மிக சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் திரு.சா.கந்தசாமி அவர்களால் எழுதப்பட்ட அதி அற்புதமான படைப்பே இந்த ” சாயாவனம்”.
புளியந்தோப்பில் தொடங்கும் கதை, புளி கேட்டு நிற்கும் கடையில் நிறைவடைவதே சாயாவனம். சிறுகதைக்கான முத்தாய்ப்பு இறுதியாக நாவல் நிறைவடைவதே இந்நாவலின் சாதனையாக அடியேன் கருதுகிறேன்.
தேவையற்ற விவரணைகள் ஏதுமின்றி மிக மிக யதார்த்தமான நடையில் அமைந்த புதுமைமிகு நாவலே இது. வனம் சார்ந்த கதையாக இருந்தபோதிலும் கவிமிகு வருணனைகளைக் குறைவாக தந்து நம்மனக்கண்ணில் காட்சிகளை விரித்து நம்மை கவி புனைய முயற்சித்துள்ளார் எனலாம்.
சின்னஞ்சிறு குழந்தையாக, வாழவழியின்றி ஓடிப் போன ஏழைத்தாயின் மகனான சிதம்பரம், வளர்ந்து வாட்டசாட்டமான இளைஞனாகி, மாபெரும் தனஞ்செயனாக மீண்டும் பிறந்த ஊருக்கு வந்து கனவுத்தொழிலை மேற்கொள்ள எடுக்கும் முயற்சியே கதை.
கரும்பு ஆலை அமைத்து வெல்லம் காய்ச்ச நினைக்கும் அவனது முயற்சி பலித்ததா??? அதற்காக அவன் பலியிட்டவை என்னென்ன?? என்பதை நாவலைப் படித்தறிவதே சாலச்சிறந்தது. பத்தாம்பசலித்தனமாக அவன் மேற்கொண்ட செய்கைகளை, எவ்வித மனசஞ்சலமின்றி அவன் நடந்து கொண்ட விதங்களை மிகத் தத்ரூபமாக பிரதிபலிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் அவர்கள்.
கலியபெருமாள், பழனியாண்டி என்ற இரு சிறுவர்களின் துணையுடன் மாமா முறையான சிவனாண்டித் தேவரின் வழிகாட்டலுடன் வனத்தைத் திருத்தி ஆலை அமைக்கும் முயற்சியில் தன்னந்தனியாக போராடும் சிதம்பரத்தின் உழைப்பு நம்மை கண்ணீர் சிந்த வைக்கக் கூடியதே…
“இலைமறைக் காயாக”, “வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல” போன்ற பொன்மொழிகளுக்கெல்லாம் தேர்ந்ததோர் உதாரணமே இந்த “சாயாவனம்” நாவல் என்று உறுதிபடக் கூறலாம். “காடு வெட்டி கழனி அமைத்தல்” என்று எளிமையாக நாம் கடக்கும் செயலின் துயரங்களை வியர்வையும் ரத்தமும் சிந்த அனலும் வெக்கையும் தாகமும் தகிக்க தகிக்க நாவலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.
அழிப்பது வனதேவதைகளின் இருப்பிடமென்றோ… அழிவது வனவிருட்சங்களின் உச்சமென்றோ அறிந்தும் அறியாதது போல சிதம்பரம் மேற்கொள்ளும் செயல்களின் வழியே வனப் பாதுகாப்பை காட்சிப்படுத்த முயன்றுள்ளார் சா.கந்தசாமி அவர்கள்.
தெரிந்த நாவல் - தெரியாத செய்தி | சாயாவனம்: பின்னும் முன்னும் | தெரிந்த  நாவல் - தெரியாத செய்தி | சாயாவனம்: பின்னும் முன்னும் - hindutamil.in
எவ்வித குற்றவுணர்வும் துளியும் தமது நெஞ்சில் படரவிடாமல் வனம் முழுவதும் படர்ந்துள்ள படர்கொடிகளை அலக்கை கொண்டு அறுக்கும் சிதம்பரத்தின் கரங்கள் வழியே சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தைத் தானே பட்டைத்தோலூரித்துக் காட்டத் துணிந்துள்ளார் எழுத்தாளர்.
புதிதாக கிராமத்திற்கு வந்த பணக்காரன் மீது குவியும் ஊர்மக்களின் பார்வையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி நம்மை திகைக்க வைக்கிறார்.  தாசிகளின்  இயல்பான நடத்தைகளை பதிவிடுவதுடன் நில்லாமல் அவர்கள் படும் அவலத்தையும் காட்ட முயன்றுள்ளமை கவனத்திற்குரியதே…
சிவனாண்டித் தேவருக்கும் சிதம்பரத்திற்குமிடையே நடைபெறும் உரையாடல்கள் யாவுமே தலைமுறை இடைவெளிகளை பட்டவர்த்தனமாக காட்டும் வண்ணம் அமைந்துள்ளதோடு எள்ளலுடன் கூடிய தன்மானத்தைச் சீண்டும் வகையிலும் அமைந்துள்ளன எனலாம். சிற்சில இடங்களில் இருவருமே வளைந்து கொடுப்பது உறவின் பாசப்பிணைப்பால்தானோ என புரியும்பொருட்டு காட்சிப்படுத்திய விதம் நயமிக்கது.
இறுதிவரை தனது வைராக்கியத்துடன் எதை பற்றியும் துளியும் அலட்டிக் கொள்ளாமல் சிதம்பரம் எடுக்கும் முயற்சிகள் யாவும் கம்பீரமானதுதானே.  அன்றைய காலகட்டத்தில் இருந்த பணத்தின் மதிப்பை(?)க் காட்டும் காட்சிகள் ரசிக்கத்தக்கவை. நெல் விளையும் பூமியில் கரும்பு விளையுமா? கரும்பு ஆலை ஜெயிக்குமா? என்ற சிந்தனையினூடே இயற்கையின் பெருங்கொடை அழிவுப் பாதையில் மங்கி மறைவதை வெகு லாவகமாக கடத்தியுள்ளார் நம் மனக்கண்களில்.
சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸின் பங்கை நாவலினூடே இழையோடும் வண்ணம் அமைத்து, அதிலும் சிதம்பரத்தின் செல்வச் செழிப்பை வழியவிட்டிருப்பது புதுமைதானே! அக்கால திருமணச் சடங்கு முறையை படம்பிடித்து காட்டியுள்ள விதம் அருமை. அதிலும் குறிப்பாக சிவனாண்டித் தேவர் குடும்பத்தில் பெண்களின் (குஞ்சம்மா பாப்பா) முக்கியத்துவத்தைக் காட்டியவிதம் போற்றுதலுக்குரியது.
எதை நோக்கி கதை நகர்கிறது என்பதை புரிந்தும் புரியாத வகையில் காட்சிகளைக் கோர்த்து நம்மை வனத்தினூடே பயணிக்க வைத்து புகைமண்டலத்தில் சிக்கித் திக்கி திணற வைத்து கல்யாண விருந்து பரவசத்தில் மிதக்கச் செய்து புளியமரத்தின் தித்திப்பை புளிப்புச் சுவையுடன் நிறைவு செய்துள்ளார் எழுத்தாளர்.
இங்ஙனம் இச்சின்னஞ்சிறு நாவலில் விரியும் சிந்தனைகளோ ஏராளம். அவற்றை இயன்றளவு தொகுத்தளிக்க  முயன்றுள்ளேன்.வனத்தின் பேரெழிலை ரசிக்க மறுத்து கரும்புச் சாறாக்கி  வெல்ல பாகாக்கி தந்த சிதம்பரத்தின் கையறுநிலையிலேயே யானும் நின்று நிறைவு செய்கிறேன் நித்திலமாக!
முப்பது வயதிற்குள், 1970 ஆம் ஆண்டுகளிலே புறவுலகில் பெரிதும் பேசப்படாத மகத்தான சூழலியல் கருத்தை முன்வைத்து அதி அற்புதமான படைப்பை உருவாக்கித் தந்த சா.கந்தசாமி அவர்களின் தனித்தன்மை போற்றுத்தலுக்குரியது தானே…
அதனால்தான் இறந்தும் வாழ்கிறார் “சாயாவனமாக!”
நல்லதோர் படைப்பு.வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
“சாயாவனம்”
சா.கந்தசாமி.
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்: 160
₹.160.
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *