ஒரு விவாதச் சுழிப்பு, ஒரு ஆய்வுக் கணக்கெடுப்பு, ஒரு ஆலய விழா அழைப்பு
சாதி இருக்கும் வரை – 8
– அ. குமரேசன்
“சாதிப் பிரிவினை இந்தியாவின் கலாச்சாரம் இல்லை. இந்து சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததில்லை. வெள்ளைக்காரர்களின் ஆட்சியில்தான் இங்கே சாதி அடையாளங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னர் அரசியல் ஆதாயத்திற்காகப் பல கட்சிகள் சாதி உணர்வை ஊட்டி வளர்த்துவிட்டன.”
–ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இவ்வாறு கூறினார் வலதுசாரி சிந்தனையாளர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்.
“அப்படியானால் ஆலயங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நீங்கள் ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா,” என்று கேட்டவுடன், அவர் பதறிப்போனவராக, “அது வேற பிரச்சினை, இது வேற பிரச்சினை,” என்றார். பிறகு அவரே,. “பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த பிரிவினை ஏற்பாட்டால் சாதி ஏற்றத்தாழ்வோடு பழகிப் போனவர்கள் சட்டத்தை ஏற்க மறுக்கிறார்கள். காலப்போக்கில் அவர்கள் மாறிவிடுவார்கள். ஆனால் இப்போதே ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது,” என்றார்.
தொடர்ந்து அந்த விவாதம் இயல்பாக இட ஒதுக்கீடு கேள்விக்குத் திரும்பியது. “இந்துக்கள் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்களும், உதாரணமாக தலித் கிறிஸ்துவர்கள், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். அதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்,“ என்ற கேள்வியை நெறியாளர் முன் வைத்தார்.
“அதெப்படி? பாரம்பரியமான மதம் வேண்டாம் என்று உதறிவிட்டுத்தானே வேறு மதங்களுக்குப் போனார்கள்? அப்படிப் போன பிறகு, இந்துக்களுக்குரிய சட்டச் சலுகைகளை அவர்களும் கோருவது என்ன நியாயம்? மத்திய அரசும் மாநில அரசுகளும் அந்தக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்,” என்று வலதுசாரிச் சிந்தனையாளர் சொன்னார்.
“அப்படியானால் சாதிப் பிரிவினை இந்து சமயத்திற்கே உரியது என நீங்கள் ஒப்புக்கொள்வதாக எடுத்துக்கொள்ளலாமா? சற்று முன்தான் இந்துக் கலாச்சாரத்தில் சாதி வேறுபாடு இல்லையென்றீர்கள்,” என்று கேட்டேன். இதற்கு அவர் என்ன பதில் அளித்திருப்பார் என்று, இத்தகைய விவாதங்களைத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பவர்கள் எளிதில் ஊகிக்கலாம். ஆம்! உங்கள் ஊகம் சரிதான்! “எங்களையும் அழைத்துவிட்டு நீங்கள் திராவிட இயக்கத்தினருக்கும் இடதுசாரிகளுக்கும் சாதகமாக விவாதத்தைக் கொண்டு போவது சரியில்லை,” என்ற பதிலைத்தான் சொன்னார்!
மக்கள்தொகை கணக்கெடுப்போடு…
இது விவாதங்களில் பங்கேற்பவர்களின் வாதத்திறமை பற்றிய அலசல் அல்ல. தனிப்பட்ட முறையில் சாதியைத் துறக்கவும் விரும்பாமல், பொதுவெளியில் சாதி ஏற்பதாக அறிவிக்கவும் முடியாமல் இப்படிப்பட்டவர்கள் படுகிற பாடு பரிவுக்குரியதுதான். இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இந்து அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கோரிக்கை எழுவதைத்தான்.
2011ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், குடிமக்களின் சாதி பற்றிக் கேட்டுப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்துக்களிடம் மட்டுமே அவர்கள் என்ன சாதி என்று கேட்டுக் குறித்துக்கொள்ளப்பட்டது. பிற மதங்களைச் சேர்ந்தோரிடம் கேட்கப்படவில்லை. ஆகவே முழுமையான சாதிக் கணக்கெடுப்பாக அது அமையவில்லை. (உலகம் முழுதும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, உலகத்தையே கவ்வியிருந்த கொரோனா பெருந்தொற்றுச் சூழலால் 2021ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவில்லை. தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.)

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சமூகப் பொருளாதார நிலை தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டன. ஆனால் பொருளாதார நிலை குறித்த ஒரு பகுதி தரவுகளை மட்டும் 2015இல் வெளியிட்ட ஒன்றிய அரசு, யார் யார் எந்தெந்த சாதியினராகப் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிடவில்லை என்று ஏற்கெனவே பார்த்தோம். சாதி தொடர்பான கணக்கெடுப்பின் துல்லியத்தன்மை பற்றிய ஐயப்பாடு இருந்ததால் அது வெளியிடப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் நிலவும் சாதிகள் சார்ந்த பொருளாதார நிலைமைகள் பற்றிய தகவல்களை, ஒன்றிய ஆளுங்கட்சியின் அரசியல் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடனேயே அந்த விவரங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் (2011) பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பற்றிய தகவல்கள் உள்ளன. அதன்படி தலித் என்றும் எஸ்சி என்றும் பொதுவாகக் குறிப்பிடப்படும் சமூகங்களைச் சேர்ந்தோர் மொத்த மக்கள்தொகையில் 17 சதவீதம், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தோர் 9 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டது. இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோரிடம் மட்டுமே இந்த விவரமும் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதால், அது முழுமையான சித்திரத்தை வழங்கவில்லை. இந்நிலையில்தான் பியூ ஆய்வு மையம், 2020ஆம் ஆண்டில் நடத்திய இணையவழி ஆய்வில் பங்கேற்ற 30,000 பேரிடமும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், “நீங்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவரா, பட்டியல் சாதியினரா, பட்டியல் பழங்குடியினரா அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவினரா” என்ற குறிப்பான கேள்வியை வைத்துப் பதில்களைப் பெற்றது.
மாறுபடும் சதவீதங்கள்
அவர்கள் அளித்த பதில்களை ஆய்வு செய்ததில், 25 சதவீதத்தினர் தங்களைப் பட்டியல் சாதி என்று அடையாளப்படுத்திக்கொண்டனர். இது அதிகாரப்பூர்வ மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சொல்லப்படும் 17 சதவீதத்தை விட சரிபாதி அளவுக்கு அதிகம். பட்டியல் பழங்குடி என்று பியூ ஆய்வில் அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் 9 சதவீதம். இது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு சமமாகவே இருக்கிறது. பியூ நிறுவனம் மத அடிப்படையில் நடத்திய இந்த ஆய்வுக்கு முன் 2019இல் ‘உலகளாவிய போக்கு’ என்ற ஆய்வில், இந்தியாவின் 24 சதவீதத்தினர் தங்களைப் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தோராக அடையாளப்படுத்தியிருந்தனர்.
அதற்கு முன் 2017ஆம் ஆண்டில் நடத்திய ‘உலகளாவிய போக்கு’ குறித்த ஆய்வில் 23 சதவீதத்தினர் இவ்வாறு அடையாளப்படுத்தியிருந்தனர். அதற்கும் முன்பாக 2005ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகம், இந்தியாவில் புதுதில்லியை மையமாகக் கொண்ட தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி மன்றம் (என்சிஏஇஆர்) இரண்டும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், 22 சதவீதத்தினர் தங்களைப் பட்டியல் சாதி என அறிவித்திருந்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிற எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்க, இந்த நான்கு ஆய்வுகளிலும் கொஞ்சம் முன்னுக்குப் பின் இருந்தாலும் கிட்டத்தட்ட சமமான சதவீதம் பதிவாகியிருப்பதைக் காண முடிகிறது.
இதனிடையே, இந்திய அரசின் மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றாகிய தேசிய குடும்ப நல ஆய்வு (என்எஃப்எச்ஆர், 2015–2016), அதில் பங்கேற்றோரில் 21 சதவீதத்தினர் தங்களை எஸ்சி என்று அடையாளப்படுத்தியதாகத் தெரிவிக்கிறது. 2019ஆம் ஆண்டில், முன்னேறிவரும் சமுதாயங்கள் குறித்த ஆராய்ச்சியைப் பல நாடுகளில் பியூ மையம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக தேசிய தேர்தல் ஆய்வு (என்இஎஸ்) நடத்தப்பட்டது. அதில் உள்ள விவரங்களின்படி, இந்தியாவிலிருந்து பங்கேற்றோரில் 19 சதவீதத்தினர் பட்டியல் சாதி என்று அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.

“சாதி இந்தியாவில் வாழ்க்கையின் சிக்கலான ஆனால் ஒருங்கிணைந்த கூறாக, அதே போல் அரசியல் விவாதத்தின் மையப் புள்ளியாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்திய சமுதாயத்தின் சமூக இயங்காற்றலைப் புரிந்துகொள்ளவும், கொள்கை உருவாக்கத்திற்கும் சாதியைக் கணக்கிவிடுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், சாதி அடையாளத்தை எவ்வாறு அளவிடுவது அல்லது யாரிடம் கேள்வி கேட்பது (இந்தியர்கள் அனைவரிடமுமா அல்லது குறிப்பிட்ட மதப் பிரிவுகளைச் சேர்ந்தோரிடமா) என்பது குறித்து இதுவரை ஒருமித்த கருத்து இல்லை. மதிப்பிடும் வழிமுறைகளில் உள்ள இந்த வேறுபாடுகளின் காரணமாக, 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து மாறுபட்ட வெவ்வேறு மதிப்பீடுகளை தேசிய மாதிரி ஆய்வுகள் வழங்குகின்றன.” –இவ்வாறு பியூ ஆராய்ச்சி மையம் தனது அறிக்கையின் முடிவில் கூறுகிறது.
இன்றைய உலகத் தொடர்புச் சூழலில், ஒரு நாட்டில் செயல்படும் ஆராய்ச்சி அமைப்பு இன்னொரு நாட்டிற்குத் தேவைப்படும் தரவுகளை ஆராய்ந்து தருவது இயல்பாக நடக்கிறது. அடிப்படையானதொரு புரிதலுக்கும் இது உதவும். ஆனால், இத்தகைய ஆய்வுகளில் பங்கேற்றுக் கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள்தான் இருப்பார்கள் (மேற்படி பியூ அறிக்கையில் 30,000 இந்தியர்கள்). ஆகவே, துல்லியமான விவரங்கள் பதிவாக வேண்டுமானால், நாட்டின் குடிமக்கள் அனைவரும் பங்கேற்கிற மிக விரிவான ஆய்வாக இருந்தால்தான் சாத்தியமாகும். அதிகாரப்பூர்வமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலமே இது நிறைவேறும். அதை அரசுதான் செய்ய முடியும். நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வது ஒன்றிய அரசின் பணிதான்.
ஆகவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது மாநில அரசின் பொறுப்பா ஒன்றிய அரசின் பொறுப்பா என்று கேட்டால் ஒன்றிய அரசின் பொறுப்புதான். அதற்குத் தேவையான அலுவல் ஏற்பாடுகள் சார்ந்த கட்டமைப்பு ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது. இதுவரையிலான மக்கள்தொகை கணக்கெடுப்புகளை ஒன்றிய அரசுதான் நடத்தி வந்திருக்கிறது. இப்போது சாதிவாரிக் கணக்கையும சேர்த்து மேற்கொள்வதற்கான அரசியல் உறுதியும் கொள்கைத் தெளிவும் உண்மை நிலவரத்தைச் சந்திக்கும் துணிவும் இருக்க வேண்டும் – அவ்வளவுதான்.
ஆலய விழா அழைப்பிதழ்
சாதிப் பிரிவினை இந்தியாவில் பாரம்பரியமாக இருந்து வருவதல்ல என்ற பொய்யை நிறுவ விரும்புகிறவர்கள், இந்தக் கணக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். சமூகநீதிக்கான இன்றைய இட ஒதுக்கீடு நடைமுறைகள் வலுப்பெறவும் தொடரவும் விடக்கூடாது என்ற எண்ணமே அந்த எதிர்ப்பின் உள் பக்கம். சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களிலும் சிலர் இந்தக் கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறார்கள். தங்களுடைய சாதியின் மக்கள்தொகை பற்றிய மிகையான கூற்றுகள் அம்பலமாகிவிடும் என்ற கவலை அவர்களுக்கு.

இல்லாத சாதி உணர்வைக் கிளறிவிடுவதற்குத்தான் பயன்படும் என்ற கோணத்திலும் இதனை ஏற்க மறுக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எங்கும் பரவியிருக்கிற இப்படிப்பட்ட சாதி அகங்காரங்கள், அவமதிப்புகள், ஆணவக் கொலைகள், தற்கொலைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளில் கணிசமானவை சாதிப் பாகுபாடுகள் தொடர்பானவைதான். இதோ ஓர் அண்மைச் செய்தி:
தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டையில் உள்ள நாடியம்மன் கோவில் திருவிழாவுக்கான அழைப்பிதழில் நிதி வழங்கிய பலரது பெயர்கள் அவர்களுடைய சாதி ஒட்டுடன் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், திருமணப் பத்திரிகை, இறப்பு அறிவிப்பு போன்றவை தவிர்த்துப் பொது நிகழ்வுகளில் தங்களுடைய சாதி அடையாளத்தைக் குறிப்பிடுவதில்லை என்ற பழக்கம் ஒரு பண்பாடாகவே வளர்ந்திருக்கிறது. பெரியார் இயக்கத்தின், பொதுவுடைமை இயக்கத்தின் பெரும்பங்களிப்பில் முகிழ்த்த பண்பாடு. அந்தப் பெருமையைக் கழற்றிவிட வைப்பது போல அந்தக் கோவில் விழா அழைப்பிதழில் சாதிப் பெயர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் “மேல்” என்று சொல்லிக்கொள்ளப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை, ஆகவே சாதியும் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர்கள் “ஊரார்” என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
முன்பு ஊருக்கு வெளியே தள்ளி வைக்கப்பட்டவர்களை இப்போது ஊரார் என்று குறிப்பிடுகிறார்களே என்று மகிழ்ச்சியடைவதற்கில்லை அல்லவா? நடுவிக்கோட்டை ஆதி திராவிடர் நலச் சங்கம் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தாக்கல் செய்தது. அழைப்பிதழில் ஊரார் என்று குறிப்பிடாமல் ஆதி திராவிடர் என்று அச்சிட ஆணையிட வேண்டும் என்று அந்தச் சங்கம் கோரியிருந்தது. வழக்கு விசாரணையின்போது கோவிலின் நிர்வாக அதிகாரி, விழாவுக்கு நிதி அளிக்காதவர்கள்தான் ஊரார் எனக் குறிப்பிடப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், தலித் மக்கள் வழிபாட்டில் கலந்துகொள்ள எந்தத் தடையுமில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இந்த விளக்கங்களை ஏற்க மறுத்த நிதீமன்றம், ஆலய விழா அழைப்பிதழ்களில் இனி சாதிப் பெயர்களே இருக்கக்கூடாது என்று ஆணையிட்டிருக்கிறது. திருவிழாக் கொண்டாட்டங்கள் அனைத்திலும் தலித்துகள் சமமாகப் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும். வழிபட அனுமதிப்பது மட்டும் போதாது. உண்மையான பிரச்சினை பெயரைச் சேர்ப்பதல்ல. ஆகவே பெயரைச் சேர்க்க ஆணையிடுவது மட்டும் உண்மையான பங்கேற்பையும் சமத்துவத்தையும் உறுதி செய்யாது என்றும் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரியா கிளீட் ஆகியோர் கொண்ட அமர்வு கூறியுள்ளது.

அரசாங்க அலுவலர் இப்படி தலித் மக்களை ஊரார் என்று குறிப்பிடுவதற்கு ஆதரவாக இருப்பது வியப்பளிக்கிறது என்று கோவில் நிர்வாக அதிகாரியையும் ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள். விழாவில் பங்கேற்பது பொருள்பொதிந்ததாக, உறுதியானதாக இருக்க வேண்டுமேயன்றி, வெறும் அடையாளப்பூர்வச் செயலாக இருந்துவிடக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
“தலித்துகளை வெளிப்படையாக அங்கீகரிக்கத் தவறுவது அவர்களை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுகிறது – கண்ணுக்குப் புலப்படாமல் இருக்க வேண்டியிருப்பதை ஏற்றுக்கொள்வது, அல்லது அங்கீகாரத்திற்காகத் தங்களின் சாதி அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வது,” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்குவது என்பது சாதி அடையாளத்தை வெளிப்படுத்தாமலே அங்கீகரிக்கப்படும் உரிமையை உறுதிப்படுத்துவதன் வாயிலாக இந்த முரண்பாட்டைச் சரிசெய்வதாக இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்களது கண்ணியம், தனியுரிமை, பொது மத நிகழ்வுகளில் சமத்துவமான பங்கேற்பு என சமநிலைப்படுத்தப்பட வேண்டும்,” என்று நீதிபதிகள் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆலய விழா அழைப்பிதழ்களில் பெயர்களோடு சாதி ஒட்டு இருக்கக்கூடாது என்பதோடு, “ஊரார்” என மறைக்கப்பட்ட பிரிவுனகளைச் சேர்ந்தோரின் பெயர்களும் அச்சிடப்படுவது தொடங்க வேண்டும். அது நடக்குமானால் அந்த மக்களிடமிருந்தும் விழாவுக்கு நிதி வந்து சேரும். இதை யோசிக்கிறபோது, “மற்றவர்களைப் போல நாங்களும் எங்களுடைய சாதிப் பெயரைச் சேர்த்துக்கொள்வோம்,” என்று தலித் சமூகங்களிலிருந்தே எழும் கலகக்குரலும் காதில் ஒலிக்கிறது.
இவ்வாறு அடையாளங்களுக்கான எழுச்சிகள் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் அடையாள அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. அந்த அரசியலின் அடையாளங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.
முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) – 7 | சாதிச் சான்றிதழ் (Caste Certificate) கேட்பது சரியா? சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவது நியாயமா? – அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: உரிமைக்கான அரசியல் அடையாளமும் - Identity Politics