பலாத்காரத்தில் மனிதனையடக்க சாதி இருக்கிறதோயொழிய இயற்கையில் எங்கிருக்கிறது சாதி? என்ற பெரியாருக்கு சபர்பணம் செய்யப்பட்டுள்ளது இந்நூல்.
“மாதொரு பாகன் “வெளியானபோது இலக்கிய உலகின் ஒரு உறுப்பினருக்கு நேர்ந்த கொடுங்கோடுமை என்னுள் இன்னமும் சமாதானமாகாமல்தான் இருக்கிறது. ஒரு எழுத்தாளன் ஒரு நூலை எழுதியதற்காக, அதுவும் உண்மையை எழுதியதற்காக அவன் சார்ந்த சாதியே அவனுக்கெதிராக திரண்டு, ஏதோ மனிதகுலத்திற்கே தீங்கு விளைவித்தவனைப் போன்று அவனை நடத்திய விதம் சாதியின் இழிந்த கோரமுகத்தை காட்டி நின்றதை நினைக்கும் போது நமது அண்டை மாநிலத்தை ஒப்பிடத்தோன்றுகிறது. படைப்பாளிகளை கொண்டாடும் மாநிலமாக கேரளா உள்ளதில் சற்று பொறாமையாகவே உள்ளது. தமிழ்ச்சமுதாயம் என்றெண்டைக்கும் குற்றஉணர்வோடுதான் இருக்கவேண்டும்.
வழக்கம்போல் தேனி மாயா புத்தகநிலையத்திற்கு சென்றேன். அடுக்குகளில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களை பார்வையிடும்போது பெருமாள் முருகனின் “சாதியும் நானும் “என்ற நூலைப் பார்த்ததும் மறுயோசனையின்றி என் கை அதை எடுத்தது. (சாதியினால் கொடுமைப்படுத்தப்பட்டவர் அல்லவா )ஆர்வத்தில் எடுத்து வந்துவிட்டேன் ஆனால் வழக்கம்போல் மேலட்டையைக்கூட பிரிக்காமல் ஆறு ஏழு மாதமாக பத்திரமாக வைத்துவிட்டேன்.covid19 வாய்ப்பு தந்தது.

புத்தகத்தை திறந்தவுடன் ஓர் அற்புதமான நூலைப் படைக்கப்போகிறோம் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.ஆம், இது பெருமாள் முருகனும் அவருடைய மாணவர்களாலும் எழுத்துப்பட்ட நூல். பெருமாள் முருகனோடு 28பேர் சேர்ந்து எழுதிய அனுபவக்கட்டுரைகள். அனைத்து வகுப்பினரும் உள்ளனர். சாதியினால் அவரவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை, அவமானங்களை, மனக்குமுறல்களை, அவரவர்க்கேற்ற வகையில் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நாமக்கல், சேலம், கரூர் பகுதி மாணவர்களே பெரும்பான்மை. முதலில் இக்கட்டுரைகளை அம்மாணவர்கள் எழுத தைரியத்தை கொடுத்தது யார்? அடுத்து இக்கட்டுரைகள் வெளியானால் ஏற்படும் எதிர்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் எழுதியிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்னிருந்து இயக்கியது யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் ஒன்றேதான். அது “பெருமாள் முருகன் “மட்டுமே.
இந்நூலில் உள்ள பெருமாள் முருகனின் கட்டுரையில், அவர் மாணவராக இருந்தபோது இடதுசாரி இயக்கம் ஒன்றில் இருந்துள்ளார். அப்போது அவ்வியக்கத்தின் தோழர் ஒருவர் வீட்டிற்குச் சென்று உணவருந்த நேர்ந்த சமயத்தில் தானே தன்னுடைய சாதியை மறைத்து கூறியதாக பதிவிட்டுள்ளார். தோழர்கள் எப்போதும் சமத்துவ மனப்பான்மையில் இருந்தாலும் அவர்களின் அம்மாக்கள் அந்தச் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது இல்லையே. நாமும் எதிர்பார்க்கக்கூடாதுதானே.

நூல் ==சாதியும் நானும்
பதிப்பாசிரியர் ==பெருமாள் முருகன்
தொகுப்பாசிரியர்கள் ==பி. எழிலரசி, ப. நல்லுசாமி, ஆ. சின்னத்துரை, ரெ. மஹேந்திரன், ப. குமரேசன்.
பதிப்பகம் ==காலச்சுவடு
வகை ==அனுபவக் கட்டுரைகள்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி.

