சாவ்பாடி - சரிதா ஜோ- பூங்கொடி பாலமுருகன் | Savpadi - book review

சிறார் கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், 700க்கும் மேற்பட்ட கதை சொல்லல் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர், 15க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் என்ற சிறப்புடைய சரிதா ஜோ அவர்களும் முன்னாள் கல்லூரி விரிவுரையாளரும் தேர்ந்த கதை சொல்லியாளரும் மேடைப்பேச்சாளரும் தங்க மங்கை விருது போன்ற விருதுகளைப் பெற்றவருமான பூங்கொடி பாலமுருகனும் இணைந்து எழுதி இருக்கும் மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரைகளும் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரைகளும் அடங்கிய மருத்துவக் கட்டுரைத் தொகுப்பு நூல் இது. நூலின் அட்டைப்பட வடிவமைப்பும் நூல் உள்கட்டமைப்பும் மிகச் சிறப்பு.

உலகம் சிறப்புற இயங்க அடிப்படைக் காரணியாகவும் உந்து சக்தியாகவும் திகழும் பெண்கள் தங்களின் உடல்நலத்தின் மீதான அக்கறையை, அவசியத்தை உணர வைக்கும் கட்டுரைத் தொகுப்பு. உயிரினங்களில் பெண் தனித்துவமான படைப்பு. புதிய உயிர்களைப் படைக்கும் ஆற்றலும் அவற்றைத் திறம்பட வளர்த்து ஆளாக்கும் பொறுப்புணர்வும் கொண்டு சிறப்பான வாழ்வுப் பாதையைக் கட்டமைக்கும் பெண்களின் உடல் அமைப்பும் ஆரோக்கியமும் ஆண்களின் உடலோடும் ஆரோக்கியத்தோடும் ஒப்பிடுகையில் மிகவும் கடினமானதும் சிக்கலானதும்கூட.

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் குடும்பத்தின் மற்றவர்களை கவனிப்பதற்கான நேரத்தையும் வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலையின் மீதான கவனத்தையும் வைத்துக் கொண்டு தங்களது உடல் நலம் தொடர்பான ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டு விடுகின்றனர். இன்றைய காலகட்டங்களில் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியிலும் பெண்கள் தங்களது தொடர் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வில் தங்களது உடல் நலத்தின் மீது மிகுந்த கவனம் கொள்ளுதல் அவசியமாகிறது. சரியான உணவு முறைகள் சரியான தூக்கம் சரியான ஓய்வு என்ற சரிவிகித நிலையை எந்தப் பெண்களும் எட்ட முடிவதில்லை.

பெண்களைத் தனித்து காட்டக்கூடிய தாய்மை என்ற வரத்தை அளிக்கக்கூடிய மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று மாதவிடாய் நிகழ்வு. அந்த நிகழ்வுகள் குறித்து பெண்களுக்கு போதிய அளவிலான முழுமையான விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் அது குறித்தான கருத்துகளையும் அது தொடர்பான செய்திகளையும் ஆண்களுக்கும் கடத்துதல் இன்றைய காலகட்டத்தின் அவசர அவசியம்.

வெறும் மாதவிலக்கு என்ற வார்த்தைக்குள் பெண்களைத் தனித்து வைத்து அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக தீட்டுப்பட்டவர்களாக ஒதுக்கி வைத்திருக்கும் பழைய சமுதாய நிகழ்வுகள் இன்றும் நிறைய இடங்களில் தொடர்வதை நூல் சுட்டிக் காட்டுகிறது. மாதவிடாய் தொடர்பான வேத விளக்கங்கள், பெண் தெய்வங்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது தொடர்பான செய்திகள், மனு தர்மத்தில் மாதவிடாய் பற்றிய குறிப்புகள் என ஆதிகாலம் தொட்டு பெண்கள் மாதவிடாய் என்ற நிகழ்வைக் காரணம் காட்டி எவ்விதம் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர் என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

உலகத்தின் ஒரே இந்து நாடான நேபாளத்தின் உள்ளடங்கிய கிராமங்களில் இன்றும் பெண்களை 4* 3 என்ற அளவிலான சிறிய குடிசைக்குள் தங்க வைக்கப்பட்டு தீண்டத் தகாத நிலையில் அவர்கள் நன்கைந்து தினங்கள் தனித்துவிடப்படுகின்றனர். ஆள் நுழையக் கூட இடமில்லாத இருட்டு அறையில் ஒருவர் நிற்பதற்கு மட்டுமே ஆன இடத்தில் மூன்று நான்கு ஐந்து மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் கடும் குளிரிலும் இருட்டிலும் காற்றோட்டமின்மையிலும் அடைக்கப்பட்டு வைக்கப்படும் நிகழ்வை சாவ்பாடி என்கிறார்கள். இன்றும் இதுபோன்ற செய்திகளை வாசிக்க நேர்கையில் வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில் பெண்களுக்கான தனித்துவம் எப்படி எல்லாம் தீண்டத்தகாமைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் உணர நேர்கிறது.

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு பொது இடங்களில் ஆண்களிடம் குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தல் அவசியம். அப்போதுதான் பெண்களின் உடல் அமைப்பையும் உடல் தொடர்பான நிகழ்வுகளையும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் வேதனைகளையும் ஆண்கள் உணர்வார்கள். அந்த வகையில் மாதவிடாய் தொடர்பான சுகாதார மேம்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வும் மாதவிடாய் பற்றிய மூடநம்பிக்கைகளை எப்படி நாம் எதிர்கொள்ள வேண்டிய காலச் சூழலில் வாழ்கிறோம் என்பது குறித்தான தகவல்களும் நூல்களில் சிறப்புற தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலோடு தொடர்புடைய கவிதையைப் பகிர்வதில் சமூகத்தின் போக்கையும் வெளிப்படுத்துகிறது இரா.பூபாலன் எழுதிய உரக்கக் கேட்டல் கவிதை.
மருந்துக் கடைகளில்
உரக்கவே கேட்பேன்
தூமைப் பஞ்சின் பெயர் சொல்லி
மளிகைக் கடையில்
உறையிடப்படும்
கருப்பு பழுப்பு தாள்களைத்
தவிர்த்து விடுகிறேன்
தோழிகள் யார் கேட்டும்
வாங்கி வந்து விடுகிறேன்
சமயங்களில் வெறும் கையில்
புத்தகத்தைத் தூக்கி வருவது போல குழந்தையை ஏந்தி நடப்பது போல
தூக்கி வந்திருக்கிறேன்
மதுப் போத்தல்களை
அரிவாள் கத்திகளை
உள்ளாடையையும் கூட
பெருமையாகக் காட்டித் திரியும்
நமக்கு
அத்தியாவசியத்தை
மறைக்க யார் சொல்லித் தந்தது
இன்றும்
உணவகக் கழிவறையிலிருந்து வெளிவந்தவள்
செய்தித்தாளில் அதைச் சுற்றி
என்னிடம் தந்த போது
தூரத்துக் குப்பைத்தொட்டிக்குத்
தூக்கி வந்து எறிந்தேன்
அற்பமென
அசூசையெனப் பேசிய ஒருவனின் முகத்தில் தான் விழுந்து இருக்க வேண்டும் அது.
(ஹோ என்றொரு கவிதை நூல்)

மார்பகப் புற்றுநோய் தொடர்பான கட்டுரையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள், அதன் அபாய காரணிகள், சுயபரிசோதனை செய்து கொள்வது எப்படி, அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகள், மருத்துவ சிகிச்சை முறைகளில் வழிமுறைகள் என ஒரு முழுமையான மருத்துவ கையேடாகவே இக்கட்டுரை விரிகிறது.

மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். மிகக் குறைந்த பக்கங்களில் நூல் எழுதப்பட்டிருப்பினும் சொல்ல வந்த கருத்துக்களை முழுமையாகச் சொல்லி சமுதாயத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியம் பேணுவது தொடர்பான விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்த முயன்றிருக்கிறது. அதே சமயம் இதை வாசிக்கும் ஒவ்வொரு மனிதரும் தனது தோழிகளை, அம்மாவை, மனைவியை தங்கைகளை, தான் சார்ந்த பெண்களின் மீதான புரிதலையும் புலப்படுத்திக் கொள்வதற்கும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும் நூல் வழிவகை செய்கிறது.

பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் 36 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி இன்று பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பேராசிரியர் சோ மோகனா அவர்கள் மார்பகப் புற்றுநோய் தாக்கப்பட்டு வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டு வந்ததற்கு பிறகு தினமும் 200 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பது இக்கட்டுரையை வாசிக்கும் போது நினைவுக்கு வருகிறது. அவரின் வழியாகவும் இந்நூல் கூறும் கருத்துக்கள் பெண்களுக்கு மிகச் சிறப்பான ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

நூலின் தகவல்கள் 

நூல் : சாவ்பாடி

ஆசிரியர் : சரிதா ஜோ, பூங்கொடி பாலமுருகன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு டிசம்பர் 2023

பக்கம்  : 32

விலை : ரூ.35

தொடர்புக்கு  : 44 2433 2924

 

எழுதியவர் 

 

 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “சாவ்பாடி – நூலறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *