மக்கள் இயக்குநர் சீனு ராமசாமி எழுதி விகடன் வெளியிட்ட "கோயில் யானையின் சிறுவன் (Koyil Yanaiyin Siruvan) - ஒரு திரைப்பட இயக்குநரின் கவிதைகள்"

கோயில் யானையின் சிறுவன் – நூல் அறிமுகம்

மக்கள் இயக்குநர் சீனு ராமசாமி (Seenu Ramasamy) இந்த வருடம் மட்டும் இது வரை 3 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். கோயில் யானையின் சிறுவன் (Koyil Yanaiyin Siruvan) இவரது 6 ஆவது புத்தகம் சற்று கனமானதும் கூட கவிதைகளும் தான். யானையை பின்தொடர்ந்து ஒடும் சிறுவர்களைப் போல் இவர் கவிதைகளை துரத்திக் கொண்டு ஒடுகிறார். யாவும் தன்னியல்பான கவிதைகள் எந்த மெனக்கெடலும் இன்றி உள்ளத்தில் என்ன ஊறுகிறதோ அதை அப்படியே எழுத்தில் வடித்து விடுகிறார் என்று நினைக்கின்றேன். சொற்களுக்கு தவம் கிடக்காமல் எழுத வருவதும் ஒரு வரம் தான். அதை இயற்கையாகவே தனது வாழ்வனுபவத்திலிருந்து பெற்றிருக்கிறார். எல்லோருக்கும் மொழி வசப்படுவதில்லை யானைகளின் சாணம் மிதித்து குதூகலப்படும் சிறுவர்களுக்கு அது சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார்.

இனி கவிதைகளிலிருந்து ஓரிரு சுளைகள்

அன்னையர்கள் யாவருக்கும் பிள்ளைகள் மனதில் அழியாத இடமிருக்கும். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் தனக்கென்று கேட்காத மனமும் வாழ்வின் அடி நிலைக்கு சென்றாலும் கூடவே நிழல் தரும் மரமாக நமை தொடரும் தாயை எந்த தனயனுக்குத்தான் பிடிக்காது.
அம்மாவை பற்றி எழுதுகையில் / அவள் விரல் பதித்த / வெந்த இட்லி யொன்று / அழியாத ஓவியமாக / மனதில் இருக்கின்றது என்று நெக்குருகுகிறார்.

கிராமமோ நகரமோ மனித நேயர்கள் எங்கும் மக்கள் துன்பத்தில் பங்கேற்பவர்களாக, துயர் தீர்க்க முனைபவர்களாக, தன்னியல்போடு இயங்குபவர்களால் மட்டுமே புவி சுழல்கிறது. சாலைகளில் அடிபட்டு ரத்தம் சிந்தி கிடப்பவர்களை முகமறியாத, சாதி, மத, மொழி, இனமறியாத யாரோ சிலர் தான் 108 வரும் வரை உடனிருந்து முதலுதவி செய்து உறவு வரும் வரை காத்து கொடுக்கின்றார்கள்.
அவர்களுக்காகவும் ஒரு கவிதை அதன் இறுதி வரிகள் மிக உன்னதம்.

“பிறர்க்கு தரும் நேரத்தை கணக்கில் சேர்க்காதவர்கள் தனக்கும் சேர்க்காதவர்கள் ”
சுயநலமற்றவர்க்கான மரியாதைச் சொல்லிது.

மனிதர்களின் இன்னொரு பரிமாணத்தையும் சமத்துவம் எனும் தலைப்பில் சுட்டுகிறார்.

ஒரு தீபத்தை கொண்டு
மறு தீபம் ஏற்றலாம்
ஊதி அணைக்கத்தான்
மனிதன் தேவைப்படுகிறான்.

ஒரு நம்பிக்கை கவிதை. என்னதான் மனிதன் தொடர் முயற்சியில் இருந்தாலும் காத்திருத்தல் ஒன்றுதான் இறுதி வெற்றியை பெற வைக்க முடியும்.
சோதனைகள் மூழ்கிவிடும் கவிதையில்

ஒரு படகு செய்பவருக்கு / அது மிதந்து செல்லும் நாள் உண்டு / அந்நாளில் சோதனைகள் மூழ்கிவிடும்.
என்றெழுதி நம்பிக்கை ஊட்டுகிறார்.

என் மனதிற்கு மிக நெருக்கமான ஒரு கவிதை காலம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.
வாழ்வு ஒரு புதிர் தான் என்றாலும் இறுதி வரை விடை காண முடியாத சம்பவங்களால் நிறைந்து விடுகிறது. காணும் காட்சிக்கும் வாழும் வாழ்விற்கும் சம்மந்தமில்லாத சூழலில் இக்கவிதை ஒரு வேதாந்தமாகப்படுகிறது.

”எதுவும்
போகும் காலத்தில் போகிறது
வரும் காலத்தில் வருகிறது
இருக்கும் காலத்தில் இருக்கிறது
அன்பும் கொடிதும் நிறைந்தது இப்பிரபஞ்சம்”

என்றெழுதி ஞானியாகிறார்.

உறவுக் குழப்பமில்லாத வாழ்வேது. எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் ஒற்றை சரடாய் அன்பொன்று ஊடாடிக் கிடப்பதால் மட்டுமே பலரின் குடும்ப வாழ்வு நிலை பெறுகிறது. கோபமும் தணிதலும் உள்ளுறையாய் இருக்கிறது கவிதை.

திரும்ப திரும்ப
வெளியேறச் சொல்லும் உன்னிடம்
நான் சொல்ல ஒன்றிருக்கிறது
நானும் திரும்பிப் போக
இடமில்லாமல் நிற்கவில்லை.

குடும்பஸ்தர்களின் மனக்குமுறல் இது

இணைய உலகில் நடக்கும் கேடுகளையும் பழங்கால திண்ணைப் பேச்சுகள் யாவும்
அரங்கேறும் இடமாக திகழ்வதையும் எழுதுகிறார்.

“ஒரு நாள் புகழ்
மறுநாள் அவதூறு
இதன் பெயர்
இணைய வழி பிறந்த
ஈசலின் சாவு
இடையில் வளருது
புறணி வியபாரம்”.

என்று நவீன காலத் துயரையும் பாடுகிறார்.

ஒரு நூலில் குறைகள் என்று ஏதும் இருப்பதில்லையா? என்ன இதிலும் இருக்கின்றது. ஆங்காங்கே ஒரு சில கவிதைகளில் ஏதோ சொல்ல வந்து விட்டு ஏதும் தோணாமலோ? அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லாமலோ? கவிதைகளை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டு சென்று விடுகிறார். ஒருவேளை வாசகர்கள் நிரப்பிக் கொள்ளும் கோடிட்ட இடங்களோ என்னவோ? ஒன்று தொடர்ந்திருக்கலாம் அல்லது அரிசியில் கல் பொறுக்குவது போன்று நீக்கியிருக்கலாம்.

“கோயில் யானையின் சிறுவன் (Koyil Yanaiyin Siruvan) – ஒரு திரைப்பட இயக்குநரின் கவிதைகள்” நூல் நெடுக அவர் மனதிலிருக்கும் வார்த்தைகளை எந்த அடித்தல் திருத்தல் ஏதுமின்றி தீராத் துயரை பாடிக் குறைக்கும் பாடகனாய் எழுதிச் செல்கிறார். அவரது தனித்துவமான மொழி அவருக்கு கை கொடுக்கிறது. மொத்தம் 133 கவிதைகள் மனதிற்கு மிக நெருக்கமான பல கவிதைகள் மனதில் தேங்கி விடுகின்றன. அழகான ஓவியங்கள் விகடனுக்கே உரிய தரமான அச்சாக்கம் என்று வடிவமைப்பு அழகியல் என தேர்ந்தெடுத்து நெய்திருக்கிறார்கள். தொடர்ந்து கவி செய்ய அன்புக் கவிஞர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள்.

நூலின் விவரம்:

கோயில் யானையின் சிறுவன் (Koyil Yanaiyin Siruvan) – ஒரு திரைப்பட இயக்குநரின் கவிதைகள்
ஆசிரியர்: கவிஞர் சீனு ராமசாமி (Seenu Ramasamy)
பக்கம்: 303
விலை: 400
வெளியீடு: விகடன் பிரசுரம்
புத்தகம் வாங்க: thamizhbooks.com

கோயில் யானையின் சிறுவன் (Koyil Yanaiyin Siruvan) நூல் அறிமுகம் எழுதியவர்:

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
9965802089
[email protected]


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *