வழக்கறிஞர் மு.ஆனந்தன் எழுதிய "ஆரவல்லியின் உயிர்ப் போராட்டம்" (Save Aravalli Hills - ஆரவல்லி மலைத்தொடர்) கட்டுரை - www.bookday.in

ஆரவல்லியின் உயிர்ப் போராட்டம் – மு.ஆனந்தன்

ஆரவல்லியின் உயிர்ப் போராட்டம்

– மு.ஆனந்தன்

200 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால், இந்திய நிலப்பரப்பின் அடையாளமாக நீங்கள் இமயமலையைப் பார்க்க முடியாது; ஆரவல்லி மலைத் தொடரைத்தான் பார்க்க முடியும். இமயமலையைவிடத் தொன்மையானது ஆரவல்லி. உலகின் மிகப் பழமையான புவியியல் இருப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. டெல்லி, ரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் 692 கி.மீ. நீளத்திற்கும், 1.44 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவிற்கும் பரந்து விரிந்துள்ளது. இந்த மலைத்தொடரில் மூன்று புலிகள் காப்பகங்கள், 22 கானுயிர் சரணாலயங்கள், யுனஸ்கோ பாரம்பரியத் தலங்கள் என வட இந்தியாவின் வளமான பல்லுயிர் மண்டலமாக இது வாழ்ந்து வருகிறது. பல மதத்தினரின் புனிதத் தலங்களும் வீற்றுள்ளன.

தார் பாலைவனம் கிழக்கு நோக்கி நகர்ந்து வளமான இந்தோ-கங்கைச் சமவெளி, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் அரியானா ஆகிய பகுதிகளுக்குப் பரவாமல் காக்கின்ற ‘பசுமைத் தடுப்பு அரணாக’ உள்ளது. ஆண்டுக்கு 50-70 செ.மீ. மழையைத் தருவிக்கக்கூடியது. டெல்லி, குருகிராம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஒரு ஹெக்டேருக்கு 20 லட்சம் லிட்டர் நீரைச் சேமிக்கும் நிலத்தடி அடுக்குகளைத் தன்னுள் அடக்கிவைத்துள்ளது. நிலத்தடி நீரைச் செறிவூட்டும் திறன் கொண்டது. சம்பல், சபர்மதி, லூனி உள்ளிட்ட ஆறுகள் இங்குதான் உயிர் பெறுகின்றன. தார் பாலைவனத்தில் உருவாகும் தூசிப் புயல்களைத் தடுத்து, காற்று மாசுபாட்டை வடிகட்டும் வட இந்தியாவின் நுரையீரல் இது. அத்தகைய உயிர்காக்கும் ஆரவல்லி, தற்போது தனது உயிர் மூச்சுக்காகப் போராடி வருகிறது.

சட்டப்பாதுகாப்புகளும் மீறல்களும்

1992 இல் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்ட ஆரவல்லி அறிவிக்கை (MoEFCC’s Aravalli Notification- 1992) ஆரவல்லிக்குக் கடந்த மூன்று தசாப்தங்களாக சட்டப் பாதுகாப்பு அளித்து வந்தது. காடழிப்பிலிருந்து காப்பாற்றி வந்தது. அதே போல் 2021 இல் தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியம் வெளியிட்ட (The National Capital Region Planning Board) ஆரவல்லியில் இயற்கை பாதுகாப்பு மண்டலங்களின் பிரகடணம் (Declaration Of Natural Conservation Zones In The Aravallis – 2021) ஆரவல்லி மலைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.

ஆனால் அரியானா மாநில பாஜக அரசு அந்த விதிகளைக் குறுக்கு வழியில் மீறியது. எல்லை வரையறை என்ற பெயரில் பல பகுதிகளைத் தேசிய தலைநகர் பகுதியிலிருந்து வெளியே கொண்டுவந்தது. இதனால் தேசிய தலைநகர் பகுதியில் இருந்த அதன் நிலப்பகுதி 47% குறைந்துவிட்டது. மேலும் குறுகிய வரையறையின் மூலம் ஆரவல்லி குன்றுகளை அடையாளம் செய்து ஏராளமான குன்றுகளை ஆரவல்லி என்ற வகைமையிலிருந்து விடுவித்து விட்டது. இதன் மூலம் பரிதாபாத் மாவட்டத்தில் மட்டும் 20000 ஏக்கர் வனப்பகுதியைச் சுரங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்குத் திறந்துவிட மாநில அரசு முயற்சிப்பதாகப் பல்வேறு அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பி வந்தனர். நான்கு மாநில அரசுகளும் ஆரவல்லி மலைப் பகுதிகளில் சுரங்கப் பணிகளுக்கு அனுமதி அளித்து வந்தன. சட்ட விரோதமாகவும் ஏராளமான சுரங்கங்களும் குன்றுகளை அரித்து வந்தன. 200 கோடி ஆண்டுகள் தாக்குப்பிடித்த ஆரவல்லி 10 ஆண்டு கார்ப்ரேட் அரசியலால் தாக்குப்பிடிக்க இயலாமல் தவிக்கிறது

வளைக்கப்பட்ட வரையறையும் வளைந்த நீதியும்

ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெறும் சுரங்கப் பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் எம்.சி. மேத்தா மற்றும் டி.என். கோதவர்மன் ஆகிய வழக்குகளின் கீழ் விசாரித்து வந்தது. ஜனவரி 10, 2024 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, ஆரவல்லி மலை குறித்த தெளிவான வரையறையை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டுமென ராஜஸ்தான் மாநில அரசு கோரியது. அதனை ஏற்று உச்ச நீதிமன்றம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க உத்தரவிட்டது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த அந்த ‘மத்திய அதிகாரம் பெற்ற குழு’ வெறும் 48 நாட்களில் 01.03.2024 அன்று அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின் வரையறைதான் தற்போதைய சிக்கல்களுக்குக் காரணம். உள்ளூர் நிலப்பரப்பிலிருந்து 100 மீட்டர் (328 அடி) மற்றும் அதற்கு மேல் உயரமுள்ள குன்றுகளை மட்டுமே ‘மலை’ என அது வரையறுக்கிறது. மேலும் 500 மீட்டர் இடைவெளிக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குன்றுகள் அமைந்துள்ள பகுதியே “மலைதொடர்” என்றும் வரையறுக்கிறது. அதாவது, 100 மீட்டர் உயரத்திற்குக் குறைவாக உள்ள குன்றுகள் ‘மலைகள்” இல்லையாம். அங்குச் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளலாம் என்கிறது. வனம், வன நில அளவியல், வன ஆராய்ச்சி தொடர்பான அரசு அதிகாரிகள் மட்டுமே குழுவில் இடம் பெற்றிருந்தனர். பொதுமக்களும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. பொதுமக்கள் கருத்தும் கேட்கப்படவில்லை. உலகப் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையில் வெறும் 48 நாட்களில் எப்படி ஒரு அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. இதுவே பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது. அறிக்கை காரீயம், வெள்ளி, துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட ஆரவல்லியின் அரிய கனிம வளங்களைக் கார்ப்ரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப் போகச் செய்கிறது.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, நவம்பர் 20, 2025 அன்று இந்த அறிக்கையை அப்படியே ஏற்று உத்தரவு பிறப்பித்தது. ஒன்றிய அரசின் வரையறையை குறுகிய பார்வையில் பரிசீலனை செய்துள்ளது. தீர்ப்பில் ஆரவல்லி மலையின் தொன்மையையும் முக்கியத்துவத்தையும் பசுமை அரணாக விளங்குவதையும் பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த வரையறையால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகள் குறித்து எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.
பாதிப்புகளின் ஆழம்

ஆரவல்லி என்பது இமயமலை போன்ற உயர்ந்த சிகரங்களைக் கொண்ட தொடர் அல்ல; இது 200 கோடி ஆண்டுகள் பழமையான சிதைந்த மலை அமைப்பு. இங்குள்ள 90 விழுக்காட்டிற்கும் அதிகமான குன்றுகள் 10 முதல் 80 மீட்டர் உயரமுள்ள சிறிய குன்றுகளே. ‘இந்திய வன ஆய்வு நிறுவனத்தின்’ தரவுகளின்படி, மொத்தமுள்ள 12,081 குன்றுகளில், 100 மீட்டர் உயர விதிமுறைக்கு உட்படுபவை வெறும் 1,048 (8.7%) மட்டுமே. மீதமுள்ள 91.3% குன்றுகள் மலைகளாகக் கருதப்படாது. அவை சட்டப் பாதுகாப்பை இழக்கின்றன.

இந்த வரையறைக்கு முன்பாகவே அரியானாவில் ஆரவல்லியை ஏறக்குறைய அழித்துவிட்டனர். அரியானா மாநில ஆரவல்லி குடிமக்கள் ஆய்வறிக்கை – பகுதி -1 (The State of the Haryana Aravallis: Citizens’ Report – Part 1) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சுரங்கப் பணிகளால் அரியானாவின் சாரிக்கி தாத்ரி மற்றும் பிவானி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான ஆரவல்லி தொடர் அழிந்துவிட்டது 2009 இல் உச்ச நீதிமன்றம் சுரங்கப் பணிகளுக்கு தடை விதிப்பதற்கு முன்னரே கூர்கா, நூஹ் மற்றும் பரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் ஆரவல்லி குன்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. மகேந்தர்கார் மாவட்டத்தில் தற்போதும் சட்ட விரோதமான சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கனவே பல குன்றுகள் அழிக்கப்பட்டதால் ராஜஸ்தானில் அஜ்மீர் முதல் ஜுன் ஜுனு வரையிலும் மற்றும் அரியானா மகேந்தர்கர் மாவட்டத்திலும் 12 க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்பு அரண்கள் தகர்க்கபப்ட்டு திறப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தார் பாலைவனத்திலிருந்து எழும்பும் புழுதி அந்த திறப்புகளின் வழியே பயணித்து தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசு ஏற்படுத்துகிறது. நிலத்தடி நீர் மட்டமும் 1500 – 2000 வரை தாழ்ந்துவிட்டது. இஸ்ரோ 2021ஆய்வறிக்கையின் படி ராஜஸ்தானின் 68.3% பகுதிகள் பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. வன அமைச்சக 2022 தரவுகளின் படி இந்தியாவில் 96.4 மில்லியன் ஹெக்டேர் நிலம் சீரழிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் மற்றும் வள ஆதார நிறுவனத்தின் (The Energy and Resources Institute) 2022 அறிக்கைபடி சுரங்கம், காடழிப்பு, நகர்மயமாக்கல் காரணங்களால் ஆரவல்லியின் 25% பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. மத்திய நிலத்தடி நீர் வாரிய (Central Ground Water Board) 2023 அறிக்கை ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் 1- 1.5 மீட்டர் தாழ்ந்து செல்கிறது என எச்சரிக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 2022 அறிக்கை ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் எழும்பும் புழுதி புயல் கோடைகாலத்தில் தில்லியில் 2.5 P.M. அளவு காற்று மாசு ஏற்படுத்துகிறது. சுவாசக் கோளாறுகளையும் கடும் வெப்பத்தை உருவாக்குகிறது என எச்சரிக்கிறது. குன்றுகள் மேலும் அழிக்கப்பட்டால் இந்தப் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும்.

புதிய அச்சுறுத்தல்கள்

புதிய வரையறையால் ஏராளனமான குன்றுகள் அழிக்கப்படும் வளமான சூழலியலும் பல்லுரியர் பன்மையும் சீரழிக்கப்படும். காட்டுயிர்களின் வாழ்விடமும் வலசைப் பாதைகளும் சிதைந்து மனித – விலங்கு மோதல்கள் தீவிரமடையும் மணல் புயல்கள் அதிகரித்து விவசாய நிலங்கள் அழிந்துவிடும் தூசிப் புயலால் கடும் காற்று மாசு ஏற்படும் மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படும். வெப்பமடைதல் வேகமடையும் கடும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் பிரச்சனைகள் உருவாக்கும்., தார் பாலைவனம் வேகமாக கிழக்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசம், அரியானா, தில்லி பகுதிகளை நோக்கி நகரும். சில பத்தாண்டுகளில் அவை பாலைவனங்களாக மாறும். இந்தியாவிலேயே மிகவும் குறைவான (3.6%) வனப் பகுதியைக் கொண்டுள்ள மாநிலமான அரியானா அதையும் இழக்கும்.

மலையின் முக்கியத்துவம் அதன் உயரத்தில் இல்லை; சூழலியல் தன்மையில்தான் உள்ளது. நிலவியல் மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகிய அறிவியல் அளவுகோல்களைப் புறந்தள்ளிவிட்டு ‘நில அளவீடு’ என்ற தொழில்நுட்பச் சாக்கில் கார்ப்பரேட் நலனுக்காகச் செயல்படுவது தேச விரோதச் செயலாகும். ஒன்றிய அரசு வகுத்திருப்பது நிலையான ஒழுங்குமுறை அல்ல. அந்த வரையறைக்குள் மறைந்திருப்பது பேரழிவு. ஏற்கனவே வனப்பாதுகாப்பு, சுற்றுச் சூழல் சட்டங்கள், விதிகள், கொள்கைகளை எல்லாம் திருத்தி காடுகளை கார்ப்ரேட் பூமிகளாக மாற்றும் குரூர சதிகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. தற்போது ஒட்டுமொத்த ஆரவல்லி நிலவியல் அதிசயத்தையே அழிக்க முயற்சித்து வருகிறது.

ஆரவல்லியை காப்பாற்றுவதற்காக வட இந்தியாவில் பொதுமக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். புதிய வரையறையால் 0.19% பகுதி மட்டுமே பாதிக்கப்படும் என்று வழக்கம் போல் ஒன்றிய அரசு பொய்யான தகவல்களைப் பரப்பி போராட்டத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. இந்த வரையறையை அனுமதித்தால் அது ஆரவல்லியுடன் நிற்காது. நாடு முழுவதுள்ள மலைகளுக்கும் நீளும். பழனிமலை, திருப்பரங்குன்றம், அழகர்மலை உள்ளிட்ட நமக்கு அருகிலுள்ள சிறு சிறு குன்றுகளும் கார்ப்ரேட்டுகளுக்கு கைமாறும் நிலை ஏற்படும். எனவே இந்த வரையறையை ரத்து செய்ய வேண்டும். ஒட்டுமொத்த ஆரவல்லித் தொடரையும் ‘முக்கியச் சூழலியல் மண்டலமாக’ அறிவித்து, சுரங்கத் தொழிலை மாஃபியா கும்பலிடம் ஒப்படைப்பதை தடுக்க வேண்டும். இல்லையெனில் வட இந்தியா வறண்ட இந்தியாவாக மாறும்.

📚 எழுதியவர்:

மு.ஆனந்தன்,
கோவை
anandhan.adv@gmail.com

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *