ஆர்எஸ்எஸ்-இன் வெறித்தனத்தை மூடி மறைக்க மோகன் பகவத் மீண்டும் முயற்சி
– சவெரா (தமிழில்: ச.வீரமணி)
ஆர்எஸ்எஸ்-இன் தலைவரான மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தையும், அதன் வெறித்தனமான இந்துத்துவாப் போக்கையும் மென்மையான, சகிப்புத்தன்மை கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாகச் சித்தரிக்க, அவ்வப்போது மேற்கொள்ளும் முயற்சிகள், நாளுக்கு நாள் மிகவும் பரிதாபகரமானதாகவும் அர்த்தமற்றதாகவும் மாறி வருகின்றன. காக்கிச் சீருடை அணிந்த அந்த அமைப்பின் தொண்டர்கள் உட்பட, யாரும் இந்தப் போதனைகளை நம்புவதில்லை. மோகன் பகவத்தின் இத்தகைய கருத்துகளுக்கு மிகச் சமீபத்திய உதாரணமாக நியூயார்க்கில் அவர் ஆற்றிய உரையைக் குறிப்பிடலாம். அதில் அவர், “இந்தியாவில், முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று ஏதேனும் ஒரு இந்து நினைத்தால், அவர் இந்துவாகவே இருக்கமாட்டார்,” என்று கூறினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அமெரிக்கக் கிளைகள் ‘உலகளாவிய ஒருமைப்பாட்டு விழா’ (Universal Oneness Celebration) என்ற ஆடம்பரமான பெயரில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளை அழைத்திருந்தன. இருப்பினும், மோகன் பகவத் அவர்கள்தான் அந்த விழாவின் சிறப்பு விருந்தினர் என்பது தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், அது தெரிந்திருந்தால் தாங்கள் அதில் கலந்துகொண்டிருக்க மாட்டோம் என்றும் அவர்களில் சிலர் பின்னர் கூறினர். சிகாகோவில் 1893இல் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையைப் போலவே தானும் பேசுவதாகக் காட்டிக்கொண்ட மோகன் பகவத், அந்த உரையின் பெருமையில் ஒரு பகுதியாவது தனக்கும் வந்து சேரும் என்று வீணாக நம்பினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று புது தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “இஸ்லாம் நிலைத்திருக்காது என்று நினைப்பவர்கள் இந்து சிந்தனையால் வழிநடத்தப்படுபவர்கள் அல்ல. இந்து தத்துவம் அவ்வாறு சிந்திப்பதில்லை. இரு தரப்பிலும் நம்பிக்கை ஏற்படும்போதுதான் இந்த மோதல் முடிவுக்கு வரும். முதலாவதாக, நாம் அனைவரும் ஒன்று என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
சமீப காலங்களில் மோகன் பகவத் கூறியுள்ள இத்தகைய கருத்துகளுக்குப் பின்னால், இவ்வாறு இவர் கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் பின்னர் விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்னதாக, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான நிபந்தனைகளை வகுப்பதில் மோகன் பகவத் பல சந்தர்ப்பங்களில் மிகவும் வெளிப்படையாகவே செயல்பட்டுள்ளார் என்பதைக் குறிப்பிடுவது அவசியம்.
முஸ்லிம்-எதிர்ப்பு நச்சின் வேர்கள்
“முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாட்டு முறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைக் கைவிடாமலே கூட, இந்த நாட்டை வணங்கினால், இந்தியப் பண்பாட்டைப் பின்பற்றினால் மற்றும் இந்திய முன்னோர்கள் குறித்துப் பெருமை கொண்டால், அவர்களும் இந்துக்களே…” என்று அவர் 2025 நவம்பர் 18 அன்று குவஹாத்தியில் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசினார்.
“இஸ்லாத்திற்கு அஞ்சத் தேவையில்லை. ஆனால் அதே சமயம், முஸ்லிம்கள் தங்கள் மேலாதிக்கத்தை வலியுறுத்தும் ஆரவாரமான பேச்சைக் கைவிட வேண்டும். ‘நாங்கள் உயர்ந்த இனம். ஒரு காலத்தில் இந்த நாட்டை நாங்கள் ஆண்டோம். மீண்டும் ஆள்வோம். எங்கள் வழி மட்டுமே சரியானது. மற்றவர்களுடையது தவறு. நாங்கள் தனித்துவமானவர்கள். எனவே அப்படியே தொடர்வோம். எங்களால் இணைந்து வாழ முடியாது.’ இது போன்ற கருத்துக்களை அவர்கள் கைவிட வேண்டும். உண்மையில், இங்கே வாழும் அனைவரும் – இந்துவாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்டாக இருந்தாலும் சரி – இந்தக் கண்ணோட்டத்தைக் கைவிட வேண்டும்,” என்று 2023 ஜனவரி 10 அன்று ஆர்எஸ்எஸ் வெளியீட்டகங்களிடையே பேசுகையில் மோகன் பகவத் கூறினார்.
