அறிவியல் பேசுவோம்
இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
28.09.2024
1. அமிலமயமாகி வரும் உலகின் பெருங்கடல்கள் – புதிய எச்சரிக்கை
உலகின் பெருங்கடல்கள், கடல்வாழ் உயிர்களைக் கொண்டு வாழவோ அல்லது காலநிலையை நிலைப்படுத்த உதவவோ முடியாத அளவுக்கு அமிலமாக மாறும் நிலையில் உள்ளன என்கிறது, பொட்ச்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (PIK) அறிக்கை. கிரகத்தின் உயிரைத் தாங்கும் திறனுக்கான ஒன்பது காரணிகளை இது விவரிக்கிறது. கடல் அமிலமயமாக்கலுக்கான முக்கியமான எல்லை விரைவில் ஏழாவதாக மீறப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
2. உலகின் மிகப் பழமையான பாலாடைக்கட்டி (Cheese) கண்டுபிடிப்பு
சீனாவில் நடத்தப்பட்ட ஒரு தொல்லியல் ஆய்வில், 3,600 ஆண்டுகள் பழமையான மம்மிகளின் மீது கெஃபிர் பாலாடைக்கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு கெஃபிர் தோன்றிய இடம் குறித்த நமது புரிதலை மாற்றியுள்ளது. பழங்கால கெஃபிர் பாலாடைக்கட்டியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியாக்கள், தற்போதைய திபெத்திய கெஃபிர் பாக்டீரியாக்களுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
Bronze Age cheese reveals human-Lactobacillus interactions over evolutionary history
3. எதிர்கால பூமி எப்படியிருக்கும் என துப்பு தரும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
நமது சூரியன் ஒரு சிவப்பு இராட்சத நட்சத்திரமாக மாறும் போது பூமி எப்படி இருக்கும் என்பதை அறிய உதவும் ஒரு தொலைதூர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414 எனப்படும் இக்கிரகம் பூமியிலிருந்து 4,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிய இந்த கிரகம் ஒரு வெள்ளை குள்ளனைச் சுற்றி வருகிறது. நமது பூமி 800 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதை ஒத்த ஒரு அமைப்பாகும் இது.
An Earth-mass planet and a brown dwarf in orbit around a white dwarf
4. கார்பன் அணுக்களுக்கு இடையே புதிய வகை சகப்பிணைப்பு
நூற்றாண்டு காலமாக வேதியியலாளர்கள் நம்பியிருந்த சகப்பிணைப்பு குறித்த புதிய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டு கார்பன் அணுக்கள் ஒற்றை எலக்ட்ரான் மூலம் பிணைக்கப்படும் சகப்பிணைப்பு முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. 1931 இல் வேதியியலாளர் Linus Pauling முதன் முறையாக இந்த கருத்தை முன்மொழிந்திருந்தார். டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதனை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.
Carbon bond that uses only one electron seen for first time: ‘It will be in the textbooks’
5. தேனீக்களை ஈர்க்கும் வகையில் பூக்களை மாற்றியமைக்கும் பாக்டீரியாக்கள்
தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு இடையிலான உறவானது, பூக்களை தேனீக்களை ஈர்க்கும் வகையில் மாற்றியமைக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பாக்டீரியாக்கள் தாவரங்களுக்கு நைட்ரஜனை வழங்கியதால், பூக்களில் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகரித்தது. இது தேனீக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக அமைந்தது. மேலும் பூக்கள் தேனீக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறுகின்றன என்கிறது புதிய ஆய்வு.
6. கால்களால் சுவையை அறியும் கடல் ராபின்கள்.
கடல் ராபின்கள் இறக்கை போன்ற அமைப்பினையும், நண்டின் கால்களையும் கொண்டுள்ள வித்தியாசமான மீன்களாகும். ஆராய்ச்சியாளர்கள், இவற்றின் கால்கள் உணவு தேடுவதற்கான உணர்வு உறுப்புகளாக செயல்படுவதைக் கண்டறிந்துள்ளனர். இவற்றின் கால்களில் உள்ள உணர்வுப் புள்ளிகள் மற்றும் சுவை ஏற்பிகள் பரிணாமம் பற்றிய புதிய பார்வையை நமக்கு ஏற்படுத்துகிறது.
Evolution of novel sensory organs in fish with legs
7. பழங்கள் வௌவாலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
கார்னெல் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு, பழங்களை அதிகம் உண்ணும் வௌவால்களின் நோய் எதிர்ப்பு சக்தி, புரதம் நிறைந்த உணவை உண்ணும் வௌவால்களை விட வலுவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. உணவு பற்றாக்குறை போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு பாதிக்கலாம் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது இந்த ஆய்வு. வௌவால்களின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க இந்த புரிதல் உதவலாம்.
8. நோயுற்ற தனது லார்வாக்களை உண்டு விடும் ராணி எறும்புகள்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ராணி எறும்புகள் தங்கள் நோயுற்ற லார்வாக்களை உண்ணுவதாகக் கண்டுபிடித்துள்ளனர். இது நோயைப் பரவாமல் தடுத்து, புதிய சந்ததியை உருவாக்கத் தேவையான ஆற்றலைத் தருகிறது. இந்த செயல், ராணிகள் தனியாக புதிய காலனி தொடங்கும் போது, உயிர்வாழ உதவுகிறது. தொற்றின் ஆரம்ப நிலையில்தான் இதைச் செய்கின்றன. தொற்று நன்கு பரவிய புழுக்களை உண்ணாமல், அதை விஷத்தால் கொல்ல முயற்சிக்கின்றன.
9. கோடிக்கணக்கான ஆண்டுகள் அழியாத 5D நினைவகம் உருவாக்கம்.
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனித மரபணுவை பில்லியன் ஆண்டுகள் வரை பாதுகாக்கக்கூடிய 5D நினைவக படிகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படிகம், உயர் வெப்பநிலை, கதிர்வீச்சு போன்ற கடுமையான சூழல்களைத் தாங்கும் திறன் கொண்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் மனிதகுலம் அழிந்தாலும், மரபணு தகவல்களைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
https://www.southampton.ac.uk/news/2024/09/human-genome-stored-on-everlasting-memory-crystal-.page
10. மீன்களோடு கூட்டு வேட்டையில் ஈடுபடும் ஆக்டோபஸ்.
ஆக்டோபஸ்கள் பலவகை மீன்களோடு சேர்ந்து வேட்டையாடுகின்றன. மேலும் அவை அடங்காத தனது வேட்டைத் துணைகளை ஒரு சாதுர்யமான அடியால் ஒழுங்குபடுத்துகின்றன. இந்த தகவல் அறிவியலாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. Nature Ecology & Evolution இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், வேட்டை முடிவுகளை எடுக்கும் போது உயிரினங்கள் தலைமையை பகிர்ந்து கொள்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://doi.org/10.1038/s41559-024-02525-2
எழுதியவர் :
த. பெருமாள்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான முயற்சி தோழர் வாழ்த்துக்கள்🙏……
Excellent, useful messages.