Science Fiction Story | அறிவியல் புனைக்கதை | ராக்கெட் கேர்ள்ஸ் (Rocket Girls) | ஆயிஷா. இரா. நடராசன்

அன்று ஏழாவது முறையாகஅவள்அழுகிறாள், கோபம் கண்களை மறைத்தது. அந்த உணர்ச்சியே இல்லாத முழு கோட் மனிதர்களை கண்டதுண்டமாக வெட்டி விண்வெளியில் வீசி விட்டு வர வேண்டும் என்று கோமதிக்கு ஆத்திரமாக வந்தது/

‘நான் சொல்வது அணு இணைவு இஞ்சின்’ அவள் கூச்சலிட்டாள். வால்டர் – வால்டர் நிறுவனத்தின் ஒன்பதாவது மாடி அறையில் இருந்து ஏறக்குறைய வலுக்கட்டாயமாக அவள் வெளியேற்றப்பட்டாள். இது ஆறாவது நிறுவனம். அம்பிகாவுக்கும் பூங்கழலிக்கும் என்ன பதில் சொல்வாள் அவள்…

‘இதற்காக ஒருநாள் வருத்தப்படுவீர்கள்….’ அவளது கூச்சல் அந்த கோட்சூட் கூட்டத்தை நிமிர்ந்து உட்காரவைத்தது. தனது இரு சக்கர வாகனத்தை அந்த வெளி நெரிசலில் தேடி அவ்விடம் சென்றபோது அங்கே ஒரு புகைப்பட பதிவுக்கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டாள் கேமிரா முன்நின்றாள்.

‘இயந்திரவியலின் அடிப்படை தெரியாத மூடர்களே…. எங்கள் பிராஜக்ட்டை ஏற்காததால் வருத்தப்படபோவது நீங்கள் தான் நாங்கள் அல்ல‘ கேமிராவை பார்த்து அலறினாள்.

மழைக்கொட்டிக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தாள் கோமதி. ஆனால் வால்டர்-வால்டர் நிறுவனம் தான் அவர்களது கடைசி நம்பிக்கை முழுவிளக்கத்தை கேட்காமலையே ’சொல்கிறோம்…. நீங்கள் போகலாம்’ என்று ஒரு நிமிடத்தில் துரத்தப்பட்டது கொடுமை. இனி எந்த நிதி உதவியும் கிடைக்கபோவதில்லை. இது நடந்த ஆண்டு 2023. இந்தியாநிலாவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக விண் ஊர்தி விக்ரம் ரோவரை தரை இறக்கிய ஆண்டு. உலகின் இரண்டாவது விண்- பயண பந்தயம் தொடங்கிய வருடம்.

பல தனியார் விண்வெளி ஆய்வுக்கூடங்களும் அரசாங்க ஆய்வுக்கூடங்களும் போட்டிப்போட தொடங்கிய வருடம். செவ்வாய் கிரஹத்தை நோக்கிய பந்தயம். கோமதியின் அணியிடம் முக்கிய விடை இருந்தது.

உலகின் முதல் அணு இணைவு செயல்பட தகுந்த ராக்கெட் எஞ்சின் ஆனால் யாருமே செவிமடுக்கவில்லை. இந்திய அரசோ வேதகால மருத்துவம் இதிகாசத்தில் ராக்கெட்,  உபநிடத்தில் இயற்பியல் என்று நிதியை இறந்த காலத்தை நோக்கி திருப்பிவிட்டது.

‘என்ன…. நடந்தது கோமதி’ பூங்குழலி கேட்கிறாள். மழையில் நனைந்த தன்னை துண்டால் துடைத்தப்படி பல்லை கடிக்கிறாள் கோமதி. சுடசுட தேனீர் அம்பிகா எடுத்து வருகிறாள். ‘பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டது.’ என்றாள் அம்பிகா எதற்காகவோ இருக்கலாம். அவர்கள் பெண் பொறியாளர்கள் என்பதாகவும் இருக்கலாம். ‘ஆனால் அந்த லூசுகளுக்கு அணு பிளவுக்கும், அணு இணைவுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை… எஞ்சின் வரைபடத்தைக் கூட அவர்கள் பார்க்க விரும்பவில்லை’ என்றாள் கோமதி.

‘நாம்….. பெண்கள் …. வாசுகி சொன்னது சரிதான்’ என்றாள் அம்பிகா.

‘ஆனால் நமது ராக்கெட் எஞ்சின் ஒரு அற்புதம்…. அதை புரிந்துகொள்ள உலகிற்கு இன்னும் பக்குவம் வரவில்லை அம்பிகா’ என்றாள் பூங்குழலி.

‘உலகிற்கு பக்குவம் வருவதற்குள் நாமும் வாசுகி போல….. ’ அதற்குமேல் அம்பிகாவால் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
ஏழாண்டுகளுக்கு முன் நால்வர் இருந்தனர். உண்மைதான் வாசுகி, தேன்மொழி, அம்பிகா, கோமதி… வெறித்தனமான பொறியியல் பி.எச்.டி ஆய்வாளர்கள் இப்போது மூவரே மிச்சம்.

மதுரை பக்கம் ஏதோ ஒரு ஊரிலிருந்து வந்த ராணுவ வீரரின் மகள் வாசுகி. அவள் வாழ்வின் ஒரே இலக்கு விண்வெளியில் பறப்பது… இந்தியாவின் பிரமாண்டமான கர்காபூர் ஐ.ஐ.டியில் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து ஒரே விடுதி அறையில் இணைந்த சாதனை மாணவிகள் அவர்கள்.

ஆனால் வாசுகியிடம் இருந்த வேகம் மற்றவர்களிடம் அப்போது கிடையாது. அவர்கள் அனைவருக்குமே விண்பொறியியல் வெறிகொள்ள வைத்திருந்தாள் வாசுகி. இஸ்ரோ முதல் ஐரோப்பிய விண் ஆய்வு மையம், ரஷ்ய ஸ்பேஸ் ஏஜன்சி, நாஸா என்று அடுத்தடுத்து பலவகை நேர்காணல் நுழைவுத்தேர்வு என்னவென்று அவர்கள் அடுத்த மூன்றாண்டுகளில் போகாத இடமில்லை. நால்வருமாக சேர்ந்து வெளியிட்ட பத்துக்கும் மேற்பட்ட விண்வெளி ஊர்தி இயல் ஆய்வுக் கட்டுரைகள் உலகை அதிரவைத்தன.

வாசுகியின் விண்வெளியில் பறக்கும் வெறி அந்த காலகட்டத்தில் தான் உச்சத்தை தொட்டது. கனடா நாட்டில் பிரஜையானால் விண்வெளி பயணம் உறுதி என்ற அளவுக்கு மூன்று நாடுகளில் வாசுகி முயற்சி செய்தாள். பல அடுக்கு போட்டிகள் பயிற்சிகள் நம் நாட்டில் கிடைக்காத வாய்ப்பு ஏதாவது ஒரு வளர்ந்த நாட்டில் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளிடம் இருந்தது.

Image

வாசுகியின் முயற்சிகள் இப்படி இருக்க கோமதியும் பூங்குழலியும் அம்பிகாவோடு ராக்கெட் எஞ்சின் மேம்பாட்டுத்துறை ஆய்வில் இறங்கினார்கள். கோமதி தன் விவசாய நிலஉடைமை செட்டிநாட்டு அண்ணன்களை பணியவைத்து இந்த பெங்களூருவில் ஒரு இயந்திரவியல் நவீன பட்டறையை அமைத்த போது வாசுகி மட்டும் வடநாட்டிலும் அயல்நாட்டிலுமாக தங்கி அவ்வப்போது வந்து சென்றாள். ஒவ்வொரு எஞ்சினாக முயன்று இறுதியில் ஒளியின் வேகத்தை விட சற்றுகுறைவான வேகத்தில் செல்ல நியூக்ளியர் பியூஷன் எனும் அணு இணைவு மட்டுமே உதவ முடியும் என்பதை அவர்கள் அடைந்தபோது தான் அந்த விபத்து நடந்தது.

வானிலிருந்து பாராசூட்டில் குதிக்கும் பயிற்சி என்று ஆஸ்ரேலியாவில் தேர்வு பெற்ற வாசுகி திரும்பி வரவில்லை. பாராசூட் திறந்து கொள்ளாமல் விமான வெளியிலிருந்து மண்ணில் விழுந்து சிதறிய கொடிய சம்பவம் விபத்து என்று விரைவில் உலகத்தினரால் மறக்கப்பட்டது. பாராசூட் நிறுவனம், இந்திய அரசு, தமிழக அரசு என்று தாராளமாக இழப்பீட்டு தொகை வழங்கிகொண்டிருந்தது. ஆனால் அது விபத்தல்ல…. ஆண்களே அதிக ஆதிக்கம் செலுத்தும் விண்வெளி துறையில் தன் கனவு நிறைவேறாது என்று வாசுகி தற்கொலைதான் செய்து கொண்டாள் என்பது அம்பிகாவின் முடிவு.

குழுவின் ஏனைய உறுப்பினர்கள் எவ்வளவோ எடுத்துக்சொல்லியும் அம்பிகா தன் மனதை தேற்றிக்கொள்ளவில்லை. ‘பெண்கள் என்றால் மிக இளக்காரமாக நடத்தும் இந்த சமூகம் ஒருநாள் என்னையும் கொன்றுவிடும்…’ அவள் இப்போதெல்லாம் அடிக்கடி சொல்கிறாள். ‘பெண்ணாக பிறந்து விட்டாயா… அம்மாவுக்கு உதவிகள் செய்.. பிறகு வயசுக்கு வா…. திருமணம் செய். குழந்தைகள் பெறு…. கணவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் அடிமை சேவகம் செய்…. அல்லது விண்வெளி… ஆராய்ச்சி என்று கனவு காண்கிறாயா…. செத்து ஒழி’ என்று கூறி அவள் பத்ரகாளி அவதாரம் எடுக்கும்போது கோமதிக்கும் பூங்குழலிக்கும் என்ன செய்வதென்றே தெரியாது.

ஆனால் அம்பிகா மற்ற நேரங்களில் இயந்திரவியலாளர் அவதாரம் எடுக்கும்போது அவளுக்கு இணையான பொறியியல் அறிவு மிகமிக அபூர்வம். வெறும் வரைபடமாக இருப்பதை நேரடியாக உருவம் கொடுப்பதில் கைதேர்ந்த பட்டறைக்காரி அவள். நேனோ- பொறியியலில் அவள் காட்டிய அற்புதங்கள் இல்லாமல் அவர்களால் இந்த அணு-இணைவு எஞ்சினின் ஒரு மாதிரியை உருவாக்கி இருக்கவே முடியாது.

அன்றைய மாலையில் பூங்குழலி மிகுந்த நம்பிக்கையோடு டெமோ- விளக்கம் செய்யச் சென்ற அந்த சிங்கப்பூர் நிறுவனமும் கைவிரித்தபோது அம்பிகாவை தேற்றுவது மிகக்கடினமாக இருந்தது. தோல்வி வந்தால் துவண்டுபோவது மனித இயல்பு வானியல் – இயந்திரவிய பொறியாளர்களான அவர்களுக்கும் அது புதிதல்ல என்றாலும் அம்பிகாவின் நிலை வாசுகியின் இழப்பால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்ததை என்ன சொல்ல…. பூங்குழலியும் கோமதியும் ஒருவர் மாறி ஒருவர் விழித்திருந்து அம்பிகா விபரீதமுடிவு எதற்கும் வந்துவிடாது இருக்க கண்காணிப்பது என முடிவெடுத்த அன்று இரவு பதினோறு மணி அளவில் கோமதியின் கைபேசி அழைத்தது..,,

‘ஹலோ… டாக்டர் கோமதி’? என்றது ஓர் அழுத்தமான ஆண்குரல் அவள் ‘எஸ்’ என்றதும்.

‘ஐ… ஏம்…. பத்மநாபன்… இஸ்ரோ பத்மநாபன் … என்னை நியாபகம் இருக்கா’ என்கிறார்.  ‘நாம் திருவனந்தபுரத்தில் அந்த ராக்கெட் எஞ்சின் கண்காட்சியில் சந்தித்தோம்.’

‘எ…. எஸ்… புரோபசர்… சொல்லுங்கசார்….’ என்றாள். கோமதி எந்த உணர்ச்சியும் இல்லாமல்.

‘நான் இப்போது இஸ்ரோவில் இல்லை…. ரிட்டையர்டு…. ஜெர்மன் பேஸ்டு வி-ஸ்பேஸ் நிறுவனத்தோடு இருக்கிறேன்…. உங்களுக்கு தெரியுமா… இன்று எங்கள் சர்வதேச விண்வெளி சர்கிளில் உங்களது பேச்சுதான்.  ‘ராக்கெட் கேர்ள்ஸ்….!

உங்களை சந்திக்க விரும்புகிறேன்.. நாளை மாலை 4 மணிக்கு மாடலோடு வர முடியுமா…  பெங்களூரில் ஜலஹல்லியில் எங்களுக்கு ஒரு ஆபிஸ் இருக்கு’ படபடவென பேசினார்.

‘இது …. நிஜமா சார்….’ தயங்கிய படி கேட்டாள் கோமதி. ‘அல்லது….. கனவா?’

‘இப்போது தான்…. நிபுணர்குழு கூட்டம் முடிந்தது…. காலையில் அழைக்கலாம் என்று தான் சொன்னார்கள். எனக்கு மனசு கேட்கவில்லை…’என்றார் சிரித்தபடி.
முகவரியை வாட்ஸ்ஆப் செய்வதாக கூறி அழைப்பை துண்டித்தார்.

மறுநாள் மாலை ஜலஹல்லியில் இஸ்ரோ பத்மநாபன் குறிப்பிட்ட வி.ஸ்பேஸ் அலுவலகத்தை கண்டுபிடித்து வாகனநெரிசல் கடந்து ஊர்ந்து போய் சேர்ந்து…..அங்கே பிரத்யேக கூட்டம் தொடங்கிட ஆறரை மணி ஆகிவிட்டது. தனது குழுவின் சார்பாக திட்டவிளக்கத்தை கோமதி வழங்கிட முன் வருகிறாள்.

‘புவி எங்கும் அணு மின் நிலையங்கள் முதல் அணு ஆயுதம் வரை அணு பிளவு அறிவியலே பயன்படுத்தப்படுகிறது. E=MC2 ஐன்ஸ்டீனின் சமன்பாடு. ஆனால் பிரபஞ்சத்தில் இயற்கையில் எங்குமே அணு பிளவு கிடையாது. சூரியனின் ஆற்றல் நமக்கு கிடைப்பது கூட அணுவை பிளப்பதால் கிடைப்பதல்ல… அணுக்களை இணைப்பதால் கிடைப்பது… பேரழிவற்ற ஒன்று…. நாங்கள் விரும்புவது ஆற்றல் மட்டுமே…அழித்தல் இல்லை.’

‘அப்படியானால் E=MC2 ஆண்களுக்கான சமன்பாடு என்கிறீர்களா’ தலையில் முடி இல்லாத நீலகோட்காரர் சிரித்தார்.

‘உங்கள் இஞ்சினின் எரி பொருள் எது … அதற்கும் அணு இணைவுக்கும்…?’வெள்ளைசட்டை அயல்நாட்டுகாரர் இழுத்தார்.

‘ஓ. கே…. பேசிக்…. டிசைன்… இதுதான் உலகின் முதல் அணு-இணைவு ஆற்றல் இஞ்சின். ஒரு நீண்ட சிலிண்டர்… பத்து மீட்டர் நீளம் டியூட்ரியம் மற்றும் டிரிடியம் பயன்படுத்தும் அணுக்கரு பிளாஸ்மா…. அரைக் குழம்பு நிலை எரிபொருள் காந்தவளையங்களால் கட்டுப்படுத்தப்படும்… 600 மில்லியன் கெல்வின் வெப்பநிலை… சாதாரணமாக 100 மில்லியன் அயனியாக்கல் மற்றும் மைக்ரோ அலை மூலம் வெப்பநிலையை 600 மில்லியன் கெல்வின் ஆக்கலாம்… இதன் மூலம் ஒளியின் வேகத்தை விட சற்றே குறைந்த வேகத்தை அடைய முடியும்…’ என்றாள் கோமதி.

‘நாம் எதற்கு ஒளியின் வேகம் அளவிற்கு செல்லவேண்டும்?’என்றார் முடியற்ற பேராசிரியர்.

‘மனிதர்களின் ராக்கெட்டுகள் இதுவரை புவியின் ஈர்ப்புவிசையை முறியடித்து உந்தி விண்ணிற்கு போவதை மட்டுமே அடிப்படையாக வைத்து சிந்தித்து உருவாக்கப்பட்டவை… சந்திரன் வரை போக அவை பயன்பட்டன…’ பூங்குழலியால் அதற்கு மேல்வாயை மூடிக்கொண்டு இருக்க முடியவில்லை… ‘ ஆனால் நாம் விண்வெளியில் அதையும் தாண்டி மனிதனை அழைத்துச்செல்ல அந்தவேகம் போதாது….’ என்கிறாள்.

No alternative text description for this image

‘ஒளியின் வேகத்தை அடைவது ஆபத்தானது…அதனால் தான் ஒளியின் வேகத்தைவிட சற்றே குறைவான வேகம்…’ கோமதி தொடர்கிறாள். ‘அதாவது நொடிக்கு 28 கோடி மீட்டர் வேகம்…. அப்போது நாம் செவ்வாய்கிரஹத்தை 14 நாட்களில்அடைந்துவிடலாம்…. அதற்கு தற்போது கிடைக்கும் சாதாரண திரவ எரிபொருள் போதாது…’

‘வெடித்து விட்டால் விண் -பயணியின் கதி?’என்கிறார் டாக்டர் பத்மநாபன் முதன் முறையாக.

அம்பிகா கோமதியின் காதில் கிசுகிசுக்கிறாள்…. நேரடியாக பிறர் முன் அம்பிகா பேசுவதே இல்லை. அது அன்றும் தொடர்ந்தது.

‘சார்… நீங்கள் நினைப்பது அணுவெடிப்பு அதாவது அணுபிளவு…. அது வெடிக்கவே செய்யும்.. நாங்கள் முன் வைப்பது அணு இணைவு…. வெடிப்பிற்கு இங்கே இடமில்லை அணுக்கழிவும் கிடையாது…’ கோமதி விளக்கினாள்…

‘ஆனால் அணுக்கதிர்வீச்சு உண்டல்லவா’ என்கிறார் வெள்ளை சட்டை வெள்ளைக்காரர்.

‘இந்த காந்தப்புல தடுப்பு மேக்னடிக்ஷீல்டு – கதிர்வீச்சிலிருந்து விண் – பயணியை முற்றிலும் பாதுகாக்கும்’ என்கிறாள் பூங்குழலி.

‘இதுவரை எந்த அளவுக்கு இஞ்சின் வேலை முடிந்திருக்கிறது? என்றார் வெள்ளைக்காரர்.

மீண்டும் அம்பிகா கிசுகிசுக்கிறாள்.

‘சார்…. மைக்ரோ அலை ஆண்டனா சிறப்பாக செயல்படுகிறது…. அடிப்படை அலகுகள் பரிசோதிக்கப்பட்டுவிட்டன… எடை குறைந்த ஒரு உலோக கலவை தேவை அலுமினியம், மக்னீசியம், டைட்டானியம் மற்றும் பெரிலியம் கலவை கூடுமானவரை எடை குறைவான இஞ்சின் இருந்தால் மேல் நோக்கிய உந்துதல் தள்ளுவிசை எளிதாகும். அதற்குதான் எங்களுக்கு நிதி உதவி தேவை’ என்கிறாள் கோமதி கெஞ்சும் குரலில்.

‘என் பெயர் ரிச்சர்ட்சன்’ வெள்ளைக்காரர் இருக்கையில் இருந்து எழுந்தார். ‘வி-ஸ்பேஸ் உங்களை ஆதரிக்கும்… இறுதி இஞ்சின் கம்பேனியுடையது… கோட்பாட்டு உரிமம் உங்களுடையது. இதுதான் டீல்’ என்றார்.

மறுநாள் காலை ஒப்பந்தம் கையெழுத்தாகிட ராக்கெட் கேர்ள்ஸ் பரபரப்பாயினர். பெங்களூரு, கோபன் ஹேகன், பெர்லின்… என்று அடுத்த 18 மாதங்கள் உறங்கினமோ, சாப்பிட்டோமா, என்பது கூட தெரியாத வேலைப்பளு…. மூவருக்கும் நேனோ பட்டறை நியூக்ளியர் ஆய்வகம் 3டி டிசைன் என உதவியாக பல இளம் பொறியாளர்கள், என்ன கேட்டாலும் வி.ஸ்பேஸ் செய்து கொடுத்தது. அம்பிகாவின் பிடிவாதம். ராக்கெட் கேர்ள்ஸ் திட்டத்தில் பணி செய்ய தேர்வு பெற்றவர்களில் பெரும்பாலும் பெண் பொறியாளர்கள்.

முதலாண்டு நிறைவில் ஒரு சோதனை ஓட்டத்திற்கு அவர்கள் தயாரானார்கள். முதல் நாள் இரவு முழுவதும் கோமதியால் தூங்க முடியவில்லை. ‘இது மட்டும் தோற்றால்,,,’ அம்பிகா தூக்கத்தில் கத்துவது கேட்டு பூங்குழலியும் விழித்திருந்தாள்.

கதிர்வீச்சு கவசங்களுடன் மொத்தம் பத்து பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். டாக்டர் பத்மநாபன் தனது இஸ்ரோ சகா ஒருத்தரையும் பார்வையிட அழைத்து வந்திருந்தார்.

1948-49 லேயே வால் கிளீவர் இந்தியாவின் எஸ்.கே. மித்ரா வேல்ஷ் குடியரசின் லெஸ்லீ.

ராபர்ட் ஆகியோர் அணுசக்தியை மனிதன் கிரஹங்களுக்கு இடையே பயணிக்கக் கூட பயன்படுத்த முடியுமென்று கோட்பாடுகளை நிறுவி இருந்தாலும் நேரடிடர் போபம்புகள் மூலம் அணு – இணைவு உலைகளை பயன்படுத்தி ராக்கெட் கேர்ள்ஸ் எனும் பெண் பொறியாளர் அணி அதை செயல் விளக்கமாக சாதிக்கும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள். சோதனை வெற்றி அடைந்த 500 மீட்டர் தூர முயற்சி முடிந்தபோது எல்லாரும்கொண்டாடிய தருணம் டாக்டர். பத்மநாபனும், டாக்டர் ரிச்சர்ட்சனும் அவர்களைத் தேடி வந்தார்கள்.‘அருமை…. என்றார் டாக்டர் பத்மநாபன்.

‘இப்போதைக்கு நம் சோதனை முயற்சி வெற்றியை ரகசியமாக வைத்திருக்கிறோம்…. அடுத்தது விண்ஊர்தி ஓட்டம் நாம் நம் இஞ்சினுக்கு ஒரு பெயர் வைக்கவேண்டுமே’ என்றார் டாக்டர் ரிச்சர்ட்சன்.

மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அம்பிகா கோமதியின் காதில் கிசுகிசுத்தாள். இப்போதும் அம்பிகா மாறவில்லை.

‘நாங்களே…. பெயர் வைக்கலாமா’ தயங்கியபடி கோமதி கேட்க. ‘ஏதாவது பெயர் இருந்தால் சொல்லலாம்’ என்றார் வெள்ளைக்காரர். ‘இஞ்சின் உங்களது படைப்பு.
மூவருமாக ‘வாசுகி’ என்கிறார்கள்.

ஆனால் செவ்வாய் கிரஹம் நோக்கிய ஒரு சோதனை வான்ஊர்திப் பயணம் முனிச் நகருக்கு அருகே உள்ள ஜெர்மனி ஏவுதளத்திலிருந்து அடுத்த ஏழே மாதத்தில சாத்தியமாகும் என்று யார் நம்பி இருப்பார்கள்?

அவர்களில் கோமதி மட்டும் பார்வையாளர் – கூர்நோக்கு அறையில் தன் கணினி சகாக்களுடன் இருந்தாள். பூங்குழலி இயந்திரவியல் புரொப்பல்லர் சோதனையில் ஈடுபட அம்பிகா அணு – இணைவு இறுதிகட்ட ஆயத்தத்தில் கதிர்வீச்சு கவசத்தோடு ஒரு சிறுகுழுவுடன் மூழுவீச்சில் பணிசெய்தாள்.

அவர்கள் சொன்னது போலவே நடந்தது. அடுக்கடுக்காக வெடித்துவிட்டால் பாதுகாக்க பலவகை அரண்களை அச்சத்தோடு வெடிக்கோட்பாடுவாதிகள் அமைக்க வைத்து உலகையே அச்சத்தில் ஆழ்த்தி இருக்க எதுவுமே வெடிக்கவில்லை. மூவர் அணி தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை போலவே அணு – இணைவு பாதுகாப்பான ஆற்றல் வழங்கும் முறை… என்பது நிரூபணம் ஆனது.

பெண் விஞ்ஞானம் உலக அமைதிக்கானது என்று பத்திரிக்கைகள் எழுதின.

எது எப்படியோ ராக்கெட் கிளம்பிய 14 ம்நாள் அது செவ்வாய்கிரஹத்திற்கு போய் சேர்ந்தபோது  ‘வாசுகி’ செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறங்கிவிட்டதாக உலகே கொண்டாடியது. ‘வாசுகி… எப்படியோ உன்னை நாங்கள் நீ ஆசைப்பட்டது போலவே விண்வெளிக்கு அனுப்பிவிட்டோம்’ பல நாட்கள், மாதங்கள் கழித்து உற்சாகமாக கூக்குரலிட்டாள் அம்பிகா….

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

2 thoughts on “அறிவியல் புனைக்கதை: ராக்கெட் கேர்ள்ஸ் (Rocket Girls) – ஆயிஷா. இரா. நடராசன்”
  1. அனுப்பினைவு தொழில் நுட்பத்தை மையயமாக வைத்து அபாரமான கற்பனை. உண்மையிலேயே இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ராக்கெட் வடிவமைப்புகளை திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ட்ரைடியம்- டியூட்டிரான் பிணைவை விட ஹீலியம் 3 – டியூட்டிரான் பிணைவு ராக்கெட் ஏவுவதற்கு சிறப்பானது என்று கருதுகிறார்கள். அடுத்த முயற்சிக்காக இதை “ராக்கெட் கேர்ள் ” அம்பிகாவிடம் தெரிவித்து விடவும்! ******* இவ்வகையான அதீத வெப்ப,-அழுத்த அனுப்பினைவுக்கு பதில் சுமார் 35 வருடங்களுக்கு முன் ‘Cold Fusion’ என்ற எளிதான நீர் மின் பகுப்பு முறை ஒன்று விஞ்ஞானிகளால் பரபரப்பாக ஆராயப்பட்டது. ஆனால் ஒருவரும் வெற்றிபெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *