சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 6 | சாதிச் சான்றிதழ் கேட்பது சரியா? சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது நியாயமா? | caste certificate - https://bookday.in/

சாதிச் சான்றிதழ் (Caste Certificate) கேட்பது சரியா? சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது நியாயமா?

சாதிச் சான்றிதழ் (Caste Certificate) கேட்பது சரியா? சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது நியாயமா?

சாதி இருக்கும் வரை -7

– அ. குமரேசன்

“பள்ளிகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டு, பிள்ளைகளைச் சேர்க்கிறபோதே சாதி என்ன என்று கேட்கப்படுகிறது. சாதிச் சான்றிதழை இணைக்க வேண்டியிருக்கிறது. பிறகு எப்படி சாதி இல்லை என்றாகும்?”

இந்தக் கேள்வி திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது. இதற்குத் திரும்பத் திரும்பப் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் கேள்வி சுற்றிக்கொண்டே இருக்கிறது. உண்மையிலேயே சாதிகளை ஒழிக்க வேண்டுமென்ற அக்கறையோடு இதைக் கேட்கிறவர்களும் இருக்கிறார்கள், உள்நோக்கத்தோடு கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். “என் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தபோது விண்ணப்பப் படிவத்தில் சாதி என்ற கட்டத்தை நிரப்பாமலேதான் கொடுத்தேன்,” என்று பெருமையோடு பேசுவோரைக் காண முடியும். “சாதி மதம் அற்றவர்” என்று சான்றிதழ் கோரி, அதற்காகப் போராடி வெற்றி பெற்றவர்கள் பற்றிய செய்திகளைப் படிக்கிறோம்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 6 | சாதிச் சான்றிதழ் கேட்பது சரியா? சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது நியாயமா? | caste certificate

சுருக்கமாகவே பதில்களைக் காணலாம். முதலில், பள்ளியில் சேர்க்கப்படும் எல்லாக் குழந்தைகளுக்கும் சாதியையோ மதத்தையோ குறிப்பிட வேண்டியதில்லை. அப்படியொரு சட்டமும் கிடையாது. காலங்காலமாகக் கல்வியும் அரசுப் பணி வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலைமையுடன் இணைந்ததாக அந்தச் சமூகங்களில் பெரும்பாலான மக்களின் வறுமையும் தொடர்கிறது. அதன் காரணமாகப் பொருளாதாரத்திலும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாகப் பாகுபாடுகளால், ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் முன்னேறுவதற்கும் மற்றவர்களுக்குச் சமமாக நிற்பதற்கும் ஓர் கருவியாகக் கொண்டுவரப்பட்டது இட ஒதுக்கீடு எனும் இடைக்காலப் படிக்கட்டு.

சாதியும் சான்றிதழும்

பழங்குடிகளாக ஒதுக்கப்பட்டவர்கள், கீழ்ச்சாதி எனத் தாழ்த்தப்பட்டவர்கள், உயர் பிரிவுகள் எனப்படுவோர் அல்லாத பிற்படுத்தப்பட்டவர்கள் அந்தப் படிக்கட்டுகளில் ஏற வருகிறார்கள். அப்போது, உண்மையிலேயே அவர்கள் இட ஒதுக்கீட்டின் நன்மையைப் பெறுவதற்கு உரியவர்கள்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள அவர்களின் சாதியைக் குறிப்பிடும்படி கேட்கப்படுகிறது. மற்றவர்கள் யாரேனும் இந்தச் சட்ட வாய்ப்பை மோசடியாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்க சாதிச் சான்றிதழ் (caste certificate) கேட்கப்படுகிறது.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 6 | சாதிச் சான்றிதழ் கேட்பது சரியா? சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது நியாயமா? | caste certificate

போலிச் சான்றிதழ் கொடுத்துப் படிப்பிலும் பதவியிலும் இணைந்தவர்கள் பற்றியும், பின்னர் மோசடி கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது பற்றியும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன. ஆகவே சான்றிதழ் கேட்கப்படுவதன் நியாயத்தைப் புரிந்துகொள்ளலாம்.

பழங்குடிகளாகப் புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் பட்டியலிடப்பட்டு, பட்டியல் பழங்குடிகள் (ஷெட்யூல்டு ட்ரைப்ஸ் – எஸ்.டி.) என்று பதிவு செய்யப்பட்டார்கள். தாழ்ந்தவர்களென ஒதுக்கப்பட்ட சமூகங்கள் பட்டியலிடப்பட்டு, பட்டியல் சாதிகள் (ஷெட்யூல்டு கேஸ்ட்ஸ் –எஸ்.சி.) என்று பதிவு செய்யப்பட்டார்கள். சமூகப் படிநிலையின் மேலடுக்குகளைச் சேராத, எஸ்.டி., எஸ்.சி பிரிவுகளும் அல்லாத சமூகங்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் (பேக்வர்ட் கேஸ்ட்ஸ் –ஓ.பீ.சி.) என்றும், பின்னர், அவர்களிலும் கீழ்த்தட்டுகளில் வைக்கப்பட்ட சமூகங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் (மோஸ்ட் பேக்வர்ட் கேஸ்ட்ஸ் –எம்.பீ.சி.) என்றும் பதிவு செய்யப்பட்டார்கள். இவர்களுக்கான இட ஒதுக்கீடு அளவுகள் நடைமுறைக்கு வந்தன.

இந்நான்கு பிரிவுகளையும் சேராதவர்கள் முன்பு முன்னேறிய சாதிகள் (ஃபார்வர்ட் கேஸ்ட்ஸ் –எஃப்.சி.) என்று குறிப்பிடப்பட்டனர். பிறகு இதர சாதிகள் (அதர் கேஸ்ட்ஸ் –ஓ.சி.) என்று மாற்றப்பட்டது. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளில் சேர்வதற்கான படிவங்களிலோ, வேலைக்கான விண்ணப்பங்களிலோ தங்களின் சாதிப் பெயரைக் குறிப்பிட வேண்டியதில்லை. அதே போல், எஸ்.டி., எஸ்.சி., பீ.சி., எம்.பீ.சி. பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்கள் முன்னேறிய நிலைக்கு வந்திருப்பதால் அல்லது சொந்தக் கருத்தின்படி தங்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பாடு தேவையில்லை என்ற முடிவுக்கு வருவார்களானால், அவர்களும் சாதிப் பெயரைக் குறிப்பிட வேண்டியதில்லை. அவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வியையோ வேலையையோ கோரப் போவதில்லை என்பதால் சாதிச் சான்றிதழையும் தர வேண்டியதில்லை.

அரசாணை இருக்கிறது

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 6 | சாதிச் சான்றிதழ் கேட்பது சரியா? சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது நியாயமா? | caste certificate

இதை உறுதிப்படுத்தும் விதமாக, சாதி, மத அடையாளத்தை இணைக்க விரும்பாத பெற்றோர் அவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை என்ற அரசாணையே கூட தமிழ்நாட்டில் இருக்கிறது. இதர மாநிலங்களிலும் இருக்கக்கூடும். ஆனால் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், அரசுத் துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட, இதைச் செயல்படுத்தும் இடத்தில் இருப்பவர்கள் தங்களின் அறியாமையால், புரிதல் போதாமையால் பல நேரங்களில் கட்டாயம் சாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டும், சான்றிதழ் இணைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்யக்கூடும். அதை வைத்துக்கொண்டு, மாநிலம் முழுவதும், நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் சாதிச் சான்றிதழ் (caste certificate) கேட்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுவது பொருத்தமல்ல.

தமிழ்நாட்டில், சில ஆண்டுகளுக்கு முன் ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர் என்ற வழக்குரைஞர் “எந்த சாதி மற்றும் மதம் அற்றவர்” என்று சான்றிதழ் பெற்றது செய்தியாக வந்து பெரிதும் கவனம் பெற்றது. தன் பெயரிலேயே மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான செயலா என்று கேட்கப்பட்டபோது தனது இந்த முயற்சி இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல என்றும் அந்தக் கொள்கையை ஆதரிப்பதாகவும் கூறினார் – அதுவும் கவனம் பெற வேண்டியதுதான்.

சாதிப் புத்திக்கு எதிரான சிந்தனைகளை வளர்க்க உதவுமானால் இப்படிப்பட்ட முயற்சிகள் வரவேற்கத் தக்கவையே. ஆனால் பலர் பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் சாதிச் சான்றிதழ் (caste certificate) கேட்கக் கூடாது என்று வலியுறுத்துவது, இட ஒதுக்கீடு கொள்கையை இப்போதே கைவிட வேண்டும் என்று மறைமுகமாக வற்புறுத்தும் நோக்கத்துடன்தான். தனிப்பட்ட முறையில் சாதிச் சான்றிதழ் (caste certificate) தனக்குத் தேவையில்லை என்று கருதுகிற ஒருவர் அதைக் குறிப்பிட வேண்டியதில்லை, சாதி–மதம் அற்றவரென்று சான்றிதழ் பெறவும் வழியிருக்கிறது. மற்றபடி, இட ஒதுக்கீடு கொள்கையின் நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டது என்ற முன்னேற்றம் நிலைப்படும் வரையில் அது சட்டப்படி தொடரும், தொடர வேண்டும்.

எந்தச் சாதி… எத்தனை பேர்…

“சரி, குடிமக்கள் எல்லோருக்குமான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாகவும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கதா? அதை யார் செய்வது, மாநில அரசா ஒன்றிய அரசா என்ற விவாதம் வேறு நடக்கிறதே? அப்படியொரு கணக்கெடுப்பு நடைபெற்றால் இன்றைய சாதி அடையாளங்கள் சட்டப்பூர்வமாகவே மேலும் கெட்டிப்பட்டுவிடாதா?”

இந்தக் கோரிக்கை மறுபடியும் எழுந்துள்ளதையடுத்து இந்தக் கேள்வியும் பின்தொடர்கிறது. இப்படிக் கேட்பவர்களில் பெரும்பாலோர் சாதியக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று மெய்யாகவே விரும்புகிறவர்கள்தான். இக்கோரிக்கையின் அடிப்படைகள் புரிந்துவிட்டால் அவர்களும் ஆதரிப்பார்கள்.

உடல் உள்ளுறுப்புகளின் நிலையை அறிய நவீன கதிர்வீச்சுப் படங்கள் எடுத்து, கணினியின் உதவியோடு ஆராய்கிறோம். உறுப்புகளின் நிலையைத் துல்லியமாக அறிகிறபோது, முழுமையாக நலம் பெறுவதற்கேற்ற உணவு முறை, மருந்துகள், உடற்பயிற்சிகள் என மேற்கொள்ள முடியும். நலிந்திருக்கக்கூடிய, போதிய ஊட்டச்சத்து தடைப்பட்டிருக்கக்கூடிய அங்கங்களுக்கு அவை சீராகக் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.

சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 6 | சாதிச் சான்றிதழ் கேட்பது சரியா? சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது நியாயமா? | caste certificate

அதைப் போன்றுதான், இந்த நாட்டின் சமுதாய அமைப்பு சாதியத்தால் கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்கிற நிலையில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பாகுபாடற்ற வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கிற சூழலில் அதற்கான கதிர்வீச்சுப் படப்பிடிப்பாக சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறித்த நாடுதழுவிய பதிவுகள் தெளிவான சித்திரத்தைத் தரவில்லை என்று சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பட்டியல் சாதிகளையுயம் பட்டியல் பழங்குடிகளையும் பற்றிய பதிவுகளிலும் கூட குழப்பங்கள் இருக்கின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மாநிலத்தில் எஸ்.சி. என அங்கீகரிக்கப்பட்டிருக்கிற ஒரு பிரிவு வேறொரு மாநிலத்தில் பீ.சி. என்று பதிவாகியிருக்கிற காட்சிகளும் இருக்கின்றன.

ஆகவேதான் வரலாற்றின் கடந்த அத்தியாயங்களில் வஞ்சிக்கப்பட்ட சமூகங்கள் மேம்படுவதற்கான உரிமைகள் உறுதிப்படவும், திட்டங்கள் முழுமையாகப் பலனளிக்கவும் எந்தெந்த சாதியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் தேவைப்படுகிறது. சில நேரங்களில், சாதியமைப்புகளின் தலைவர்களும், சாதிகளைச் சார்ந்துள்ள கட்சிகளின் தலைவர்களும், தங்களுடைய மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று சொல்லி, அவர்களாக சில புள்ளிவிவரங்களை வெளியிடுவதுண்டு. இப்படி ஒவ்வொரு சாதிக் கட்சியும் அறிவிக்கிற எண்ணிக்கையைக் கூட்டினால், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்!

முடக்கப்பட்ட ஆய்வறிக்கை

உண்மையில், 2011ஆம் ஆண்டுக்கான நாடு தழுவிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பையொட்டி, சமூகப் பொருளாதார நிலவரம் குறித்த ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. சாதி அடிப்படையில்தான் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்விலிருந்து, சில பொதுவான பொருளாதார நிலைமைகள் தொடர்பான தகவல்களை மட்டும் 2015இல் ஒன்றிய அரசு வெளியிட்டது. ஆனால் சாதி வாரியாகப் பொருளாதார நிலைமைகளை வெளியிடவில்லை. ஆய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் துல்லியத் தன்மை குறித்த ஐயப்பாடுகள் இருப்பதாலும், அந்த விவரங்களை வெளியிடுவது சர்ச்சையையும் மக்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் சாதி வாரி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் நிலவும் சாதிய நிலைமைகளை ஆளுங்கட்சியின் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடனேயே அந்தத் தரவுகளை ஒன்றிய அரசு முடக்கிவைத்திருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினார்கள்.

உடல் உள்ளுறுப்புகளின் நிலைமைகள் என்னவென்று மருத்துவருக்கு மட்டும் தெரிந்தால் போதாது. ஒரு நல்ல மருத்துவர் அது போதுமென்று நினைக்க மாட்டார். மருத்துவத்தை நாடுகிறவருக்கும் தனது உறுப்பு நிலைமைகள் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய பங்கேற்புடன் சிகிச்சை முழுமையாகப் பலனளிக்கும். நோயற்ற வாழ்வு சாத்தியமாகும். சாதியற்ற சமுதாய வாழ்வு சாத்தியமாவதற்கு சாதிவாரியான உண்மைகள் தெரியவர வேண்டும்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைத் தலைமையகமாகக் கொண்ட, உலகெங்கும் அரசியல், சமூகம், பொருளாதாரம், வறுமை நிலை, பாலினப் பாகுபாடுகள், மதவாதப் போக்குகள், மக்களின் நல்லிணக்கச் சூழல், குடும்ப நிலவரங்கள் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நடத்தி அறிக்கைகளை வெளியிட்டு வருவது ‘பியூ ரிசர்ச் சென்டர்’. சிறப்பான கணக்கீடு முறைகளைக் கையாளுகிறவர்கள் என்று பெயர் பெற்ற அந்த மையம், 2021ஆம் ஆண்டில் “இந்தியாவில் சாதிகளைக் கணக்கிடுதல்” என்ற அறிக்கையை வெளியிட்டது. 2019 நவம்பர் 17 முதல் 2020 மார்ச் 23 வரையில் சுமார் 30,000 பேரிடம் 17 மொழிகளில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பெரும்பாலான இந்தியர்கள் தங்களை எஸ்.சி., எஸ்.டி., ஓ.பீ.சி. பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவே கூறுகிறார்கள் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 98 சதவீத இந்தியர்கள், அவர்கள் எந்த மதம் சார்ந்தவர்களானாலும், ஏதேனும் ஒரு சாதியோடு இணைத்தே தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். பொதுவான மக்கள்தொகையில் 30 சதவீதத்தினர் தங்களை இதர பிரிவுகள் என்றும், 25 சதவீதத்தினர் எஸ்.சி. என்றும், 9 சதவீதத்தினர் எஸ்.டி. என்றும், 35 சதவீதத்தினர் ஓ.பீ..சி. என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மதவாரியான ஆய்வில், இந்துக்களில் இந்த வரிசை 28, 25, 10, 35 சதவீதங்களாக இருந்துள்ளது. முஸ்லிம் மக்களிடையே 46, 4, 3, 43 சதவீதங்களாக இருக்கிறது. கிறிஸ்துவர்களிடைய 22, 33, 24, 17 என்று இருக்கிறது. சீக்கியர்களிடையே 46, 47, 1, 4 என உள்ளது. புத்த மதத்தினர் 2, 89, 5, 4 என்றும், சமணர்கள் 76, 3, 1, 16 ஆகவும் சாதி அடையாள வரிசை இருக்கிறது.

அதே வேளையில், “இந்திய அரசின் 2011ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பில் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதமாக இருக்கும் இந்துக்களும் சீக்கியர்களும் புத்த மதத்தினரும் மட்டுமே பட்டியல் சாதிகளாக வகைப்படுத்த முடிந்திருக்கிறது. ஏனெனில், கோட்பாட்டளவிலாவது முஸ்லிம், கிறிஸ்துவம், வேறு சில மதங்களில் சாதி அமைப்பு இல்லை. ஆனால் அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்களைப் பட்டியல் பழங்குடிகளாக வகைப்படுத்த முடிகிறது. ஏனெனில் பட்டியல் பழங்குடிகளுக்குப் பெரும்பாலும் எல்லா மதங்களின் பின்னணியும் இருக்கிறது,” என்று பியூ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில், பட்டியல் சாதிகளையும் பழங்குடிகளையும் சரியாக வகைப்படுத்த மதிப்பீட்டாளர்கள் முயன்றார்கள். ஆனால் அது எளிதான பணியாக இல்லை. ஏனெனில், குடிமக்களில் ஒருவர் தன்னைப் பழங்குடி சாதி எனக்கூறி தனது சாதியின் பெயரையும் கூறுகிறார் என்றால், அந்தச் சாதியின் பெயர் அதிகாரப்பூர்வமான பழங்குடிகள் பட்டியலில் இருக்காது. இந்தக் கணக்கீட்டு முறையில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, 17 சதவீத இந்தியர்கள் எஸ்.சி. என்றும், 9 சதவீதத்தினர் பழங்குடிகள் என்றும் தெரிவிக்கிறது.

இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டு, தரவுகளை முழுமையாக வெளியிட்டால்தான் மிகப் பெருமளவுக்கு சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கும். ஆகவேதான் இதைப் பல்வேறு அரசியல் இயக்கங்களும் வலியுறுத்துகின்றன. பியூ அறிக்கையில் உள்ள வேறு சில தகவல்களை அடுத்த அமர்வில் பார்ப்போம்.

முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai)  – 6 | உலகத்தின் மற்ற மூலைகளில் எங்கெல்லாம் பறக்கிறது சாதிக் கொடி?

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. யாருக்கும் வேலை கொடுப்பதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்து விட்டது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு எந்த பயனும் தராது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *