கடந்த வாரம் ஐந்து நாட்களில் மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் படித்து விட்டுப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்ததாக இப்போது டி.எம்.கிருஷ்ணாவின் செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் புத்தகத்தைப் படித்து விட்டு எனது கருத்துக்களைப் பகிர்கிறேன்.
ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு அரங்கில் உமையாள்புரம் சிவராமன் அவர்களின் தனி ஆவர்த்தனத்தைக் கேட்டுப் பிரமித்துப் போயிருக்கிறேன். அதேபோல் ஒரு கர்னாடக இசைக் கச்சேரி முடிவதற்கு முன்னால் அவர்களுக்கு தனி ஆவர்த்தனம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும். அதிலும் பிரமித்துப் போயிருக்கிறேன். இதேபோல் பல்வேறு வாத்தியங்களும்தான். ஆனால் எப்போதும் அநேகமாக யாருக்கும் எழாத ஒரு கேள்வி டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு எழுந்திருக்கிறது. அது அந்த வாத்தியத்தை உருவாக்கியவர்களின் உழைப்பும், வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்ற கேள்வி. மிகவும் முக்கியமான கேள்வி. அவர் கேள்வியுடன் நிற்கவில்லை. உள்ளே நுழைந்து நான்கு வருடங்கள் உழைத்து அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து புத்தகமாகவே வெளியிட்டு விட்டார்.
அவர் புத்தகம் வெளியிட்ட போது எழுந்த பிரச்சனை அனைவரும் அறிந்ததே. அங்கு இந்தியாவுக்கே உரித்தான உயர்சாதி அணுகுமுறை தன்னை வெளிப்படையாக அம்பலப்படுத்திக் கொண்டது. ஆனால் மாற்று இடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் திரண்ட மக்கள் இந்த சாதி ஆணவத்துக்கு விடை கொடுத்தனர். அந்த வெளியீட்டில் கலந்து கொண்டு மகிழ்ந்தேன். எப்படியாவது இந்தப் புத்தகத்தை மொழியாக்கம் செய்யும் உரிமையை பாரதி புத்தகாலயத்துக்குப் பெற்று விட வேண்டும் என்று முயன்றோம். ஆனால் காலச்சுவடுக்கு அவர் கொடுத்து விட்டதால் முடியவில்லை. சற்று ஏமாற்றம்தான்.
இந்தப் புத்தகத்தில் மிருதங்கத் தயாரிப்பில் ஈடுபடுவோர் சந்தித்த பல்வேறு சாதியப் பிரச்சனைகளை அவர் விவரித்துள்ளது மட்டுமல்ல. அந்தத் தயாரிப்பு என்பது எவ்வளவு கடினமானது என்பதையும், மிருதங்கம் வாசிப்போர் நல்ல பெயர் எடுப்பதற்கு எந்த அளவுக்கு தயாரிப்பவர் தனது உழைப்பைக் கொடுத்துள்ளார் என்பதையும் புட்டுப் புட்டு வைத்துள்ளார் கிருஷ்ணா. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி தயாரிப்பவருக்கு அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். மிருதங்கத்தைப் பயன்படுத்தி நற்பெயர் பெற்றவர்களுமே கூட இவர்களின் பங்கை அளிக்கவில்லை என்பது வேதனை. இத்தனைக்கும் தயாரிப்பவரின் பல்வேறு முயற்சிகள்தான் மிருதங்கம் இவ்வளவு நல்ல நாதத்தை அளிப்பதற்கு மூல காரணமாக இருந்துள்ளது என்பதை நாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்பது வேதனை.
இந்தத் தொழிலிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதை பதிவு செய்திருக்கும் கிருஷ்ணாவுக்குப் பாராட்டுக்கள். “ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி”.
இரண்டாவது, மிருதங்கம் என்ற மொத்த உருவத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்குள் இவ்வளவு பகுதிகள் இருக்கின்றன, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன, வேறு வேறு வகைகள் இருக்கின்றன, எப்படித் தோலைத் தேர்ந்தெடுப்பது, பதப்படுத்துவது, வெட்டுவது, பல்வேறு பகுதிகளை எப்படி இணைப்பது என்று விரிந்து கொண்டே செல்கிறது புத்தகம். இதுவரை இதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இதைப் படித்த பிறகு எதோ எனக்கு மிருதங்கத்தைப் பற்றி எல்லாம் தெரிந்து விட்டது போல் ஒரு தோற்றம். கடைக்குப் போனால் நாலு கேள்வி கேட்க முடியும் என்ற தோற்றம். மிருதங்கம் படிப்பவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் அவை. இணைப்பாக தயாரிப்புத் தொடர்பான சொல்லகராதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் என்னிடம் வலுவாக எழுப்பிய கேள்வி ஒன்று. இதைப்பற்றி கிருஷ்ணாவுக்கே மெயில் கொடுத்திருக்கிறேன். அது தயாரிப்பவர்களை இசைக்கலைஞர் என்று ஒப்புக்கொள்ளாததால், தமிழக அரசு அவர்களுக்கு எந்த நலத்திட்ட உதவியும், ஓய்வூதியமும் வழங்கவில்லை என்பதாகும். இவர்கள் கலைஞர்கள் இல்லையென்றால் யார் கலைஞர்? இந்த நிராகரிப்பால் அவர்கள் கடுமையான சூழலில் இருக்கின்றனர் என்பது புரிகிறது. இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போல் ஒவ்வொரு இசைக்கருவியையும் தயாரிப்பவர்களும் இதே சூழலில்தானே இருப்பார்கள். அவர்களே சொல்வது போல் அவர்கள் தயார் செய்த வாத்தியங்கள் பூஜை அறையில் இருக்க, அவர்கள் தெருவில்!. இதை மாற்ற வேண்டாமா என்ற கேள்விதான் ஒரு தமுஎகச தொண்டராக, ஒரு தொழிற்சங்கவாதியாக என்னிடம் எழுந்தது.
பிரச்சனையை கிருஷ்ணா முன்னே வைத்து விட்டார். இனி அவர்களுக்கான பொறுப்பை எடுத்து, அவர்களை சங்கமாக ஒன்று திரட்டி, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், ஓய்வூதியமும் பெற்றுத் தருவது தமுஎகச கையிலும், சிஐடியு கையிலும்தான் இருக்கிறது என்பது எனது பணிவான கருத்து. இந்தப் புத்தகம் படித்ததில் எதேனும் எனக்கு பலன் இருக்குமானால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது பங்கும் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
நன்றி.
Sebastian and sons – T.M.Krishna
Westland books
Pages 366.