சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 13 | எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? | அம்பேத்கர் | பட்டியல் சாதிகள்

சாதி இருக்கும் வரை – 13: எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது?

எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது?

சாதி இருக்கும் வரை – 13

 – அ. குமரேசன்

சாதி இயற்கையாக உருவானது, அது ஒரு சமூக அடையாளம், அதை ஒழிக்க முடியாது, ஒழிக்கத் தேவையுமில்லை, இந்தியாவின் கலாச்சாரப் பின்னணியோடும் வரலாற்றோடும் கலந்தது சாதி, இந்தியாவின் சமுதாய அமைப்பில் சாதிப் பிரிவுகள் தேவை, ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டுமேயன்றி சாதிகளை அல்ல… இத்தகைய வாதங்கள் அவ்வப்போது எழுகின்றன. ஆனாலும் உரத்த குரலில் ஒலிப்பதில்லை. மாறாக, சாதியை ஒழிக்க வேண்டும், சாதியற்ற சமுதாயமே சமத்துவத்தின் அடித்தளம் என்ற குரல்கள் வலுவாகவே ஒலிக்கின்றன. இட்டாராகிய பெரியோர், இடாதாராகிய இழிகுலத்தோர் ஆகிய இரண்டு பிரிவுகளைத் தவிர வேறு சாதிகள் இல்லை என்று கூறிச்சென்ற அவ்வை, சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பணுக்கொரு வேறொரு நீதி சொல்கிற சாத்திரம் அன்று அதுவொரு சதியென்று காணச் சொன்ன பாரதி, கலகத்தைச் செய்கின்ற சாதி நம் கைகளைப் பற்றி இழுக்க விடுவதோ என்று உதறிவிடப் பாடிய பாரதிதாசன், சுதந்திரத்தைச் சொல்லி முழங்கிய பறையோசையில் சாதிவெறி மதவெறியெல்லாம் சுக்காகப் போகக் கனவு கண்ட தமிழ் ஒளி இவர்களின் வழியில் சாதி எதிர்ப்புக் கவிதைகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மக்களைப் பரவலாகச் சென்றடையும் திரைப்படப் பாடல்களிலும் ஒரு சாதியற்ற மனித சாதி பிறக்க வேண்டும் என்ற ஆசை இன்று வரையில் வெளிப்படுத்தப்படுகிறது.

ஆனால் – சாதி இருக்க வேண்டும் என்ற குரல் இவ்வளவு சன்னமாக ஒலித்தாலே போதும் என்கிற அளவுக்கு இங்கே சாதி மிகப் பெரிதாக ஊன்றியிருக்கிறது. சாதி ஒழிப்புக் குரல் எவ்வளவு சன்னமாக ஒலித்தாலும் போதாது என்கிற அளவுக்கு இங்கே சாதி மிக வலுவாக ஊறியிருக்கிறது.

அதிர்வை ஏற்படுத்திய மதமாற்றம்

“ஒரு இலட்சிய சமூகம் நகரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றத்தை மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் வழிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒரு இலட்சிய சமூகத்தில் பல அக்கறைகள் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு கொள்ளப்பட்டுப் பகிரப்பட வேண்டும். இதர முறைகளினான கூடுகைகளுடன் பல்வகையான, சுதந்திரமான தொடர்புப் புள்ளிகள் இருக்க வேண்டும். வேறு சொற்களில் சொல்வதானால், சமூக ஊடுருவல் இருக்க வேண்டும். இதுவே சகோதரத்துவம், இதுவே ஜனநாயகம் என்பதன் இன்னொரு பெயர். ஜனநாயகம் என்பது வெறுமனே ஒரு அரசாங்க வடிவம் அல்ல. இது முதன்மையாகக் கூட்டு வாழ்க்கையின் வழிமுறை. இது சக மனிதர்களிடம் மரியாதையும் பெருமதிப்பும் உள்ளதோர் அணுகுமுறை.”

–தமது “சாதி ஒழிப்பு” நூலில் இவ்வாறு அறிவிக்கிறார் டாக்டர் அம்பேத்கர். இதில் உள்ள ஒவ்வொரு வரியும் சாதிப் பாகுபாட்டைப் புதைப்பது பற்றியே வெவ்வேறு கோணத்தில் பேசுகிறது. சாதி ஒழிப்பைத் தனது உயிர் லட்சியமாகக் கொண்டிருந்த அவர், அதை நோக்கிச் செல்வதில் நடைமுறை அரசியல் சார்ந்த சில வழிமுறைகளையும் மேற்கொண்டார்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 13 | எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? | அம்பேத்கர் | பட்டியல் சாதிகள்

சாதிகளை வைத்துக் கொண்டிருப்பது இந்து மதம்தான். அல்லது, இந்து மதத்தைப் பிடித்து வைத்திருப்பத சாதிகள்தான். மதத்திற்காக வரிந்து கட்டுகிறவர்கள் அதன் பாரம்பரியப் பெருமை என்று சாதி ஏற்பாடுகளுக்கான வர்ணப் பிரிவினையைத்தான். இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

ஆகவேதான் அம்பேத்கர், சாதி ஒழிப்புக்கான ஒரு முக்கிய வழியாக, இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறுவதை ஒரு இயக்கமாகவே மேற்கொண்டார். கணிசமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. சில சீர்திருத்தங்கள் தேவை என்று இந்து மதத்திற்கு உள்ளேயிருந்தே சிலர் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அம்பேத்கர், பெரியார்

ஆயினும் அந்த அதிர்வு மிகப் பெரும் அசைவாக, ஒட்டுமொத்த சமூக நகர்வாக மாறவில்லை. அதிர்வையும், நில நடுக்கத்திற்குப் பிந்தைய தொடர் அதிர்வுகள் போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நிலைமை அப்படியே தொடர்ந்தது, தொடர்கிறது. இன்றைக்கு அம்பேத்கர் வருவாரானால், மீண்டும் அது போன்ற இயக்கங்களை மேற்கொள்வார், புதிய வழிமுறைகளையும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். அதே போல, இன்றைக்கு அவரைக் கொண்டாடுவதாகக் கூறிக்கொள்கிற, அவரது கோட்பாடுகளுக்கு எதிரான சக்திகள், இப்போது அவர் வந்து இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவாரானால் இந்து விரோதி என்று தாக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஆகவே, “ஒரு இலட்சிய சமூகத்தில் பல அக்கறைகள் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு கொள்ளப்பட்டுப் பகிரப்பட வேண்டும். இதர முறைகளினான கூடுகைகளுடன் பல்வகையான, சுதந்திரமான தொடர்புப் புள்ளிகள் இருக்க வேண்டும்,” என்ற அவரது கூற்றை, இன்றைய புரிதலோடு பின்வருமாறு விரிவு படுத்தலாம்: சாதி ஒழிப்பு லட்சியத்தை ஏற்றுக்கொண்ட பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளுக்கிடையே தொடர்புகளும், கருத்துப் பகிர்வுகளும் இருக்க வேண்டும். அத்தகைய பகிர்வுகளிலிருந்தும் விவாதங்களிலிருந்து பொதுவான வழிமுறைகளை உருவாக்க முடியும். அது கூட்டு இயக்கங்களுக்கு இட்டுச் செல்வதாகவும அமையும். அனைத்துத் தரப்பினரின் கூட்டுச் செயல்பாடுதான் இறுதி லட்சியத்தை நோக்கி முன்னேறுவதை உறுதிப்படுத்தும்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 13 | எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? | அம்பேத்கர் | பட்டியல் சாதிகள்

அம்பேத்கர் நூலை ‘குடியரசு’ இதழில் தொடராகவும், பின்னர் புத்தகமாகவும் வெளியிட்டவர் பெரியார். சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சமூக நீதிக்கான பரப்புரை இயக்கத்தைத் தீவிரமாக மேற்கொண்டார். சாதி ஒழிப்பை சாதித்த பிறகுதான் உண்மையான சமத்துவ சமுதாயம் உருவெடுக்கும் என்றார். சாதி வேறுபாடுகளைக் கொண்ட சமூக அமைப்பை உடைத்து, சமத்துவத்தை நிலைநாட்ட கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் போன்ற துறைகளில் அனைத்துப் பிரிவினருக்கும் சம உரிமை வேண்டும் என்று வலியுறுத்தினார். சமூகநீதியைச் செதுக்குவதற்கான உளியாக இட ஒதுக்கீடு கொள்கை, ஆலயங்களில் அனைத்துச் சாதியினரின் வழிபாட்டோடு அர்ச்சக உரிமை ஆகியவற்றையும் முன்வைத்தார்.

சாதி ஒழிப்பைத் தனது லட்சியமாகவும் கொண்டிருக்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தனது இயக்கத்திற்கான அடிப்படையாக வகுத்திருப்பதுதான் ‘கட்சித் திட்டம்’. அதன் 5.10, 5.11, 5.12 பத்திகள் இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கின்றன::

பின்னிப் பிணைந்த போராட்டம்

“முதலாளித்துவ-நிலவுடைமைத்துவ அமைப்பு சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் தோல்வியடைந்துள்ளது. மோசமாகத் துயருருவோர் பட்டியல் சாதியினரே. தீண்டாமையும் பிற பாகுபாடுகளும் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்குத் தலித்துகள் உள்ளாகிறார்கள். தலித்துகளிடையே வளர்ந்துவரும் விடுதலை உணர்வு கொடூரமான ஒடுக்குமுறைகளாலும் வன்கொடுமைகளாலும் எதிர்கொள்ளப்படுகிறது. தலித்துகள் தங்களை உறுதிப்படுத்திக்கொள்வது ஒரு ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது, அது சமுதாயத்தின் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கிறது. சாதியால் பிளவுபட்டிருக்கும் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளும் தங்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளன.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 13 | எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? | அம்பேத்கர் | பட்டியல் சாதிகள்

“அதே வேளையில், வாக்கு வங்கிகளை வலுப்படுத்திக்கொள்கிற, இந்த ஒடுக்கப்பட்ட பிரிவுகளை பொதுவான ஜனநாயக இயக்கத்திலிருந்து பிரித்து வைக்கிற குறுகிய நோக்கத்திற்காக சாதிப் பிரிவினைகளை நிலைப்படுத்திக்கொள்ள முயல்கிற, முற்றிலும் சாதி சார்ந்த அறைகூவலும் செயல்பட்டு வருகிறது. பல சாதித் தலைவர்களும் சில முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் தலைவர்களும் குறுகிய தேர்தல் ஆதாயங்களுக்காக, சாதி அடிப்படையிலான அணித் திரட்சியைப் பயன்படுத்த முயல்கின்றனர், அனைத்து சாதிகளின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஒரு பொது இயக்கத்தைக் கட்டுவதற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நிலம், கூலி போன்ற அடிப்படையான வர்க்கப் பிரச்சினைகளையும், பழைய சமூக அமைப்பைத் தூக்கி எறிவதற்குத் அடிப்படையான நிலவுடைமைத்துவ எதிர்ப்புப் போராட்டத்தையும் புறக்கணிக்கின்றனர்.

“சாதி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு பிரச்சனை நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. முதலாளித்துவ வளர்ச்சியின் கீழ் உள்ள சமுதாயம் ஏற்கனவே உள்ள சாதி அமைப்புடன் சமரசம் செய்துகொண்டுள்ளது. இந்திய முதலாளித்துவமே சாதிப் பாகுபாடுகளை வளர்க்கிறது. தலித் மக்களின் பெரும் பகுதியினர் தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமாக இருப்பதால், உழைக்கும் வர்க்க ஒற்றுமையானது சாதி அமைப்புக்கும் தலித் ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒற்றுமையை முன்னிறுத்துகிறது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின் மூலம் சாதி அமைப்பையும் அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழிப்பதற்கான போராட்டம் ஜனநாயகப் புரட்சியின் ஒரு முக்கியமான அங்கமாகும். சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.”

சரியான பாதை எது?

இவ்வாறு பல்வேறு இயக்கங்களும் பல்வேறு வழிமுறைகளை முன்வைக்கின்றன. அவற்றில் எது சரியான பாதை? அது ஏதாவது ஒரு அமைப்பு கூறியிருக்கிற பாதையாகவும் இருக்கலாம், பல்வேறு அமைப்புகளின் கூட்டுச் சிந்தனையில் உருவாகக்கூடிய புதிய பாதையாகவும் இருக்கலாம். உண்மையிலேயே சாதியத்தைப் பழைய கதையாக்குவதற்குத் தயாராக இருக்கிற எந்த இயக்கமும், தான் சொல்வது மட்டுமே இறுதியானது என்று வட்டக் கோடு போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே நிற்காது. எங்கேயிருந்து மாற்றுச் சிந்தனை வருமானாலும் அதைக் கருத்தில் கொள்ளத் தயங்காது.

அடிப்படையில், ஜனநாயகத்தை முழுமையாக உயர்த்திப் பிடிப்பதும், சாதியை ஒழிப்பதும், தலித் விடுதலையோடு இணைந்திருப்பதைப் பெரும்பாலான இயக்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இறுதி இலக்குகளும் வழிப்பயணங்களும் இருக்க, சாதி ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது?

அரசு – அரசியல் களத்தில் உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் (1955), குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் (1955), பட்டியல் சாதிகள் பட்டியல் பழங்குடிகள் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் (1989) உள்ளிட்ட சட்டங்கள் ஏற்கெனவே இயற்றப்பட்டுள்ளன. நிலைமைகளையும் தேவைகளையும் ஆராய்ந்து புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் தேவை என்று, ஒவ்வொரு சாதி ஆணவக் கொலைச் செய்தி வருகிற நேரத்திலும் வலியுறுத்தப்படுகிறது. சட்டப்புத்தகத்தில் ஏற்றப்பட்டுவிட்ட சட்டங்களும் விதிகளும் செயலாக்கத்தில் இறக்கிவிடப்பட வேண்டும். நாடு முழுதும் நடக்கிற வன்கொடுமைக் குற்றங்களில் பெரும்பாலானவை, அதற்கான சட்டத்தின் கீழ் அல்லாமல், குற்றவாளிகள் நழுவுவதற்கு வழி செய்யக்கூடிய அல்லது குறைந்த தண்டனைகளோடு தப்பிக்கக்கூடிய இதர குற்றப் பிரிவுகளின் கீழ்தான் பதிவு செய்யப்படுகின்றன. வழக்குகள் முறையாக, வலுவாக நடத்தப்படுவதில்லை. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாமல் சட்டச் செயலாக்கம் நேர்மையாக இருக்க வேண்டும்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 13 | எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? | அம்பேத்கர் | பட்டியல் சாதிகள்

“பொதுவாகவே, பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்களைப் பொறுத்தவரையில், உண்மையான சம்பவங்களின் எண்ணிக்கைக்கும் வழக்காகப் பதிவு செய்யப்படும் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. அனைத்து மட்டங்களிலும் ஊடுருவியிருக்கிற ஆணாதிக்கத்தின் பிரதிபலிப்பு இது. அதிலும், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளைச் சேர்ந்த பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் என்றால், மிக மிகக் குறைவாக, பெரிய அளவுக்குப் பரபரப்பான செய்தியாக மாறி மக்களின் கவனத்தைப் பெறுகிற குற்றங்கள் மட்டுமே பதிவாகும். அதிலும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அல்லாமல் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறு போல அதற்கான சட்டப்பிரிவுகளின் கீழ்தான் பதிவு செய்யப்படும். அதிகபட்சம் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்படும். இறுதியில் குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் அல்லது குறைந்த தண்டனை அளிக்கப்படும். பல வழக்குகளில், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குத் திருமணமாகி, பேரப்பிள்ளைகள் பிறந்த பிறகுதான் தீர்ப்பு வந்திருக்கின்றன,” என்று மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

ஆணாதிக்கத்தோடு சாதிப்புத்தியும் கலந்த நடைமுறைகளால் எந்த அளவுக்கு நீதி ஆதரவின்றி நிறுத்தப்படும் என்பதைக் காட்டுவற்கு சாட்சியாக வாச்சாத்தி வழக்கு ஒன்றே போதும். தீர்ப்பு வருவதற்கு, அந்த மக்கள் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பழங்குடி மக்களின் கிராமத்தையே வனத்துறையினரும் காவல்துறையினரும் சூறையாடி, 18 பெண்களை பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கி, நாட்டின் கவனத்தையே ஈர்த்த அதிகார அத்துமீறல் அது. அந்த மக்களைத் தடம் மாற்றுவதற்கு எத்தனையோ பேரங்களும், மிரட்டல்களும் தொடர்ந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையோடு அந்த மக்கள் உறுதியாக நின்றார்கள். 1992இல் நடந்த அந்தக் குற்றங்கள் மீதான வழக்கி விசாரணை 1996இல் தொடங்கியது. 2011இல் இரு துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள், காவலர்கள் என 215 பேர் குற்றவாளிகள் என்று கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டு செய்யப்பட்டு, மாதங்களும் ஆண்டுகளுமாகக் கடக்க, 2023இல் சென்னை உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பையும் தண்டனைகளையும் உறுதிப்படுத்தியது. வாச்சாத்தி மக்களுக்கு மட்டுமல்லாமல், ஆதரவின்றி நிறுத்தப்பட்ட நீதிக்கும் செங்கொடிதான் ஆதரவாக நின்றது.

இவ்வாறு எல்லாப் பிரச்சினைகளிலும் சட்டங்கள், செயல்பாடுகள் இருக்குமானால், சாதி ஒழிப்பை நோக்கி நகர்வதற்கு ஒரு உந்துதல் கிடைக்கும். இது அரசு, சட்டச் செயலாக்கம், நீதித்துறை ஆகியவை செய்ய வேண்டியது. அரசியல் இயக்கங்களும், சாதிய எதிர்ப்பு அமைப்புகளும் என்ன செய்யலாம்? குடிமக்களாக ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியும்?

முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai)  – 12 | சாதி, வர்க்கம், பொதுப் போராட்டம் – அ. குமரேசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *