நூல் : பள்ளிக் கூடத் தேர்தல்

நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் ….

தேர்தல் என்றாலே நமக்குள் ஒரு பரபரப்பு வரும் , அதன் இறுதியில் ஒரு சலிப்பும் வரும் … ஆனால் இந்த நூல் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பரபரப்பையே நமக்குள் ஏற்படுத்தி சிந்திக்க வைக்கிறது.

நூலாசிரியர் பேரா. நா.மணி அவர்கள் ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்கம் உயிர்ப்புடன் இயங்குவதற்கு மிகப் பெரிய காரணமானவருள் ஒருவர் எனது நண்பரும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

இந்நூல் பாரதி புத்தகாலயத்தால் 2010 இல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களைப் பற்றிய நல்ல புத்தகங்களைத் தேடி…. என்ற கருத்துக்கு பொருந்தும் வகையில் எழுதப்பட்ட இந்நூலின் விலை ரூபாய் 20 மட்டுமே. .. மொத்தப் பக்கங்கள் 48 மட்டுமெனில் பாருங்களேன் …
இனி நூலின் உள்ளே ….

இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற நல்லாசிரியர் விருது , எத்தனை நல்லாசிரியர்களைச் சென்றடைகிறது ?உண்மையில் நல்லாசிரியரைச் சென்றடைகிறதா ? நல்ல ஆசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா ?மாணவரர ? என்ற கேள்விகளுக்குரிய கருத்துகளை முன் வைக்கிறது இந்த நூல் ….

இந்தப் புத்தகம் 5 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஆசிரியர்களை அக்கு வேர் , ஆணிவேராகப் பிரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னையே சுய மதிப்பீடு செய்வதற்காகத் தான் இப்பரீட்சார்த்த முயற்சியை சிந்திக்கிறார். இது எல்லோருக்கும் பொருந்தும் , நம்மில் பலர் மாணவனுக்குப் பிடித்த ஆசிரியராக இருப்பதற்குக் காரணம் , மாணவரின் நம்மைப் பற்றிய மதிப்பீட்டை தொடர்ந்து அறிந்து அதன் வழியே நம்மை மாற்றிக் கொள்வோம்.

ஆசிரியரே முதல் அத்தியாயத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள ” எனது குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன் , நீங்களே என்னைப் பற்றி தீர்ப்பெழுத சரியான நடுவர்கள் ” என்று ஒரே ஒரு ஆசிரியர் வகுப்பறையில் சொல்லத் துணிந்தால் இந்நூல் பெரு வெற்றி பெற்றதாகக் கொள்வேன் …. ஆயிரம் ஆசிரியர்கள் இன்று இருக்கிறார்கள் … கவலை வேண்டாம் , நானே அதற்கு ஒரு உதாரணம் .

சரி ,இனி இரண்டாவது அத்தியாயத்தில் …… அந்த கருத்துக் கணிப்பை பொதுமைப் படுத்தி கல்லூரியில் தன் வகுப்பில் படிக்கும் மாணவரிடம் இதுவரை நீங்கள் படித்த பள்ளியில் உங்களுக்குப் பிடித்த நல்லாசிரியர் யார் என எழுதித் தாருங்கள் என்று குறிப்பிட , வந்ததே பதில்கள் ….ஆச்சர்யமூட்டும் வகைகளில் …

ஆம் , அடிக்கக் கூடாது என்று சட்ட மிருந்தாலும் எங்கள் ஆசிரியர் அடிப்பார் , அவரைத் தான் என மிகப் பிடிக்கும் என்கிறார் ஒரு மாணவர் , புவி வெப்பமடைதலில் இருந்து பூமியைக் காக்கப் புறப்பட்ட ஒரு ஆசிரியரை நல்ல ஆசிரியராகத் தேர்வு செய்த மாணவி , பொதுத் தேர்வின் போது 3.30 மணிக்கு எழுந்து எங்களுக்காக வீட்டிலிருந்தே யே காபி போட்டு எடுத்து வந்து மாணவர்களை எழுப்பி அவர்களுக்குத் , தரும் ஆசிரியர் மாணவர் மனதில் இடம் பிடித்துள்ளாரே , எங்கள் வகுப்புக்கே வராத ஆசிரியர் ஆனால் எனக்கு மிகப் பிடிக்கும் , என் வகுப்பிற்கு வரமாட்டாரா என ஏங்குவோம் என்று எழுதிக் கொடுத்த மாணவர்கள் , அரசாங்கப் பணியே இல்லாமல் பெற்றோர் ஆசிரியக் கழகத்தின் மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்ற போதும் மாணவர் மனதைக் கொள்ளையடித்த ஆசிரியர் .

நண்பராகப் பழகும் ஆசிரியர் , சிறந்த மாணவனுக்கு சொந்த செலவில் பரிசு தந்த ஆசிரியரைப் பிடிக்கும் , சரிசமமாக அனைவரையும் நடத்திய ஆசிரியரே என்னை மிக பாதித்த நல்லாசிரியர் என்கிறான் ஒரு மாணவன் , பாடத்தில் ஒன்ற வைத்து மனதைப் புரிந்து பாடம் நடத்துவார் என்று ஒரு மாணவன் , மாணவரைத் தயார் படுத்தி அவர்களையே பாடம் நடத்த வாய்ப்பு தரும் ஆசிரியரையே எனக்குப் பிடிக்கும் என்கிறார் ஒரு மாணவர் , என் ஆசான் தாய்க்கு நிகராக அன்பு செலுத்தியதால் அவரையே பிடிக்கும் என்கிறார் ஒரு மாணவர் .

மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க மாதிரி தேர்தல்! ஆர்வமுடன் வாக்களித்த  மாணவர்கள்! | cuddalore | nakkheeran

எங்கள் ஆசிரியர் தந்த உத்வேகத்தால் எந்த சோகத்தையும் என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது என்ற மாணவன் கூட உண்டு. லீவு எடுக்க மாணவரிடம் அனுமதி கேட்ட ஆசிரியர், சமூகம் சார்ந்த போர்க்குணம் மிக்க ஆசிரியர் , நாட்டு நடப்பைப் பேசும் ஆசிரியர் , கட்டிப்புடி வைத்தியம் செய்யும் ஆசிரியர் , பண விஷயத்தில் கட்டணம் வசூலிக்கும் போது ஒரு ரூபாயைக் கூட தேவையின்றி அவரும் தரமாட்டார் , எங்களிடமும் வாங்க மாட்டார் கறார் ஆசிரியர் என்று வசூல் ராஜா வாத்தியாரை மிகப் பிடிக்கும் என ஒரு மாணவர் குறிப்பிட ….

மூன்றாம் அத்தியாயத்தில் இந்த மாணவரை அவர்கள் விரும்பிய நல்லாசிரியர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு , அதில் ஏற்படும் சவால்களை சந்தித்து ஒரு வழியாக அந்த ஆசிரியர்களைத் தங்கள் பெருமை உணரச் செய்துள்ளார் நூலாசிரியர் .அதைப் படிக்கும் போது உடல் , மனம் இரண்டும் சிலிர்க்கிறது.

இறுதி அத்தியாயம் வாசிப்பும் வழிகாட்டலும் என்று தலைப்பிட்ட பகுதியில் ஆசிரியர்கள் தங்களை அறிவியல் பூர்வமாக அல்லாமல் நீதி நெறிமுறைகளை மையமாக வைத்தே என்று தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.

ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க அலுவலர்களுக்கு கேரளாவில் பயிற்சி முகாம் ஒன்று 2008 இல் நடத்தப்பட்டது. அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அங்கு இயக்க செயல்பாடுகளுக்காக புத்தக விற்பனையின் கழிவே பணமாகக் கிடைக்கிறது என ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பயிற்சி மையப் பதிவாளர் கூறினார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் புத்தக விற்பனையைத் துவங்க முதலில் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் வெறும் 54 ரூபாய்க்கு விற்ற அனுபவத்தையும் , வாரச் சந்தையில் 3 மணி நேரத்தில் 4600 ரூபாய்க்கு விற்ற அனுபவத்தையும் பதிவு செய்து ,
புத்தகம் வாங்குவதற்கும் வாசிப்பிற்கும் நேரடியாகத் தொடர்புடைய ஆசிரியர்களின் புத்தகம் வாங்கும் ஆர்வம் எவ்வாறு என்பதை மேற்குறிப்பிடப்பட்ட கருத்தினை நமக்கு வெளிப்படுத்தும் . நல்லாசிரியர்கள் என்று மாணவர்களால் குறிப்பிடப்பட்டவர்கள் நல்ல புத்தகங்கள் வாசிக்க வழிகாட்டினரா என்ற நமது ஐயத்தை சரி செய்கிறது இந்த அத்தியாயம் .

அதோடு , ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்கம் மாற்றுக் கல்வியை மனதில் கொண்டு முன்னெடுத்த முதல் மூன்று வாசிப்பு முகாம்களைப் பற்றிய அனுபவமும் பகிரப்பட்டு .நம்மை இன்னும் வலுப்படுத்துகிறது. இரண்டாவது வாசிப்பு முகாம் பற்றிய அழகிய நினைவும் அற்புதமான அனுபவ அறிவும் எனக்குண்டு , நானும் அதில் முதலாசிரியர் , பகல் கனவு வாசித்தேன்…

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை JK அவர்களால் எடுத்துரைத்த விதமும் , வீரப்பன் தேடப்பட்டு கண்காணிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான கெத்தேசால் பற்றியும் , அங்கு வாழும் மக்கள் , பழங்குடிப் பள்ளி என அனைத்தும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் இந்த நான்காவது அத்தியாயத்தில் ….

இறுதியாக ஐந்தாவது அத்தியாயத்தில் ஆசிரியரின் அறிவுரைகளும் ஆழமும் என ஒரு அலசல் செய்யப்பட்டு , அதில் மாணவர்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் கருத்துக்களையும் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் விதைத்த ஆசிரியர்களின் எண்ணிக்கைக் குறைவு எனப் பதிவு செய்கிறார் …
இந்த நூல் முழுவதும் வரிக்கு வரி , வார்த்தைக்கு வார்த்தை மாணவர்கள் எப்படிப் பட்ட ஆசிரியராக எதிர்பார்க்கிறார்கள், ஆசிரியர்கள் எவ்வாறு தங்களை உருமாற்றம் செய்து மாணவருடன் வாழ வேண்டும் என நமக்கு அறிவுறுத்துகிறது.

இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களால் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றப்படும் ஒரு நல்ல ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று துடிப்பார்கள் எனவும் இந்தக் கல்விச் சூழலில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் அனைத்து வகைக் கல்வியாளர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது எனவும் தோழர் இரா .நடராசன் குறிப்பிடுகிறார்.

8 வருடங்களுக்கு முன் நான் இப்புத்தகத்தை வாசித்திருந்தேன். அப்போது இப்புத்தகம் என்னை எனக்கு 60 சதவீதம் நல்லாசிரியர் என அடையாளம் காட்டியது ,இந்த 4 தினங்களுக்கு முன்பு மறுவாசிப்புக்கு உட்படுத்தியதால் இதை எழுத முனைந்தேன். என்னுள்ளே அது 90 சதமாக உயர்ந்துள்ளது. நானும் எனது மாணவர் மனதை கொள்ளை கொள்ள 100% எட்டும் பயணத்தில் உங்களோடு ….

மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது என்பார்களே … அதைப் போல மிகச் சிறிய நூலாக இருந்தாலும் நூற்றாண்டு கால சமூக மாற்றத்தைத் தரும் ஒரு நல்ல நூல் .

சு.உமாமகேஸ்வரி

2 thoughts on “நூல் அறிமுகம்: பள்ளிக் கூடத் தேர்தல் | ஆசிரியர் சு .உமாமகேஸ்வரி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *