நூல் அறிமுகம்: சேடிப்பெண் சொன்ன கதை – தமிழ் நதி

நூல் அறிமுகம்: சேடிப்பெண் சொன்ன கதை – தமிழ் நதி

 

 

 

எழுதுவது, வாசிப்பது, ஒப்பனைசெய்துகொள்வது, மதுவருந்துவது, புகைபிடிப்பது, வங்கிக் கணக்கு வைத்திருப்பது, சொத்துரிமை, காதலிப்பது…. இன்னபிறவெல்லாம் அந்தச் சமூகத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவை. சட்டவிரோதமானவை. உரையாடும்போது பயன்படுத்தப்படும் வார்த்தைகளும் வரையறுக்கப்பட்டவை. லேஸ் வைத்த உள்ளாடைகள், முகப்பூச்சுகள், களிம்புகள் எதுவும் கிடைக்காது. பெண்களுடன்கூட கண்களைப் பார்த்துக் கதைக்கலாகாது. மதம்சார்ந்தவை நீங்கலான சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஊடகங்கள் யாவற்றுக்கும் தடை. வழக்கமாக நமக்குக் கிடைப்பவை அல்லது பிறப்புரிமை என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எல்லாமே மரண தண்டனைக்குரிய குற்றங்கள். வாசிக்கும்போதே காற்றில்லாத வெளியில் இருப்பதைப்போல மூச்சுத் திணறவைக்கும் நாவலிது. 1985இல் வெளியானது. கனடிய எழுத்தாளராகிய மார்கெரட் அட்வுட்டின் பிரபலமான நாவலான The Handmaid’s Tale ஐ (இந்நாவல் 1990இல் திரைப்படமாக்கப்பட்டது. 2017இல் தொலைக்காட்சித் தொடராகவுங்கூட வெளியானது. நான் அவற்றைப் பார்க்க விரும்பவில்லை. ஒரு நாவலை காட்சிகளாகக் காண விரும்பவில்லை. வாசிப்பதே சரி.) தமிழில் ஷஹிதா மொழிபெயர்த்திருக்கிறார்.

கிலியட் என்ற இடம் (அமெரிக்காவின் ஒரு பகுதி) கதாசிரியரது கற்பனையில் உருவானதுதான். எனினும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுட் சில இப்போதும் சில நாடுகளில் பகுதியளவிலேனும் நடைமுறையில் உள்ளவைதாம்.

பிரதமரைச் சுட்டுவிட்டு, காங்கிரஸையும் இயந்திரத் துப்பாக்கியால் காலிபண்ணியபிறகு இராணுவ அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபின் நடப்பவைதாம் மேலுள்ளவை. கிறிஸ்தவ மதம்சார் அடிப்படைவாத அரசு அது. அங்கு பிரஜைகள் யாவரும் அரசினது உடமைகள். அவர்களது செயற்பாடு மட்டுமல்லாது சிந்தனையும் துப்பாக்கிக்குக் கீழ்ப்படியவேண்டியதே.

இதுவரையிலும் அறிந்திராத, பரிச்சயப்படாத இரும்புத்திரை கீழிறக்கப்பட்ட சமூகமொன்றைப் பற்றிய நாவலை மொழிபெயர்ப்பதென்பது மிகச் சவாலான காரியம். அங்கு, தொடர்வதற்கு முன் தடங்கள் ஏதுமில்லை. எல்லாவற்றையும் விழிவிரியப் பார்க்கும் குழந்தையின் கண்கள் வேண்டும். இல்லை. தவறான உதாரணம். எல்லாவற்றையும் கண்டு, அனுபவித்தபின் அவையெல்லாமும் திடீரென பிடுங்கப்பட்டுவிட்ட அதிர்ச்சி, பயத்தில் உறைந்துவிட்ட கண்கள் வேண்டும். மார்கெரட் அட்வுட்டின் இந்நாவலானது மிகச் செறிவான மொழிநடையைக் கொண்டது. சரசரவென வாசித்து முடித்துவிடமுடியாதது. எனும்போது, அதை மொழிபெயர்ப்பதென்பது முன்பே குறிப்பிட்டதுபோல கடும் உழைப்பைக் கோருவது. ஷஹிதா தன் விடாப்பிடியான முயற்சியால் அதைச் செய்துமுடித்திருக்கிறார்.

அந்த விசித்திரமான சமூகத்தில் பெண்களது வேலைதானென்ன? அங்கு, அவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாத தளபதிகளது மனைவியருக்கு குழந்தை பெற்றுக்கொடுக்கும் கர்ப்ப தாங்கிகள் மட்டுமே. பாலியல் பண்டங்கள் கூட அல்ல. அதிலும் கருவளம் (இந்தச் சொல் வெறுப்பூட்டுகிறது) மிக்க பெண்களே அவ்வாறு தளபதி வீட்டில் வைத்துப் பராமரிக்கப்படுவார்கள். இங்கு பராமரிப்பெனப்படுவதென்பதன் பொருள்- தலையை மூடிய சிவிகை மற்றும் கழுத்துமுதல் கால்வரையில் மூடப்பட்ட ஆடையுடன், பொழுதுபோக்கவோ தற்கொலை செய்துகொள்ளவோ (சரவிளக்குகள், கொழுவிகள் அகற்றப்பட்ட, திறக்கமுடியாமல் இறுக்கமாக அடைக்கப்பட்ட யன்னல்கள் கொண்ட அறை) வழியற்ற ஓரறையில், வேளாவேளைக்கு உணவு வழங்கப்பட்டு ‘புறொய்லர்’கோழிகள் போல பேணப்படும் பெண்கள். தளபதி-இந்தச் சேடிப்பெண் இருவருக்குமிடையில் கருவூட்டல் கடந்து உறவேதும் வளர்ந்துவிடாதிருப்பதற்காக கூடலின்போது (?????)மனைவியும் உடனிருப்பார். இதை வாசிக்கும்போது ஆங்கிலத்தில் F இல் தொடங்கும் வார்த்தையைக் கூறியதையும் இந்த வாசிப்பனுபவத்துடன் இணைத்துக்கொள்ளவே வேண்டும்.

அந்தக் ‘கண்காணிப்பை’யும் மீறி அவர்கள் இருவருக்கிடையிலும் உறவு ஏற்படுகிறது. தவிர, மற்றுமொரு காதலும் அங்குண்டு. பிரபஞ்சன் அவர்கள் சொன்னதுதான்.

குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாத வயதெல்லையைக் கடந்துவிட்டவர்களும், கருவளம் இல்லாதவர்களும் (இங்கு மலடு என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது) காலனிகள் எனப்படுமிடங்களுக்கு அனுப்பப்படுவர். அங்கு உயிர்கொல்லும் விஷக் கழிவுகளைச் சுத்தம்செய்வது அவர்களது வேலை. மெல்லக் கொல்லும் வழியது.

இத்தகு வில்லங்கமான கருப்பொருளும் அடர்த்தியான மொழியும் முன்பின்னான காலவோட்டமும் கொண்ட படைப்பை மொழிபெயர்க்குமொருவர் நிறைந்த வாசிப்பும் மொழிச்செழுமையும் கொண்டவராயிருத்தல் வேண்டும். ஷஹிதாவின் வாசிப்பு, இப்பணியை நிறைவாகச் செய்ய உறுதுணையாயிருந்திருக்கிறது.

‘நீங்கள் என்னை மன்னித்தே ஆகவேண்டும். நான் கடந்தகாலத்தின் அகதி. எல்லா அகதிகளையும் போல நான் கைவிட்ட அல்லது கைவிட நிர்ப்பந்திக்கப்பட்ட என்னுடைய சடங்குகள் மற்றும் வழக்கங்களை நான் மீண்டும் மீண்டும் தேடிச்செல்வேன். அதுவும் இங்கிருந்து பார்க்க அவையெல்லாம் ஆவலைத் தூண்டும் வகையில் கவர்ச்சியாகத் தோன்றுகின்றன. நானும் அவை குறித்து பித்தாய் இருக்கிறேன். பாரிஸில் தேநீர் அருந்தும் வெள்ளை ரஷ்யனைப் போல இருபதாம் நூற்றாண்டில் தன்னந்தனியாய் சிக்கிக்கொண்டுவிட்டு நான் அந்தத் தூரப் பாதைகளை மீண்டும் பெற பின்னோக்கிப் போய்ப் பார்க்கிறேன். சுய இரக்கத்தில் அமிழ்கிறேன், என்னை இழக்கிறேன், விசும்புகிறேன். அது விசும்பல்தான், அழுகை அல்ல. இந்த நாற்காலியில் அமர்ந்து ஒரு நுரைப்பஞ்செனக் கசிகிறேன்.’-பக்கம் 349

எங்கெங்கும் கண்காணிப்புக் கருவிகள், ஒளியுமிழ் விளக்குகள், தடைவேலிகள், சோதனைச் சாவடிகள், அடையாள அட்டைகள் பற்றியெல்லாம் வாசிக்கும்போது எனக்கு எங்களது நிலத்தில் நடந்தேறிய அட்டூழியங்கள் நினைவில் வந்தன. நாங்கள் சிறுபான்மையினர். சிறுபான்மையினருள்ளும் சிறுபான்மையினர் பெண்கள். மார்கரெட் அட்வுட் ஒரு பெண்ணியவாதியுங்கூட.

இந்நாவலை வாசித்து முடிக்கும்போது, ‘நல்லவேளை நாம் இத்தகு அடக்குமுறை மிக்கதோர் அரசின் கீழ் இல்லை’எனும் ஆசுவாசம் உண்டாகும். வரலாற்றில் முன்னனுமானிக்கப்பட்டவை நிகழ்ந்திருக்கின்றன. அதேபோல, நிகழவே நிகழாதென நாம் கருதியிருந்தவையுங்கூட நடந்தேறியிருக்கின்றன. சாத்தியங்களுக்கு எல்லையே இல்லை.

ஆசிரியர்: மார்கெரட் அட்வுட்
தமிழில்: ஷஹிதா
வெளியீடு: எதிர் (2023)
பக்கங்கள்:464
விலை: 599 இந்திய ரூபாய்கள்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *