அறிவியல் பேசுவோம்! – இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
04.10.2024
1. டால்பின்கள் சிரிக்கின்றன! – புதிய ஆய்வு
டால்பின்கள் விளையாட்டின் போது திறந்த வாய் முகபாவத்தைப் பயன்படுத்தி தங்களுக்குள் தொடர்பு கொள்வதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இது ஒரு வகையான “புன்னகை” போலவே செயல்படுகிறது. இந்த முகபாவம் மற்ற டால்பின்களையும் அதே முகபாவத்தை வெளிப்படுத்தத் தூண்டுகிறது. அதன் விளையாட்டு நண்பர்கள் ஒரு “புன்னகையை” உணர்ந்தால் 33% சமயங்களில் அவைகள் அதற்கு பதிலளிப்பதாக, இத்தாலியின் பீசா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Smiling underwater: Exploring playful signals and rapid mimicry in bottlenose dolphins
2. பழ ஈயின் முழுமையான மூளை வரைபடம் – புதிய சாதனை
விஞ்ஞானிகள் பழ ஈயின் முழுமையான மூளை வரைபடத்தை 1,40,000 நியூரான்களுக்கு இடையிலான இணைப்புகளை காட்சிப்படுத்தி உருவாக்கியுள்ளனர். இது மூளை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு பெரிய முன்னேற்றமாகும். நியூரான்களுக்கு இடையேயான 5.45 கோடிக்கும் அதிகமான சினாப்ஸ்களை (இணைப்புகளையும்) இந்த கனெக்டோம் வரைபடம் உள்ளடக்கியுள்ளது. மூளை செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளுக்கு இது மிக பயனுடையதாக இருக்கும்.

https://www.nature.com/articles/s41586-024-07558-y
3. டைப் 1 நீரிழிவு நோய்க்கு பாக்டீரியா தொற்று காரணமா?
கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டைப் 1 நீரிழிவு நோய்க்கு புதிய காரணத்தைக் கண்டறிந்துள்ளனர். க்ளெப்சியெல்லா ஆக்ஸிடோகா (Klebsiella oxytoca) போன்ற சில வகை பாக்டீரியாக்களின் புரதங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தவறாக செயல்பட வைத்து, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி, நோயை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்புடைய T செல்களைப் பற்றிய புரிதல் நீரிழிவு சிகிச்சைகளில் பயனளிக்கும்.
![]()
https://www.jci.org/articles/view/164535
4. குழந்தைகளின் பார்வை மோசமடைகிறது: புதிய ஆய்வறிக்கை
உலகளவில் 2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40% குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு இருக்கும் என்கிறது புதிய ஆய்வறிக்கை. குறிப்பாக ஆசியாவில், இது 2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 70% ஆக இருக்கும். சிறு வயதிலேயே கல்வியில் ஈடுபடுதல் மற்றும் திரைநேரம் அதிகரித்தது காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆப்பிரிக்காவில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மயோபியாவின் பரவல் ஆசியாவில் காணப்படுவதை விட ஏழு மடங்கு குறைவு.
5. இளம் பூமி நிலவைப் பிடித்து வந்ததா? புதிய ஆய்வு.
புதிய ஆய்வறிக்கை, பூமி இளமையாக இருந்தபோது ஒரு நெருங்கிய சந்திப்பின் போது நிலவு பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது. நிலவு பூமியிலிருந்து தொடர்ந்து விலகிச் செல்வது, மற்றும் நிலவின் சுற்றுப்பாதை காலப்போக்கில் வட்ட வடிவமாக மாறுதல் ஆகியவை நிலவு வேறு ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து வந்து பூமியின் ஈர்ப்பு விசையில் சிக்கியிருக்கலாம் என்ற சாத்தியத்தை முன்வைக்கிறது. இது வரை நிலவு, பூமியின் ஒரு பகுதி சிதறி உருவானது என நம்பப்பட்டு வருகிறது.

Forming Massive Terrestrial Satellites through Binary-exchange Capture
6. மிகக் குறுகிய சுற்றுப்பாதை காலம் கொண்ட புதிய மூன்று நட்சத்திர அமைப்பு!
வல்லுநர்கள் மற்றும் பொழுதுபோக்கு வானியலாளர்கள் TIC 290061484 என்ற தனித்துவமான மூன்று நட்சத்திர அமைப்பை அடையாளம் கண்டுள்ளனர்.TIC 290061484 இல் ஒவ்வொரு 1.8 நாட்களுக்கும் ஒருவருக்கொருவர் சுற்றும் இரட்டை நட்சத்திர ஜோடியை கொண்டுள்ளது. அதோடு 25 நாட்களில் இரட்டையரை சுற்றும் மூன்றாவது நட்சத்திரம் உள்ளது. இது குறுகிய வெளிப்புற சுற்றுப்பாதை காலத்திற்கான 33 நாட்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

https://dx.doi.org/10.3847/1538-4357/ad7368
7. புளுட்டோவின் நிலவில் கார்பன் டை ஆக்சைடு கண்டுபிடிப்பு
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன், புளுட்டோவின் மிகப்பெரிய நிலவான சரோனின் மேற்பரப்பில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளன. சரோனின் உட்புறத்திலிருந்து மேற்பரப்புக்கு கார்பன் டை ஆக்சைடு வெளியேறியிருக்கலாம் என்றும். ஹைட்ரஜன் பெராக்சைடு, சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தால் நீர் பனி உடைந்து உருவாகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

http://dx.doi.org/10.1038/s41467-024-51826-4
8. எவரெஸ்ட் சிகரத்தின் உயர அதிகரிப்புக்கு காரணமான நதி
கோசி நதியின் துணை நதியான அருண் நதி 89,000 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு நதியைக் கவர்ந்து, பள்ளத்தாக்கினை உருவாக்கியது. நதி அரிப்பு காரணமாக மில்லியன் கணக்கான டன் மண் அகற்றப்பட்டு, மலை மேல்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த இயற்கை செயல்முறை எவரெஸ்ட் சிகரத்தை அருகிலுள்ள மற்ற சிகரங்களைக் காட்டிலும் வேகமாக உயரவைக்கிறது. உலகின் மிக உயர்ந்த சிகரமாக வைத்திருக்கிறது.

Why Mount Everest is the world’s tallest mountain
9. புவியின் ஆதி விவசாயிகள் எறும்புகள் – ஆச்சரிய தகவல்
சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன், டைனோசர்களை அழித்த சிறுகோள் மோதலுக்குப் பின், பூஞ்சைகள் பெருகின. இந்த பூஞ்சைகளை உணவாகப் பயன்படுத்தத் தொடங்கிய எறும்புகள், சுமார் 2.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலை விவசாய முறையை உருவாக்கின. இன்றுவரை இந்த விவசாய முறை தொடர்ந்து வருகிறது. மரபணு மற்றும் பரிணாம ஆய்வுகள் மூலம் இந்த தகவலை அமெரிக்காவின் இயற்கை வரலாற்றுக்கான ஸ்மித்ஸோனியன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
http://dx.doi.org/10.1126/science.adn7179
10. ஒலியைக் கேட்டு வளரும் பூஞ்சைகள் – புதிய கண்டுபிடிப்பு
புதிய ஆய்வில், தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பூஞ்சைகள் ஒலியினால் தூண்டப்படுகின்றன என தெரியவந்துள்ளது. ஒலி இசைக்கப்படும் போது அவை ஏழு மடங்கு அதிகமாக வளர்கின்றன மற்றும் நான்கு மடங்கு அதிக ஸ்போர்களை உருவாக்குகின்றன. ஆஸ்திரேலியாவின் ஃப்ளின்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு, தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் டிரைகோடெர்மா ஹார்சியானம் எனப்படும் பூஞ்சையில் மேற்கொள்ளப்பட்டது.

Sonic restoration: acoustic stimulation enhances plant growth-promoting fungi activity
எழுதியவர் :

த. பெருமாள்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நல்ல தொகுப்பு.
மிக மேன்மையானது!
வாழ்த்துகள் .. தொடர்ந்து எழுதுங்கள்
எறும்புகள் தான் நமது மூத்த விவாசயக் குடி என்பது புதிய செய்தி.
அடுத்து வரும் இளம் தலைமுறையினரின் பார்வை குறைபாடு கவலையளிப்பதாக உள்ளது. இதற்கு மாற்று என்ன .. சிந்திக்கக் கூடிய செய்தி அருமை!
டால்பின் புன்னகை!
செய்தி மகிழ்ச்சியாக இருக்கிறது
வாழ்த்துகள்