திரைவிமர்சனம்: கார்கி – இரா.கோமதி
என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை; என் கணவர் அப்படிப்பட்டவர் இல்லை; என் மகன் அப்படிப்பட்டவன் இல்லை – என்ற போர்வையில் தப்பி பிழைத்துக் கொண்டிருக்கும் வெறியர்களின் சுயரூபம் காட்டும் கலங்கரை இந்த கார்கி. இப்படத்தில் ஒரு வசனம் நான் அடிக்கடி என் நண்பரிடம் கூறியுள்ள வசனமாகும். ‘இந்த ஆண்களை மட்டும் நான் எப்பவுமே நம்ப மாட்டேன். அப்பா, அண்ணன், தம்பி, கணவன், தெரிந்தவன், தெரியாதவன் என்று யாரையும் நம்ப மாட்டேன். ஏனெனில் அடிப்படையில் அவர்கள் எல்லாரும் ஆண்கள், அவ்வளவுதான்! இது ஏதோ ஒட்டுமொத்த ஆண் சமுதாயத்தின் மீது உள்ள வெறுப்போ அல்லது எதிர்மறை எண்ணத்தில் வெளிப்பாடோ அல்ல. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்விற்காக நான் கூறுவது. இப்படத்தில் இது போன்ற ஒரு வசனம் வர கண்டேன். “என் குழந்தை என்னை பார்த்தால் கூட மிரண்டு ஓடுது. அவளுக்கு இப்போ நான் அப்பா என்பதை விட, ஒரு ஆம்பளையா தான் தெரியுறேன்”, என்று சரவணன் கூறி அழுவார்

எனக்கு தெரிந்த ஒரு பெண் இரு வேறு சமயங்களில் பேசிய பேச்சை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். “இந்த ஆண்-பெண் உறவு முறையில் மட்டும் நான் யாரையும் நம்பவே மாட்டேன். இவர்களா இப்படி என்பதை போல எல்லாம் பார்த்து இருக்கிறேன்”, இது ஒரு உரையாடலின் போது அப்பெண் கூறியது. மற்றொரு சூழ்நிலையின் போது- ‘அவர் சொல்வது உண்மைதான். அவர் இதுவரைக்கும் என் முகத்தைப் பார்த்தது கூட பேசியது கிடையாது. போன் பேசினால் கூட ஒரு வார்த்தை அதிகமாக பேசியது கிடையாது. அவர் அப்படி தப்பு செய்ய மாட்டார்’, என்று ஒரு பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு பரிந்து பேசியது. இங்கு இப்பெண்மணி வைக்கும் இரண்டு கூற்றுகளும் சமுதாயத்தின் பொதுப் பார்வையாகவே நான் பார்க்கிறேன். முதல் கூற்றில் வயதிற்கு வந்த அதாவது 18 வயதை கடந்த இருவர் ஒருவரோடு ஒருவர் காதல் கொண்டாடுவதை குற்றப்படுத்தி ‘இந்த விஷயத்தில் நான் யாரையும் நம்ப மாட்டேன்’ என்று கூறும் சமுதாயம், பாலியல் குற்றவாளிகளின் மீது மட்டும் அளவற்ற நம்பிக்கை பொழிந்து கரிசனம் காட்டுவது ஏனோ? முகத்தைப் பார்த்து கூட பேசாதவர் பாலியல் குற்றம் செய்ய மாட்டார் என்பது வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல ஆதாரமற்ற, அர்த்தமற்ற பேச்சாகும். பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு எந்த வரையறையும் கிடையாது என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

இப்பட துவக்கத்திலேயே கார்கி தம் தந்தை குற்றமற்றவர் என்று நிரூபிக்க துடிக்கும் நேரங்களில் என் மனதில் ஒரு சிறு சலசலப்பு தோன்றியது. ஏனெனில் தன் மீது அத்துமீறியவர்கள் மேல் பாலியல் புகார் கொடுத்துவிட்டு நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கும் பெண்கள் படும்பாட்டை நேரில் பார்க்கும் அனுப்பவும் பெற்றமையால் என்னுள் இந்த சலசலப்பு ஏற்பட்டது. முதல் விஷயம், குற்றவாளி தான் நிரபராதி போலவும், தன் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய்யானது என்பது போலவும் அழகாக நிறுவி விடுவார்.

சமுதாயத்தில் அது அவர்களுக்குச் சுலபமாகவும் இருக்கிறது. இரண்டாவது விஷயம் குற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபனமான பிறகு, ‘இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா! இதெல்லாம் பெருசு படுத்தினால் வாழ்க்கையை எப்படி நகர்த்திக் கொண்டு போவது. துடைத்துப் போட்டு விட்டு வேலையை பாருமா” என்ற பஞ்சாயத்து வார்த்தைகள். இந்த பஞ்சாயத்துக்கும் பாதிக்கப்பட்ட பெண் உடன்படவில்லை, குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று உறுதியாக இருக்கும் போது இறுதி ஆயுதமாக குற்றவாளியின் குடும்பத்தினர், மனைவி, மக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் விழுந்து இறக்கம் என்ற கோட்டாவை தட்டி சென்று விடுகின்றனர். பெரும்பாலான பாலியல் வழக்குகளில் குற்றவாளிகள் இந்த மூன்று விதங்களில் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகின்றனர். இந்த மூன்றுமே பாதிக்கப்பட்ட பெண் வாய் திறக்கும் பட்சத்தில் தான். பெரும்பாலான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் வாய் திறக்கவே முன் வருவதில்லை என்பது தான் வேதனையான விஷயமாகும். ஏனெனில் பாதிக்கப்பட்ட பெண்ணையே பழி சுமத்தும் நிலைமை தான் இன்னும் உள்ளது. பாலியல் சீண்டலிள் ஈடுபடும் நபர்கள் பொதுவாக நல்லவன், டீசண்டானவன், மரியாதைக்குரியவன், பெரிய மனுஷன் வயதானவன் போன்ற இன்னும் பல போர்வைகளை போர்த்திக்கொண்டு திரிவதுதான் வழக்கமாக உள்ளது. ‘அவர் முகத்தை கூட பார்த்து பேசமாட்டார்; அவர் மேல போய் இப்படி அபாண்டமாக புகார் சொல்றாங்க பாரு! “, ‘அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? அவர் மேல பொய் புகார் சொல்றாங்க பாரு! ‘ இது எல்லாவற்றையும் விட மிக மோசமான கூற்று ஒன்றும் பொதுவாக சமுதாயத்தில் உலவி வருகிறது ‘அவளுக்கும் அவருக்கும் ஏற்கனவே வேறு விஷயத்தில் காழ்ப்புணர்ச்சி. அதைத்தான் இப்படி புகார் கொடுத்து பழிதீர்த்துக்கிறாள்’ அப்பப்பா!! உண்மை என்னவென்று ஆராயாமலே ஆண்கள் குற்றமற்றவர்கள் என்று முடிவு கட்டுவது என்ன நியாயம்? ஆண்களின் மாண்பை காக்கும் பொருட்டு இல்லாத கற்பனைகளைக் கட்டிக்கொண்டு வந்து நிற்பது, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீங்கள் இழைக்கும் அநீதி இல்லையா? சமூகமே யோசியுங்கள். தனக்கு நடந்தது அநியாயம் என்று இந்த செவிடு சமுதாயத்தில் உரக்க கத்தி கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மாண்பை உங்கள் கூற்று குறைப்பதை நீங்கள் எப்போது உணர போகிறீர்கள்? இவ்வாறு போர்வைகளை சுமந்து வரும் சமூகத்திற்கும், அப்போர்வைகளை சாற்றிக் கொள்ளும் போலி நபர்களையும் தோண்டி எடுத்துக்காட்டுகிறது இந்தப் படம். இயக்குனரின் முயற்சி பெறும் பாராட்டுக்குரியது.

பொதுவாக மலையாள திரைப்படங்களில் பாலியல் வன்புணர்வு காட்சிகளை எந்தவித விரசமும் இல்லாமல் குறிப்பால் உணர்த்தும் காட்சி அமைப்பை நாம் காணலாம். இப்படத்தில் இயக்குனர் மிக முதிர்ந்த சிந்தனையோடு அப்படிப்பட்ட காட்சிகளை கையாண்டு உள்ளார். மேலும் இது போன்ற சிறுமியர் பாலியல் வழக்குகளை எவ்வளவு உணர்வுபூர்வமாக கையாள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக எவ்விடத்திலும் அக்குழந்தையின் முகத்தை ஒப்புக்காக கூட காட்டாமல் காட்சி அமைத்திருந்தார். அதற்கு அவருக்கு ஒரு சபாஷ் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், படத்தின் இறுதிக் காட்சியில் அக்குழந்தை சமுதாயத்தை தைரியமாக எதிர்கொள்வதாக காட்டி முடித்து இருப்பதும் இன்னொரு சபாஷை சொல்ல வைக்கிறது. மேலும் பாலியல் குற்ற வழக்கில் வெட்கி தலைகுனிய வேண்டியதும், ஓடி ஒளிய வேண்டியதும் பாலியல் சீண்டல் குற்றம் புரிந்தவன் தானே தவிர பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது குற்றவாளியின் குடும்பமோ கிடையாது என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பார். இவ்விடத்தில் கார்க்கி ‘என்ன தான் இருந்தாலும் அவர் என் தந்தை’ என்று அவர் குற்றத்தை மறைக்க முடிவு எடுத்திருப்பாள் அவளும் குற்றவாளியே. ஆனால் அவள் நீதியின் பக்கம் நின்றதால் அவள் குடும்பம் தலைநிமிர்ந்து மதிக்கப்படுகிறது என்று காட்டியிருப்பது ஒரு புது நம்பிக்கையை விதைக்கும் முயற்சியாகும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறதா? இல்லை குற்றங்கள் எப்போதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. ஏன் புள்ளிவிவரம் எடுக்க கூட முடியாதபடி குற்றங்கள் பதிவு செய்ய முன்வராத நிலையில் இருந்த சமுதாயத்தில், சட்டங்களின் உதவியால் இப்போதுதான் பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் சீண்டல்களை வெளியே புகாராக அளிக்க முன் வருகின்றனர். அவ்வாறு வரும் புகார்களை நீதியின் பக்கம் நின்று விசாரணை செய்து குற்றவாளியை தண்டிக்கும் கடமை நீதித்துறைக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களை பந்தாடும் பழமையை தீயிட்டு கொளுத்துங்கள். பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவள் தேகம் தொடுவது மட்டும் பாலியல் சீண்டல் அல்ல அவள் விருப்பம் இல்லாமல் அவளை ‘அவளே’ என்று கூறுவதும் பார்வையால் நோண்டுவதும் பாலியல் சீண்டல் தான். ‘ஆண்களே! எந்தவித சீண்டல்களுக்கும் என்னிடத்தில் இடமில்லை’ என்று அழுத்தமாகவே கூறுங்கள். பெண்களே! இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நாம் மென்மையாக கோபப்படுவது? கோபத்தை கோபமாகவே வெளிப்படுத்துங்கள். வேண்டாம் என்பதை தீர்க்கமாகவே கூறுங்கள். ‘இனி பெண்களை அப்படி இரு, இப்படி இரு என்று கூறுவதில் பயனில்லை என்பது உன் அக்காவிற்கு புரிந்து விட்டது போலும்’ என்ற இப்படத்தின் வசனம் பல செய்திகளை கூறுகிறது. பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் தமக்கு ஏற்படாமல் இருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கற்பிதங்கள் தொடரட்டும்; அதனோடு சேர்ந்து பாலியல் சீண்டல் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற கற்றலும் தொடங்கட்டும். வாருங்கள் கற்பிப்போம்! முன்னேறுவோம்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.