விளாதிஸ்லாவ் தித்தோவ். இவர் எழுத்தையே தொழிலாகக் கொண்டவர் அல்ல. ஒரு சுரங்கத் தொழிலாளி. தன்னுடைய காதல் திருமணம் முடிந்து, விடுமுறையில் கோடைவாசஸ்தலம் செல்வதற்காக நிறுவனத்திடம் விடுப்பு கோரி அனுமதியும் பெற்றுவிட்டார். பணிநேரம் முடிந்து புறப்படும் சமயத்தில் சுரங்கத்தில் ஒரு மாபெரும் விபத்து நிகழ இருப்பதை தன் கண்ணால் காண்கிறார்.
சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் காரணமாக மின்னோட்டத்தில் முறிவு ஏற்பட்டு மின்பொறி வெள்ளைத் தீ பற்றி எரிவதுபோல குபீரென்று எரிகிறது. நீல நெருப்புப் பாம்பு உக்கிரமாகச் சீறியவாறு மின்மட்ட மாற்றியை (transformer-ஐ) நோக்கிக் கம்பி வடத்தில் ஊர்ந்து செல்கிறது. இன்னும் சில வினாடிகளில் அது மின்மட்ட மாற்றி அறையை அடைந்துவிட்டால், மாபெரும் விபத்து ஏற்பட்டு சுரங்கமே தகர்ந்து மண்ணோடு மண்ணாகிவிடும்.
விளாதிஸ்லாவ் தித்தோவ் மின்மட்ட மாற்றி அறைக்குப் பாய்ந்து ஓடி, மின்னோட்டத்தை தன் இரு கைகளாலும் தடுத்துநிறுத்த முயற்சிக்கிறார். மின்னோட்டம் நின்றுவிட்டது. ஆனால், ஆறாயிரம் வோல்ட் மின்சாரம் அல்லவா? அவர் தூக்கி எறியப்படுகிறார். இரண்டு கைகளும் ஒரு காலில் பாதமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டது.
அதன்பின் தித்தோவுக்கு என்ன ஆயிற்று என்பதுதான் இந்த நவீனம். வீரம் விளைந்தது நாவலின் கதாநாயகன் பாவல் கர்ச்சாகின் எப்படி அதன் ஆசிரியர் நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் தன்வரலாறோ, அதேபோன்றுதான் இந்தக் கதையின் நாயகன் ஸெர்கேய், விளாதிஸ்லாவ் தித்தோவின் தன் வரலாறாகும்.
எப்படி நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி வீரம் விளைந்தது நாவலை தன் கண்களை இழந்தபிறகு, எழுதினாரோ அதேபோன்று தித்தோவ், தன் கைகளை இழந்தபிறகு, தன் பற்களைக் கொண்டு எழுதிய நவீனம்தான் சாவுக்கே சவால்.
விபத்திற்குப்பின் ஸெர்கேய் (விளாதிஸ்லாவ் தித்தோவ்) கைகள் இரண்டும் அடுத்தடுத்து வெட்டி எடுக்கப்படுகின்றன. அதன்பின் கால்களில் ஒன்றையும் வெட்டி எடுக்க வேண்டுமோ என்கிற நிலை. எனினும் மருத்துவரின் கூர்மதியால் பாதங்கள் மட்டும் சரிப்படுத்தப்பட்டு சற்றே ஊனமுற்ற நிலையுடன் ஸெர்கேய் தப்பித்துவிடுகிறான்.
ஸெர்கேய்க்கு அனைத்துவிதங்களிலும் உற்றதுணையாக கதாநாயகி தான்யா விளங்குவாள்.
அந்த நவீனத்திலிருந்து சில பொறிகள்:
“லேசாக நரையோடத் தொடங்கிய முடியினனான இந்த இளைஞனும் இருபது வயது யுவதியும் மனித சக்திக்கு மீறிய கொடிய வேதனையையும் துன்பங்களையும் பட்டுக்கடந்தபின், படிகம்போன்ற தூய்மையும் அசாதாரண மென்மையும் மனிதாபிமான மாண்பும் திகழும் உணர்ச்சிகளை ஒருவர்மேல் ஒருவர் நிலையாகக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதே கடினமாய் இருந்தது.”
“சிலருக்குக் கைகளும் கால்களும் ஒரு குறைவும் இல்லாமல் இருக்கின்றன. இருந்தாலும் அவர்களுக்குள் ஒத்த உணர்வு ஏற்படுவதே இல்லை. ஒருவர் வாழ்க்கையை மற்றவர் உருப்பட விடாமல் செய்துவிடுகிறார்கள். அதிலும் விஷயம் என்னவென்றால் … அவர்கள் இதைக் கவனிப்பதே இல்லை…“
“வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் இனியது. அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் சரியே. வாழ்க்கை, மேம்பாடு வரும் என்னும் இடையறாத நம்பிக்கை. மேம்பாடு என்பது, பொருள் வளம் என்று சிலர் நினைக்கிறார்கள், உளநெறித் திருப்தி என்று வேறு சிலர் எண்ணுகிறார்கள். பின்னும் சிலரோ – இவர்கள்தாம் பெரும்பான்மையினர் – இந்த இரண்டுமே என்று கருதுகிறார்கள். மனிதர்களை வேறுபடுத்துவது இந்தப் பிரச்சினைதான். அவர்களுடைய செயல்களில் முதன்மை பெறுவது உளநெறித் திருப்தியா அல்லது பொருள் வளமா? இதிலிருந்து பின்வரும் கருத்து உருவாகிறது.
சிலர் வாழ்வதை விரும்புகிறார்கள், வேறுசிலர் வாழ்க்கையை விரும்புகிறார்கள். சிலர் சொல்கிறார்கள்: “நான் மூச்சு விடுகிறேன், எனவே இயங்குகிறேன் என்று ஆகிறது”. மற்றவர்களோ, இப்படிச் சொல்கிறார்கள்: “நான் மக்களுக்குப் பயன்படுகிறேன், எனவே வாழ்கிறேன்” ஆனால், இரு வகையினரில் எவருமே சாக விரும்புவதில்லை. முதல் வகையினர் சுகமே வாழலாம் என்று நம்புகிறார்கள். இரண்டாம் வகையினரோ, நாம் மக்களுக்குத் தேவைப்படுகிறோம் என்னும் உணர்வால் பெருமைசான்ற மகிழ்வு அடையலாம் என்று நம்புகிறார்கள்.”
“நாம் அனுபவித்தவை, ஆழ்ந்து உணர்ந்தவை எல்லாவற்றையும் நமக்குள்ளேயேமூடி வைத்துக்கொண்டிருப்பது கடினம்.”
“நமது சிந்தனைகளை மக்களின் விரிவான குழுவுக்குத் தெரிவிக்காதிருப்பது, அவற்றை மக்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது சகிக்கமுடியாததாகிவிடும் காலமும் வரும். அப்போது மனிதன் காகிதத்தின்பால் ஈர்க்கப்படுவான். உன் விஷயத்திலும் இதற்கு வாய்ப்பு உண்டு என்பதை மறந்துவிடாதே, ஸெர்கேய்.”
கதையில் வரும் தோழர் யெகோரவிச், ஸெர்கேய்க்குக் கூறும் அறிவுரை இது. இந்த அறிவுரையை அப்படியே உள்வாங்கிக்கொண்டு ஸெர்கேய் என்னும் விளாதிஸ்லாவ் தித்தோவ் தன் வாழ்க்கை அனுபவங்களை, தன் பற்களால் நமக்காக எழுதிய கதைதான் சாவுக்கே சவால்.
நம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நாவல் சாவுக்கே சவால்.
…..