சாதி இருக்கும் வரை -3
வர்க்கப் பாகுபாட்டிற்கும் வர்ண வகைப்பாட்டிற்கும் என்ன தொடர்பு?
– அ. குமரேசன்
சாதியில் உயர்வு தாழ்வுக் கோட்பாடுகளை இடைநிலை, அடிநிலைப் பிரிவுகள் ஏற்றுக்கொண்டது எப்படி? பிராமணிய விதிகளை சத்திரியர்களும் வைசியர்களும், சூத்திரர்களும் ஏற்றுக்கொண்டது எப்படி? ஒதுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோர் கூட ஒப்புக்கொண்டது ஏன்?
இந்த வினாக்களின் விடைகளைத் தேடுவதற்கு ஒரு வெளிச்சம் தேவைப்படுகிறது. இந்தத் தொடரின் தொடக்கத்தில் இந்தியச் சமுதாயம் என்ற தொடர் வண்டி ஓடுகிற இருப்புப் பாதையின் இரண்டு தண்டவாளங்களில் ஒன்று சாதியம், இன்னொன்று பெண்ணடிமைத்தனம் என்று பார்த்தோம். அந்த இருப்புப் பாதை போடப்பட்டிருக்கிற சரளைக்கல் வழித்தடத்தைத் தாங்கியிருப்பது வர்க்கக் கட்டுமானம் என்றும் பார்த்தோம்.
உலகின் எந்த நாட்டிலுமே, எந்தச் சமுதாயத்திலுமே தண்டவாளங்களாகப் பல்வேறு வகைப்பட்ட சமூக அமைப்புகள் இருப்பதைக் காணலாம். அந்தச் சமூக அமைப்புகளுக்கான அடிக்கட்டுமானம் வர்க்கப் பிரிவினைதான். நம் ஊரில் இருப்பவன், இல்லாதவன் என்ற எளிமையான சொற்களில் வர்க்க வேறுபாட்டைச் சொல்லி வந்திருக்கிறோம். இதில் ஒரு பகுதி உண்மை இருக்கிறது என்றாலும், பணக்காரர், ஏழை என்ற ஏற்பாடு மட்டுமே வர்க்க வேறுபாடு அல்ல. இல்லாதவர்கள் முயன்றால் இருப்பவர்களாகிவிட முடியும். தற்போதுள்ள அரசாங்கம் கூட திட்டமிட்ட நடவடிக்கைகளால் ஏழைகளைப் பணக்காரர்களாக்கிவிட முடியும். ஆனால் வர்க்க வேறுபாட்டை ஒழித்துவிட முடியாது.
வர்க்கங்களும் வரலாறும்
வர்க்கம் என்றால் என்ன? சமூகம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல் ஆகிய நிலைகளில் ஒரே குழுவாக அல்லது ஒரே கூட்டமாக அணி பிரிந்திருப்பதே வர்க்கம். இதில் சமூக வர்க்கம், பொருளாதார வர்க்கம் என்ற அடிப்படையான பிரிவுகள் இருக்கின்றன. ஒரே சமூகப் பொருளாதாரத் தகுதிகளோடு உள்ள மக்கள் தொகுதியை சமூக வர்க்கம் என்கிறோம். வருமான அடிப்படையிலான, அந்த வருமானம் எப்படி வருகிறது என்ற அடிப்படையிலான மக்கள் தொகுதியே பொருளாதார வர்க்கமாகும். இந்த இரண்டிலுமே பொருளாதாரம் இருக்கிறது. ஆம், பொருளாதாரம்தான் வர்க்கத்தின் அடிப்படை.
பொருளாதாரம் எப்படி உருவாகிறது? உழைப்பால் உருவாகிறது. மேடு பள்ளமாக இருக்கும் நிலத்தைச் சீர்ப்படுத்தி, வயலாக மாற்றி, உழுது, விதை தூவி, நீர் பாய்ச்சி, களைகள் அகற்றி, விளைந்து முதிர்ந்ததும் அறுவடை செய்து, களத்து மேட்டில் உதிர்த்து, தானியங்களைக் குவித்து, மூட்டைகள் கட்டி, வீட்டில் சேர்ப்பது வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் உழைப்பு நடந்துகொண்டே இருக்கிறது. உழைத்துத் திரட்டிய ஆதாரமான பொருளாகிய தானியம் யாருடைய வீட்டில் சேர்க்கப்படுகிறது? வயலில் அத்தனை உழைப்பையும் செலுத்தியவர்களின் வீட்டில் அல்ல – அந்த வயல் யாருக்குச் சொந்தமோ, அந்த நிலவுடைமையாளரின் வீட்டில் சேர்க்கப்படுகிறது. காலப் போக்கில், நேரடியாகச் சந்தையில் கொண்டுபோய்ச் சேர்க்கிற, சந்தையிலிருந்து நுகர்வோருக்குப் போகிற ஏற்பாடுகள் வந்துவிட்டன. இவையனைத்துமாகச் சேர்ந்து உருவாக்குவதுதான் பொருளாதாரம்.

நிலத்தின் உடைமையாளர்–நிலத்தில் உழைப்பவர் என்ற பிரிவினைதான் உலகத்தின் முதல் வர்க்க வேறுபாடு. இது மனிதர்களுடைய வரலாற்றின் தொன்மைக் காலத்திலேயே நிகழ்ந்தது. நிலத்தில் விழும் விதைகள், மழை நீரை வாங்கிக்கொண்டு முளைத்துப் பயிராகித் தானியங்களும் காய்கனிகளும் விளைவதைக் கண்டு, அதே போல் செய்து பார்த்ததால் விளைந்ததுதான் விவசாயம். உணவைத் தேடி காடு முழுவதும் அலைய வேண்டியதில்லை, இருக்கும் இடத்திலேயே உற்பத்தி செய்யலாம் என்று மனிதர்கள் கண்டறிந்ததன் தொடர் விளைச்சலாகத்தான், அப்படித் தங்கி வாழ்ந்த பகுதிகள் ஊர்களாக உருவெடுத்தன. இன்னொரு பக்கம், இயற்கையாக எல்லோருக்கும் பொதுவானதாக இருந்த நிலத்தை வலுத்தவர்கள் கைப்பற்றுவதும், நிலத்திற்காகச் சண்டையிடுவதும் நிகழத் தொடங்கின. மற்றவர்களை நிலத்தில் வேலை செய்ய வைப்பதும், நிலம் கிடைக்காதவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக மற்றவர்களின் நிலங்களில் உழைப்பதும் நடைமுறையாகின.
ஊரின் அரசு
ஊர் எனப்படும் குடியிருப்புப் பகுதிகள் உருவானதைத் தொடர்ந்து, உடைமையாளர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் தலையிடுவது, எதிர்ப்புகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது, வேறு பகுதிகளிலிருந்து வந்து தாக்கக்கூடிய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது, வேறு பகுதிகளுக்குச் சென்று எதிரிகளைத் தாக்குவது, அந்தப் பகுதியையும் கைப்பற்றுவது… இப்படியான மேலாண்மையை மேற்கொள்கிற அமைப்பு கட்டமைக்கப்பட்டது. அதுதான் அரசு. தொன்மைக் காலத்தில், மனிதக் குழுக்களுக்கு உள்ளேயே அனுபவ முதிர்ச்சியின் காரணமாகவும் உடல் வலிமையின் காரணமாகவும் வழிகாட்டிய தலைவர்கள் இருந்தார்கள். ஊர்கள் உருவான பின் அரசின் தலைமையிடத்திற்கு வந்தவர்கள் அரசர்களானார்கள்.
ஒரு பொருளைக் கொடுத்து வேறொரு பொருளை வாங்கிக்கொள்கிற பண்டமாற்று முறையில் தொடங்கி, பின்னர் பணம் உருவாக்கப்பட்ட பிறகு, பொருளுக்குப் பதிலாகப் பணத்தைக் கொடுத்துப் பொருள்களை வாங்குகிற வணிக முறைகள் உருவாகின. அதிலேயும், வணிகத்தை நடத்துகிறவர்கள், அவர்களிடம் உழைக்கிறவர்கள் என்ற பிரிவுகள் ஏற்பட்டன. நிலத்திலும் வணிகத்திலும் வேலை செய்வதற்காக, மனிதர்களை அடிமைப்படுத்துவது, அடக்கி ஒடுக்குவது, அடிமைகளையே கூட மற்ற பொருள்கள் போலச் சந்தையில் விற்பனை செய்வது, அரசர்களுக்கும் பெரிய நிலவுடைமையாளர்களுக்கும் பரிசாகக் கொடுப்பது… இதெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் இணைந்தன. அரசரின் அல்லது நிலக்கிழாரின் மகளுக்கும் அவர்களிடம் வேலை செய்த அடிமைக்கும் காதல் மலர்ந்து சோகத்தில் முடிந்த கதைகளும் உண்டு. ஒரு சில வெற்றிக் கதைகளும் உண்டு.

நிலவுடைமைத்துவத்தோடும் வணிகத்தோடும் ஒப்பிட்டால் முதலாளித்துவம் மிக இளமையானது. 18ஆம் நூற்றாண்டில்தான் உருவானது. பொருள்களைத் தயாரிக்கும் இயந்திரங்கள் செய்யப்பட்டதும், அவற்றை விலை கொடுத்து வாங்கி நிறுவிக்கொள்கிற, மூலதனமாகிய முதலீடுகளை ஆள்கிறவர்களான முதலாளிகள் வந்தார்கள். அவர்களின் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவதற்குக் கூலி அடிப்படையில் வேலை செய்யும் மனிதர்களை நியமித்தார்கள். முதலாளி – தொழிலாளி வர்க்க வேறுபாடு உருவெடுத்தது.
சமுதாயங்களின் வரலாறு
முந்நூறு ஆண்டுகளே ஆகிற முதலாளித்துவம், அதற்கு முன்பாகப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் நிலவுடைமைத்துவத்தையும் வணிகக்களத்தையும் விட முற்போக்கானதாக, வேகமானதாகப் புறப்பட்டது, முந்தைய சமுதாய அமைப்புகளில் பல அசைவுகளை ஏற்படுத்தியது. நிலவுடைமைத்துவச் சமுதாயத்தின் அடிமை முறை, மன்னராட்சி, மதத்தின் ஆதிக்கம், சமூகக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை போன்றவற்றில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், அரசியல், கல்வி உள்ளிட்ட பொதுவாழ்வுக் களத்திற்குப் பெண்களும் வர முடியும் என்ற வளர்ச்சி முதலாளியத்தால் ஏற்பட்டதுதான். ஆட்சியில் இருப்பவர்களை, எந்தப் பாகுபாடுமில்லாமல் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்கள் தேர்ந்தெடுக்கிற ஜனநாயக முறையையும் முதலாளித்துவம்தான் கொண்டுவந்தது.
அதேவேளையில் முன்னெப்போதும் காணாத, லாப வேட்டைக்கான உழைப்புச் சுரண்டல், பணக்காரர்–ஏழை ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, வறுமைக் கொடுமை, பாலியல் தொழில், கள்ளச் சந்தை, கறுப்புப் பணம், சந்தை ஆக்கிரமிப்பு, சிறுதொழில்கள் அழிப்பு, லஞ்ச ஊழல் இன்ன பிற அவலங்களை உலகத்திற்கே பொதுவானதாக்கியதும் முதலாளித்துவம்தான்.
அன்று, நிலவுடைமைத்துவத்தின் பழைய சுரண்டல்களை எதிர்த்து நியாயமான உரிமைகளுக்காக உழைப்பாளிகள் போராடுவதும் தொடங்கியது. இன்று முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல்களை எதிர்த்து நியாயமான உரிமைகளுக்காக உழைப்பாளிகள் போராடுவதும் தொடர்கிறது. “இதுவரையில் இருந்துவரும் அனைத்து சமுதாயங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே,” என்று கார்ல் மார்க்ஸ்–ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் வழங்கிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்ற மகத்தான நூலில் கூறியிருப்பது எவ்வளவு உண்மை!
முதலாளிகளை எதிர்த்து நிறுவனத் தொழிலாளர்கள் போராடுவதையும், நிலவுடைமையாளர்களை எதிர்த்துப் விவசாயத் தொழிலாளர்கள் போராடுவதையும் வர்க்கப் போராட்டம் என்று சொல்லலாம். ஆனால், வரலாற்றில் இனங்களுக்கு இடையேயான தகராறு, மதங்களுக்கு இடையேயான சண்டை, சாதிகளுக்கு இடையேயான மோதல், நாடுகளுக்கு இடையேயான போர் – இப்படிப்பட்ட போராட்டங்களும் நடந்து வந்திருக்கின்றன. அப்படி இருக்கிறபோது அனைத்து சமுதாயங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் என்று எப்படிச் சொல்ல முடியும்? அதற்கும் சாதியத்துக்கும் என்ன தொடர்பு? உழைப்புச் சுரண்டலை மையமாகக் கொண்ட வர்க்கக் கட்டுமானத்தின் மேலேதான் சாதிப் பாகுபாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று எவ்வாறு வாதிடுவது?
ஒட்டியிருப்பதைத் துடைத்தெறிய
பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் பாகுபாட்டிற்கும், பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிப்பாகுபாட்டிற்கும் உள்ள உறவைப் புரிந்துகொள்வது சாதியத்தை இறுதியாக ஒழித்துக்கட்டுவதற்கு முக்கியமான தேவையாகும். வெளியே இருக்கிற சாதியத்தை மட்டுமல்ல, நம் மனசுக்குள் ஏதோவொரு வடிவில் சாதியம் ஒட்டிக்கொண்டிருக்குமானால் அதைத் துடைத்தெறிவதற்கும் வர்க்க அடிப்படையைப் புரிந்துகொண்டாக வேண்டும். சாதி ஒழிப்பு பற்றிப் பேசுகிறவர்களில் பலர் வர்க்க அடிப்படையை ஒரு காரணமாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படி எடுத்துக்கொள்கிறவர்களிலும் பலர் வர்க்கப் போராட்டத்தை முக்கியமானதாக வலியுறுத்துவதில்லை.

மோதல்கள் வேறுவேறாகத் தோன்றினாலும், யார் யாரை அடக்குவது, யார் ஆதிக்கம் செலுத்துவது என்பவைதான் அடிப்படையான சண்டை. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதில், எல்லைகள் தாண்டி நிலப்பரப்புகளைக் கைப்பற்றுகிற நோக்கம் இருக்கிறது. அன்றைய மன்னராட்சிக் காலத்தில் அந்த நோக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. இன்றைய மக்களாட்சிக் காலத்தில் அந்த நோக்கம் நுட்பமாகத்தான் புலப்படும். நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவது எதற்காக? சந்தையை விரிவுபடுத்துவதற்காக. இதன் முற்றிய வடிவமாகத்தான் இரண்டு உலகப் போர்களால் பூமி பலத்த காயமடைந்தது.
பூமிப்பரப்பு யாருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற மதச்சண்டையில், முதலாளித்துவத்தின் சந்தை ஆக்கிரமிப்பு மூர்க்கமும், உழைப்புச் சுரண்டல் வேட்கையும் பாதுகாக்கப்படுகின்றன. மக்களின் போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. இனச் சண்டையில், சாதிச் சண்டையில் இதே ஆதிக்க நோக்கங்களும், அடக்குமுறை வெறிகளும், சுரண்டலுக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரள விடாமல் பிரித்துவைக்கிற சூதுகளும் இருக்கின்றன.
வர்ண வகைப்பாடு
இந்தியச் சூழலில், இங்கே ஆதிகால வர்க்கப் பாகுபாடு ஏற்பட்டபோது, நிலங்களை வளைத்துக்கொண்டவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், உறவினர்கள் என்ற சமூக வட்டம் ஒரு சாதியாகவும், நிலங்களில் வேலை செய்து பிழைக்க வேண்டியிருந்தவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், உறவினர்கள் என்ற சமூக வட்டம் ஒரு சாதியாகவும் பிரிந்தன. காடுகளிலும், இதர பல நிலப்பகுதிகளிலும் வாழ்ந்த சமூகங்கள் அவர்களுடைய உழைப்பு சார்ந்து சாதிகளாக அடையாளம் பெற்றனர். இவற்றை உறுதிப்படுத்தும் வகைப்பாடாக வர்ணாசிரமம் வகுக்கப்பட்டது.
நிலங்களை ஆக்கிரமித்தபோது விரட்டியடிக்கப்பட்டவர்களும், காடுகளில் இருந்தவர்களும் பயிர் வேலைகளுக்காக மறுபடியும் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கான அன்றைய கூலியாக நிலத்தில் விளைந்த தானியங்களும் இதர உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன. பசியைத் தணித்துக்கொள்வதற்கு நிலையான, பாதுகாப்பான வேறு வழிகள் இல்லாத நிலையில், அந்த மக்கள் அந்த ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஊர்கள் நகரங்களாகி, நாகரிகங்கள் வளர்ந்தபோது, சேரும் குப்பைகளையும், கழிவுகளையும் அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதை யாரிடம் விடுவது? காடுகளிலிருந்து அடிமைகளாகப் பிடித்துவரப்பட்டவர்களிடம் அந்த வேலை தரப்பட்டது. பசி ஒருபுறமும், அரசதிகார ஆணைகள் ஒருபுறமுமாக நின்று அந்த மக்கள் இந்த ஏற்பாடுகளை ஏற்றாக வேண்டும், ஏற்க மறுத்தால் தண்டனை என்ற கட்டாயச் சூழலை ஏற்படுத்தின. அத்துடன், இந்தப் புனிதப்பணி இறைவனால் தீர்மானிக்கப்பட்டது என்று மனநிறைவோடு ஏற்க வைக்கும் பக்திக் கதைகள் புனையப்பட்டன. இப்போதும் புனிதப்பணி செய்பவர்கள் எனக்கூறி அவர்களின் கால்களைப் பொது விழாவில் கழுவப்படுவதையும், அப்புறம் ஊரின் கழிப்பறைகளைக் கழுவும் பணி அவர்களிடமே தள்ளிவிடப்படுவதையும் பார்க்கத்தானே செய்கிறோம்? பொதுவாக அறியப்பட்டுள்ள நந்தனார் கதையில், கடைசியில் அவர் நெருப்பில் குளித்து இறைவனின் பாதங்களைத்தான் அடைய முடிந்ததே தவிர, கோவிலுக்குப் போகவிடாமல் வேலை வாங்கிய பண்ணையாருக்குச் சமமாக நிற்க முடியவில்லை, கோயிலுக்குள் நுழைய நெருப்பு நிபந்தனை விதித்த உயர்சாதியினரோடு கலந்திருக்க முடியவில்லை. அந்தக் கதை அப்படியில்லை என்று இப்போது புதிய விளக்கங்கள் தரப்படுகின்றன.
ஊரைச் சுத்தமாக்கியவர்கள் அசுத்தமானவர்களாகப் பார்க்கப்பட்டு, ஊருக்கு வெளியே குடியேற்றப்பட்டார்கள். இன்று வரையில், அந்த மக்களின் வழிவந்தவர்கள் அதே வேலைகளிலும் அதே சேரிகளிலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். நந்தனார் கோவிலுக்குள் நுழைந்தாரோ இல்லையோ நாம் இங்கேயிருந்து, முதல் பத்தியில் உள்ள கேள்விகளுக்குள் நுழையலாம்.
கட்டுரையாளர் :
– அ. குமரேசன்
முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) – 2 | இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்? – அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: பாகுபாட்டு தர்மங்களும் வேறுபடுத்தும் விதிகளும்
Pingback: ஒவ்வொரு சமூகத்திற்க்கென ஒதுக்கப்பட்ட வேலை