“உங்க அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்யுங்கள்”

இந்த தொடரில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களுக்குள் ஏதேனும் ஒன்றில்
நீங்களாகும் நானாகவும்
குடும்பத்தில் இருக்கக்கூடிய
எவராக ஒருவராகவும் இருப்போம்.. இருக்கிறோம்..
அதுதான் உண்மை.!

பெண் ஒருவருக்கு எதிர்பாராத
திடீர் மரணம் சம்பவித்தால்..
அல்லது தற்கொலை செய்து கொண்டால்..
அல்லது காணாமல் போய்
அவரது எங்கேயாவது கண்டு எடுக்கப்பட்டால்..
அதிலும் அவர் இளம் பெண் என்றால்
அவரின் உடலை
சட்டத்துக்கு உட்பட்டு
உடற்கூறு ஆய்வு செய்வதோடு அல்லாமல்
அறிவுக்கு புறம்பாக
பலர் பேசும் பேச்சுக்களும்
அவர் வாழ்ந்த முறையினை
விதவிதமாக.. இஷ்டத்துக்கும்
சொற்களின் கத்திகளால் குத்திட்டிகள் கொண்டு
குத்திக் கிழித்து ஆய்வு செய்யும்
நம் பெருமைக்குரிய ஆணாதிக்க சமூகம்..
ஆணாதிக்கம் என்பதனை
பெண்களுக்குள்ளேயும் வலுவாக கட்டமைத்து வைத்திருக்கும்
நம்முடைய மதிப்பிற்குரிய சமூகம்..
பெண் பித்தன் ராமனை கொண்டாடிய சமூகம்
தீயில் தள்ளி விடப்பட்ட சீதையையும் கொண்டாடியது.. கொண்டாடிக் கொண்டும் இருக்கிறது.
ஐந்து ஆண்களோடு
பெண் ஒருத்தி பட்ட பாட்டை பேச வக்கில்லாத சமூகம்
பஞ்ச பாண்டவர்களைத்தான் கொண்டாடியது..
பெருநோய் பிடித்த ஆண் விருப்பப்பட்டால்
சீழ் வடியும் ஆண் குறியையும்
தலையில் தூக்கி சுமக்க வேண்டும் என்று
நளாயினியின் வலியை பேசாமல்
அவன் அழுக்கேறிய விந்துக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது நம் சமூகம்..
தன் காதலை விருப்பத்தை
தைரியமாக சுதந்திரமாக சொல்லியதால்
மூக்கை அறுத்து அரக்கி என்று பட்டம் சூட்டி அறிமுகப்படுத்தியது நம் சமூகம்..

அவ்வளவு ஏன்
காதலித்து மனம் புரிந்த ஆண் பெண் இருவருக்குள்
மனமாச்சரியங்கள் நிகழ்ந்துவிடும் பொழுதில்
ஆண் தன் இணையை ஒதுக்கிவிட்டு
வேறு ஒரு பெண்ணோடு இணைந்து வாழ்தலை ஏற்றுக்கொள்கிறோம்
அதே பெண்
தன் எண்ணங்களை சுய மரியாதைக்கு
இழுக்கு ஏற்படும் செயலை காதலித்து மனம் புரிந்தவன் செய்ய முற்படும்பொழுது எதிர்த்து வெளியே வந்து
என்னோடு “நீ இணைந்து வாழ தகுதியற்றவன்” என்று கூறி வேறு ஒரு ஆணோடு இணைந்து வாழ விரும்புவதை
இழிவாகப் பேசும் இந்தச் சமூகத்தில்
இருந்து தான்
சிறு நெருப்பாக
புறப்பட்டு வந்திருக்கிறாள்
கருத்தாயிதம்தனை சொற்களில் ஏந்தி
ஆணாதிக்கச் சிந்தனைக்குள்
பெரும் சமர் புரிய..
அயலி..
அவளோடு இணைவோம்.

தமிழ் திரைப்பட உலகமும்..
தொலைக்காட்சிகளில் ஓ டி டி தளங்களும்
பெண்கள் சந்தித்திடும் பிரச்சனைகளை மேலோட்டமாகவும் ஆழமாகவும்
பேசி வந்ததை தொடர்ந்து
பெண்கள் தங்களின்
வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை!
நேர் எதிர் கொண்டு போராடத் தயாராக வேண்டியதின் அவசியத்தையும்
திரை மொழி நுட்பத்தோடு
காத்திரமான உரையாடல்களின் வழியாக
பரவலாக தற்போது பேசத் தொடங்கி இருப்பது
மெச்சத்தகுந்ததாகும்.

பகுத்தறியும் எண்ணம், ஆண் பெண் சமத்துவம், பாலின பேதம் குறித்து நல்லதொரு புரிதலோடு பேசியும் விவாதித்துக் கொண்டும் இருக்கக்கூடிய பல புதிய இளம் இயக்குனர்கள் கதாசிரியர்கள் ஒளிப்பதிவாளர்கள் திரைக்கதை எழுதக் கூடியவர்கள் திரைப்பட தொழில்நுட்ப பணிகளை அறிந்தவர்கள்
இப்படி பலரின் வரவால் பாராட்டுக்குரிய நல்ல அம்சங்களை உள்ளடக்கியதாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது நம்முடைய காட்சித் துறை என்பது
மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

பெண்கள்
தனிநபரின் தனி ஆண்களின் குடும்பத்தின் சொத்தாக பொருளாக தொடர்ந்திட வேண்டும் என்பதற்காகவே
ஆண்கள்
அதற்கான தெய்வங்களைப் படைத்தார்கள்
பெண் தெய்வங்களின் பெயரால்
பெண்களின் உழைப்பை உடலை
தன் வசப்படுத்தி, விடாதுதொடர வேண்டும் என்பதை கவனப்படுத்தி மனித மனங்களை கட்டமைத்து வந்தார்கள்.
பெண் உடலை எப்படி பார்க்க வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் புனிதமாக பூஜிக்கப்பட வேண்டும்
என்பதை பெண்களை வைத்தே
பெண்களுக்கு எதிராக பேசிடும்
வஞ்சகத்தையும் நிதம் தொடர்ந்தார்கள் இன்றும் அதைத் தொடர்கிறார்கள்.

தியாகத்தின் புனிதத்தின் அடையாளமே பெண்கள் என்று பேசி
கௌரவம் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் அவர்களை முழுவதுமாக சிறை படுத்தினார்கள்.
எப்போதாவது சிறகு விரிக்க நினைக்கும்
எண்ணத்தின் கடைசி வேர் வரை
அமிலக் கரைசலை ஊற்றி தங்களுக்கு
சிறிய இழப்பு ஏதும் நிகழாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள் ஆண்கள்.

இயற்கையின் வசந்தம் எல்லாருக்கும் என்றாலும்
பெண்களுக்கு மட்டும் இங்கே வெக்கையாகவும் வியர்வையாகவும்
நகக்குறியின் கீறலில் இருந்து வெளியேறும் பச்சை ரத்தத்தின் பிசுபிசுக்கு மட்டுமே நற்கொடையெனவும்
கொடுப்பினையாகவும், விதியாகவும்
கடவுளின் பெயரால் வரமாக அளிக்கப்பட்டதுவென கண்ணுக்குத் தெரியாத மாயவலை ஒன்றினை சூது எண்ணம் கொண்டு
விரித்து வைத்திருக்கிறார்கள். அந்த மாய வலையை அறுத்து எறிய முற்படும் பொழுதெல்லாம் சக பறவைகளே அம்பு வீசி கொள்வதுதான் தர்மம், நீதி, வழக்கம் என்றும் காலம் காலமாக போதிக்கப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள் ஆண்களால்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிராகவும் அவர்களின் சுய மரியாதையினை அவமதிப்பிற்கு உள்ளாக்குபவைகளாகவும்
சுயமான அறிவார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு தடையாகவும்
ஆண்களால் பொதுச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட,உருவாக்கப்பட்ட, புனிதமாக்கப்பட்ட, கடமைகளாக்கப்பட்ட, பொறுப்புகளாக முடிவு செய்யப்பட்ட பண்பாடு, பழக்க வழக்கம், கலாச்சாரம், சடங்கு, சம்பிரதாயம் என அனைத்தையும்
நம்முடைய சிந்திக்கும் திறனால் உண்மைகளை
பகுத்தறிந்து ஆராய்ந்திட வேண்டும் என்கிற மெய்யான நிஜத்தை
அயலி தமிழரசி

தமிழரசி
தனி ஒரு பெண்ணாக இருந்து சாகசம் நிகழ்த்தாமல், எதிராளி அமைத்து வைத்திருக்கும் பழக்க வழக்கங்களுக்குள் புகுந்து, அந்த வழியில் நின்றே அவர்களின் பொய் முகத்திரையை, வீரபண்ணை கிராமத்து பெண்கள் அனைவரையும் நியாயத்தின்
மெய்யான உண்மையில் பக்கம் நிற்க வைத்து கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார் ..

“உன் அறிவு என்ன சொல்கிறதோ அதன்படி பேசு”
உனக்கான சுயமரியாதை மிகுந்த வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள் என்று முடிக்கிறார்.

“அயலி என்கிற பெண் தெய்வத்தை மட்டும் பற்றி இங்கு பேசுகிறோமே அப்படி ஒரு தெய்வம் உருவாக காரணமாக இருந்த ஆண் குறித்து எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா பேசி இருக்கிறோமா.? அவன் எங்கே போனான்..? என்னவானான்.. அப்படி ஒருவன் இருந்தானா”
என்கிற அறிவார்ந்த கேள்வியை
கயல் எழுப்புவது மறு வாசிப்பின்
அட்டகாசம்.

எல்லாவிதமான மாற்றங்களும் தனி ஒருவரின் ஆராயும்.. பகுத்தறியும் எண்ணத்திலிருந்தும் சக்தியிலிருந்தும் தொடங்கினாலும், அங்கிருந்து வெளிப்படும் கேள்வியில், இருக்கக்கூடிய நியாயத்தை, நிஜத்தை பெருவெளியில் இருக்கக்கூடிய எல்லோரையும் உணர வைத்து.. அது சக்தி மிகுந்த இயக்கமாக மாற்றப்படும் பொழுதே மாற்றங்கள் இங்கே சாத்தியமாகும் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் #முத்துக்குமார்.

வெகு மக்களின் சக்தியை உணர வேண்டும், அவர்களுக்கு அதை உணர்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குனர் அவர்கள்.

விடுதலையும் சுதந்திரமும் சமூகத்தில் இருப்பவர்களால் கொடுப்பது பெறுவது என்பது கிடையாது, அதை நோக்கி நடை போடுவது. அதற்கான வழிமுறைகளை திட்டமிடுவது. எண்ணிக்கைகளின் குணம்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதுதான். அதனை தன் அக்கா படிக்க வேண்டும் என்று தன் அப்பாவிடம் கேட்கும் ஆண் குழந்தையிலிருந்து தொடங்கி இருக்கிறார் இயக்குனர்.

குடும்ப கவுரமும்,சுய கௌரவம்
தன்மனதில் இருக்கக்கூடிய அன்பினை குடும்பத்தில் மீது இருக்கும் காதலை
கொலை செய்யும் ஆத்திரத்தோடு எடுக்கப்பட்ட வெட்டறிவாளை கீழே வீசி வீசி எறியும் தவசியில் இருந்து தொடங்கி இருக்கிறார் மாற்றத்தை இயக்குனர். “வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்” என்று கணவன் கேட்கும் பொழுது “உனக்கு முன்னால் எழுந்து நீ தூங்கியே பின்னால் தூங்கப்போகும் நான் சும்மா இருக்கிறேனா..? என்று பதில் கேள்வி எழுப்பி அன்றாட வேலைகளை பட்டியலிடும் அந்த மனைவியிடம் இருந்து தொடங்கி இருக்கிறார் எதிர் கேள்வியின் வழியாக மாற்றத்தை இயக்குனர். இப்படியான மாற்றங்கள் இரு பக்கமும் நடக்கும் பொழுதே மெய்யான விடுதலை என்பதும் சமத்துவம் என்பதும் வளர்ந்தோங்கும் என்பதை இயக்குனர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

கல்வி அறிவுதான், பகுத்தறிவுதான் எல்லாவிதமான விடுதலைக்கும் தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதை இயக்குனர் சரியாகவே புரிந்து படத்தை ஆரம்பம் முதலில் கடைசிவரை
தொய்வேதும் இன்றி அமர்க்களமாக கொடுத்திருக்கிறார்.

தமிழரசியாகவும்.. குருவம்மாவாகவும்
நடித்திருப்பவர்கள் நடிப்பினில்
நிறைய சாகசங்களை படம் முழுவதும் நிகழ்த்திக் கொண்டே இருப்பார்கள்..
குழந்தை அம்மாவாக பல நேரங்களிலும்..
அம்மா குழந்தையாக பல நேரங்களிலும்தான்
இருவரும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள். சபாஷ் மக்களே.

பிரதான பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே மிகச் சரியான அளவில் கதாப்பாத்திரங்களாக வாழ்ந்து நடித்து முடித்து இருக்கிறார்கள்.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை பெண்களும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

படத்தில் பங்கேற்ற திரைக் கலைஞர்கள் நாடக நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே
பெருமைப்படுத்த வேண்டியவர்கள் பொதுச் சமூகத்தால்.

அயலி
நம்மை அறிவு பூர்வமாக சிந்திக்க சொல்லி இருக்கிறாள்.
நிஜங்களை வாய் திறந்து பேச சொல்லி இருக்கிறார்.

– கருப்பு அன்பரசன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “திரைவிமர்சனம்: அயலி..வெப் சீரியஸ் – கருப்பு அன்பரசன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *