ஒரு வீட்டின் தானியக் கிடங்கு நிரம்பிக் கிடக்கையில், அந்தக் குடும்பத்தின் பலவீனமான அங்கத்தினர்கள் பட்டினி கிடக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? இதுதான் தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் உணவு கையிருப்பு ஏராளமாக இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். இதில் ஒரு பகுதியை எடுத்து கொரானா வைரஸ் நெருக்கடியால் பட்டினியில் கிடப்போரை பாதுகாக்க பயன்படுத்தலாம். இந்தப் பெரும் கொடுமையான சூழ்நிலையில், பலர் இதனை கண்டும் காணாமலும் இருக்கிறார்கள்.

இந்திய உணவு கழகத்தில் அரசு ரூ.5 ...

இந்திய உணவு தானிய கழகம்

இருபதாண்டுகளுக்கு முன்பு, மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்திய உணவு தானிய கழகத்தில் பெரும் குவியலாக கிடக்கும் உணவு தானியங்களை எடுத்து பொதுப் பணிகளுக்காகவும், உணவு பாதுகாப்பு திட்டங்களுக்காகவும், இந்திய அரசு பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த வழக்கில் முறையீடு. இந்த பொதுநல வழக்கே, முக்கியமான உணவு பாதுகாப்பு திட்ட முன்முயற்சிகள் தொடங்கப்படவும், மதிய உணவு திட்டங்கள், பொது வினியோக முறையில் சீர் திருத்தங்கள் ஆகியவை கொண்டு வரப்படவும், உணவு உத்தரவாத சட்டம் இயற்றப்படவும் அடித்தளமாக அமைந்தது. இந்த திட்டங்களுக்கு ஆண்டு முழுமைக்குமாக தேவைப்படுவது 50 முதல் 60 மில்லியன் டன் தானியங்கள் ஆகும். இருந்தும், இந்திய உணவு கழகத்தில் கையிருப்பு கூடிக் கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் உணவு தானிய கொள்முதலே ஆகும்.

2001 ஆம் ஆண்டு மக்கள் சிவில் உரிமைக் கழகம், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த போது, இந்திய உணவு தானிய கழகத்தின் கையிருப்பு என்பது 50 மில்லியன் டன் தானியங்கள் ஆகும். இது அன்றைய மதிப்பில் ஒரு வரலாற்று சாதனை ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் உணவு தானிய கையிருப்பு கூடிக் கொண்டேதான் செல்கிறது. கடந்த ஜூன் மாதம் இது 80 மில்லியன் டன் என்ற அளவை எட்டியது. முடைக்கால கையிருப்பைக் {Buffer stock} காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 77 மில்லியன் டன் தானியங்கள் கையிருப்பில் இருக்கிறது. ராபிப் பயிர்கள் தற்போது நல்ல விளைச்சலை எட்டியுள்ளது. இதன் கொள்முதல் குறைந்தபட்சம் 20 மில்லியன் டன்களைத் தொடும். இவ்வளவு உணவு தானியங்கள் கையிருப்பு முன்னெப்போதும் இருந்ததில்லை. கொரானா நோய், கதவடைப்பு ஊரடங்கு என்று மக்களை துவம்சம் செய்து வரும் இந்த நேரத்தில் மக்களிடையே பசியும் பட்டினியும் அதிகரிக்கும் சூழல் எழுந்துள்ளது.

 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ...

ராபி பயிர் கொள்முதல்

மக்களை பாதுகாக்க அடுத்த மூன்று மாதங்களுக்கு பயனாளிகள் அனைவருக்கும் பொதுவினியோக பொருட்களை இரண்டு மடங்காக அதிகரித்து மத்திய அரசு கொடுத்திருக்கலாம். ஆனால் மத்திய நிதியமைச்சர் அவ்வாறு செய்யவில்லை. அத்தகைய ஒரு நடவடிக்கையே இப்போது தேவைப்படுகிறது. ராபி பயிர் கொள்முதலை உணவு தானியக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்காக தேவைப்படும் இடத்தை காலி செய்வதற்காகவேனும் கொஞ்சம் உணவு தானியங்களை வெளியே காலி செய்ய வேண்டும். இந்த நேரத்தில், மாநிலங்களுக்கும் பல நிவாரண உதவிகளை மத்திய அரசு செய்தாக வேண்டி உள்ளது. கொட்டிக் கிடக்கும் தானியங்களை, இந்த கொடிய நேரத்திலும் கூட பகிர்ந்து கொடுப்பது ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கிறது? ஒரு காரணம் உணவு மானியத்தை கணக்கு வைத்துக் கொள்வதில் உள்ள சிக்கலாக இருக்கலாம். மத்திய நிதி அமைச்சகம் இந்த மானியத்தை இந்திய உணவு தானிய கழகத்திற்கு ஈடு செய்தாக வேண்டி இருக்கும்.

இந்திய உணவு தானிய கழகம் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே கொள்முதல் செய்வது, குறைந்த விலையில் பொதுவிநியோக முறைக்காக பண்டங்களை விற்பது, போக்குவரத்து செலவு மற்றும் உணவுதானிய கிட்டங்கி செலவுகள் ஆகியவையும் இந்த மானியத்தில் அடங்கும். உணவுதானியங்கள், உணவு தானிய கழகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டால் தான் மத்திய அரசு கணக்கில் ஏறும். இதற்கான உதவிக்காக மத்திய அரசு 40,000 கோடி ரூபாயை நிவாரண ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்தார் நிதி அமைச்சர். பொருளாதார மதிப்பின் படிதான் இது கொடுபட வேண்டும். உண்மைப் பண மதிப்பில் இதனைச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் கணக்கீட்டு மதிப்பில் இது அதிக செலவு மிக்கதாக தோன்றும். இந்த குறைபாட்டை உணவு பொருட்களை எடுத்து நெருக்கடி நிலையில் உள்ளோருக்கு வழங்கும் சிக்கலில் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. கடன் மதிப்பு நிறுவனங்களுக்கு வேண்டுமானால் நிதி பற்றாக்குறை என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், உணவு பொருளாதாரத்தில் அதனைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை.

தமிழக_ரேஷன் கடைகளில் "இலவச அரிசி ...

இந்த பிரச்சினையை கொஞ்சம் மாநில அரசுகளின் பார்வையில் அணுகலாம். உதாரணமாக, ஜார்கண்ட் மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இம்மாநிலத்தில், இன்னும் 7 லட்சம் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. எனவே, தற்போது மத்திய அரசு அறிவித்த நிவாரண உதவிகள் இந்த ஏழு லட்சம் குடும்பங்களுக்கு சென்று சேராது. ஒருவேளை ஜார்கண்ட் அரசு, அம்மக்களுக்காக இந்திய உணவு தானிய கழகத்தில் இருந்து பொருட்களை வாங்கி வினியோகிக்க நினைத்தால் கூட அதன் பொருளாதாரச் செலவாக பெரும் தொகை கொடுக்க வேண்டிவரும். இது சந்தை விலையைவிட அதிகமாக இருக்கும்..

ஏழு லட்சம் குடும்பங்களுக்கும் அவசரகால குடும்ப அட்டைகளை ஆறு மாதங்களுக்கு வழங்குவதாக கணக்கில் கொண்டு, ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ வீதம் மாதமொன்றுக்கு இந்த நெருக்கடி நிலை தீரும்வரை கொடுத்தால் கூட, ஒரு லட்சம் டன் தானியங்களை தாண்டாது. இது இந்திய உணவு தானிய கழகத்தின் கையிருப்பில் உள்ள தானிய மதிப்பில் ஒரு விழுக்காட்டின் பத்தில் ஒரு பகுதியாக கூட இருக்காது. இந்த மிகச் சிறு பகுதியை இந்திய அரசு மிகவும் ஏழை மாநிலங்களுக்கு பசியைப் போக்க வழங்கிட வேண்டும்.

ஏற்கனவே மாநிலங்களுக்கு கொடுத்துவரும் அளவைக் காட்டிலும் பெருமளவு உணவு தானியங்களை இலவசமாக அல்லது மிகக்குறைந்த விலையில் வழங்கிட வேண்டும். இப்படி உணவு தானிய கழகத்தின் வழியாக கொடுக்கப்படும் சிறப்பு உணவு மானியங்கள் அந்த மாநிலங்களில் உள்ள பொது வினியோக முறையில் உள்ள குறைகளை நீக்கி எல்லோருக்கும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய உதவும். இதோடு அவசரகால நிவாரண உதவியாக சமூக சமையல் கூடங்களும் உருவாக்கி பயன்படுத்தலாம். தனியார் வர்த்தகம் தடைபட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் உள்ளூர் அளவில் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இது பயன்படும். நிதியமைச்சர் அறிவித்திருக்கும் நேரடி பணப் பட்டுவாடா உதவியை காட்டிலும் உணவு மானியம் வழங்கும் உதவி மிகவும் முக்கியமானது. நேரடி பண வினியோகத்தில் பல குறைபாடுகள் இருக்கிறது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா ...

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனாவின் மூலமாக ரூபாய் 500 மூன்று மாதங்களுக்கு வழங்குவது என்பது மிகச்சிறிய தொகையே. இதை பெற, பலரது வங்கி கணக்குகள் நடப்பு செயல்பாட்டில் இருக்காது. எல்லோருக்கும் ஒரே சமயத்தில் பணம் கொடுப்பதும் வங்கிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். பண நெருக்கடியை உருவாக்கும். பல ஏழை மாநிலங்களில் கிராமப்புற வங்கிகள் மிகவும் குறைவு. வங்கிகளின் வணிக தொடர்பாளர்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள் கைவிரல் ரேகை பெறுதல், பல கிராமங்களுக்கு பயணித்தல் ஆகியவை இந்த நேரத்தில் தொற்று பாதிப்பை உருவாக்கலாம். பாதுகாப்பானதும் அல்ல. பணப்பட்டுவாடா நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலும் பெரும் பிரச்சனையை உருவாக்கும். சமாளிப்பது பெரும் கடினம். இதுதவிர, நேரடி பண நிவாரண உதவிகள் முழுமையாக சென்று சேர்கிறதா என்பதும் ஒரு கேள்விக்குறியே.

வங்கிகளில் பணம் வந்து சேர்ந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்ளவே பல கிராமங்களில் பல கிலோ மீட்டர் தூரம் பயணமும் நிறைய செலவு செய்து சென்று தெரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. விசாரித்து தெரிந்து கொள்வதற்கு கூட பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். சிலநேரங்களில் கணினி பழுது, இணையதள வசதி குறைபாடு ஆகியவற்றின் காரணமாக உரிய நேரத்தில் பணப்பலனை பெற முடியாமல் அவஸ்தைப் படலாம். பயோமெட்ரிக் பரிசோதனைக்காக சிலநேரம் சிலருடைய கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இவை யாவும் நானே கற்பனையில் உருவகப்படுத்தி கூறும் காரணங்கள் அல்ல. ராஞ்சி மாவட்டத்தில் உள்ள நாகி என்னும் ஒன்றியத்தில், நேரடியாக நாம் அவதானித்து அறிந்து கொண்டவை.

இதன் காரணமாக ஜார்கண்ட் அரசு பொது வினியோக முறையை நேரடி பணப்பட்டுவாடா முறையாக மாற்றம் செய்து நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. சுருக்கமாக கூறுவது இதுதான். கஷ்ட காலங்களில் நேரடியாக உணவு தானியங்களை மக்களுக்கு வழங்குவது பல மாதங்கள் அவர்கள் உயிரோடு இருக்க பக்கபலமாக இருக்கும். பொது விநியோக முறையின் மூலம் மதிய உணவுத் திட்டங்களையும் சமூக சமையல் கூட்டங்களையும் பல கிராமங்களில் மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதற்கு, தனது உணவு தானியக்கிடங்கில் குவிந்து கிடக்கும் தானியங்களை மாநிலங்களுக்கு மத்திய அர்சு திறந்துவிட வேண்டும். இதனால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற குழம்பிய கணக்கீடுகளை காதில் போட்டுக் கொள்ளக் கூடாது.

குறிப்பு: தி பிரின்ட் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் வெளியான கட்டுரை. பேராசிரியர் ஜீன் டீரீஸ் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்திய சென் அவர்களுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். பெல்ஜியம் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு படிக்க வந்தவர் தனது நாட்டு குடியுரிமை துறந்து இந்திய மக்களுக்காக பல ஆராய்ச்சிகளை செய்து வருபவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *