சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 12 | சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் (Caste, Class & General Struggle) | தொழிலாளர்கள் | தொழிலாளி

சாதி இருக்கும் வரை – 12: சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம்

சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம்

சாதி இருக்கும் வரை – 12

 – அ. குமரேசன்

“சாதியத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஆற்றல் படைத்தவர்களான பாட்டாளிகளிடம் அவர்களைக் கட்டியிருக்கும் சங்கிலிகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை என்றால் என்ன பொருள்? இன்று தொழிலாளர்கள் பலரிடம் சொந்த வீடு இருக்கிறது. கார், பைக், ஃபிரிட்ஜ், ஏ.சி., வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன், வங்கிக் கணக்கு… என எல்லா நவீன வசதிகளும் இருக்கின்றன.

அந்த வசதிகள் இல்லாதவர்களும் அவற்றைச் சேர்ப்பதற்காகப் பாடுபடுகிறார்கள். இந்த நிலையில், ‘தொழிலாளர்கள் இழப்பதற்கு ஏதுமில்லை, சங்கிலிகளைத் தவிர’ என்று கூறுவது பொருத்தமற்றது,” என்று சிலர் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூலில் அப்படிச் சொல்லியிருப்பது காலங்கடந்த சிந்தனையாகிவிட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். சுற்றிவளைத்து அவர்கள் முன்வைப்பது – முதலாளித்துவம்தான் சமுதாய வளர்ச்சியின் நிறைவான கட்டம், மக்களுக்கு இந்தச் சமுதாய அமைப்பிலேயே எல்லா முன்னேற்றங்களும் வாய்த்துவிடும் என்ற கருத்தைத்தான்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 12 | சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் (Caste, Class & General Struggle)  | தொழிலாளர்கள் | தொழிலாளி

இந்த வாதத்தின் ஒரு கிளையாக, சாதியத்தை ஒழிப்பதென்பதும் வெறும் கனவுதான், அது ஓர் இயற்கையான சமூக ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்ற கருத்தும் பரப்பப்படுகிறது. சாதிய அமைப்புகளின் தலைவர்கள் அவர்களது கூட்டங்களிலும், சாதிய ஆதரவுச் சிந்தனையாளர்கள் தங்களது எழுத்துகளிலும் இந்தக் கருத்தைப் பதிய வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உலகத் தொழிலாளர்கள் இழப்பதற்கு அவர்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளைத் தவிர வேறொன்றுமில்லை என்ற முழக்கத்தை வரலாறு சார்ந்து உள்வாங்கிக்கொள்ள வேண்டும். மார்க்சியக் கோட்பாட்டின் மையமான கூறுகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் பொருத்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

பொருளுற்பத்தியின் அடிப்படையில்தான் உலக சமுதாயம் இயங்குகிறது. உற்பத்தி என நேரடியாக எதுவும் நடைபெறாத வங்கிகள், பதிவகங்கள் போன்ற ஏராளமான சேவைத்துறைகளும் கூட, உற்றுக் கவனித்தால், பொருள் உற்பத்தியைச் சார்ந்திருப்பது தெளிவாகும்.

உணவே மையம்

இதை எளிமையாக விளக்குவதென்றால், ஓரு வீட்டை எடுத்துக்கொள்வோம். அதில் குடியிருப்போரின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப முதலில் குறிப்பிட்ட வசதிகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். தொலைக்காட்சி இருக்கும், பெரியவர்கள் அதில் தங்களுக்குத் தேவையான தொடர்களையோ விளையாட்டுப் போட்டிகளையோ (இன்றைய நிலவரப்படி சிஎஸ்கே அணி களமிறங்குகிற ஐபிஎல் போட்டிகள்) பார்ப்பதற்கு ‘ரிமோட்‘ இருக்கும். அதே தொலைக்காட்சித் திரையில், குழந்தைகள் விளையாடுவதற்கான செயலிகளும் இருக்கும், அதற்கான தனி ‘ரிமோட்‘ கருவிகளும் இருக்கும்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 12 | சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் (Caste, Class & General Struggle)  | தொழிலாளர்கள் | தொழிலாளி

என்னென்ன வசதிகள், எத்தனை கருவிகள் இருந்தாலும் அடிப்படையில் அந்தக் குடும்பம் உயிர் வாழ்வதற்கு உணவைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உணவுக்காக உழைத்தாக வேண்டும். உண்டபின் வாழ்க்கையை சுகமாக்கிக்கொள்வதற்கும், தொடர்ந்து உழைப்பதற்கான உற்சாகத்தை வரவழைத்துக்கொள்வதற்கும்தான் அத்தனை வசதிகளும். ஒரு பேச்சுக்காக, ஒருவேளை உழைப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, உணவுக்கான பாதை அடைக்கப்பட்டுவிடுமானால், வீட்டில் உள்ள வசதிப் பொருள்கள் ஒவ்வொன்றாக அடகுக்குப் போகும் அல்லது விற்கப்படும்.

அதே போன்றுதான் ஒட்டுமொத்த சமுதாயமும் பொருளுற்பத்தியைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நிலவுடைமைச் சமுதாயம் உருவான காலந்தொட்டு, இன்றைய முதலுடைமைச் சமுதாயம் வரையில் இதுதான் விதி. அந்த உற்பத்திக்கான வழிகள் அல்லது உற்பத்திக் கருவிகள் யாருடைய உடைமையாக இருக்கின்றன என்பதன் அடிப்படையிலேயே உடைமையாளர் – உழைப்பாளர் என்ற வர்க்கப் பிரிவினை ஏற்பட்டது என்று ஏற்கெனவே பார்த்தோம். வேளாண் விளைச்சலை அடிப்படையாகக் கொண்ட சமுதாயமாக மட்டும் இருந்தபோது நிலம்தான் உற்பத்தி வழிமுறை அல்லது உற்பத்திக் கருவி. அதைக் கைப்பற்றியவர் நிலவுடைமையாளர். அவருக்காக நிலத்தில் இறங்கி உழைத்தவர் விவசாயத் தொழிலாளி.

இரும்பைக் காய்ச்சி உருக்கி, இயந்திரங்கள் வகுத்து நுகர்பொருள்களைத் தயாரித்திடும் உற்பத்தி முறை உருவானபோது, இயந்திரங்கள் உற்பத்திக் கருவிகளாகின. முதல் போட்டு அந்தக் கருவிகளை வாங்கி வைத்தவர் முதலுடைமையாளர் அல்லது முதலாளி. அவருக்காக ஆலையில் இயந்திரங்களை இயக்கியவர் தொழிலாளி.

முரண்களே அடிப்படை

உடைமை வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையேயான முரண்கள்தான் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படை. உழைப்பாளிகள் தங்களுடைய உழைப்பிலிருந்தே அந்நியப்படுத்தப்படுகிறார்கள், அதாவது உழைப்பின் விளைச்சல்களாகிய உற்பத்திப் பொருள்களிலிருந்தே அந்நியப்படுத்தப்படுகிறார்கள். குண்டூசி தயாரிக்கிற தொழிற்சாலையாக இருந்தாலும், வேலை முடிந்து கிளம்பிடும் தொழிலாளியின் ஆடைகளைத் தடவிப் பார்த்து குண்டூசி எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகுதானே வெளியே விடுவார்கள்? இந்த அந்நியப்படுத்தல் அந்தப் பொருளோடு நிற்பதில்லை. சக தொழிலாளர்களிடமிருந்தும் விலக்கிவைக்கும். தொழிலாளர்களின் சொந்த மனித ஆற்றலையுமே கூட அவர்களிடமிருந்து பிரித்து வைக்கும்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 12 | சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் (Caste, Class & General Struggle)  | தொழிலாளர்கள் | தொழிலாளி

தங்களின் உழைப்புக்கு வழங்கப்படும் ஊதியத்திலிருந்து பல்வேறு பொருள்களைத் தொழிலாளர்கள் வாங்கிச் சொந்தமாக்கிக்கொள்ளலாம். அந்தப் பொருள்களும் வேறு ஆலைகளில் வேறு உழைப்பாளிகளால் உற்பத்தி செய்யப்பட்டவைதான். இப்படி எத்தனை பொருள்களை வாங்கிச் சொந்தமாக்கிக்கொண்டாலும், உற்பத்தி நடக்குமிடத்தில் அவர்கள் அந்நியப்பட்டது அந்நியப்பட்டதேதான்.

1980களின் நடுக்கட்டத்தில், மதுரை நகரில், நூற்பாலைகளுக்கான இயந்திர உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சிறிய தொழிற்கூடம் ஒன்றில் பணியாற்றிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பக்கத்துப் பட்டறையில் ஒரு தொழிலாளி சொந்தமாக ஒரு ஸ்கூட்டர் வாங்கினார். அதற்காக எங்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கினார். இனிப்பைப் பெற்றுச் சுவைத்துக்கொண்டே அந்தப் பட்டறையின் உரிமையாளர், “ஏம்ப்பா, நானே சுவேகாதான் (டிவிஎஸ் 50 மேலோங்குவதற்கு முன் புழங்கிய மோபெட் வண்டி) வச்சிருக்கேன், நீ ஸ்கூட்டர் வாங்கிட்டியே,” என்று பாராட்டுதலாகவே கூறினார். என்னதான் மோப்பெட்டை விட விலை உயர்ந்த ஸ்கூட்டரின் சொந்தக்காரராகிவிட்டாலும், பட்டறையிலிருந்து அந்தத் தொழிலாளி அந்நியப்பட்டவர்தானே? அவரை எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றுகிற அதிகாரம் இருப்பது அந்தச் சிறு முதலாளியிடம்தானே?

இதை அப்படியே பெரிய நிறுவனங்கள், ஏகபோக நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள்,பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று பொருத்திப் பார்க்கலாம். அந்த நிறுவனங்களின் பணியாளர்கள், எத்தகைய வாழ்க்கை வசதிகளோடு இருந்தாலும், எந்த நேரத்திலும் தங்களுக்கு “வெளியே போ” என்ற ஆணை வரும் என்ற எதிர்பார்ப்புடனேயே இருக்கிறார்கள். நிரந்தரப் பணியாளர்கள் என்ற நடைமுறையையே ஒழித்துக்கட்டுவதற்கான சூழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. சீர்திருத்தம் என்ற போர்வையில் பல நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் அந்தச் சூழ்ச்சிக்கு உடந்தையாக இருக்கின்றன. இவர்களன்றி, எண்ணற்ற தொழிலாளர்கள் ஊதியத்திற்கும் வாழ்க்கைத் தேவைகளுக்கும் பாலம் அமைக்க முடியாதவர்களாக அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

உள்ளார்ந்த சுரண்டல்

முதலாளியம் தன்னை நிலையாக வைத்திருக்க சுரண்டல் உத்திகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். அது அந்த வர்க்கத்தின் தேவை என்றும் சொல்லலாம். தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து உறிஞ்சும் மிகு மதிப்புதான் (உபரி மதிப்பு) சுரண்டல் வர்க்கத்தின் லாபம் – இது மார்க்ஸ் கண்டறிந்த அறிவியல் உண்மை. ஆக, சுரண்டல் என்பது மூலதனத்துவ அமைப்பிலேயே உள்ளார்ந்ததாக, பிரிக்க முடியாததாக இருக்கிறது.

இப்படிப்பட்ட உற்பத்தி உறவின் விளைவாக, தாக்குப் பிடித்து வாழ வேண்டிய கட்டாயங்கள் ஏற்பட்டு, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை வளர்க்கப்படுகிறது. சுயநலத்துடன் வாழவும், பொதுப் பிரச்சனைகளில் ஒதுங்கிக்கொள்ளவும் கற்பிக்கப்படுகிறது. வறுமை, வேலையின்மை, விருப்பப்படி கல்வி பெற இயலாமை, கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காத ஏக்கம், ஊழல் நடைமுறைகளோடு ஒத்துப்போவது, குற்றங்கள் செய்யத் துணிவது என்று அந்த விளைவுகளின் தனிப்பட்ட தாக்கங்கள் ஒவ்வொருவரையும் உருமாற்றுகிறது.

ஒட்டுமொத்த அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டவும், தட்டிக்கேட்கவும் முன்வருகிறவர்களை மயக்கத்தில் ஆழ்த்துகிற சாதி, மதப் போதைகள் ஏற்றப்படும். இப்படிப்பட்ட அவலங்களில் இருப்பவர்களுக்காகப் போராடாமல் நுற்றாண்டுகளுக்கு முன் செத்துபபோய் அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளைத் தோண்டுவதற்காகக் கலவரங்களில் இறக்கிவிடும். இதற்கெல்லாம் மசியாமல் எழுந்து நிற்பவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள், அவதூறுகளுக்கு ஆளாவார்கள், வன்முறைத் தாக்குதலுக்கும் இலக்காவார்கள். ஆயினும் அதற்காகப் பின்வாங்காமல் உழைக்கும் வர்க்கக் கடமை உணர்வோடு திரளச் செய்வதற்கான பேரியக்கங்களும் நடந்துகொண்டே இருக்கும்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 12 | சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் (Caste, Class & General Struggle)  | தொழிலாளர்கள் | தொழிலாளி

முந்தைய தலைமுறைகளை விடவும் கூடுதல் வாய்ப்புகளுடன் இருப்பதாக உணரக்கூடிய உழைப்பாளிகள், உடைமை வர்க்கங்களிடம் குவிந்திருக்கும் வளங்களுக்கும் தங்களிடம் விட்டுவைக்கப்பட்டிருக்கிற வசதிகளுக்கும் இடையே மிகப்பெரிய பள்ளத்தாக்கு இருப்பதையும் காண்பார்கள். அந்த இடைவெளியை அப்படியே பராமரிப்பதற்காக அந்தரத்தில் ஆடும் நிலையற்ற வேலைகள், ஆசைகளை நிறைவேற்ற முடியாத அடிமட்ட ஊதியங்கள், வாழ்க்கையை அனுபவிக்க இயலாத பணி நேரங்கள் உள்ளிட்டவை சூழ்ந்திருக்கும்.

தனக்கும் தன்னுடைய சகாக்கள் அனைவருக்கும் பெருந்தடையாக இருக்கிற அமைப்பைத் தூக்கி எறிவது மட்டுமே முழு விடுதலையை உறுதிப்படுத்தும் என்ற வரலாற்றுக் கட்டாயம் இயல்பாகவே தொழிலாளி வர்க்கத்திற்குத்தான் இருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் விடுதலையும் அந்தக் கடமை நிறைவேற்றப்படுவதைச் சார்ந்திருக்கிறது. அது, வகைவகையாய் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வசப்படுத்திக்கொள்வதாக நின்றுவிடாது, உற்பத்திக் கருவிகளையை வசப்படுத்திக்கொள்வதாக மாறும்.

அதற்காகத் திரள்கிற உழைக்கும் வர்க்கம், தலைமுறை தலைமுறையாகத் தடைக்கற்களாக இருந்து வரும் சமூகச் சூழல்கள், நடைமுறைகள் அனைத்தையும் உதறித் தள்ளும். கடந்த காலச் சமுதாய அமைப்பின் தொடர்ச்சியாக இப்போதும் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிற சாதி வேற்றுமை, மதப் பகைமை, இன மோதல், பாலினப் பாகுபாடு உள்ளிட்ட அனைத்து வகையான பிற்போக்குத் தனங்களையும் நொறுக்கித் தள்ளும். இதைச் செய்தாக வேண்டிய வர்க்கக் கடமை, இதைச் செய்து முடிக்கிற வர்க்க வலிமை இரண்டும் உழைப்பாளர் படைக்குத்தான் இருக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகளின் வேலை

ஆனால், தானாய் எதுவும் மாறும் என்பது மாறாத பழைய பொய் அல்லவா? ஆகவே, உழைப்பாளி மக்களின் தோள்களில் இந்த வரலாற்றுக் கடமை இருப்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அதைச் சொல்கிற பொறுப்பைத்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக நிலைமைகளுக்கு ஏற்ப அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தேர்தல் உள்ளிட்ட உடனடி அரசியல் தேவைகளையும் சந்தித்துக்கொண்டு, உழைப்பாளிகளிடையே, வர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்துகிற இலக்குப் பணிகளையும் மேற்கொள்கின்றன. இங்கே தொழிலாளர்களிடையே சாதி மறுப்புச் சிந்தனைகளையும் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டு செல்கிறார்கள், அது தற்செயலானதல்ல.

பாலின சமத்துவம், மனித உரிமை, சமூக நீதி, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான தெளிவு உள்ளிட்ட கருத்தாக்கங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். ஏற்கெனவே பார்த்தது போல, மக்களின் பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியல் அடையாளப் போராட்டங்களில் முன்நிற்கும் செங்கொடி, பொது இயக்கத்திலிருந்து மக்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தும் அடையாள அரசியலுக்கு எதிரான கருத்தியல் போராட்டக் களத்திலும் உயரப் பறக்கிறது.

“வர்க்கப் போராட்டத்தின் வெற்றியில்தான் சாதிப் பாகுபாடுகள் இறுதியாக ஒழிந்துபோகும் என்றால், இப்போதே சாதிய ஒழிப்புக்காகப் போராடுவதில் பொருளிருக்கிறதா,” என்ற கேள்விக்கு வருவோம்.

கல்வி உரிமை, மருத்துவ வாய்ப்பு, வரிக் கொடுமை, விலைவாசி உயர்வு, குடிமனைப் பட்டா உள்ளிட்ட எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான போராட்ட இயக்கங்களில் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பதற்கு சாதிப் பெருமைகளும் பாகுபாடுகளும் தடையாக இருப்பது பற்றி முன்னரே பேசியிருக்கிறோம். ஆகவே, அந்தத் தடைகளை முடிந்த அளவுக்கு அப்புறப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

சொல்லப்போனால், அந்தத் தேவை பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்காகவும் சமூகநீதிக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும், கருத்துச் சுதந்திரத்திற்காகவும், இவை போன்ற இதர நோக்கங்களுக்காகவும் களம் காண்கிற இயக்கங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இறுதி லட்சியத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் சாதிப் பாகுபாடுகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான போராட்ட மைல்கற்களையும் கடந்தாக வேண்டியிருக்கிறது.

முற்றிலுமாக சாதி அமைப்பை ஒழிப்பது ஒரு தொலைநோக்கு, அதற்கு முன்னதாக சாதி வேலிகளைத் தாண்டிய ஒற்றுமையை வளர்க்க வேண்டியுள்ளது. சாதி நெருப்பின் வெப்பத்தைத் தணிக்க வேண்டியுள்ளது. சாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவுகட்ட வேண்டியுள்ளது. சாதிக் கலப்பு மண உறவுகளுக்குத் துணை நிற்க வேண்டியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கொள்கையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

தீண்டாமை நஞ்சின் உயிர் பறிக்கும் வீரியத்தை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை உள்ளிட்டவற்றுக்குத் தோள்கொடுக்க வேண்டியுள்ளது. “அவர்கள் என்ன ஆட்கள்” என்று கேட்கும் அநாகரிகம் குறித்த வெட்க உணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 12 | சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் (Caste, Class & General Struggle)  | தொழிலாளர்கள் | தொழிலாளி

இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தொழிலாளர் இயக்க முன்னோடியுமான பி.டி. ரணதிவே எழுதியுள்ள கட்டுரையை (‘சாதி, வர்க்கம், சொத்து உறவுகள்’, ‘எகனாமிக் அன் பொலிடிகல் வீக்லி’ 1979, பிப்ரவரி இதழ்) இவ்வாறு முடித்திருக்கிறார்:
“புதிய சூழ்நிலை, மற்ற உழைப்பாளிகளிடமிருந்து தனிமைப்பட்டு சாதிச் சண்டைகளை நடத்தும் பாரம்பரியத்தைக் கைவிடக் கோருகிறது. தொடக்க ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் இயக்கத்தை சாதிக்கு எதிராக சாதி என்ற அடிப்படையில் நடத்துவது தவிர்க்கவியலாததாக இருந்தது.

மனித இருப்பே மறுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களென ஒதுக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் இது மேலும் தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்தப் பாரம்பரியம், மற்ற சாதிகளிலும் உழைக்கும் பிரிவினர் இருப்பதையும், அவர்கள் தங்களது சாதித் தலைமைகளிடமிருந்து விலகி, பொதுவான ஒடுக்குமுறையாளரை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் கருத்தில் கொள்ள மறுக்கும் ஒரு தனிப் போக்குக்கு இட்டுச்சென்றது. ஒதுக்கப்பட்ட சில சாதிகளில் இருக்கக்கூடிய சுயநல, சந்தர்ப்பவாதிகள், தங்களுடைய பிடியைத் தொடர்வதற்காக, தங்களைப் பின்தொடர்வோரைப் பொதுவான போராட்டத்திலிருந்து விலக்கி வைக்க முயல்கின்றனர். இவையனைத்தும் மாற வேண்டும்; சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான பதாகையைத் தாழ்த்திவிடாமல், ஜனநாயகத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்குமான பொதுப் போராட்டத்தில் இணைவதற்கு அவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் தற்போதைய சமூக-பொருளாதார அமைப்பு சொத்து உறவுகளை அடிப்படையாகக் கொண்டது, அது சாதி ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை இரண்டையுமே நிலைப்படுத்துகிறது என்பது உணரப்பட்டாக வேண்டும். பொருளாதாரத்தில் நிலப்பிரபுக்களும் ஏகபோகவாதிகளும் ஆதிக்கம் செலுத்துகிற நிலையில், ஆட்சியதிகாரத்தில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு இருக்கிற நிலையில் தீண்டாமை அல்லது சாதி ஒழிப்பு பற்றி நினைப்பது வெறும் ஏமாற்று வேலையேயாகும். சாதிப் பிரச்சனையானது முதலாளித்துவ–நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து சோசலிசத்தை நோக்கி முன்னேறும் பிரச்சனையோடு தவிர்க்கவியலாதபடி இணைந்திருக்கிறது.”

இறுதி இலக்குகளும் வழிப் பயணங்களும் இருக்க, சாதிய ஒழிப்பை எங்கிருந்து தொடங்குவது?

முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai)  – 11 | இழப்பதற்கு இத்தனை இருக்கிறபோது சாதிச் சங்கிலியை அறுப்பார்களா பாட்டாளிகள்? – அ. குமரேசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *