கடந்த பத்து மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் பூட்டிக்கிடக்கின்றன.உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற கொரணா வைரஸ்ஸின் எதிரொலியாக மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லமுடியவில்லை. அரசின் சில தளர்வுகள் மூலம் கல்லூரியில் மூன்றாமாண்டு மற்றும் முதுகலை, ஆய்வு மாணவர்கள் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர். பள்ளிக்கல்வியை பொருத்தவரை மாணவர்கள் ஆன் லைன் மூலமாக கல்வியை கற்றுக்கொண்டிருக்கிறார்கள், இது எல்லோருக்கும் சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.நேரடியாக ஆசிரியரிடம் கற்றுக் கொள்வதற்கும்,ஆன்லைன் கல்விக்கும் பெருமளவு வித்தியாசங்களை காணமுடிகிறது. சில தன்னலமற்ற ஆசிரியர்கள் மாணவர்களின் இருப்பிட பகுதிகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகிறார்கள், நமது பாரத பிரதமர் கூட மனதின்குரல் நிகழ்ச்சியில் விழுப்புர மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியைப் பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் இது போன்ற ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் கொள்ளை நோய் பரவிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் தன்னலமற்று பயணித்துக்கொண்டிருக்கிறார்கள், இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக வாழ்ந்து கொள்ளை நோயால் இறந்துபோன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை,சமூகவிடுதலைப் போராளி சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்த தினம் இன்று.தன் வாழ்நாள் முழுவதும் பெண் கல்விக்காக வாழ்ந்து மறைந்த அந்த மகத்தான போராளியை இந்நாளில் நினைவு கூர்வது காலத்தின் கட்டாயம்.
துவக்கம்
இந்தியச்சமூகம் தீண்டாமையாலும் மூடநம்பிக்கையாலும் புரையோடி கிடந்த காலகட்டத்தில் விடிவெள்ளியாக மகாராஸ்ட்ரா மாநிலத்தில் நைகான் என்னும் கிராமத்தில் ஜனவரி 3ஆம் தேதி 1831 ஆம் ஆண்டு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி ஒன்பது வயதிலேயே ஜோதிராவ் பூலேக்கு மணமுடித்து வைத்தனர். பூலே அவர்கள் முன்னெடுத்த சமூக போராட்டங்கள் அனைத்திற்கும் உற்ற துனையாக விளங்கினார். சமூகபோராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் கணவன் மீது தீராதகாதல்கொண்டிருந்தார் சாவித்திரிபாய் பூலே. பூலே தம்பதினருக்கு குழந்தைகள் இல்லாவிட்டாலும் கி.பி 1863 ஆம்ஆண்டு அனாதை விடுதியை தொடங்கி சாவித்திரிபாய் அவ்விடுதியிலுள்ள குழந்தைகளை தன்சொந்த குழந்தைகளைப் போலவே கவனித்து வந்தார். ஒர் இளம் வயது பார்பன விதவையை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றி அவளுக்கு பிறந்த குழந்தையை கி.பி1874 ஆம்ஆண்டு தத்தெடுத்து யஸ்வந்த் என்கின்ற பெயரோடு வளர்த்து வந்தனர்.
கல்வியாளராக
உலகப் புகழ்பெற்ற தாமஸ்பெயின் எழுதிய மனித உரிமைகள்(The rights of man) என்ற புத்தகம் ஜோதிராவ் பூலேவை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குரல் என்பது அவர்கள் பெறப்போகும் கல்வியின் அடிப்படையிலேயே அமையும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால் கி.பி 1846 ல் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றை பூலே தம்பதியினர் துவக்கினர். ஆனால் ஆதிக்க பார்பனர்கள் பொய்பிரச்சாரம் செய்து பள்ளி திறந்த சில தினங்களிலே மூடப்பட்டது. இதனால் வருத்தமடைந்த பூலே தம்பதியினர் அதே அண்டு டிசம்பர் 25 ஆம் நாள் பொது கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து கல்வி கற்கவேண்டியதன் அவசியத்தையும், பெண் கல்வியின் தேவையையும் விளக்கிபேசினர். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திரு பீடே என்கின்ற சமூக பற்றாளர் தன்னுடைய சொந்த வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றிக் கொள்ள பூலே தம்பதியினருக்கு அணுமதி கொடுத்தார். கணவரின் வழிகாட்டுதலின் பேரில் சாவித்திரிபாய் கல்வி கற்றுக் கொண்டார். உலகத்தையே புரட்டிப்போட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான கி.பி1848ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பெண்களின் விடுதலைக்காக இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இந்தியாவில் பெண்களும், சூத்திரர்களும், ஆதிசூத்திரர்களும் கல்வி கற்றுக்கொள்வதற்கு தடையிருந்தன. இதன் தொடர்ச்சியாக 1848ஆம் ஆண்டு பூனேவில் ஒன்பது மாணவிகளோடு பள்ளிதுவங்கப்பட்டு அதன்தலைமையாசியாராக சாவித்திரிபாய்பூலே விளங்கினார். இந்த பள்ளிக்கு சதாசிவகோவந் என்பவர் அகமத்நகரிலிருந்து தேவையான பாடப்புத்தகங்களை அனுப்பி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கி.பி.1851 ஆம் ஆண்டு இஸ்லாமியருக்கு சொந்தமான இடத்தில் இரண்டாவது பள்ளியை தொடங்கினர். இதன்மூலம் இந்தியாவின் முதல்பெண் ஆசிரியராக விளங்கிய சாவித்திரிபாய் சொல்லென துயரத்திற்கு ஆளானார். தினந்தோறும் பள்ளிக்கு சென்றுவரும்பொழுது சில சமூகவிரோதிகளால் கற்கலாலும்,சானத்தாலும் தாக்கப்பட்டார்.
ஆனாலும் மனஉறுதியோடு பள்ளிக்குச்செல்லும்போது மாற்றுஉடையை எடுத்துச்செல்வார் தான்உடுத்தியிருந்த உடை சானத்தால் அசிங்கப்படுத்தபட்ட நிலையில் மாற்று உடையை அணிந்து கொண்டு ஏற்கனவே உடுத்தியிருந்த உடையை பள்ளியிலேயே துவைத்து உலரவைப்பார், மீண்டும் மாலை விடு திரும்பும் போதும் காலையில் நடந்ததாக்குதல்கள் மாலையிலும் நடக்கும். பின்பு வீட்டிற்கு வந்ததும் உலர்ந்த ஆடையை உடுத்திக்கொள்வார். இவ்வாறு பலதுயரங்களை தாங்கிக்கொண்டு தன்வாழ்நாள்முழுவதும் பெண் உரிமைக்காகவும், பெண்கல்விக்காகவும் போராடிவந்தார். தாங்கள்ஆற்றிய கல்விப்பணிக்காக கி.பி1852ஆம்ஆண்டு சாவித்திரிபாயும், ஜோதிராவும் அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கி.பி1853 பிப்ரவரி 12ந்தேதி பூலேவின் பள்ளி பொதுமக்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு சிறுமிகள் மகிழ்ச்சியாக எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள். கி.பி.1855 ஆம் ஆண்டு ”தியானோதயா” பத்திரிக்கையில் முக்தாபாய் என்ற பதினொன்று வயது சிறுமி எழுதிய கட்டுரை அந்த காலத்தில் சமூக ஒடுக்குமுறை எவ்வாறிருந்தது என்பதையும் அதிலிருந்து பெண் குழந்தைகளை மீட்டெடுக்க சாவித்திரிபாய் பூலேவின் தியாகத்திற்கும் சான்றாக விளங்குகிறது.
சமூகப் போராளியாக
ஒரு பெண் கல்வி பெற்றால் தன்வீடும், நாடும் கல்விபெறும் இதன்மூலம் சமூகம் விடுதலைபெறும் என்கின்ற ஜோதிராவின் கனவை நனவாக்க அடித்தளம்மிட்டவர் சாவித்திரிபாய்பூலே. பார்பனிய சாதிஎதிர்ப்பு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சடங்குமறுப்பு திருமணத்தை கி.பி1873ஆம்ஆண்டு டிசம்பர்25ந்தேதி மனைவியை இழந்த இளைஞருக்கும் தனது நெருங்கிய தோழியின் மகளுக்கும் திருமணத்தை நடத்திவைத்தார். விதவையின் மறுமணத்தை ஆதரித்தும், விதவை பெண்களின் தலையை மொட்டையடிக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகநாவிதர்களை ஒன்றுதிரட்டிகி.பி1860ல் மாபெரும்போராட்டங் களைநடத்தினார்.மேலும் ஒடுக்கப்பட்டமக்கள் பொதுகிணற்றை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டநிலையில் தன்வீட்டுகிணற்றை பயன்படுத்திக்கொள்ளஅனுமதித்தார். கணவருக்கு அவர் எழுதிய கடிதங்களில் இந்த தேசத்தையும்,மக்களையும்,அவர்கள்படுகின்ற துன்பங்களையும் பகிர்ந்துகொண்டு அதற்கான தீர்வுகளையும் முன் வைத்து எளிய மக்களின் விடுதலைக்காக முன்னின்றார். சமயசடங்குகளை புறந்தள்ள தன்கணவர் ஜோதிராவின் சிதைக்கு தீ மூட்டி மிகப்பெரிய சமூகப்புரட்சிக்கு வித்திட்ட முதல் பெண்மணி சாவித்திரிபாய் என்றுகூறினால்மிகையாகாது.
எழுத்தாளராக
ஒரு சமூகபோராளியாக விளங்கிய சாவித்திரிபாய் பூலேசிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். ”கவிதைமலர்கள்”என்கின்ற தலைப்பில் கி.பி1854ஆம் ஆண்டு தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார், அந்த கவிதைகளில் சமூகஒடுக்குமுறைகளுக்கு உள்ளான மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது.
“இனியும் வேண்டாம் சோம்பல்
புறப்படு,கல்விபயில்
அடக்கப்பட்டவர்களின், கைவிடப்பட்டவர்களின்
துயரங்களுக்கு முடிவுகட்டு,
நீ கல்வி பயிலப் பொன்னான வாய்ப்பு
வந்திருக்கிறது
சாதி விலங்குகளை உடைத்தெறியக்
கல்வி பயில்
பார்பன சாஸ்திரங்களை தூர வீசு”
மேற்கண்ட கவிதையே சாவித்திரிபாய்பூலேவின் சமூகசிந்தனைக்கு எடுத்துகாட்டாக அமைகின்றது. இரண்டாவது கவிதைதொகுப்பாக ஜோதிராவின் வாழ்க்கைவரலாற்றை “தூய முத்துக்களின் கடல்” என்றதலைப்பில்வெளியிட்டார் மேலும் “கடன்” என்ற தன்னுடைய கட்டுரையில் கடன் வாங்கி பண்டிகை கொண்டாடுவது குறித்தும் இதன்மூலம் மக்கள் கடனாளியாக மாறுவதுகுறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். தன்வாழ்நாள் முழுவதும் சமூகத்தைபற்றி சிந்தித்தும்,எழுதியும் வந்துள்ளார்.
முடிவு
தன்வாழ்நாள் முழுவதும் சமூகவிடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட மக்களுக்காகவும் வாழ்ந்துகொண்டிருந்த சமூகவிடுதலைப் போராளி சாவித்திரிபாய்பூலே அவர்கள் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைபுரிந்து வந்த வேளையில் கொள்ளைநோயால் மார்ச் 10 ந்தேதி கி.பி1897 ஆம் ஆண்டு இம்மண்ணுலகத்தைவிட்டு மறைந்தார். சமூக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் சாவித்திரிபாய்பூலே முன்னெடுத்த சமூகபோராட்டங்களை பின்பற்றுவதன்மூலம் ஒருசமத்துவமான இந்தியாவைகட்டமைக்க முடியும்.
தோழமையுடன்…
கு.காந்தி