இந்துக்களின் ஆக்ரோஷமான போக்கு குறித்த கேள்விக்கு, அதே நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்: “இந்து சமூகம் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் போரில் ஈடுபட்டு வருகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள், வெளிநாட்டுத் தாக்கங்கள் மற்றும் வெளிநாட்டுச் சதித்திட்டங்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயல்பான ஒன்றுதான்.”
நிலைமை இவ்வாறே தொடர்கிறது. மோகன் பகவத் இப்போது மிகவும் கவனமாகவும் மறைமுகமாகவும் கூறும் கருத்துக்களை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவராகவும் மற்றும் அதன் மிக முக்கியமான கொள்கை வழிகாட்டியாகவும் இருந்த எம்.எஸ். கோல்வால்கர், 1939இலேயே தனது “நாம் அல்லது நம்முடைய வரையறுக்கப்பட்ட தேசம்” (“We, Or Our Nationhood Defined”) என்ற முக்கிய நூலில் வெளிப்படையாகக் கூறியிருந்தார். யூதர்களை வெளியேற்றியதற்காக ஜெர்மனியைப் பாராட்டிய பிறகு கோல்வால்கர் இவ்வாறு எழுதுகிறார்: “முதிர்ந்த மற்றும் விவேகமான நாடுகளின் அனுபவத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கண்ணோட்டத்தின்படி, இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனத்தவர் ஒன்று இந்து கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டு, இந்து மதத்தை மதித்து வணங்கக் கற்றுக்கொண்டு, இந்து இனம் மற்றும் கலாச்சாரத்தை – அதாவது இந்து தேசத்தை – மேன்மைப்படுத்துவதைத் தவிர வேறு எந்த எண்ணமும் கொண்டிருக்காமல், தங்கள் தனித்துவமான அடையாளத்தை இழந்து இந்து இனத்தோடு ஒன்றிணைய வேண்டும். அல்லது இந்து தேசத்திற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, எதையும் கோராமல், எந்தச் சலுகைக்கோ அல்லது முன்னுரிமைக்கோ, ஏன் குடிமை உரிமைகளுக்குக் கூட தகுதியற்றவர்களாக இந்நாட்டில் வசிக்கலாம்.”
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, முஸ்லிம்களை நோக்கி மோகன் பகவத் முன்வைக்கும் கருத்துகள் மிகத் தெளிவாகப் புலப்படுகின்றன. அவர் கேட்பதற்கு இதமான மொழியைப் பயன்படுத்துகிறார். அத்துடன் எளிதில் நம்பக்கூடியவர்களை ஏமாற்றவும் முயற்சிக்கிறார். ஆனால், இந்தக் கருத்துகளின் வேர்கள், ‘குருஜி’யால் உருவாக்கப்பட்டதும் பல பத்தாண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பால் போற்றி வளர்க்கப்பட்டதுமான நச்சுத்தன்மை கொண்ட ஊற்றிலேயே ஆழமாகப் பதிந்துள்ளன. ஒருவேளை இதில் ஏதேனும் மறுபரிசீலனையோ அல்லது ‘நிலைப்பாட்டில் மாற்றமோ’ நிகழ்ந்திருப்பதாக நினைப்பவர்கள், மோடி ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் மற்றும் ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் எவ்வாறு நடத்தப்பட்டு வருகின்றனர் என்பதை நினைவுகூர்வது பயனுள்ளதாக இருக்கும்.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்
கடந்த 12 ஆண்டுகளில் முஸ்லிம்கள் (மற்றும் கிறிஸ்தவர்களும்) ஓரங்கட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அதிகாரமற்றவர்களாக ஆக்கப்பட்ட எண்ணற்ற வழிகளை, தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட இடத்தில் முழுமையாக விவரிப்பது கடினம். அவ்வாறு செய்வதற்கு சட்டப்பூர்வமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தந்திரங்கள் இரண்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த முஸ்லிம் சமூகத்திற்குப் பயனளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மட்டங்களில் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கடுமையாகக் குறைந்துள்ளது. ஆளும் பாஜகவில் ஒரே ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே உள்ளார். மேலும் நூற்றுக்கணக்கான மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரே உள்ளனர். இந்தியக் குடியுரிமை கோரும் அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் ஒரு சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்க, வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் காணும் பெயரில், பல இடங்களில் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தை விமர்சிப்பது முதல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பது வரையிலான பல்வேறு செயல்களுக்காக முஸ்லிம்கள் காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடுமையான சட்ட வழக்குகளை எதிர்கொள்கின்றனர் அல்லது புனையப்பட்ட வழக்குகளின் பேரில் சிறைகளில் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இன்னும் பல முஸ்லிம்கள் போலிக் காவல் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். பாஜக ஆளும் 13 மாநிலங்களில் மதமாற்றத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள், முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் துன்புறுத்தவும் அவர்கள் மீது வழக்குத் தொடரவும் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு மாநிலங்கள், முஸ்லிம்களின் தனிநபர் சட்டத்தை ஒடுக்க முற்படும் பொது சிவில் சட்டங்கள் என்றழைக்கப்படும் சட்டங்களை இயற்றியுள்ளன. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முஸ்லிம்களின் வீடுகளை, டஜன் கணக்கான வழக்குகளில் காவல்துறை சட்டவிரோதமாக இடித்துள்ளது. சில வழக்குகளில், சமுதாய அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் பில்கிஸ் பானோ வழக்கு போன்ற, கொடூரமான மத வன்முறையின் முந்தைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பலரை, சந்தேகத்திற்குரிய விதிகளின் கீழ் சிறையிலிருந்து விடுவிக்க முயற்சிக்கப்படுகிறது. பெரும்பாலான மத வன்முறை வழக்குகள் காலவரையின்றி நிலுவையில் உள்ளன. சாட்சிகள் கட்சி மாறியதால், இந்துத்துவா குழுக்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் தோல்வியடைந்துள்ளன. இவை அனைத்தும், மதவெறி பிடித்த இந்துத்துவா சக்திகளை சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தொடரத் தூண்டியுள்ளன.
மேற்கூறிய சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு இணையாக, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெளிப்படையான வன்முறைகளும் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்துள்ளன. எண்ணற்ற வழிபாட்டுத் தலங்கள் அல்லது மதக் கூட்டங்கள் தாக்கப்பட்டுள்ளன. புனிதப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு, பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாட்டிறைச்சி உண்பது அல்லது கொண்டு செல்வது, மதமாற்றம், பெண்களைக் கடத்துதல் அல்லது ஆள் கடத்தல் போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள், இச்சமூகங்களை அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ பயன்படுத்தப்படுகின்றன. 2014ஆம் ஆண்டு முதல், முக்கியமாக முஸ்லிம் மற்றும் சில தலித் ஆண்கள் கும்பலால் அடித்துக் கொல்லப்படும் (mob lynching) கொடூரமான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 189 முதல் 279 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில், இழிவுபடுத்தும் பாடல்கள் மூலம் ஆத்திரமூட்டும் செயல்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இத்தகைய ஆத்திரமூட்டல்களுக்கு எதிர்வினையாற்றுவது வகுப்புவாத வன்முறைக்கும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கிறது. இது சிறுபான்மைச் சமூகத்தை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
மோகன் பகவத் இப்போது கூறுவது போன்று ‘ஒற்றுமை’, ‘அனைவரையும் உள்ளடக்கிய தன்மை’ மற்றும் அனைத்து மதங்களையும் மதித்தல் ஆகியவை வெறும் வெற்றுப் பேச்சு என்பதை பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பல சமயங்களில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறோம். உண்மையில், சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஊடுருவியுள்ள ஆர்எஸ்எஸ்-இன் துணை அமைப்புகள், அதிகாரத்தில் இருப்பவர்களின் பாதுகாப்போடு, ‘குருஜி’யின் கொள்கைகளை எழுத்திலும் செயலிலும் முழுமையாகச் செயல்படுத்தி வருகின்றன. மோகன் பகவத்தின் வார்த்தைகள் ஒரு புதிய நிலைப்பாட்டைக் குறிப்பதாகக் கருதுவோர், இவையனைத்தையும் உற்றுநோக்க வேண்டும்.
மோகன் பகவத்தின் அறிக்கைகளுக்குப் பின்னே ஒளிந்திருப்பது என்ன?
ஆர்எஸ்எஸ் (மற்றும் இந்துத்துவா) அமைப்பு மற்ற மதங்களை, குறிப்பாக இஸ்லாத்தை மதிக்கிறது என்றும், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையையும் மனிதகுலத்தின் ஒற்றுமையையும் அது முன்னிறுத்துகிறது என்றும் மோகன் பகவத் கூறுவதற்குப் பின்னால் ஓர் எளிய காரணம் உள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் முகமான பாஜக ஆகியவற்றை விமர்சிப்பவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதன் முக்கியத்துவம் அதிகரித்து வருவதே அதற்குக் காரணமாகும். இதில் இந்தியாவிற்குள் இருப்பவர்கள் மட்டுமின்றி, இந்திய வம்சாவளியினர் மற்றும் பிற நாட்டினர் என வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அடங்குவர். இத்தகைய பிரிவினரைத் தங்கள் பக்கம் ஈர்ப்பது ஏன் முக்கியமாகிறது? ஏனெனில், இந்தியாவிற்குள் பாஜகவும் அதன் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. பொருளாதாரக் களத்தில் மோடி அரசாங்கம் சந்தித்துள்ள பெரும் தோல்விகள்–விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, வேலையின்மைப் பிரச்சனை, அதிகரித்த கடன் சுமை, குறைவான வருமானம், மோசமான பொருளாதார நிர்வாகம், பெரும் செல்வந்தர்களுக்கு வெளிப்படையாகச் சாதகமாகச் செயல்படுதல் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களுக்கு அடிபணிதல் போன்றவை–குறிப்பாக இளைஞர்களிடையே அதிருப்தியை அதிகரித்துள்ளன. ஊழல் மலிந்த தேர்வு முறைக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டங்களும், அதைத் தொடர்ந்து மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய போராட்டங்களும், மோடியின் ஆட்சியின் மீதான இந்த அதிருப்தி மற்றும் ஏமாற்றத்தின் அறிகுறிகளாகும். தேர்தல் வெற்றிகள் கிடைத்தபோதிலும், கோபமும் அதிருப்தியும் எவ்வாறு மிக வேகமாகப் பெருகி, வலுவாக வேரூன்றியிருக்கும் சக்திகளையே அதிகாரத்திலிருந்து அகற்றிவிடும் என்பதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நன்கு அறிந்துகொண்டுள்ளன. எனவே, பாஜகவின் மதவாத அரசியலை எதிர்க்கும் மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அதேபோல, சர்வதேச அரங்கிலும், மோடி அரசாங்கம் ‘தேர்தல் வழி சர்வாதிகாரத்தை’ (electoral autocracy) நோக்கிச் சரிந்து வருவதாகவும், உலகம் முழுவதும் உள்ள தீவிர வலதுசாரி ஆட்சிகளின் அனைத்துப் பண்புகளையும்–அதாவது ஜனநாயகக் கட்டுப்பாடுகள், குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாடு, ஊடகக் கட்டுப்பாடுகள் மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வு (Islamophobia) ஆகியவற்றை–வெளிப்படுத்துவதாகவும் ஒரு புரிதல் வளர்ந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மோகன் பகவத் பங்கேற்ற பொது நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் காட்டுவது போல, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடையேயும் மோடி மீதான இந்த அதிருப்தி நிலவுகிறது.
21ஆம் நூற்றாண்டில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைப்பாக மாற மோகன் பகவத் மற்றும் ஆர்எஸ்எஸ் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியிலேயே முடியும். ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு அவிழ்த்துவிடப்படும் பொய் மூட்டைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பலனளிக்குமே தவிர, என்றென்றும் நிலைக்காது. மேலும், தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரே இந்தியாவின் பிரதமராக இருந்ததன் மூலம் ஆர்எஸ்எஸ் பெற்ற நன்மைகள் இப்போது உச்சத்தை எட்டிவிட்டன. இனி மோகன் பகவத் மற்றும் அவரது ‘காக்கிப் படை’யின் செல்வாக்கு, சரிவை நோக்கியே செல்லும். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஏற்படுத்திய வலியைத் தணிக்க இனிமையான வார்த்தைகள் ஒரு மருந்தாக அமையாது.
‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ செப்.7 – 13, 2026
***********************************************
📚 எழுதியவர் :
சவெரா
தமிழில்: ச.வீரமணி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

