சீனு ராமசாமியின் "சினிமாவின் ஆன்மா" புத்தகம் | Seenu Ramasamy's Cinemavin Aanma Book Review in Tamil | நா.வே.அருள் | www.bookday.in

சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” – நூல் அறிமுகம்

சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” – நூல் அறிமுகம்

இயக்குநர் சீனு ராமசாமிக்கு

சந்தியா பதிப்பகத்தில்  நம் இரண்டாம் சந்திப்பின் போதுதான் உங்கள்
“சினிமாவின் ஆன்மா” புத்தகத்தைக் கொடுத்தீர்கள்.  நாம் முதன் முதலாக
நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது,  கவிஞர் ஈரோடு  தமிழன்பனின் இறுதி
யாத்திரை  அவரது இல்லத்திலிருந்து தொடங்கிய போதுதான். உண்மையில் நீங்கள்
ஒரு பிரபலமான திரைப்பட  இயக்குநர். ஆனால்,  தமிழ் சினிமா இயக்குநர் என்ற
எந்த ஹோதாவும் இல்லாத ஒருவராக என்னிடமும் பேசிக் கொண்டிருந்தீர்கள்.

நீங்கள் இயக்கிய ‘தென் மேற்குப் பருவக்காற்று” திரைப்படத்திற்காக இந்திய
சினிமாவின் பெருமைமிகு தேசிய விருது, ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச
அங்கீகாரம், அமெரிக்காவின் கடோனா மற்றும் ஹூஸ்டன் சர்வதேச விருதுகள் என
உலக அரங்கில் அறியப்பட்டிருந்தாலும் இப்படியான எந்தப் பெறுமதியும் இல்லாத
ஒரு சாதாரண நபரிடம் கூட தேநீர் அருந்திப் பழகுகிற எளிமை எனக்குப்
பிடித்திருக்கிறது.

பாலு மகேந்திராவிடம்  திரைப்படக் கலையைக் கற்றிருக்கிறீர்கள்;
“மதுரையின் கல் சந்துகளிலும், மாசி வீதிகளின் மனிதப் பேரரவத்திலும்”
வாழ்க்கையின்  கலையைக் கற்றிருக்கிறீர்கள்.

சமீபத்தில் நீங்கள் இயக்குநராக இருப்பதைவிடவும் கவிஞராக இருப்பதில் அதிக
ஆர்வம் காட்டுவதாக நான் உணர்ந்திருக்கிறேன்.  ஏராளமான கவிதைத்
தொகுப்புகள் வெளியிட்டு அசத்தியிருக்கிறீர்கள்.

“இவரது கவிதைகள் குறைந்த சொற்களில் செறிந்த உணர்வுகளை, ஒரு
நீர்த்துளியில் தெரியும் பிரபஞ்சத்தைப் போலக் கடத்தக் கூடியவை” என்று
அசாதாரணமானவர்களைக் கூட அலட்சியப்படுத்த முடிகிற சந்தியா நடராஜனின்
சொற்கள் சாதாரணமான சொற்கள் அல்ல.

இப்போது நீங்கள் எனக்களித்த அந்தப் புத்தகம் சினிமா தொடர்புடையது.
ஆச்சரியம் என்னவெனில் கவிதைப் புத்தகங்களாக வெளியிட்டுவரும் நீங்கள்
திடீரென்று ஒரு சினிமா தொடர்பான புத்தகத்தை வெளியிடுவது!  அதைவிட
ஆச்சரியம் என்னவெனில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத என்னிடம் உங்கள்
புத்தகத்தை அன்பளிப்பாக அளிப்பது!  இன்னொன்று, அதற்கான காசு கொடுப்பேன்
என்று அடம்பிடித்தபோது, நீங்கள் தருவதென்றால் பதிப்பகத்திற்குத்தான்
தரவேண்டும் என்று ஒரு கண்ணியத்தைக் கடைப்பிடித்தது.  நிற்க.

புத்தகத்தைப் படித்துப் பார்த்தபின்தான் தெரிகிறது. சினிமாக் கலை
ஒன்றுமே தெரியாத ஒருவனிடம் இரசனையை உருவாக்க வேண்டும் என்று நினைத்து
எழுதியிருக்கிறீர்கள்.  அந்த விதத்தில் நீங்கள் ஒரு சரியான ஆளைத்
தேர்ந்தெடுத்துத்தான் கொடுத்திருக்கிறீர்கள்.

இந்தத் தலைப்புக்கே உங்களைப் பாராட்டலாம்.  ஆன்மாவே இல்லாமல் அலையும்
இந்த அரசியல் அவக்கேட்டு உலகில் சினிமாவுக்கு ஆன்மா  (“சினிமாவின்
ஆன்மா”) இருப்பதாகச் சிந்தித்திருக்கிறீர்கள்.  சினிமாவுக்குப் போன
சித்தாளு என்று ஜெயகாந்தன் எழுதிய நாவல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

சினிமாவை  வைத்தே அரசியல் நாற்காலியைத் தீர்மானிக்கும் நம் தமிழ்நாட்டில்
‘சினிமாவின் ஆன்மா’  மூலம் எப்படியாவது ரசனையை ஊட்டிவிடலாம் என்று கனவு
காண்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்.

“தேசிய, சர்வதேச விருதாளர், சர்வதேசத் திரைப்பட விழாக்களின் நடுவராக
இருப்பவர்.  ரஷ்ய மண்ணில் தமிழ் கலாச்சாரப் பிரதிநிதியாகச் சென்று
வந்தவர்” என்ற வகையில் இயங்கி வரும் உங்களுக்குச் சினிமாவின் ரசனை
மாற்றத்தில் அக்கறை இருக்கத்தானே செய்யும்?  நிரம்பி வழிவதற்குப் பால்
ஆசைப்படலாம்;  ஆனால், பாத்திரம் ஓட்டையாயிருக்கிறதே!  அந்த விதத்தில்
உங்கள் ஆசைக்கு என் அபிமான வாழ்த்துகள்.

உலகத்தரம் வாய்ந்த கவிதை என்றால் அது உள்ளூர்த்தனம் வாய்ந்த கவிதையாக
இருக்கவேண்டும் என்பது என் கவிதைக் கொள்கை என்பதால், “உலக சினிமா என்பது
உள்ளூரில் எடுக்கப்படும் நேர்த்தியான சினிமா” என்கிற உங்கள் குரல் எனக்கு
ரொம்ப நெருக்கமாகிவிடுகிறது.

சினிமாவில் கதாநாயகனின் பின்னாலேயே கேமராவைத் தூக்கிக் கொண்டு அலைவதால்
ரசிகர்கள் உருவாகலாம்; மனிதர்கள் உருவாக முடியாது. கவிஞர்கள் திரைப்படப்
பாடலாசிரியர்களாய்  வெற்றுப் பிம்பங்களுக்கு விசிறி விடுவதால் அதீதக்
கதாநாயக அரிதாரம் பூசிக் கொள்கிறார்கள்.  கல்வியறிவு முழுமையடாத ஒரு
நாட்டில் திரைக் கல்வி என்றால் என்ன தெரியும்?  ஒரு பாட்டில்
சாராயத்திற்கும் ஒரு குஸ்காவுக்கும்  தன் சிறுநீரகத்தையே விற்கத்
தயாராகிறார்கள்.   யூதாஸ்கள் மேய்ப்பர்களாக இருப்பதால் ஆடுகள் நிறைய
தேவைப்படுகின்றன. பல காரணிகள் இருந்தாலும், காட்சி ஊடகத்தின் வழியே
‘மந்தை மனநிலை’ யை உருவாக்கி விடுகிறார்கள். சினிமா அரசியலாகிவிடுகிறது.
ஒவ்வொரு ரசிகனின் கழுத்திலும் ‘தொண்டன்’  என்கிற தூக்குக் கயிறு
தொங்கிக் கொண்டிருக்கிறது.

உங்கள் புத்தகத்தின் நோக்கமாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும்
முக்கியமானது: – “பிறர் கண்ணீரைத் தன் கண்ணீராகப் பாவிக்கும் ஒரு
மென்மையான மனத்தைப் பெற்றுத் தருவதே இந்தக் கல்வியின் (புத்தகத்தின்)
அடிப்படை நோக்கம்.  ஒரு கதாபாத்திரம் திரையில் படும் துயரத்தைப் பார்த்து
ஒரு குழந்தை எப்போது கலங்குகிறதோ, அப்போதே அது சக மனிதனின் உரிமைக்காகக்
குரல் கொடுக்கும் உன்னத குணத்தையும் பெற்றுவிடுகிறது.  ஒன்றுபடுதல்,
கூட்டு விளைவு, கலந்தாலோசித்தல் போன்ற உயரிய மாண்புகள் திரையில் கதைகளாக
விரியும் போது, அது தனிநபர் வாதத்தைத் தகர்த்து ஒரு சமூகத்தின் மேன்மையை
உணர்த்துகிறது”

“அறிவினால் ஆகுவதொன்றுண்டோ பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக்கடை”
என்ற வள்ளுவன் குறளை வாசித்திருப்பதால்தான் உங்கள் குரலில் ஒரு தெளிவு
இருக்கிறது.

அறிவு, அறிவின்மை என்பதெல்லாம் ‘புனிதம் – பாவம்’ போன்ற கர்மாக்
கோட்பாட்டுடன் இணைக்கப்பட்டுவிடுவதால் மனிதர்களின் பார்வையே பழுதுபட்டுக்
கிடக்கிறது.  “எது அறிவு எது அறிவின்மை, ஒருவர் கற்றுக் கொள்ள முடியும்,
ஒருவர் கற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை” என்று இங்கு ஒரு பெரும் அறிவுக்
குழப்பமே நிறைந்திருக்கிறது.

தாய்மொழி பேசாத குழந்தை உண்டா?  எல்லோரும் தாய்மொழியை எளிதாகப்
பேசிவிடுகிறார்கள்.  ஒருவனை ஏணியிலிருந்து கீழே தள்ளிவிட அந்நிய மொழி
பயன்படுத்தப்படுகிறது.    அடுத்து அவன் பெற முடிந்ததைக் கூடப்
பெறுவதற்கு  சாதி என்ற பேராலும், இல்லாதவன் இருக்கிறவன் என்கிற
பிரிவினையாலும், ஆண் பெண் என்ற பாலினப் பாகுபாட்டினாலும் பலவித பேதங்களை
உருவாக்கி வைத்திருக்கிறோம்.  அறிவின் ஏற்றத்தாழ்வுகளை திட்டமிட்டுச் சதி
செய்து கட்டமைத்திருக்கிறோம். எப்படித் தாய்மொழி கற்க முடியாத குழந்தை
இல்லையோ, அப்படித்தான் காட்சிமொழி புரிந்துகொள்ள முடியாத குழந்தையும்
இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.

இதற்குத் திரைக்கல்வி அவசியமா?

இப்போது நம் திரையுலகம் என்ன செய்துகொண்டிருக்கிறது?  ஒரு குழந்தையிடம்
கத்தியைக் கொடுத்திருக்கிறது.  அதனால்தான் கொடுத்தவன் திரும்புவதற்குள்
பல கொலைகள் நடந்துவிடுகின்றன.

கதாநாயகனை மீட்பராகப் பார்ப்பதினால் விளைகிற ஆபத்து பயங்கரமானதாக
இருக்கிறது.    அதனால்தான் கதாநாயகர்கள் தமக்குத் தேவையான அரசியல்
நாற்காலிக்காக மரங்கள் வெட்டத் தொடங்கி ஒரு காட்டையே
அழித்துவிடுகிறார்கள்.  பிம்பங்களை நிஜங்களாக எண்ணி மயங்குவதனால்
வாழ்க்கையே பிழையாகிப் போகிறது.

வளர்ந்த நாடுகளில் திரைப்பட விழாக்களில் குழந்தைகளே நடுவர்களாக இருந்து
திரைப்படங்கள் பற்றி விவாதிக்கிற சூழல் நம் தமிழ் உலகத்திற்குப்
புதியதுதான்.  திரைக்கல்வியே இல்லாதபோது திரை ஆசிரியர்கள் எப்படி
உருவாகிவிட முடியும்?  ஜப்பான் நாட்டு ‘ஸ்டுடியோ கிப்லி’ (Studio Ghibli)
போன்றும் ஜெர்மனியின் ‘விஷன் கினோ’ (Vision Kino)) போன்றும் இந்தியாவில்
சினிமாவைப் பள்ளிக் கல்வியின் ஒரு அங்கமாகவே மாற்றி மாணவர்களின் சமூகப்
பார்வையை விசாலமாக்க விரும்புகிறீர்கள்.

வன்முறையைத் தூண்டும் திரைப்படங்கள், மனித உடல்களைச் சிதைப்பதைக்
கொண்டாடும் திரைப்படங்கள் வெறும்  சந்தை வியாபாரம் என்று சரியாகவே
சொல்லியிருக்கிறீர்கள்.

இங்கு சினிமா என்றாலே வியாபாரம்தானே?

இந்தச் சூழலில்தான் திரைக்கல்வியின் அவசியம் குறித்தும், ஒன்று முதல்
ஐந்தாம் வகுப்பு வரை எப்படியான பாடத்திட்டங்கள் வைக்கலாம் என்ற
யோசனையையும் பகிர்ந்திருக்கிறீர்கள்.

ஒலியமைப்பு (Sound Design) பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் கீழ்க்கண்ட
ஒரு சிறு குறிப்பு எனக்கு மாபெரும் திறப்பாகத் தெரிகிறது: –
“நாம் திரையில் ஒரு அறையை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்போம்.  ஆனால்
ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையின் சத்தம், தூரத்தில் கடந்து செல்லும்
ரயிலின் ஓசை, அல்லது உதிர்ந்த இலையை மிதித்துக் கொண்டு நடக்கும் ஒருவனின்
காலடிச்சத்தம் இவையாவும் அந்த அறையின் எல்லையை விரித்து, மொத்த
உலகத்தையும் நமக்குள் கொண்டுவந்து சேர்க்கும்.”
ஒரு அறை என்பது ஒரு அறை அல்ல;  வெவ்வேறு கலவைகளின் உலகங்கள் என்று
புரிந்துகொள்கிறேன்.

தி ரெட் பலூன் முதல் சினிமா பாரடைஸ் வரையிலும் இருபது படங்கள் பற்றிய
உங்கள் சிறு சிறு விளக்கங்கள் எனது கண்களுக்கு நீங்கள் கற்றுத் தரும்
மாபெரும் ரகசியங்கள்!  படித்துப் படித்து மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய
பாடங்கள்!

போகிற போக்கில் ஒரு தத்துவார்த்தமான வரி வந்து சேலைக்கு அழகிய கரையைப்
போல அழகு கூடிவிடுகிறது.  அப்படியான ஒன்றிரண்டை மட்டும்
குறிப்பிடுகிறேன்: “அன்பு அதிகாரத்திற்கு அச்சுறுத்தல்தானே!” என்கிற
வாசகம்.

“பல நூறு கோடிகள் புழங்கும் பிரம்மாண்டங்களின் நிழலில், ஒரு சாமானிய
மனிதனின் மூச்சுக்காற்று எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது?” என்கிற கேள்வி.

“வாழ்வின் கதைகளில் வரும் மனிதர்களைப் போல, வாழ்வின் மிக நுணுக்கமான
வலிகளையும் சாமானியர்களின் மௌனங்களையும் பேசும் ‘சிறு படங்கள்’ இன்று
எங்கே போயின?” என்று கேட்கிறீர்கள்.  அதற்குப் பதிலையும் நீங்களே
சொல்லிவிடுகிறீர்கள் – உலகத் திரைப்பட மேதை பிரான்சிஸ் போர்டு கொப்போலா
ஒரு முறை சொன்னார்: –
“சினிமாவின் எதிர்காலம் என்பது பெரும் ஸ்டுடியோக்களில் இல்லை; மாறாகக்
கையில் ஒரு சிறிய கேமராவோடு எந்தச் சமரசமும் இன்றித் தன் கதையைச் சொல்லத்
துடிக்கும் ஒரு சாதாரண இளைஞனிடமே இருக்கிறது”

எத்துணைத் தீர்க்க தரிசனம்!
அமெரிக்கா,  இஸ்ரேல் நாடுகளின் அட்டூழியங்களைப் பார்த்தும் பாராமல் ஈரான்
நாட்டுக் கையறு நிலையைக் கண்டும் காணாமல் உலகமே ஒரு தலைப் பட்சமாக வெறும்
‘உச்’ கொட்டிக்  கொண்டிருக்கிறபோது  தமிழ்நாட்டின் ஒரு மூலையில்
வசிக்கும் ஜெயச்சந்திர ஹாஷ்மி என்னும் ஒரு இளைஞன் – பிரான்சிஸ் போர்டு
கொப்போலா சொன்னது போல – தன் கையில் ஒரு அலைபேசியோடு எந்தச் சமரசமும்
இன்றி  ‘இரை’ என்ற குறும்படம் எடுத்திருக்கிறான்.  அவனது சின்ன கைகளில்
“சினிமாவின் ஆன்மா” வே சிக்கிக் கொண்டதைப் போலத் தோன்றுகிறது.
அருமையான புத்தகத்தைத் தந்திருக்கிறிர்கள்.  “சினிமாவின் ஆன்மா” நூலின்
மூலம் எதிர்காலத் திரையுலக ஆன்மாவையே தரிசிக்க முடிகிறது.  இது ஒரு
அரிச்சுவடிதான்.  உங்களிடமிருந்து இன்னும் எத்தனை எத்தனையோ ஆழங்களை
எதிர்பார்க்கிறோம்.

நன்றியுடன்
நா.வே.அருள்

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:சினிமாவின் ஆன்மா (Cinemavin Aanma)
ஆசிரியர்:​சீனு ராமசாமி
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
விலை: 5% சலுகை விலையில்
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 நா.வே.அருள்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *