கவிஞர். சீனு ராமசாமி (Seenu Ramasamy) எழுதிய மேகங்களின் பேத்தி (கவிதைகள்) புத்தகம் | Megangalin Pethi Book - நூல் அறிமுகம்

கவிஞர். சீனு ராமசாமியின் மேகங்களின் பேத்தி (கவிதைகள்) – நூல் அறிமுகம்

கவிஞர். சீனு ராமசாமி எழுதிய மேகங்களின் பேத்தி (கவிதைகள்)

படைப்பு மனம் மிகுந்தவர்கள், அடர் வனத்தில் ஊறுகின்ற ரகசிய சுனை போன்றவர்கள். தாகம் தணிய அள்ளிப் பருகலாமே ஒழிய வேர் பிடித்து சுனையின் துளைகள் தேடி அலைய முடியாது. கைகள் இரண்டும் குவித்து அள்ளிப் பருகலாம், தித்திக்கும் நீர்த்திவலைகளில் கண்மூடி மெய் மறக்கலாம், ரசிக்கலாம், ஆராய்ச்சிகள் செய்வதால் வேறெந்த அனுபவங்களையும் பெற முடியாது. கவியெனும் சாகரத்தில் மூழ்கித் திளைக்கலாம்.

பரபரப்பான தனது தொழில் சார்ந்த இயக்கச் செயல்பாட்டிற்கு இடையிலும், ஒருவர் இடையறாது கவிதைகள் யாத்துக் கொண்டு இருப்பது அரிதான செயல். அந்த அரிதான செயலின் காரணமாகவே அவையத்தில் முந்தி நிற்கிறார். இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி அவர்கள். தொடர் கவிச் செயல்பாட்டில் மேகங்களின் பேத்தி ஆறாவது நூல், மொத்தம் 175 கவிதைகள், வாழ்வின் அனுபவத்தை சாறு பிழிந்து ரசமாக தந்திருக்கிறார். தாகமுள்ளார் பருகிக் களிக்கலாம்.

தாய்மை பற்றி என்ன எழுதினாலும் சொல்லில் தீராது வார்த்தைகள். இந்தக் கவிதை அனுபவ ரீதியாக வாழ்வை சுழற்றிப் பார்த்தது. பாட்டி, தாய், மனைவி, மகள், பேத்தி என பசியறிபவர்கள் அனைவரும் ஏன் பெண்களாகவே இருக்கிறார்கள். ஆண்கள் பசித்தலைபவர்களாகவும் பெண்கள் அட்சய பாத்திரம் சுமந்தலைபவர்களாகவும் எப்போதும் இருக்கிறார்கள்.வாசிப்பவர்கள் நிச்சயம் அனுபவித்திருப்பார்கள்.

அம்மா பசிக்கிறது என்றால் / ஒவ்வொரு பருவத்திற்கும் / ஒருத்தியாக வருகிறாள் / ஒரு தாய்.
நான்கே வார்த்தைகளில் தாய்மையின் உன்னதத்தை உணர்த்தி விடுகிறார்.

வறுமையில் உழலும் ஒருவர் வசதி வந்ததும் நிலை மாறிவிடுகிறார்.
பணம் ஒருவரின் குணங்களை மாற்றி விடுவதை, ஆசையின் உணவு எனும் கவிதையில் மிக அழகாக ஒரு யதார்த்தத்தை போகிற போக்கில் வீசியெறிந்து செல்கிறார். செல்வந்தர்களின் வார்த்தைகளில் கவனம் கொள்ள அறிவுறுத்துகிறது இக்கவிதை.

கவிஞர். சீனு ராமசாமி (Seenu Ramasamy) எழுதிய மேகங்களின் பேத்தி (கவிதைகள்) புத்தகம் | Megangalin Pethi Book - நூல் அறிமுகம்

பணத்தை தின்னத் தொடங்கியதும் / அன்பின் ருசி / மங்கத் தொடங்கி / அகந்தையின் இருளை மென்றன/ மனதின் தடித்த தோலோடு / நினைவழிந்த / மனித உடல் பூண்ட / உயிர்களின் பற்கள்.

மௌனத்தின் பெருவலி உணர்ந்தவர்கள் மட்டுமே இவ்வாறு எழுதிக் கடக்க முடியும். ஒருவர் மீதான கோபத்தை திட்டுவது, அடிப்பது, என ஏதேனும் ஒரு வழியில் கடத்தி விடுவது எளிது. ஆனால் மெளனம் மட்டுமே உள்ளிருந்து அறுக்கும் வாதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.கடத்தப்படாத உணர்வில் வன்மம் மிகுந்திருக்கும் என்பதை நமக்குள் கடத்துகிறார்.

வினை /வசைபாடுவது / அவதூறு/ வஞ்சகமாய் புகழ்வது / யாவினும் / மெளனமாக / கவனிக்காது விடுதல் / வன்மத்தின் உச்ச நோக்காடு /

பொதுவாக தந்தைகளை எல்லோரும் கைவிட்டு விடுவார்கள். இலக்கியத்திலிருந்து எதார்த்தம் வரை. ஆனால் தகப்பனுக்கும் ஒரு கவிதை செய்திருக்கிறார். கடைசி மூச்சில் உயிர் பரிதவிக்க உடன் நின்ற அத்தனைப் பிள்ளைக்கும் சமர்ப்பணமாய் இக்கவிதை எனது தகப்பனையும் நினைத்து கண்ணீரால் நனைத்துச் சென்றது.

தன் கடைசி நாளில் /சொல்ல வந்த சொல்லை / சொல்ல முடியாது பிரிந்து போன / தந்தையின் உயிர் / சொல்லாத சொற்களின் / மௌனத்தை நினைக்கும் நேரமெலாம் / இனம் புரியாத வேதனையின் கண்ணீர் / மகனின் வாழ்வு முழுவதும் சுரக்கிறது.

தொகுப்பு முழுமையும் உள்ள கவிதைகள் யாவும், அகத்தின் துயரங்களை புறத்தோடு பொருத்திப் பாடுகிறது. ஞான நிலையிலிருந்து உலகை உற்று நோக்கி தனது கைவசமிருக்கும் புதிய சொற்களால் வரைந்தளித்திருக்கிறார். வாதை மிகுந்தவனின் துயரப் பாடல்கள் நம் நெஞ்சை நனைக்காமல் போகாது. மேகங்களின் பேத்தி நமது மனதை நிறைக்கிறார். கவிஞர் சீனு ராமசாமியின் கவிதைச் செயல்பாடு தொடர வாழ்த்துகள்

நூலின் விவரம்:

மேகங்களின் பேத்தி (கவிதைகள்)
கவிஞர். சீனு ராமசாமி
ஆண்டு 2025
பக்கம்: 175
விலை: ரூ.210
வெளியீடு: எழுத்து பிரசுரம்

எழுதியவர்:-

மாசி வீதியின் கல்சந்துகள் - நூல் அறிமுகம் | சீனு ராமசாமி | டிஸ்கவரி புக் பேலஸ் | https://bookday.in/

✍🏻 செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *