உலகத்தின் மற்ற மூலைகளில் எங்கெல்லாம் பறக்கிறது சாதிக் கொடி? (Caste Systems Exists Countries)
சாதி இருக்கும் வரை – 6
– அ. குமரேசன்
இந்தச் சந்திப்போடு இவ்வுரையாடலை நிறைவு செய்யலாம் என்று சென்ற சந்திப்பின் முடிவில் கூறி விடைபெற்றோம். ஒரு நண்பர், “சாதி நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறதா,” என்று கேட்டிருக்கிறார்.
மற்ற நாடுகளில் என்ன நிலைமை என்று தெரிந்துகொள்வது நம் நாட்டு நிலைமையை மாற்றத் தூண்டுதலாக இருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே நிறைவு செய்யும் திட்டத்தைத் தள்ளிப்போடுவோம், ஒரு சிறிய உலகப் பயணம் போய்வருவோம்.
உலகத்தில் இந்தியாவைப் போல சாதிப் பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கிற வேறு நாடுகள் உள்ளனவா? ஆம், இருக்கின்றன. ஆனால் “இந்தியாவைப் போல” என்று சொல்லிவிட முடியாது.
அந்த நாடுகளின் பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கிற மதங்களில், கடவுளின் கட்டளையாக, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து, அவர்களுக்கான வேலைகளைப் பிரித்து, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகளைப் போதிக்கிற தத்துவங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆயினும், நடைமுறை வாழ்க்கையில் மக்கள் பல பிரிவுகளாக இருக்கிறார்கள், அவர்களுக்கிடையே யார் உயர்ந்த சமூகம், யார் தாழ்ந்த சமூகம் என்ற பிரச்சினைகள் இருக்கின்றன.
இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதிகளாக இருப்பவைதான் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை. பூட்டான், மாலத்தீவு என உருவெடுத்துள்ள தனித்தனி நாடுகள். இந்த நாடுகளிலெல்லாம், துணைக்கண்டத்தில் வேர்விட்டிருந்த சாதியம் கிளை பரப்பியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
பாகிஸ்தானின் பிராமணியம்
எடுத்துக்காட்டாக, பாகிஸ்தான் நாட்டில் 40 சாதிப் பிரிவுகள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. அவர்கள் அந்த நாட்டில் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு இடையேயும் அப்படிப்பட்ட பிரிவுகள் இருக்கின்றன.
குரானில் கூறப்படாவிட்டாலும், தங்களை இறைத்தூதர் முகமது நபி வழி வந்தவர்கள் என்றும், ஆகவே உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்றும் சாயேட் என்ற பிரிவினர் கூறிக்கொள்கிறார்கள்.
சமயத்திற்கு உள்ளேயும் சமூகவெளியிலும் அரசியலிலும் கல்வியிலும் தொழில்களிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். இங்கே “பிராமணியம்” என்று குறிப்பிடுவது போல, அங்கே இதை “சாயேடியம்” என்று அங்குள்ள சாதி எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்தோர் குறிப்பிடுகிறார்கள்.
பாகிஸ்தானில் கிறிஸ்துவம் ஒரு சிறுபான்மை மதம். ஆனால், துப்புரவுப் பணிகளில், தலித் கிறிஸ்துவர்கள்தான் பெருமளவுக்கு ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில், “1998 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் 1.6 சதவீதத்தினர் கிறிஸ்துவர்கள்.
துப்புரவுத் தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதத்தினர் தலித் கிறிஸ்துவர்கள்,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாதிப் பிரிவினை இந்துக்களுக்கே உரியது என்ற எண்ணத்தால், பிற மதங்களில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வுகள் பேசப்படுவதில்லை என்று அங்கே பாகுபாடுகளை ஒழிக்கப் போராடிக்கொண்டிருக்கும் அமைப்புகளைச் சேர்ந்தோர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நீண்ட காலமாக இந்து ராச்சியமாகவே இருந்து வந்த நேபாளம் 2007ஆண்டில், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசமைப்பு சாசனத்தின்படி மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
அங்கேயும் சாதி அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது என்றாலும், சாதிகள் சமூக வாழ்வில் சதிராடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கான அடிப்படையாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வர்ணப் பிரிவுகளும் இருந்துவந்திருக்கின்றன.
வர்ணத்தால் ஒதுக்கப்பட்ட வேலைகளுக்குள் தலைமுறைகளைத் தொலைத்துவிட மாட்டோம் என்ற எழுச்சிகளையும் நேபாளம் கண்டுவந்திருக்கிறது.
இலங்கை நாடு, மத அடிப்படையை விட சிங்களர், தமிழர் என்ற இன அடிப்படையிலான சமூகப் பிரிவினையைக் கொண்டிருக்கிறது. அத்துடன் இந்தியத் தமிழர், இஸ்லாமிய மக்களைக் கொண்ட மூர், ஐரோப்பிய இனத்தினருடனான கலப்பிலிருந்து பிறந்த பர்கேர், மலேயா–இந்தோனேசியா சமூகங்களின் வழி வந்த மலாய்.
தொன்மைக் குடிகளிலிருந்து வந்தவர்களான வெட்டா என்ற இனப் பிரிவுகளும் உள்ளன. அதேவேளையில், இந்த இனங்களுக்குள் சாதிப் பிரிவுகள் இருக்கின்றன. சிங்களரிடையே கோவிகாமா, கரவா, சலாகாமா, துராவா உள்ளிட்ட சாதிப் பிரிவுகள் உள்ளன.
இவையும் தொடக்கத்தில் தொழில் பிரிவினை அடிப்படையில் உருவானவைதான். தமிழரிடையே இதே போன்று வெள்ளாளர், கரையார், பறையர், நலவர் உள்ளிட்ட சாதிப்பிரிவுகள் உள்ளன.
இந்தியாவிலிருந்து தோட்ட வேலைகளுக்காகக் கொண்டுசெல்லப்பட்டவர்கள், குறிப்பாக இங்கே ஒதுக்கப்பட்ட கொடுமைகளைச் சந்தித்த பள்ளர், பறையர் உள்ளிட்ட சாதிகளைச் சேர்ந்தோர் இந்தியத் தமிழர்களாக இருக்கிறார்கள்.
இவர்களை மற்ற பிரிவினர் தாழ்வாகக் கருதி ஒதுக்குவது அங்கேயும் தொடர்ந்திருக்கிறது. பாகுபாடுகளை எதிர்த்துக் கிளம்புகிற தலைமுறைகளும் இலங்கையின் எல்லா இனங்களிலும் சாதிகளிலும் தலைதூக்கியிருக்கிறார்கள்.
கலாச்சாரப்படி வரன் தேடல்
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா என மேற்கத்திய நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காகச் சென்று குடியுரிமை பெற்று பல தலைமுறைகளாக அந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிற, தமிழர் உள்ளிட்ட இந்திய மக்கள், கடவுள் வழிபாடு, மதம், கோவில், பண்டிகைகள், உணவு வகைகள் என்று தங்களுடைய கலாச்சார அடையாளங்களையும் எடுத்துச் சென்றார்கள்.
கூடவே, சாதிப் பாகுபாட்டு வேலிகளையும் தூக்கிப் போய் அங்கேயும் போட்டு வைத்தார்கள். அமெரிக்க மாப்பிள்ளைகளும் இங்கிலாந்துப் பொண்ணுகளும் திருமண உறவுகளுக்குத் தயாராகிறபோது, “எனக்கு இந்தியக் கலாச்சாரப்படி வரன் தேவை,” என்று தேடுவதைப் பார்க்கலாம்.
அந்த இந்தியக் கலாச்சாரம் எனப்படுவது ஆடைகளும் அலங்காரங்களும் சமையல்களும் சடங்குகளும் என மேல் பார்வையில் தோன்றினாலும், ஊடுறுவி நோக்கினால், அவரவர் சாதி வட்டம்தான் என்று தெரிந்துவிடும்.
இவையன்றி, இங்கேயிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளாக இல்லாமல், பல நாடுகளில் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்ட சாதிப் பிரிவுகளும் உண்டு. தொழில் வளர்ச்சிக்கும் மக்களின் சுறுசுறுப்புக்கும் அடையாளமாகக் கூறப்படும் நாடு ஜப்பான்.
அங்கேயும் பிறப்பின் அடிப்படையில், பரம்பரையாகத் தொடரும் பிரிவுகள் உள்ளன. பல தெய்வ வழிபாட்டுடன் கூடிய, தொன்மைக் காலத்திலிருந்தே இருந்து வரும் ஷின்டோ, இந்தியாவிலிருந்து சென்று பரவிய புத்தம் ஆகிய இரு மதங்களிலும் சாதிகள் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவைப் போல மதநூல்களால் வரையறுக்கப்பட்ட சாதிகளாக இல்லை என்றாலும், 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கன்ஃபூசியஸ் (கி.மு. 551–479) என்ற தத்துவஞானியின் போதனைகள் அடிப்படையில், பின்னர் வந்த அரசர்களுடைய ஆணைகளோடு தலைமுறைகள் சார்ந்த சமூகப் பிரிவுகள் கட்டமைக்கப்பட்டன.
நிலவுடைமைத்துவத்துடன் இணைந்த வேலைகள் பிரித்தளிக்கப்பட்டன. அதில் உயர்வு தாழ்வு கருத்துகளும் தோன்றித் தொடர்ந்தன.
வெகு காலத்திற்கு அங்கே புராகுமின் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் ஊர்களின் தூய்மைப் பணிகளில் இறக்கிவிடப்பட்டு வந்தார்கள். அதே போல வேறு சில பிரிவுகளும் தலைமுறை தலைமுறையாகக் குறிப்பிட்ட வேலைகளைச் செய்து வந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில் இதற்கு முடிவு கட்டும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, சாதிப் பிரிவினைகளைப் பாதுகாத்து வந்த முந்தைய சட்டங்கள் அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டன.
அரசாங்க நடவடிக்கைகளோடு பல சமூக விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொண்ட பரப்புரைகளும் களப்பணிகளும் சேர்ந்து பெருமளவுக்கு வெற்றிகரமாக சாதிப் பாகுபாடுகளைப் பழங்கதையாக்கின. இப்போதும் போதிய கல்வியின்மை, பொருளாதார நிலை போன்ற காரணங்களால், துப்புரவு போன்ற பணிகளில் குறிப்பிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தொடர்கிறது. இயக்கங்களும் முன்னேறிக்கொண்டிருக்கின்றன.
தொழில் வளர்ச்சி, நகர மேம்பாடுகள், கல்வி வாய்ப்புகள், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஆகிய சூழல்களும் ஜப்பானின் சாதியத்தைப் பின்னுக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக, சமூகக் கண்ணோட்டங்கள் மாறியது, பாகுபாடுகளுக்கு எதிரான சிந்தனைகள் பரவியது ஆகியவற்றுக்கும் இதில் பங்குண்டு.
அமெரிக்கா, தென்னமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இன அடிப்படையிலான பாகுபாடுகள், அடிமை முறைகள் புரையோடிப் போயிருந்ததும், தொடர்ச்சியான இயக்கங்களின் வெற்றியாக நிலைமை மாறியதும் வரலாற்றுப் பக்கங்களாக இருக்கின்றன.
அதே வேளையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான், அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை, வெள்ளையரான ஒரு காவல்துறை அதிகாரி தனது முழங்காலால் கழுத்தை நசுக்கிக் கொலை செய்தார், அது “கறுப்பர்களும் பொருட்படுத்தப்பட வேண்டியவர்களே” என்ற மிகப் பெரிய இயக்கம் உருவெடுக்கக் காரணமானது.
காவல்துறை அதிகாரிகள் அனைவரும், கொலை நடந்த சாலையில் முழங்காலில் அமர்ந்து மன்னிப்புக் கோரியதும் புதிய வரலாற்றில் இணைந்தது.
குத்தட்டும் குற்றவுணர்ச்சி
உலகம் முழுவதுமே இப்படிப்பட்ட பாகுபாடுகள் இருந்து வந்திருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது, இந்தியாவில் தொடரும் சாதி வேற்றுமைகளையும் தீண்டாமை இழிவுகளையும் நியாயப்படுத்துவதற்காக அல்ல.
அந்த நாடுகளில் வெடித்தது போன்ற சமூக மாற்றத்திற்கான எழுச்சிகள் இந்த நாட்டிலும் எரிமலையாக வேண்டும் என்பதற்காகத்தான்.
இங்கேயும் அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும், அரசியல்–சமூக இயக்கங்களும் கண்ணோட்ட மாற்றங்களை நிகழ்த்தியாக வேண்டும். பழையன கழிவதும் புதியன புகுவதும் நிகழ்ந்தாக வேண்டும்.
அதற்கொரு அடிப்படையாகத் தனி மனிதர்களைப் பொறுத்தவரையில், சொந்த சாதிப் பெருமைகளை உதிர்த்துக் கரைத்துவிட வேண்டும். அவ்வாறு உதிர்ப்பதற்கு மனதில் சாதி உணர்வு பற்றிய குற்றவுணர்ச்சி ஊன்ற வேண்டும்.
சிறுவயதிலிருந்து பெற்றோர்களாலும் மற்ற மற்ற பெரியோர்களாலும் புகட்டி வளர்க்கப்பட்ட “நம்ம சாதி, உயர்ந்த சாதி” என்ற கருத்து எவ்வளவு அவமானகரமானது என்ற ஞானம் பிறக்க வேண்டும்.
அந்த ஞானமே சக மனிதர்களை, அவர்கள் எந்தச் சாதியானாலும் சக மனிதர்களாகவே கண்டு பழகவும் நேசிக்கவும் வைக்கும். அதிலேதான் உண்மையான பெருமை நிலைக்கும்.
“தீண்டாமையைக் களைய வேண்டும் வேண்டும், சாதியை ஒழிக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறதே? அதை மாநில அரசு செய்வதா அல்லது ஒன்றிய அரசு செய்வதா என்ற விவாதம் நடக்கிறதே? அப்படியொரு கணக்கெடுப்பு நடந்தால் சாதி அடையாளம் சட்டப்பூர்வமாக மேலும் கெட்டிப்பட்டுவிடாதா?” –இப்படியொரு கேள்வியும் வந்திருக்கிறது.
இதை வேறொருவர் வேறு மாதிரியாகக் கேட்டிருக்கிறார்: “சாதி உணர்வு ஒழிப்பைக் கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடத்திலேயே சாதி கேட்கப்படுகிறது. எதிர்காலத் தலைமுறைகள் எப்படி சாதியை மறப்பார்கள்? இப்போது என்னடாவென்றால், எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான மக்கள்தொகை கணக்கெடுப்பிலேயே சாதியைக் கேட்டுக் குறிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நிகழ்கால சமுதாயம் எப்படி சாதியைக் கைவிடும்?”
சரியான கேள்விகள்தான். பதில்களைப் பகிர்ந்துகொள்ள மறுபடியும் சந்திப்போம்.
முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) – 5 | ஒவ்வொரு சமூகத்திற்கும் என ஒதுக்கப்பட்ட வேலைகளால் பொருளாதாரம் முன்னேறியதாமே! – அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தோழர் அகு வின் எளிய மொழியில் எழுதப்பட்ட கட்டுரை அருமையாக உள்ளது.. அருமையான தகவல்கள் …. வாழ்த்துகள் தோழர்
Pingback: சாதிச் சான்றிதழ் (Caste Certificate)