அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்!

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்!

– ஆயிஷா இரா நடராசன்

 

‘இந்த பூமியில் அமர்ந்து கொண்டு நீங்கள் எந்த அறிவியல் ஆய்வை செய்வதாக இருந்தாலும் நீங்கள் ஆய்வுக்கு வெளியே இல்லை. ஆய்வு பொருட்களில் ஒருவராக உள்ளேயே இருக்கிறீர்கள்.. ஏனெனில் இந்த பூமியில் உள்ள பொருட்களில் நீங்களும் அடக்கம் ஆய்வு முடிவுகளை எழுதும் உங்களையும் சேர்த்து இந்த பிரபஞ்சம் தன் ஆய்வை நடத்திக்கொண்டிருக்கிறது’

– டாக்டர் ஸ்டீபன் ஹாக்கிங்
(Understanding the universe)

அறிவியல் ஆய்வுகள் குறித்து நமக்கு வருத்தம் தரக்கூடிய எந்த எண்ணமும் இல்லை நம்மை பொறுத்தவரையில் அறிவியல் ஆய்வு என்பது அறிவியல் வளர்ச்சிக்கான படிநிலை என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யாத ஆய்வுகள் உண்டா, சமையல் கட்டு முதல் நம் கைப்பேசி வரை இப்படி செய்து பார்ப்போமா அப்படி செய்து பார்ப்போமா என்று நீங்கள் செய்யாத விஷமங்கள் உண்டோ. இப்படியான விஷயங்கள் இல்லை என்றால் இன்றைக்கு யூடியூப் சேனல்கள் உண்டோ. ஆனால் உலகத்தில் விசித்திரமான அறிவியல் ஆய்வுகள் பற்றி அறிந்து கொள்ளும் பொழுது நமக்கே வியர்க்கிறது. அவற்றைப் பற்றி அறியும் பொழுது அவைகளுக்கு நாம் சில விருதுகள் கொடுத்தால் என்ன என்றும் தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலும் அவருக்கு யாரும் இது கொடுத்ததில்லை.

ஆர்க்கிமிடீஸ் தொடங்கி ஐசக் நியூட்டன் வரை அறிவியல் ஆய்வுகள் என்பவை இன்றைக்கும் பெயர் பெற்று நாம் செய்து பார்க்கக் கூடியவையாக உள்ளன. பைசா நகரத்தின் கோபுரத்தில் இருந்து கலிலியோ செய்த ஈர்ப்பு விசையை குறித்த ஆய்வு இன்றைக்கும் வெற்றிடமாக உருவாக்கப்பட்ட இடத்தில் செய்து காண்பிக்கப்படுகிறது. நம்முடைய பள்ளிதோறும் கல்லூரி தோறும் இருக்கின்ற அறிவியல் ஆய்வுக்கூடங்கள் எல்லாம். புதிய ஆய்வுகள் செய்வதற்காகவே இல்லை அவை ஏற்கனவே பல அறிஞர்கள் செய்த ஆய்வை மாணவர்கள் திரும்ப செய்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டவை. அங்கேயும் கூட சில சமயம் இப்படி ஊற்றி பாப்போமா இத இதுலே கலந்து பார்ப்போமா என்று வேதியியல் ஆய்வுகூடங்களில் விநோத விபத்துகள் நடந்து விடுகின்றன.

ஆனால் விஷமத்தனமாகவே நடந்த உலக அளவிலான ஆய்வுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. அப்போது அப்படி ஒரு முக்கியமான ஆய்வு இணையத்தில் வைரலாகி, கின்னஸ் சாதனை கூட படைத்திருக்கிறது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. இந்த ஆய்வை முன்வைத்து நான் விசித்திர ஆய்வுகள் குறித்து அறி வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். உலகில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது முடிவதற்கு சில மணி நேரங்கள் ஆகலாம் சில ஆய்வுகள் முடிவதற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம் ஆனால் 100 வருடங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு ஆய்வு நம்மை உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கிறது ஆஸ்திரேலியாவின் இயற்பியலாளர் தாமஸ் பார்னேல், 1927 ஆம் ஆண்டு இந்த ஆய்வை தொடங்கினார் அன்றாட பொருட்களின் ஆச்சரியமான பண்புகளை உலகிற்கு காட்டுவதற்காக அவர் இந்த ஆய்வை தொடங்கியதாக அவருடைய ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)
பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | The world’s longest-running experiments

பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) என்று இது அழைக்கப்படுகின்றது. பிட்ச் என்று அழைக்கப்படும் பிசுபிசுப்பான தார் போன்ற ஒரு பொருளை இந்த ஆய்வுக்காக அவர் பயன்படுத்தினார். அது தண்ணீரை விட 100 பில்லியன் மடங்கு பிசுபிசுப்பு தன்மை கொண்டது. தேனை விட இரண்டு மில்லியன் மடங்கு கூர்மத் தன்மை கொண்டது. இந்த விசித்திரமான பொருள் பார்ப்பதற்கு திடப்பொருள் போலவே தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது திரவமாகும். சுத்தியலால் அடித்தால் கண்ணாடி போல இது சிதைந்து உடைகிறது. பரிசோதனையின் ஒரு பகுதியாக தாமஸ் பார்னேல் இந்த வகை வேதிக் கலவையை சூடாக்கி கண்ணாடி புனல் ஒன்றில் ஊற்றினார். அது மூன்று ஆண்டுகள் அங்கேயே குளிர்விக்க அனுமதிக்கப்பட்டது. சோதனை 1930 ஆம் ஆண்டு புனலின் அடிப்பகுதியை வெட்டி அதன் மூலம் தொடங்கப்பட்டது ஆய்வாளர் உயிரோடு இருக்கும் பொழுது, 1938 ஆம் ஆண்டு புனல் வழியே முதல் சொட்டு வெளியேறியது. இன்னொரு சொட்டு புனல் வழியே வெளியேறும் அதற்கு எட்டாண்டுகள் ஆகும் என்று அவர் கணித்திருந்தார். அது போலவே 1946 ஆம் ஆண்டு இரண்டாவது துளி புனலின் அடி வழியே சொட்டியது.

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)
தாமஸ் பர்னெல் (Thomas Parnell)

மூன்றாவது சொட்டு 1954 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. ஆய்வை தொடங்கிய விஞ்ஞானி அப்போது உயிரோடு இருக்கவில்லை அவர் 1948 ஆம் ஆண்டு இறந்து போனார்.
தற்போது 2024 வரை 10 சொட்டுகள் தான் புனலின் வழியே விழுந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பாறேல் ஆய்வு கட்டிடத்திற்கு நீங்கள் நேரில் சென்றால் இந்த பரிசோதனையை பார்க்கலாம். உலகிலேயே அதிக நாட்கள் நடக்கும் பரிசோதனை என்று கின்னஸ் புத்தகம் இதைப் பதிவு செய்திருக்கிறது. விஞ்ஞானி தாமஸ் பார்னேல் கணித்ததை போலவே. பூமியின் சூடேற்றம் மற்றும் தட்ப வெட்பம் சார்ந்து சொட்டுகள் வெளியேறுகின்ற கால இடைவெளி மாறுபடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வு தொடருகிறது. ஆய்வை தற்பொழுது விஞ்ஞானியின் மூன்றாம் தலைமுறை மாணவர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். உலக அளவில் இன்றும் தொடரும். இந்த ஆய்வுக்கு நாம் அடடே(!) அறிவியல் ஆய்வு விருது வழங்கி சிறப்பிக்கிறோம்
ஆனால் சொட்டு பரிசோதனை ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கான ஏனைய விசித்திர சோதனைகள் உள்ளன. உதாரணமாக, அடுத்து நாம் வழங்க இருக்கும் அடேங்கப்பா(!) அறிவியல் விருதுக்கு தகுதி பெறும் ஆய்வு ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்..

நாம் இப்போது பார்க்க இருக்கும் அந்த ஆய்வு 1970 ஆண்டு தொடங்கப்பட்டது இந்த ஆய்வை நிகழ்த்தியவர் டாக்டர் ஜான் கல்கௌன். இமானுவேல் காண்ட் என்னும் தத்துவ அறிஞர் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் மனிதனுக்கு தேவையான அனைத்தும் அவனுக்கு கிடைக்கும் என்றால் எவ்விதமான போராட்டமும் நிகழ்த்தாத ஒரு மனிதனை நம்மால் உருவாக்க முடியும் என்று ஒருவகை தத்துவத்தை வெளியிட்டிருந்தார். எலிகளை வைத்து இதை சரிபார்ப்பது என்று ஜான் கல்கௌன் முடிவு செய்தார். தொடங்கியது வினோதமான ஒரு ஆய்வு!

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)
பிரபஞ்சம் 25  (Universe 25 Experiment)

இந்த ஆய்வுக்கு ஜான் கல்கௌன் பிரபஞ்சம் 25  (Universe 25 Experiment) என்று பெயரிட்டார். அவர் எலிகளுக்கான ஒரு அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டினார். அதற்கு பாரடைஸ் அதாவது சொர்க்கம் என்று பெயர். அந்த கட்டிடத்தில் எலிகளுக்கான ஒரு சொர்க்கத்தை அவர் நிறுவினார். அந்த கட்டிடம் முழுவதும் எளிகளுக் கான உண வு கொட்டி வைக்கப்பட்டது அது மட்டுமே அல்ல பொதுவாக எலிகளின் எதிரிகளான பூனையோ பாம்போ அல்லது எந்த வகை எலிகளின் எதிரி விலங்குகளோ அந்த கட்டிடத்திற்குள் நுழைய முடியாது. மொத்தமாக 1317 எலி பொந்துகள் அழகாக வடிவமைக்கப்பட்டு எலிகள் அங்கே கொண்டு வந்து விடப்பட்டன மொத்தம் இருந்த எலிகளில் ஜோடி ஜோடியாக அவை பிரிந்து சொர்க்கத்தை அனுபவிக்கத் தொடங்கின. முதல் கொஞ்சம் நாட்களுக்கு இமானுவேல் கான்ட் வென்று கொண்டிருந்தார். ஆனால் 315 நாட்களுக்கு பிறகு திடீரென்று எலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அதுமட்டுமல்ல ஹிக்கிக்கோமோரி என்று பெயரிடப்பட்ட ஒரு எலி கூட்டம் ஏனைய எலிகள் கூட்டத்தை கும்பலாக சென்று தாக்கத் தொடங்கியது. அப்போது ஆண் எலிகள் அனைத்தும் உளவியல் ரீதியில் மனமுடைந்தன, பெண் எலிகளை அவை கைவிட்டன. அத்தோடு விரைவில் பெண் எலிகளும் தங்கள் குட்டிகளை பேணி பாதுகாப்பதில் இருந்து விலகிக் கொண்டன. ஒரு கட்டத்தில் 410வது நாள் அடைந்த பொழுது புதிதாக எலிக்குட்டி எதுவும் பிறக்கவில்லை. அத்தோடு அந்த ஆண் எலிகளுக்கு இடையே ஓரின புணர்ச்சி என்கிற சில விநோத விஷயங்கள் எல்லாம் ஏற்படத் தொடங்கின..

1973 ஆம் ஆண்டு பிரபஞ்சம் 25 என்கிற அந்த கட்டிடத்தின் சொர்க்கபுரியில் இருந்து ஒரு எலி பாக்கி இல்லாமல் அனைத்தும் இறந்து போயிருந்தது.. அது சொர்க்கமா நரகமா என்கிற கேள்வியோடு ஆய்வு முடிவடைந்து விட்டது.. ஜான் கல்கௌன் இந்த ஆராய்ச்சி குறித்து பல பக்கங்களுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். இன்றைக்கு அந்த ஆய்வை நாம் திரும்பி பார்க்கும் பொழுது மனித சமூகம் இனக்குழுக்கள் சந்தை.. மனித வாழ்க்கை தத்துவ உருவாக்கம் என்று பல விஷயங்கள். பற்றி அடேங்கப்பா என்று யோசிக்கும் அளவிற்கு இந்த ஆய்வு ஆச்சரியப்பட வைப்பதால் நாம் துணிந்து இந்த ஆய்வுக்கு நம்முடைய அடேங்கப்பா ( ! ) அறிவியல் ஆய்வு விருதை வழங்குகின்றோம்!

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)

நம்முடைய அடுத்த விருதை பெறுவதற்கு தகுதியுடைய வரலாற்றின் விபரீத ஆய்வு மருத்துவர் வில்லியம் பியூமண்ட் என்பவரால் நிகழ்த்தப்பட்டது. அலெக்ஸிஸ் செயிண்ட் மார்டின் என்று ஒரு வர்த்தகர் இருந்தார். இவர் செய்தது துணி வணிகம். ஒரு கொடுமையான நேரத்தில் ஒரு கொடுமையான இடத்தில் தவறாக அவர் மாட்டிக்கொண்டார். ஒரு துப்பாக்கி யாரும் எதிர்பார்க்காமல் எதேச்சியாக சுட்ட பொழுது அவர் குறுக்கே போனதால் வயிற்றில் அது ஒரு கையளவு துளையை ஏற்படுத்திவிட்டது. ஆண்டு 1822 காயங்கள் ஆறிப்போயின என்றாலும் மருத்துவர் வில்லியம் பியூமண்ட் கொடுத்த சிகிச்சையின் மூலம் மார்ட்டினின் வயிற்றில் இந்த தூளை இருந்து கொண்டே இருந்தது, அவருக்கு மரணம் ஏற்படவில்லை. ஆனால் வாய் வழியே எதை சாப்பிட்டாலும் அந்த துளையின் வழியே உணவு பொருள் வந்து வெளியில் கொட்டிக் கொண்டிருந்தது. எனவே அவருக்கு அவரது பின் ‘வழியாக’ உணவை செலுத்துகின்ற முறையை மருத்துவர் பியூமண்ட் அறிமுகம் செய்தார்.

ஆனால் சட்டென்று ஒரு நாள் மருத்துவர் வில்லியம் பியூமண்ட் அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அமெரிக்க மருத்துவ அறிவியல் அறிஞரான பியூமண்ட். செயிண்ட் மார்டின் அவர்களை வைத்து வயிற்றில் என்ன நடக்கறது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்வது என்று முடிவு செய்தார். செயிண்ட் மார்டின் அவர்களுக்கும் ஒத்துழைப்பது தவிர வேறு வழி இல்லை ஏனென்றால் இப்போது அவருக்கு வேலையும் போய்விட்டது. பத்தாண்டுகள். மொத்தம் 211 ஆய்வுகளை மருத்துவர் வில்லியம் பியூமண்ட் திறந்து கிடந்த செயிண்ட் மார்ட்டினின் வயிற்று வழியை நிகழ்த்தினார். அந்த கால கட்டத்தில் உணவு வயிற்றுக்குள் சென்ற பிறகு ஒரு மாவரைக்கும் எந்திரம் போல செயல்பட்டு வயிறு அதை அறைக்கிறதா அல்லது நடைபெறுவது ஒரு வேதி மாற்றமா என்பது குறித்த பலவகையான உணவு செரிமானம் பற்றிய விவாதங்கள் உலகமெங்கும் நடந்து கொண்டிருந்தன.

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)

மருத்துவர் வில்லியம் பியூமண்ட் வறுக்கப்பட்ட ஆட்டு இறைச்சியை கயிற்றில் கட்டி அந்த துளை வழியே செலுத்தி அரை மணிநேரத்திற்கு ஒருமுறை வெளியில் எடுத்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆய்வுசெய்து செயிண்ட் மார்டின் வயிற்றில் ‘புளியைக் கரைத்தார்’!. இரைப்பை அமிலத்தின் மாதிரிகளை பிரித்து எடுத்து உள்ளே எவ்வகையான வேதி மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் உலகிற்கு அவர் நிரூபித்தார். இதனால் உணவு செரிமான அறிவியலின் தந்தை என்று மருத்துவர் வில்லியம் பியூமண்ட் இன்று போற்றப்படுகிறார். ஒருவழியாக 1833 ஆம் ஆண்டு ஆய்வு முடிவுக்கு வந்ததாக அறிவித்து அந்த கையளவு ஓட்டையை தையல் போட்டு மூடினார் மருத்துவர் வில்லியம் பியூமண்ட். இந்த ‘அரிய’ ஆய்விற்கு, நாம் ஆளை விடுங்கப்பா(!) அறிவியல் ஆய்வு விருது வழங்கி கௌரவிக்கிறோம்!

அடுத்து நாம் தரப்போவது அடப்பாவிகளா(!) அறிவியல் ஆய்வு விருது! இந்த விருதுக்கு தகுதியுடைய ஒரு வரலாற்று புகழ் பெற்ற ஆய்வு ஃப்ரெடரிக் ஆய்வு என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் ஃப்ரெடரிக் என்கிற அந்த மனிதர் புனித ரோமானிய பேரரசர் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருடைய வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியம் என்று முதல் மனித பிறவிகள் ஆன ஆதாம் ஏவாள் தம்பதிகள் என்ன மொழி இயற்கையாக பேசினார்கள் என்பதை கண்டறிந்து உலகிற்கு அறிவிப்பதுதான் என்று அறிவித்தார். அதற்காக அவர் தேர்வு செய்த ஆய்வுதான் இது. குழந்தைகளை ஆய்வகத்தின் கினி பன்றிகள் ஆக அவர் பயன்படுத்தினார். மன்னரின் ஆதரவோடு தாயிடமிருந்து அப்போது பிறந்த குழந்தைகளை பிரித்து எடுத்தார் யாருமே குழந்தைகளிடம் பேசாமல் இருந்தால் தானாகவே இயற்கையாக குழந்தைகள் பேசும் மொழி தான் ஆதாம் ஏவாள் பேசிய மொழியாக இருக்கும் என்று அவர் நம்பினார்.

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)

மொத்தம் 12 குழந்தைகள் அத்தனை குழந்தைகளையும் செவிலியர்கள் கூட அருகில் செல்லாதபடி யாருமற்றவர்கள் ஆக்கி அதே சமயத்தில் குழாய்களின் வழியாக வாயில் உணவு செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஜன்னல் வழியாக பஞ்சு கட்டப்பட்ட கழிகளை பயன்படுத்தி கழிவுகள் நீக்கப்பட்டன. எந்த மொழியுமே அவர்களின் காதுகளில் விழாத அளவிற்கு உலகமே மௌனமாக அவர்கள் முன் சித்தரிக்கப்பட்டது. யாருமே அருகில் செல்ல அனுமதிக்கபடவில்லை. இதன் மூலம் ஆதாமும் ஏவாளும் பேசிய மொழி ஹீப்ரூ மொழியாக இருக்குமா, கிரேக்கமா, லத்தினா, அரபிக்கா என்பதை கண்டறிந்து தான் அறிவிக்கப்போவதாக இரண்டாம் பெடரிக் அறிவித்துக்கொண்டிருந்தார்.

இந்த குழந்தைகள் மிக துயரமான முடிவை கண்டன. கை கால்களை அசைக்காமலோ. யாரையாவது பார்த்து புன்னகை காமலோ அன்பு கிடைக்காமலோ. குழந்தைகளால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. உயர்ந்தபட்சமாக ஒரு குழந்தை ஆறு மாதம் இருந்தது மற்ற எல்லா குழந்தைகளுமே முதல் நான்கு மாதங்களுக்குள்ளாகவே இறந்து போயின. ஆதாமும் ஏவாளும் பேசி யது என்ன மொழி என்பதை கண்டுபிடிப்பதற்கு பதிலாக இரண்டாம் ஃப்ரெடரிக் அன்பு செலுத்தப்படாவிட்டால் குழந்தைகள் இறந்து விடும் என்று தன்னுடைய ஆய்வு முடிவை அறிவித்தார். அவருக்கு நாம் நம்முடைய அடப்பாவிகளா (!)அறிவியல் ஆய்வு விருதை வெற்றிகரமாக வழங்குகின்றோம்.

அய்யய்யோ அறிவியல் ஆய்வுகளும் நம்ம விருதுகளும்! | பிட்ச் டிராப் பரிசோதனை (Pitch Drop Experiment) | பிரபஞ்சம் 25 ஆய்வு (Universe 25 Experiment)

அடுத்து நாம் வழங்க இருக்கும் விருதை பெறுவதற்கான ஆய்வு. 1969 நடத்தப்பட்டது ஆகும். மனித குரங்குகளின் மீதான போதை பொருள் சோதனைகள் (Monkey Drug Trials) என்று இந்த ஆய்வுகள் அழைக்கப்படுகின்றன. மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையின் மூன்று பேராசிரியர்கள் ஜீ டி நேயோ, டீ எனாகீதா, எம் எச் சிவர் ஆகியோர் மனித குரங்குகளின் மூலம் மனிதனுக்கு போதை பொருட்கள் எத்தனை ஆபத்தானவை என்பதை நிரூபிக்க இந்த ஆய்வுகளை மேற்கொண்டதாக பின் நாட்களில் அறிவித்தனர். இந்த குரங்கு மருந்து சோதனைகளுக்காக சிம்பன்ஸி வகைக் குரங்குகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை கூண்டுகளில் அடைத்தார்கள். மொத்தம் 18 சிம்பன்சிகள் அவர்களினுடைய ரத்த நாளங்களுக்குள் சிரிஞ்சு குழாய்கள் பொருத்தப்பட்டன. தாங்கள் விரும்பும் போதெல்லாம் ஒரு பித்தானை அழுத்தி இந்த குரங்குகள் தங்களுக்கு போதைப் பொருளை ஊசி வழியே செலுத்தி கொள்ள முடியும். இந்த முறையை அவை பழகும் வரை இந்த ரத்த நாள ஊசிகளுக்குள் சலைன் என்று அழைக்கப்படும் உமிழ்நீர் செலுத்தப்பட்டது. ஆனால் இந்த பித்தான்களை அழுத்தி தங்களால் ஊசிகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பதை சிம்பன்சிகள் உணர்ந்த பொழுது அவைகளுக்கு பல விதமான போதை பொருட்கள் சேர்க்கப்பட்டன.

கோகோயின், மார்ஃபின், காஃபின், மிஸ்டலைன், பெண்டோப்பார்பிடல் உட்பட பல்வேறு போதை ஊசிகளை அந்த குரங்குகள் தங்களுக்கு தாங்களே விளைவு தெரியாமல் செலுத்திக் கொண்டன. மனோவியல் ரீதியிலாக விரைவில் அவைகளுக்கு ஏற்படுகின்ற நடுக்கம் பிரமை வலிப்பு இவற்றோடு பெரும்பாலான குரங்குகளுக்கு திடீர் மரணமும் ஏற்பட்டது. இவ்வகையான போதைப்பொருள் சார்ந்த உடலியல் அறிகுறிகளை மனித அறிகுறிகளோடு ஒப்பிட்டு ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்த பொழுது தான் இப்படி ஒரு மனிதாபிமானமற்ற ஆய்வு அப்பாவி சிம்பன்சிகளின் மீது நடத்தப்பட்டதையே அமெரிக்க உளவியல் சங்கம் அறிந்தது. இதுபோன்ற கொடிய ஆய்வுகள் நடத்துவதை உடனடியாக அமெரிக்கா உட்பட பல அரசாங்கங்கள் தடைசெய்தன. ஆனால் இந்த நிலையை எட்டுவதற்குள் 18 சிம்பன்சிகளும்மே பரிதாபமாக உயிரிழந்தன என்பதை வாசிக்கும் பொழுது நம்முடைய கடைசி விருதான என்ன கொடும சார் இது(!) அறிவியல் ஆய்வு விருதை இந்த ஆய்வுக்கு வழங்கி நம் கண்டனங்களை பதிவு செய்வோம்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. எல்லாமே அடப்பாவிகளா என்றே சொல்ல வைக்கிறது. மற்ற உயிரினங்களை வதைத்து சோதனை செய்து , இந்த மனிதன் தான் வாழ்வதற்காகவே இந்த உலகம் படைக்கப்பட்டது என்று எப்படியெல்லாம் குரூரமாக சிந்திக்கிறான்…விருதின் பெயர்கள் எல்லாம் அட்டகாசம்..

  2. Sasikumar

    கட்டுரை அறிவியலின் விசித்திரங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் மாறுபட்ட பார்வையில் விளக்கியுள்ளது. பிட்ச் டிராப் பரிசோதனை மூலம் காலத்தின் அடையாளமாக நின்ற ஆய்வுகள், நம் அறிவியலின் ஆழத்தையும் அதன் பொறுமையும் வெளிப்படுத்துகின்றன. தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் இந்த ப்ராஜெக்ட், மனிதனின் ஆராய்ச்சி குணத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் உறுதிப்படுத்துகிறது.
    அதேபோல், பிரபஞ்சம் 25 ஆய்வுகள் மனித மனதின் செயல்பாடுகளை வெளிப்படுத்தி, சமூக வாழ்க்கையில் அதன் தாக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த கட்டுரையின் எழுத்து நடை மற்றும் தகுந்த உதாரணங்கள், பொதுமக்கள் அறிவியலின் சிக்கல்களை எளிமையாக புரிந்து கொள்ள உதவும் வகையில் உள்ளன. இது அறிவியல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

  3. B. Gopalan

    பல வினோதமான அறிவியல் ஆய்வுகளைப் பற்றிய சுவாரசியமான கட்டுரை. அவற்றிக்கு பொருத்தமான சான்றிதல்கள் வழங்கியிருப்பதும் பிரமாதம்! சில சோதனைகள் மனிதாபிமானம் அற்றவையாக இருந்துள்ளது வேதனை அளிக்கிறது. வீர விளையாட்டு என்ற பெயரில், ரோமானிய அரசர்கள் நடத்திவந்த Gladiators , ஸ்பானிஷ் அரசர்கள் நடத்திய Matador எருமை சண்டையையும் போன்ற கொடூர சோதனைகளை நினைவூட்டுகிறது……….. நான் அறிந்த வரையில் நெடு நாளைய தொடர்ந்த ஆராய்ச்சி என்பது ரஷியா கோலா நில ஆழ்துளை சோதனைதான். The Kola Superdeep Borehole SG-3. பாதாள பூமியின் தன்மையை ஆராய்வதாரக்காக 1970 ல் தொடங்கி 1989 வரை 12,262 மீட்டர் ( 40,000 அடிக்கு மேல்) தோண்டியது. அதற்குக் கீழே செல்வதற்கு நிதியில்லை. பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தரவுகளைத் திரட்டி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *