கவிஞரும் திரைப்பட இயக்கநருமான சீனு ராமசாமி அவர்கள் எழுதிய “முதல் ருசி” எனும் கவிதை தொகுப்பு இப்போதுதான் வாசித்தேன். தர்மதுரை மாமனிதன் தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கிய ஆக சிறந்த இயக்குநர் இவர். தனது திரைக்கலை ஆர்வத்தோடு கவிக்கலை ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டதற்கு சான்றே, இந்த முதல் ருசி என்னும் கவிதை தொகுப்பு ஆகும். உறுதியாக நீங்கள் இதனை வாங்கி வாசிக்கலாம்.
ஒரு தவளை குளத்தில் குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. காரணம் அதற்கு குதித்து விளையாடும் போது ஒரு மன நிம்மதி கிடைக்கிறது என்று அமைதியின் நிதானம் என்ற தலைப்பில் அமைந்த இந்நூலின் முதல் கவிதையே நம்மை அசைத்து பார்க்கிறது. இவற்றை வாழ்க்கையோடு ஒப்பிடும்போது நாம் சில நேரங்களில் கோபமாக இருக்கும் போதோ சோகமாக இருக்கும் போதோ நம்மை அறியாமல் நாம் அதிலிருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்ள ஏதோ ஒன்றை செய்வோம். அவ்வாறாகத்தான் எனக்குத் தோன்றுகிறது இக்கவிதை.
“ஓடை” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி இருப்பார் .அந்த கவிதையை நான் படித்ததும் தான் இந்த நூலை தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றியது என்றால் அந்த கவிதை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு பறவை தாகத்திற்காக ஓடைக்கு வந்து தண்ணீர் குடிக்கிறது . மீண்டும் வானில் பறக்கிறது .இப்போது அந்த பறவையின் வயிற்றில் ஓடையும் பறக்கிறது ஓர் பறவையாய் என்று அவர் எழுதியிருப்பது எத்தனை அற்புதம். நிச்சயம் இதற்கு நான் அடிமையாகவே ஆகிவிட்டேன் . நீர் நிலைகளில் பறவைகள் தாகம் தீர்ப்பதை நாம் பார்த்ததா இல்லை? பல நேரங்களில் நின்று கூட கவனித்துச் சென்று இருப்போம். இவ்வாறு ஒன்று கூட நமக்கு தோன்றியது இல்லை.
வழி என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு கவிதையை கூறுகிறேன்.
அமைதியற்ற நாளுக்கு
எவருமற்ற தனியறை
ஆளற்ற கோயிலில்
சுடரும் தீபம்
நீண்ட நேரம்
தனி அருவி பார்த்தல்
தழுவி உறங்க தலையணை
எவருக்காவது உணவு தர
கொஞ்சம் பணம்
காலில் விழுந்த ஆசி பெற
வாழ்வாங்கு வாழ்ந்த
ஒரு மூத்த உயிர்
இதைப் படித்ததும் வாழ்க்கை அவ்வளவுதான் வேற என்ன வாழ்க்கையின் பெரிய எதிர்பார்ப்பாய் இருந்துவிடப் போகிறது என்றுதான் தோன்றியது. அதேபோல் “பிதாவிடம் விண்ணப்பம்” என்ற தலைப்பில் ஒரு கவிதையும் இதில் இடம் பெற்றுள்ளது அதில் இவர் தொன்மை உத்தியை கையாண்டு இருப்பார். இதில் எனக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்திய ஒரு கவிதை என்றால் “கூடு” என்ற தலைப்பில் இவர் பறவையின் கூட்டை களைத்ததை பற்றியும், அந்த நினைவலைகள் இன்னும் நெஞ்சை விட்டு போகவில்லை என்பதையும் அழகாக கவிதையாக தீட்டி இருப்பார்.
தாய்மை என்று தலைப்பு வைத்து கவிதை எழுதி பார்த்திருப்போம். தந்தைமை என்று இவர் எழுதி இருப்பது வியப்பிலும் வியப்பு. புது உத்தி ஆளுமை. காதல் ,அன்பு,நட்பு, தாய்மை, சமூகப் பிரச்சனை என இவ்வாறு தான் இப்போதெல்லாம் கவிதைகள் வந்து கொண்டிருக்க, இயற்கை காட்சிகளை அதன் அழகுகளை படம் பிடிக்கும்படி யார்தான் எழுதுவார் என்ற கேள்விக்கு, இவர் பதில் தந்த ஒரு தொகுப்பாகத்தான் இதனை பார்க்கிறேன்.
“கானகம்” என்ற தலைப்பில் தாயின் மடியை இறுகிப் பற்றிய ஒரு குரங்கு குட்டி வானத்தை பார்க்கிறது என்ற காட்சியை இதுவரை நான் எந்த படைப்பிலும் பார்த்ததில்லை கேள்விப்பட்டதும் இல்லை. யாரும் கவனிக்காத ஒன்றை நமக்கு யாரேனும் அளித்தால்,அதுவும் கவிதையாக பரிசளித்தால் அது பிடிக்காமலா போகும்? வறுமையைப் பற்றி ஒரு கவிதை எழுதி இருப்பார் அதற்கு தலைப்பு கூட வைத்திருக்க மாட்டார். அக்கவிதையில் நெஞ்சில் ஜோதியாக என்ற ஒரு சொல்லாடலை இவர் கையாண்டு இருப்பார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுபோல பிரிவை பற்றி ஒரு கவிதை எழுதி இருப்பார்.
“உன் நினைவுகள் சிறகுகள் விரித்து
நம் பிரிவின் பள்ளத்தில் பறக்கின்றன”
என்ற வரிகளை படித்ததும் நல்ல கற்பனைத் திறன் மிக்கவராக இருக்கிறாரே என்று புன்னகைத்துக் கொண்டேன் நானாக. “அனாதை நாய்” என்ற தலைப்பில் ஆன கவிதை ஒரு இரட்டுறமொழிதலை போல் இருந்தது. அதனை படித்ததும் திரிகடுகத்தில் படித்த “எவ்வுயிருக்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும்” என்ற வரிகள் என் நினைவுக்கு வந்தது.
இதில் பல கவிதைகள் புரியாமல் இருந்தது. இல்லை சில நேரங்களாகுமா? இல்லை அதற்கான புரிதலின் ஆற்றல் என்னிடம் இல்லையா? மறுவாசிப்பு செய்து பார்க்க வேண்டுமா என்ற பல கேள்விகள் என்னுள். உனக்கு வேறு என்ற தலைப்பில் ஒரு அற்புதமான மனதை வருடும் மகத்துவமான கவிதையை சீனு ராமசாமி அவர்கள் படைத்திருப்பார். நிச்சயம் நீங்கள் அதையெல்லாம் வாசித்தே ஆக வேண்டும் வாசகப் பிரியர்களே!
சுமார் நூறு பக்கங்கள் நிறைந்த இந்த கவிதை தொகுப்பை படித்தவுடன் என்ன கிடைக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு கிடைத்த ஒன்றை சொல்கிறேன் உள்ளத்து மகிழ்ச்சியும் நல்ல ஒரு அனுபவமும். பெண் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி இருப்பார் அது புரியவில்லை புரிந்த அளவுக்கு வைத்து பார்த்தால் பிடிக்கவும் இல்லை. புரிந்து கொள்ள முயன்று கொண்டே இருக்கிறேன்.
“இசையற்ற தெரு” என்ற ஒரு வரிகளில் எத்தனை தனித்துவமான கவித்துவம். நிச்சயம் சென்று வாசியுங்கள் மனிதர் வீடு என்ற தலைப்பில் அமைந்த கவிதையை. வியப்பின் மையல் என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் உன் சிவந்த கொண்டைச் சேவல் பார்வையை நான் திரும்பிப் பார்த்திருக்கக் கூடாது என்ற பகுதி மட்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் ஒரு முறையாயினும் சேவலின் பார்வையை நேருக்கு நேர் கண்ணோக்கி இருந்தால் இவர் சொல்ல வருவது நிச்சயம் உங்கள் இதயங்களில் ஒரு இடத்தை பிடிக்கும்.
மனம் திருந்துதல் பற்றியும் இவர் கவிதை எழுதி இருக்கிறார். இயற்கை நேயன் என்று இவரை சொல்ல ஆசையாக உள்ளது காரணம் கவனம் என்ற தலைப்பில் இவர் மீட்டிய கவிதையே. சுகம் என்ற தலைப்பில் ஒரு கவிதை – அதை படித்து உடன் இயேசு நாதர் தான் நினைவுக்கு வந்தார்.
46 ஆம் பக்கத்தில் குழந்தைகள் பற்றிய ஒரு கவிதை. குழந்தைகளைப் பற்றிய கவிதை, என்னையும் பற்றியது. நாம் கடைசி வரை ஏன் இதற்கு முதல் ருசி என்ற பெயர் வைத்ததார் என்று தெரியாமலே இருந்து விட்டோம் .முதல் ருசி என்ற தலைப்பில் அவர் இந்த தொகுப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார் அந்த தலைப்பையே இந்நூலின் பெயராகவும் வைத்துள்ளார். அந்த கவிதையை படிக்கும்போது ஒரு மௌன புன்னகை தான் என்னுள் பூத்தது. ஏனென்று அறிய நீங்களும் வாசியுங்கள், இதனை சுவாசியுங்கள்.
“கைவிடுதலின் தைரியம்” என்ற தலைப்பில் ஆன கவிதை எல்லாம் செம்மத்து கவிதை என்று தான் செந்தமிழ் பயிலும் நான் கூற வேண்டும். நிலையாமை பற்றியும் இவர் எழுதியிருக்கிறார். “அக்காவின் வெயில்” என்ற தலைப்பில் ஆன கவிதையும் “ஓடை” என்ற தலைப்பில் ஆன கவிதையும் ஒரே சாயலில் இருக்கும். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது உங்களுக்கு எப்படியோ?
கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்ற அவ்வையாரின் பாடலைப் போல் பிரபஞ்சம் என்ற கவிதை உள்ளது. உண்மையை கூற வேண்டுமென்றால் அதனினும் ஒரு படி மேலே. சந்ததிகள் என்ற தலைப்பில் ஒரு கவிதை. நான் எத்தனையோ மேற்கோள் காட்டி விட்டேன் காரணம் அத்தனை மேற்கோள் காட்டும்படியாக அற்புதக் கவிதைகள் இத்தொகுப்பில்.
பக்கம் 83 ல் உள்ள ஒரு கவிதைக்கு கண்ணீர் மழை என்ற தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும். வாசித்து பாருங்கள் நிச்சயம் அந்த கவிதை உங்களுக்கு பிடிக்கும். நமக்கு நாம் தான் துணை என்பதை” எனக்கு” என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை நமக்கு சொல்லும்.
“பூரண அமைதி” என்ற தலைப்பில் உள்ள கவிதை படித்ததும், அல்லல் தீர்க்கும் ஆண்டவனுக்கு புள்ளினங்கள் துணை என்ற வரிகள் தான் என் நெஞ்சில் பூத்தன. சொல்லிக் கொண்டே போகலாம். பாடம், நிறுத்தாதே என இன்னும் பல.ஒவ்வொரு தலைப்பிலும் அமைந்த கவிதை எதார்த்தங்களின் எதுகை என்பேன். இயல்பு என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை .அதில் தன்னிலை மறந்து பட்டாம்பூச்சிகள் விளையாடுகின்றன என்ற வரிகள் வரும். எனக்கு இந்த சொற்றொடரை படித்ததும் நா.முத்துக்குமார் அவர்களின் ஆனந்த யாழை பாடலில் வரும் அந்த வரிகள் தான் நினைவுக்கு வந்தது. தூரத்து மரங்கள் பாக்குதடி தேவதை இவளா கேட்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி……
உண்மையில் ஒரு ஆகச் சிறந்த தொகுப்பே இத்தொகுப்பு. உண்மையில் ஒருநல் கவிஞராக சீனு ராமசாமி. உண்மையில் நாமும் ஒரு வாசிப்பாளராக இந்த கவிதை தொகுப்பை வாசித்து விடுவோம். இலக்கியம் பற்றி உங்களுக்கு தெரியாது ஆண்டவனைக் கூட நம்மிடத்தே சேர்க்கும் ஆற்றல் மிக்கது. அந்த இலக்கியத்தைப் பற்றி இவர் எழுதிய கவிதை.
தேறுவது தேறும்
எனும் விஞ்ஞான கூற்றுக்கு எதிரே
தேறாததைத் தேற்றும்
மானுட போரைத் தொடங்கியது இலக்கியம்.
நன்றி
நூலின் விவரங்கள்:
நூல்: முதல் ருசி (Mudhal Rusi)
ஆசிரியர்: சீனு ராமசாமி (Seenu Ramasamy)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
வெளியீட்டு ஆண்டு: 2025
விலை: ரூ.125
எழுதியவர் :
✍️ – மோயீசன் அபிஷேக் அமிரோ அ
இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம்
சென்னைக் கிறித்தவக் கல்லூரி
தாம்பரம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
