வீட்டுக்குள் ஆக்கிரமித்திருக்கும் ஆணவத்தை வெளியேற்ற
சாதி இருக்கும் வரை – 14
– அ. குமரேசன்
சாதி ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது? நம் மனதில் இருந்துதான். நம் மனதில் அழுத்தமாகவோ சன்னமாகவோ ஒட்டியிருக்கும் “நம்ம ஆளுக” என்ற சாதிப் பெருமையைத் துளியும் மிஞ்சாமல் துடைத்தெறிய வேண்டும். அதற்கு அடிப்படையாக, சாதி ஒரு பெரும் இழிவு, அது ஒரு வரலாற்று அவமானம் என்ற புரிதல் உணர்வு ஏற்பட வேண்டும். எங்கோ எப்போதோ நடக்கிற சில நிகழ்வுகளை வைத்து நாடு முழுதும் சாதிப் பாகுபாடுகளும் கொடுமைகளும் இருப்பதாகக் கூறலாமா என்று கேட்கப்படுகிறதே, அந்தக் கேள்விக்கு உள்ளேயே சாதி பதுங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதி ஆணவம் தலைவிரித்து ஆடுவதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
சாதி மோதல் செய்திகள் வருகிறபோதெல்லாம், “அது இரண்டு பேருக்கிடையே நடந்த ஒரு தனிப்பட்ட சண்டை. அதில் சாதிய ஆணவம் இல்லை,” என்று விளக்கம் தரப்படுகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த விளக்கங்கள் மாறுவதில்லை.
ஊரிலும் மாவட்டத்திலும் மாநிலத்திலும் சாதிய வன்மம் பரவியிருப்பதை சட்டமியற்றும் இடங்களில் இருப்பவர்கள் ஒப்புக்கொண்டால்தான், தடுப்பதற்கான சட்டம் இயற்றுவது சாத்தியமாகும். ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பது நடைமுறையாகும். அவ்வாறு ஒப்புக்கொள்ள வைப்பதற்கு, குடிமக்கள் என்ற முறையில் நம் மனதில் மாற்றுச் சிந்தனையை ஊன்ற வேண்டும்.
பருவாய் கிராமத்துச் செய்தி
இப்போது கூட, திருப்பூர் மாவட்டத்தில் பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற 22 வயதுப் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பான மனதை உறைய வைக்கும் தகவல்கள் வந்திருக்கின்றன. கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டத்திற்குப் படித்துக்கொண்டிருந்தவர் வித்யா. அதே கல்லூரியில் படிப்பவர் வெண்மணி. இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்திருக்கிறார்கள். இருவருமே, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இரு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களானாலும் “அவர்களின் சாதியை விட எங்களின் சாதி உயர்வானது” என்ற எண்ணம் ஒவ்வொரு சாதியிலும் ஊறிக் கிடப்பது பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம். தனக்கு மேலேயிருந்து ஒரு சாதி தன்னை மிதிக்கிற நிலை கண்டு ஆவேசம் கொள்வதற்கு மாறாக, தனக்குக் கீழே ஒரு சாதி தன்னிடம் மிதிபடுகிற நிலை கண்டு மனநிறைவு கொள்கிற வக்கிரம் வளர்க்கப்பட்டிருப்பதுதான் சாதியத்தின் வெற்றி என்று விவாதித்திருக்கிறோம். இந்தக் காதல் கதையிலும் இதுதான் நடந்திருக்கிறது.
வீட்டில் பீரோ சாய்ந்து விழுந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட வித்யா இறந்துவிட்டார் என்று மற்றவர்களுக்குத் தெரிவித்த பெற்றோரும் குடும்பத்தினரும் சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்துவிட்டனர். சந்தேகப்பட்ட வெண்மணி காவல்துறையில் புகார் செய்தார். வட்டாட்சியர், கோட்டாட்சியர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. வித்யாவின் தலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு நொறுங்கியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட புலன் விசாரணையில், வித்யாவின் அண்ணன் சரவணகுமார், அவர்களின் காதலை ஏற்க மறுத்ததாகவும், வீட்டில் நடந்த வாக்குவாதத்தில் அரிவாளின் கைப்பிடிப் பகுதியால் ஓங்கி அடித்ததில் தலை நொறுங்கியதாகவும் தெரியவந்திருக்கிறது. சரவணகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வெண்மணி அளித்த புகாரை அலட்சியப்படுத்தாமல், புதைக்கப்பட்ட உடலை வெளியே எடுத்து உண்மையைக் கண்டறிந்த பாராட்டுக்குரிய செயலைச் செய்த காவல்துறையினர், இது சாதி ஆணவக்கொலைதான் என்ற உண்மையைக் காணத் தவறிய அல்லது அதை மறைத்த விமர்சனத்திற்குரிய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதை சாதி ஆணவக் கொலை என்று சொல்ல முடியாது என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.
அதுவும் ஆணவம்தான்
இந்த விளக்கம் எங்கிருந்து வருகிறது? சாதி ஆணவம் என்றால் பட்டியல் சாதிகளையும் பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் மட்டுமே என்ற மேலோட்டமான புரிதலில் இருந்துதானே? சாதிப் பிரிவின் அடிப்படையில் (அது எந்தச் சாதியானாலும்) வேறுபடுத்துவது, சம வாய்ப்பை மறுப்பது, மட்டமாகப் பேசுவது, ஆத்திரத்துடன் தாக்குவது, உச்சமாகக் கொலை செய்வது… எல்லாமே சாதி ஆணவம்தான். மிக உயர்ந்த சாதி என்பதாகச் சொல்லி வந்திருக்கும் பிராமணப் பிரிவுகளுக்கு உள்ளேயே இப்படிப்பட்ட பாகுபாடுகள் இருக்கின்றன. அந்தப் பிரிவுகளுக்கிடையே வன்மங்களும் வெளிப்படுமானால் அதுவும் சாதி ஆணவம்தான். அதன் காரணமாகக் கொலை நடந்தால் அது சாதி ஆணவக் கொலைதான்.
“சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம்“ (Prevention of Honor Killings Act) தேவை என்றுதான் பொது இயக்கங்களால் வலியுறுத்தப்படுகிறதேயன்றி, “தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் எதிரான சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரப்படவில்லை. இதை இந்தக் குறிப்பிட்ட வழக்கு தொடர்பான அதிகாரிகள் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த அதிகாரிகள் புரிந்துகொண்டாக வேண்டும். அவ்வாறு புரிய வைப்பதற்கே கூட ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் (Prevention of Honor Killings Act) தேவைப்படுகிறது.
இத்தகைய நிகழ்வுகளின்போது, கைது செய்யப்படுகிறவர்கள், தங்களது மகளை அல்லது தமக்கையை அல்லது தங்கையைக் கொலை செய்துவிட்டதை நினைத்துச் சிறையில் அழுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள் என்ற செய்திகளும் வருகின்றன. அந்த அழுகையில் நிச்சயமாகப் பொய்மை இல்லை. ஆனால், தங்களுடைய பாசத்திற்கு உரியவர்களின் வாழ்க்கையை முறித்துவிட்டோமே என்ற சோகம்தான் அந்த வேதனையில் பொதிந்திருக்கிறது. சாதிப் பெருமையால் புத்தி கெட்டுப் போய் இப்படிச் செய்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி துளியும் இருப்பதில்லை. ஆனால், ரத்த உறவு என்று பார்க்காமல் சாதிப் பெருமையை நிலைநாட்டியதற்காகப் பாராட்டுவதற்கு நான்கு பேர் வந்துவிடுவார்கள்! ஆம், சாதி ஆணவத்தால் பாதிக்கப்படுகிறவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் மட்டுமல்ல, தாக்குதலை நடத்துகிறவர்களும்தான். அவர்களது மனிதம் அழிக்கப்படுவது எவ்வளவு கொடிய தாக்குதல்!
நிலுவையிலிருக்கும் நீதி
1992இல், ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு வயதான ஆணுடன் நடத்தப்பட இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார் பன்வாரி தேவி என்ற சமூக சேவகி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவருமான அவரைப் பழிவாங்குவதற்காக ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்ந்தார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றாலும், 1995இல் ஜெய்ப்பூர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. அவர்கள் குற்றம் செய்ததற்கு ஆதாரம் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்திருந்தாலாவது, ஏதோ சட்டப்படியான ஒரு தீர்ப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தீர்ப்பளித்த நீதிபதி என்ன காரணம் கூறினார் தெரியுமா?. “குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் சாதியைச் சேர்ந்தவர்கள், கௌரவமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆகவே அவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்கள்! மேலும், இரண்டு பேர் நெருங்கிய உறவினர்கள். மாமனும் மச்சானும் சேர்ந்து இப்படிப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்!”
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குற்றம் நடந்து 33 ஆண்டுகளும், ஏற்கவியலாத தீர்ப்பு அளிக்கப்பட்டு 30 ஆண்டுகளும் ஓடிவிட்டன, உச்சநீதிமன்றத்தில் இப்போதும் மேல்முறையீடு நிலுவையில் இருக்கிறது.சாதி ஆணவமும், அத்தோடு ஆணாதிக்கப் புத்தியும் எங்கே வரையில் ஊடுருவியிருக்கிறது என்பதை இது காட்டவில்லையா?
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 2025ஆண்டில் ஒரு புதிய செய்தி: அங்குள்ள ஆல்வார் நகரின் ராமர் கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திக்காராம் ஜுல்லி கலந்துகொண்டார். மறுநாள், பாஜக தலைவர் ஞான் தேவ் அஹூஜா அங்கே சென்று கங்கை நீர் தெளித்து கோவிலைப் புனிதப்படுத்தினார். ஏன் அந்தக் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்றால், திக்காராம் ஒரு தலித் என்பதால்! இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் நிலையில், தனது செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் அஹூஜா. எப்படியென்றால், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்ததால், இதை விமர்சிக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை என்று!
இப்படி மாற மறுக்கும் உள்ளூர், புரிந்துகொள்ளத் தவறும் காவல்துறை, சட்டப்படி செயல்பட முடியாத நீதித்துறை, இதையெல்லாம் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய அரசியல் என எல்லா இடங்களிலும் குதறிப்போயிருக்கிறது சாதிப் புண். இந்தத் தொடரை முடிக்க இயலாது என்கிற அளவுக்கு நாள்தோறும் சாதி ஆணவம் தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் (Prevention of Honor Killings Act) இயற்றப்பட்டிருக்கிறது என்ற செய்தி மட்டும் இன்னும் வரவில்லை.
ஒரு சாட்சி
சாதி ஆணவத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்று அஞ்சுகிறவர்கள், குறிப்பாக சாதி வேலிகளைத் தாண்டிய காதலர்களும் மணமக்களும் குடும்பமாக வாழ்கிறவர்களும் எளிதில் தொடர்பு கொண்டு புகார் செய்யத் தோதாக அந்தச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக உடனடிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதிகள் அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். உடலளவில் மட்டுமல்லாமல், உளவியலாகவும் சாதி வன்மம் கொட்டப்படுவதைக் கண்டறிவதற்கான நடைமுறைகள் அந்தச் சட்டத்தில் வரையப்பட்டிருக்க வேண்டும். சாதி, மதம், பணபலம், அதிகாரச் செல்வாக்கு என எதுவும் குறுக்கிட முடியாதபடி, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாகுபாடின்றி பாய்ந்திடும் வகையில் அந்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும். விரிவான முறையில் உறுதியான சட்டம் வகுக்கப்படுவதற்காக, மக்களிடையே விவாதிக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெற வேண்டும். சரியான, திட்டவட்டமான கருத்துகளை முன்வைத்து, இப்படிப்பட்ட முயற்சிகளை ஆதரிக்கிறவர்களாக நாம் முன்னால் நிற்பதற்கு, நம்முடைய பார்வைகள் தெளிவு பெற வேண்டும்.
நம்மிடமிருந்தே தொடங்குவதன் நுட்பத்திற்கு ஒரு சாட்சியாக ஓர் அனுபவம்: கால் நூற்றாண்டுக்கு முன், தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்குமான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகள் இன்னமும் தொடர வேண்டுமா என்றொரு விவாதம் நடைபெற்றது. ஒரு கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் நடந்த அந்த விவாதத்திற்கு ஒரு செய்தியாளராகச் சென்றிருந்தேன். கருத்தாளரான ஒரு மூத்த ஊடகவியலாளர், “நான் இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவன் அல்ல என்றாலும், சாதியப் பாகுபாட்டு நிலைமை முற்றிலுமாக மாறும் வரையில் அவர்களுக்கு இந்தச் சட்ட ஏற்பாடுகள் தொடர வேண்டும் என்றே நினைக்கிறேன்.” என்று பேசினார்.
தேநீர் நேரத்தின்போது ஒரு மாணவர், “ஐயா, இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவன் அல்ல என்றாலும் இட ஒதுக்கீடு தொடர்வதை ஆதரிப்பதாகச் சொன்னீர்கள். நன்றி. ஆனால், இப்படி உங்களைப் பிரித்துக் காட்ட வேண்டுமா,” என்று கேட்டார்.
“இதிலே என்ன இருக்கிறது, தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர் அல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்களிலும் இட ஒதுக்கீட்டு நியாயத்தைப் புரிந்துகொண்டவர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தைத்தானே இது ஏற்படுத்தும்,” என்று உடனிருந்தவர்கள் கூறினார்கள்.
அப்போது குறுக்கிட்ட கருத்தாளர், ”இல்லை, தம்பி கேட்பது சரிதான். என்னையும் அறியாமல் நான் உயர் சாதிக்காரன் என்று அறிவித்து, நான் எவ்வளவு பெருந்தன்மையுடன் இருக்கிறேன் பார்த்தீர்களா என்று காட்டிக்கொள்வது போல இருக்கிறது. இனிமேல் அதைத் தவிர்த்துவிடுவேன்,” என்று கூறி அந்த மாணவரின் தோள்களைத் தட்டிக்கொடுத்தார்.
அவர்கள் என்று பொதுவாகச் சொல்வதற்கும், அவர்கள் வேறு – நாங்கள் வேறு என்று பிரித்துக் காட்டுவது போல் சொல்வதற்குமான வேறுபாட்டை எளிதாகப் புரிந்துகொள்ள வைத்த சுவையான அனுபவம் அது. அந்த மூத்தவர் யாரென்று கூறுவது அவருடைய நோக்கத்திற்குப் பொருந்தாததாகிவிடும், எனவே அதையும் இங்கே தவிர்த்துவிடலாம்.
ஊர் மாறவில்லையே…
ஊரும் உறவுகளும் நாட்டு மக்களும் சாதியின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள், அதை சரியானதென்று நினைக்கிறார்கள், சாதிக்காகப் பெருமைப்படுகிறார்கள் என்கிறபோது தனிப்பட்ட முறையில் நம்மிடமிருந்து தொடங்குவது பொருத்தமா? நாம் மட்டும் மாறினால் போதுமா? அது பலனளிக்குமா? ஒட்டுமொத்த சமூகம்தானே மாற வேண்டும்?
உண்மை. ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தின் அங்கம்தான் நாம். ஒட்டுமொத்த சமூகத்தில் மாற்றம் நிகழ்வதற்குத்தான் சட்டப்பூர்வமான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமை தடுப்பு, பாகுபாடுகள் அரசமைப்பு சாசனத்திற்கே எதிரானவை என்ற அறிவிப்பு – இப்படிப்பட்ட சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. இந்த வழிமுறைகளைக் கறாராகப் பின்பற்றுகிற நேர்மை பொறுப்புகளில் இருப்பவர்களுக்குத் தேவை. இருக்கிற சட்டங்களாலும், அரசு சார்ந்த நடைமுறைகளாலும், முன்பிருந்த நிலைமைக்கும் இன்றைய சூழல்களுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?
“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர்
என்பது மாறாதோ..
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும்
காலமும் வாராதோ..
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு”
–‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய “கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று” என்ற பாடலில் உள்ள இந்த வரிகள் தமிழகம் முழுக்க ஒலித்தது.. ஆனால் ஒரு பாட்டால் மட்டும் சமூகம் உடனே மாறிவிடுமா? ஏற்கெனவே பார்த்தது போல, வர்க்க எழுச்சி பெற்ற உழைப்பாளி மக்களின் புரட்சிதான் இறுதியாக சாதிக் கட்டுமானத்தைத் தகர்க்கும். அதை நோக்கிச் செல்கையில் இன்றைக்கு ஒரு பக்கம் சட்டங்கள், இன்னொரு பக்கம் சாதி ஒழிப்பில் அக்கறை உள்ள இயக்கங்கள், மற்றொரு புறம் இப்படிப்பட்ட பாடல்கள் போன்ற பண்பாட்டுத் தள முயற்சிகள் என எல்லாம் ஒன்று குவிய வேண்டும்.
அவ்வாறு ஒன்று குவிவதை நமது சிந்தனை மாற்றம் உறுதிப்படுத்தும். முதலில் நாம் மட்டும் மாறுவதால் மாற்றத்திற்கு முன்னுதாரணம் அமைக்கிறோம். நமது எண்ணங்களில் சமூக நீதியும் சமத்துவமும் கொண்ட புதிய அணுகுமுறையைத் தேர்வு செய்து நம் அன்றாட நடைமுறையில் கொண்டு வந்தால், அது ஊருக்கும் உறவுகளுக்கும் உணர்த்தும்.சாதி உணர்வில்லாததன் சிறப்பை நம் செயல்களால் எடுத்துக்காட்டும்போது, மற்றவர்கள் மனதில் சிறு மாற்றம் முடுக்கிவிடும். பெரிய மாற்றங்களுக்கான விதைகள் சிறிதாகத்தானே முளைவிடும்.
வேண்டுகோளாய் வந்த அறைகூவல்
நம்மிடமிருந்து தொடங்கிவிட்டோம் என்பதைக் காட்ட, வீடுகளில் சாதியை அடையாளப்படுத்தும் சட;ங்குகளைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது, தவிர்ப்பதற்கு முயற்சியாவது செய்ய வேண்டும். பெரியவர்கள் மனம் வருத்தப்படும் என்று கூறி அவர்களின் பின்னால் பதுங்கிக்கொள்ளக்கூடாது. வருத்தப்படுவார்கள்தான், மற்றவர்கள் பாராட்டுவதைக் கேட்கக் கேட்க அவர்களும் பெருமைப்படுவார்கள், முற்றிலுமாக மாறாவிட்டாலும், நமது மாற்றத்திற்குத் தடை போடாமல் இருப்பார்கள். வீட்டில், குறிப்பாகக் குழந்தைகள் இருக்கிறபோது, நம் உரையாடல்களில் சாதி அடையாளம் ஒரு அவமானம் என்ற கருத்தைச் சொல்ல வேண்டும். பாடம் நடத்துவது போல இல்லாமல், கலகலப்பான முறையிலேயே அந்தக் கருத்துகளைப் பகிர்ந்திட முடியும். சாதி வரப்புகள் இல்லாத உறவுகள் எவ்வளவு அழகானவை என்று சொல்லும் கதைப் புத்தகங்கள் வீட்டில் கிடைக்கச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் பற்றி நண்பர்களோடு பேசுவது போலக் குடும்பத்தினருடன் விவாதிக்க வேண்டும்.
சாதியற்ற விழாக்களுக்குக் குடும்பத்தினரோடு சென்று வர வேண்டும். வீட்டிலும் திருமண விழா, பிறந்தநாள் விழா போன்றவற்றை சாதி அடையாளம் நீக்கி, கழிவுகள் கலக்காத குடிநீரைப் பருகுவது போல, நடத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, பொதுவாக சாதிப் பெயரைச் சொல்லிக்கொள்ளாவிட்டாலும், திருமண அழைப்பிதழ் அச்சிடும்போது பெரியர்களின் பெயர்களைக் குறிப்பிடும் சாக்கில் சாதியைக் காட்டிவிடுகிறார்களே, அந்த உத்தி நம் வீட்டுக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விடுதலைப் போராட்ட வீரர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவராக இளையவர்கள் பலரையும் ஈர்த்தவரான என். சங்கரய்யா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய மாநிலந்தழுவிய நடைபயண இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சியாக, தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். “இளம் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள், குறிப்பாக சகோதரிகள், சாதி கடந்து, மதம் கடந்து காதலிக்கிறார்கள் என்றால் அந்தக் காதலுக்கு ஆதராக இருங்கள், அவர்களுக்காகப் பெற்றோர்களுடனும் மற்ற பெரியவர்களுடனும் வாதாடுங்கள்,” என்றார் அவர். அவர் வேண்டுகோள் என்று கூறினாலும் உண்மையில் இதுவோர் அறைகூவல். நம்மிடமிருந்து தொடங்குவது எப்படி என்ற கேள்விக்கு விடையளிக்கிற அறைகூவல்.
இப்படி, வீட்டுக்கு வெளியே நடக்கும் சமத்துவப் பரப்புரை முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஊரே மாறாமல் இருக்கிறபோது நாம் மட்டும் எப்படி மாறுவது என்ற கேள்வியின் மறுபக்கம், மாறுவதில் விருப்பமில்லை என்பதாக இருந்துவிடக்கூடாது. இதெல்லாம் நம் கையில்தானே இருக்கிறது?
(அடுத்த கட்டுரையுடன் நிறைவடையும்)
முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) – 13 | எது சரியான பாதை? எங்கிருந்து தொடங்குவது? – அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: சாதிய அநீதி கண்டு கொந்தளித்தால்