்களிலேயே இந்த நிலைமை இருக்கிறது என்றால் மற்ற சங்கங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.”

இணையவழிக் கலந்துரையாடல் ஒன்றில் இந்தக் கருத்தைப் பதிவு செய்தார் ஒரு பங்கேற்பாளர். “வர்க்க உணர்வூட்டி, வர்க்க ஞானம் வளர்த்து, சாதி–மத–இன அடையாள அரசியல் கடந்த வர்க்கமாக உழைப்பாளி மக்களைத் திரட்டுவதற்கு இடதுசாரி அமைப்புகள் முயல்கின்றன. ஆனால், சாதி அமைப்புகளும், வலதுசாரி, மதவாதக் கட்சிகளுமே கூட தொழிற்சங்கங்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் கணிசமாக அந்தச் சங்கங்களில் இருக்கிறார்கள்,” என்று இன்னொரு பங்கேற்பாளர் கூறினார்.

“சாதிச் சங்கங்களாக இல்லாவிட்டாலும், பொதுவான மற்ற சங்கங்களிலும் கூட, நிர்வாகத்திற்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான பிரச்சினைகளைப் பற்றியும், கோரிக்கைகள் பற்றியும்தான் பேசுகிறார்கள். வர்க்க உணர்வு பற்றியெல்லாம் பேசுவதில்லை,” என்ற கருத்தும் வந்தது.

உண்மையான போராட்டம்

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 11 | இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்? | Proletariat

சுற்றிலும் கவனிப்பதிலிருந்து வந்த இந்தக் கருத்துகளின் உண்மையை மறுப்பதற்கில்லை. சொல்லப்போனால், வர்க்க அரசியலை அடித்தளமாகக் கொண்ட கட்சி இயக்கங்களுக்கும் வர்க்கமாக அணி திரட்டப் புறப்பட்டிருக்கும் தொழிலாளர் சங்கங்களுக்கும், இந்த நிலைமைகள் மிகப் பெரிய சவால்களாக இருக்கின்றன. ஒரு நிர்வாகத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சினை என்று வருகிறபோது – அது ஊதியம், மருத்துவ விடுப்பு, கூடுதல் பணிநேரம், பழிவாங்கல் நடவடிக்கை உள்ளிட்ட எதுவாகவும் இருக்கலாம் – அந்தக் குறிப்பிட்ட பிரச்சினைக்காக மற்ற சங்கங்களோடு இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அதே வேளையில் அந்தப் பிரச்சினைகளுக்கு அப்பால், ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் சமத்துவ மாற்றத்திற்குமான எழுச்சிக்காக உழைப்பாளிகளை ஒன்றுபடுத்தும் மிகப்பெரும் கடமையையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. அந்த முன்னேற்றத்திலும் மாற்றத்திலும் தனது பங்கு என்ன என்று ஒவ்வொருவரும் தனக்குள் தேட வைத்துப் பங்கேற்கச் செய்ய வேண்டியிருக்கிறது.

மேலும் எளிமையாகச் சொல்வதென்றால் – உழைப்பாளி மக்கள் ஒன்றுபட்டுத் திரண்டுவிட்டால் புரட்சி எளிதாக நடந்துவிடும். ஆனால் மக்கள் ஒன்றுபட்டுத் திரளச் செய்வதுதான் உண்மையான போராட்டம். அதிலும், ஒவ்வொருவரையும் தனது சொந்தப் பாதுகாப்புக்காகவும், சொந்தக் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஓட வைத்துக்கொண்டிருக்கிற உலகளாவிய கார்ப்பரேட் சுரண்டல் யுகத்தில் அந்தப் போராட்டம் பல மடங்கு கடினமானதாகிறது. அந்தப் போராட்டத்தைக் கடினமானதாக்குகிற காரணிகளில் ஒன்றுதான் சாதி. இந்தியச் சூழலில், புரட்சிக்கான பாதையில் மிகப்பெரிய பாறாங்கல்லாகக் கிடப்பது சாதி.

இடுக்கில் நுழைந்தாவது

அந்தப் பாறாங்கல்லைக் கொஞ்சமாவது நகர்த்த முடிந்தால், அந்த இடுக்கிற்குள் நுழைந்தாவது பாதையில் சிறிது தொலைவாவது முன்னேற முடியும். இதற்குச் சான்றாக இதோ ஒரு தமிழகச் செய்தி:

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 11 | இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்? | Proletariat

2023ஆம் ஆண்டில் வீரணம்பட்டி கிராமத்தின் (கரூர் மாவட்டம்) அருள்மிகு காளியம்மன் கோவிலுக்குள் தலித் இளைஞர் ஒருவர் நுழைந்தார். அந்தக் காணொளிப் பதிவு பகிரப்பட்டதைத் தொடர்ந்து அது பிரச்சினையாக்கப்பட்டது. இரு பிரிவு மக்களிடையே மோதல் மூண்டது. அரசியலாகவும் மாவட்ட நிர்வாகத்திலும் நெருக்கடி உருவானது. கோவில் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுடனும் பேச்சு நடத்தப்பட்டு, சமரசம் ஏற்பட்டது. 15 நாட்களில் கோவில் மறுபடியும் திறக்கப்பட்டு அனைவரின் வழிபாட்டு உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், ஊருக்குக் குடிநீர்க் குழாய்கள், புதிய சாலைகள், தெருவிளக்குகள் கிடைத்தன. இந்த இரண்டு ஆண்டுகளில் இரு தரப்பு மக்களும் ஒரே மளிகைக் கடைகளில் பொருள்கள் வாங்குகின்றனர், ஒரே தேநீர்க் கடைகளில் பேசிக்கொள்கின்றனர், பிள்ளைகள் ஒரே பள்ளிக்குச் செல்கின்றனர் என்ற வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த முன்னுதாரணச் செயல்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ விருது வழங்கிப் பாராட்டப்பட்டார்.

இப்போதும் கூட, இரு பிரிவினரும் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் வந்து வழிபடுவது நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், காலப்போக்கில் அந்த மாற்றமும் நிகழும் என்ற நம்பிக்கையை கிராமத்தைச் சேர்ந்த சமூக அக்கறையாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அது நடந்தால்தான் தன்னுடைய அருள்பாலிக்கும் ஆற்றல் நிலைக்கும் என்று காளியம்மனும் காத்திருக்கிறாள்.

தேசத்தின் ஒட்டுமொத்த சாதிப் பாறாங்கல் தகர்க்கப்படுவதில் இந்த அனுபவம் ஒரு துணுக்குதான். ஆனால், பாறாங்கல் அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே முன்னேற்றம் நிகழும், நல்லிணக்கம் திகழும் என்ற பாறை போன்ற உண்மைக்கான உரைகல்லாக வீரணம்பட்டி இருக்கிறதல்லவா? இதே போன்று நாடு முழுவதும் கவ்வியிருக்கிற சாதியத்தை அரசும் ஆட்சி நிர்வாக அலுவலர்களும் அரசியல் இயக்கங்களும் கையாள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது அல்லவா?

ஏன் உழைப்பாளிகள்?

கோவிலுக்குள் நுழைந்தவர், அதைப் பிரச்சினையாக்கியவர் இருவருமே உழைப்பாளிகள்தான். பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப் பாகுபாடு இரண்டையும் பழைய வரலாறாக மாற்றக்கூடிய வல்லமை உழைப்பாளி வர்க்கத்திற்குத்தான் இருக்கிறது. சாதிய வலையை அறுத்தெறியும் பொறுப்பு சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இருக்கிறபோது, அந்த வல்லமை உழைப்பாளிடம்தான் இருக்கிறது என்று சொல்வது ஏன்?

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 11 | இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்? | Proletariat

இதற்கு விடை தேடுவதற்கு முன்பாக, உழைப்பாளி என்றால் யார் என்று சுருக்கமாகப் பார்ப்போம். தொழிற்சாலைகளில் எந்திரங்களின் முன்னால் நின்றுகொண்டு இயந்திரங்களை இயக்குகிறவர்கள் மட்டுமே உழைப்பாளிகள் அல்ல. போக்குவரத்து நிறுவனங்களில் வாகனங்களைச் செலுத்துகிறவர்கள், மின்சார உற்பத்தி உலைகளைக் கட்டுப்படுத்துகிறவர்கள், அலுவலகங்களில் நிறுவனக் கணக்கு வழக்குகளைப் பதிவேற்றிப் பின்பற்றுகிறவர்கள், வணிகக் கூடங்களில் சரக்குகளைக் கையாளுகிறவர்கள், சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும் மற்றவர்களின் வயல்களில் இறங்கித் தம் பிள்ளைகளை வளர்ப்பது போலப் பயிர்களைப் பேணுகிறவர்கள் – இன்னும் நிறையச் சொல்லலாம் – இவர்கள் எல்லோருமே உழைப்பாளிகள்தான். தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் கண்ணாடி மாளிகைகளுக்குள் கணினிகளில் உலகத் தொடர்புகளைப் பராமரிக்கிறவர்களும் உழைப்பாளிகள்தான்.

பட்டறைகள் அமைத்து, தொழிலாளிகளோடு தொழிலாளியாக டீ குடித்துக்கொண்டே தாங்களும் வேலை செய்கிறவர்கள் உழைப்பாளிகள்தான். அவர்களுக்கு டீ கொண்டுவருகிறவர், தேநீர்க்கடையில் டீ போடுகிறவர்கள், உணவகங்களில் உண்டிகளைத் தயாரிக்கிறவர்கள், அவற்றை மேசைகளுக்குக் கொண்டுவருகிறவர்கள் உள்ளிட்டோர் உதிரி உழைப்பாளிகளாகச் சேர்கிறார்கள். ஒரு நிறுவனம், அலுவலகம் என்றில்லாமல் எண்ணற்றோர் தங்களுடைய எழுத்தாற்றலையோ கலைத்திறனையோ பயன்படுத்தி மக்களுக்கு மனமகிச்சியையும் மாற்றுச் சிந்தனைகளையும் கொண்டு செல்கிறார்கள். இப்படி எல்லா வகைகளிலும் உழைக்கிறவர்களைக் குறிப்பதற்காகத் தமிழில் எப்போதோ யாரோ பின்வரும் சரியான சொற்களைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார்: “கரத்தாலும் கருத்தாலும் உழைப்போர்.”

பூமியை இப்படிப்பட்ட உழைப்பாளிகள் பொன்னுலகிற்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள், இந்த பூமியையே பொன்னுலகாக மாற்றியமைப்பார்கள். அப்படி மாற்றுவதற்கான வல்லமை மட்டுமல்ல, மாற்றியாக வேண்டிய கட்டாயத் தேவையும் அவர்களுக்குத்தான் இருக்கிறது.

சுரண்டலும் எழுச்சியும்

தொழிலாளி வர்க்கம் புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து பொதுவுடைமைச் சமுதாயத்தை நிறுவுவதற்கு விதிக்கப்பட்டதாக இருக்கிறது. உலகளாவிய வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் உலகத்தின் வர்க்க வேறுபாடுகளை ஒழிக்கும் திறனைப் பெற்றிருக்கிறது. உலக சமுதாயம் உயிர்ப்போடு இயங்குவதற்கு அடிப்படையானது பொருள் உற்பத்தி. வேளாண் விளைச்சல், ஆலைத் தயாரிப்பு, அலுவல் ஆவணம் ஆகிய எல்லாமே பொருள்கள்தான்.

அவற்றின் உற்பத்திக்கான எந்த வழிகளையும் சொந்தமாக வைத்திருக்காமல், ஆனால் அவற்றை உற்பத்தி செய்வதற்காக, அப்போதுதான் உயிர்வாழ முடியும் என்ற நிலையில், தமது உழைப்பு சக்தியை விற்று, உற்பத்தி செய்துகொடுத்து அதற்கான ஊதியத்தைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் உழைப்பாளிகள்.எவ்வளவு முதலீடு செய்தாலும், எத்தனை நவீன இயந்திரங்களை நிறுவியிருந்தாலும் முதலை ஆளுவோராகிய முதலாளிகள், பொருள்கள் உற்பத்தியாகி வருவதற்கு உழைப்பாளிகளைத்தான் சார்ந்திருக்கிறார்கள்.

சுரண்டலையும் நெருக்கடிகளையும தன் உள்ளார்ந்த இயல்பாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவம் தவிர்க்கவியலாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் வறுமை அதிகரிப்பதற்கும் அவர்கள் அமைப்பாகத் திரள்வதற்கும் வழிவகுக்கும். அப்படித் திரள்கிற உழைப்பாளிகள் முதலாளித்துவம் உள்ளிட்ட, இதுவரை இருந்து வருகிற முந்தைய சுரண்டல் அமைப்புகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவார்கள், சமத்துவம் தழைத்தோங்கிய புதிய சமுதாயத்தை உருவாக்குவார்கள். அந்த எழுச்சியின் பேரொளியில் சாதி மதம் இனம் பாலினம் உள்ளிட்ட பாகுபாட்டு அடையாள அரசியல் இருள் முற்றாக விலகும். முன்னேற்றங்களை முடக்கும் மூடத்தனங்கள் நொறுங்கும்.

கம்பன் கவிதையின்படி

கம்பன் வழங்கிய, கம்பராமாயணம் என்றே புகழ்பெற்ற இலக்கியத்தில் ராமனின் ஆட்சி எப்படி இருந்தது என்று சொல்கிற பாடல் வரிகள் இவ்வாறு அமைந்திருக்கும்

“கையறு நிலைமை இல்லை, கவல்கின்றார் இல்லை,
மெய்யுறு பிணிகள் இல்லை, வேறுபடும் பகையும் இல்லை,
பொய்யுரை இல்லை, எங்கும் புன்செயல் இல்லை, இல்லை,
ஐயுறவு இல்லை, கண்டீர், அறம் நிலை நின்றது அன்றே.”

–அதாவது, “வறுமை இல்லாததால் கவலைப்படுவோர் இல்லை, உடலை நோகடிக்கும் நோய்கள் இல்லை, இல்லாமையால் வேறுபடும் பகைமை இல்லை, பொய் சொல்லும் நிலைமை இல்லை, தீய செயல்களும் இல்லை, சந்தேகப் புத்தி இல்லை, அறமே நிலைத்திருக்கிறது,” என்கிறான் அந்தக் கவிஞன். ராமனின் ஆட்சி பற்றிய கற்பனையைக் கம்பன் இப்படிக் கவிதையாய் வடித்திருந்தாலும், ஊரார் பேச்சைக் கேட்டு சீதையை ராமன் நெருப்பில் இறங்கச் சொன்னது உள்ளிட்ட கற்பனைகள் பற்றிய விமர்சனங்களும் இருக்கின்றன. ஆனால், பாட்டாளி வர்க்கம் நிகழ்த்தும் புரட்சியில் இந்த மாற்றங்கள் உண்மையாகவே நடப்புக்கு வரும்.

இது ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில், ஜாதகம் கணித்து ஜோதிடம் கூறுவது அல்ல. அறிவியலின் அடிப்படையில் இத்தனை பங்கு ஹைடிரஜன், இத்தனை பங்கு ஆக்ஸிஜன் இணைந்தால் நீர் உருவாகும், அந்த நீர் இத்தனை டிகிரி வரையில் கொதித்தால் ஆவியாகும் என்ற கணக்கு இது. பூமியின் சுழற்சியைக் கண்டுபிடித்த ஆர்ய பட்டர், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று விளக்கிய கோப்பர் நிகஸ், கதிரியக்க ரேடியத்தைக் கண்டறிந்து சொன்ன மேரி கியூரி, புவியின் ஈர்ப்புவிசையை அறிவித்த நியூட்டன், சார்பியல் கோட்பாட்டை வழங்கிய ஐன்ஸ்டீன் –இவர்களைப் போல, உழைப்பாளி வர்க்கத்தின் உள்ளார்ந்த இயக்க ஆற்றலைக் கண்டுபிடித்த இரண்டு அறிவியலாளர்கள்தான் கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 11 | இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்? | Proletariat

இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில்தான் அவர்கள் தங்களுடைய, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புத்தகத்தின் முடிவில், “பொதுவுடைமைப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, சங்கிலிகளைத் தவிர, அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது,” என்று அறிவித்தனர்.. “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுவீர்,” என்று அறைகூவல் விடுத்தனர்.

ஒடுக்கப்படுவதை உணரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் உணர்ச்சியூட்டி எழ வைக்கும் அறைகூவல் இது. ஆனால் நடைமுறையில் பாட்டாளிகளிடத்தில் உண்மையிலேயே இழப்பதற்கு ஏதுமில்லையா? பணம் இருக்கிறது, வீடு இருக்கிறது, வாகனம் இருக்கிறது, நகை இருக்கிறது. இவ்வளவு ஏன், சாதிப் பெருமை இருக்கிறது. சாதிச் சங்கத்தில் பதவி இருக்கிறது.

அப்படியானால் இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறொன்றுமில்லை என்றால் என்ன பொருள்? அத்துடன், வர்க்கப் போராட்டத்தின் வெற்றியில்தான் சாதிப் பாகுபாடுகள் இறுதியாக ஒழிந்துபோகும் என்றால், இப்போதே சாதிய ஒழிப்புக்காகப் போராடுவதில் பொருளிருக்கிறதா?

முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai)  – 10 | யுத்தக் களங்களுக்குக் கொண்டுபோகும்; ரத்தச் சகதிகளில் மூழ்கடிக்கும்… – அ. குமரேசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *