கோவிட்-19 குறித்த ஆய்வுகள் அரசியலைத் தவிர்த்து அறிவியல் முன்னுக்கு வர வேண்டும் என்பதையே நமக்கு காட்டுகின்றன

டாம்  ஃபௌடி, அரசியல்  மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த பிரிட்டிஷ் ஆய்வாளர்.

சிஜிடிஎன், 2020 ஏப்ரல்  11

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கோவிட்-19இன் மரபணு வரிசை குறித்து தங்களுடைய புதிய ஆய்வு முடிவுகளை ஏப்ரல் 8 அன்று வெளியிட்டுள்ளனர். தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகள் என்ற ஆய்விதழில் அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சக ஆய்வாளர்களால் அந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்றாலும், அந்த வைரஸ் தன்னுடைய மரபணுக்களில் பல பிறழ்வு வடிவங்களைக் கொண்டுள்ளது என்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

ஏ, பி, சி என்ற வகைகளாக விவரிக்கப்படும் இந்த பிறழ்வுகள் சில பிராந்தியங்களில்  நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக மாறும். மற்ற இடங்களில் எதிர்ப்பை எதிர்கொள்ளும். புதிய வகை வைரஸை உருவாக்குகின்ற ’நிறுவியவர்  விளைவை’ கொத்து நோய்த்தொற்று குழுக்கள்  உருவாக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

வகை A பிறழ்வு நோய் பரவலுக்கு ஆதாரமாக இருந்த, வெளவால்கள் மற்றும் எறும்பு தின்னிகளிலிருந்து பெறப்பட்ட அசல் வைரஸுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அது பின்னர்  வகை B என்று மாற்றமடைந்து. சீனா மற்றும் கிழக்கு ஆசியா முழுவதும், அதற்கு அப்பால் வேறெங்கும் இல்லை என்ற வகையில் தனது தடத்தைப் பதித்தது என்றும் அந்த ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது.

                                                                     photo courtesy CGTN

பின்னர் தொற்று நோய் குழு ’சிங்கப்பூர் கொத்து’ மூலமாக வகை C ஐ உருவாக்கியது. அது பின்னர் இத்தாலியில் கண்டறியப்பட்டு ஐரோப்பாவில் நிலைத்தது. ஆக அந்த ஆய்வு குறிப்பிடுவது போல், பழமையான அந்த வூஹான் B வகை வைரஸ் நோயெதிர்ப்பு ரீதியாகவோ  அல்லது சுற்றுச்சூழல் காரணமாகவோ தன்னை மாற்றியமைத்துக் கொண்டு, கிழக்கு ஆசிய மக்கள்தொகையில்  பெரும் பகுதியினரைச் சென்றடைந்திருக்கிறது. அது கிழக்கு ஆசியாவிற்கு வெளியே உள்ள எதிர்ப்பைக் கடந்து செல்வதற்கு தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.

இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை இருந்தபோதிலும், பிராந்திய மக்கள்தொகைக்கு ஏற்றவாறு வைரஸ் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்ற இந்த ஆய்வு உண்மையில் ஒரு திருப்புமுனையாகும். எனவே வைரஸின் பரவல், அது செல்லுகின்ற தடம் ஆகியவை இதுவரையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு நேர்கோட்டிலோ அல்லது எளிமையானதாகவோ இருக்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத மாறியாக இருப்பதன் மூலம், தனக்கு எதிரான போராட்டத்தை  அது மிகவும் சிக்கலாக்கியுள்ளது.

இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? அனைத்து உண்மைகளையும் புரிந்து கொள்வதற்காக துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறனர். அதே நேரத்தில் இந்த வைரஸைப் பற்றி முழுமையாக கற்றுக் கொள்ளாத உலகம், அது குறித்து மிகக்கூர்மையான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது. இங்கே தேசியவாத அரசியல் தவிர்க்கப்பட்டு, அறிவியல் முன்னுக்கு வர வேண்டும். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நோய் பரவலைத் தடுப்பதற்கு ’சீனாவை வெளியே வைத்திருப்பது’ மட்டும் போதுமானதாக இருக்காது என்பதற்கான அறிவியல் ஆதாரங்களை இந்த ஆய்வு இப்போது நமக்கு அளித்திருக்கிறது.

தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகள் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

வைரஸ் என்பது ஒரு நாடு அல்ல. கோவிட்-19இன் ஆதாரமாக வெளவால்கள் மற்றும் எறும்பு தின்னிகள் இருந்தன என்பதை அடையாளம் கண்டு, ஆரம்ப மையமாக வூஹான் இருந்ததாக அந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஒரு நாட்டின் அடிப்படையில் ஒரு நோய்க்கிருமியை வரையறை செய்வது, நிச்சயமாக அந்த வைரஸ் எவ்வாறு இருக்கிறது அல்லது அது என்ன செய்கிறது என்பதைப் பற்றி எதையும் சொல்லப் போவதில்லை .

நோயின் ஆரம்பகட்ட பரவல் தொடர்பாக குற்றம் சுமத்தி ஏராளமான அரசியல்மயமாக்கப்பட்ட தாக்குதல்கள்  கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்னர் அறியப்பட்டிராத புதிய நோயைப் புரிந்து கொள்வதற்கு உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் போராடிக் கொண்டிருந்த நிலையில், அறிவியலாளர்கள் இதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கான பொறுமை மிகக் குறைவாகவே அவர்களிடம் இருந்தது. அறிவியலை விடக் கூடுதலான முன்னுரிமையை அரசியல் எடுத்துக் கொண்டது. அனைவரும் தங்களை களத்தில் இயங்காத தொற்றுநோயியல் நிபுணர்களாக அறிவித்துக் கொண்டனர்.

ஒரே நேர்கோட்டில் பரவாமல், உலகின் வெவ்வேறு பகுதிகளால் வெவ்வேறு வகையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக, வெவ்வேறு மாறுபாடுகளுடன் கூடிய பிறழ்வுகளின் சிக்கலான வடிவத்தைக் கொண்டு இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவுகிறது என்பதை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம்,  வழக்கமான இருந்து வரும் சிந்தனைக்கு சவால் விடுப்பதற்கு இந்த ஆய்வு உதவுகிறது. இந்த நோய் பரவல் ஏன் சில குறிப்பிட்ட ’கட்டங்களில்’ நடக்கின்றது என்பது குறித்த அடிப்படை புரிதலை உருவாக்க இந்த ஆய்வு உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, இந்த வைரஸின் வகை B கிழக்கு ஆசியாவில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கு அப்பால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  அதன் விளைவாக, சீனா, தென் கொரியா மற்றும் அண்டை நாடுகளில் ஆரம்பகட்ட பரவலுக்கு அது வழிவகுத்தது என்றாலும், மேற்கில் குறைந்த அளவிலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் கொத்து சூழ்நிலையிலிருந்து, C  வகையாக திடீர் மாற்றமடைந்த பிறகே, இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்தாலி வழியாக தன்னுடைய பாதையை உருவாக்கிக் கொண்டு அதற்குப் பிறகு இதர கண்டங்களுக்கும், அமெரிக்காவிற்கும் பரவியது,

                                                                       photo courtesy reuters

வைரஸை அறிவியல் மட்டத்திலோ அல்லது அதன் நடத்தை குறித்தோ புரிந்து கொள்வதற்கு, ‘சீனா’ என்ற முத்திரை உதவாது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. வைரஸின் பரிணாம பாதையின் ஒரு கட்டத்தை அது குறிப்பிட்டுக் காட்டுவதன் விளைவாக, பெய்ஜிங்கிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, வைரஸின் மிகவும் சிக்கலான தன்மையைக் கணக்கிடத் தவறிய மேற்கத்திய எதிர்வினையில் இருந்த முக்கியமான பலவீனத்தை காட்டுகிறது. இத்தாலி, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் சீனாவிலிருந்து வருகின்ற பயணங்களைத் தடை செய்திருந்த போதிலும், இந்த நாடுகளுக்குள்  எப்படியோ வைரஸ் நுழைந்து அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது எவ்வாறு என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.  குறுகிய காலத்திற்குள் ஹூபேயை மரபணு வாய்ப்பால் மட்டுமே தாக்கியிருந்த B வகை இறக்குமதியாவதை அந்த நாடுகள் எதிர்த்து நின்றிருக்கலாம். ஆனால் C வகை மூலமாக என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான முன்கூட்டிய அறிவு  அவர்களிடம் இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு செய்தி இங்கே இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தேசிய எல்லைகளையோ அரசியல் சித்தாந்தங்களையோ வைரஸ்கள் ஒருபோதும் மதிப்பதில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கோ அல்லது குறிப்பிட்ட நிபுணர்களை இழிவுபடுத்துகின்ற விளையாட்டிற்கோ அரசியல் பயன்படாது என்பது நன்றாகவே தெரிகிறது. இங்கே அறிவியல்தான் ஒரே வழியாக இருக்கிறது. உலகம் முழுக்க பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், நாம் வாய் மூடி அமர்ந்திருக்கலாம். அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக, கற்றுக் கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.


https://news.cgtn.com/news/2020-04-11/New-COVID-19-study-shows-science-must-come-before-politics-PATmnK2yze/index.html 

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

One thought on “அரசியலைத் தவிர்த்து அறிவியல் முன்னுக்குவர வேண்டும் – டாம் ஃபௌடி (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)”
  1. தலைவர்கள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எவ்வளோவோ மோசமான செயல்களை எப்பொழுதும் தலைவர்கள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எவ்வளோவோ மோசமான செயல்களை எப்பொழுதும் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். ஆனால், தற்சமயம் உள்ள பிரச்சினை குறிப்பிட்ட நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரது “உயிர்” சம்பத்தப்பட்ட பிரச்சினை. தலைவர்கள் அனைவரும் மக்கள் “உயிர்” கருதியாவது “அறிவியல்” பூர்வமாக பேசுவதும் செயல்படுவதும் அவசியம் என்பதை உணர்த்தும் கட்டுரை.
    நாடுகளால் “ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்பதன் பொருள் இந்த வைரசை தவிர்க்கவேமுடியாது என அர்த்தமா?
    மு. மாரியப்பன், விருது நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *