இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய "முதல் ருசி" கவிதை தொகுப்பு புத்தகம் அறிமுகம் | Seenu Ramasamy's Mudhal Rusi Book Review | www.bookday.in

இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய “முதல் ருசி” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் எட்டாவது கவிதை தொகுப்பு ,  “முதல் ருசி” கவிதை தொகுப்பு. சந்தியா பதிப்பக வெளியீடு வாழ்வின் பெரும்பகுதி தான் தேடிப் படித்த கவிஞர்களின் பட்டியலை முன்னுரையில் பகிர்ந்திருக்கிறார்.

கவிஞருக்கு இலக்கியத்தின் வழியாகத்தான் சினிமா வந்து தொற்றிக் கொண்டிருக்கிறது. கவிதையும், காட்சி ஊடகமும் இணைந்து பிசைந்து உருவாகியிருக்கிறார்.

வாழ்வின் வழி எங்கும் அலைச்சலோடு நெருக்கடிகளாலும், புறக்கணிப்புகளாலும் கடந்து வந்தாலும் நம்பிக்கைக்குரியவனாக இலக்கியம் வைத்திருக்கிறது என்கிற எதார்த்த உண்மை எல்லோருக்கும் ஒரு பாடம், வழிகாட்டல், எனக்கு அனுபவ உண்மை.

படைப்பில் உயிர் இருந்தால் அது வாழும் எனும் கவிஞரின் குரலுக்கேற்ப கவிதைகள் வாழுகின்றன.

கவிதைகளுக்குள் செல்வோம்

//ஓடைக்கு இறங்கும் தொலைதூரப் பறவை
தாகத்திற்கு சிறிது நீரள்ளி பருகுகிறது
றெக்கைகளின் வெம்மையும் தணிக்கிறது
சிறிது நேரத்தில்
ஏகும்
அந்தியின் ஆகாயத்தில்
குளிர்ந்த வயிற்றில் இருக்கும் ஓடையும்
பறவையாகிறது //

நீரள்ளி பருகிய அந்த பறவையின் வயிற்றில் இருக்கும் நீர் பறக்கும் ஓடையாகிறது எனும் இந்த படிமம் அழகானதொரு காட்சியாக கண்முன் விரிகிறது.

இன்னொரு பறவையொன்று கூடு கட்டுகிறது மரத்தில் அல்ல எங்கு என்று பாருங்கள்…

கூடு
//அறியாப் பருவத்தில்
பாதி கட்டிய கூட்டின் மரக்கிளையை முறித்தவன்
நான்
மன்னிக்காமல்
எச்சமிடாமல்
பறந்த பறவை
நினைவில் ஒவ்வொரு
மூள்குச்சியாகக் கொணர்ந்து
கட்டிக்கொண்டே இருக்கிறது
இதயத்தின் நடுவில் எனக்கொரு
கூட்டை //

இந்த கவிதை என்ன சொல்கிறது குற்றவுணர்வையா? எச்சமிட்டு தண்டனை தருதல் ஒன்று, மன்னித்தல் இன்னொன்று. எதுவும் இல்லாமல் இயல்பென கடந்து போதல் என்பது எதிர் நிற்பவரின் இதயத்தில் குற்றவுணர்வு கூட்டைக் கட்டி விடுகிறது. எல்லோரும் இது போன்ற ஒரு பறவையை எங்கேயும், ஏதோ ஒரு சூழலில் சந்தித்துவிடத்தான் செய்கிறார்கள்.

இதோ இன்னொரு கவிதை உலகளந்தவனுக்கு…

//நான்
உன்னளவுக்கு உலகளந்தவன் இல்லை
என் பாதங்களுக்கும்
சிறு நிலம் தந்திருக்கிறது
இப் பிரபஞ்சம்//

தனக்கு அதுவே போதும் என்கிறார். கவிஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். சிறு தருணங்களையும் அழகாகிக் கொள்ள கவிஞர்களால் மட்டுமே முடிகிறது. அதை கவிதைகளாகவும் மற்ற முடிகிறது.

அனாதை நாய்

//நாய் என்பதற்காக
ஆபாச சொற்களுக்கு பதில்
அதன் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்
நாய் என்பதற்காக
புணரும் உச்சத்தில் கல்லால் அடிக்கிறார்கள்
நாய் என்பதற்காக அதன் சிரிப்பின் வாலை வெட்டுகிறார்கள்
நாய் என்பதற்காக அடிமை விசுவாசத்திற்கு அதன் குணத்தை குறியிடுகிறார்கள்
நாய் என்பதற்காக நள்ளிரவில் பிடித்துக் கொண்டு போய்
யாருக்கும் தெரியாமல் அடித்துக் கொல்கிறார்கள்
தாமாக வளர்ந்து
அடித்தால் கேட்க ஆள் இல்லாத
ஒரு உயிர் என்றால்
இப்படிச் செய்கிறார்கள் //

இவ்வுலகில் கேட்க நாதியற்ற அத்தனை உயிர்களும் இப்படி அனாதை நாய்களாகத்தான் அடித்துக் கொல்லப்படுகின்றன. கவிதை நாய்களுக்கானது மட்டுமல்ல…

வேர் எனும் தலைப்பில் இன்னுமொரு கவிதை

//கடைசியில்
நீயும் கைவிட்ட பிறகுதான்
ஏனோ
தெய்வம் என் கை பிடித்தது
வாழவேண்டும் என்ற
தவிப்பும் அலைச்சலும் பெருகியது//

கைவிடவே மாட்டார்கள் என்று நம்பியவர்கள் கைவிடும் போது போது வேறு எவரின் கைகளையும் நமக்கு பற்றிக்கொள்ள தோன்றுவதில்லை. அப்பொழுது நமக்கு ஆற்றுதலாக தேற்றுதலாக என்றும் கைவிடாத இறையைத் தேட வேண்டியிருக்கிறது.

ஆயினும் எதார்த்தம் வேறு அல்லவா? மீண்டும் நம்பிக்கைகள் துளிர்க்கும்போது ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும் அவர்களைப் பற்றத் தொடங்குகிறோம். அதனால் என்ன பற்றிக் கொள்வோம் மீண்டும் நம்பிக்கைகள் விடும்போது பற்றிக்கொள்ள இறை இருக்கிறதே.

//ஒன்றுமில்லை எனும் முடிவில்
ஒன்று இருக்கிறது
எல்லாம் இருக்கிறது எனும் நிலையில்
எதுவுமே இருப்பதில்லை //

சில நேரங்களில் எல்லாமுமாக இருந்தவர்கள் ஒன்றுமில்லையென்று ஆகிவிடுகிறார்கள் எனும் வாழ்க்கையின் எதார்த்தத்தையும் சொல்கிறது இக்கவிதை.

இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய "முதல் ருசி" கவிதை தொகுப்பு புத்தகம் அறிமுகம் | Seenu Ramasamy's Mudhal Rusi Book Review | www.bookday.in

இன்னொரு கவிதை ஒன்று தன்னிடம் என்ன மிச்சம் இருக்கிறது என்பதை சொல்கிறது பாருங்கள்..

//என்னிடம்
கொஞ்சம் கண்ணீர் மட்டும் மிச்சமிருக்கிறது
அதையும்
உனக்காக சிந்திவிடுகிறேன்//

ஏனெனில் அதைத்தாண்டி வேறு எதுவும் மிச்சமில்லை. இழந்துவிட்ட அவனிடம் பகிர்வதற்கு எல்லா கடலையும் மிஞ்சிவிடும் கண்ணீர் மட்டுமாவது மிச்சம் இருக்கிறதே?!
ஆயினும் அக்கடல்நீர் வேறொரு இடத்தில் உகுப்பதற்கு உகந்ததன்று. என்றாலும் ஒருநாள் மீண்டு, என்றேனும் ஒரு நாள் திரும்பி வரும்போது எல்லாவற்றையும் சொல்லித் தீர்ப்பதற்கான ஆதாரம் ஆழ் மனதில் இருக்கும் அக்கண்ணீர் கடல்தான்.

கைவிடுதலின் தைரியம் எனும் இந்த கவிதை ஒன்றின் மீதான அதீத பற்றும் ஒரு கட்டத்தில் அது இல்லையென்றாகும்போது, அது கைவிடுப்படும் போது உள்ளிருந்து துளிர்க்கும் ஒரு தைரியம் வெடித்து, விரிந்து, பெரிதாகி எப்படி வீறு கொண்டு எழச்செய்கிறது என்பதை சொல்வதாக இருக்கிறது.

//நீயும்
எனக்காக இல்லையென அறிந்தபிறகு
கைகள் கால்களாக மாறி
இன்னும் திடமாக
வனத்தில் ஓடத் தொடங்கினேன்
இரை தேடி //

உணர்வுகள் செத்துப் போகையில் உணவுகளை தேடி ஓடச்செய்து வாழ்க்கையை திசை திருப்பி விடுகிறது. அப்படித்தான் உணர்வுகளை உள்ளுக்குள் புதைக்கவும் கற்றுத் தருகிறது. அன்றாட தேவைகளுக்காக கிளம்பு, ஓடு, உட்கார்ந்து ஓரத்தில் அழுது கொண்டிருக்காதே எனப் பழக்குகிறது.

இறுதியாக இந்த கவிதையைச் சொல்லி முடிக்கிறேன்.வலியது வாழும் எனும் உலகின் நியதியை உடைத்துப் போட்டு புதிதாக வேறு ஒன்றைச் சொல்கிறது இக்கவிதை.

//தேறுவது தேறும்
எனும் விஞ்ஞான கூற்றுக்கு எதிரே
தேறாததைத் தேற்றும்
மானிடப் போரைத் தொடங்கியது
இலக்கியம் //

இலக்கியம் ஒரு மனிதனை அவன் வாழ்வை பண்படுத்தும், எல்லாவற்றையும் எதிர்கொள்ளச் செய்யும். எல்லாவற்றுக்குப் பிறகும் அவனை வாழ செய்யும்.

படைப்புகளோடு படைப்பவரும் வாழ்கிறார்கள்!

நூலின் விவரங்கள்:

நூல்: முதல் ருசி (Mudhal Rusi)
ஆசிரியர்: சீனு ராமசாமி  (Seenu Ramasamy)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
வெளியீட்டு ஆண்டு: 2025
விலை: ரூ.125

எழுதியவர் : 

✍🏻 – சுமித்ரா சத்தியமூர்த்தி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *