புலம் பெயர்தல் என்பது ஆதிசமூகமான வேட்டையாடி குடி தோன்றிய காலத்திலிருந்தே மனித குலம் தனக்கான வாழ்வாதாரத்தை நோக்கி தனக்கு தகுந்தாற் போல தேவைகளின் அடிப்படையில் நகர்ந்து வாழந்த நாடோடிகள்… எவ்விடத்தில் தமது இருப்பை தகவைத்துக் கொள்ள் ஏதுவாக இருந்ததோ அங்கே கூடி வரும் கூட்டத்துடன் இயைந்து சமூகமாகக் குழுவாகப் பெருகி நின்றனர். இயற்கையின் பரந்த வெளியை கூறு போட சக மனிதரைப் புறந்தள்ள விரட்ட அவமதிக்க இங்கு உரிமை வழங்கப்படவில்லை..
“யாதும் ஊரே யாவரும் கேளீர்..”
என்றே வாழ்ந்த சமூகம் நாம்..
அதே போல..
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று உலகிற்கு அறிவுறுத்தியவரும் நம் தமிழினமே.
அவ்வாறிருக்க வடகத்தியர் நமது தமிழ் மண்ணில் குடிபெயர்ந்துப் பிழைத்து வருவதும் தெற்கத்தியர் வடக்கு நோக்கி நகர்ந்துப் பொருள் தேடுவதும் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் மரபு.
புலம் பெயர்ந்த வடநாட்டு தொழிலாளர்கள் தமிழகத்தில் அவமதிக்கப்படுகிறார்கள் தாக்கப்படுகிறார்கள் போன்ற அவதூறுகள் சமீபமாக இந்தியா முழுவதிலும் பரவலாகி வருகின்றன.. இது எத்தனை சதவிகிதம் உண்மைத்தன்மையுடையது என்பதற்கு இங்கு காலங்களாகத் தங்கள் குடும்ப உறவுகளுடன் வரிசையாக பெயர்ந்து வந்த வடஇந்தியர் மட்டுமல்லாமல் பிற திசைக்குறியவரும் செழித்து வாழும் தமிழ்மண்ணில், தமிழருடன் உறவு போல வாழ்ந்து வரும் வடமாநில மக்களை விசாரித்தால் நம் நிலக்குடிக்களின் மாண்பு புலப்படும்.
வந்தாரை வாழ வைக்கும்.. வழிவிடும் தமிழினத்தின் மீதான பொய் செய்திகளும் அவதூறுகளும் பரப்பப்பட்டு வருகிற நிலையில் சமீபமாக வெளிவந்த “அயோத்தி” திரைப்படம் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தமிழ் திரையுலகத்தின் புறம் திருப்பியது. இரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் புதுமுக இயக்குனரான மந்திர மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் மனிதத்தையும் தனிமனித விழுமியங்களையும் போற்றும் ஒரு படைப்பாக அயோத்தி மக்களின் மொழிகளில் புழங்கி வருகிறது.
அயோத்தி நகரில் பான் விற்கும் சிறு தொழில் வியாரியாக பல்ராம் கதாபாத்திரத்தில் யஷ்பால் ஷர்மா. இந்து தர்மத்தின் தீவிர பின்பாற்றாளர். தர்ம நெறியின் மீதான அதீத பிடிவாதம் ஆதிக்க மனோபாவத்தின் உச்சத்தில் குடும்பத்தின் பெண்கள் தனக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று எப்போதும் மனைவியையும் மகளையும் அச்சுறுத்தியே வைத்திருக்கும் புரையோடிய வர்க்கத்தின் ஆண்.
பல்ராம் மனைவியாக அஞ்சு அஸ்ரானி. கணவன் கிழித்த கோட்டை கனவிலும் தாண்டாமல் அவன் பேச்சுக்கு மறுபேச்சின்றி ஒடுங்கியே மரணத்தின் கடைசி நொடியிலும் கலவரப்பட்டே மரிக்கிறாள்..தனது பிள்ளைகளின் முகமலர்ச்சியில் தனது நிகழ்கால பேரானந்தைக் கொஞ்சமுமாக ரசித்திருந்தாள்.
கதாநாயகி ஷிவானியாக ப்ரீத்தி அஸ்ரானி கல்லூரி மாணவியாக அறிமுகமாகிறாள் .தந்தையின் அராஜகத்தால் தனது தாய் படும் வேதனையை காண சகிக்காமல் நிதம் வருந்துகிறாள். தாயின் மீதான தந்தையின் வன்முறை எல்லை மீறும் போதெல்லாம் தனது எதிர்ப்பை உடல்மொழியில் வெளிப்படுத்துவாள். தாயின் அன்பிற்குக் கட்டுப்பட்டு அமைதி காத்து வருகிறாள்.
பள்ளியில் படிக்கும் மாணவனாக மகன் சோனு பாத்திரத்தில் அஸ்வத். மழலை மாறாத பால் முகம் பால்யத்தைக் கொண்டாட முடியாமல் எப்போதும் ஒருவித பதட்டத்திலேயே பரிதவிக்கும். தாயின் அரவணைப்பிலும் அக்காளின் பாசத்திலும் தனது பிராயபருவத்தின் இனிமை காண்கிறான்.
இந்த நான்கு வடமாநில பாத்திரங்களைக் கடந்து கூடுதலாக அயோத்தியில் பல்ராமின் வணக்கத்திற்குரிய பாத்திரமாக சாமியார் பாத்திரம். பல்ராமின் தீவிர மதவேட்கைக்கு அவ்வப்போது நெய்யூற்றி எரியூட்டும் வேள்வித் தீ..விரவாதம்.
படத்தின் முத்திரைப் பதித்த தமிழ்கலைஞர்களில் முதலில் கதாநாயகன் சசிகுமார். இயல்பிலேயே பிறருக்கு உதவும் மனிதநேயத்தின் உருவமாகக் கதை முழுதும் வலம் வந்து தமிழர் பண்பாட்டை தரிசிக்கச் செய்கிறார்.
ஒரு தீபாவளி தினத்தன்று அயோத்தியிலிருந்து பல்ராம் குடும்பம் இராமேஸ்வரம் நோக்கிப் பயணிக்கிறது. இரயிலிருந்து இறங்கி டாக்சி பிடிக்கின்றனர். பயணத்தின் போது டாக்சி ஓட்டுநருடன் ஏற்பட்ட கைகலப்பில் கார் விபத்துக்குள்ளாகிறது.வாகனத்தில் உள்ள அனைவருக்கும் பலத்த அடி. ஜானகி மட்டும் மிகக கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்..
வாகன ஓட்டுனர் தனது நண்பனான சசிகுமாருக்கு தகவல் சொல்ல இராமேஸ்வர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நண்பனை சந்திக்க வருகிறார் சசிகுமார். அப்போது சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜானகியை மதுரை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றால் பிழைக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர் பரிந்துரைக்க… மொழி தெரியாத ஊரில் தத்தளித்தும் தந்தையின் அடாவடி நடவடிக்கைகள் ஆங்காரம் செலுத்த செய்வதறியாது கதறுகிறாள் ஷிவானி.
ஆதரவற்ற பதின்ம பருவத்துப் பெண் பிள்ளையின் இந்த துர்நிலையை காண சகிக்காது உதவ முன்வருகிறார் சசிகுமார். தீபாவளி விடுப்பின் கெடுபிடியில் கடும் முயற்சிக்குப் பின் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மருத்துவமனை அட்டெண்டர் ஒருவரையும் தன் உடன் வந்த நண்பனையும் அழைத்துக் கொண்டு ஷிவானி குடும்பத்துடன் ஜானகியை மதுரை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்கிறார். வழியிலேயே இறந்து விடுகிறார் ஜானகி.
மதுரை மருத்துவமனைக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கவும் மேலும் அன்றைய தினத்திற்கான பணிநிறைவு முடிந்ததால் தன்னை விடுவிக்கும் படியும் வாதாடுகிறார் அட்டெண்டர். மதுரை மருத்துவமனை மருத்துவர் ஜானகியை பரிசோதித்து அவள் இறந்ததை ஊர்ஜிதம் செய்து பிண கூராய்வு செய்ய அறிவுறுத்துகிறார். இந்துமதத்தின் சாஸ்திரப்படி இறந்தப் பின் உடலை கூராய்வு செய்வது தர்மத்திற்குப் புறம்பானது என்றும் மனைவி சொர்க்கம் செல்ல தடை ஏற்படும் என்று ஒரே பிடியாய் நிற்கும் பல்ராமின் போக்கால் ஷிவானி தாயை இழந்த துயரம் ஒருபுறமிருக்க தனது சொந்த மண்ணிற்குத் திரும்ப நாதியற்றுக் கதறுகிறாள். சசிகுமாரிடம் தங்களை எப்படியாவது அயோத்திக்கு தாயின் சவத்துடன் அனுப்பி வைக்குமாறு மன்றாடுகிறாள்.
ஒருபுறம் தாயை இழந்த தம்பியை நினைத்தும் மறுபுறம் தந்தையின் மூடநம்பிக்கையின் நிமித்தம் சட்டரீதியான எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைக்காமல் சண்டைப் போடுவதும் ஷிவானியை நிலைகுலைய செய்தன. மிரண்டு நிற்கும் ஷிவானி சோனு இருவரின் பரிதாப நிலை சசிகுமாரை வாட்டியது.மனிதாபிமானம் தலைதூக்க மதுரை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை விமான நிலையத்திற்குத் திருப்புகிறார்..
சசிகுமாரின் இந்த திடீர் திருப்பதில் அட்டெண்டர் சிடுசிடுங்க இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சசிகுமார் அடெண்டரை அறைந்து விடுகிறார். வெள்ளை சட்டையில் கைவைத்ததால் காக்கி உடுப்புடன் கோர்த்து விடுகிறான் அட்டெண்டர்.
பாஷை புரியாத ஊரில் சவத்தை வைத்துக் கொண்டும் பொறுப்பற்ற தந்தையின் பிடிவாதத்தாலும் சிரமப்படும் ஷிவானியை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஜானகியின் சவத்துடன் மூவரையும் அயோத்தி அனுப்பி விட வேண்டும் என்கிற முனைப்பில் விமான நிலையம் பறக்கிறது ஆம்புலன்ஸ். அங்குப் போனால் விமான நடைமுறையின் படி ஆவணங்கள் சான்றிதழ்கள் டிக்கடிற்கான ஒரு லட்ச ரூபாய் பணம் என ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் சசிகுமாரைத் திக்குமுக்காடச் செய்கிறது. கூடுதலாக அன்றைய விமானத்தைத் தவறவிட்டால் அடுத்து நான்கு நாட்கள் கழித்துத் தான் மீண்டும் விமானம் என்கிற நெருக்கடியில் தவித்துப் போகின்றனர் சசிகுமாரும் ஷிவானியும். இவையனைத்தையும் ஒரே நாளில் ஏற்பாடு செய்து அவர்களை அயோத்தி அனுப்பி வைத்தாரா சசிகுமார் என்பதே படத்தின் அடுத்தப் பாதி..
படத்தின் முதல் பாதியை விட பிற்பகுதியில் அயோத்திக்கு ஜானகியின் சவத்துடன் ஷிவானி குடும்பம் பயணப்படுவதை விறுவிறுப்பாகக் கொண்டுச் செல்கிறது திரைக்கதை. காட்சிகள் இமைப்பதை மறக்கச் செய்துக் கதைக்குள் பார்வையாளனை இருத்தி வைக்கிறது.. ஒருவித பதட்டம், வருத்தம்,துக்கம், வெறுமை, கோபம், மனிதருக்கு மனிதர் மீதான அலட்சிய மனப்பான்மை,ஆதிக்க வன்முறை, கைகலப்பு,சகமனிதநேயம் என பலதரப்பட்ட மனித உணர்வுகளைக் கடத்துகிறது படம்..
ஒருகட்டத்தில் தந்தையின் மதமூட பிடிவாதம் எல்லை மீறவே வெடிக்கிறாள் ஷிவானி. தந்தையை புறந்தள்ளி தாயின் பிரேத பரிசோதனைக்கும் விமான நிலையத்தின் நடைமுறை விதிப்படி எம்பார்மிங் செய்யவும் ஒத்துழைக்கிறாள். சற்றும் எதிர்பாராத மகளின் உதாசீனத்தாலும் ஆவேசத்தாலும் பல்ராம் நிலைகுலைந்துப் போகிறார். இதுவரை தான் செய்த தவறுகளை எண்ணி கலங்குகிறார். இந்தக் காட்சிகள் பார்வையாளனின் மனதை நெருடுகிறது.
அதுவரை சசிகுமாரின் பெயரை பல்ராமோ அவரது குடும்பமோ கேட்டறியவில்லை. இறுதிக்காட்சியில் விமானப் பயணத்திற்கு ஆயத்தமான நேரத்தில் தான் சசிகுமாரின் பெயரை பல்ராம் விசாரிக்கிறார். சசிகுமார் தனது பெயரை சொல்லும் காட்சி பார்வையாளரை சில மணிதுளிகள் ஸ்தம்பிக்கச் செய்தது. திரைத்துறையை திரும்பிப் பார்க்கச் செய்த கட்டமாக வரவேற்பைப் பெற்ற தருணமாக உடைப்பட்ட இந்த இறுதிக்கட்டமே உச்சம்.
படத்தில் எவ்விடத்திலும் சசிகுமாரின் பெயர் அடிபடாதவாறு அவசியப்படாத வாக்கில் வெகு லாவகமாக நகர்கிறது திரைக்கதை.
மதவாத அரசியலைக் கொண்டு மக்களை திசைத் திருகி பிரிவினையை உண்டு பண்ணும் முயற்சிக்கான சவுக்கடியாகவே இந்தப்படம் மீண்டும் நமது ஜனநாயக இந்தியாவை மீட்டெடுக்கும் என்கிற நம்பிக்கையை அடர்த்தியாக்குகிறது. மக்கள் தொலைத்த மனிதநேயத்தை மானுட நேசத்தை படம் முழுவதிலும் தவழ விட்டுள்ளார் இயக்குனர்.
பிற பாத்திரங்களான சசிகுமாருடன் ஆரம்பம் தொட்டு இறுதி வரை இருக்கும் நண்பன், பிணப்பெட்டியை இலவசமாக வழங்கும் போஸ் வெங்கட், மருத்துவமனை தீன், இறுதியான காட்சிகளில் வரும் விமான அதிகாரி சேத்தன் என ஒவ்வொரு பாத்திர அறிமுகமும் மரித்துப் போன மனிதத்தை உயிர்க்கச் செய்கிறது. கூடுதலாக தமது விமான டிக்கெட்களை சோனுவுக்காகவும் பல்ராமுக்காகவும் விட்டுக் கொடுக்கும் முதிர்ந்த தம்பதி பயணிகளைக் கொண்டு அறம் இன்னமும் மனிதர் மனதில் வாழ்ந்து வருவதை நிரூபிக்கிறது அயோத்தி .
கதையை பற்றிய அநேக சர்ச்சைகளும் விவாதங்களும் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் ஊடாடினாலும் பொய் பிரச்சாரத்தை அனாவசியமாக சுமந்து நிற்கும் தமிழர்களின் மாண்பைத் தோலுரித்து தமிழர்களின் அந்தஸ்தைப் பெறுகிறது.
படத்தைக் கையாண்ட விதம் திரைக்கதை காட்சிகள், வட இந்திய கலைஞர்களின் தத்ரூபமான பாத்திர பொருத்தம் இயல்பான நடிப்பு, ஆபத்து காலத்திலும் அவசிய நேரத்திலும் நண்பர்களுக்கு உதவ முன்வரும் சசிகுமாரின் தன்னியல்பான பாத்திரம் எப்போதும் அவரின் விசேஷம். எளிமையாக எல்லா படங்களிலும் பொருந்தி விடுகிறார்…
இந்தப் படத்தின் வெற்றிக்கான தடயங்கள் ஏராளம் உண்டு சுட்டிக்காட்ட… பாடல்களின் இசையும் வரிகளும் நினைவில் நின்றுவிடும் படியாக உயிரோட்டத்தை ஏற்படுத்துகின்றன. அயோத்தி என்கிற இடம் மதவாத அடையாளமாக,பெயரை உச்சரிக்கும் போதே பாபர் மசூதியை நினைவுப்படுத்தும் கலவரங்கள் மனதை தளர்வடையச் செய்யும். ஆனால் இயக்குனர் அயோத்தி என்கிற பெயரைச் சூட்டி தலைப்பின் மீதான முன்பிம்பத்தைத் தளர்த்தியுள்ளது விசேஷமானது.
அயோத்தியை பற்றி புளங்காகித்து விமர்சிக்க இன்னும் பல நுட்பங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடுவது பார்வையாளர்களின் சுவாரஸ்யத்திற்கு வேரில் வெந்நீர் ஊற்றுவது போல் ஆகி விடும். பால் அகவை பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக அயோத்தி திரையுலகில் முன்மாதிரியாகக் திகழ்கிறது.
அயோத்தி அறம்.
து.பா.பரமேஸ்வரி
சென்னை.
திரைப்படம் : அயோத்தி
ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் புரொடக்ஷ்ன்ஸ்
தயாரிப்பு : V.R. இரவிச்சந்திரன்.
இயக்கம். : திரு. R.மந்திர மூர்த்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.