உரிமைக்கான அரசியல் அடையாளமும் தனிமைக்கான அடையாள அரசியலும்
சாதி இருக்கும் வரை – 9
– அ. குமரேசன்
உலகம் முழுவதுமே அரசியல் அதிகாரம், ஆதிக்க ஆணவம், அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றால் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை அழித்தொழிக்கும் வன்மத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. மக்களின் வரலாறு, மொழி, பண்பாடு சார்ந்த அடையாளங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
நண்பனின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவனுடைய பேத்தி என் மடியில் வந்து அமர்ந்தாள். “அங்க்கிள், எங்க கிளாஸ்ல புதுசா ஒரு சாங் சொல்லிக்கொடுத்தாங்க, அதைப் பாடட்டுமா,” என்று கேட்டாள்.
தனது தாத்தாவின் சமவயது நண்பனான என்னை “அங்க்கிள்” என்று அழைத்ததில் ஏற்பட்ட அற்பமான களிப்போடு “பாடுடா செல்லம்,” என்றேன்.
உடனே அவள் திக்கித் திக்கி, “தி மூன் ஷைன் இன் தி நைட் ஓவர் தி ஸ்கை,” என்று பாடினாள்.
பாட்டு ஆங்கிலமானாலும் பாடியது மழலை என்பதால் அதன் இனிமையை ரசித்துக்கொண்டே, “இந்தப் பாட்டுக்குப் பொருள் என்னம்மா,” என்று கேட்டேன்.
“பொருளா? அப்படின்னா,” என்று புரியாமல் கேட்டாள்.
“பொருள்னா, அதாம்மா அர்த்தம், நீ பாடுனதுக்கு அர்த்தம் சொல்லு பார்க்கலாம்,” என்றேன்.
“அர்த்தமா? என்ன சொல்றீங்க அங்க்கிள், புரியவே இல்லை,” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
அவள் அங்க்கிள் என்று சொன்னதும் என் மண்டையில் ஒன்று உறைத்தது. “அதாம்மா, பாட்டுக்கு மீனிங் தெரியும்னா சொல்லு,” என்று பொருளுக்கும் அர்த்தத்திற்கும் மீனிங் சொல்லிக் கேட்டேன்.
உடனே முகம் மலர்ந்து, “ஆங்… மீனிங்கா… தெரியும் அங்க்கிள்… வந்து வந்து… மூன் இருக்குல்ல, அது வந்து… ம் ம் ம் … ஸ்கையில… ம் ம் ம் … நைட்டுல … ம் ம் ம் …ஷைன் பண்ணுது!,” என்று சொல்லிக் கலகலவெனச் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பெனும் வானத்தில் நிலா ஒளிர்ந்ததைக் கண்டு மனம் நிறைந்தது. ஆனால், ஒரு பேத்தியின் நாவிலிருந்து நிலவும் இரவையும் வானமும் ஒளிர்வும் பறிக்கப்பட்டுவிட்டதற்கு யார் காரணம் என்ற எண்ணத்தில் அந்த மகிழ்ச்சி குறைந்தது. இது மொழி அடையாள அழிப்புக்கு ஒரு சான்று. இன்றைக்கு அதே (தமிழ்நாட்டில் ஏற்கெனவே சில முறை முயன்று பின்வாங்கப்பட்ட) அழிப்புக் கைங்கரியத்தை அதே இந்தியை வைத்துச் செய்வதற்கான திணிப்புக் கெடுபிடி அரசியல் நடந்துகொண்டிருப்பதையும், அதற்கு எதிர்ப்புகள் வெளிப்படுவதையும் காண்கிறோம்.
வறுவல் போய், சிப்ஸ் வந்தது
முன்பு தமிழக ஊர்களின் பலகாரக் கடைகளில் உருளைக்கிழங்கு சீவல் வறுவல் என்று கேட்டு வாங்கிக் கொறிப்போம். இன்று ரயிலடிகளின் கடைகள், பேருந்து நிலையச் சந்தைகள், பெரிய வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், பெட்டிக் கடைகள் என எங்கே சென்றாலும், ஒரே மாதிரியான பிளாஸ்டிக் உறைகள் சரஞ்சரமாகத் தொங்குகின்றன. அவற்றில் ஒரே சீரான வட்டத்தில் சீவல்களின் படம் இருக்கிறது. ஆனால் நாமாக எடுத்துக்கொள்ளாமல் அவர்களிடமே “உருளைக்கிழங்கு வறுவல்” வேண்டுமென்று கேட்டோமானால் ஒரு கணம் திகைப்பார்கள். ஆனால் “லேய்ஸ்’‘ என்று கேட்டால் உடனே எடுத்துக் கொடுப்பார்கள். இதிலே மொழி அடையாளத்தோடு, வட்டார உணவு, காலங்காலமாகச் சுவைத்து வந்த அதன் ருசி ஆகிய வட்டார அடையாளங்களும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சரக்கு வணிகப் பெயரால் அழிக்கப்பட்டிருக்கின்றன.
உலகின் பல நாடுகளிலும், அந்தந்த நாட்டின் பெரிய மதம் எதுவோ அதன் பெயரால் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களின் அடையாளங்கள் தாக்கப்படுகின்றன. இனம், பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட அடையாளங்கள் கைப்பற்றப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சிப் போக்குகளில், கால மாற்றத்திற்கு ஒவ்வாத பல பழைய சடங்குகளும் கட்டுப்பாடுகளும் தகர்ந்து போகும் ஆக்கப்பூர்வமான அழிவுகளும் நடைபெறுவது கவனத்தில் கொள்ளத்தக்கது. பெண்களைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் வேலிகள் பல இடங்களில் உடைக்கப்படுகிற நல்ல மாற்றங்களும் நடைபெறுகின்றன.
காட்சி மாற்றங்கள்
எடுத்துக்காட்டுக்கு ஒன்று: கணவன், தகப்பன், சகோதரன் என இல்லாமல் வேற்று ஆடவனுடன் ஒரு பெண் வெளியே சென்றாளானால் அவளுடைய ஒழுக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட சமூகம்தானே இது?, இன்று கைப்பேசியில் நிறுவியுள்ள செயலியைத் தட்டி ‘பைக் டாக்ஸி’ வரவழைத்து, அதை ஓட்டி வருகிற முன்பின் அறிமுகமில்லாத ஆடவனின் பின்னமர்ந்து பெண் தனக்கான இடத்திற்குச் செல்கிற, பள்ளம் மேடுகளில் வண்டி குலுங்குகிறபோது அவன் தோளைப் பற்றிக்கொள்கிற மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பைக் டாக்ஸி ஓட்டுநராகவே பெண் வருகிற, காத்திருக்கும் ஆணை ஏற்றிக்கொண்டு செல்கிற காட்சி இயல்பாகியிருக்கிறது.
பெண்ணின் கால்களைக் கட்டிப்போட்ட கட்டுப்பாட்டு அடையாளங்கள் அழிவது பாலின சமத்துவ அடையாளத்தை நோக்கிச் செல்லும் பயணத்தோடு இணைகிறது. காவல்துறை கண்காணிப்பாளராக ஆய்வுக்கு வரும் பெண்ணைப் பார்த்து, காவல் நிலைய ஆய்வாளரான ஆண் சல்யூட் அடிக்கத்தானே வேண்டியிருக்கிறது? முழுமையான சமத்துவம் மலர்வதற்கு இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. ஆயினும், அதை நிலைநாட்டுவதற்கான போராட்ட இயக்கம் இந்த மாற்றங்களை அங்கீகரித்துக்கொண்டே தொடரும்.
இதே போல் சாதி, மத அடையாளங்கள் அழிபடுவது ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமூகநீதி லட்சியங்களின் எழுச்சிக்கும், முன்னேற்றகரமான மாற்றத்திற்கும் ஓர் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதற்கான பயணத்தில், வாகனத்தின் இரண்டு பக்கங்கள் போல இரண்டு அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. ஒரு பக்கம், ஒதுக்கப்படும் சமூகங்களின் அடையாளப் பாதுகாப்புப் போராட்டத்திற்குத் தோள் கொடுப்பது. இன்னொரு பக்கம், மக்களை மந்தைகளாகப் பட்டிகளுக்கு உள்ளேயே அடைத்துப் போட முயலும் அடையாள அரசியல் பனி மூட்டத்தைக் கலைப்பது.
அவங்க வேணாம்
சிநேகிதி ஒருத்தியை நீண்டகால இடைவெளிக்குப் பிறகு சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. வாழ்விணையரும் பிள்ளைகளும் கலகலப்பாகப் பேசினார்கள். வீட்டுக்கு அழைத்தார்கள். இருவருக்கும் பழக்கமான நண்பர்களில் அவர் என்ன செய்கிறார், இவர் எப்படி இருக்கிறார் என்ற விசாரிப்புகளுக்குப் பிறகு மதிய உணவுக்கு அமர்ந்தோம். “பெரியவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். ரிலேட்டிவ்ஸ், ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிக்கிட்டு வர்றோம். நீயும் உனக்குத் தெரிஞ்ச ஃபேமிலியில சூட்டபிள் பையன் இருந்தா சொல்லு,” என்றாள் சிநேகிதி.
“யெஸ் சார்,. கேஸ்ட் நோ பார்,” என்றான் வாழ்விணையர்.
“ஓ! சாதி தடையில்லையா? ரொம்ப நல்லது. அப்படின்னா…,” என்று நான் கேட்கத் தொடங்கியபோது அவன், “இல்லை, அதாவது…” என்று இழுத்தான்.
கொண்டவனுக்கு உடனே கைகொடுத்த சிநேகிதக்காரி, “நீ எந்தக் கேஸ்ட்டுல பார்த்தாலும் ஓகேதான், ஆனா அவங்க மட்டும் வேணாம்,” என்றாள்.
“எவங்க மட்டும் வேணாம்?”
“அதாம்பா, அவங்க… மட்டும் வேணாம்.”
“ஏன் அவங்க மட்டும் வேணாம்?”
“அதையெல்லாம் எதுக்கு சொல்லிக்கிட்டு? அவங்க இல்லாம வேற எந்தக் கேஸ்ட்டுன்னாலும் பரவாயில்லை.”
“சும்மா சொல்லு, ஏன் அவங்க இல்லாம?”
“ம்… எப்படிச் சொல்றது? அவங்க திருந்தவே மாட்டாங்கப்பா.”
“திருந்தணும்கிற அளவுக்கு அவங்க என்ன தப்பு பண்ணிட்டாங்க?”
பதில் சொல்ல முடியாமல் அவர்கள் இருவருமே திணற, அங்கே ஒரு வெப்ப அலை பரவுவதைக் கவனித்த பிள்ளைகளின் முகங்களில் வெளிப்பட்ட வேண்டுகோளை உள்வாங்கிக்கொண்டேன். இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்ற புரிதலோடு, “ரசத்தையும் வத்தலையும் எடுத்து வை,” என்று சொல்லி அந்தப் பேச்சை முடித்து வைத்தேன். ஓராண்டுக்குப் பின் தங்களுடைய சாதியிலேயே தேர்ந்தெடுத்த பையனோடு பெண்ணைச் சேர்த்து வைத்தார்கள். “கேஸ்ட் நோ பார்” என்று சொன்னது சும்மா ஒரு பெருமைக்கு. தலைகளுக்குள் இப்படியெல்லாம் “அவங்க வெறுப்பு” இறக்கப்பட்ட பெருங்கூட்டத்தில் கலந்திருக்கும் குடும்பங்களில் ஒன்று என்பதால், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டும் போய் வாழ்த்திவிட்டு வந்தேன்.
வகை வகையாய்
தன் சாதிப் பெருமை என்ற வேலிக்குள்ளேயே இப்படிப்பட்டவர்கள் உழன்றுகொண்டிருக்க வைப்பது இந்தியாவின் முக்கியமானதோர் அடையாள அரசியல். உடல் அமைப்புகளும் தோல் நிறங்களுமாகிய புற அடையாளங்களைக் கொண்ட இனம் என்ற எல்லைக்குள்ளேயே நிறுத்துவது மற்றுமோர் அடையாள அரசியல். கும்பிடும் கடவுள், பின்பற்றும் மதம், எந்த மதமானாலும் பிடித்துக்கொள்ளும் சாதி, தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கும் சடங்குகள் ஆகிய உள் அடையாளங்களைக் கொண்ட சமூகக் குழு என்ற வட்டத்திற்குள்ளேயே சுற்ற வைப்பது இன்னுமோர் அடையாள அரசியல். வட்டாரம், மொழி, தொழில், பாலினம், வயது, பொருளாதாரம் என அடையாள அரசியலுக்கு மேலும் பலவகையான சார்புகள் இருக்கின்றன.
குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் தங்களுடைய நியாயமான உரிமைகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் போராடுவது அடையாளப் பாதுகாப்புப் போராட்டம். பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெறத்தக்க போராட்டம் அது. மாறாக, தங்களுடைய நலன்கள் மட்டுமே தலையாயது, தனித்துப் போராடியே அந்த நலன்களை நிலைநாட்ட வேண்டும், பிறரோடு இணைவது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றெல்லாம் கூறி, அனைவருக்குமான பொதுப் போராட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது அடையாள அரசியல்.
அந்த மக்களுக்கு வழிகாட்டுகிறவர்களாகத் தலைமைப் பொறுப்புகளுக்கு வந்தவர்கள், இப்படிப்பட்ட தனிமைப்படுத்தும் கருத்துகளைத் தொடர்ந்து போதிக்கிறார்கள். மூளையில் கறை ஏற்றுவது போல சொந்தக் கூட்டத்தின் தொன்மைப் பெருமை, வீர வரலாறு, ஆண்ட பரம்பரை என்றெல்லாம் திரும்பத் திரும்ப புகட்டிக்கொண்டே இருப்பார்கள். அந்த மக்கள் நாட்டின் ஜனநாயக இயக்கங்களோடு கலப்பதை, அதை விட முக்கியமாகப் புரட்சியை நோக்கிச் செல்லும் வர்க்கப் போராட்டச் சுடர்களின் வெளிச்சத்தில் திரள்வதைத் தடுத்துக்கொண்டே இருப்பார்கள். தங்களுடைய தலைமை ஆசனத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பெரிய கட்சிகளோடு பேரம் பேசவும் இந்த அடையாள அரசியல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவதற்கு உணர்வூட்டி, பாலின சமத்துவத்திற்கான போராட்டம் இதே உணர்வுள்ள ஆண்களோடும் இணைந்து நடப்பதன் மூலமே வெற்றி பெறும் என்ற புரிதலையும் ஏற்படுத்துகிற மகளிர் அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இது அடையாளப் பாதுகாப்புப் போராட்டம்.
ஆனால், பெண்ணின் வலி பெண்ணுக்குத்தான் தெரியும் எனக்கூறி, பெண்களின் பிரச்சினைகளையும் ஆணாதிக்கத் தாக்குதல்களையும் எதிர்த்து பெண்கள் மட்டுமே போராட வழிகாட்டுகிற அமைப்புகளும் இருக்கின்றன. ஆணாதிக்கக் கருத்தியல்களும் அவற்றை நெறிகளாக்குகிற மதம் உள்ளிட்ட ஏற்பாடுகளும்தான் எதிரிகள் என்ற உண்மையைக் காண மறுத்து, பெண்ணுக்கு எதிரி ஆண்தான் என்று கட்டமைப்பார்கள். இது அடையாள அரசியல்.
நாடு தழுவிய அளவில், மத வேலிகளைத் தாண்டி சுதந்திர இந்தியாவின் அடையாளமாக உருவெடுத்த மக்கள் ஒற்றுமையைப் பேணி வளர்ப்பதற்கான இயக்கங்கள் ஒருபுறம் நடைபோடுகின்றன. அதன் எதிர்ப்புறமாக, மக்களைப் பெரும்பான்மை மத அடையாளத்துடன் திரட்டுகிற, அதைப் பயன்படுத்தி அதிகாரங்களைக் குவிக்கிற, அதற்காகச் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுடன் மோதலைத் தூண்டுகிற, அவர்களது வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அடையாளங்களைத் தகர்க்கிற அடையாள அரசியல் முடுக்கிவிடப்படுகிறது. குறிப்பிட்ட சில சடங்குகளைச் செய்ய வைப்பது, நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் கூட செல்வாக்குச் செலுத்துவது, நியாயமான தீர்ப்புகளை சர்ச்சைக்கு உரியதாக்கி அவற்றிற்கு எதிராகக் கூட்டம் சேர்ப்பது என்று பலவகையான உத்திகள் கையாளப்படுகின்றன. சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்த மக்கள் பொது நீரோட்டத்தில் இணைந்து ஒற்றுமை அடையாளத்தைப் பதிப்பதும் நிகழ்கிறது. அவ்வாறு அவர்களை இணைந்து பதிக்க விடாமல் பிரித்தே வைக்கிற அடையாள அரசியலும் நடத்தப்படுகிறது.
வர்க்கமற்ற வழி
“அடையாள அரசியல் என்றால் வர்க்க உணர்வு இல்லாமல் உலகத்தைப் பார்க்கிற ஒரு வழிமுறை. வர்க்கம் என்ற ஒன்று இருப்பதையே அடையாள அரசியல் ஒப்புக்கொள்வதில்லை,” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி (‘நியூஸ்கிளிக்’ பேட்டி)..
இவ்வாறு, அடையாளங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள எதிரெதிர்ப் போக்குகளைத் தாங்களும் புரிந்துகொள்வது, அடையாள அரசியல் கூண்டுகளுக்குள் சிறகடிக்க முடியாமல் சிக்கியிருப்போரும் புரிந்துகொள்ளச் செய்வது ஆகிய இரண்டுமே பொது இயக்கத்திற்கு வருவோருக்கு ஓர் இன்றியமையாத தேவை, ஒரு தலையாய கடமை அந்தத் தேவையையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதால், அடையாள அரசியல் தலைவிரித்துத் தாண்டவமாடி, சமுதாயங்கள் பின்தங்கிப் போன அத்தியாயங்கள் வரலாற்றில் நிறையவே இருக்கின்றன. அவற்றில் சில பக்கங்களை இனி புரட்டிப் பார்க்கலாம்.
முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) – 8 | ஒரு விவாதச் சுழிப்பு, ஒரு ஆய்வுக் கணக்கெடுப்பு, ஒரு ஆலய விழா அழைப்பு – அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: யுத்தக் களங்களுக்குக் கொண்டுபோகும் - சாதி & மதம்