சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 2 | ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமை-யா? (Is caste or untouchability to be abolished?)

ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமையா?

சாதி இருக்கும் வரை – 2

ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமையா?

 – அ. குமரேசன்

இருபது ஆணடுகளுக்கு முன், கவிதை வாசிப்பு, புத்தக அறிமுகம், திரைப்பட விவாதம் என்று இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஜெயா தொலைக்காட்சியில், இயக்குநர் பாலு மணிவண்ணன் ஒருங்கிணைப்பில் வாரா வாரம் நடத்தப்பட்டு வந்தது. ஒரு வாரம் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. “சிறப்பான வாழ்க்கைக்கு ஏற்றது கிராமமே, நகரமே” என்ற தலைப்பில் வாதிட்டோம். கிராம வாழ்க்கையின் அழகு, இயற்கையான சூழல், அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளும் மனிதர்கள் பற்றி அந்த அணியினர் பேசினார்கள். நகரமே என்ற அணியில் வாதிட்ட நான், கிராமங்களில் இறுகிப்போயிருக்கும் சாதிப் பிரிவினைகளையும் வன்முறைகளையும் பற்றி, அப்போது வந்திருந்த செய்திகளோடு சேர்த்துக் குறிப்பிட்டு, நகரத்தில் அப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை, எந்தத் தெருவிலும் யாரும் குடியிருக்க முடியும் என்று பேசினேன். நடுவராக வந்திருந்த கவிஞர் சினேகன், எங்கள் அணியின் வாதங்களை, குறிப்பாக எனது கருத்துகளை, வழிமொழிந்து நகர வாழ்க்கையே சிறப்பானது என்று தீர்ப்பளித்தார்.

இப்போது அப்படியொரு பட்டிமன்றம் நடத்தப்படுமானால், அதே கருத்துகளை முன்வைப்பேன் என்று கூறுவதற்கில்லை. குறிப்பிட்ட தெருவில் குறிப்பிட்ட சாதியினர்தான் குடியிருப்பார்கள் என்ற நிலைமை, பெரிய நகரங்களைப் பொறுத்தமட்டில் பெரிய அளவுக்கு மாறியிருப்பது உண்மைதான். தெருக்களின் பெயர்களில் சாதி இல்லை. சில தெருக்களுக்கு மனிதர்களின் பெயருடன் சேர்ந்த சாதியாக இல்லாமல், சாதியே பெயராக வைக்கப்பட்டிருக்கிறது, அதனால் அந்தத் தெருக்கள் மட்டும் சாதிப் பெயர்த் தெருக்களாக இருக்கின்றன – பிராமணர் தெரு, வன்னியர் தெரு இப்படியாக. ஆனாலும் அந்தத் தெருக்களிலும் அந்தச் சாதியினர் மட்டும்தான் குடியிருக்கிறார்கள் என்ற நிலைமை இல்லை.

விஏஓ–வும் வீட்டு ஓனரும்

ஆனால், சாதி உணர்வு மறைந்துவிட்டதா? சில ஆண்டுகளுக்கு முன் ‘தி ஹிண்டு’ நாளேட்டில் வந்த ஒரு செய்திக் கட்டுரை, பெரு நகரமான பெங்களூருவின் நவீன அடுக்ககங்களில் அவ்வளவு எளிதாக தலித் குடும்பங்கள் குடியேறிவிட முடிவதில்லை என்று தெரிவித்தது. நன்கு படித்த, பெரிய வேலைகளில் இருக்கிறவர்களானாலும் கூட, எத்தனை லட்சங்கள் கொடுத்து அடுக்கக வீடுகளை வாங்கக்கூடிய நிலையில் இருந்தாலும் கூட, அவர்களுக்குக் கட்டுமான நிறுவனங்கள் வீடு ஒதுக்க மறுக்கின்றன. அந்த நிர்வாகங்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “நாங்கள் அவர்களுக்கு வீடு தரத் தயாராக இருந்தாலும், மற்ற வீடுகளை வாங்குகிறவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு வீடு ஒதுக்கினால் நாங்கள் வாங்க மாட்டோம் என்கிறார்கள்,” என்று பதிலளித்திருக்கிறார்கள்.

‘எக்கனாமிக்ஸ் அன் பொலிட்டிகல் வீக்லி’ இதழில் வந்த ஓர் ஆய்வுக் கட்டுரை, நாட்டின் தலைநகர் தில்லியிலேயே வீட்டுச் சொந்தக்காரர்கள் வாடகைக்கு வீடு கேட்டு வரும் தலித்துகளையும் முஸ்லிம்களையும் திருப்பி அனுப்பிவிடுவது பற்றிக் கூறுகிறது. இந்த இரண்டு செய்திக் கட்டுரைகளும் வெளியாகி பத்துப் பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 2 | ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமை-யா? (Is caste or untouchability to be abolished?)

சென்னையில் ஒரு தலித் குடும்பத்திற்கு வாடகை வீடு தேடி, ‘டூ லெட்’ அறிவிப்பு மாட்டப்பட்டிருந்த வீடுகளின் கதவுகளைத் தட்டியது நினைவுக்கு வருகிறது. வீட்டைச் சுற்றிக்காட்டிய பிறகு, வாடகை, முன்தொகை, மின்கட்டண ஏற்பாடு, முறைவாசல் இன்ன பிற சங்கதிகளைக் கூறிய உரிமையாளர், குடிவரப் போகிறவரின் பெயர், அப்பா பெயர், தாத்தா பெயர், சொந்த ஊர் எது, அந்த ஊரின் எந்தப் பகுதி என்ற தகவல்களை விசாரித்தார். கடைசியில், “அமெரிக்காவில் இருக்கிற எங்கள் மகன் அங்கே கான்டிராக்ட் முடிந்து நாடு திரும்பப்போவதாகச் சொல்லியிருந்தான். அவன் வந்தால் இந்த வீடு அவனுடைய ஃபேமிலிக்குத் தேவைப்படும். அவனிடம் பேசிவிட்டு நாளைக்குக் காலையில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்,” என்றார். எதிர்பார்த்தது போலவே மறுநாள் காலையில், அந்த மகன் உறுதிப்படுத்திவிட்டதாகவும், ஆகவே வீட்டை வாடகைக்கு விடுவதாக இல்லை என்றும் தெரிவித்தார். உண்மைக் காரணம் எங்களுக்குப் புரிந்தது. நண்பரின் சமூகப் பின்னணியை அவர் கண்டுபிடித்துவிட்டதுதான் காரணம். இப்படிப் பல வீடுகள். நெடும் தேடலுக்குப் பிறகே ஒரு வீடு கிடைத்தது.

கிராம அலுவலரிடம் சாதிச் சான்றிதழ் கோரி அணுகினால், ஆயிரத்தெட்டு கேள்விகளும் ஆதாரங்களும் கேட்டு, சாதியை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் நகரத்தில் ஒரு வீட்டு உரிமையாளர் எளிதாகச் சாதியைக் கண்டுபிடித்துவிடுகிறார். இதை வைத்து, ”விஏஓ–வால் முடியாததை, வீட்டு ஓனர் கண்டுபிடித்தார்,” என்று என்னால் ஒரு கவிதைதான் எழுத முடிந்தது.

பல வீடுகளின் கதவுகளில், ‘டூ லெட்’ அறிவிப்புக்குக் கீழே, “ஃபார் வெஜிடேரியன்ஸ் ஒன்லி” என்ற துணை அறிவிப்பும் இருப்பதைப் பார்க்க முடியும். இறைச்சி சாப்பிடுகிற எல்லோரையுமே அது குறிக்கும் என்றாலும், உள்ளே இறங்கிப் பார்த்தால், மிகக் குறிப்பாக அது தலித் குடும்பங்களுக்கான தடைதான் என்று புரிந்துகொள்ள முடியும். தலித் அல்லாத பிற சமூகங்களையும் குறிப்பிட்டுத்தான் அந்த அறிவிப்புகள் மாட்டப்படுகின்றன என்றால் கூட, அடிப்படையில் அது சாதிப் பாகுபாடுதான் என்று விளக்க வேண்டியதில்லை. சாதியையும் மதத்தையும் பொருட்படுத்தாமல் வீடு தரும் உரிமையாளர்கள் மரியாதைக்கு உரியவர்கள்.

ஊடகங்களின் உள்ளே

இந்த உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவர வேண்டிய ஊடகங்களில் என்ன நிலைமை? இந்தியாவின் 325 முன்னணி ஊடக நிறுவனங்களின் செய்திப் பிரிவுகளில், ஒரு தலித் கூட தலைமைப் பொறுப்பில் இல்லை என்று 1992ல் அமெரிக்க ஆப்பிரிக்கரான கென்னத் ஜே கூப்பர் தனது ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தார். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கான சட்டங்களாலும் திட்டங்களாலும் ஊடகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு ஒப்பிடுவதற்காக, இந்தியாவுக்கு வந்து தலித் மக்களின் நிலையை அவர் நேரடியாக ஆராய்ந்திருந்தார்.

இங்குள்ள பெரிய ஊடக நிறுவனங்கள் அனைத்துமே உயர் சாதிகள் எனப்படும் பிரிவுகளைச் சேர்ந்தோரின் உடைமையாகவே இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். இன்று வரையில் இந்தக் காட்சிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 2 | ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமை-யா? (Is caste or untouchability to be abolished?)

தலித் அல்லாத, உயர் சாதி என்று சொல்லிக்கொள்கிற பிரிவுகளும் அல்லாத, இடைநிலைச் சமூகங்களிலும் இந்தப் பாகுபாடுகளைக் காண முடியும். திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்த ஒரு வீட்டில், வாங்கி வைத்திருந்த தாலியின் வடிவமைப்பைப் பார்த்துவிட்டு, “இந்த டிசைன் நம்ம ஆளுகளுக்குக் கிடையாதே,” என்று விவாதித்துக்கொண்டிருந்த காட்சியும் மனதில் ஓடுகிறது.

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பாக, சில அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சேர்ந்து, சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி மாநாடு நடத்தின. அதற்கு முன்னதாகத்தான் நாடகக் காதல் என்றும், ஜீன்ஸ் பேன்ட், கறுப்புக் கண்ணாடி அணிந்து மற்ற சமூகங்களின் பெண்களைக் கவர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்றும் தலித் இளைஞர்களுக்கு எதிரான வன்மப் பேச்சுகள் சுற்றுக்கு விடப்பட்டிருந்தன. ஆக, சமூகப் பாதுகாப்பு என்பது, சாதிக் கலப்பு நடந்துவிடலாகாது என்ற நோக்கத்தை, குறிப்பாக தலித் சமூகங்களோடு கலந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தையே வலியுறுத்தியது என்று புரிந்துகொள்ளலாம். எளிய சொற்களில் கூறுவதானால் தீண்டாமையைத் தொடர்வதுதான் நோக்கம்.

கட்டுமானத்தின் வலிமை

இடைநிலைச் சாதிகளில் இந்தக் கருத்தாக்கம் ஆழமாக ஊன்றியிருப்பதுதான் சாதியக் கட்டுமானத்தின் முக்கியமான வெற்றி. அந்த ஒவ்வொரு சாதியும், அதற்கு மேலானது என்று கூறிக்கொள்ளும் மற்ற சாதிகளால் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அதனால் ஆவேசம் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், தங்களுக்குக் கீழே உள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளும் பிரிவுகளோடு உறவு ஏற்பட்டுவிடக்கூடாது, அவ்வளவுதான். தனக்கு மேலே இருந்து தன்னை மிதிக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்ற குமுறலை விட, தனக்குக் கீழே இருந்து தன்னால் மிதிக்கப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதில் ஒரு மன நிறைவு. குரூரத்தில் ஊறிய மன நிறைவு இது.

இங்கே திட்டவட்டமாகப் புலப்படுவது என்னவென்றால், சாதியத்தின் அடிப்படையே தீண்டாமைதான். தொடக்கத்தில் சாதிப் பிரிவினைகளில் தொழில் சார்ந்த ஏற்பாடுகள் இருந்தன. ஆனால், தொழில்களில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் அதற்குக் கீழே தள்ளப்பட்ட பிரிவைத் தனக்குச் சமமானவர்கள் அல்ல என்றும், ஆகவே தன் சமூகத்துடன் உறவு கொள்ளத் தகாதவர்கள் என்றும் வரித்துக்கொள்ளும்படி செய்யப்பட்டது.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 2 | ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமை-யா? (Is caste or untouchability to be abolished?)

‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ உருவாக்கப்பட்டபோது, “சாதியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு இல்லை. சாதியை வைத்துக்கொண்டே தீண்டாமையை எப்படி ஒழிக்க முடியும்,” என்று சிலர் அப்போது சிலர் கேள்வி எழுப்பினார்கள். சாதிகளை ஒழிப்பதுதான் இறுதி இலக்கு. அதை நோக்கிச் செல்கிறபோது தீண்டாமை அவலங்களை ஒழிப்பதே அமைப்பின் நோக்கம் என்றும், தீண்டாமை ஒழிப்பே சாதி ஒழிப்புக்காகத்தான் என்றும் அமைப்பின் தலைவர்கள் விளக்கம் அளித்தார்கள். மேலடுக்கு முதல் கீழடுக்கு வரையில் ஒவ்வொரு சாதிக்கும் இடையேயான, நாங்கள் உயர்ந்தவர்கள் நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தியல்தான் சாதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது. பொருளாதார முன்னேற்றங்களுக்கு அடிப்படையான பங்கிருக்கிறது என்றாலும், அதனால் மட்டுமே முழுமையான மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது. பெருநகரங்களின் அடுக்கக வீடுகளும், உயர்பதவிகளில் இருக்கிற தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோர் வந்து வழிபடுகிற ஆலயங்களில் அவர்கள் சென்ற பிறகு தூய்மைப்படுத்தப்படுகிற செய்திகளும் இதற்கு சாட்சியமளிக்கின்றன.

உயர் வகுப்பு என்று அவர்களாகச் சொல்லிக்கொள்கிற சாதிகளுக்கிடையேயும் இந்தப் பாகுபாடு நிலவுகிறது. ஆலயக் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்கிற உரிமை எல்லா பிராமணர்களுக்கும் இல்லை. அவர்களிலும் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குத்தான் அந்தத் தகுதி என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் (நெடும் நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு) வந்த பிறகுதான் இதில் ஓர் அசைவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அந்த அசைவை அப்படியே நிறுத்திவிடுவதற்கான முயற்சியும் தொடர்கிறது. ஆலயங்களை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு, முன்போலத் தனியார் தர்மகர்த்தாக்களிடமே விட்டுவிட வேண்டும் என்ற பிரச்சாரத்தில் அந்த முயற்சியும் கலந்திருக்கிறது.

நீக்கமறப் பரவிய பாகுபாடு

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 2 | ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமை-யா? (Is caste or untouchability to be abolished?)

உயர் வகுப்போடு இது நிற்கவில்லை. சாதிக் கோபுரத்தில் அடிவாரத்தில் கூட வைக்கப்படாமல், அதற்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கிற, இன்று தலித் என்று பொதுப் பெயரால் குறிப்பிடப்படுகிற, தாழ்த்தப்பட்டு ஒதுக்கப்பட்ட சாதிகளிலும் இந்தப் பாகுபாடு இருக்கிறது. அவர்களுக்கிடையே மண உறவு கிடையாது, அவர்களில் ஒரு பிரிவினரின் கோவிலில் அவர்களுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கும் பிரிவினர் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

இப்படி, பிற்படுத்தப்பட்டோராகவும், தாழ்த்தப்பட்டோராகவும் பிரிக்கப்பட்டுள்ளவர்களைக் கொண்டே பாகுபாட்டைப் பராமரித்து வருவதில்தான், பிராமணியத்தால் பின்னப்பட்ட சாதிய நுட்பம் இருக்கிறது. இது எப்படியென்றால், ஆணுக்குக் கட்டுப்பட்டவளாகவும், ஆணின் தேவைகளை நிறைவேற்றுகிறவளாகவுமே பெண் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்கக் கருத்தியல்கள், குடும்பங்களில் உள்ள பெண்களின் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் போதிக்கப்படுகின்றன அல்லவா, அது போலத்தான்.

இந்த உயர்வு தாழ்வுக் கோட்பாடுகளையும், பிரித்து வைக்கும் ஏற்பாடுகளையும் இடைநிலை, அடிநிலைப் பிரிவுகள் ஏற்றுக்கொண்டது எப்படி? அதாவது பிராமணிய விதிகளை சத்திரியர்களும் வைஷ்யர்களும், சூத்திரர்களுமே கூட, ஏற்றுக்கொண்டது எப்படி? ஒதுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோர் ஒப்புக்கொண்டது ஏன்? அடுத்த சந்திப்பில் இக்கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயல்வோம்.

முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai)  – 1 | இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்? – அ. குமரேசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *