பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – ஆர்.விஜயசங்கர்

பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – ஆர்.விஜயசங்கர்

வினாயக் தாமோதர் சவார்க்கர்.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மறக்கப்பட்ட, இன்று அதை அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உச்சரிப்பவர்களே பொது வெளியில் சொல்லத் தயங்கிய பெயர்  மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடிக் காரணம், மஹாராஷ்டிர மாநிலத்தின் பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் சவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருக்கிறது.

பிஜேபியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் சவார்க்கரைப் புகழ்ந்து,  1857இல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த ராணுவ வீரர்களின் எழுச்சியை முதன் முதலாக இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக உலகுக்குக் காட்டியவர் சவார்க்கர்தான் என்று ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார்.  பிரதமர் மோடியும் தன் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் சவார்க்கரை 1857 எழுச்சியின் ‘சாம்பியன்’ என்று பொருள்படப் பேசியிருக்கிறார். வரலாற்று அறிவில்லாதவர்கள் இவர்களின் உரைகளைக் கேட்டால் சவார்க்கரே முன் நின்று அந்த எழுச்சியை நடத்துவது போல் தோன்றும். அதுதான் மோடி— ஷா கூட்டணியின் நோக்கமும்.

இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நடத்திய அந்த எழுச்சிப் போராட்டத்தை காரல் மார்க்ஸ் செப்டம்பர் 16, 1857  அன்றே இந்தியாவின் ‘முதல் சுதந்திரப் போர்’ என்று வர்ணித்து நியூயார்க் டெய்லி டிரிப்யூன் பத்திரிகையில் எழுதினார். தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் அவருக்குக் கிடைத்த தகவல்களை வைத்து எழுதிய மார்க்ஸ் புரட்சியாளர்களை எதிர்மறையாக விமரிசித்த அதே நேரத்தில், அவர்களின் ‘கொடூரமான’ செயல்பாடுகள் பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளுக்கான எதிர் வினையென்றே சொன்னார். பிரிட்டிஷ் ராணுவம் உலகில் பிற பகுதிகளில் செய்து கொண்டிருந்த கொடுமைகளையும் அதில் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தினார்.

1857க்கு முன்பே தென்னிந்தியாவில் ஆங்காங்கு நடந்த கிளர்ச்சிகள் வரலாற்றில் பதிவு செய்யப்படாமலே போயிருந்தன என்பது மார்க்ஸுக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு. சவார்க்கருக்கும், இன்று அவரை தேசிய ஹீரோக்களின் வரிசையில் வைக்கத் துடிக்கும் அமித் ஷா போன்றோருக்கும் தெரிந்தாலும் ஏன் பேச மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். (தனிக் கட்டுரையைப் பார்க்கவும்).

ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலான பிரச்சினை அல்லது தர்மசங்கடம், அமித் ஷாவுக்கும் சங்க பரிவாரத்திற்கும் இருக்கிறது.

வரலாற்றை ‘நம்’ பார்வையில் எழுத வேண்டும் என்று சொல்கிற அமித் ஷா சவார்க்கரின் பார்வையில் எழுதப்பட்ட 1857இன் வரலாறு குறித்த புத்தகத்தை இன்று தடை செய்ய  வேண்டும் என்றுதான் கூறுவார். அந்த அளவுக்கு இந்து—முஸ்லிம் ஒற்றுமையை வலுவாகவும் உணர்ச்சி பூர்வமாகவும்  எழுதியிருக்கிறார் சவார்க்கர். ஆனால் அவரின் கண்ணோட்டத்தில் மதவாதம் அப்போதே பொதிந்திருந்தது என்று வரலாற்றியலாளர்கள்  கூறுகிறார்கள்.

’1857இல் நடந்த முதல் சுதந்திரப் போர்’ என்கிற புத்தகத்தை சவார்க்கர் மராத்தி மொழியில் எழுதியது 1908இல். பின்னர் அது ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.அப்போது அபினவ் பாரத் என்கிற அமைப்பினைத் தன் சகோதரருடன் நடத்தி வந்தார்.

இனி சவார்க்கரின் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

1857இல் நடந்த போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களைக் குறித்து இப்படி எழுதுகிறார்.

“மவுல்விகளின் போதனையைப் பெற்று, கற்றறிந்த பிராமணர்களின் ஆசி பெற்று, டெல்லியின் மசூதிகளிலிருந்தும், பனாரஸின் கோவில்களிலிருந்தும் சொர்க்கம் வரை சென்ற பிரார்த்தனைகளின் பலனிகளான இவர்கள்  யார்? சுயதர்மமும் சுயராஜ்யமும்தான் அவர்களின் பெரும் கொள்கைகள். உயிரினும் மேலான மதத்தின்மீது சூழ்ச்சிமிகு, அபாயகரமான, அழிவுமிக்க தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்த பிறகு, சுயராஜ்யத்தை அடைவது என்கிற புனிதமான விருப்பத்துடன் அடிமைச் சங்கிலிமீது ஆவேச அடிகள் விழுந்தபோது ’தீன், தீன்’ என்ற கோஷம் இடியாக எழுந்தது. சுயதர்மம், சுயராஜ்யம் ஆகிய கொள்கைகள் இந்துஸ்தானத்தின் புதல்வர்களின் எலும்பிலும் மஜ்ஜையிலும் பதிக்கப்படும்.”

புத்தகத்தில் கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷா சஃபரை தாராளமாகப் புகழ்கிறார் சவார்க்கர்.  அதைவிட அதிகமாக இன்று உத்தரப் பிரதேசத்திலிருக்கும் அவத் பிரதேசத்தை 1857இல் கைப்பற்றிய  மவுல்வி அஹமத் ஷாவையும் இவ்வாறு புகழ்கிறார்: “தேசபக்த மவுல்வியான அஹமத் ஷாவின் புனிதப் பெயர் இந்துஸ்தானத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைச் சூட்டியிருக்கிறது, அவருடைய மரணச் செய்தி லண்டனை அடைந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு வட இந்தியாவில் இருந்த பெரும் வல்லமை நிறைந்த ஒரு எதிரி இனி இல்லை என்று ஆங்கிலேயர்கள் நிம்மதியடைந்தனர்.

அதேபோல் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பெருமைகளையும் சொல்லாமல் அவர் கடந்து செல்லவில்லை. ”இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பூனாவைச் சேர்ந்த நானா ஃபத்னாவிஸும், மைசூரின் ஹைதர் சாஹிபும்தான். நம் கண்முன் விரிந்த நாடகத்தில் தஞ்சாவூர், மைசூர், ராஜ்கார், டெல்லி போன்ற சமஸ்தானத்தை ஆண்டவர்கள் முக்கியமான பாத்திரங்களாயிருந்தனர்” என்கிறார் சவார்க்கர்.

Does Savarkar deserve the Bharat Ratna?

மராத்தா பேரரசின் பேஷ்வா பாஜி ராவின் மகன் நானா சாஹிப் தன் நம்பிக்கைக்குரிய தூதுவராக அறிவுக் கூர்மை வாய்ந்த அசிமுல்லா கானைத்தான் வைத்திருந்தார் என்றும் சவார்க்கர் குறிப்பிடுகிறார். அன்று சவார்க்கரின் உலகப் பார்வையைப் பின்வரும் பத்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

“முதலில் இந்தியாவின் விடுதலைக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி, உள்நாட்டுச் சண்டைகளை நிறுத்தி, மாநிலங்களை உள்ளடக்கிய ஐக்கிய இந்தியாவை உருவாக்கி, உலகில் இருக்கும் சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பில்  அதற்குரிய இடத்தை அடைவதுதான் நானா சாகிப்பின் முதல் திட்டமாக இருந்தது. இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் ஐக்கிய தேசமாக இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார். முகமதியர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யும் அன்னியர்களாக இருக்கும் வரை அவர்களை சகோதரர்களாகக் கருதுவது ஒரு தேசிய பலவீனத்தை ஒப்புக் கொள்வது போல்தான் இருந்தது. அதனால் அந்த எண்ணம் நீடிக்கும் வரை இந்துக்கள் முகமதியர்களை அன்னியர்களாகப் பார்ப்பது அவசியமாக இருந்தது. டெல்லியின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஆண்ட முகமதியர்களின் ஆட்சியை பஞ்சாபின் குரு கோவிந்த், ராஜபுதனத்தின் ராணா பிரதாப், புண்டேல்கண்டின் சத்ராசல், மராத்தியர் போன்றோர் அழித்து விட்டனர்; பல நூற்றாண்டுகளுக்கும்  மேல் நடந்த போர்களின் மூலம் முகமதியர்களை வென்ற இந்து இறையாண்மை தன்னை இந்தியா முழுவதிலும் ஸ்திரப்படுத்திக் கொண்டது. அந்தச் சூழலில் முகமதியர்களுடன் கைகோர்த்து செல்வது தேசிய அவமானம் அல்ல. மாறாக, அது ஒரு பெருந்தன்மையான செயல்.”

முகமதியர்களை இந்து மன்னர்கள் அடக்கி வெற்றி கண்டபின் அவர்களை சகோதரர்களாகக் கருதலாம் என்கிற இந்த இந்து மேலாதிக்கப் பார்வையின் தொடர்ச்சியை அவருடைய இந்துத்துவம் என்கிற நூலில் காணலாம். இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டால் இந்து இனம் விரும்பும்வரை கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் இங்கு இருக்கலாம் என்பதுதான் அவருடைய இந்த்துவக் கொள்கையின் சாரம். முஸ்லிம்கள் அடக்கப்பட்டு விட்டதால் “இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையே இருந்த விரோதத்தினைக் கடந்த காலத்திற்குள் வீசி விடலாம். அவர்களுக்கிடையே இப்போது நிலவுவது ஆள்வோருக்கும் ஆளப்படுவோர்க்கும், அன்னியர்க்கும் பூர்வகுடியினருக்குமான உறவு அல்ல. அது சகோதரர்களுக்கிடையேயான உறவு. அவர்களுக்கு இடையில் நிலவும் ஒரே வேறுபாடு மதம் மட்டும்தான். இரு தரப்பினரும் இந்துஸ்தான மண்ணின் மைந்தர்கள். பெயர்கள் வேறுபட்டாலும் அவர்கள் ஒரு தாய் மக்கள். இந்தியா என்கிற ஒரே தாயின் பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் ரத்த உறவு கொண்ட சகோதரர்கள்.”

1857 எழுச்சியின் உச்சகட்டத்தில் பஹதூர் ஷா சஃபரை புரட்சிக்காரர்கள் மன்னராக ஏற்றுக் கொண்டதைக் குறித்து சவார்க்கர் இப்படி எழுதுகிறார்:

“எனவே, பஹதூர் ஷா சஃபரை இந்தியாவின் அரியாசனத்தில் ஏற்றியது மீண்டும் முகமதிய ஆட்சியை ஏற்படுத்தியதாகாது என்பதுதான் உண்மை. மாறாக, இந்துக்களுக்கும் முகமதியருக்கும் இடையே நடந்த நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்துவிட்டது, கொடுங்கோலாட்சி முடிந்தது என்கிற பிரகடனம்தான் அது. ஆகவே, இந்துக்களும் முகமதியர்களும் மே 11, 1857 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது முதன்முதலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களது மண்ணின் பேரரசருக்கு உளப்பூர்வமான, மிகவும் விசுவாசமான வாழ்த்துகளை அனுப்பட்டும்!”

முஸ்லிம் ஆளுமைகள மட்டுமின்றி, பாமர முஸ்லிம்களையும், முல்லாக்களையும் கூட சவார்க்கர் வெகுவாகப் புகழ்கிறார். “டெல்லியில் நிறைந்து வாழும் முஸ்லிம் மக்களிடையே முல்லாக்கள் தீவிரமாகப் பணியாற்றினர். நாடு, மதம் ஆகியவற்றைக் காக்கும் லட்சியத்திற்கான போர்க்களத்தில் ரத்தம் சிந்துவதற்காக  உத்தரவு வரும்வரை ஆயிரக்கணக்கான முஸல்மான்கள் உறுதியுடன் காத்திருந்தனர்.

சவார்க்கர் கடந்த காலத்தைக் குறித்துதான் எழுதினார். ஆனால் அவருடைய எச்சரிக்கைகள் தெளிவாக எதிர்காலம் குறித்தும் இருந்தன.

“இப்போதும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய பழைய ஏமாற்று வேலையை மீண்டும் காண்பிக்க முயற்சி செய்வார்கள். இந்துக்களை முஸல்மான்களுக்கு  எதிராகவும், முகமதியர்களை இந்துக்களுக்கு எதிராகவும் போராடத் தூண்ட முயற்சி செய்வார்கள். ஆனால், அவர்களின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள் இந்து சகோதரர்களே! ஆங்கிலேயர்கள் தாம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாட்டார்களென்று புத்திசாலியான இந்து சகோதரர்களுக்கு சொல்லத் தேவையில்லை.”

முஸல்மான்களே, நீங்கள் குரானை வணங்குபவர்களென்றால், இந்துக்களே நீங்கள் கோமாதாவை வணங்குபவர்களென்றால், உங்களுக்கிடையே இருக்கும் சிறு பிரச்சினைகளை மறந்துவிட்டு இந்தப் புனிதப் போருக்காக ஒன்றுபடுங்கள்! போர்க்களத்தில் ஒரே கொடியின்கீழ் திரண்டு, போராடி ரத்த ஆறுகளின் மூலம் ஆங்கிலேயரின் பெயரை இந்தியாவிலிருந்து கழுவி விடுங்கள்! இந்துக்கள் முகமதியர்களுடன் கைகோர்த்து இந்தப் போரில் இறங்கினால், முகமதியர்களும் நாட்டின் சுதந்திரத்திற்காகக் களத்தில் இறங்கினால், அவர்களின் தேசபக்திக்குப் பரிசாக பசுக்களைக் கொல்வது நிறுத்தப்படும்.”

அமித் ஷாவும் மோடியும் இந்த வரலாற்றைக் கூடச் சரியாகப் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. இன்று 1857 குறித்து எழுதியதை அவர்கள் மேற்கோள் காட்டக்கூட முடியாது. ஏனெனில் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு என்பது அவர்கள் மூடி மறைக்க விரும்பும் வரலாறு.

முஸ்லிம்களைச் சகோதரர்கள் என்றும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிரிகளென்றும் பார்த்த சவார்க்கர் பின்னர் வரலாற்றையும் அரசியல் பார்வையையும் நேர்மாறாகத் திருப்பிப் போட்ட புரட்டு வேலை அந்தமான் சிறையில் துவங்கியது.  ஒரு மனிதனின் வாழ்க்கையில் அரசியல் பார்வைகள் மாறுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், அது எந்தத் திசையில் எந்த நோக்கத்திற்காக மாறுகிறது என்பதைப் பொறுத்துதான் அதனை ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று முடிவு செய்ய முடியும்; அந்த மனிதனைக் குறித்த மதிப்பீடும் இருக்கும்.

தன் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்  ‘இந்தியாவின் ஆறு புகழ்மிகு சகாப்தங்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதில்  முதல் சுதந்திரப் போர் குறித்து அவர் எழுதிய புத்தகத்தில்  இந்து தேசத்தின் பார்வையை முன்வைத்ததாகக் கூறுகிறார். முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து எழுதியதை முழுவதும் மறைத்து விட்டார். அசோகர் வேதாந்த வழி வந்த இந்துக்களிடம் மிகவும் சகிப்புத் தன்மையின்றி நடந்து கொண்டார், திப்பு சுல்தான் என்கிற காட்டுமிராண்டித்தனமான சுல்தானை மராத்தியர்களும், ஆங்கிலேயர்களும் தோற்கடித்தனர்,  அக்பர் அன்னியர், இரக்கமற்றவர், சகிப்புத் தன்மையற்றவர் என்றெல்லாம் வசை பாடுகிறார்.

அவருடைய அறிவு நாணயத்திற்கு வேறு ஒரு சான்று தேவையில்லை.

சவார்க்கர் அந்தமான் சிறையிலிருந்தபோதே அவருடைய மதவாதப் பார்வை தெளிவாக வெளிப்படத் தொடங்கியது.

அந்தமான் உண்மைகள்

அந்தமானின் தனிமைச் சிறையில் அவர் செக்கிழுப்பது போன்ற  கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது யாரும் குறைத்து மதிப்பிட முடியாத உண்மை என்ற போதிலும் அதே போன்ற கொடுமைகளை அனுபவித்த சக சிறைவாசிகள் பிரிட்டிஷ் அரசிடம் விடுதலைக்காக மண்டியிடவில்லை என்பதும் உண்மைதான். சுபோரஞ்சன் தாஸ்குப்தா என்பவர் அது குறித்து இப்படி எழுதுகிறார்:

“வினாயக் தாமோதர் சவார்க்கர் ஒரு சுதந்திரப் போராட்டக்காரர்தான். ஆனால் சிட்டகாங் எழுச்சியில் ஈடுபட்ட புரட்சிக்காரர்களைப் போல பிரிட்டிஷாருடன் போராடி உயிர் துறக்கவில்லை; பகத்சிங், குதிராம் போஸ் ஆகியோரைப் போல பிரிட்டிஷாரை எதிர்த்து நிற்பதால் உயிரே போனாலும் சரி என்று தியாகம் செய்யவும் இல்லை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் வீரமாகப் போராடினாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களில் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கோரும் அளவிற்கு அவரது உணர்வு தகர்ந்து போயிருந்தது.. அந்தமான் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பிற புரட்சிக்காரர்கள் மன்னிப்புக் கேட்பது குறித்து கனவுகூடக் காணவில்லை.”

அந்தச் சிறையில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் சவார்க்கரும் பின்னர் சங்கப் பரிவாரமும் ஒத்துழைத்த கதையின் கரு உருவானது. மதம் கடந்த தேசியம் என்று அவர் பேசிய சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குள் இருந்த மதவாத விஷம் வெளிப்பட்டதும் அங்குதான், இதற்கு அவர் எழுதிய The Story of My Transportation for Life  என்கிற புத்தகமே சாட்சி. 1927இல் வெளிவந்த அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. 1947இல் தடை நீங்கியது. சிறைக்குள்ளேயே மதரீதியான பிரிவினை வேலைகளைச் செய்தார் என்பது இந்த புத்தகத்தில் தெளிவாகிறது. சவார்க்கரின் நிலைப்பாட்டில் நிகழ்ந்த மாற்றத்திற்கு சிறையிலிருந்த முஸ்லிம் வார்டர்கள்தான் காரணம் என்று பொருள்படும்படி எழுதுகிறார் சவார்க்கர். எல்லா அரசியல் கைதிகளுக்கும் முஸ்லிம் வார்டர்கள்தான் இருந்தனர், இதனால் சக சிறைவாசிகளும், குறிப்பாக இந்துக்களும், துன்புறுத்தலுக்கு ஆளாயினர் என்கிறார்.

சிறைக்குள்ளும் மதம் மாறியவர்களைச் சுத்திகரிக்கும் ஷுத்தி இயக்கத்தை நடத்தியதாகவும், இது சிறைக்கு வெளியில் அந்தமான் தீவிலும் பரவியது என்கிறார். அவர் சொல்வது இதுதான்: “பாவிகளாகவும், கிரிமினல்களாகவும், சமூக விஷமிகளாகவும் இந்து சமூகத்தில் இருப்பவர்களை அந்தச் சமூகத்திற்குள்ளேயே வைக்க முயற்சிப்பது நேர விரயம், குழந்தைத் தனமானது என்று சொன்னால், ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமூகத்திற்குள் இருக்கும் சபிக்கப்பட்ட இந்தக் கீழ்மக்களை வென்றெடுக்க முஸ்லிம்கள் செய்யும் பிரச்சாரத்தை எப்படி விளக்குவது? முஸல்மான்கள் அதற்காகப் போர்களை நடத்தினர்; ஆண்களையும் பெண்களையும் வாளினால் கொன்றனர்; வீடுகளுக்குத் தீ வைத்துக்கொள்ளை அடித்தனர். சுருக்கமாகச் சொன்னால், பேரளவிலான மதமாற்றத்திற்காக அவர்கள் ஜிஹாத் என்கிற புனிதப் போரைப் பிரகடனம் செய்திருக்கின்றனர்.”

கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் மீது என் இதயத்தில் வெறுப்பில்லை; இவர்களிடையே இருந்து  மற்றவர்களை ஒடுக்கி, வன்முறைக்குள்ளாக்கும் பிரிவினரை நான் முழுமனதுடன் எதிர்க்கிறேன் என்று சொன்ன சவார்க்கர் ஷுத்தி இயக்கத்தின் மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிரந்தரமான ஒற்றுமையை உருவாக்குவேன் என்றும் ஒரு விசித்திரமான தர்க்கத்தை முன்வைக்கிறார். ‘சுத்திகரிக்கப்பட்டு’ மீண்டும் ‘தாய் மதத்திற்கு’ வருபவர்களை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வார் என்று அவர் சொல்லவும் இல்லை, சொல்லவும் மாட்டார்.

அவ்வப்போது அன்பொழுகப் பேசும் சவார்க்கர் இதே புத்தகத்தில் மீண்டும் ஒரு குட்டிக் கரணம் அடிக்கிறார். 1914இல் முதல் உலகப் போர் துவங்கி விட்டிருந்தது. மத்திய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, ஆஸ்த்ரியா-, ஹங்கேரி, பல்கேரியா, ஆட்டோமான் ஆட்சியிலிருந்த துருக்கி ஒருபுறமும், பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ருமேனியா, ஜப்பான், அமெரிக்கா எதிரிலும் நின்றிருந்தன.

PM Modi Attacks Opposition, Calls Them 'Shameless' For ' Insulting ...

துருக்கி பிரிட்டனுக்கு எதிரணியில் இருந்ததால் சவார்க்கருக்கு பயம் வந்து விட்டது. “துருக்கி ஜெர்மனியின் பக்கமும் பிரிட்டனுக்கு எதிராகவும் இருப்பதால், உலகம் முழுவதும் பரந்த இஸ்லாமியம் வந்து விடுமோ என்று எனக்கு சந்தேகங்கள் எழுந்து விட்டன. அதனால் இந்தியாவுக்கு அபாயம் நேரும். இந்தச் சூழலில் ஜெர்மனியின் நீண்ட கை இந்தியாவை நோக்கி நீண்டு, இந்தியாவிற்கு ஒரு சிக்கலான சூழலை உருவாக்கும் என்று நான் கண்டுபிடித்து விட்டேன். இது என் திட்டங்களுக்கு உகந்த சூழல்தான். ஏனெனில், பிரிட்டன்  இந்தியா கேட்கும் எல்லா உரிமைகளையும் வழங்கி விடும். போரினால் பிரிட்டனும், ஜெர்மனியும் களைத்துப் போயிருக்கும் தருணத்தில் இந்தியாவே அந்த உரிமைகளப் பறித்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு வலுவான நாடுகளுக்கிடையே கடுமையான சண்டை நடக்கும் இந்தச் சூழலை இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்கள் ஒரு சாத்தானின் வாய்ப்பாகக் கருதி  வடக்கிலிருக்கும் முஸ்லிம் கும்பல்களை ரஷ்யாவின் உதவியுடன் அழைத்து வந்து சூறையாடி விடுவார்களோ என்கிற அச்சமும் எனக்கு இருக்கிறது,” என்கிற சவார்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் சரணாகதி அடைவதற்குத் தயாராகிறார். இதை எழுதுவதற்குச் சில ஆண்டுகள் முன்னர் முஸ்லிம்களை நண்பர்களாகவும், பிரிட்டிஷ் அரசை எதிரிகளாகவும் சித்தரித்த சவார்க்கர் சிறைவாசத்தின்போது  அப்படியே நேர் மாறாக இடம் மாற்றிப் போட்டு விடுகிறார்.

விடுதலை செய்தால் ஏராளமானவர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்து ஆஃப்கானிஸ்தானத்திலிருந்தும், துருக்கியிலிருந்தும்  நடக்கும் படையெடுப்புகளைத் தடுக்க தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்வதாக பிரிட்டி அரசுக்கு உறுதி மொழி கொடுக்கிறார். பிரிட்டிஷ் அரசு இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். தன் விடுதலைக்காக இப்படி எழுதிய சவார்க்கர் சக சிறைவாசிகளைக் குறித்து சொல்வதையும் பார்த்தால் ஆழமாக வேரூன்றியிருக்கும் அவருடைய போலித் தனம் வெளிப்படும். போர் செய்தியை அவர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருப்பதற்கு ஆழமான காரணம் ஒன்றுமில்லை, விடுதலை கிடைக்கும் என்கிற சுயநலம்தான் காரணம் என்று சொல்கிறார். இவருடைய விடுதலை தேச நலனுக்காக; பிறருடைய விடுதலை சுயநலத்துக்காக. பாரத ரத்னாவுக்காகக் காத்திருக்கும் சவார்க்கரின் ஆவிக்கு வாழ்க்கை முழுவதும் இரட்டை வேடம்தான்!

பிரிட்டனிடம் அவர் அளித்த உறுதிமொழிக்கு விடுதலை கிடைக்கவில்லையெனினும் உடனடி பலனாகப் பதவி உயர்வு கிடைத்தது. அவர் சிறையில் எண்ணெய் டிப்போவின்  ஃபோர்மேனாக ஆக்கப்பட்டார். அவருடைய உடனடி இலக்கு முஸ்லிம் சிறைவாசிகள்தாம். “நான் ஃபோர்மேனாக ஆன பிறகு முஸ்லிம்களிடமிருந்து நான் என்ன எதிர்பார்த்தேன் என்று அவர்களுக்குத் தெரியும். இந்து முறைப்படி ‘ராமா ராமா’, ‘நமஸ்கார்’, ‘வந்தே மாதரம்’ முகமன் கூறுவதில்  எனக்குப் பெருமிதம் இருப்பது அவர்களுக்குத் தெரியும்.  நான் எண்ணைய் டிப்போவின் தலைவராக்கப்பட்டேன் என்பதைக் கண்டு பயந்து நடுங்கிய அவர்கள் என்ன விலை கொடுத்தாவது என்னை தாஜா செய்வதற்குத் தயாராக இருந்தனர்.” இவர் வீர சவார்க்கர்தான்.

ஃபோர்மேன் ஆனவுடன் வார்டர்களை நீக்கி விட்டு இந்துக்களை அந்தப் பதவியில் நியமித்தார்.

அந்தமான் சிறை தொடர்பான ஆவணங்களில் தேசியத்திலிருந்து மதவாதத்திற்கு சிறைவாசிகள் (சவார்க்கர் தவிர) மாறியதாகவோ, இந்து சிறைவாசிகளை முஸ்லிம் வார்டர்கள் மோசமாக நடத்தியதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை என்று அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதுகிறார்.

அந்தமானில் ஷுத்தி மற்றும் கல்வி தொடர்பான இயக்கங்களை மேற்கொள்ளத் தன் புதிய பதவி உதவியதாக சவார்க்கர் எழுதுகிறார். இந்தியைத் தேசிய மொழியாகப் பிரச்சாரம் செய்யவும் இதனால் வாய்ப்பு ஏற்பட்டதென்றும் கூறுகிறார்: “நாம் ஜெர்மானிய மொழியைக் கற்பது போலவே இந்தியையும் கற்க வேண்டும். ஆனால் ஒரு தாய்மொழியாகவோ அல்லது தேசிய மொழியாகவோ அந்தமானின் இந்து கலாச்சாரத்தில் இடமிருக்கவில்லை. அந்தமானுக்கு உருது தவிர வேறு மொழி தெரியவில்லை. இந்துப் பெண்கள் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட திருமணம் என்பதைக் குறிக்க ஷாதி என்கிற சொல்லைத்தான் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். அதற்கு இணையான சமஸ்கிருதச் சொல்லையோ, இந்தி சொல்லையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று அற்புதமான ஒரு மாற்றம் அங்கு நிகழ்ந்திருக்கிறது. இந்துஸ்தான் மற்றும் இந்து கலாச்சாரத்தின் பாதுகாப்பையும் மேலாண்மையையும் பாதுகாத்து அந்தமானின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் மேம்படுத்த வேண்டுமெனில் இந்தியும், நாகரியும் அங்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர். இன்று வரை இவர்கள் மாறவில்லை.

பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ரகசியமாக சமரசம் பேசிய சவார்க்கர் தன்னுடன் இருந்த பிற அரசியல் கைதிகளையும் இழிவுபடுத்துகிறார். அதிகாரிகளின் அழைப்புக்கும் கட்டளைக்கும் காத்திருந்த அவர்கள் அவர்களுக்கு அடிமை போலிருந்தனர் என்கிறார் இந்த வீர். இதைச் சொல்பவர் சவார்க்கரின் மீது பரிவு கொண்ட வரலாற்றியலாளர் ஆர்.சி. மஜூம்தார். “சவார்க்கர் இப்படிச் சொல்வது மிகவும் சீரியஸான குற்றச்சாட்டு. பிற அரசியல் கைதிகள் அப்படி நடந்து கொண்டனர் என்று சவார்க்கர் சொல்வதை உறுதி செய்ய நமக்கு வழியில்லை. சவார்க்கர் தன் கருத்தை நிரூபிக்க ஆதாரமும் கொடுக்கவில்லை” என்று மஜும்தாரே வருத்தப்படுகிறார்.  அதே மஜூம்தார் அந்தமான் சிறையில் நடந்த ஒரு வேலை நிறுத்தத்தின்போது சவார்க்கர் செய்த துரோகத்தையும் பதிவு செய்கிறார். 1916 முதல் 1920வரை அந்தமான் சிறையிலிருந்த ட்ரைலோக்ய நாத் சக்ரவர்த்தி தன்னுடைய சுயசரிதையில், “சவார்க்கரும் அவருடைய சகோதரரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு எங்களை ரகசியமாக ஊக்குவித்து விட்டுப் பின்னர் அவர்களே அதில் கலந்துகொள்ளவில்லை” என்று எழுதியிருப்பதை மஜூம்தார் சுட்டிக் காட்டுகிறார்.  இது குறித்து சவார்க்கர் அளித்த விளக்கம் இன்னமும் சிறப்பானது. “நாங்கள் பகிரங்கமாக வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்திருந்தால் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி அதிகாரிகள் சிறை விதிகளின்படி எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு என்னை மீண்டும் தனிமைச் சிறையில் அடைத்திருப்பார்கள். எனவே எங்களிடையே இருந்த இளைஞர்களும் வலுவானவர்களும் அந்தச் சுமையை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. மேலும் இந்தியாவிற்குக் கடிதம் அனுப்பும் என் உரிமையும் பறி போயிருக்கும்” என்றார் வீர்.

கருணை மனு, சரணாகதி, ஒத்துழைப்பு

ஆனால் இதையெல்லாம் விஞ்சும் வகையில் இருந்தது அவர் சிறையிலிருந்து எழுதிய மன்னிப்பு மனுக்களும் அதன் வாயிலாக பிரிட்டிஷ ஆட்சியாளர்களுடன் சமரசமும், அவர்களுடன் ஒத்துழைப்பதாக அவர் அளித்த உறுதிமொழிகளும்.

சிறைக்கு வந்து ஒரு ஆண்டு முடியும் முன்னரே பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கருணை மனுவை அனுப்பினார் சவார்க்கர். ஆனால் அதில் என்ன எழுதியிருந்தார் என்கிற விவரஙகள் கிடைக்கவில்லை. இப்படி ஒரு மனுவை அவர் எழுதிய விவரமே நவம்பர் 14, 1913 அன்று எழுதிய மனுவிலிருந்துதான் தெரிய வந்தது. இரண்டாவது மனு இப்படிச் செல்கிறது:

“இறுதியாக, நான் 1911இல் அனுப்பிய மன்னிப்பு மனுவை நல்ல மனது வைத்துப் படித்துப் பார்க்க வேண்டுமென்று மேன்மை தாங்கிய உங்களுக்கு நினைவுபடுத்தி அந்த மனுவை இந்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளலாமா? இந்திய அரசியலின் இன்றைய நிகழ்ச்சிப் போக்கில் அரசியலமைப்புச் சட்டரீதியான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. 1906–07இல் நிலவிய பதட்டமான, நம்பிக்கையற்ற இந்தியச் சூழலினால் ஏமாந்துபோய் நாங்கள் அமைதியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகி  முட்கள் மண்டிய பாதைகளில் சென்றது போல் இன்று, இந்தியா மற்றும் மனிதகுலத்தின் நன்மையை மனதில் கொண்ட யாரும் கண்ணை மூடிக் கொண்டு செல்ல மாட்டார்கள்.  எனவே, அரசாங்கம் அளவில்லாத அறத்தையும் கருணையையும் காட்டி என்னை விடுதலை செய்தால்  நான் அரசியலமைப்பு சட்டரீதியான முன்னேற்றத்துக்காகவும், அந்த முன்னேற்றத்துக்கு முன்நிபந்தனையான ஆங்கிலேய அரசின்பால் காட்ட வேண்டிய விசுவாத்துக்காகவும் தீவிரமாக வாதிடுபவனாக இருப்பேன். நான் என் சக்திக்கு உட்பட்ட வகையில் எந்த விதத்தில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”

மார்ச் 30, அன்று மீண்டும் ஒரு கருணை மனுவை அளித்தார் சவார்க்கர். அதில்,

“காலம் கடப்பதற்கு முன் என்னுடைய கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு இறுதி வாய்ப்பைத் தருமாறு” கெஞ்சினார். அரவிந்த கோஷின் சகோதரர் உட்பட தன் சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வகையிலும் அதில் ஒரு வாசகம் இருந்தது. “போர்ட்பிளேரில் இருக்கும்போதே அவர்கள் தீவிரமான சதி செய்ததாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த வகையான தீவிரவாத சிந்தனையிலிருந்து நான் வெகுதூரம் தள்ளியிருக்கிறேன். கடந்த காலத்தில் என்னிடமிருந்த புரட்சிகர மன நிலையைப் பொறுத்த வரையில் நான் கூறுவது இதுதான். இப்போது மன்னிப்புக்காக மட்டுமின்றி, பல ஆண்டுகளுக்கு முன்பே நான்  அரசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்களில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை திரு மாண்டேகு தொடங்கியவுடனே  அச்சட்டத்திற்கு ஆதரவாக இருக்கவும், அதற்கு  இணங்கி நடக்கவும் உறுதியான எண்ணத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறேன். மாண்டேகு சீர்திருத்தங்களும் அது குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் செய்யப்பட்ட பிரகடனமும் என்னுடைய கருத்துகளை உறுதி செய்திருக்கின்றன; இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப் படியான முன்னேற்றத்தை முறையாகச் செய்யும் முயற்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்றும் அதற்கு நான் ஆதரவாக இருப்பேனென்றும் பகிரங்கமாக உறுதியளித்திருக்கிறேன்.”

மேலும், “அரசியலமைப்புச் சட்டரீதியான பாதையில் நடப்பேன் என்கிற என் சீரிய நோக்கத்தை உண்மையுடன் வெளிப்படுத்துகிறேன்; என் அன்பையும், மரியாதையையும், பரஸ்பர உதவியையும் காட்டும் வகையில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு கை கொடுக்க எளியவனான நான் அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பிரகடனத்தில் கூறப்பட்டிருப்பது போல் அமையப் போகும் ஒரு பேரரசுடன் மனப்பூர்வமாக இணங்கி நடப்பேன்.”

இப்படிப் பேசும் சவார்க்கர், முடிவாகச் சொன்னது இதுதான்:

“அரசாங்கம் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு உறுதியாக நிர்ணயம் செய்யப்பட்ட, நியாயமான காலம் வரை நானும் எனது சகோதரரும் அரசியலில் பங்கேற்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்க முற்றிலும் தயாராக இருக்கிறோம். இது தவிர, நாங்கள் விடுதலை செய்யப்பட்டவுடன்  நிர்ணயம் செய்யப்பட்ட காலம் வரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கியிருப்பது, எங்கள் நடமாட்டங்களின் விவரங்களைப் போலீசுக்குத் தெரிவிப்பது, அரசின் பாதுகாப்பை உறுதி செய்யும் உண்மையான  நோக்கத்துடன் விதிக்கப்படும் இத்தகைய நிபந்தனைகளை நானும் என் சகோதரரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.”

சவார்க்கரின் கருணை மனுக்களை அரசாங்கம் நிராகரித்தது.  மே 2, 1921 அன்று சவார்க்கரும் அவருடைய சகோதரர் கணேஷும் இன்றைய மஹாராஷ்டிரத்திலுள்ள ரத்னகிரி சிறைக்கும், பின்னர் எரவாடா சிறைக்கும் மாற்றப்பட்டனர். இறுதியாக ஜனவரி 6, 1924 நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார். அந்த நிபந்தனைகள்:

பம்பாய் கவர்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், ரத்தினகிரி மாவட்டத்திற்குள்ளும், குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களிலும் அவர் தங்கியிருக்க வேண்டும்.; அரசாங்கத்தின் அனுமதியின்றியும், அவசரமாக இருந்தால் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அனுமதியின்றியும் மாவட்டத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லக் கூடாது; ஐந்து வருட காலத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதலின்றி அரசியல் நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் பங்கேற்கக் கூடாது; குறிப்பிட்ட இந்தக் காலம் முடியும் போது மீண்டும் இத்தகைய தடைகளை மீண்டும் பிறப்பிப்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும்.

அவரை விடுதலை செய்யும் ஆவணம் இப்படிக் கூறியது:

“இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக சவார்க்கர் ஏற்கனவே கூறிவிட்டார். மேலும் பின்வரும் அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார் (அப்படிச் சமர்ப்பிப்பது அவருடையை விடுதலைக்கான நிபந்தனை அல்ல என்பதை அவருக்குத் தெளிவுபடுத்திய பின்னரும்): “என் வழக்கில் நேர்மையான விசாரணை நடந்து நியாயமான தண்டனை வழங்கப்பட்டது என்று நான் இதன் மூலம் பதிவு செய்கிறேன். கடந்து சென்ற நாட்களில் நான் நடத்திய வன்முறைச் செயல்களை நான் மனப்பூர்வமான வெறுக்கிறேன்; என் சக்தி முழுமையையும் பயன்படுத்தி சட்டத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் உயர்த்திப் பிடிப்பது என் கடமையென நினைக்கிறேன்; எதிர்காலத்தில் அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தங்களை வெற்றிபெறச் செய்வதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்ட அளவிற்கு உதவுவேன்.”

அந்தமானில் கொடுமைகளை அனுபவித்த சிறைவாசிகள் அவற்றை எப்படி எதிர்கொண்டனர்? அது குறித்து சவார்க்கரே இப்படிச் சொன்னதாக மஜும்தார் எழுதுகிறார்: “அவர்களில் ஒருவர் 60 வயதான சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங். மற்றொருவர் ராஜபுத்திர இனத்தைத் சேர்ந்த பஞ்சாபிய இளைஞர் பிரித்வி சிங். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அவர்கள் ஒரு வாய் சோறு கூட இல்லாமல் 12 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடைசியில் சிறை நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோரின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிய மனுவை அவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இதைத் தொடர்ந்து சோஹன் சிங் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் பிரித்வி சிங் மேலும் 12 நாட்களுக்குத் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார்.”

சிறையில் இருந்தபோதே சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்து தன் விடுதலைக்கு ஏங்கிய சவார்க்கரின் அரசியல் வாழ்வு முழுவதும் அப்படியே தொடர்ந்தது. கொலைச் சதிகளில் பங்கேற்று அவை நிறைவேறும் தருணத்தில் தப்பித்துக் கொண்ட வரலாற்றினை இனி பார்ப்போம்.

எய்தவன் இருக்க, சிக்கிக் கொண்ட அம்புகள்

மஹாரஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்திலிருக்கும் பாகூரில் மே 28, 1883இல் பிறந்த வினாயக் தாமோதர் சவார்க்கருக்கு பாபாராவ் என்றைழைக்கப்பட்ட கணேஷ், நாராயண் என்று இரு சகோதரர்கள். கல்லூரியில் படிக்கும்போது  இவர்கள் நடத்திய அமைப்பின் பெயர் அபினவ் பாரத் சொசைட்டி. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடுவதுதான் அதன் நோக்கம்.

பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காக சவார்க்கர் லண்டன் சென்றிருந்த நேரத்தில் மஹாராஷ்டிராவில் அபினவ் பாரத் நடத்திய சிறிய வெடிகுண்டுத் தொழிற்சாலைகளும் கிடங்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜூன் 8, 1909 அன்று தேசத் துரோக குற்றத்துக்காகக் கணேஷ் சவார்க்கர் கைது செய்யப்பட்டார். இது நடந்து சில நாட்களுக்குள்ளேயே வினாயக் சவார்க்கர் லண்டனில் இருக்கும் இந்தியா ஹவுஸில் தேசத் துரோக உரையாற்றியதாக உளவுத் துறை இந்தியாவில் பயங்கரவாதம் என்கிற தலைப்பில் தயாரித்த ஆவணம் கூறுகிறது. அந்த அறிக்கை மேலும் கூறியதாவது: “சவார்க்கர் இந்த உரையை ஆற்றிய 12 நாட்களுக்குள் பிரிட்டிஷ் அதிகாரியான கர்னல் சர் வில்லியம் கர்சன் வைலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அதே ஆண்டு டிசம்பர் மாதம், கணேஷ் சவார்க்கர் மீது வழக்குத் தொடுத்த  நாசிக் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எம்.டி. ஜாக்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மூன்று  பேருக்குத் தூக்கு தண்டனையும், 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப் பட்டது.” ஆயுள் தண்டனை பெற்றவர்களுள் ஒருவரான கணேஷ் சவார்க்கர் அந்தமான் சிறைக்கு அனுப்பப் பட்டார். (ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபர்களுள் ஒருவர் இவர்)

ஜுலை 1, 1909 அன்று வில்லியம் கர்சன் வைலியைச் சுட்டுக் கொன்றவர் மதன் லால் திங்க்ரா.  அவருடைய உண்மையான இலக்கு முன்னாள் இந்திய வைஸ்ராயான கர்சன் பிரபுதான். கர்சன் பிரபு அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டார்.  லண்டனில் உள்ள இம்பீரியல் இன்ஸ்டிடியூட்டில் இந்திய தேசிய அசோஷியேஷன் என்கிற அமைப்பின் ஆண்டு விழாக் கூட்ட முடிவில் இந்தப் படுகொலை நடந்தது. சவார்க்கரின் வாழ்க்கை வரலாறை எழுதிய தனஞ்சய் கீர் திங்க்ராவைக் குறித்து இப்படி எழுதுகிறார்:

“மதன்லால், சவார்க்கரின் விசுவாசம் மிக்க ஆதரவாளர். வைலி கொலை செய்யப் படுவதற்குச் சில நாட்கள் முன்பு, அவர் உயிர்த் தியாகம் செய்வதற்கான நேரம் வந்து விட்டதா என்று சவார்க்கரிடம் கேட்டார். சவார்க்கரிடமிருந்து பொறித்து வைத்தது போல் பதில் வந்தது: ‘ஒரு தியாகி உறுதியோடும் தயாராகவும் இருந்தால் அதுவே உயிர்த் தியாகத்திற்கான நேரம் வந்து விட்டதென்பதையே உணர்த்துகிறது.’ இந்தியாவின் முன்னாள் வைஸ்ராயான கர்சன் பிரபுதான் திங்க்ராவின் உடனடி இலக்கு.”

1950இல் வெளிவந்தபோது சில உண்மைகளை அப்போது எழுதவில்லை. சவார்க்கர் இறந்த பிறகு ராபர்ட் பாய்ன் என்கிற எழுத்தாளரிடம் அவர் சொன்ன உண்மைகள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. ராபர்ட் பாய்ன் அது குறித்து எழுதியது இதுதான்:

“வைலியின் படுகொலைக்குத் தானே காரணம் என்று தனஞ்சய் கீரிடம் அவர் கூறினார். நிக்கல் பட்டை வைத்த துப்பாக்கியை மதன்லால் திங்க்ராவிடம் கொடுத்த சவார்க்கர், “இந்த முறை தோற்றால் உன் முகத்தை என்னிடம் காட்டாதே,’ என்று கடுமையாகச் சொன்னார்… லண்டன் மாநகர போலீஸ் இந்தக் குற்றத்தில் சவார்க்கருக்குப் பங்கு இருக்கிறது என்று உறுதியான சந்தேகம் கொண்டிருந்தது ஆனால் அவரைத் தண்டிக்க போதுமான ஆதாரம் இல்லை. அவர் இறுதியாக தண்டிக்கப்பட்டது நாசிக்கில் நடந்த ஜாக்சன் கொலை வழக்கில்தான். அவருக்கு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.”

சவார்க்கர் உயிரோடிருக்கும் வரை முதல் இரண்டு கொலை வழக்குகள் தொடர்பாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை எழுதாத கீர், அவர் இறந்த பிறகு வெளியிட்ட தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1966)  இப்படிச் எழுதினார்: “திங்க்ரா இந்திய விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்யும் நாளுக்காக அவரைப் பல மாதங்கள் ஆயத்தப் படுத்தினார் சவார்க்கர்.  திட்டமிட்டபடி கர்சன் பிரபுவை திங்க்ரா கொல்லத் தவறியதை மீண்டும் மீண்டும் குத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார் அவர். சர் கர்சன் வைலி கொல்லப்பட்ட அன்று காலை திங்க்ராவிடம் ஒரு நிக்கல் பட்டை பதித்த துப்பாக்கியைக் கொடுத்த சவார்க்கர், ‘இந்த முறை நீ தவறினால் உன் முகத்தை என்னிடம் காட்டாதே,” என்று கூறினார்.  திங்க்ரா கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றும் வகையில் எழுதப்பட்ட ஒரு தாள் கைப்பற்றப்பட்டது. அதில் சவார்க்கர் கைப்பட எழுதியது.

நாசிக்கில் ஜாக்சன் ஷாரதா என்கிற மராத்தி நாடகத்தைக் கண்டு கொண்டிருக்கும் அவரைச்  சுட்டுக் கொன்றவர் ஆனந்த் கான்ஹேரே. அவருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட சிலரும் கைது செய்யப்பட்டனர். சாவர்க்கர் எழுதிய ஒரு கடிதமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. கான்ஹேரே பயன்படுத்திய ப்ரவுனிங் துப்பாக்கியும் சவார்க்கரிடமிருந்து வந்தது என்று தெரியவந்தது.  மார்ச் 13, 1920 அன்று அவர் லண்டனில் கைது செய்யப் பட்டார். அவர்மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டுகள்: இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசருக்கு எதிராகப்  போர் தொடுத்தார்; பிரிட்டிஷ் இந்தியாவின் மீது அரசருக்கு இருக்கும் இறையாண்மையைப் பறிக்க சதி செய்தார்; ஆயுதங்களைச் சேகரித்து, வினியோகம் செய்து, ஜாக்சனைக் கொலை செய்யத் தூண்டினார், லண்டனில் அவர் தங்கியிருந்த காலத்தில் ராஜத் துரோக உரைகளை ஆற்றினார். இந்தியாவிலிருக்கும் தன் சகாக்களுக்கு 20 ப்ரவுனிங் துப்பாக்கிகளைக் கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது.

அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்த கப்பல் பிரான்சின் மார்செயில்ஸ் துறைமுகத்தில் நின்றிருந்தபோது இரண்டு காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கப்பலின் பக்கவாட்டு ஜன்னல் வழியே தப்பித்தது அவர் ஒரு வீரராகப் புகழப்படுவதற்கு முக்கியக் காரணம். அவர் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்கும் எண்ணத்துடன் நீந்திக் கரை சேர்ந்தவுடனே மீண்டும் கைது செய்யப்பட்டார்.  பம்பாய் உயர்நீதிமன்றத்தின் 69 நாட்கள் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் நடந்தன. டிசம்பர் 24, 1910 அன்று வந்த முதல் வழக்கில் அவருக்கு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரது சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது வழக்கில் ஜனவரி 23, 1911இல் வந்த தீர்ப்பின்படி 50 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும்  ஒரே நேரத்தில் அனுபவிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்  என்று அவர் எழுப்பிய கோரிக்கை சிறைவாசத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் நிராகரிக்கப் பட்டது. ஜூலை 4, 1991இல் அவர் அந்தமானிலிருக்கும் போர்ட் பிளேயர் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாத நடவடிக்கை என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர் மற்றவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து தான் தப்பிக்கும் வகையில் செயல்பட்டார் என்பதுதான் அவர்மீது குற்றச்சாட்டு. பகத்சிங், குதிராம் போஸ் போன்றோர் அவர்களே நேரடியாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதை ஒப்பிடும்போதுதான் சவார்க்கரின் தந்திரம் தெளிவாகப் புரியும்.

காந்தி கொலை வழக்கிலும் இதுதான் நடந்தது. இதைவிடக் கேவலமாக நடந்தது.

ஜனவரி 30, 1948 மூன்று துப்பாக்கித் தோட்டாக்கள் இந்தியாவை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தின. இந்திய அரசியல் வரலாற்றில் மாறாத வடுவை ஏற்படுத்தின. அந்தத் துப்பாக்கி நாதுராம் கோட்சேயின் கையிலிருந்தது. கோட்சேயின் சிந்தனையில் இந்துத்வ வெறி நிறைந்திருந்தது. அந்தத் துப்பாக்கிக்கும் தத்துவத்துக்கும் பின்னால் இருந்தவர் சவார்க்கர். ஆனால் அந்த துன்ப சம்பவம் நடந்தது முதல் தன் மரணம் வரை கோட்சேவுக்கும் தனக்கும் அவ்வளவு நெருக்கமில்லை என்கிற மாயையை ஏற்படுத்துவதில்தான் சவார்க்கரின் உடல், பொருள், ஆவி எல்லாம் தீவிர முயற்சியில் இருந்தது.

காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 9 பேர்: நாதுராம் கோட்சே, நாராயன் ஆப்தே, விஷ்ணு கார்க்கரே, மதன்லால பாஹ்வா, சங்கர கிஸ்டய்யா, கோபால் கோட்சே, (நாதுராமின் சகோதரர்) வி.டி. சவார்க்கர், தத்தாத்ரேய பார்ச்சூரே, திகம்பர் பாத்கே. இவர்களுள் பாத்கே அப்ரூவராக மாறியதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப் பட்டது. பாத்கேயின் வாக்குமூலம்தான் சவார்க்கரை தண்டனைக்கு வெகு அருகில் கொண்டு சென்றது. அவருடைய வாக்குமூலம் உண்மையானது என்று ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆத்மா சரண் அதை உறுதி செய்யும் ஆதாரங்கள் இல்லாததால் சவார்க்கரை விடுதலை செய்தார். சவார்க்கரின் மரணத்திற்குப் பின் அமைக்கப்பட்ட ஜீவன் லால் கபூர் விசாரணை ஆணையம் சவார்க்கர் குற்றவாளிதான் என்ற முடிவுக்கு வந்தது. அந்தக் கதையைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

காந்தி படுகொலை செய்வதற்கு 10 நாட்கள் முன்பு ஒரு கொலை முயற்சி நடந்தது. அந்தக் கொலை முயற்சிக்கான சதியைக் குறித்து முதலில் அறிந்தவர் பேராசிரியர் ஜகதீஷ் சந்திர ஜெயின். அவர் தன் சுயசரிதையில் I Could not Save Bapu _ நான் பாப்புவைக் காப்பாற்ற முடியவில்லை)  எழுதியிருக்கிறார். மதன்லால பாஹ்வா தேசப் பிரிவினைக்குப் பின் பம்பாய்க்கு வந்த அகதி.  அவனுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜெயின் உதவி செய்திருக்கிறார். காந்தியைக் கொலை செய்யும் திட்டம் இருப்பதாகவும், சவார்க்கர் தன்னைத் தட்டிக் கொடுத்து தொடர்ந்து செல் என்று கூறியதாகவும் ஜெயின் சொல்கிறார். “பிறரால் முடுக்கிவிடப்பட்ட இந்த இளைஞர் வன்முறைச் செயலில் இறங்கலாம். மேலும் அவன் சவார்க்கரைச் சந்தித்து அவருடைய ஆசிகளையும் பெற்றிருந்தான்,” என்கிறார் ஜெயின். இந்தத் தகவலை அன்று பம்பாயின் உள்துறை அமைச்சரான மொரர்ஜி தேசாயிடம் ஜெயின் சொல்ல, தேசாய் பம்பாயின் துணை போலீஸ் கமிஷனரான ஜாம்ஷெட் நகர்வாலாவிடம் அதைச் சொல்லியிருக்கிறார். இந்த விவரம் தெரிந்திருந்தும் அரசாங்கம்  ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.

அங்கு என்ன நடந்தது என்கிற விவரங்களை டீஸ்டா செடல்வாட் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்த ‘Beyond Doubt – A Dossier on Gandhi’  என்கிற புத்தகத்தில் தந்திருக்கிறார். (2015இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் காந்திக்கு எதிராக மொத்தம் ஐந்து கொலை முயற்சிகள் நடந்ததாகப் பட்டியலிடுகிறார்).

திட்டமிட்டபடியே ஜனவரி 20 அன்று பாஹ்வாவும் விஷ்ணு கார்க்கரேயும் காந்தி  தங்கியிருந்த பிர்லா பவனுக்கு முதலில் சென்றனர். கோட்சே, ஆப்தே, திகம்பர் பாட்கே, ஆகியோர் பின்னர் ஒரு வாடகைக்  காரில் அங்கு சென்றனர். இந்தக் காரை ஓட்டிய சுர்ஜித் சிங் காந்தி கொலை வழக்கில் ஒரு சாட்சியாக இருந்தார்.

திட்டத்தின்படி, பஞ்சை  அமிலத்தில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும் கன்காட்டன் என்கிற வெடிகுண்டை பாஹ்வா வெடிக்க வேண்டும். அப்போது  ஏற்படும் பதட்டத்தைப் பயன்படுத்தி பாட்கேயும், ஷங்கரும் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை வைத்து காந்தியைச் சுட வேண்டும். கை வெடிகுண்டையும் அவர்மீது எறிய வேண்டும். கோபால் கோட்சேயும், பாஹ்வாவும், கார்க்கரேயும் தங்களிடமிருந்த கை வெடிகுண்டுகளை காந்தி மீது எறிய வேண்டும். நாதுராம் கோட்சேயும் ஆப்தேயும் ஒரு இடத்தில் நின்றுகொண்டு அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யும் வகையில் வழிகாட்ட வேண்டும்.

பிர்லா பவனுக்கு முன்பே சென்று விட்ட பாஹ்வா அங்கு கார் ஓட்டுனராகப் பணிபுரியும் சோட்டுராமிடம் தன்னை ஒரு புகைப்படக்காராக அறிமுகப்படுத்திக் கொண்டு காந்தி மாலை நேரப் பிரார்த்தனை செய்யும் மேடைக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரைப் பின்னாலிருந்து படம் எடுக்க வேண்டுமென்றும் கூறினார். சந்தேகமடைந்த சோட்டுராம் நீ புகைப்படக்காரர் என்றால் கேமரா எங்கே என்று கேட்க, பாஹ்வா காருக்குத் திரும்பச் செல்வது போல் நடந்து சென்றார். ஆனால் அவர் சென்றது மேடைக்குப் பின்புறம் இருந்த ஒரு சுவர். சுவரின்மீது வெடிகுண்டை வைத்துப் பற்ற வைத்தார் பாஹ்வா.  ஆனால் அது சரியாக வெடிக்கவில்லை. திட்டம் தோல்வியுறுவதை உணர்ந்த மற்ற சதிகாரர்கள் காரில் ஏறித் தப்பிச் சென்றனர். பாஹ்வா மட்டும் பிடிபட்டார். ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சதிகாரர் கூட்டத்தில் நானும் ஒருவர் என்று அவர் ஒப்புக் கொண்டார். முதல் நாள் இரவு அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு போலீசை அழைத்துச் சென்றார். அதற்குள் மற்றவர்கள் தப்பி விட்டனர்.  கோட்சேயும், ஆப்தேவும் மீண்டும் டெல்லிக்கு ஜனவரி 29 அன்று டெல்லிக்கு வந்தனர். இந்த முறை அவர்களிடம் பெர்ரெட்டா தானியங்கி துப்பாக்கியும், 11 குண்டுகளும் இருந்தனர்.

ஜனவரி 30 அன்று அவர்களின் நீண்ட காலத் திட்டம் நிறைவேறியது. பாஹ்வா பேராசிரியர் ஜெயினிடம் கூறியது போல் சவார்க்கருக்கு சதிகாரர்களுடன் தொடர்ந்து ஒரு தொடர்பு இருந்திருக்கிறது.

அப்ரூவர் திகம்பர்  பாட்கேயின் சாட்சியம் இதனைத் தெளிவாக்கியது. பூனாவில் வாழ்ந்த பாட்கே அவருடைய தொழில் குறித்து இப்படிக் கூறுகிறார்:  “1947லிருந்தே நான் நான் துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டுகள், ரைஃபிள் துப்பாக்கிகள், ஸ்டென் துப்பாக்கிகள் போன்றவற்றை விற்று வந்தேன். புத்தகங்களையும் விற்பேன். வருடாந்திர இந்து மகாசபைக் கூட்டங்களில் பங்கேற்ற நான் அங்கு ஆயுதங்களையும் புத்தகங்களையும் விற்பேன்.” சவார்க்கரின் மெய்க்காப்பாளர் அப்பா கேசர், செயலாளர் கஜானந்த் ராவ் டாம்லே ஆகியொருடனும் பழக்கம் இருந்தது. அவருக்கு சவார்க்கர் அறிமுகமானது 1944—45இல். கோட்சேயை 1941 முதலே தெரியும். 1947 ஜூலை- ஆகஸ்டு மாதஙகளில் கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் முதன் முதலாக ஆயுதம் விற்றிருக்கிறார். நவம்பர் 1947இல் ஆயுதங்கள் அவசரத் தேவை என்று செய்தி வந்ததும் பம்பாயிலிருக்கும் இந்து மகாசபை அலுவலகத்தில் அவற்றை சேர்ப்பித்து விடுவதாக உறுதியளித்தார்.

அதற்குப் பிறகு நடந்தவைகளை நூரானி இப்படி எழுதுகிறார்: “ஜனவரி 14, 1948 அன்று ‘பொருளுடன்’ பம்பாய்க்கு வந்தார் பாட்கே. கோட்சே, ஆப்தேயைச் சந்தித்த சில நிமிடங்களுக்குப் பின் சவார்க்கர் வசித்த சவார்க்கர் சாதனுக்கு, 2 கன்காட்டன் வெடிகுண்டுகள், வெடியைப் பற்ற வைக்கும் கம்பித் திரி போன்ற பொருட்களைக் கொண்ட ஒரு காக்கிப் பையை எடுத்துக் கொண்டு சென்றனர்.  இனி பாத்கே கூறுவதைப் பார்ப்போம்:

“ஆப்தே என் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு என்னை வெளியில் காத்திருக்குமாறு சொன்னார். அவரும் கோட்சேயும் சவார்க்கர் சாதனுக்குள் சென்றனர். 5—10 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தனர்.”

இவர்கள் சவார்க்கருடன் நடத்திய சந்திப்புதான் இன்னும் அதிக முக்கியமானது. ஷங்கரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். ஜனவரி 17 அன்று மீண்டும் சவார்க்கர் சாதனுக்குச் சென்றனர்.  அது குறித்து பாட்கே இப்படிச் சொல்கிறார்: “ஆப்தேயும், கோட்சேயும், நானும் சவார்க்கர் சாதன் வளாகத்திற்குச் சென்றோம். வீட்டின் கீழே இருந்த ஒரு அறையில் காத்திருக்குமாறு ஆப்தே என்னிடம் சொன்னார். கோட்சேயும் ஆப்தேவும் மேலே சென்றனர். 5—10 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தனர். அவர்கள் இருவரும் படியில் இறங்கி வரும்போதே  அவர்களைத் தொடர்ந்து தத்யாராவும் (சவார்க்கரை இப்படித்தான் மரியாதையாக அழைப்பார்கள்). அவர்களிடம் யஷஸ்வி ஹூன் யா (வெற்றியுடன் திரும்புங்கள்) என்றார்.  நாங்கள் நால்வரும் காரில் ஏறி ரூயா கல்லூரிக்குச் சென்றோம்.  காரில் செல்லும்போது, காந்திஜியின் நூற்றாண்டு முடிந்து விட்டதென்று தத்யாராவ் தன்னிடம் தீர்க்கதரிசனமாகக் கூறியதாக ஆப்தே எங்களிடம் கூறினார். நம் வேலை வெற்றிகரமாக முடிந்து விடும் என்றும் ஆப்தே கூறினார்.”  இது காந்தியின்மீது ஜனவரி 20ஆம் தேதி அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு முன் தினம் நடந்தது.

அப்ரூவர் பாட்கேயின் சாட்சியத்தை முற்றிலுமாக மறுத்தார் சவார்க்கர். தன் தரப்பு வாதமாக  எழுத்து பூர்வமாகக் கொடுத்த அறிக்கையில் சதிகாரர்கள் குறித்து எப்படியெல்லாம் அவர் மழுப்பினார் என்பதை ராபர்ட் பேயின் இவ்வாறு விளக்குகிறார்:

“அவர் சதிகாரர்களை எப்போதும் சந்தித்ததே இல்லை; அப்படிச் சந்தித்திருந்தால் அதற்கும் காந்தி கொலைச் சதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; நான் படியிலிருந்து இறங்கி வரவே இல்லை; அப்படி வந்திருந்தாலும், ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’ என்று அவர் சொல்லவில்லை. இந்து ராஷ்டிரத்தின் பங்குகளை விற்பது அல்லது ஹைதராபாத் நிஜாமுக்கு எதிரான அமைதிப் போராட்டம் நடத்துவது, அவர்கள் மேற்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பணிகள் குறித்து. இப்படி கொலைச் சதிக்கு சம்பந்தமில்லாத ஏதாவது பேசியிருப்பார் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவருடைய அறிக்கை முழுவதும் சதிக்கும் அவருக்கும் வெகு தூரம் என்கிற பொருள்படும் வகையில் சட்டப் பூர்வமான சொற்களையே பயன்படுத்தினார். கொலைச் சூழல் சார்ந்த ஆதாரங்கள் வலுவாக இருந்தன. பாட்கேயின் ஒவ்வொரு வாக்கியத்தையும் அதன் சூழலிலிருந்து பிரித்தெடுத்து அதற்கு குறிப்பிட்ட பொருள் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்.”

இதைவிடப் பெரிய மோசடி கோட்சே, ஆப்தே ஆகியோருடன் அவருக்கிருந்த உறவு வலுவானதல்ல என்பதை நிரூபிக்க அவர் சொன்ன வார்த்தைகள்தாம். “ஸ்தாபனம் தொடர்பாக நான் எழுதிய கடிதங்கள், சுற்றுப்பயணங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் வாயிலாக நான் இந்து மகாசபையின் ஆயிரக் கணக்கான தலைவர்களுடனும், ஊழியர்களுடனும் உறுப்பினர்களுடனும் தனிப்பட்ட முறையில் தொடர்பிலிருந்தேன். இந்து மகாசபையின் எண்ணிலடங்காத் தொண்டர்கள், ஊழியர்களில் ஒருவர் என்ற முறையில்தான் நாதுராம் கோட்சே எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மிஸ்டர் ஆப்தே நகர் என்ற இடத்தில் தான் இந்து மகாசபை உறுப்பினர் என்றும், தான் ஒரு ரைஃபிள் கிளப் தொடங்க இருப்பதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் எழுதிய கடிதத்தின் மூலாமாக எனக்கு அறிமுகமானார். குவாலியர் இந்து மகாசபாவின் தலைவராக டாக்ட்ர் பர்ச்சூரே அறிமுகப்படுத்திக் கொண்டார். தன்னை இந்து சங்காதனிய உறுப்பினரென்றும், சட்டப்படி உரிமம் தேவைப்படாத ஆயுங்களை விற்பதாகவும் பாட்கே எழுதிய கடிதம் எழுதிய போதுதான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷங்கர், கோபால் கோட்சே, மதன்லால் பாஹ்வா ஆகியோரை நான் எப்போதுமே தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை.”

நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சேயைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்றும், ஒரு இந்து மகாசபையின் உறுப்பினராக மட்டுமே நாதுராமை அறிந்திருந்ததாகவும் கூறியது பொய் என்கிற உண்மையை கோபால் கோட்சேவே பின்னர் போட்டுடைத்தார்.  ‘காந்தியின் கொலையும் நானும்’ என்கிற தலைப்பில் அவர் 1967இல் வெளியிட்ட புத்தகத்தில் இப்படி எழுதினார்: “கோட்சேயின் தந்தை சவார்க்கர் வசித்த ரத்னகிரிக்கு 1929இல்  பணிமாற்றம் பெற்றுச் சென்ற போதுதான் நாதுராமும் சவார்க்கரும் சந்தித்தனர். ரத்னகிரிக்குச் சென்ற மூன்று நாட்களுக்குள்ளேயே  வீர் சவார்க்காரை முதன்முறையாகச் சந்திக்கச் சென்றார் நாதுராம். அதற்குப் பிறகு அவர் சவார்க்கரிடம் அடிக்கடி சென்றார். சவார்க்கரின் எழுத்துகளைக் காப்பி எடுத்துத் தரும் பணியைச் செய்வதாகவும் சொன்னார்.”

சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் இப்படி எழுதுகிறார்: “தன்னுடைய இளமைக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்த நாதுராம், பின்னர் இந்து மகாசபையின் அகில இந்திய கமிட்டியின் முன்னணி உறுப்பினரானார். அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர். அக்ரானி (தலைவர்) என்கிற மராத்தி தினசரியின்  ஆசிரியர். அதன் பெயர் பின்னர் இந்து ராஷ்டிரா என்று மாற்றப்பட்டது.  பண்டிட் நாதுராம் கோட்சே என்று அதிகமாக அறியப்பட்ட இந்தப் பத்திரிகையாசிரியர் உறுதியான சவார்க்காரியவாதி. சவார்க்கரின் முன்னணி ஊழியர், தளபதி என்பதும் ஓரளவுக்குத் தெரிந்த விஷயம்தான்.”

தனக்கும் சதிகாரர்களுக்கும் அதிகப் பழக்கமில்லை என்று தொடர்ந்து பொய் சொன்ன சவார்க்கர் செங்கோட்டை வழக்கு என்று அழைக்கப்பட்ட காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்த சமயத்திலும், சிறையில் ஒன்றாக இருக்கும்போதும் அவர்கள் யாரென்றே தெரியாததுபோல்தான் நடந்து கொண்டார். இதைச் சொல்வது கோபால் கோட்சே சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.எல். இனாம்தார்தான்.

விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நாதுராமின் பக்கம் அவர் திரும்பவுமில்லை; பேசக் கூட இல்லை என்று The Story of the Red Fort Trial 1948-49 என்கிற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இனாம்தார் குறிப்பிடுகிறார். நாதுராம்கூட இதனால் வேதனையடைந்தார் என்றும் அவர் பதிவு செய்கிறார். அவர் எழுதியது இதுதான்: “தத்யாராவ் தங்களுக்கிடையே தொடர்பில்லை என்று திட்டமிட்ட வகையில், வெளிப்படையாக நடந்து கொண்டதால் நாதுராம் ஆழமாகக் காயப்பட்டிருந்தார். சிறையில் இருக்கும் போது தத்யாராவ் தன்னைத் தொடுவாரென்றும், பரிவாக ஒரு வார்த்தைப் பேசுவாரென்றும், குறைந்த பட்சம் கருணையுடன் பார்ப்பார் என்றும் நாதுராம் ஏங்கினார். சிம்லா உயர்நீதி மன்றத்தில் நான் கடைசியாகச் சந்தித்தபோது காயம் பட்ட தன் உணர்வுகள் குறித்து என்னிடம் பேசினார்.”

அவர் காயம் பட்டிருந்தாலும் இறுதி வரை  தன் குருவைக் காப்பாற்றும் வகையில்தான் பேசினார். சீடர்களைக் கைகழுவி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த சவார்க்கர் நாதுராம் விஷயத்திலும் அதையேதான் செய்தார்.

பாட்கேயின் சாட்சியத்தை உறுதி செய்யும் வகையில் இன்னும் இரண்டு சாட்சிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சாந்தாபாய் மோடக் எனும் நடிகை. இவர் கோட்சே, ஆப்தேவை ஜனவரி 14 அன்று பூனா எக்ஸ்பிரசில் சந்தித்தார். தன்னுடைய வீடு சவார்க்கர் சாதனுக்கு அருகில் இருப்பதால் அவர்களை தன் தாதர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் தன் சகோதரரின் காரில் அங்கு இறக்கி விடுவதாகவும் சொன்னார். அவர்களை அங்கே இறக்கிவிட்ட பின் சவார்க்கர் சாதனுக்குள் அவர்கள் செல்வதையும் அவர் பார்த்திருக்கிறார்.

இன்னொரு சாட்சி ஜனவரி 17 அன்று ஆப்தே, கோட்சே, பாட்கேயை சவார்க்கர் சாதனுக்குக் கொண்டு சென்ற காரின் ஓட்டுனர் ஐத்தப்ப கோட்டியான். அவர்கள் மூவரும் காரிலிருந்து இறங்கிச் சவார்க்கர் சாதனுக்குச் செல்வதைப் பார்த்ததாகக் கூறினார்.

நடிகையின் சாட்சியம் அவர்கள் சவார்க்கர் சாதனுக்குச் சென்ற போதிலும் சவார்க்கரைச் சந்தித்தாகச் சொல்ல முடியாதென்றும் அதே வீட்டில் ஏ.எஸ். ஷிண்டேவும், கஹன் டாம்லே என்கிற இருவரும் கூட வசித்தனரென்றும் நீதிபதி ஆத்ம சரண் கூறிவிட்டார். அதே போல் கார் ஓட்டுனரின் சாட்சியம் ‘வெற்றியுடன் திரும்புக’ என்று சவார்க்கர் கோட்சே, ஆப்தேயிடம் சொன்னதை உறுதி செய்யவில்லை என்றும் கூறிவிட்டார். தெருவில் நின்ற ஓட்டுனர் வீட்டுக்குள் நடந்ததைப் பார்த்திருக்க முடியாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். சவார்க்கர் அப்படிச் சொன்னதற்கான ஆவணங்களும் இல்லையென்று விசித்திரமாகப் பேசினார்.

பாட்கேயின் சாட்சியத்தை அவரால் முற்றிலும் நிராகரிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்மையான சாட்சியம் என்பதை அவரே ஒப்புக் கொண்டார். அவர் கூறியது இதுதான்: “விவரங்களாக பாட்கே அறிந்தவற்றை நேரடியாகவும், நேர்மையாகவும் பேசினார். நடக்காத உண்மைகளைக் குறித்து இவ்வளவு நீண்ட நேரமாகவும், குறிப்பாகவும் தடுமாற்றமின்றி யாராலும் பேச முடியாது. அடிப்படை இல்லாத ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்து இவ்வளவு நீண்ட நேரம் இவ்வளவு விவரமாக ஒருவர் பேசுவார் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.”

ஆத்ம சரண் ஆத்மார்த்தமாக இப்படிப் பேசினாலும் இறுதியில் சவார்க்கரை விடுவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்:

“வினாயக் டி சவார்க்கர் தன்னுடைய அறிக்கையில் ‘சதி’’ என்கிற ஒன்று நடந்திருந்தால் அதில் தனக்குப் பங்கில்லை என்றும், நாதுராம் வி. கோட்சே மற்றும் நாராயண் டி. ஆப்தே ஆகியோர் எந்த விதத்திலும் தன் கட்டுப்பாட்டில் இல்லையென்றும் கூறியிருக்கிறார். அப்ரூவரின் (பாட்கேயின்) சாட்சியின் அடிப்படையில்தான், அந்த அடிப்படையில் மட்டுமே, அரசுத் தரப்பு தொடுத்த வழக்கு நிற்கிறது என்று இங்கு கூறப்பட்டுள்ளது. அப்ரூவரின் சாட்சியத்தை மட்டும் வைத்து முடிவுகளை எடுப்பது ஆபத்தானது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் ஜனவரி 20, 1948இலும் ஜனவரி 30இலும் நடந்த சம்பவங்களில் சவார்க்கரின் கை இருந்தது என்று தீர்மானிக்க காரணம் எதுவுமில்லை.”

இதில் துயரம் என்னவென்றால், ஆத்ம சரணின் இந்த சொற்கள் தீர்ப்பில் இடம் பெறவில்லை. விசாரணையின்போதும், தீர்ப்பு வழங்கும்போதும் நீதிபதிகள் வாய்மொழியாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதற்கு ஆங்கிலத்தில் ஓபிட்டர் டிக்டம் (obiter dictum) என்று பெயர். அப்படி ஒரு ஓபிட்டர் டிக்டம்தான் இந்திய வரலாற்றை மாற்றியது.

கபூர் கமிஷன் விசாரணையில் வெளிவந்த உண்மை

மறைக்கப்பட்ட உண்மைகளையும், மறுக்கப்பட்ட நீதியையும் நம் கண் முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தும் வித்தைக்காரன்தான் வரலாறு. நவம்பர் 12, 1964 அன்று காந்தி கொலை வழக்கில் கைதான கோபால் கோட்சே, மதன்லால் பாஹ்வா, விஷ்ணு கார்க்கரே ஆகியோரின் தண்டனைக் காலம் முடிந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடைய விடுதலையைக்  கொண்டாடும் விதத்தில் பூனாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பால கங்காதர திலகரின் பேரன் ஜி.வி. கேட்கர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இவர் கேசரி, தருண்பாரத் பத்திரிகைகளின் ஆசிரியர். கொலை நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் நாதுராம் தன்னிடம் அது குறித்துப் பேசியதாகவும், அந்தத் திட்டத்தை தான் எதிர்த்ததாகவும், அந்த விவரத்தை அப்போதை பம்பாய் மாகாண முதல்வரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி ஜே.எ. கபூர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் முன் சவார்க்கரின் மெய்க்காப்பாளர் அப்பா ராமச்சந்திர கேசர், சவார்க்கரின் செயலாளர் கஜனன் விஷ்ணு, டாம்லே உட்பட பலர் சாட்சியம் அளித்தனர். சாட்சியங்கள் மீண்டும் சவார்க்கருக்கும் மற்ற சதிகாரர்களுக்குமிடையே இருந்த தொடர்புகளைத் தெளிவாக நிரூபித்தனர். இந்த சாட்சிகள் செங்கோட்டை வழக்கில் விசாரிக்கப்பட்டிருந்தால் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். ஆத்ம சரண் கண்டுபிடிக்க முடியாத உண்மைகளை  கபூர் வெளிக்கொண்டு வந்தார். 1909இல் கர்சன் வைலி, ஜாக்சன் ஆகியோரின் கொலைகள், ஹாட்சன் என்கிற ஆங்கிலேய அதிகாரி மீது நடந்த கொலை முயற்சி ஆகியவற்றுக்கும் காந்தி படுகொலைக்கும் பின்னாலிருந்த வலைப் பின்னலை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கபூர். அவருடைய முடிவு இதுதான்: “சவார்க்கரும் அவருடைய குழுவும் சதியில் ஈடுபட்டனர் என்பதைத் தவிர வேறு எந்தக் கருத்தையும் தகர்க்கும் என்று இந்த உண்மைகளை ஒன்றாக வைத்துப் பார்க்கும்போது தெரிகிறது.”

நடந்த மூன்று அரசியல் கொலைகளுக்குப் பின்னிருக்கும் வலைப் பின்னலை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கபூர்.

மகாத்மா காந்தியின் நூற்றாண்டை முடிப்பதாக சவார்க்கர் பேசியது இந்துத்வத்தின் நூற்றாண்டைத் துவங்கி வைப்பதற்குத்தான். அவர் இந்துத்வம் என்கிற புத்தகத்தை எழுதிய ஆண்டு 1923. இன்னும் நான்கு ஆண்டுகளில் அதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். இன்று இந்து மதத்திற்கு அபாயம், வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட இந்துக்களுக்கு நியாயம் என்றெல்லாம் பேசித்தான் பொதுமக்களிடையே எளிதாகச் சென்றடைந்து கொண்டிருக்கிறது சங்பரிவாரம். ஆனால் இந்துத்வம் என்பதும் இந்து மதம் என்பதும் வேறு என்று சவார்க்கர் எழுதினார். அவர் ஒரு நாத்திகர். இனி அவர் பேசிய இந்துத்வம் என்பதன் உண்மைப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.

இந்து மதமும், இந்துத்வமும்

இந்துத்வம் என்ன சொல்கிறது? ஏ.ஜி. நூரானியின் புத்தகத்தில் இருக்கும் சில பத்திகளைப் பார்த்தால் அது புரிந்து விடும்:

“இந்து மதம் (இந்துயிஸம்) என்கிற சொல் தெளிவற்று உணர்த்தும் பொருளும் இந்துத்வமும் ஒரே மாதிரியானவை அல்ல என்று இங்கு சுட்டிக் காட்டினால் போதும். ‘இஸம்’ என்பது பொதுவாக ஒரு கோட்பாட்டையோ அல்லது மதக் கோட்பாடு அல்லது மத அமைப்பின் அடிப்படையிலான ஒரு நெறி முறையையோ குறிக்கும். ஆனால் இந்துத்வம் என்பதன் சாரத்தை ஆய்வு செய்யும்போது  நாம் ஒரு குறிப்பிட்ட இறையியல் அல்லது மதக் கோட்பாட்டை முதன்மையாக _ நிச்சயமாக முதன்மையாக அல்ல _ கருத்தில் கொள்வதில்லை.”

அவர் மேலும் இவ்வாறு விளக்குகிறார்:

“இந்த இரண்டு கருத்தியல்களுக்கு நடுவே ஒரு தெளிவான கோட்டை வரைய நாம் முன்பே முயற்சி செய்தோம்; இந்து மதம் என்பதைச் சனாதன தர்மம் மட்டும் என்று தவறாகப் பொருள் கொள்வதை நாம் ஆட்சேபித்திருக்கிறோம்.  இந்துத்வமும், இந்து தர்மமும் ஒன்றல்ல. அதேபோல் இந்து தர்மம் என்பது இந்து மதமும் ஒரே மாதிரியானவை அல்ல.”

”இந்து மதம் புராதனமானது. இந்துத்வம் என்பது நவீன கட்டுமானம்; ‘கலாச்சார தேசியம்’ என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடும் சொல். இந்த வேறுபாட்டிற்குக் கொடுக்கப் படும் அழுத்தம் சவார்க்கரின் எழுத்துகளில் விரவிக் கிடக்கிறது. ”இந்தி என்கிற சகோதரிச் சொல் எப்படி இந்தியனை மட்டும் குறிக்குமோ அது போல் இந்து என்பதன் வேர்ச் சொல்லும் இந்தியனைக் குறித்தாலும், ஒரு முகமதியர் இந்தியாவில் வசிப்பதாலேயே அவரை இந்து என்று குறிப்பிடுவது, இச்சொற்களை அதிகம் பயன்படுத்துவது அவை உடையுமளவுக்குப் போய்விடும் என்கிற ஐயம் நமக்கு இருக்கிறது” என்கிறார் சவார்க்கர். இந்துமதம் என்பது உன்னமானது. இந்துத்வம் என்பது வெறுப்பின் தத்துவம்.

லஜ்பதி ராய் முன்வைத்த இரு தேசக் கொள்கையை மீண்டும் வலியுறுத்துகிறார் சவார்க்கர். அவர்,” இந்துக்கள் வெறும் இந்தியக் குடிமக்கள் மட்டுமல்ல; ஏனெனில் ஒரு பொதுவான தாய்நாட்டின் மீதிருக்கும் நேசத்தினால் மட்டுமின்றி ஒரே ரத்தத்தினாலும் பிணைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒரு தேசம் மட்டுமல்ல; அவர்கள் ஒரு  இனம், ஜாதி.” என்கிறார். இது இனவாதத்தின் மிகக் கொடூரமான வடிவம்.

இந்து என்பதைக் கண்டறியும் சோதனையை மிகத் தெளிவாக இப்படி விளக்குகிறார் சவார்க்கர்:

“சந்தால் பழங்குடியினர் முதல் சாதுக்கள் வரையில், ஒவ்வொரு இந்துவுக்கும் இந்த பாரத பூமி பித்ருபூவாகவும் புண்ணியபூவாகவும் இருக்கிறது _அதாவது தந்தை பூமியாகவும், புண்ணிய பூமியாகவும் இருக்கிறது. இதனால்தான் தங்களின் பூர்வீக இந்து மதத்திலிருந்து கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட நம் நாட்டுக்காரர்களாகிய முகமதியர்களோ, கிறிஸ்துவர்களோ, இந்துக்களுடன் சேர்ந்து ஒரே தந்தைநாட்டையும் ஒரு பொதுவான கலாச்சாரத்தின் சொத்துக்களையும் _ மொழி, சட்டம், வழக்கங்கள், நாட்டார் கதைகள், வரலாறு போன்றவற்றையும் _ வரித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை இந்துக்களாக அங்கீகரிக்க முடியாது; அங்கீகரிக்கக் கூடாது.  இந்துக்களைப் போலவே அவர்களுக்கு இந்துஸ்தானம் தந்தை நாடாக இருந்தபோதிலும், அது அவர்களின் புண்ணிய பூமி அல்ல. அவர்களின் புண்ணிய பூமி வெகுதொலைவிலிருக்கும் அரேபியாவோ, பாலஸ்தீனமோதான்.”

அவர்கள் மீண்டும் தங்கள் அமைப்பிற்குள் ”திரும்பி வர வேண்டும்” என்று அழைப்பும் விடுக்கிறார் சவார்க்கர்.

“இன ரீதியாகவும், ரத்த ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தேசிய இன ரீதியாகவும் இந்துத்வத்தைச் சாரமாகக் கொண்ட நீங்கள், வன்முறையின் கைகளினால் நம் மூதாதையர் பூமியிலிருந்து கட்டாயமாகப் பறித்துச் செல்லப்பட்ட நீங்கள், நம்முடைய பொதுவான தாயிடம் முழு மனதுடன் அன்பு செலுத்தி, அவளை தந்தை நாடாக (பித்ருபூ) மட்டுமின்றி , புண்ணிய பூமியாகவும் (புண்யபூ) ஏற்றுக் கொள்வதை மட்டுமே செய்ய வேண்டும்.;  அப்படிச் செய்தால் நீங்கள் இந்து அமைப்புக்குத் திரும்ப முழுமையான வரவேற்பு கிடைக்கும்.

பின்னிப் பிணைந்திருக்கும் இந்த இரண்டு கருத்துக்களும் ஆர்.எஸ்.எஸ்.சின் சொல்லாடலில் இன்று வரை தொடர்கின்றன. முஸ்லிம்கள் இந்த அமைப்புக்கு சொந்தமானவர்களல்ல என்பதால், அவர்கள் அதற்குத் திரும்ப வேண்டும்.  அவர்கள் இந்திய எல்லைக்குள் பிறந்திருந்தாலும் இந்து அமைப்புக்கு வெளியில் இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழு குடிமக்கள் அல்ல. ‘எல்லை சார்ந்த தேசியம்’ என்பது தீர்மானகரமாக நிராகரிக்கப் படுகிறது. இந்துமதம் என்கிற ‘வீட்டிற்குத் திரும்ப வருவது’ மட்டுமே அவர்களுக்கிருக்கும் ஒரே வழி.

“பொதுவான தேசம் (ராஷ்டிரா), பொதுவான இனம் (ஜாதி), பொதுவான நாகரீகம் (சன்ஸ்கிருதி) _ இவைதான் இந்துத்வத்தின் சாரங்கள். சிந்துஸ்தான் என்பது யாருக்கு பித்ருபூ மட்டுமின்றி, புண்யபூவாகவும் இருக்கிறதோ அவர்தான் இந்து என்று இந்த சாரங்களைத் தொகுத்துச் சுருக்கமாகச் சொல்லலாம். தேசம், ஜாதி ஆகிய இரு இந்துத்வச் சாரங்களையும் பித்ருபூ என்கிற சொல் நேரடியாகவும், மறைமுகமாகவும் தெளிவாகக் குறிக்கிறது; மூன்றாவது சாரமான சன்ஸ்கிருதியைப் பிரதானமாகக் குறிக்கும் சொல்தான் புண்யபூ. சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், விழாக்கள் போன்ற சமஸ்காரங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிருதிதான்  ஒரு பூமியை புண்ணிய பூமியாக்குகின்றன.”

கிறிஸ்துவர்கள், யூதர்களின் நிலை முஸ்லிம்களை விட மேலானதாக இல்லை.

“யூதர்களைப் பாருங்கள்;  பல நூற்றாண்டுகளாய் அவர்கள் செழிப்பாக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்குப் புகலிடமளித்த பல நாடுகள் மீது நன்றியுணர்ச்சி இருந்தபோதிலும், அவர்கள் வாழும் நாடுகளை சமமாகவோ இன்னும் அதிகமாகவோ அவர்கள் நேசிக்க முடியாது. முகமதியர்களைப் போலவே அவர்களும் தங்களின் புனித பூமியின் நலன்களை, தாய்நாட்டின் நலன்களுக்குக் கீழாகவே வைத்திருக்கின்றனர்.”

BJP's Maharashtra unit to seek Bharat Ratna for Savarkar if re-elected

இதில் சமரசத்திற்கு இடமே இல்லை. ‘கலப்புக் கலாச்சாரம்’ என்கிற கருத்தியல் நிராகரிக்கப்பட்டது. 1937இல் அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபை மாநாட்டில் சவார்க்கர் ஆற்றிய தலைமையுரையில் இந்தக் கருத்தியலை உரக்க ஒலித்தார். அதற்குப் பிறகு மகாசபையின் ஏழு வருடாந்திர மாநாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.

இந்த உரைகளில் தான் ‘இந்துத்வம்’ என்கிற சொல்லை உருவாக்கியதாக பெருமையுடன் நினைவு கூர்ந்தார். யார் இந்து என்பதைக் கண்டறிவதற்கான சோதனை புண்ணிய பூமி என்கிற கருத்தைச் சார்ந்தது. அதன்படி, முகமதியர்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் போன்றோர் இந்துஸ்தானத்தை தங்கள் தந்தை நாடாக அங்கீகரித்த போதிலும், தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்; அவர்கள் இந்துக்களும் அல்ல. “இந்து அமைப்புக்குள்ளிருந்த ஜப்பானியர்களும், சீனர்களும், பிறரும் இந்தியாவைத் தங்களின் புனித பூமியாகக் கருதினாலும் அவர்களும் இந்துக்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள்தாம். இப்படிப்பட்ட கருத்துக்கள் விசித்திரமானவையாக இருந்த போதிலும், சவார்க்கரின் இந்துத்வக் கொள்கையின் உட்கருவை ஆர்.எஸ்.எஸ்.சும், பிஜேபியும் ஏற்றுக் கொண்டனர் என்பதை மறைக்க முடியாது.

1937இல் சவார்க்கர் இப்படிப் பேசினார்:

“சில விரும்பத் தகாத உண்மைகளை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இன்றைய இந்தியா ஒருமைப்பட்ட,  ஒற்றைத் தன்மை கொண்ட தேசம் இல்லை; மாறாக, அதற்குள் இரு தேசங்கள் இருக்கின்றன: ஒன்று, இந்துக்களின் தேசம், மற்றொன்று, முஸ்லிம்களின் தேசம்.”

இந்தக் கருத்து அடுத்து வந்த நாக்பூர் மாநாட்டில் விரிவுபடுத்தப்பட்டது.

“ஆம், இந்துக்களாகிய நாம் இயல்பிலேயே ஒரு தேசம்தான். ஏனெனில், மத, இன, கலாச்சார, வரலாற்றுப் பந்தங்கள் நம்மை ஒரு ஒற்றைத் தன்மை கொண்ட தேசமாக இணைக்கின்றன. இதனுடன் சேர்ந்து அது எல்லைரீதியாகவும் ஒன்றான தேசமாகத் திறன் பெற்றிருக்கிறது. ஓர் இனம் என்ற வகையில் நம் இருப்பு இந்தியாவுடன் அடையாளப்படுத்தப்படுகிறது. இது நம் தந்தை நாடு, நம் புனித பூமி எல்லாவற்றிற்கும் மேலாகவும், எது எப்படி இருந்தாலும், இந்துக்களாகிய நாம் ஒரு தேசமாக இருப்போம். எனவே நாம் ஒரு தேசம், இந்துஸ்தானத்தில் இந்துக்கள் அனைவரும் ஒரு தேசம்; அதில் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒரு சமூகம்தான்.”

இந்துத்வம் நடைமுறையில் இன்று

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப்  போராட்டத்தின் ஒரு தீவிர வெளிப்பாடாக முதல் இரண்டு படுகொலைகளைக் கண்டாலும், மூன்றாவது படுகொலை விடுதலை பெற்ற பன்முகத் தன்மை கொண்ட, கலப்புக் கலாச்சாரத்தின் மாதிரியாக மதச் சார்பற்ற இந்தியா உருவாகிடக் கூடாது என்கிற வெறியின் வெளிப்பாடு. தேசத் தந்தையைக் கொல்லுமளவுக்குச் சென்ற இந்த வெறிக்குப் பின் இருப்பது கலாச்சார தேசியம் என்ற பெயரில் முதலில் சவார்க்கரும், பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த ஹெட்கேவாரும், அதன் தலைவராக நீண்ட காலமாகப் பணியாற்றிய கோல்வால்கரும், ஜன சங்கத்தைத் துவங்கிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும், பின்னர் பாரதீய ஜனதா கட்சி என்கிற புதிய முகமூடியுடன் வந்த அமைப்பின் தலைவர்களும் பேசிய, எழுதிய, அரசியல் ரீதியாக நிறைவேற்றத் துணிந்த ஒரு அரசியல் கோட்பாடு. இதன் தொடக்கப் புள்ளியாக வந்ததுதான் சவார்க்கர் 1923இல் எழுதிய இந்துத்வம் என்கிற புத்தகம்.

மகாத்மாவின் படுகொலைக்குப் பின் அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சும் இந்து மகாசபையும் ஜனசங்கம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் கட்சியாக வந்தது. அப்போது அதன் கொள்கை ஒருமைப்பட்ட மனிதநேயம் என்று கூறப்பட்டது. எமர்ஜென்சி எதிர்ப்பில் உருவான ஜனதா கட்சியில் ஐக்கியமான ஜனசங்கம் அதிலிருந்து பிரிந்து பாரதீய ஜனதா கட்சியாக வெளியே வந்தது. அப்போது அதன் கோட்பாடு காந்தீய சோஷலிசம் என்று கூறப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் பிஜேபி இந்துத்வம் என்கிற சொல்லைத் தவிர்த்தே வந்தது. ராமஜென்ம பூமி குறித்து அது 1989இல் பாலம்பூரில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூட இந்துத்வம் என்று குறிப்பிடவில்லை.  ஆனால் செப்டம்பர் 1990இல் ரத யாத்திரையைத் தொடங்கிய எல்.கே. அத்வானி, “கொள்கைரீதியாக நான் இந்தப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராக நிற்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறார்கள்,” என்றார். பிரச்சினை ராம ஜென்ம பூமியல்ல. அது இந்துத்வத்தைக் காப்பதற்கான போர் என்று தன் பேச்சில் உணர்த்தினார். ஆயினும் பிஜேபி 1989இலும் 1991இலும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இந்துத்வம் என்று குறிப்பிடப்படவில்லை. அது முதன்முதலாக 1996 தேர்தல் அறிக்கையில்தான் இடம் பெற்றது.

பிஜேபி முதன் முறையாக ஆட்சிக்கு வந்த பின் சவார்க்கர் உயிர்த்தெழுந்தார். அந்தமான் சிறையில் அவர் இருந்த சிறைக் கொட்டடியில் ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டது.  அந்தமானின் தலைமையிடமான போர்ட்பிளேரின் விமான நிலையத்துக்கு வீர் சவார்க்கர் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. பிறகு பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் காந்தியின் உருவப் படத்திற்கு அருகிலேயே சவார்க்கரின் உருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துப் பிரதமராயிருக்கும் மோடி இவர்கள் இருவரின் படத்திற்கு முன் நின்றும் வணங்குவதுதான் மிகப் பெரிய வரலாற்று விசித்திரம்.

சவார்க்கரின் இந்துத்வத்தின் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் விழா கொண்டடப்படும் நேரத்தில் இந்துத்வக் கொள்கையின் லட்சியமாகிய இந்து ராஷ்டிரத்தை அமைப்பது என்கிற முனைப்பில் மோடி அரசு செயல்படுகிறது.

தேசத்தின் அவதார புருஷர்களின் வரிசையில் சவார்க்கரை நிறுத்தும் நோக்கத்துடன்தான் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

யார் உண்மையான பாரத ரத்னா?

கருணை மனு புகழ் சவார்க்கரை இந்த நேரத்தில் வேறு ஒருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவரின் பெயர் பகத்சிங்.

பகத்சிங்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஒரு மனுவை அளித்தார். அது கருணை மனு அல்ல. இரக்கமற்று என்னைச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறும் விருப்ப மனு.

அவர் லாகூர் சிறையிலிருந்து  பஞ்சாப் கவர்னருக்கு 1931ஆம் ஆண்டு இந்த மனுவை அனுப்பினார். அதில் அவர் சொன்னதன் சாரம் இதுதான்: “அக்டோபர் 7, 1930 அன்று ஒரு சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு மரண தண்டனை வழங்கியது. இங்கிலாந்து அரசுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்தோம் என்பதுதான் எங்கள் மீதான குற்றச் சாட்டு. பிரிட்டிஷ் தேசத்த்துக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே ஒரு போர் நடப்பதாகவும், அந்தப் போரில் நாங்கள் உண்மையாகப் பங்கேற்றதால், நாங்கள் போர்க் குற்றவாளிகள் என்றும் கூறியிருக்கிறீர்கள். இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், அப்படி ஒரு போர் நடக்கிறதென்றும், ஒரு சில ஒட்டுண்ணிகள் இந்தியாவின் உழைக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டும் வரை அந்தப் போர் தொடருமென்றும் நாங்கள் பிரகடனம் செய்கிறோம். அந்த ஒட்டுண்ணிகள் பிரிட்டிஷ் முதலாளிகளாக மட்டுமோ அல்லது பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களின் கலப்பாகவோ அல்லது இந்தியர்கள் மட்டுமாகவோ இருக்கலாம்.

“எனவே. போர் தொடரும். அது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். அது பகிரங்கமாவோ, ரகசியமாகவோ, போராட்டங்களாக மட்டுமாகவோ  அல்லது வாழ்வா சாவா என்கிற உக்கிரமானதாகவோ இருக்கலாம். அது ரத்தம் தோய்ந்ததாக இருக்குமா அல்லது ஒப்பீட்டு வகையில் அமைதியானதாக இருக்குமா என்பதைத் தெரிவு செய்யும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது. எது உங்களுக்கு விருப்பம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ஒரு சோஷலிசக் குடியரசு உருவாகும் வரை அந்தப் போர் புதிய வேகத்துடனும், இன்னும் அதிகத் திமிருடனும், குலைக்க முடியாத உறுதியுடனும் தொடரும்.”

இறுதியாக பகத் சிங் எழுதிய வரிகள்தாம் வீரம் என்பது என்னவென்று நமக்கு உணர்த்தும்.

“தூக்கிலடப்படுவதைவிட சுட்டுக் கொல்லப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் கருணை கூர்ந்து உங்களுடைய ராணுவத் துறையின் ஒரு பிரிவை அனுப்பி எங்களுடைய மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதைச் செய்வீர்கள் என நம்புகிறோம்.”

கருணைக்காக மன்றாடிய சவார்க்கர் ஒருபுறம். சுட்டுக் கொல்லப்படுவதற்காக மனு அளித்த பகத்சிங் மறுபுறம். மற்றவர்களின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கொலை செய்யத் தூண்டிய சவார்க்கர் ஒருபுறம். தானே கையில் ஆயுதம் தாங்கிச் சென்று அரசாங்கத்தை அதிர வைத்த பகத்சிங் மறுபுறம். விடுதலை அளித்தால் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவேன் என்ற சவார்க்கர் ஒருபுறம். உயிரே போனாலும் என் போர் தொடரும் என்ற பகத்சிங் மறுபுறம். உங்கள் போருக்கு உதவுவேன் என்ற சவார்க்கர் ஒருபுறம். உழைக்கும் மக்களையும் இயற்கை வளங்களையும் காப்பதற்காக எங்களின் போர் நிற்காது என்ற பகத்சிங் மறுபுறம். இந்துக்களின் ராஷ்டிரத்தை உருவாக்குவதே லட்சியம் என்றிருந்த சவார்க்கர் ஒருபுறம். சோஷலிசக் குடியரசை உருவாக்குவோம் என்ற பகத்சிங் மறுபுறம்.

இதில் யார் பாரத ரத்னா?

(இந்த நீண்ட கட்டுரையின் பெரும்பகுதி அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதிய இரு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. அவை: 1. Savarkar and Hindàˆva: The Godve Connecˆion; 2. The RSS: A Menace ˆo India.

உயிர்மை இதழுக்காக நான் சவார்க்கர் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்கு இந்தப் புத்தகங்களிலிருந்து விவரங்களையும் மேற்கோள்களையும்  எடுத்துக்கொள்ள மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த அவருக்கு நன்றி.  கட்டுரையில் இருக்கும் மேற்கோள்களின் மொழிபெயர்ப்பு என்னுடையது)

– நன்றி https://uyirmmai.com/

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *