ஒவ்வொரு சமூகத்திற்கும் என ஒதுக்கப்பட்ட வேலை-களால் பொருளாதாரம் முன்னேறியதாமே!
சாதி இருக்கும் வரை – 5
– அ. குமரேசன்
“சமூகத்திற்கான பல்வேறு பணிகளை நிறைவேற்றும் உழைப்புப் பிரிவினையாகத்தான் சாதிப் பாகுபாடுகளும் அவற்றை வகைப்படுத்திய வர்ண ஏற்பாடுகளும் தோன்றின. மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கியது எந்த அளவுக்கு இயற்கையான வளர்ச்சியோ, அதே அளவுக்கு சாதிப் பிரிவுகளும் இயற்கையானவை. ஆகவே இயற்கையான சாதியை ஒழிக்க முடியாது.”
சாதி குறித்த விவாதங்களில் இப்படியொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அப்படியான வாதத்தைத் துருவிப் பார்த்தால், சாதியை ஒழிக்க முடியாது என்ற கணிப்பை விட, ஒழிக்கக் கூடாது என்ற விருப்பே தூக்கலாக இருப்பது புலனாகும். சாதியின் வேர்களை ஆராய்ந்த அண்ணல் அம்பேத்கர், அது இயற்கையானதோ, இந்தியச் சமுதாயத்தின் இன்றியமையாத கூறோ அல்ல; மாறாக அக்காலத்தின் சமூகத் தேவைகள், பொருளாதாரத் தேவைகளின் விளைவாக உருவானதுதான் என்றார்.
வேலைப் பொறுப்புகள்தான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வர்ணச் சாதி எற்பாடு என்றால், இன்று ஆலயங்களில் அர்ச்சனை செய்கிறவர்களாகவும், கல்வி நிலையங்களில் ஆசிரியர்களாகவும், அரசு நிர்வாகங்களில் சட்டம் வகுப்போராகவும், தொழில் நிறுவனங்களில் முதலீட்டாளர்களாகவும் வேறு வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்களே, அவர்களெல்லாம் வர்ணக் கோபுரத்தின் முதல் மூன்று அடுக்குகளைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்படுவார்களா? அல்லது, வாய்ப்பின் அடிப்படையிலும் நல்ல ஊதியத்திற்காகவும் அந்த மூன்று பிரிவுகளின் சாதிகளைச் சேர்ந்தவர்கள் தொழிற்சாலைகளில் கருவிகளை இயக்குகிறவர்களாக, பொருள்களைத் தயாரிக்கிறவர்களாக வேலைக்கு வந்துவிட்டார்களே, அவர்களெல்லாம் நான்காவது அடுக்கைச் சேர்ந்தவர்களாக ஏற்கப்படுவார்களா? அவர்களே கூட அதை ஏற்பார்களா?
பிராமண சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற குடும்பங்களால் வெற்றிகரமாக நடத்தப்படுகிற பெரு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் தொழிலாளிகளாக அதே சமூகத்திலிருந்து வந்தவர்களும் வேலை செய்கிறார்கள். அந்தக் குடும்பங்கள் தங்களை வைசியர் என்று கூறிக்கொள்ளுமா? அந்தத் தொழிலாளிகள் தங்களைச் சூத்திரர்கள் என்று அறிவித்துக்கொள்வார்களா?
புதிய அர்ச்சகர் சட்டம் வழி திறந்துவிட்டதால், முறைப்படி பூசைக்குரிய செய்யுள்களைப் பயின்று தீபாராதனை செய்கிறவர்கள் இனி பிராமணர்களே என்று அறிவிக்கப்படுவார்களா? சொல்லப்போனால், படித்திருந்தும் அர்ச்சகராகக் கோவில் கருவறைக்குள் நுழைவது இன்னும் எளிதானதாக இல்லை, எத்தனையோ தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று உரிய சான்றிதழ் பெற்றவர்கள் கூறுகிறார்கள். சட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில், அது செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆகமக் கோவில்களுக்கும் மற்ற கோவில்களுக்கும் மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றவும் ஆணையிட்டிருக்கிறது. இது, சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறத் தடையாகவும் இருக்கிறது.
முக்கியக் காரணி
இப்படிப்பட்ட பாகுபாடுகளை விமர்சித்தால் உடனே சிலர், இந்து மதத்தைத் தாக்குவதாக ஆவேசமாக முழங்குவார்கள். உங்களின் மதத்தில் இந்த ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்டால் பதில் சொல்லாமல் நழுவிவிடுவார்கள். அல்லது இந்து மத வெறுப்பிலிருந்துதான் இப்படியெல்லாம் கேட்கப்படுகிறது என்று திசைதிருப்ப முயல்வார்கள். சாதியை நிறுவனக் கட்டமைப்பாக்கியதில் இந்துத் தத்துவம் ஒரு முக்கியக் காரணியாக இருப்பதை அம்பேத்கர் அடையாளம் காட்டியிருக்கிறார். மனுஸ்ருமிதி உள்ளிட்ட மத நூல்களும் நடைமுறைகளும் சமூகப் பிரிவுகளையும் அசமத்துவத்தையும் நிலையானதாக்கின, சாதியைத் தெய்வீகமான ஒழுங்கமைப்பாக மதம் அங்கீகரித்ததானது, பாகுபாட்டையும் சமூக சமத்துவமின்மையையும் நியாயப்படுத்தி, இயல்பாக்க உதவியது என்றார் அவர்.

‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, சாதியம் தொடர்பான ஒரு விவாதத்தின்போது, சாதி அடிப்படையிலான முயற்சிகள் தொழில் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் இட்டுச்சென்றன, நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கின்றன என்ற கருத்தை முன்வைத்தார். குஜராத்தின் பனியா, தமிழகத்தின் சிவகாசியில் நாடார் போன்ற சாதிகளைச் சேர்ந்தோர் வணிகத்திலும் பட்டாசுத் தயாரிப்புத் தொழிலிலும் முன்னேறியிருப்பதை அவர் உதாரணங்களாகக் காட்டினார். ஒரு வாதத்திற்காக இதை ஏற்பதென்றால், நாடு முழுவதுமே கழிப்பறைத் தூய்மைப் பணியில் ஈடுபடத் தள்ளப்பட்ட சமூகங்களால் அந்தத் தொழிலிலும், அவர்களது வாழ்க்கையிலும் முனனேற்றம் ஏற்பட்டதா, நாட்டின் பொருளாதாரத்தில் அது பங்களித்ததா?
2013ஆம் ஆண்டில், கையால் மலம் அள்ளும் வேலையில் பணியமர்த்துவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் அது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக ரயில்வே, ராணுவம் ஆகிய துறைகளிலும் நகராட்சிகளிலும் மாநகராட்சிகளிலும் பெருமளவுக்கு இந்த வேலைகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுகிற பல செய்திகள் வந்திருக்கின்றன. கழிவுத் தொட்டிகளில் இறங்கி தூய்மைப்படுத்தும்போது நச்சுவாயுத் தாக்குதலால் வாழ்க்கைக் கதை முடிந்துபோகும் துயரங்கள் முடியாத தொடர்கதையாக இருக்கின்றன. அந்தப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டிருப்பதால், மனிதர்களை நேரடியாக நியமித்ததற்குப் பொறுப்பேற்காமல் அரசு நிர்வாகங்கள் தப்பித்துக்கொள்கின்றன.
இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது – கையால் மலம் அள்ளும் வேலைகளில் இறக்கிவிடப்படுகிறவர்களில் 97 சதவீதத்தினர் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ஒன்றிய அரசின் புள்ளிவிவரமே இதைத் தெரிவிக்கிறது. அந்தத் தரவுகளின்படி, இந்த வேலைகளில் பணியமர்த்தப்பட்ட 42,594 பேர் பட்டியல் சாதிகளையும், 421 பேர் பட்டியல் பழங்குடிகளையும், 431 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அதிகாரப்பூர்வமாகவே இந்த வேலைகளுக்கு எடுக்கப்பட்டவர்கள். இவர்கள் அல்லாமல், தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் வேலை செய்கிறவர்கள் எத்தனை பேர்? அவர்களின் சமூகப் பின்னணி பற்றிய தரவுகள் என்ன? இது வரை அது தொடர்பான முழு விவரங்கள் கிடைக்கவில்லை. 2023ல் சென்னையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, கேள்விகள் கேட்கப்பட்ட 152 பெண் தொழிலாளர்கள் தலித்துகளே என்ற கறை அழியாமல் நீடிக்கிறது என்று தெரிவித்தது. தமிழகம் முழுவதுமே இந்த நிலைதான். (‘கான்டம்பரரி வாய்ஸ் ஆஃப் தலித்’ – சமகால தலித் குரல்)
முதன் முதலாக நகரத் துப்புரவுப் பணி ஒப்பந்தம் எடுத்த ஒரு நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில், அவர்களது சில திட்டங்கள், சேகரித்த பல்வேறு தகவல்கள் பற்றிச் சொன்னார்கள். துப்புரவுப் பணியாளர்களாக வேலைக்கு எடுக்கப்பட்டிருப்பவர்களின் சாதிப் பின்னணிகள் என்ன என்று நான் கேட்டபோது, அந்தத் தகவல்களை சேகரிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
82 வடிவங்கள்
மற்றவர்கள் செய்ய முன்வராத இந்த வேலை இவர்களின் தலையில் சுமத்தப்படுவது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த மக்களுக்கு எதிரான தீண்டாமை இழிவுகளும் தொடர்கின்றன தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், “நாங்கள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 82 வகையான தீண்டாமை செயல்களைக் கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்,” என்று தெரிவித்திருக்கிறார். கோவில்களில் வழிபாடு மறுப்பு, தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளைகள், இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயானங்களில், படித்திருந்தாலும் கூட மிரட்டி குலத் தொழிலை செய்ய வைப்பது, பள்ளிக் கூடங்களில் கொஞ்சம் தனித்து அமர வைப்பது, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுப்பது, தாழ்த்தப்பட்டவர்கள் பகுதியைப் பிரித்துக் காட்ட தீண்டாமைச் சுவர் அமைப்பது, சாதி ஆணவப் படுகொலைகள், கிராமப் பஞ்சாயத்துக்களில் பட்டியல் இனத் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்ற முடியாமை… போன்ற பல வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
“400 க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தபோது, இன்னும் அதிர்ச்சி எங்களுக்கு காத்திருந்தது. முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே சாதிவாரியாகப் பிரிந்து செயல்படுவதைக் கண்டறிந்தோம். அவர்கள் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் சாதீய நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சத்துணவுப் பள்ளிகளில் பட்டியலினக் குழந்தைகளைத் தனி வரிசையில் அமர வைத்திருந்த கொடுமையையும் அறிய நேரிட்டது. மாணவர்களின் நன்மை, சமூக நல்லிணக்கம் கருதி நாங்கள் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் பொதுவெளியில் வெளியிடாமல் அரசு மற்றும் அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் சந்துரு ஆணையத்திடம் வழங்கினோம். தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்ந்த பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை கோரினோம். பட்டியல் இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடி கூட ஏற்ற முடியாமல் இருக்கும் ஊராட்சிகள் குறித்து அரசு கவனத்திற்குக் கொண்டுசென்றபோது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது,” என்ற அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். (‘அறம்’ இணைய இதழ், ஜனவரி 30, 2025).
எது வரையில்?
இந்தத் தொடரின் தொடக்கத்தில், “இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதிப் பிரச்சினை பற்றிப் பேசுவீர்கள்,” என்று கேட்கப்பட்டதையும், “சாதி இருக்கும் வரையில்,” என்று பதிலளித்ததையும் குறிப்பிட்டிருந்தேன். அதனோடு இணைந்த இன்னொரு கேள்வி: “(அரசுப் பணிகளிலும் கல்விக்கூடங்களிலும்) இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர வேண்டும்?”
“இட ஒதுக்கீட்டின் நியாயமான நோக்கமும், சமூக நீதி லட்சியமும் முழுமையாக நிறைவேறுகிற வரையில்.” –இதுதான் அந்தக் கேள்விக்கான பதிலாக இருக்க முடியும். வரலாற்று அநீதிகளால் தாழ்த்தப்பட்ட மக்களும் பின்னுக்குத் தள்ளப்பட்ட சமூகங்களும் புறக்கணிக்கப்பட்ட குடிகளும் நீதியின் கதகதப்பான அணைப்பை முற்றிலுமாக அனுபவிக்க, அவர்கள் மேலெழுவதை உறுதிப்படுத்தும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் தொடர வேண்டும். ஒரு கட்டத்தில், அப்படிப்பட்ட ஆதரவு நடவடிக்கைகள் இல்லாமலே தங்களை நிறுவிக்கொள்ளும் திறன் அந்த மக்களிடையே மேலோங்கி வளரும்.
நான்கு பேர் இருக்கிற வீட்டில் அந்த நான்கு பேருக்காகவும் நான்கு ரொட்டிகள் கிடைக்கச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளத்தானே வேண்டும்? இப்போது இரண்டு ரொட்டிகள்தான் இருக்கின்றன என்றால், அவற்றை நால்வருக்கும் பங்கிடுவது எப்படி, அதில் வலிமையானவருக்கு எந்த அளவு, நலிந்திருப்பவருக்கு எந்த அளவு என்று திட்டமிடத்தானே வேண்டும்? அது போலத்தான், சமூக நீதி முனைப்புகள் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் என்ற சமத்துவ நீதி வாழ்க்கையை உறுதிப்படுத்தப்படுவதோடும் இணைய வேண்டும். இன்றைய நிலைமையை சமாளிக்க இட ஒதுக்கீடு வழிமுறைகளைத் தொடரவும் வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியமும் போராட்டமும் இவைதான்.
எங்கும் எதிலும் தனியார்மயம் தாண்டவமாடும் சூழலில், அரசுத் துறைகளும் பொதுத்துறைகளும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலையில், இருக்கும் கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் சுருங்கி வருகின்றன. அதாவது அந்த இரண்டு ரொட்டிகளுமே கூட வெட்டிச் சுருக்கப்படுகின்றன. இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் போராட்டத்தோடு, நான்கு ரொட்டிகளை மெய்யாக்குவதற்கான போராட்டத்தையும் வலுப்படுத்தியாக வேண்டியிருக்கிறது. அப்படியொரு விரிந்த இயக்கமாக வெடிப்பதைத் தடுப்பதற்காகவே, மக்கள் அதற்காக ஒன்றிணைவதைக் கெடுப்பதற்காகவே சாதி– மத நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். உண்மைகளை எடுத்துக்கூறி மக்களைத் திரட்டுகிற மகத்தான பணியும் சமத்துவப் போராளிகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
நிலவரத்தைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய காட்சி: பட்டியல் சாதி மக்களின் வேலைவாய்ப்புகள் 8.4 சதவீதமாகச் சுருங்கியிருக்கிறது. அதேவேளையில், அந்த மக்களில் நூற்றுக் 84 பேர் எவ்வித உறுதியுமற்ற முறைசாராத்துறைகளில்தான் வேலை செய்கிறார்கள். ஒன்றிய அரசுத் துறைகளிலும் நிறுவனங்களிலும் பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாகச் சரிவடைந்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த 25,000 வேலைகள் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டன. பள்ளிக்கல்வியை எடுத்துக்கொண்டால், 2018ஆம் ஆண்டில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய பழங்குடியினரில் இப்போது 35,000 பேர் குறைந்துவிட்டார்கள். (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), 24வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மான முன்வரைவு).
இதர பிரிவு மக்களுக்கான வாய்ப்புகளிலும் அரிமானம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நிலைமை இப்படியிருக்க சிலர், இட ஒதுக்கீட்டால் புதிய வர்ணாஸ்ரமம் தோன்றிவிட்டது என்று பேசக் கிளம்பியிருக்கிறார்கள்! ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில், “ஜாதி, வர்ணம், இருபிறப்பாளர், தூய்மையற்றோர் இல்லாமல் சமூகம் இல்லை” (No Caste Without Jati, Varna, Dwija and Adhama) என்றொரு கட்டுரையை எழுதியிருக்கும் புராண ஆய்வாளரும் சொற்பொழிவாளருமான தேவ்தத் பட்நாயக், வர்ணாஸ்ரமம் பற்றிய சில சுவையான தகவல்களையும், எப்படி அது மக்களைப் பாகுபடுத்துகிறது என்ற கருத்துகளையும் கூறுகிறார். இறுதியில், “இன்று நமக்கு ஒரு நவீன வர்ண அமைப்பு கிடைத்திருக்கிறது: பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள்.
முன்பு எல்லோரும் உயர் வர்ணத்தவராக, துவிஜர்களாக இருக்கவும் அரசவைச் சலுகைகளைப் பெறவும் விரும்பினார்கள். இப்போது, ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகத்தில், மேலும் மேலும் பல சமூகங்கள் தங்களது நவீன வர்ண நிலையைத் தாழ்த்திக்கொள்ளவும், இட ஒதுக்கீட்டு ஆதாயங்களைப் பெறவும், நேர்மறை பாகுபாட்டையும் விரும்புகிறார்கள். இந்த நெகிழ்வும் கூட இடை அடுக்குகளில்தான் காண முடிகிறது, பிராமணர்களுக்கு இல்லை,” என்று முடிக்கிறார்! சாதிய மேலடுக்குகளைச் சேர்ந்த சிலர் தங்களை பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்று போலியான சாதிச் சான்றிதழ் கொடுத்து, இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற முயல்வது ஆங்காங்கே நடைபெறுவது உண்மை. அதை இவர் விமர்சிப்பதாக எடுத்துக்கொள்வதா, இல்லையேல் இட ஒதுக்கீட்டால்தான் சாதிப் பாகுபாடுகள் தீவிரமாகிவிட்டன என்போரின் விதண்டாவாதத்திற்கு வலுச்சேர்ப்பதாகப் புரிந்துகொள்வதா?
சாதியின் தோற்றுவாய், அதன் வலுவான கட்டமைப்பு, எங்கும் ஊடுறுவியிருக்கும் தன்மை, அதனால் யாருக்கு ஆதாயம், அதை முடிவுக்குக் கொண்டுவரும் வழி என பல்வேறு கோணங்களில், பல்வேறு தளங்களில் உரையாடல்களும் விவாதங்களும் களச் செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. முடிந்த முடிவுகளோடு மனக்கதவை மூடிக்கொள்ளாமல், விரியத் திறந்துவைத்துப் புதிய உண்மைகளும் புரிதல்களும் அணுகல்களும் குடியேற வழிவிடுவது முக்கியம். என்ன நடந்திருக்கிறது என்ற அறிவு, என்ன நடக்க வேண்டுமென்ற தெளிவு இரண்டுமே இன்றைய கட்டாயத் தேவை. அடுத்த சந்திப்பில் அது பற்றிய சிறு பகிர்வோடு விடைபெறுவோம்.
முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) – 3 | இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்? – அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: சாதியமைப்பு நாடுகள்: Caste Systems Exists Countries