நூல் அறிமுகம்: ராணுவ விஞ்ஞானி. வி. டில்லிபாபுவின் *போர்முனை முதல் தெருமுனை வரை!* – டாக்டர். மெ. ஞானசேகர்நூல் : போர்முனை முதல் தெருமுனை வரை
ஆசிரியர் : ராணுவ விஞ்ஞானி. வி. டில்லிபாபு
வெளியீடு : தி இந்து – தமிழ் திசை
விலை : ரூ. 180-

ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு அவர்களின் நேர்த்தியான மற்றொரு படைப்பான ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ தமிழில் வெளிவந்துள்ள சிறந்ததொரு பயன்பாட்டு அறிவியல் நூல். இராணுவ வீரர்கள் துப்பாக்கிகளையும்;, பீரங்கிகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு நாட்டைப் பாதுகாக்கின்றார்கள் என்று தான் பொதுவாக மக்கள் எண்ணுகின்றார்கள். ஆனால், தொழில் நுட்ப வளர்ச்சி மிகுந்த இ;ந்தக் காலக்கட்டத்தில் அதிநவீனத் தொழில் நுட்ப அறிவியலைப் பயன்படுத்தும் களமாகவும், தளமாகவும் இராணுவமும், அதன் வீரர்களும், திகழ்கின்றார்கள் என்பதை மிக அருமையாக 24-கட்டுரைகள் மூலம் எழுதி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார் விஞ்ஞானி வி.டில்லிபாபு.

ராணுவத்தின் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஊன்றுகோலாகவும், வழிகாட்டியாகவும், கருவிகளைக் கண்டறிந்து வழங்கும் தொழில் மையமாகவும், ஆய்வுக் கூடமாகவும் திகழும் னு.சு.னு.ழு என்ற இராணுவ ஆராய்ச்சிக் கூடங்களின் ஒப்பற்ற செயல்பாடுகளையும், சேவைகளையும் நூல் முழுவதும் காண முடிகின்றது.

ராணுவச் செயல்பாட்டின் இதயமாகச் செயல்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் ராணுவத்துக்கு மட்டுமல்லாமல் பொதுமக்கள் வாழ்விலும் பெரும்பங்காற்றுவதை விளக்குகின்றன நூலின் கட்டுரைகள்.

பனிபடர்ந்த குளிர்ப் பிரதேசங்களில் கழிவு நீர் மற்றும் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை அறவே நீக்க உருவானவை தான் உயிரிக் கழிப்பறைகள் (டீஐழு வுஐழுடுநுவுளு). இன்று ரயில்வேயிலும், பொது இடங்களிலும் சுற்றுச் சூழல் காவலனாக இவை பயன்படுவது ராணுவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே என்பதையும், தொழில் நுட்பத்தையும் ‘உயிரிக் கழிப்பறை எனும் உயரிய கண்டுபிடிப்பு’ தெளிவுபடுத்துகிறது.

“போர் விமானம் எல்லாம் தயாரிக்கிறீர்களே! கொசுத் தொல்லைக்கு மருந்து இல்லையா?” என்ற கேள்விக்குப் பதிலாக அமைந்தது தான் ‘தீபா’ என்ற கொசு விரட்டி.
மலையுச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு. அங்கு கிடைக்கும் குறைந்த ஆக்ஸிஐனோடு வாழ்வதே கடினம். அவர்களுக்கு வாழ்வளிக்கும் ‘உறக்கப் பை’ ஒரு அரிய கண்டுபிடிப்பு. பனி மலையின் தோல் வெடிப்பிலிருந்து பாதுகாக்கும் ‘எதிர் கிரீம்’ ஒரு சாதனை.40-நாட்கள் கெடாத இட்லி, சாம்பார், அதன் தொழில்நுட்பம், பனிபடர்ந்த இடத்திலும் அடுப்பில்லாமல் சூடாகச் சாப்பிடும் உணவு வகைகள், அதன் பின்னேயுள்ள தொழில் நுட்பம்…. அடடா எத்தனை கண்டுபிடிப்புகள்… எத்தனை அற்புதமான தீர்வுகள்… என்று வாசிக்கும் நம்மை வியக்க வைக்கின்றன.

அவசரப் பாலம் கட்டும் இராணுவத் தொழில்நுட்பம், தண்ணீரைத் தூய்மையாக்கும் தொழில்நுட்பம், ‘தக்ஷ்’ போன்ற காக்கும் எந்திரன்கள், எறி எந்திரன், உப்பு மூட்டை எந்திர ஜோடி என்று கண்டுபிடிப்புகளும், அவற்றின் கணக்கற்ற பயன்பாடுகளும் வாசிக்கும் நம்மைச் சிலிர்க்கச் செய்கின்றன.

இந்திய தேசத்தில் மிகப்பெரிய ஆராய்ச்சிப் பணியை, கண்டுபிடிப்புகளை ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் தந்து கொண்டிருக்கும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களின் பணி மகத்தானது என்பதற்கு எண்ணற்ற தரவுகளை அழகிய தமிழில், அறிவியல் தமிழில் மிகச்சிறப்பாகத் தந்துள்ளார் ராணுவ விஞ்ஞானி வி. டில்லி பாபு.

அதிகக் கனமான நடைக்கருவிகளின் எடையைக் குறைத்து கனமற்ற நடைக்கருவிகளை மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு வழங்கியதும் ராணுவ விஞ்ஞானிகள் தந்த தொழில்நுட்பமே. இதயத்துக்குச் செல்லும் வலைகுழாயினை உடலோடு ஒத்துப்போகும் வலைகுழாயாக தந்ததும் இந்த விஞ்ஞானிகளின் சாதனையே. இவ்விரண்டு தொழில்நுட்பமும் பயனுள்ளதாகிடக் காரணமாக அமைந்தவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களே. அவரே தலைவராக இருந்த னு.சு.னு.ழு- வின் சாதனைகளின் தொடர்ச்சியைப் பாங்குற எழுதியுள்ளார் நூலாசிரியர்.

தீயணைப்பு வீரர்களின் உடையில் பாதுகாப்பு மற்றும் பயனாக அமைந்துள்ள ‘தீ அண்மை உடை’ மற்றும் ஆழம் தெரியாத இடங்களில் ஆபத்தைப் போக்கும் ‘தாரங்கினி’ மற்றும் ‘சஞ்சீவனி’ போன்றவை வாசிப்பவர்களுக்கு நமது ராணுவ விஞ்ஞானிகள் நமக்கு தந்துள்ள சமூகப் பாதுகாப்புகளுக்கு நன்றி சொல்ல வைக்கின்றது.

கலவரங்களைக் கட்டுப்படுத்தும், கண்கட்டி வித்தை காட்டும் லேசர் கருவிகள் மற்றும் பயன்பாடுகள், ‘பூட் ஜோலோக்கியா’ என்னும் கின்னஸ் சாதனை படைத்த மிளகாயின் சக்திமிக்க வீச்சு நம்மை அதிசயத்தில் ஆழ்த்துகின்றது.

‘பாராசூட்’ விஞ்ஞானமும், அபிநந்தனைக் காப்பாற்றிய ‘காக்பிட்’ என்னும் சேவல் சண்டைப் பள்ளத்தின் அறிவியல் ஆர்ப்பரிப்பும்… ஆஹா எத்தனை சுவாரஷ்யமான செய்திகள்! என்று பக்கங்களின் வாசிப்பில் ஈர்ப்பை அதிகப்படுத்துகின்றது.நூலை வாசிக்கும் பல இடங்களில் நூலாசிரியர் கையாண்டு எழுதியுள்ள அருமையான அறிவியல் தமிழுக்கும், எந்த வயதினர் படித்தாலும் சுவை குன்றாது செல்லும் தமிழ் நடைக்கும் ஆங்காங்கே அவருக்கு சபாஷ், அடடா, ஆஹா என்று வாழ்த்துச் சொல்லத் தூண்டுகின்றது.

லடாக் பகுதியில் பனி மட்டும் போர்த்தியிருந்த பகுதியில் மரங்களை வளர்த்துப் பசுமைப் பகுதியாக மாற்றிய ராணுவத்தின் விவசாயச் சாதனைகள் பாராட்டுக்குரியது. 1960-களில் ஐந்து காய்கறிகள் மட்டுமே விளைந்த பகுதியில் 2008-ஆம் ஆண்டில் 78-காய்கறிகளை விளைவிக்கும் தொழில்நுட்பம் கண்ட ராணுவ விஞ்ஞானிகள் போற்றுதற்குரியவர்கள். பிராய்லர் ஆடுகளையும் உருவாக்கி உணவுத் தேவையை தன்னிறைவு செய்து கொள்ள வைத்த விஞ்ஞானிகளின் முயற்சி முத்தானது. ஆம், ‘ராணுவம் தன் வயிற்றால் நகர்கிறது’ என்ற சொல்லின் அர்த்தமறிந்த வீரர்களுக்கு உணவுத் தேவையில், பாதுகாப்பில் ஒப்பற்ற கண்டுபிடிப்புகளை, தொழில் நுட்பத்தை வழங்கியுள்ளது விஞ்ஞானிகளின் மாபெரும் சாதனையாகும்.

நச்சில்லாத காற்று, பாதுகாப்பு வேலிகள், ஆமணக்கு ஆயுதம், காற்றுச் சுவாசக் கூடாரம், பூச்சிக் கொல்லி பூச்சு, காதுக்கு கார்வோஜன் என்று அனைத்துத் தலைப்புகளும், அவை தரும் செய்திகளும் நமக்கு இந்திய தேசத்தின் அறிவியல் வளர்ச்சியை, ராணுவ விஞ்ஞானிகளின் அபார உழைப்பைப் படம் போட்டுக் காட்டுகின்றன. ஆம், நூலில் ஆங்காங்கே தரப்பட்டுள்ள படங்களும் வாசிக்கும் செய்தியின் சாரத்தை ஆழமாக நம் உள்ளத்தில் பதிக்கின்றன.

இராணுவக் கண்டுபிடிப்புகளைத் தமிழில், எளிய நடையில் வழங்கியுள்ளதை ‘இந்து தமிழ்திசை’ ஆசிரியர் அசோகன் வாழ்த்தியுள்ளார். பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை ‘மக்களுக்கான அறிவியல் நூல்’ என்றும், ‘இந்திய மொழிகளில் முதல் முயற்சி’ என்று சந்திராயன் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் பாராட்டியுள்ளார்கள்.

முப்படைகளின் மூளையாகத் திகழும் ராணுவ விஞ்ஞானிகளின் பணி, சாதனை மற்றும் தேச அக்கறையை எடுத்துச் சொல்லும் அருமையான புத்தகமாக |போர்முனை முதல் தெருமுனை வரை| திகழ்கின்றது.

மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், தேச நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெறச் சிறந்த நூல். எண்ணற்ற அறிவியல் தமிழ்ச் சொற்களை மிக எளிய வார்த்தைகளில் எடுத்துக் கொண்டு ராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு உருவாக்கியுள்ள இந்த நூல் தமிழில் நமக்குக் கிடைத்த நமது தேசத்தின் ராணுவ விஞ்ஞானிகளின் படைப்புகளைச் சொல்லும் ‘அறிவியல் களஞ்சியம்| என்பதே சாலப் பொருந்துவதாக இருக்கும்.

டாக்டர். மெ. ஞானசேகர்,
ஆசிரியர், ‘ஆளுமைச் சிற்பி’ – மாத இதழ்